Friday, February 14, 2020

இரண்டாம் நிலைக் காவலர் தேர்வில் முறைகேடு ! மூவர் கைது!


காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை ஆகிய துறைகளில் பணியாளர்களை நியமிப்பதற்கான தேர்வுகளை, சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திவருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தீயணைப்புத்துறை, சிறைத்துறை ஆகியவற்றில் 8,888 பணியிடங் களுக்கான தேர்வை சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியது. மொத்தம் 3,25,000 பேர் தேர்வு எழுதினார்கள். எழுத்துத் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு உடல் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு, இறுதியாக 8,888 பேர் தேர்வுசெய்யப்பட்டனர். அதில், விளையாட்டு வீரர்களுக்கான பத்து சதவிகித இடஒதுக்கீட்டில் ஏராள மானோர் தேர்வாகியிருந்தனர்.

அவர்களில் 800-க்கும் மேற்பட்டோர் போலிச் சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சேர்ந்துள்ளனர் என்ற விவகாரம்தான் தற்போது பற்றி எரிந்துகொண்டிருக்கிறது.

குரூப்-4 தேர்வு முறைகேடு அம்பலமான ராமநாதபுரம் மாவட்டத்திலேயேதான் சீருடைப் பணியாளர் தேர்வு முறைகேடும் அம்பலமாகியிருக்கிறது. ‘போலிச் சான்றிதழ் கொடுத்து விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டில் சிலர் காவலர்களாக பணியில் சேர்ந்துள்ளனர்’ என்று, சில மாதங்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி-யான வருண்குமாருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக இரண்டு தனிப்படைகள் அமைத்து விசாரணையை முடுக்கிவிட்டார் வருண்குமார். கமுதியை அடுத்து உள்ள ஓ.கரிசல்குளத்தைச் சேர்ந்த ராஜீவ் காந்தி என்ற ஏஜென்டை முதலில் பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த கபடி பயிற்சியாளர் சீமான் என்பவருக்கும் இந்த மோசடியில் பங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கபடி பயிற்சியாளரான சீமான், சினிமாவில் போலீஸ் வேடத்தில் நடித்திருக்கிறார். அவர் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட தன் புகைப்படங்களை கடலாடி இளைஞர்களிடம் காட்டி தன்னை போலீஸ் என்று அறிமுகம் செய்துகொண்டார். தொடர்ந்து அவர் போலீஸில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல லட்சங்களை வசூலித்துள்ளார். இதுதவிர, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றதாக போலிச் சான்றிதழ்களையும் தயாரித்துக் கொடுத்துள்ளார். அவற்றை வைத்துதான் பலர் விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டில் காவல்துறையில் பணியில் சேர்ந்துள்ளனர்.இதை தொடர்ந்து சீமான், ராஜீவ் காந்தி மற்றும் அவர்களிடம் போலிச் சான்றிதழ் பெற்று திருச்சி ஆயுதப்படையில் பணியில் சேர்ந்த ஓ.கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த மணிராஜ் ஆகிய மூவரையும் போலீஸார் கைதுசெய்தனர்.
 அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கமுதி வேப்பங்குளத்தைச் சேர்ந்த முத்துமணி, முதுகுளத்தூரைச் சேர்ந்த ராஜசேகரன் ஆகிய இருவரும் ராஜீவ் காந்தியிடம் தலா 30,000 ரூபாய் கொடுத்து போலிச் சான்றிதழ் பெற்று, சமீபத்தில் நடந்த காவலர் தேர்வின்மூலம் பணிக்குத் தேர்வானது தெரியவந்தது. இதேபோல், ஏ.புனவாசல் கிராமத்தைச் சேர்ந்த தவமுருகன் என்பவர் சீமானிடம் 17,000 ரூபாய் கொடுத்து தேசிய கபடி வீரர் என்று போலிச் சான்றிதழ் பெற்று, அதன்மூலம் சமீபத்தில் நடந்த இந்தோ-திபெத் எல்லை காவல்படை பணிக்குத் தேர்வானதும் தெரியவந்தது. இவர்கள் மூவரையும் போலீஸார் கைதுசெய்தனர்.

இதை தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்பட்ட அனைவரின் சான்றிதழ்களையும் ஆய்வுசெய்ய உத்தரவிட்டுள்ளது காவல்துறை. இதுகுறித்து மாவட்ட விளையாட்டுக் கழகத்தில் பொறுப்பு வகிக்கும் விளையாட்டு வீரர் ஒருவரிடம் பேசினோம்.

‘‘தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு அமைப்புகளில் எப்போது அரசியல்வாதிகளும் முக்கியப்புள்ளிகளும் நுழைந்தார்களோ, அப்போதே முறைகேடுகள் தொடங்கிவிட்டன. அவர்களின் நோக்கம் பணம் சம்பாதிப்பதுதான். வேலைக்காக மட்டுமல்லாமல், பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் சீட் வாங்குவதற்கும் விளையாட்டுத் துறை சான்றிதழ்கள் தேவைப்படுகின்றன. இன்றைக்கு ஸ்போர்ட்ஸ் கோட்டா என்பது பணம் கொழிக்கும் விஷயமாக மாற்றப்பட்டுவிட்டது.

சீருடைப் பணியாளர் தேர்வு
தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட விளையாட்டுகள் உள்ளன. ஒவ்வொரு விளையாட்டுக்கும் மாவட்ட அளவில் பல சங்கங்கள் உள்ளன. அவை நினைத்தால் யாருக்கு வேண்டுமானாலும் சான்றிதழ் வழங்கலாம். இதில் ஒருசில சங்கங்கள் மட்டும்தான் நேர்மையுடன் செயல்படுகின்றன. உண்மையான விளையாட்டு வீரர்களுக்கான வாய்ப்புகளைத் தட்டிப்பறிக்கிறோம் என்ற குற்ற உணர்வே இல்லாமல், பணத்துக்காக தகுதியில்லாதவர்களுக்குச் சான்றிதழ்களைக் கொடுக்கிறார்கள்.

சமீபத்தில்கூட மாநில அளவில் விளையாட்டு ஆலோசனை கமிட்டி ஒன்றை அரசு உருவாக்கியுள்ளது. அதில் காந்த் மட்டும்தான் விளையாட்டு வீரர். மற்ற அனைவரும் பிரபல கல்லூரிகளின் உரிமையாளர்கள்தான். பிறகு எப்படி விளையாட்டுத் துறை மேம்படும்?” என்றார்.

Monday, February 10, 2020

மிரட்டி கையெழுத்து வாங்கும் திமுக ! பொதுமக்களே உஷார்...

மிரட்டி கையெழுத்து வாங்கும் திமுக ! பொதுமக்களே உஷார்...
சென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு(சிஏஏ) எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தி வரும் திமுக.,வை சேர்ந்த பெண்களிடம், சிஏஏ குறித்து ஒருவர் விளக்கம் கேட்க, அவர் 'சம்மந்தமே இல்லாமல் ஏனோ தானோ என்று பிதற்றிய' வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள், ஆர்பாட்டங்கள் நடத்தி வரும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், தற்போது கையெழுத்து இயக்கம் தொடங்கி நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை போரூர் அருகில் உள்ள காரம்பாக்கம் வீர ஆஞ்சநேயர் கோவில் அருகே திமுக.,வை சேர்ந்த சில பெண்கள், வருபவர்களிடம் கையெழுத்து கேட்டு பெறுகின்றனர். அதில் ஒருவர், ஏன் கையெழுத்து போட வேண்டும் என கேள்வி எழுப்புகிறார்.

சிஏஏ குறித்த 'அ.. ஆ..' கூட தெரியாத அப்பெண்கள், 'மோடி கேக்குற உரிமைய தரல.. நஷ்ட ஈடு காட்டுறாரு.. அத திருத்தி நடவடிக்கை எடுத்து கொண்டு வர கையெழுத்து கேக்குறோம்.. கையெழுத்து போட்டா போடு.. இல்லாட்டி கிளம்பு' என மிரட்டல் தொனியில் பதிலளிக்கின்றனர்.

பேமண்ட் என்று டார்கெட்

என்ன நடவடிக்கைகள் எடுப்பீர்கள் என அந்த நபர் திரும்ப கேட்க, 'டெல்லி போய்ட்டு, நடவடிக்கை எடுத்துட்டு, வாட்ஸ்அப் பண்றோம்' என பதிலளிக்கின்றனர். தொடர்ந்து அவர், எதுக்கு கையெழுத்து வாங்குகிறீர்கள் என கேள்வியால் துளைக்க, 'சதீஷ்-ஐ கூப்பிடு' என அப்பெண்கள் மிரட்டுகின்றனர். இவை அனைத்தையும் அந்த நபர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட, அது வைரலாக பரவி வருகிறது.

'சிஏஏ குறித்த அடிப்படை கூட தெரியாமல், திமிராக பேசும் அப்பெண்களிடம், பொதுமக்கள் பலரும் என்னவென்று கேட்காமலேயே கையெழுத்து போட்டு போகின்றனர். இவர்களுக்கு இத்தனை கையெழுத்து வாங்கினால், இவ்வளவு பேமண்ட் என்று டார்கெட்' என வீடியோ எடுத்த நபர் அங்கிருந்தவர்களிடம் புலம்பியபடி கிளம்பிச் சென்றுள்ளார்.

திமுக.,வை சேர்ந்த சிலர், வீடியோ எடுத்த நபரை பின்தொடர்ந்து வந்து, எடுத்த வீடியோவை அழிக்கச்சொல்லி மிரட்டியதாகவும், அவர் சமாளித்து அங்கிருந்து சென்றதாகவும், 'ஆட்சிக்கு வராமலேயே திமுக இத்தனை அராஜகம். வந்தால் தமிழகம் என்னவாகும்?' என அங்கிருந்தவர்கள் கூறி சென்றனர்.

Friday, October 4, 2019

இடைத்தேர்தலும், உள்ளாட்சித் தேர்தலும்! பாஜக ஆதரவு யாருக்கு?
.'இடைத்தேர்தல் நடக்கும் சட்டசபை தொகுதிகளில், அ.தி.மு.க., வேட்பாளர் வெற்றிக்கு பணியாற்றுவோம்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இடைத்தேர்தல் நடக்கும், விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளில், அ.தி.மு.க., போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளான, தே.மு.தி.க., - பா.ம.க., தலைவர்களை சந்தித்து, அ.தி.மு.க., வேட்பாளருக்கு, அமைச்சர்கள் ஆதரவு கோரினர். ஆனால், பா.ஜ., நிர்வாகிகளை யாரும் சந்திக்கவில்லை. இது, பா.ஜ.,வினரிடம், அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், நேற்று மாலை, மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், சென்னையில் உள்ள, தமிழக பா.ஜ., தலைமை அலுவலகம் சென்றார். அங்கு, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பா.ஜ., நிர்வாகிகளை சந்தித்தார்.


அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரினார். இது குறித்து, பொன்.ராதாகிருஷ்ணன், நிருபர்களிடம் கூறியதாவது: இரண்டு தொகுதிகளிலும், அ.தி.மு.க., வேட்பாளரை வெற்றி பெற செய்யும் வகையில், மிக தீவிரமாக செயல்பட உள்ளோம். பா.ஜ., முழு ஆதரவை தர வேண்டும் என, அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள், எங்களின் அகில இந்திய தலைமையை, பல முறை தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர்.

'தமிழக பா.ஜ., சார்பில், யாரெல்லாம் பிரசாரத்திற்கு வர உள்ளனர்' என்ற விபரங்களை கேட்க, அமைச்சர் ஜெயகுமார் வந்திருந்தார். ஏற்கனவே இருக்கிற கூட்டணி என்பதால், எவ்வித பிசிறும் இல்லாமல் பேச்சு நடந்தது. பா.ஜ., சார்பில், யாரெல்லாம் பிரசாரத்திற்கு செல்வர் என்ற பட்டியலை, விரைவில் கொடுப்போம். அ.தி.மு.க., சார்பில், எவ்வித கருத்து வேறுபாடும் சொல்லப்படவில்லை; நாங்களும் சொல்லவில்லை. விக்கிரவாண்டியில், தி.மு.க., தோற்கடிக்கப்பட்டாக வேண்டும். நாங்குநேரியில், காங்கிரஸ் துடைத்தெறியப்பட வேண்டும். அதை உறுதிப்படுத்த, நாங்கள் செல்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.


சில நாள் முன்பு நடந்தவை !!


தமிழக பாஜகவுக்கு இன்னும் தலைவர் யாரும் நியமிக்கப்படாத நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை தலைமை முடிவு செய்யும் என்று தெரிவித்திருந்தார். 

ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, ‘அதிமுக பாஜக கூட்டணி தொடர்கிறது’ என்று அறிவித்தார். பாஜக இன்று (அக்டோபர் 4) பிற்பகல் வரை தமிழக இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு என்று முறைப்படி அறிவிக்காத நிலையில்,எடப்பாடியோ போன வாரமே கூட்டணி தொடர்கிறது என்று அறிவித்ததன் பின்னணி பாஜகவின் கூட்டணி தர்ம ஆதரவைத் தாண்டிய ஆதரவுதான்.

பாஜக ஆதரவு என்பது இவ்விரண்டு தொகுதிகளிலும் பாஜகவுக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை அப்படியே அதிமுகவுக்கு மடைமாற்றுவது என்ற பொதுவான கூட்டணி தர்ம ஆதரவு அல்ல. பாஜக ஆதரவு என்பது மத்திய அரசின் ஆதரவு, தேர்தல் ஆணையத்தின் ஆதரவு என்பதையெல்லாம் சேர்த்துதான் என்பதால்தான் அதிமுக இதில் இவ்வளவு மெனக்கெட்டு வருகிறது.

மோடி தமிழகம் வந்த போது முரளிதர் ராவுடன் ஓபிஎஸ் சும், எடப்பாடியும் பேசிய நிலையில் பாஜகவிடம் இருந்து முறையான ஆதரவு அறிக்கை வரும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் வரவில்லை. அதன் பின் முரளிதர் ராவையும் தொடர்புகொள்ள முடியவில்லை. அதன் பிறகுதான் பியூஷ் கோயலைத் தொடர்புகொண்டிருக்கிறார்கள். குஜராத்துக்கு தூய்மை விருது வாங்க வேலுமணி புறப்பட்டுக்கொண்டிருந்த நிலையில், கோயலும் குஜராத்தில்தான் அக்டோபர் 2 ஆம் தேதி இருந்தார்.

அமைச்சர் ஜெயக்குமாரோடு குஜராத் சென்ற அமைச்சர் வேலுமணி பிரதமரிடம் விருது பெறும் விழாவுக்கு செல்வதற்கு முன்பே பியூஷ் கோயலை சந்தித்துப் பேசினார். தங்கமணியை விட பியூஷ் கோயலுக்கு நெருக்கமானவராக மாறிவிட்டவர் வேலுமணி. இதனால் பல விஷயங்களை அப்போது மனம் விட்டுப் பேசியிருக்கிறார்கள் இருவரும்.

மத்தியத் தலைமை அதிமுக மீது கடுமையான கோபத்தில் இருப்பதாக சொல்லிய பியூஷ் கோயல், இந்த இடைத்தேர்தலில் பாஜகவின் ஆதரவு வேண்டுமென்றால் வருகிற உள்ளாட்சித் தேர்தலில் தமிழகத்தில் பாஜகவுக்கு ஐந்து மாநகராட்சி மேயர் இடங்களை ஒதுக்க வேண்டும் என்று நேரடியாகவே வேலுமணியிடம் கூறியிருக்கிறார். கடைசியாக அறிவிக்கப்பட்ட் ஆவடி மாநகராட்சியோடு சேர்த்து தமிழகத்தில் 15 மாநகராட்சிகள் இருக்கின்றன. இவற்றில் ஐந்து மாநகராட்சி மேயர் பதவிகளுக்கு பாஜக வேட்பாளர்களை அதிமுக கூட்டணியில் நிறுத்த வேண்டும் என்பதுதான் பியூஷ் கோயல் வேலுமணியிடம் வைத்திருக்கும் நிபந்தனை. இதற்கு ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் இரு தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவின் ஆதரவு அதிமுகவுக்கு வழங்கப்படும் என்று கூறியிருக்கிறார்கள் பாஜக தரப்பில்.

இதை அங்கிருந்தே எடப்பாடிக்கும் தெரியப்படுத்திவிட்டார் வேலுமணி. ஆனால் எடப்பாடி பழனிசாமி ஆரம்பத்தில் இதற்கு யோசித்திருக்கிறார். பாஜகவே ஐந்து கேட்டால் மற்ற கூட்டணிக் கட்சிகள் எத்தனை கேட்பாங்க, அப்புறம் நம்ம என்ன பண்றது என்றெல்லாம் ஆலோசித்த எடப்பாடி பழனிசாமி ‘ஏத்துக்கறதைத் தவிர்த்து நமக்கு வேற வழி என்ன இருக்கு?என்னென்ன மேயர்னு அப்புறம் பாத்துக்கலாம்’ என்றும் தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆலோசித்திருக்கிறார். 

பாஜகவின் ஆதரவு அதிமுகவுக்கு விரைவில் அறிவிக்கப்படும் என்று சொல்கிறார்கள். அப்படி அறிவிக்கப்பட்டால் மாட்டுச் சந்தையில் கைமேல் துண்டைப் போட்டு அதிமுகவின் ஐந்து விரல்களை பாஜக பிடித்துவிட்டது என்றுதான் அர்த்தம். இல்லையென்றால் பேரம் இன்னும் படியவில்லை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்”


Monday, September 16, 2019

தமிழகத்திற்கு 90ஆயிரம் கோடிகள் வருமானம்?? தமிழக முதல்வரின் வெளிநாட்டுப் பயணம்!முதல்வர் பழனிசாமியின், அமெரிக்கா மற்றும் துபாய் சுற்றுப்பயணம் மூலம், வரும் 2020ம் ஆண்டு இறுதிக்குள், தமிழகத்துக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு வருவது உறுதி' என்று, முதல்வருடன் சுற்றுப்பயணத்தில் பங்கேற்ற, இந்தோ - அமெரிக்க தொழில் வர்த்தக சபை தலைவர் சக்திவேல் கூறினார்.

தமிழகத்துக்கு, அன்னிய முதலீடுகளை ஈர்க்க, முதல்வர் பழனிசாமி, வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்தோ - அமெரிக்க தொழில் வர்த்தக சபை தலைவரும், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழக துணைத்தலைவருமான சக்திவேல் பங்கேற்று, அமெரிக்கா மற்றும் துபாயில் முதலீட்டாளர் மாநாட்டுக்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.

இதுகுறித்து சக்திவேல்,தனியார் நாளிதழுக்கு அளித்த பேட்டி:முதலீட்டாளர் மாநாடு கடந்த 3ம் தேதி, நியூயார்க்கில் நடந்தது; 2,780 கோடி ரூபாய் முதலீட்டுக்கான 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம், 20 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். ஹால்டியா பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தினர், நாப்தா உற்பத்தியுடன் கூடிய ஒரு தொழிற்சாலையை தமிழகத்தில் அமைக்க விரும்புவதாக தெரிவித்தனர்; இது ஒரு மிகப்பெரிய முதலீடாக அமையும்.கடந்த 4ம் தேதி, அமெரிக்காவின், சான்ஹீசே நகரில் நடந்த மாநாட்டில், 2,300 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான, 19 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின; இதில், ஏழாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். கடந்த 5ம் தேதி, 'டெஸ்லா' கார் உற்பத்தி நிறுவனத்துக்கு சென்றோம். சுற்றுச்சூழலை பாதிக்காத, மின்சாரத்தில் இயங்கும் கார் உற்பத்தி தொழில்நுட்பங்களை பார்வையிட்டோம். இந்நிறுவனத்தினரும் தமிழகத்தில் முதலீடு செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்தனர்.

அமேசானின் இருப்பு மையத்தை பார்வையிட்டோம். 'ரோபோ' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தினமும் இரண்டு லட்சம் பார்சல்களை நுகர்வோருக்கு அனுப்புகின்றனர்.அமேசான் போன்ற நிறுவனங்கள், இத்தகைய ஒரு இருப்பு மையத்தை தமிழகத்திலும் துவக்கினால் சிறப்பாக இருக்கும். கடந்த 6ம் தேதி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், அனேஹெம் நகராட்சியில், கழிவுநீரை சுத்திகரிக்கும் தொழில்நுட்பங்களை பார்வையிட்ட முதல்வர், தமிழக மாநகராட்சி, நகராட்சிகளில் கூட இந்த திட்டத்தை செயல்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என்று கூறினார்.
அடுத்ததாக, 9ம் தேதி, துபாயில் முதலீட்டாளர் மாநாடு நடந்தது. இதில், 3,800 கோடி ரூபாய் முதலீட்டுக்கான ஆறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன்மூலம், 11 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெறுவர். இப்பயணம் மூலம், மொத்தம் 9 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான, 41 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன; 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.முதலீடுகளை முழுமையாக கொண்டுவருவதற்காக முதல்வர் தலைமையில், தொடர்ந்து கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. 41 ஒப்பந்தம் மீதான முதலீடுகளும் தமிழகத்தை வந்தடைவது உறுதி. வரும் நவம்பர் முதல், முதலீட்டாளர்கள் தமிழகம் நோக்கி வரத்துவங்குவர். வரும், 2020ம் ஆண்டு இறுதிக்குள் திட்டமிட்டபடி அனைத்து முதலீடுகளும்வந்தடைந்து விடும்.முதல்வர் தலைமையில், முதலீடுகளை கொண்டுவர தனி கமிட்டி அமைக்கப்பட வேண்டும். அதில், அனைத்து துறை செயலர்கள் இடம்பெற வேண்டும். நானும் இணைந்து பணிபுரிய தயாராக உள்ளேன். இதன்மூலம் மிக எளிதாகவும், விரைவாகவும் முதலீடுகளை பெற முடியும்.எங்கெங்கு அமையும்

பெரும்பாலான முதலீட்டாளர்கள், ஏற்றுமதிக்கு ஏதுவாக சென்னை சுற்றுப்பகுதிகளில் நிறுவனங்கள் அமைக்க விரும்புவதாக தெரிவித்தனர். முதலீட்டாளர்களிடம் சென்னை, துாத்துக்குடி, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள வசதிகள், தமிழகத்தின் தனித்துவம் குறித்து அரசு செயலர்கள் விளக்கம் அளித்தனர். தமிழகத்தில் உள்ள வசதிகளை அறிந்து, முதலீட்டாளர்கள் வியந்தனர்.

அரசு சலுகைகள்

தமிழகத்தில் அமைக்கப்படும் அன்னிய நிறுவனங்களுக்கு தடையில்லா மின்சாரம், தண்ணீர், சாலை உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்துதரப்படும் என, முதலீட்டாளர்களிடம் முதல்வர் தெரிவித்தார். பல்வேறு துறை சார்ந்த அனுமதிகள், விரைந்து வழங்கப்பட வேண்டும் என, முதலீட்டாளர்கள் தங்கள் எதிர்பார்ப்பை தெரிவித்தனர். ஒற்றைச்சாளர முறை நடைமுறையில் உள்ளது. அனைத்து துறை சார்ந்த அனுமதிகளும் உடனடியாக பெறமுடியும் என, அவர்களுக்கு பதில் அளித்தோம்.

தமிழகம் மேம்படும்

வெளிநாட்டு நிறுவனங்களின் வருகையால், தமிழக பொருளாதாரம் மேம்படும். வேலைவாய்ப்பு பெருகும். அன்னிய நிறுவனத்தினர் தொழில்துவங்கும்போது, தொழில்நுட்பங்களையும் கொண்டுவருகின்றனர். அதனால், தமிழகத்தில் அதிநவீன தொழில்நுட்பங்கள் அறிமுகமாகும்.தகவல் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல், எரிசக்தி, மின் உற்பத்தி துறைகள் தமிழகத்தில் சிறப்பான வளர்ச்சிபெறும். பெரு நிறுவனங்கள் வந்தாலும் இதைச் சார்ந்து பொருட்கள், உபரி பாகங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்ய ஏராளமான சிறு, குறு நிறுவனங்களும் தேவைப்படும் என்பதால், தொழில் வளர்ச்சி பெருகும்.

பயணங்கள் தொடரும்

பயணம் ஒரு துவக்கம் தான். நல்ல வரவேற்பு கிடைப்பதால், எந்தெந்த நாடுகளில் தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்கான வாய்ப்பு உள்ளது என கண்டறிந்து, அந்த நாடுகளில் முதலீட்டாளர் மாநாடுகள் நடத்த வேண்டும் என்பது முதல்வரின் விருப்பம்.தொழில் வளத்தில், மகாராஷ்டிரா முதன்மை மாநிலமாக உள்ளது; தமிழகத்தை, நாட்டின் தொழில் வளர்ச்சி பெற்ற முதன்மை மாநிலமாக மாற்றிக்காட்ட வேண்டும் என்கிற குறிக்கோளுடன்தான், முதல்வர் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.இவ்வாறு, சக்திவேல் கூறினார்.

முதலீடு ஈர்க்க வெளிநாடு சென்ற தமிழகத்தின் முதல் முதல்வர்

''நியூயார்க் மாநாடு முடிந்து, விமானத்தில் சான்ஹீசே நகரம் நோக்கி சென்றோம். அது, ஆறு மணி நேர பயணம். அந்த பயண நேரம் முழுமையும், தமிழக முதல்வர் என்னிடம் பேசிக்கொண்டே வந்தார். எளிமையான முதல்வர். அவரது பேச்சில், தமிழக நலனுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்கிற உத்வேகத்தை உணர முடிந்தது. குறிப்பாக, விவசாய வளர்ச்சி, தமிழகத்தில் தொழில் வளத்தை அதிகரிக்கவேண்டும் என தெரிவித்தார்.ஒவ்வொரு இடத்துக்குச் செல்லும்போதும் உற்சாகமாக காணப்பட்டார். முதலீட்டாளர்களின் கேள்விகளுக்கு, சில நேரங்களில் முதல்வர் தானே நேரடியாக பதில் அளித்தார்; அவரது அனைத்து துறை சார்ந்த திறனைப்பார்த்து அனைவரும் வியந்தனர். ஏழு நாட்கள் தமிழக முதல்வருடனேயே இருந்தேன். எப்போதும், தமிழகத்துக்கு, தமிழக மக்களுக்கு என்றுதான் பேசிக்கொண்டிருந்தார். முதலீட்டுக்காக வெளிநாடு சென்ற முதல் முதல்வர் பழனிசாமிதான்'' என்றார் சக்திவேல்.குப்பையில் இருந்து மின்சாரம் திண்டுக்கல்லில் புதிய திட்டம்

ஸ்ரீதர், வெங்கட் ஆகிய இரு தமிழர்கள் இணைந்து, அமெரிக்காவில் 'ப்ளூம் எனர்ஜி' என்ற பெயரில், மாசு இல்லாத மின் உற்பத்தி நிறுவனத்தை செயல்படுத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்தை முதல்வர் உட்பட நாங்கள் எல்லோரும் சென்று பார்வையிட்டோம். தமிழகத்தில் இந்த மின் உற்பத்தி திட்டத்தை துவக்கவேண்டும் என, முதல்வர் அழைப்பு விடுத்தார். இவ்விருவரும் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நிறுவனம் அமைப்பதற்காக, ஏற்கனவே திண்டுக்கல்லில் ஆய்வு நடத்திச் சென்றுள்ளனர். திண்டுக்கல் மாநகராட்சியுடன் இணைந்து, திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர். இது, முதல்வரை மேலும் உற்சாகப்படுத்தியது. தேவையான உதவிகள் செய்வதாக உறுதி அளித்தார். இதன் மூலம், குப்பை அழிக்கப்படுவதோடு, மின்சாரமும் பெறமுடியும். இதை உறுதி செய்வதற்காக, வரும் நவம்பர் முதல்வாரத்தில், இருவரும் தமிழகம் வர உள்ளனர்.

வெளிநாடு வாழ் தமிழர்கள் ஆர்வம்

நியூயார்க், சான்ஹீசே ஆகிய நகரங்களில் நடந்த 'யாதும் ஊரே' திட்ட நிகழ்ச்சிகளில், அமெரிக்கவாழ் தமிழக தொழில்முனைவோர், 350 பேர் பங்கேற்றனர். சான்ஹீசே நகரில், சிலிக்கான் வேலி என்கிற இடத்தில், தமிழகத்தை சேர்ந்த ஏராளமானோர் தொழிலதிபர்களாக உள்ளனர். அவர்கள் எல்லோரும், தமிழகத்தில் நிச்சயம் முதலீடு செய்வோம். 'யாதும் ஊரே' ஒரு புதுமையான திட்டமாக உள்ளது.இது, எங்கள் மனதில் உத்வேகத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் நாங்கள் ஈர்த்த வருவாயை, தமிழகத்தில்முதலீடு செய்வதன்மூலம், பூர்வீகமான தமிழகத்துக்கு நாங்களும் சேவை செய்தோம் என்கிற திருப்தி ஏற்படும் என நெகிழ்ச்சியுடன்தெரிவித்தனர்.

வெளிநாடு வாழ் தமிழக மக்கள், தமிழகத்தில் முதலீடு செய்தால், முதலீட்டு தொகையில் 10 சதவீதத்தை அரசே வழங்கும் என, முதல்வர் அங்கு அறிவித்தார். இது, வெளிநாடு வாழ் தமிழகத்தை சேர்ந்தமுதலீட்டாளருக்கு மட்டுமான பிரத்யேக சலுகை.


#நன்றி_தினமலர்

Saturday, August 31, 2019

சரிவுப் பாதையில் இந்திய பொருளாதாரம்- சுப்ரமணியம் சாமிஏப்ரல்-ஜூன் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5% ஆகக் குறைந்து 6 ஆண்டுகளில் இல்லாத சரிவைச் சந்தித்துள்ளதையடுத்து பல பொருளாதார நிபுணர்களும் விமர்சனங்களை தொடுத்து வரும் நிலையில் இப்போதே துரிதமாகச் செயல்பட்டு புதிய பொருளாதாரக் கொள்கைகளை வகுக்கவில்லையெனில் பெரிய சரிவையே சந்திக்க நேரிடும் என்று பாஜக தலைவரும் ராஜ்ய சபா எம்.பியுமான சுப்பிரமணியன் சுவாமி எச்சரித்துள்ளார்.


இது குறித்து அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:
புதிய பொருளாதாரக் கொள்கை எதுவும் வரவில்லை எனும்போது 5 ட்ரில்லியன் பொருளாதாரமாக மாறும் என்ற கருத்துக்கு பிரியாவிடை கொடுத்து விடத் தயாராகுங்கள். தைரியம் மட்டுமே அல்லது அறிவு மட்டுமே பொருளாதாரத்தைச் சரிவிலிருந்து மீட்டு விடாது, இரண்டுமே தேவை, ஆனால் இன்று நம்மிடம் இரண்டுமே இல்லை.
என்று பதிவிட்டுள்ளார்.


மேலும் இவரது ட்வீட்டை முன் வைத்து ஆங்கில தொலைக்காட்சி சேனல் ஒன்று சுப்பிரமணியன் சுவாமியிடம் பேட்டி கண்ட போது

அவர் கூறியதாவது:

இப்போது எரியும் இந்தப் பிரச்சினை செய்தித்தாள்களில் கட்டுரையாக வருகிறது, நாட்டின் பல்வேறு பேச்சுகளிலும் இது பேசப்பட்டு வருகிறது, ஆனால் எனக்கு இது புதிதல்ல. நான் கூறிவருவது என்னவெனில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சில காலவரம்புகளை நிர்ணயித்தது. அதனை நாம் விரவச்செய்ய முடியவில்லை. திரு.ஜேட்லி இதனை செய்ய முடியவில்லை காரணம் அவருக்கு பொருளாதாரம் தெரியாது. அவர் பயிற்சி பெற்ற பொருளாதாரவாதி அல்ல. பிரதமரும் கூட முறைப்படி பொருளாதாரம் கற்றவர் அல்ல.
ஆகவே நான் என்ன கூற வருகிறேன் என்றால் அந்தரத்தில் தொங்குவதன் தொடக்கத்தில் இருக்கிறோம்.

 2015-ல் இதைத்தான் நான் தி இந்து (ஆங்கிலம்) செய்தித்தாளில் கட்டுரையாக எழுதியிருந்தேன். அதுமுதலே நான் பல எச்சரிக்கைகளை விடுத்தேன் பிரதமருக்கு எழுதினேன் ஆனால் என்ன நடந்தது எனில் 2015 முதலே நம் பொருளாதாரம் சரிவைச் சந்தித்து வருகிறது. இப்போது 5% ஆகக் குறைந்து விட்டது, அதுவும் தற்போதைய விலை நிலவரங்களின் படி 5%, ஆனால் மாறா விலை (Constant prices) நிலவரங்களின் படி 3.5% வளர்ச்சிக்கு மேல் இருக்காது என்றே நினைக்கிறேன். இது உண்மையான வீழ்ச்சியாகும் அதாவது இதை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம்.
சிறு மற்றும் குறுந்தொழில்கள் மூடப்பட்டு வருகின்றன, வங்கிகளும் சரிவைச் சந்தித்துள்ளன, வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் மூடப்படும் சூழ்நிலையில் இருக்கின்றன. ஆகவே நாம் பொருளாதார சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்தச் சூழ்நிலையில் 5 ட்ரில்லியன் பொருளாதாரம் என்ற இலக்கு, அதாவது 5 ஆண்டுகளின் ஜிடிபியை இரட்டிப்பாக்குவது, 2024-ல் 5 ட்ரில்லியன் பொருளாதாரமாகும் என்று இலக்கு வைக்கின்றனர். இது ஆண்டுக்கு 14.5% வளர்ச்சி விகிதமாகும். ஆண்டு ஒன்றிற்கு 14.5% வளர்ச்சியில் சென்றால்தான் 5 ட்ரில்லியன்பொருளாதார இலக்கை எட்ட முடியும்.
ஆனால் உங்கள் கணக்கீட்டின் படியே 5% வளர்ச்சியையே தாண்ட முடியவில்லையே? மேலும் வரும் காலமும் ட்ரெண்ட் கீழ்நோக்கிச் செல்கின்றன.

 ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தவறுகளை சரி செய்யாமல் நாம் இப்போது விலை கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இது குறித்து புத்தகம் ஒன்று எழுதியுள்ளேன் அது விரைவில் வெளிவருகிறது, அதில் சரிவை எப்படி சரி செய்யலாம் என்று தெரிவித்துள்ளேன்.
நான் எவ்வளவோ கூறியும் இந்த அரசு காதில் வாங்கவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக நான் எது கூறினாலும் அவர்கள் காதில் வாங்கவே இல்லை. ஆகவே உடனடியான தீர்வுகளை நான் ஏன் சொல்ல வேண்டும், என் கருத்துகளை விற்க நான் தயாராக இல்லை. அவர்களுக்கு தேவைப்பட்டால் என்னிடம் ஆலோசிக்கட்டும் நான் அவர்களுக்குத் தெரிவிப்பேன். பொருளாதாரத்தில் ஒரு அளவு கோல் என்பதில்லை. இது பல அளவுகோல்களை ஒருங்கிணைப்பதாகும். ஏனெனில் பெரும்பொருளாதாரம் என்பது பொதுச்சமனமாக்க ஒழுங்கமைப்பு.

 நான் சில விஷயங்களைக் கூறினேன் உதாரணமாக வருமானவரியை ரத்து செய்தல், வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்றேன். பிக்ஸட் டெபாசிட்டுக்கு 9% ஆக வட்டியை அதிகரிக்கவும் என்றும் ஆலோசனை தெரிவித்தேன். ஆனால் இவையெல்லாம் அவர்கள் காதில் விழவில்லையே.
எனவே 2015 முதலே நான் கூறிவருவது என்னவெனில் பொருளாதாரம் மந்த நிலையை நோக்கிச் சென்று கொண்டேதான் இருக்கும் என்பதே. 2015க்கு முன்னரே இதற்கான தீர்வை நோக்கி தொடங்கியிருக்க வேண்டும். வெறுமனே வங்கிகளை இணைப்பது மூலம் இதனைச் சரி செய்து விட முடியாது, ஏனெனில் இதுவும் வேலையின்மையைத்தான் உருவாக்கும். ஆட்சியதிகார விவகாரங்கள் மூலம் இதனை சரி செய்து விட முடியுமா? ஆகவே இது பொருளாதாரம் பற்றிய புரிதலின்மையை பறைசாற்றுகிறது. ஆகவே நான் கூறுவதெல்லாம் அந்தரங்கத்தில் தொங்கும் நிலை கீழே விழுவதில்தான் முடியும்.
இவ்வாறு கூறினார் சுப்பிரமணியன் சுவாமி.

வீடியோ லிங்க்👇👇👇👇

https://m.youtube.com/watch?feature=youtu.be&v=THIl-sgFyfA

#தமிழக_ரேஷன் கடைகளில் "இலவச அரிசி"க்கு கட்டணம்? தமிழக அரசு திட்டம்!மறைந்த #மக்களின்_முதல்வர்_ஜெயலலிதா  "தேசிய உணவு பாதுகாப்பு " சட்டத்தை, அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்தார்.

ஆனால் 

2016 நவம்பர் மாதம் "பொறுப்பு முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதலளித்தது...

தமிழக ரேஷன் கடைகளில், இரண்டு கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, மாதந்தோறும், இலவச அரிசி வழங்கப்படுகிறது. இதை, தமிழக நுகர்பொருள் வாணிப கழகம், இந்திய உணவு கழகத்திடம் வாங்குகிறது.தமிழகத்தில் வசிப்பவருக்கு மட்டுமே, ரேஷன் கார்டும், ரேஷன் பொருட்களும் வழங்கப்படுகின்றன. மத்திய அரசு தற்போது, ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை துவக்கி உள்ளது.இத்திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டு வைத்திருப்போர், எந்த மாநிலத்திலும், ரேஷன் பொருட்களை வாங்கலாம்.மற்ற மாநிலங்களில், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், ஏழைகள் என, குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும், ரேஷனில், அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன.அவை, தமிழகத்தில், வசதியானவர்களுக்கும் இலவசமாக தரப்படுகின்றன. அதற்கேற்ற வகையில், தமிழகத்தில் மட்டுமே, மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப, ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இதனால் பலரும், அரிசி கார்டு வாங்குகின்றனர். மேலும், பொங்கல் பரிசு போன்ற, அரசின் இலவச திட்டங்களும், அரிசி கார்டுகளுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன.இதனால், ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை, தமிழகத்தில் செயல்படுத்த, தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த விஷயத்தில், தமிழகஅரசு, எந்த முடிவும்எடுக்காமல் உள்ளது.இந்நிலையில், அடுத்த ஆண்டிற்குள், ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்துமாறு, தமிழகம் உட்பட, அனைத்து மாநிலங்களையும், மத்திய அரசுஅறிவுறுத்தி உள்ளது.முந்தைய காலங்கள் போல இல்லாமல், தற்போது, மத்திய அரசுடன் இணக்கமான போக்கை தமிழக அரசு கடைப்பிடித்து வருகிறது.இதனால், எப்படியும், ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்த வாய்ப்புள்ளது.அப்படி அமல்படுத்தும் பட்சத்தில், தமிழகத்தில் வசிக்கும் பிற மாநிலத்தவர்களுக்கு மட்டும், ரேஷன் பொருட்களை, இலவசமாக வழங்குவதற்கு பதில், பணத்திற்கு விற்பது தொடர்பாக, உணவுத்துறை பரிசீலித்துவருகிறது.இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரேஷனில், அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்டவை வழங்க, ஆண்டுக்கு, 6,000 கோடி ரூபாய் செலவாகிறது. ரேஷன் கார்டில், எத்தனை உறுப்பினர் இருந்தாலும், மாதம், 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை, ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்தார்.அவர், உடல் நலக் குறைவால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, 2016 நவம்பரில், அந்த சட்டம், தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது. இதனால், நான்கு உறுப்பினர்களுக்கு, 20 கிலோ அரிசியும், அதற்கு மேல் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும், கூடுதலாக, 5 கிலோவும், இலவசமாக வழங்கப்படுகிறது.இதற்காக, அரசுக்குகூடுதல் செலவு ஏற்பட்டது. அரிசி கார்டுதாரர்கள், 10 கிலோ வரை, அரிசிக்கு பதில், கோதுமையை இலவசமாக வாங்கலாம். ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை, தற்போது, தமிழக அரசு அமல்படுத்தவில்லை என்றாலும், காலப்போக்கில் ஏற்க வாய்ப்புள்ளது.தமிழகம் உட்பட, நாடு முழுவதும், 'ஆதார்' எண் அடிப்படையில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளன.இதனால், தமிழகத்தில், எந்த ரேஷன் கடையிலும், ரேஷன் கார்டு தாரர்கள், பொருட்கள் வாங்கலாம்; ஆனால், அது நடைமுறைக்கு வரவில்லை. அதைச் செயல்படுத்தினால், மற்ற மாநில ரேஷன் கார்டுதாரர்களுக்கும், பொருட்கள் வழங்கும் தொழில்நுட்ப வசதியை இணைக்க முடியும்.


தமிழகத்தில், கட்டுமானம், ஓட்டல் போன்ற வற்றில், பிற மாநிலங்களைச் சேர்ந்த, 20 லட்சம் பேர் வசிப்பதாக, தகவல் கிடைத்துள்ளது. அதில், எத்தனை பேருக்கு, தங்கள் மாநிலங்களில், ரேஷன் கார்டுகள் உள்ளன என, தெரியவில்லை.ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், ரேஷனில், பிற மாநிலத்தவருக்கு மட்டும், அரிசி, கோதுமைக்கு பணம் வசூலிக்கலாம் என, பரிசீலிக்கப்படுகிறது.அப்படி, அவர்களிடம் பணம் வசூலித்தால், தமிழகத்தில், ஏற்கனவே, அரிசி வாங்க முடியாத, சர்க்கரை மற்றும் எந்த பொருளும் வாங்காத கார்டுதாரர்களும், தங்களுக்கும், அதே விலைக்கு அரிசி, கோதுமை கேட்க வாய்ப்புள்ளது.இதனால், கூடுதல் செலவு ஏற்படும் என்பதால், முடிந்த வரை, ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்படுத்தப்படாது.இவ்வாறு, அவர் கூறினார்.ரேஷனில் வழங்க, மாதம், 3.13 லட்சம் டன் அரிசி தேவை. அதில், 1.93 லட்சம் டன் அரிசி, கிலோ, ௩ ரூபாய்; 1 லட்சம் டன், கிலோ, 8.30 ரூபாய்க்கு வாங்கப்படுகிறது. மீதி தேவைக்கு, வெளிச்சந்தை விலையில், கிலோ, 25 ரூபாய்க்கு மேல் வாங்கப்படுகிறது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை/நீக்கம்/திருத்தம் செய்ய இன்றே முயற்சிகளை மேற்கொள்வோம்!!வாக்காளர் பட்டியலில், உங்கள் பெயர், முகவரி சரியாக இருக்கிறதா என்பதை, இன்று முதல், நீங்களே சரி பார்க்கலாம். இதற்காகவே, வாக்காளர் சுயவிபர சரிபார்ப்பு திட்டம், நாடுமுழுவதும், இன்று துவக்கப்படுகிறது. பெயரை சேர்க்கவும், திருத்தம் செய்யவும், பிரத்யேக இணையதளம் மற்றும், 'மொபைல் ஆப்' வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.


ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் மாதம், தேர்தல் கமிஷன் சார்பில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடக்கும். அப்போது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, விண்ணப்பங்கள் பெறப்படும்.

அவை சரியாக பரிசீலிக்கப்படுவது இல்லை என்ற, குற்றச்சாட்டு எழுந்தது.இதை தவிர்க்க, இம் முறை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி மேற்கொள்வதற்கு முன், ஒவ்வொரு வாக்காளரும், தாங்களாகவே, பட்டியலில் பெயரை சேர்க்கவும், திருத்தங்கள் செய்யவும், தேர்தல் கமிஷன் வாய்ப்பு அளித்துள்ளது.
இதற்காக, வாக்காளர் சுய விபர சரிபார்ப்பு திட்டம், நாடு முழுவதும், இன்று துவக்கப்படுகிறது. இன்று முதல், செப்., 30 வரை, இத்திட்டம் அமலில் இருக்கும். இம்மாதம் முழுவதும், வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விரும்புவோர், தாங்களே அப்பணியை மேற்கொள்ளலாம்.மாற்றுத் திறனாளிகள், இலவச டெலிபோன் எண், '1950'ல் தொடர்பு கொண்டு, திருத்தங்கள் செய்யலாம்.மற்றவர்கள்,
'voter help line'
என்ற, 'மொபைல் ஆப்' மற்றும்,
'www.nvsp.in'
என்ற, இணையதளம் வழியே, மாற்றங்கள் செய்யலாம். கணினி மற்றும் மொபைல் போன் இல்லாதவர்கள், பொது சேவை மையம் மற்றும் வாக்காளர் சேவை மையங்களுக்கு சென்று, மாற்றங்கள் செய்யலாம்.தமிழகத்தில், 8,095 பொது சேவை மையங்கள்; 1,662 இ - சேவை மையங்கள் மற்றும் வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள, 97 மையங்களில், இந்த சேவை அளிக்கப்படும்.பொது மக்கள், இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


அதன்பின், ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வீடு வீடாக வந்து, வாக்காளர் விபரங்களை சரிபார்ப்பர். அப்போது, அவர்களிடம், 'பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு' மற்றும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள ஆவணங்களில்,ஏதேனும் ஒன்றை காட்டினால் போதும். தவறே இல்லாத வாக்காளர் பட்டியலை உருவாக்குவதற்காக, நாடு முழுவதும் வாக்காளர் சுய விபர சரிபார்ப்பு திட்டம் துவக்கப்படுகிறது. இது குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

அக்., 15ல் வரைவு பட்டியல்

நவம்பரில் சிறப்பு முகாம்'சென்னையில், அக்டோபர், 15க்குள் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்' என, மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான பிரகாஷ் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:வாக்காளர்கள், தங்களின் பெயர், பிறந்த தேதி, முகவரி, புகைப்படம் மற்றும் பாலினம் உள்ளிட்ட விபரங்களில், திருத்தங்கள் மேற்கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.அவ்வாறு பதிவு செய்யப்பட்ட விபரங்கள், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வாயிலாக, கள ஆய்வு செய்யப்பட்டு, அக்., 15க்குள், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.மேலும், நவ., 2, 3, 9, 10ம் தேதிகளில்,அந்தந்த ஓட்டுச்சாவடிகளில் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்கள் வாயி லாகவும், வாக்காளர்கள் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Friday, August 30, 2019

இந்தியாவில் தொழில்துவங்க சிறந்த மாநிலம் தமிழகம்! எடப்பாடியார் பேச்சு!

தமிழகத்துக்கு தொழில் முதலீட்டுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் அவர் இங்கிலாந்துக்கு சென்றிருக்கிறார்.

அங்குள்ள நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் அவர் ஆற்றிய உரை வருமாறு:-

பல்வேறு சுகாதார அம்சங்களில் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடுதான் முன்னிலை பெற்றுள்ளது. புதிய முக்கிய திட்டங்களை அறிமுகம் செய்தல், தரமான கொள்கைகளை புகுத்துதல், கூடுதல் நிதி ஒதுக்கீடு போன்றவை தமிழகத்தில் சுகாதாரம் மேம்பட முக்கிய பங்காற்றுகின்றன.

ஐக்கிய நாடுகள் நிர்ணயித்திருந்த எம்.டி.ஜி. என்ற மேம்பாட்டு நோக்கங்களை தமிழ்நாடு ஏற்கனவே செய்து காட்டியிருக்கிறது. சுகாதாரப்பிரிவில் எஸ்.டி.ஜி. என்று அழைக்கப்படக் கூடிய மேம்பாட்டு நோக்கங்களை 2030-ம் ஆண்டுக்குள் அடைவதற்காக தமிழக அரசு தன்னை தயார்படுத்தி உள்ளது.

ஆயிரத்து 27 மருத்துவ சிகிச்சைகளை ஒரு கோடியே 58 லட்சம் குடும்பங்களுக்கு இலவசமாக மிகப்பெரிய காப்பீட்டுத் திட்டத்தை எனது அரசு அமல்படுத்தி வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஏராளமான சுகாதாரத்திட்டங்களை எனது அரசு செயல்படுத்தி வருகிறது.

ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் குழந்தைப்பேறுக்கான சேவைகளை 24 மணி நேரமும் தமிழக அரசு வழங்கி வருகிறது. தமிழகத்தில் 100 சதவீத பிரசவமும் மருத்துவமனைகளில்தான் நடக்கின்றன. இதில் இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.

இந்தியாவில் தமிழகம்தான் அதிக டாக்டர்களைக் கொண்ட மாநிலமாகவும், தரமான மருத்துவ சேவைகளை வழங்கும் தொழில் வல்லுனர்களைக் கொண்ட மாநிலமாவும் விளங்குகிறது. தேசிய சுகாதார சேவையில் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர்களும், செவிலியர்களும் அதிக அளவில் பங்களித்துள்ளனர்.

இங்கிலாந்தில் மருத்துவ நிபுணர்கள் அதிகம் பேர் உள்ளனர் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். அவர்கள் மூலம் எங்களது சுகாதார சேவைகளை வழங்கும் முறைகளை மேலும் தரம் வாய்ந்ததாக மாற்றுவோம். இந்தியாவில் தற்போது தமிழகம்தான் முதலீடுகளை குவிப்பதற்கு ஏற்ற மாநிலமாக இருக்கிறது. ஏனென்றால் இங்கு தொழிற்சாலைகளை அமைக்கக்கூடிய சூழ்நிலைகள் உள்ளன. உயர் கல்வி, தரமான வாழ்க்கைக்கு இங்கு வழிவகை உண்டு.

2018-ம் ஆண்டில் பிராஸ் மற்றும் சல்லிவன், இந்திய மாநிலங்களின் தர வரிசையை பட்டியலிட்டு வெளியிட்டது. அதில், ஒட்டுமொத்த செயல்பாட்டில் இரண்டாவது இடத்தையும், முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகளைக்கொண்ட மாநிலமாக முதல் இடத்தையும் தமிழகம் பெற்றிருந்தது.

இந்த ஆண்டு எனது அரசு நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு, உலகத்தின் பல்வேறு முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, ஜப்பான், தென்கொரியா, தைவான், பிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி, பின்லாந்து நாட்டு முதலீட்டாளர்கள் மூலம் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

ஆட்டோ மொபைல், வாகன உதிரி பாகங்கள், ஜவுளி, தோல் தயாரிப்புகள், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவில் தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி ஆகின்றன. இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் ஆட்டோ மொபைல்களில் 45 சதவீதம் தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி ஆகிறது. அதுபோல ஏற்றுமதியில் வாகன உதிரிபாகங்களில் 34 சதவீதம், எலக்ட்ரானிக் பொருட்களில் 16 சதவீதம் தமிழகத்தின் பங்களிப்பாக உள்ளது.

தமிழகத்தை அடுத்த அளவில் முன்னேற்றம் அடையச் செய்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம். பொருளாதார உள்கட்டமைப்புகளில் அரசு அங்கீகரித்துள்ள மாற்று முதலீட்டு நிதி, உலக முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதாக அமைகிறது. பசுமை எரிசக்தி, நீர், நகர்ப்புற உள்கட்டமைப்பு, வீட்டு வசதி ஆகிய இனங்களில் முதலீடு செய்வதற்கு உங்களுடன் இணைந்து பணியாற்ற எண்ணுகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இங்கிலாந்து பயணம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ‘இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் அந்நாட்டு முன்னாள் மந்திரிகள் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தில் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் ஒருவர் உரையாற்றியது தமிழக வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். தங்களின் அழைப்பை ஏற்று இங்கிலாந்து வந்ததற்காக இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் மனமார்ந்த நன்றியையும், வாழ்த்துகளையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவித்துக்கொண்டார்கள். இங்கிலாந்து நாடாளுமன்ற பிரதிநிதிகளின் மத்தியில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.