Tuesday, October 31, 2017

நிறம் மாறிய பாஜக?

நிறம் மாறிய பாஜக?
மிஸ்டர் கழுகு: எடப்பாடியைக் 


கைகழுவுகிறாரா மோடி?

கழுகார்

மழையில் நனைந்து, தண்ணீர் சொட்டச் சொட்ட வந்த கழுகாரிடம்,

“பி.ஜே.பி-யின் நிறம் லேசாக மாறுவதுபோல் தெரிகிறதே?” என கேள்வியைப் போட்டோம்.

ரெயின்கோட்டைக் கழற்றியபடி பதில்சொல்ல ஆரம்பித்தார், கழுகார். “டெல்லி பி.ஜே.பி தலைமை, தமிழக அரசுக்குக் காட்டிவந்த தன் நிறத்தை இப்போது மாற்றிவிட்டது என்றும், எடப்பாடியைக் கைகழுவ மோடி தயாராகி விட்டார் என்றும் டெல்லி தகவல்கள் சொல்கின்றன. அதற்கேற்ப தமிழக பி.ஜே.பி தலைவர்களின் குரலும் மாறி ஒலிக்கத் தொடங்கியுள்ளது. அ.தி.மு.க அரசைத் தமிழக பி.ஜே.பி தலைவர்கள் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், பி.ஜே.பி-யின் தமிழகத் தலைவர் தமிழிசையும் அதில் முன்னணியில் இருக்கின்றனர்.”

“அப்படியா... பொன்.ராதாகிருஷ்ணன் என்ன விமர்சனம் செய்தார்?”

“அக்டோபர் 29-ம் தேதி, விருதுநகர் மாவட்ட பி.ஜே.பி செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பொன்னார், ‘அ.தி.மு.க என்பது முடிந்துபோன கட்சி. தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழகத்தில் தற்போது மோசமான ஆட்சி நடக்கிறது. இத்தகைய மோசமான ஆட்சி வேறெங்கும் இல்லை. பி.ஜே.பி தொண்டர்கள் திட்டமிட்டுப் பணியாற்றினால், வெற்றி நிச்சயம். தமிழகத்தில் அடுத்து அமையப்போவது பி.ஜே.பி-யின் ஆட்சிதான்’ என்றார்.”

“தமிழிசை என்ன சொன்னார்?”

“டெங்கு விவகாரத்தில், இந்த அரசாங்கம் பொறுப்புடன் செயல்படவில்லை என்ற தொனியில் தினமும் பேசிவருகிறாரே. மேலும், தமிழகத்தில் பி.ஜே.பி ஆட்சி அமைக்காமல் உயிர் போகாது என்று, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தன்னுடைய ஆதங்கத்தைக் கொட்டித்தீர்க்கிறார். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ஜனாதிபதியைச் சந்தித்த, தமிழக கவர்னர் பன்வாரி லால் புரோஹித், ‘தமிழகத்தில் நடப்பது அரசே அல்ல; ஒரு 10 பேர் ஊழல் செய்வதற்காக, இந்த அரசை நாம் காப்பற்றத் தேவையில்லை’ என்ற தொனியில் சொன்னதாக முன்பே நான் உமக்குச் சொல்லியுள்ளேன். அதை 25.10.2017 தேதியிட்ட இதழிலும் வெளியிட்டிருந்தீர். இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துப் பார்த்தால், இன்றைக்கு எடப்பாடி பழனிசாமிக்குச் சாதகமான நிலைமை டெல்லியில் இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசைக் காப்பாற்ற வேண்டிய அவசியமும் டெல்லிக்கு இல்லை. அதனால்தான், பி.ஜே.பி-யின் டெல்லி தலைமை, தனது நிறத்தை மாற்றிவிட்டதாகத் தோன்றுகிறது. ‘மிகமிக கெட்ட பெயர் வாங்கிவரும் ஒரு அரசைக் காப்பாற்றுவதன் மூலமாக அந்தக் கெட்ட பெயரை பி.ஜே.பி-யும் வாங்க வேண்டுமா?’ என நினைக்கிறார்களாம் டெல்லியில்.”

‘‘அப்படியானால், நீர் ஏற்கெனவே சொன்னதுபோல, டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி தொடக்கத்தில் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடுமோ?”

‘‘டெல்லி வட்டாரங்களும் சரி, தி.மு.க வட்டாரங்களும் சரி, அப்படித்தான் சொல்கின்றன. மேலும், அ.தி.மு.க சார்பில் நாடாளுமன்ற துணை சபாநாயகராக இருக்கும் தம்பிதுரையின் வாயிலிருந்து வரும் வார்த்தைகளும் அப்படித்தான் இருக்கின்றன!”

‘‘ தம்பிதுரை என்ன பேசினார்?”

‘‘அக்டோபர் 27-ம் தேதி திருச்சியில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய தம்பிதுரை, ‘தமிழகத்தில் தேசியக் கட்சிகள் எந்தக் காலத்திலும் காலூன்ற முடியாது. தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்காக அவர்கள் காணும் கனவு பலிக்காது. இங்கு எப்போதும் திராவிடக் கட்சிகளின் ஆட்சிதான் நடக்கும். இந்த ஆட்சியைக் கவிழ்க்க நினைப்பவர்கள்தான் கவிழ்ந்துபோவார்கள்’ என பேசினார். அவருடைய பேச்சு, பி.ஜே.பி-க்கான பதிலடிதான் என்று அப்போது பேசிக்கொண்டார்கள். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, எடப்பாடி - மோடி ஐக்கியத்துக்குக் குந்தகம் ஏற்பட்டுவிட்டது என்பது தெரியத் தொடங்கியுள்ளது. இரட்டை இலை விவகாரத்தைத் தேவையில்லாமல் டெல்லி அதிக காலம் இழுத்தடிக்கிறது என்ற கோபமும் எடப்பாடி, பன்னீர் தரப்புக்கு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது!”

‘‘அப்படியா?”

‘‘சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, இரட்டை இலை வழக்கின் முடிவைத் தேர்தல் ஆணையம் அக்டோபர் 31-ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால், தலைமைத் தேர்தல் ஆணையத்தில் நடைபெறும் வழக்கில், இன்னும் மெயின் பிரச்னையை விசாரிக்கவே ஆரம்பிக்கவில்லை. அதனால், இப்போதைக்கு அந்த வழக்கில் தீர்ப்பு வராது; இரட்டை இலை யாருக்கு என்பதில் தீர்வும் வராது என்ற வருத்தம் அ.தி.மு.க தரப்புக்கு வந்துவிட்டது.”

‘‘மெயின் பிரச்னை என்ன?”

‘‘இரட்டை இலை எந்த அணிக்கு என்பதுதான் மெயின் வழக்கு. ஆனால், இப்போது நடப்பது, இரட்டை இலைக்கு உரிமைகோரி ஓ.பி.எஸ் - எடப்பாடி அணி தாக்கல்செய்த ஆவணங்கள் முறைகேடானவை என்பதுதான். அதாவது, ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் நடத்திய பொதுக்குழுவில், அ.தி.மு.க நிர்வாகிகளிடம் வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கப்பட்டது. மேலும் சில நிர்வாகிகள் மிரட்டப்பட்டும், ஆசை வார்த்தை காண்பித்தும் கையெழுத்து

போட வைக்கப்பட்டனர். இன்னும் சிலரிடம் எந்த விவரமும் சொல்லாமல் கையெழுத்து வாங்கப்பட்டது என்பது டி.டி.வி.அணியின் குற்றச்சாட்டு. அப்படி கையெழுத்துப் போட்டவர்களின் பெயர் விவரங்களை டி.டி.வி அணி, சீலிட்ட கவரில் வைத்து தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது. அதில் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும் என்பதுதான், தற்போது டி.டி.வி-யின் கோரிக்கை. தினகரனும், எடப்பாடியும் ஒன்றாக இருந்தபோது, அதிகபட்ச நிர்வாகிகளிடம் கையெழுத்து வாங்கி, தினகரன் சமர்ப்பித்துவிட்டார். அதனால், தற்போது பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகக் கொடுப்பதற்கு எடப்பாடியிடம் எந்த ஆவணங்களும் இல்லை. அதனால், தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரையில், அங்கு தினகரனின் ஆவணங்கள்தான் அதிகம் உள்ளன.”

‘‘அப்படியானால், இப்போதைக்கு வழக்கு முடியாதா?”

‘‘நவம்பர் 1-ம் தேதிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து கிடைக்கும் தகவல்களை வைத்துப் பார்க்கும்போது, பிரச்னை அவ்வளவு சீக்கிரம் முடியாது என்றே தெரிகிறது. எல்லாவற்றையும் மீறி முடியவேண்டுமானால், டெல்லி பி.ஜே.பி தலைமை மனது வைக்க வேண்டும். அவர்களைப் பொறுத்தவரை, இப்போதைக்கு இரட்டை இலை சிக்கலிலேயே இருக்கட்டும் என்றே நினைக்கின்றனர். அதற்கு உயிர் கொடுக்க அவர்கள் விரும்பவில்லை. அதனால், இந்தப் பிரச்னை இப்போதைக்கு முடியாது. இதுவும் பி.ஜே.பி - அ.தி.மு.க மனக்கசப்புக்குக் காரணமாகி வருகிறது.” 

Saturday, October 28, 2017

முதல்வராகிறார் பன்னீர்?

முதல்வராகிறார் பன்னீர்?
சசிகலாவை எதிர்த்து தர்ம யுத்தம் தொடங்கியவர் ஓ.பன்னீர்செல்வம். அவரை முதல்வர் பதவியிலிருந்து விலகச் சொன்னதும் யுத்தத்தைத் தொடங்கினார் பன்னீர். அதிமுகவில் பிளவு அங்கேதான் ஆரம்பித்தது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவைத் தேடிப் போனவர்கள்கூட, அப்படியே பன்னீர் வீட்டுப் பக்கம் ஒதுங்க ஆரம்பித்தார்கள். சசிகலா எதிர்ப்பு என்பதுதான் பன்னீரின் ப்ளஸ். அதை வைத்துதான் அவர் அரசியல் காய் நகர்த்தலைத் தொடங்கினார். சசிகலாவே தெய்வம் எனச் சொல்லிவந்த எடப்பாடி அணியையும் ஒரு கட்டத்தில் சசிகலாவை எதிர்க்கவைத்த பெருமை பன்னீருக்கே சாரும்.

ஆனால், இப்போது பன்னீர் சொல்வது எதையும் எடப்பாடி கேட்பதில்லை என்ற கோபமும் வருத்தமும் அவருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் நிறையவே இருக்கிறது. முதல்வர் பங்கேற்கும் அரசு விழாவுக்கு பன்னீர் அழைக்கப்பட்டாலும் அவரை ஒரு அமைச்சர் லெவலுக்கு மட்டுமே மதிக்கிறார் பழனிசாமி. துணை முதல்வர் என்ற சிறப்பு கௌரவம் எதுவும் அவருக்குக் கொடுக்கப்படவே இல்லை.

தலைமைச் செயலகத்தில் நடக்கும் நிகழ்வுகள் எதற்கும் பன்னீரை அழைப்பதும் இல்லை. பன்னீரின் துறையில் உள்ள ஃபைல்கள்கூட, எடப்பாடி சொல்லாமல் நகர்வதில்லை. அந்த அளவுக்கு பன்னீருக்கு செக் வைத்திருக்கிறார் எடப்பாடி. இதெல்லாம் பன்னீரை ரொம்பவே வருத்தத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. டெல்லி சென்ற சமயத்தில், பிரதமரிடமே இது சம்பந்தமாக பன்னீர் பேசியும் இருக்கிறார். ஆனாலும் எதுவும் மாறவில்லை. வருத்தங்களும் குறையவில்லை.

இந்தச் சூழ்நிலையில்தான் சில தினங்களுக்கு முன்பு ஒருநாள் இரவு பன்னீருக்கு மிகவும் நெருக்கமான ஒருவரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. ஒருவர். ‘அண்ணன்கிட்ட தலைவர் பேசச் சொன்னாரு...’ என்று சொல்ல... அவருடைய செல்போனிலிருந்து பன்னீருக்கு நெருக்கமான ஒருவரது செல்லுக்கு கால் போயிருக்கிறது. விவரம் சொல்லப்பட...போன் பன்னீர் கைக்கு மாறியிருக்கிறது.

‘தலைவர் உங்ககிட்ட பேசச் சொன்னாரு. அவரு மனதார உங்களுக்கு எந்த கெடுதலும் செஞ்சது இல்லை. நீங்க முதல்வராக இருக்கணும் என ஆரம்பத்துல அம்மாகிட்ட சொன்னதே தலைவர்தான். அப்படிப்பட்டவரை நீங்க தப்பா நினைச்சுட்டு இருக்கீங்க.

இப்போ உங்களுக்கு அங்கே என்ன மரியாதை கொடுக்கிறாங்கன்னு எங்களுக்கு தெரியும். தலைவரோ, சின்னம்மாவோ உங்களை ஒரு நாளாவது இப்படி நடத்தி இருப்பாங்களா? உங்களை எப்பவுமே தலைவர் விரோதியா நினைச்சது இல்லை. அம்மா இல்லை என்றதும் சின்னம்மா உங்களைத்தானே முதல்வராக உட்கார வெச்சாங்க. அதை நீங்க யோசிச்சு பாருங்க.

தலைவருக்கு இப்போ கோபமே எடப்பாடி மேலத்தான். உங்க மேல அவருக்கு எந்த வருத்தமும் இல்லை. நீங்க நேருக்கு நேராக எதிர்த்து நின்றவரு... எடப்பாடி முதுகில் குத்திட்டாருன்னு தலைவர் அடிக்கடி சொல்லுவாரு. இப்போ எங்களுக்கும் எதிரி எடப்பாடிதான். எங்க நோக்கம் ஆட்சியை கலைக்கிறது இல்லை. ஆனால், எடப்பாடி முதல்வராகத் தொடரக் கூடாது. நீங்க முதல்வராக இருந்தால்கூட எங்களுக்கு சந்தோஷம்தான். நீங்க முதல்வராக எந்த உதவி என்றாலும் நாங்க செய்யத் தயாரா இருக்கோம். அதைத்தான் தலைவர் உங்ககிட்ட சொல்லச் சொன்னாரு...’ என்று பேசியிருக்கிறார் அந்த எம்.எல்.ஏ. ‘இது சம்பந்தமா போனில் எதுவும் பேச வேண்டாம்... நான் பேசுறேன்.’ என்று மட்டும் பட்டும் படாமல் சொல்லி போனை வைத்துவிட்டாராம் பன்னீர்.

பன்னீர் அணியில் இருந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் அண்மையில் டெல்லி போயிருந்தார். அப்போது, தினகரன் ஆதரவு எம்.பி. ஒருவர் டெல்லியில் வைத்தும் இது சம்பந்தமாக பேசி இருக்கிறார். ‘நான் அண்ணனோடு கலந்து பேசிட்டு சொல்றேன்’ என்று மட்டும் சொல்லிவிட்டு வந்திருக்கிறார் அந்த முன்னாள் அமைச்சர். இப்படியாக தினகரன் டீம் நாலு பக்கம் இருந்தும் பன்னீர் அணியில் உள்ளவர்களுக்கு நூல் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்”

கைரேகை இறந்த பிறகு எடுக்கப்பட்டதா?

கைரேகை இறந்த பிறகு எடுக்கப்பட்டதா?
- உயர் நீதிமன்றத்தில் டாக்டர் பாலாஜியின் வாக்குமூலம்

கடந்த வருடம் நவம்பர் 19ஆம் தேதி நடந்த திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல், தஞ்சை, அரவக்குறிச்சி, பாண்டிச்சேரி மாநிலத்தில் ஒரு தொகுதிக்கான மறுதேர்தல்களில் அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுவில் பொதுச்செயலாளர் என்ற முறையில் ஜெயலலிதா கையெழுத்துக்குப் பதில் கைரேகை வைத்தார். இது அப்போதே சர்ச்சையாகி இன்றும் அந்த சர்ச்சை நீடித்து வருகிறது.

திருப்பரங்குன்றம் தேர்தல் முடிவில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் மிக முக்கியமான கட்டமாக, அப்போலோவில் இருந்த ஜெயலலிதாவின் கைரேகையை வேட்புமனு படிவத்தில் பதிவு செய்த டாக்டர் பாலாஜி நேற்று (அக்டோபர் 27) பிற்பகல் 2.15 மணிக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் ஆஜர் ஆனார்.

அவரிடம் குறுக்கு விசாரணை செய்ய வேண்டி திமுக வேட்பாளர் சரவணன் கோரிய மனுவை ஏற்று, டாக்டர் பாலாஜி ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது டாக்டர் பாலாஜியிடம், ஜெ. கைரேகை தொடர்பாக திமுக வேட்பாளர் தரப்பு வழக்கறிஞர் சரமாரியாக கேள்விகளைத் தொடுத்தார். நூறுக்கும் குறையாமல் திமுக வேட்பாளர் தரப்பு வழக்கறிஞர் தொடுத்த கேள்விகளுக்குச் சுமார் இரண்டை மணி நேரமாக பதிலளித்தார் டாக்டர் பாலாஜி.

அந்த குறுக்கு விசாரணையின் முக்கிய பகுதிகளை #என்நாடு வாசகர்களுக்காகத் தொகுத்துத் தந்திருக்கிறோம். கீழே திமுக வேட்பாளர் தரப்பு வழக்கறிஞர் கேள்வி கேட்க, அதற்கு டாக்டர் பாலாஜி கொடுத்த பதில் தொகுக்கப்பட்டுள்ளது.

* ஜெயலலிதாவைச் சந்தித்து கைரேகை பதிவு செய்வதற்கு தமிழக அரசிடமிருந்து உங்களுக்கு அதிகாரபூர்வ அனுமதி வழங்கப்பட்டதா?

இல்லை.

* ஜெயலலிதாவிடம் 20 கைரேகைகள்தானே வாங்கியிருக்க வேண்டும். அந்த படிவங்களுக்குத் தேவையானவை இருபது கை ரேகைள்தான். ஆனால், நீங்கள் 28 கைரேகைகள் வாங்கியிருக்கிறீர்களே?

ஆமாம் ஜெயலிதாவிடம் 28 கைரேகைகள் வாங்கினேன்.

* அந்த 28 கைரேகைகளுக்கும் அட்டெஸ்டேஷன் (சான்றாவணம்) போடாமல் வேட்புமனுவில் வைக்கப்பட்ட கைரேகைக்கு மட்டும்தான் அட்டெஸ்டேஷன் கையொப்பம் போட்டிருக்கிறீர்களா?

இல்லை. எல்லா கைரேகைகளுக்கும் சேர்த்து நான் ஒரே அட்டெஸ்டேஷன்தான் போட்டிருக்கிறேன்.

* மீதி படிவங்கள் எல்லாம் என்ன ஆனது?

அவை எங்கே என்று தெரியவில்லை.

* ஜெயலலிதாவை நீங்கள் பார்த்தபோது அங்கே யார் இருந்தார்கள்? ஓ.பன்னீர், சசிகலா, தினகரன், எடப்பாடி பழனிசாமி யாராவது அங்கே இருந்தார்களா?

அங்கே ஜெயலலிதாவுக்குப் பக்கத்தில் சசிகலா மட்டுமே நின்று கொண்டிருந்தார். வேறு யாரையும் நான் பார்க்கவில்லை.

* உங்கள் முன்னால் ஜெயலலிதாவிடம் கைரேகைகளை அந்த படிவங்களில் வாங்கியது யார்?

அதை யார் வாங்கினார்கள் என்று எனக்குத் தெரியாது.

* சரி கைரேகை பெற்ற படிவங்களை யாரிடம் கொடுத்தீர்கள்?

அதை நான் அப்போலோ மருத்துவர்களிடமே கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்.

* நீங்கள்தான் ஜெயலலிதாவைச் சந்தித்து கைரேகை பெற்றதாக

சொல்கிறீர்கள். நீங்கள் ஜெயலலிதாவை சென்று பார்த்ததற்கு புகைப்படமோ, வீடியோவோ எடுக்கப்பட்டதா? அல்லது ஜெயலலிதாவின் மருத்துவமனை லாக் ஷீட்டில் குறிப்பு இருக்கிறதா? அல்லது அப்போலோ மருத்துவமனை இதற்காக உங்களுக்கு வழங்கிய ஆவணம் எதுவும் இருக்கிறதா?

அப்படியெல்லாம் என்னிடம் எதுவும் இல்லை.

* அப்படியானால்... நீங்கள் அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று ஜெயலலிதாவைப் பார்க்கவே இல்லை. அதனால்தான் அதற்கான எந்த ஆவணங்களும் தங்களிடம் இல்லை. நீங்கள் உள்ளே போகவே இல்லை. நீங்கள் போயிருந்தால் உங்களால் ஆவணத்தைக் கொடுத்திருக்க முடியுமே. ஆக... அடையாறில் உங்கள் சகோதரியின் பெயரில் இருக்கும் நர்சிங் ஹோமுக்கு வந்து உங்களிடம் இந்த கைரேகை படிவத்தில் கையெழுத்து வாங்கிப் போயிருக்கிறார்கள் அல்லவா?

இல்லை இல்லை நான் அப்போலோ மருத்துவமனையில் இருந்துதான் கையெழுத்திட்டேன்.

* ஜெயலலிதா நுரையீரல் செயல்பட முடியாத நிலையில் மிக மோசமான சுவாசக்கோளாறில் இருந்தாரா?’

ஆமாம். இருந்தார்.

* இந்தப் பிரச்னைக்காக அவர் வெண்டிலேஷனில் வைக்கப்பட்டிருந்தாரா, சுவாசக் கோளாறுக்காக அவருக்கு தொண்டை துளை குழாய் அறுவை சிகிச்சையான டிரக்யாஸ்டமி செய்யப்பட்டிருந்ததா?

ஆம். வெண்டிலேஷனில்தான் வைக்கப்பட்டிருந்தார். அவருக்கு டிரக்யாஸ்டமி செய்யப்பட்டிருந்தது.

* ஜெயலலிதாவின் கைரேகையை பதிவு செய்வதற்கு நான்கு அரசு மருத்துவர்கள் மறுத்த நிலையில்... நீங்கள் இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதற்குக் காரணமே தமிழ்நாடு உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் ஆக உங்களை நியமிப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டதுதான். அப்போது இருந்த தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவுடன் இதுபற்றி நீங்கள் ரகசிய உடன்பாடு ஏற்பட்ட பிறகுதான் கைரேகையை பதிவு செய்தீர்களா?

இல்லை... எனக்கு அந்தப் பதவி இயல்பாகத்தான் வழங்கப்பட்டது.

* சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுடன் தாங்கள் நெருக்கமாக இருந்ததால் இந்தப் பதவி நியமனத்துக்கு வேண்டிய வரைமுறைகள் எல்லாம் மீறப்பட்டு உங்களுக்காக வழங்கப்பட்டது என்பது சரியா?

இல்லை.

* பாபு ஆபிரகாம் என்பவர் உங்கள் முன்னால்தான் கைரேகை பதிவுக்கு சாட்சிக் கையெழுத்து போட்டிருக்கிறார். அவர் உங்களைப் பார்க்கவில்லை என்று சொல்லியிருக்கிறார். நீங்கள் அவரைப் பார்த்தீர்களா? அதற்கான ஆதாரம் எதுவும் இருக்கிறதா?

இல்லை. நான் அவரைப் பார்க்கவில்லை. என்னிடம் ஆதாரம் இல்லை.

* நீங்கள் செய்த எதற்குமே ஆதாரம் இல்லை என்றால், கைரேகையை பதிவு செய்தது மட்டும் எப்படி சரியாக நடந்திருக்க முடியும்?

என்னிடம் ஆதாரம் இல்லை. அவ்வளவுதான்.

* கைரேகை பற்றி உங்களுக்குத் தெரியுமா?

ஆம் தெரியும். எனக்கு ரேகைகள் விஷயத்தில் அனுபவம் உள்ளது.

* உயிரோடு இருப்பவர் வைக்கும் கைரேகையில் ரேகைகளின் ஓட்டத்தை எளிதாக பார்க்க முடியுமா?

ஆம். எளிதாக பார்க்கலாம்.

* ஆனால் ஜெயலலிதா வேட்புமனு படிவங்களில் வைத்த கைரேகையில் இட்ஜஸ் எனப்படும் ரேகை ஓட்டம் தெளிவாக தெரியவில்லையே?

அதுபற்றி எனக்கு தெரியவில்லை.

* ஜெயலலிதாவின் பெயரால் பெறப்பட்ட ரேகையில் ரேகைகள் இல்லாமல் வெறும் புள்ளி புள்ளியாய் இருப்பதால் அது உண்மையில் ஜெயலலிதா இறந்த பிறகு எடுக்கப்பட்டது. நீங்கள் கைரேகை பெற்ற 27-10-2016க்கு முன்பே அவர் இறந்துவிட்டார். அவர் இறந்து சில நாள்கள் கழித்துதான் இந்த ரேகை எடுக்கப்பட்டிருக்கிறது என்கிறேன் நான். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது.

* ஜெயலலிதா கைரேகை பதியப்பட்ட வேட்புமனுக்களை உங்களிடம் திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் பெற்றாரா?

இல்லை. நான் அவரிடம் கொடுக்கவில்லை.

- இவ்வாறு சுமார் நூறு கேள்விகள் டாக்டர் பாலாஜியிடம் கேட்கப்பட்டதில் பல கேள்விகளுக்கு மனுதாரரான திமுக வேட்பாளர் சரவணனுக்கு சாதகமான பதிலையே கூறினார் டாக்டர் பாலாஜி. இந்த குறுக்கு விசாரணை முடிவதற்குள் மாலை ஐந்து மணியை நெருங்கிவிட்டது.

அப்போது நீதிபதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் தரப்பு வழக்கறிஞரிடம், ‘நீங்களும் இன்றைக்கே டாக்டர் பாலாஜியிடம் குறுக்கு விசாரணையை முடித்துவிட வேண்டும். இதற்காக இன்னொரு நாள் தர முடியாது’என்று கூறினார்.

அப்போது நீதிமன்றத்துக்குள் பத்திரிகையாளர்கள் திரளாக வந்துவிட்டனர். இதையடுத்து, எதிர்தரப்பான ஏ.கே.போஸ் தரப்பில், ‘பத்திரிகையாளர்கள் வந்துவிட்டார்கள். இவர்கள் அனைத்தையும் எழுதிவிடுவார்கள்’ என்று அவர்கள் நீதிமன்றத்துக்குள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

அதற்கு நீதிபதி வேல்முருகன், ‘பத்திரிகைகளில் வெளியிடுவதற்காக நாம் வழக்கு நடத்தவில்லை. அதேநேரம் பத்திரிகையாளர்கள் இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூண்கள். அவர்கள் நீதிமன்றத்தில் நடக்கும் விஷயங்கள் பற்றி வரிக்கு வரி எழுதாமல், வழக்கு இந்த மாதிரி நடந்தது என்ற தார்மீகப் பொறுப்புடன் செய்தியை வெளியிட வேண்டும்’ என்றார்.

அதற்குள் நேரம் ஆகிவிட்டதால், ‘டாக்டர் பாலாஜியை எதிர் மனுதாரரான ஏ.கே.போஸ் தரப்பில் நவம்பர் 3ஆம் தேதி குறுக்கு விசாரணை செய்யலாம்’ என்று கூறி வழக்கை நவம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி.

இது வெறும் தேர்தல் வெற்றி தோல்விக்கான வழக்கு மட்டுமல்ல. அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸின் வேட்புமனுவில் இருக்கும் அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கைரேகையுடைய பின்னணி பற்றியும் இந்த வழக்கு விரிவாகப் பேசுகிறது. எனவே, ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்மத்தை உடைக்கும் கருவிகளில் ஒன்றாக இந்த வழக்கும் இருக்கிறது.

நேற்று டாக்டர் பாலாஜியிடம் நடத்திய குறுக்கு விசாரணையில் அவர் ஜெயலலிதாவிடம் கைரேகை பதிவு செய்ததில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதை அவரே உறுதி செய்திருக்கிறார். இது இந்த விவகாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம்.

அடுத்தடுத்து இந்த வழக்கு சூடு பறக்கும். ஜெ. மரணத்தின் மர்மக்கதவுகள் ஒவ்வொன்றாகத் திறக்கும்!

Sunday, October 22, 2017

மங்குகிறதா ஒளிவட்டம்?

மங்குகிறதா ஒளிவட்டம்?
2014 மே மாதத் தேர்தலுக்கு முந்தைய நாள்களோ அல்லது அதே ஆண்டோ நினைவுக்கு வருகிறதா? இவரைப் போற்றித் துதிக்கும் இந்திய ஊடகம் இந்த தேசம் 67 ஆண்டுகளாக எப்படித்தான் தாக்குப்பிடித்ததோ என்று வியக்காத குறைதான். தொலைதூரத்தில் உள்ள பள்ளிக்கூடத்திலோ அல்லது டெல்லியில் உள்ள கல்லூரியிலோ அவர் நிகழ்த்தும் ஒவ்வொரு சின்னச்சின்ன உரைகளும் செய்திகளாகி, தொலைக்காட்சித் திரைகளில் பளிச்சிட்டன. நல்ல செய்தியோ, மோசமான செய்தியோ அல்லது மாறுபட்ட எந்த செய்தியோ அது தேசிய அல்லது சர்வதேச நிகழ்வாக இருந்தாலும் அவை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகவில்லை. இந்தத் தேவதூதர் காட்சியளிக்கும்போதெல்லாம் சமூக ஊடகங்களும் நன்றி கீதங்களை ஓய்வில்லாமல் இசைத்தன.

தன்னைச் சுற்றிலும் ஒரு மாயையை உருவாக்குவதில் இந்தத் தூதரும் தன் கைவரிசையைக் காட்டினார். கடந்த 60 ஆண்டுகளாகவோ அல்லது சுதந்திரம் அடைந்ததிலிருந்தோ என்ன ஆதாயம் அடைந்தீர்கள் என பெருந்திரளான மக்களிடம் அவர் தவறாமல் கேட்டபோதெல்லாம், அவர்கள் ‘பூஜ்ஜியம்’ என உரத்த குரலில் பதிலளித்தனர். எப்படி இருந்தாலும் பூஜ்ஜியம் என்பது இந்தியக் கண்டுபிடிப்புதானே. அனைத்துமே மாறி, 60 மாதங்களில் பொற்காலம் (‘நல்ல காலம்’) பிறக்கும் என உறுதி அளித்தார். உண்மையிலேயே வாக்களித்தவர்களில் 31% பேர் – மொத்த வாக்காளர்களில் 21% அல்லது 22% பேர் அல்லது இந்திய மக்களில் சுமார் 12% பேர் - அவரது வாக்குறுதிகளை நம்பினர். போட்டியிடும் பல வேட்பாளர்களில் அதிக வாக்குகளைப் பெறும் ஒரு வேட்பாளர் வெற்றிபெறுவதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால், இது பெருவாரியான மக்களின் தீர்ப்பு என்று சொல்ல முடியும்.

இந்த ஆதரவு அலை இப்போது பின்வாங்கத் தொடங்கியுள்ளதா? இந்தத் தூதரின் உறுதி அளிக்கப்பட்ட அல்லது உறுதி அளிக்கப்படாத செயல்கள் அனைத்தும் நீர்த்துப்போய்க்கொண்டிருக்கின்றன. வேறு எந்த பிரதமரும் மோடியைப் போன்று நாள்தோறும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடகங்களில் இந்தளவுக்கு கேலி, கிண்டலுக்கு ஆளாகவில்லை. ஜோக்குகள், கார்ட்டூன்கள், வீடியோக்களாக வரும் இந்த நையாண்டிகள், அவரது அருமை சகாவான உமா பாரதி போன்றவர்கள் “விகாஸ் புருஷ்” (வளர்ச்சியைத் தருபவர்) என்ற அவரது இமேஜ் குறித்து முன்னர் என்ன சொன்னார்கள் (வினாஸ் புருஷ் – நாசம் ஏற்படுத்துபவர்) என்பதை நினைவூட்டுகின்றன.

பீதியான சூழலில் கேலி, கிண்டல் என்பது அதிகார மையத்துக்கு விடுக்கப்படும் கடுமையான சவாலாகும். தலைவர்களை நையாண்டி செய்வது, அதிலும் ஒட்டுமொத்த அமைப்பையும் எள்ளி நகையாடும் போக்கு சோவியத் ஒன்றியத்தில் 1980களில் உச்சத்தில் இருந்தது. பெரும் இழப்பை அடுத்து சோவியத் அதிகாரவர்க்கம் இதைக் கண்டுணர்ந்தது. வதந்திகள் இதில் இன்னொரு வகை. இவை இந்திரா காந்தியின் அவரச நிலை ஆட்சியைத் தகர்த்தன.

கரையும் வாக்குறுதிகள், கலையும் பிம்பங்கள்

மோடியின் பெரும் வாக்குறுதிகள், கண்ணெதிரே காற்றோடு கரைகின்றன. தடபுடலாக அவர் தொடங்கிய அனைத்துத் திட்டங்களும் தோல்வி அடைந்துள்ளன. மிக மோசமான விளைவை ஏற்படுத்தியுள்ள பண மதிப்பு நீக்கம், “விதியுடன் ஒரு சந்திப்பு”க்கு நிகராக முன்னிறுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு அடாவடியாக நிர்வகிக்கப்படுவது உள்ளிட்டவை இதற்குச் சான்று. வீழ்ச்சியடைந்துள்ள இந்தியாவை வீறுகொண்டு எழவைக்கும் தூதர் என்ற அவருடைய பிராண்ட் இமேஜ் மங்கிவருகிறது. ஒளிவட்டம் சோபை இழக்கிறது. அதுவும் குறுகிய காலமான மூன்றரை ஆண்டுகளுக்குள்.

இவருக்கு முந்தைய பல பிரதமர்கள் சீக்கிரமாகவே வீழ்ச்சியடைந்தார்கள் என்றால், கோஷ்டிப் பூசல்களும், ஒன்றிணைந்து செயல்படாத கூட்டணிக் கட்சிகளும்தான் காரணமாக இருந்தன. இவர்கள் யாருக்குமே, தங்கள் வாக்குறுதிகளை, குறைந்தது அதில் ஒரு பகுதியையாவது நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை பலம் மோடிக்குக் கிடைத்தது போன்று கிடைத்ததில்லை. தன்னை மையமாகக்கொள்ளும் போக்கே இவர் மீதான நம்பிக்கையை உருவாக்கியதற்கான ஆதார சக்தி. அதே ஆதாரமே அவர் மீதான நம்பிக்கை வேகமாகக் குறைவதற்கும் காரணமாக உள்ளது.மக்கள் மத்தியில் அவர் மீதான நம்பிக்கை பெருமளவு குறைந்திருப்பதைப் போன்றே அவரது சொந்த முகாமிலும் குறைந்துவருகிறது. பாரதிய ஜனதாவின் துணை அமைப்புகளான பாரதிய கிஸான் சங்கம், பாரதிய மஸ்தூர் சங்கம் போன்றவை, மோடிக்கு வாக்களித்ததை இப்போதும் ஒப்புக்கொள்ளும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு வர்த்தகர் அமைப்புகள், இளைஞர்கள் (ஆதரவுதளத்தின் பிரதான அங்கம்) ஆகிய அனைவருமே நாட்டின் பொருளாதாரத்தை அவர் கையாளும் அணுகுமுறையைப் பார்த்து கொந்தளிப்படைந்துள்ளனர்.

பாரதிய ஜனதாவின் நீண்டகாலத் தலைவரான யஷ்வந்த் சின்ஹா இந்தியன் எக்ஸ்பிரஸில் எழுதிய கட்டுரை அரசின் பொருளாதாரத் தோல்விகளின் மையத்தைச் சுட்டிக்காட்டாமல் இருந்திருந்தால், அது புறக்கணிக்கப்பட்டிருக்கும். அதையடுத்து, பல்வேறு அம்புகள் அதே திசையை நோக்கிப் பறந்துகொண்டிருக்கின்றன. பாரதிய ஜனதா அரும்பாடுபட்டும் அகமது பட்டேலுக்குக் கிடைத்த வெற்றி, அடுத்தடுத்து பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் அது தோல்வி அடைந்து தனது பெரும் ஆதரவு தளமான இளைஞர்களை இழந்தது, குர்தாஸ்புரில் தனது இடத்தைப் பறிகொடுத்தது, கட்சித் தலைவரின் மகன் நடத்திய பிசினஸ் நடவடிக்கைகளை தி வயர் அம்பலப்படுத்தி, கட்சியை மிகவும் தர்மசங்கடப்படுத்தியது என எதிர்மறை அம்சங்கள் அணிவகுக்கின்றன. பாரதிய ஜனதா தலைவர்கள் பங்கேற்ற குஜராத் தேர்தல் கூட்டங்களில் மக்கள் கூட்டம் மிகவும் குறைந்தோ அல்லது எதிர்ப்புத் தெரிவிக்கும் மக்கள் கூட்டமோ காணப்படும் காட்சிகள் சமூக ஊடக வீடியோக்களில் வலம்வருகின்றன. இவை அனைத்துமே தனித்தனியான துரும்புகளா, அல்லது அவை ஒன்று திரண்டு ஒரு புயலாக இல்லாவிட்டாலும் பெரும் காற்றாக வலுப்படுகிறதா? தான் சாதித்துள்ளவற்றின் அடிப்படையில் மேலும் அதிக வளர்ச்சியைத் தரும் உறுதிமொழியுடன் 2019 தேர்தலை எதிர்கொள்ளும் மோடியின் நம்பிக்கைகளுக்கு அவரது நடவடிக்கைகளே முட்டுக்கட்டையாகிவிட்டன.

மீண்டும் முஸ்லிம் எதிர்ப்பு அஸ்திரம்

ஆர்.எஸ்.எஸ். தலைவர், மோகன் பாகவத் ஆற்றிய தசரா விழா உரையும் அண்மையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ‘சமன்வய பைட்டக்’ நிகழ்ச்சியும் அடுத்த தேர்தல் விவகாரத்துக்கான அளவுகோலாக உள்ளன. சிறு விவசாயிகள், நடுத்தர மற்றும் சிறிய வியாபாரிகளின் நலன்களை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கை இந்தத் துறைகளில் பாரதிய ஜனதாவின் தோல்வியை ஒப்புக்கொள்வதாக உள்ளது. எனவே, ரோஹாங்கியா முஸ்லிம்களால் தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, இந்தப் பிரச்னைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதிலும் ரோஹாங்கியா என்பதை இரண்டாம்பட்சமாக ஆக்கி, முஸ்லிம் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் முஸ்லிம்களை மட்டும் குறிப்பிட்டு அவர்கள்தான் இந்த தேசத்துக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும் ஒரே தரப்பு என்று கூறுவதற்கு இந்தப் பிரச்னை அவர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துவிடும். இந்த அடிப்படையில், இந்துக்கள் ஒன்றிணைந்து பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என பிரசாரம் செய்வதற்கும் வசதியாகிவிடும். அடுத்த மாற்று வழி, பாகிஸ்தானுடன் மோதலில் இறங்குவது. இது கொஞ்சம் ஆபத்தான விஷயம்.

பாரதிய ஜனதாவின் வாய்ப்புகள் சரிந்துவரும் நிலையில், வேறு எந்த மாற்றும் இல்லை (TINA-there is no alternative) - மோடியின் உயரத்துக்கு ஈடுகொடுக்கக்கூடிய யாரும் இல்லை என்ற வாதம் பொய்த்துப்போய் விடலாம். 2004ஆம் ஆண்டில் இந்தியா ஒளிர்கிறது என்ற முழக்கம் ஒலித்தபோது, இந்திய ஊடகங்கள் அதில் மதிமயங்கிய நாள்களை நினைவுகூர்வோம். இளம் கம்ப்யூட்டர் மோகம் கொண்ட இளைஞர் படை ஒன்றின் உதவியுடன் மறைந்த பிரமோத் மகாஜன் தொலைதூரத்தில் உள்ள தொகுதியின் சிறு சிறு விவரங்களைக்கூட விரல் நுனியில் வைத்திருந்தார். அப்போதோ எதிர்க்கட்சிகள் நிராயுதபாணிகளாக இருந்தன. அடல் பிகாரி வாஜ்பாய் ஆட்சி நிர்வாகத்தின் ஒளிமயமான செயல்பாடுகளும் அவரது வெளியுறவுக் கொள்கையும் உலகம் முழுவதும் அவரது மதிப்பை உயர்த்தி, யாருமே அவரை நெருங்கக்கூட முடியாத அளவுக்குச் சிகரத்தில் வைத்திருந்தன. ஆனால், ‘வேறு எந்த மாற்றும் இல்லை’ என்ற அம்சம் அந்தத் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு வெற்றியைத் தரவில்லை.இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல்கள், அதிபர் தேர்தல் முறையை நோக்கி எந்த அளவுக்கு திசை திரும்பிச் சென்றாலும் பிரதம மந்திரியை அல்லாமல், எம்.பி.க்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் என்ற வழக்கமான நிலைக்குத்தான் நமது அமைப்பு முறை திரும்ப வருகிறது. வேட்பாளரின் பிம்பம் மங்கத் தொடங்கும்போது இது மேலும் வலுவடைகிறது.

இந்திய வாக்காளர்களைக் கிள்ளுக்கீரையாகக் கருதாதவர்கள்தான் புத்திசாலிகள்.

நன்றி: https://thewire.in/188094/narendra-modi-bjp-2019-image/

தமிழில்: ராஜலட்சுமி சிவலிங்கம்

பாஜகவுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த அதிமுக!

பாஜகவுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த அதிமுக!
தமிழகத்தில் பாஜகவுக்கு முகவரி கொடுத்ததே அதிமுகதான்’ என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசை பாஜகதான் கட்டுப்படுத்துகிறது என்று தமிழகத்தின் பல்வேறு கட்சிகளும் குற்றம்சாட்டி வந்த நிலையில், மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் நிறைய நிதிகள் கிடைக்கும் என்றும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தமிழக அரசு இல்லை என்றும் தமிழக ஆட்சியாளர்கள் பேசி வருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில் இரட்டை இலை தொடர்பான விசாரணை இன்று (அக்டோபர் 23) டெல்லியில் நடைபெறவுள்ளது. அதில் கலந்துகொள்ள நேற்று டெல்லி சென்ற ஒருங்கிணைந்த அதிமுக அணியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் பேசியபோது, “மெர்சல் குறித்து ஆர்வக்கோளாறில் தமிழக பாஜக தலைவர்கள் பேசி வருகின்றனர். பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் மெர்சல் பற்றி கூறினாரா என்ன? எனவே, பிரதமர் மோடியை மெர்சல் விவகாரத்தில் தொடர்புபடுத்த வேண்டாம்.

பாஜகவுக்குத் தமிழகத்தில் அங்கீகாரம் பெற்றுக்கொடுத்தவர் ஜெயலலிதாதான். மேலும் பாமக, மதிமுகவுக்கும் அங்கீகாரம் பெற்றுக் கொடுத்தது அதிமுகதான். எனவே தமிழகத்தில் அதிமுகவை வேறு எந்த கட்சியோ, அதன் தலைவரோ காப்பாற்ற வேண்டிய அவசியமில்லை.

பிரதமர் மோடி தங்களைக் காப்பாற்றுவார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். ஆனால், அதிமுகவைப் பொறுத்தவரை எங்களுக்கு தந்தை எம்.ஜி.ஆர்., தாய் ஜெயலலிதா” என்று தெரிவித்துள்ளார்.

இன்னும் பல ஊழல்கள் வெளியாகும்! யெச்சூரி நம்பிக்கை!

இன்னும் பல ஊழல்கள் வெளியாகும்! யெச்சூரி நம்பிக்கை!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியின் நாடாளுமன்ற உரைகளுடைய தமிழ் மொழியாக்க நூல், ‘சீத்தாராம் யெச்சூரி நாடாளுமன்ற உரைகள்’ என்ற பெயரில் நேற்று (அக்டோபர் 22) சென்னையில் வெளியிடப்பட்டது.

விழாவுக்கு மார்க்சிஸ்ட் எம்.பியான டி.கே.ரங்கராஜன் தலைமை வகித்து நூலை வெளியிட்டார். இந்த விழாவில் திமுக எம்.பி. கனிமொழி, அதிமுக சார்பில் தினகரன் ஆதரவு எம்.பியான நவநீதகிருஷ்ணன், காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வன்னியரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில் சிறப்புரையாற்றிய சீத்தாராம் யெச்சூரி, “நான் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ஒரே போராட்டத்தையே நடத்திக்கொண்டிருக்கிறேன். தேசப்பற்று என்ற பெயரில் போலி தேசியவாதிகள் நடத்தும் ஏமாற்று வேலைகளுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறேன். இந்த அரசு ஏற்படுத்திய பொருளாதாரச் சீரழிப்பால் நாட்டின் ஒரு சதவிகிதம் மக்களே பயன்பெற்றிருக்கின்றனர். பொருளாதார சீர்குலைவு நடவடிக்கைகளால் தொழிலாளர்கள், பாமரர்கள், நடுத்தர மக்கள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பத்து லட்சம் பேருக்கு வேலை தருவேன் என்ற வாக்குறுதியெல்லாம் எங்கே போனது? அமித் ஷா மகனின் ஊழல் இப்போது வெளிவந்திருக்கிறது. இன்னும் பல ஊழல்கள் விரைவில் வெளிவரும்” என்று பேசினார் சீத்தாராம் யெச்சூரி.

உயிர் பெரும் வரி ஏய்ப்பு வழக்கு!

உயிர் பெரும் வரி ஏய்ப்பு வழக்கு!
மெர்சல் படத்துக்கு பாரதிய ஜனதா கட்சி கொடுத்திருக்கும் புரமோஷனில் இந்தியா முழுவதிலுமிருந்தும் ஆதரவுக் குரல்கள் வந்திருக்கின்றன. அதிகாரத்தின் பெயரால் கருத்துச் சுதந்திரத்துக்கு ஆபத்து நேரும்போதெல்லாம் மத, சாதி, இன, மொழி பேதமின்றி எப்படி மக்கள் ஒன்றிணைவார்கள் என்பதை மெர்சல் படத்துக்கு ஏற்பட்ட பிரச்னை உருவாக்கியிருப்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். அப்படியொரு நிலையில், இந்திய சினிமாவின் முகமாகத் திகழும் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரும் ஒரே நாளில் மெர்சல் படத்தைப் பார்த்திருக்கிறார்கள்.

மெர்சல் படத்துக்கான பிரச்சினைகள் தொடங்கியபோதே “மெர்சல் ஏற்கெனவே தணிக்கை செய்யப்பட்டுவிட்டது. அதைத் திரும்ப தணிக்கை செய்யாதீர்கள். விமர்சனத்தை நேர்மறையாக எதிர்கொள்ளுங்கள். விமர்சகர்களை அமைதியாக்க முயற்சிக்க வேண்டாம். இந்தியா பேசும்போதுதான் ஒளிரும்” என்று கருத்து கூறியிருந்தார் கமல். எனவே, நேற்று (22.10.2017) மெர்சல் படத்தைப் பார்த்ததற்கு வெளிப்படையாக எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால், ரஜினி மெர்சல் படம் பார்க்கும்வரை காத்திருந்து, “முக்கியமான விஷயத்தைப் பேசியிருக்கிறீர்கள். வெல்டன். மெர்சல் டீமுக்கு வாழ்த்துகள்” என்று ட்வீட் செய்திருக்கிறார். தனிப்பட்ட முறையில் போன் மூலம் ரஜினி விஜய்க்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருப்பதாகத் தெரிகிறது.

ரஜினி போல அல்லாமல், கமல் தனது ஸ்டூடியோவுக்கு விஜய்யை அழைத்து அவருடன் அமர்ந்து மெர்சல் படத்தைப் பார்த்திருக்கிறார். விஜய்யின் இந்த தைரியத்துக்காகப் பாராட்டு தெரிவித்ததுடன், இதற்கு முன் இதேபோல தான் விமர்சனம் வைத்தபோதெல்லாம் எப்படி எதிர்ப்புகள் வந்தன என்பதைப் பற்றியும் பேசியிருக்கிறார். அதிலும் முக்கியமாக விஜய்யுடன் போட்டோ எடுத்துக்கொண்டபோது பின்னணியில் அபூர்வ சகோதரர்கள் பட போஸ்டர் இருக்குமிடத்தில் நின்று போட்டோ எடுத்துக்கொண்டிருக்கிறார்.

மெர்சல் திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திர வடிவமைப்பில் அபூர்வ சகோதரர்கள் படத்தின் அமைப்பு அப்படியே இடம்பெற்றிருந்தது படம் பார்த்த அனைவருக்குமே தெரியும். அப்படியொரு விமர்சனம் இருக்கும் நிலையில் கமல் தனது ஸ்டூடியோவில் அபூர்வ சகோதரர்கள் படம் மாட்டியிருக்கும் இடத்தில் போட்டோ எடுத்திருப்பது கமலின் ஸ்டைல்.

இவற்றையெல்லாம் தாண்டி, பிரச்சினை கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்ட நிலையில் கமல் மற்றும் ரஜினியின் இந்த நடவடிக்கைகள் தேவைதானா, இது மேலும் பிரச்னைகளை வரவழைக்காதா என்ற கேள்விகளே அதிகமாக எழுந்திருக்கின்றன. ஒரு படத்தைப் பார்க்காமல் அதன் கருத்துகளை ஆமோதிப்பது ரஜினி - கமல் ஆகியோருக்குத் தகுந்த செயல் அல்ல. அதனால்தான் கமல் முதலில் வெளியிட்ட தனது ட்விட்டில் கருத்துச் சுதந்திரத்தை முன்னிலைப்படுத்தியே பேசியிருந்தாரே தவிர படத்தின் கதையை எங்கும் ஆதரிக்கவில்லை. இப்போது படம் பார்த்த பிறகு ரஜினி மெர்சல் திரைப்படத்தைப் பற்றிய தனது கருத்தைப் பொது வெளியிலும், கமல் மெர்சல் டீமிடமும் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால், மெர்சல் திரைப்படத்தின் பிரச்சினைகள் முடிந்துவிடவில்லை என்பதே தற்போதைய

நிலை. நேற்று இரவு எகனாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், கிடப்பில் கிடக்கும் விஜய் மீதான வழக்கு மீண்டும் தூசி தட்டப்படுமா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

2015 அக்டோபர் 1ஆம் தேதி ரிலீஸான விஜய்யின் புலி திரைப்படத்தின்போது விஜய் வீட்டில் வருமான வரித் துறை ரெய்டு நடத்தப்பட்டது. அப்போதைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் தூண்டுதலால் ரெய்டு நடத்தப்பட்டது என்று பேசப்பட்டாலும், 5 வருடங்களாக நடிகர் விஜய் வரி ஏய்ப்பு செய்திருந்தது தெரியவந்ததால் அவர் குற்றம் செய்தவராகக் கருதப்பட்டார். அதே சமயத்தில் நயன்தாரா, சமந்தா ஆகியோரது வீடுகளிலும் ஐ.டி ரெய்டு நடத்தப்பட்டது.

விஜய் சமர்ப்பித்திருந்த ஆவணங்களின்படி, அவரிடம் கணக்கில் வராத மூன்று கோடி ரூபாய் பணமாக இருந்ததாக வருமான வரி அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டது. கணக்கில் வராத பணம் தொடர்பாக, விஜய் தரப்பிலிருந்து வருமான வரித் துறையிடம் கூடுதல் ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. கணக்கில் வராத பணத்துக்கான வரியை செலுத்திவிடுவதாகவும், தன்மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டாமென்றும் விஜய் தரப்பில் கேட்கப்பட்டிருக்கிறது. இந்த மனு மீதான விசாரணையில் வருமான வரித் துறையினர் இரண்டு விதமான மனநிலையில் இருந்ததால் முடிவெடுக்கப்படாமலே இருந்தது.

எகனாமிக் டைம்ஸ் செய்திக் குறிப்பின்படி, இந்த வருடத் தொடக்கத்திலும் இக்குழு கூடியிருக்கிறது. ஆனால், முடிவு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. 3 கோடி ரூபாய் வருமானத்துக்கு அதிகமாக வைத்திருந்த குற்றத்துக்காக விஜய் மீது வழக்கு பதிவு செய்வதற்கும், எஞ்சிய வரியைக் கட்டிவிடுவதாக அவர் சமர்ப்பித்திருக்கும் மனுவை ஏற்று அவரை சுதந்திரமாக விடுவதற்கும் வருமான வரித் துறைக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், தற்போது மெர்சல் படத்தின் மூலம் விஜய் மீது உருவாகியிருக்கும் இமேஜ் இந்த வழக்குக்கு உயிர் கொடுக்குமா, அதில் விஜய்க்கு எதிரான முடிவெடுக்கப்படுமா என்பவைதான் அடுத்தடுத்த பிரேக்கிங் நியூஸ். தமிழகத்துக்கு மட்டுமல்ல, இந்திய அளவில் மெகா பிரேக்கிங் நியூஸ்.

மெர்சலாகிப் போனார்களா? தினகரன் மற்றும் ரஜினிகாந்த்!

மெர்சலாகிப் போனார்களா? தினகரன் மற்றும் ரஜினிகாந்த்!
மெர்சல் திரைப்படத்துக்கு ஆதரவாகப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரை பிரபலங்களும் கருத்து கூறிவரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த், தினகரன் இருவரும் இதுதொடர்பாக எவ்வித கருத்தும் தெரிவிக்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இயக்குநர் அட்லி இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து கடந்த தீபாவளியன்று வெளியான மெர்சல் திரைப்படத்தில் ஜி.எஸ்.டி., டிஜிட்டல் இந்தியா தொடர்பான காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதையடுத்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “மெர்சல் திரைப்படத்தின் கட்சிகளை நீக்க வேண்டும், இல்லையெனில் வழக்கு தொடரப்படும்” என்று தெரிவித்திருந்தார். இதற்கு ஒருபடி மேலே போய் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவோ, மெர்சல் நடிகர் விஜய்யின் பொருளாதார அறிவீனத்தையே காட்டுகிறது என்றும், ஜோசப் விஜய் என்றும் மதரீதியாக விமர்சனம் செய்திருந்தார். மேலும் பொன்.ராதாகிருஷ்ணனும் மெர்சல் திரைப்படத்துக்கு எதிராக பேசியுள்ளார்.
ஆனால், மெர்சல் திரைப்படத்துக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், திரைப் பிரபலங்களும், அறிக்கை மூலமாகவும், பேட்டி வாயிலாகவும் தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். அவர்கள், மெர்சல் திரைப்படம் ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்டுவிட்டது என்றும், அதை மறுபடியும் தணிக்கை செய்யத் தேவையில்லை எனவும் மெர்சல் திரைப்படத்தின் எதிர்ப்பு கருத்து சுதந்திரத்துக்கு விடப்பட்ட அச்சுறுத்தல் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அனைத்து காட்சி மற்றும் அச்சு ஊடகங்களில் சில நாள்களாகத் தொடர்ந்து மெர்சல் திரைப்படத்தைப் பற்றிய விவாதங்களே இடம்பெற்று வரும் நிலையில், இதுவரை மெர்சல் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்தும், அதிமுக அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் தினகரனும் எவ்வித கருத்துகளும் தெரிவிக்கவில்லை.
பன்னீர்செல்வம் தனி அணியாக பிரிவதற்கும், சசிகலா சிறை சென்றபிறகு தினகரன் போட்டியிட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதற்கும், இரட்டை இலை வழக்கில் தினகரன் சிறை செல்வதற்கும், அமைச்சர்கள் அவரை கட்சியிலிருந்து நீக்குவதற்கு பின்னணியில் இருந்து ஒருங்கிணைந்த அணியினரை இயக்கியது பாஜகதான் என்று கூறப்படுகிறது. மேலும், தமிழக அரசை பின்னின்று இயக்குவது மத்திய பாஜக அரசுதான் என்று பல்வேறு தலைவர்களும் வெளிப்படையாகவே குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
தொடர்ந்து கடந்த காலங்களில் தினகரன் அளித்த பேட்டியின் போதெல்லாம், அமைச்சர்கள் ஒருவித பயத்தில் என்னை ஒதுக்குவதாக கூறியுள்ளனர். அவர்களை யார் இயக்குகிறார்கள் என்று உங்களுக்கே தெரியும் என்று பாஜக மீது மறைமுகமாக விமர்சனத்தை முன்வைத்தார். ஆனால், தொடர்ந்து பாஜக எதிர்ப்பு நிலையில் இருக்கும் தினகரன, பாஜக கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் மெர்சல் திரைப்படத்துக்கு ஆதரவாக, இதுவரை எவ்வித கருத்துகளையும் தெரிவிக்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அடுத்து கடந்த மே மாதம் நடந்த ரசிகர்கள் சந்திப்பில் பேசிய ரஜினிகாந்த், போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தார். இதற்கு பாஜக தலைவர்கள் வரவேற்பு தெரிவித்திருந்தனர். மேலும், கடந்த சில வருடங்களாகவே ரஜினி பாஜகவில் இணைய வேண்டும் என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதாக அறிவித்தபோது எதிர்த்த பாஜகவினர், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை ஆதரித்தனர்.
மேலும், நடிகர் ரஜினிகாந்த்தும் பாஜக ஆதரவு மனநிலை நிலையிலேயே இருப்பதாகக் கூறப்படுகிறது. பல்வேறு பிரச்னையின்போதும் பாஜக மீது மென்மையான விமர்சனப் போக்கையே கடைப்பிடித்தார்.
இந்த நிலையில் திரைத்துறையில் இதுவரையில் பொதுவெளியில் கருத்து கூறாதவர்களே வந்து கருத்து சுதந்திரம் நிலைநாட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில், முன்னணியில் இருக்கக்கூடிய மூத்த நடிகரான ரஜினிகாந்த், மெர்சல் திரைப்படத்துக்கு ஆதரவாக கருத்து கூறாதது திரைத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மெர்சல் தொடர்பாக ரஜினிகாந்த், தினகரன் இருவரும் ஒருவார்த்தை கூட பேசாதது ஏன் என்ற கேள்வியும் பொதுவெளியில் எழுந்துள்ளது. #தினகரன் தற்போதைய சூழலில் வாய்திறந்து பேசுவதும் கடினமே! சசிகலா தரப்பிலிருந்து தினகரனுக்கு அளிக்கப்பட்ட தகவல்களின்படி அடுத்த ஓராண்டுக்கு அவர் மத்திய அரசை விமர்சித்து பேச மாட்டார் என்றும், அப்படியே அவர் பேசும்பட்சத்தில் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்தும் சசிகலாவால் நீக்கப்படுவார் என்றும் தகவல்கள் தெரிவித்துள்ளன!

Saturday, October 21, 2017

தினகரனுக்கு சில கேள்விகள்!

தினகரனுக்கு சில கேள்விகள்!
Title:None,Content:தினகரனுக்கு சில கேள்விகள் , 1) சின்னம்மா வால் பிச்சை போடப்பட்ட முதல்வர் பதவியை எடப்பாடியார் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறும் நீங்கள் கடந்த 2016 டிசம்பர் 29 அன்று சொற்ப பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டி போடப்பட்ட பிச்சையான பொதுச் செயலாளர் பதவியையும், பிச்சை வாங்கியவரிடமிருந்து பிச்சை வாங்கிய துணைப் பொதுச் செயலாளர் பதவியையும் ராஜினாமா செய்து விட்டு, அனைத்து பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர் கூட்டத்தை கூட்டி பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தி பொதுச் செயலாளராக பதவியேற்கத் தயாராக உள்ளீர்களா? 2) அஇஅதிமுகவை நாங்கள் தான் 33 வருடங்களாகபாதுகாத்து வளர்த்து வந்தோம் என்று மார்தட்டும் உங்களுக்கு, கழகத்தில் யார் யார் மீதெல்லாம் ஊழல் புகார் உள்ளதென்று தெரியாதது வியப்பாக இருக்கிறது. குறிப்பாக இப்போ தைய முதல்வருக்கும் சேகர் ரெட்டிக்கும் தொடர்பு இருப்பதாகவும், அவருடைய சம்பந்திகள் பல ஊழல் வழக்குகளில் சிக்கியிருப்பதாகவும் எடப்பாடியார் உங்களிடம் கூறிய பிறகே உங்களுக்குத் தெரிய வந்ததாக கூறும் நீங்கள் கழகத்தையும் ஆட்சியையும் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்திருந்தால் பிப்ரவரி மாதம் நடந்த நம்பிக்கை வா

மாசுகளின் தலை நகரம், அன்புமணி ராமதாஸ்

மாசுகளின் தலை நகரம், அன்புமணி ராமதாஸ்
உலகின் மாசு தலைநகராகத் தமிழகம் உருவெடுக்க மத்திய, மாநில அரசுகள் இடமளிக்கக் கூடாது என்று முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று (அக்டோபர் 21) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காற்று, நீர் உள்ளிட்ட மாசுக்களால் ஏற்படும் உயிரிழப்புகள், பாதிப்புகள் குறித்து லான்செட் மருத்துவ இதழ் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் வெளியாகியுள்ள உண்மைகள் அதிர்ச்சியளிக்கின்றன. உலகம் முழுவதும் மாசுகளுக்கு ஆண்டுக்கு 90 லட்சம் பேர் உயிரிழக்கும் நிலையில், அவர்களில் 25 லட்சம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. இதில் தமிழகம் முன்னணியில் இருப்பது கவலையளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
மாசுகளால் ஏற்படும் உயிரிழப்புகளில் 27.47% இந்தியாவில் ஏற்படுகிறது என்பது சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடிய விஷயமல்ல என்று கூறிய அன்புமணி, மருத்துவ உலகின் பைபிள் எனப் போற்றப்படும் இந்த இதழில் வெளியிடப்படும் தகவல்கள் 100% விழுக்காடு உண்மையானவை; உறுதியானவை என்பதால் இதில் மத்திய, மாநில அரசுகள் அதிக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
“மாசுக்களால் இதய நோய்கள், பக்கவாதம், நுரையீரல் புற்று நோய், ஆஸ்துமா, மூச்சுத் திணறல், நெஞ்சக நோய்கள் மற்றும் தோல் நோய்கள் ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டிருக்கிறது. இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் மாசுக்களைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பதுதான்.
உலகின் மாசு தலைநகராக தமிழகம் உருவெடுக்கவும், அப்பாவி மக்கள் மிக மோசமான நோய்களால் தாக்கப் பட்டு உயிரிழக்கவும் வாய்ப்புகள் உள்ளன. இவற்றுக்கு மத்திய, மாநில அரசுகள் இடமளிக்கக் கூடாது. எனவே அதிக மாசுகளை ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டும். பெட்ரோலிய மண்டலம் உள்ளிட்ட மாசு ஏற்படுத்தும் திட்டங்கள் கைவிடப்பட வேண்டும். மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வலுப்படுத்தப்பட்டு, காற்று, நீர் உள்ளிட்ட அனைத்து மாசுகளும் கட்டுப்படுத்தப்பட வேண்டும்" என்று அன்புமணி தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தேவை, அன்புமணி ராமதாஸ்

பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தேவை, அன்புமணி ராமதாஸ்
டெங்குக் காய்ச்சல் விகாரத்தில் தமிழக அரசு மிகவும் அலட்சியமாகச் செயல்பட்டதால்தான் நிலைமை மோசமானது. பன்றிக் காய்ச்சல் விஷயத்திலும் அதேபோல் உறங்கி விடாமல் உடனடியாக விழித்துக் கொண்டு நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று (அக்டோபர் 20) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்குப் பாதிப்பையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தியுள்ள டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த முடியாமல் தமிழக அரசு தவித்துவரும் நிலையில், அடுத்ததாக பன்றிக் காய்ச்சலும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. வழக்கம் போலவே, இதிலும் தமிழக ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டினால் மக்கள் பாதிக்கப்படும் ஆபத்துள்ளது” என்று எச்சரித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சலுக்கு கடந்த 15ஆம் தேதி வரை 3244 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். பன்றிக் காய்ச்சலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் குஜராத், மராட்டியம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாகத் தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது என்று அன்புமணி தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள 3244 பேரில் 2994 பேருக்கு இப்பாதிப்பு கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஏற்பட்டதாகும். அந்தக் காலகட்டத்தில் இந்தக் காய்ச்சலுக்கு 15 பேர் உயிரிழந்திருந்தனர். மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை கடுமையான வெப்பநிலை காரணமாகக் கட்டுப்பாட்டில் இருந்த பன்றிக் காய்ச்சல் இப்போது மீண்டும் பரவத் தொடங்கியிருக்கிறது. கடந்த சில நாட்களில் மட்டும் தமிழகத்தில் 200க்கும் மேற்பட்டோர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் ஒரு பெண்மணி, கிருஷ்ணகிரியில் ஒருவர் எனக் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
பன்றிக் காய்ச்சல் காற்றின் மூலம் பரவக்கூடியது. இந்த ஆண்டு பன்றிக் காய்ச்சல் மிகவும் தீவிரமாகப் பரவுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. பன்றிக் காய்ச்சலை முன்கூட்டியே கண்டறிந்து முறையான சிகிச்சை அளித்தால் எளிதில் குணப்படுத்த முடியும். நோய்த் தடுப்பு முறைகள், சிகிச்சைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஆண்டுக்கொரு முறை தடுப்பூசியும் போடலாம். பன்றிக் காய்ச்சல் நோயைக் கண்டறிவதற்கான சோதனையை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாகச் செய்துகொள்ள வகை செய்யப்பட வேண்டும். பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதற்கான தனிமை வார்டுகள் ஒவ்வொரு மருத்துவமனையிலும் அமைக்கப்படுவதுடன், காய்ச்சலைக் குணப்படுத்துவதற்கான டாமி ஃப்ளு மாத்திரைகளும் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட வேண்டும்” என்று அன்புமணி கேட்டுக்கொண்டிருக்கிறார்.
கேரளத்தில் டெங்கு காய்ச்சல் தாக்கத் தொடங்கியபோது அம்மாநில அரசு விழிப்புடன் செயல்பட்டதால் அங்கு நோய் பரவலும், உயிரிழப்பும் கட்டுப்படுத்தப்பட்டது என்ரு சொல்லும் அன்புமணி, தமிழக அரசு மிகவும் அலட்சியமாகச் செயல்பட்டதால் தான் நிலைமை மோசமானது என்றார். “பன்றிக் காய்ச்சல் விஷயத்திலும் அதேபோல் உறங்கிவிடாமல் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.

பத்ரிக்கையாளர் கொலை!

பத்ரிக்கையாளர் கொலை!
இந்தியாவில் நாளுக்கு நாள் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துவரும் நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் ராஜேஷ் மிஸ்ரா என்னும் பத்திரிகையாளர் நேற்று (அக்டோபர் 21) மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் காசியபூரில், டெய்னிக் ஜக்ரான் பத்திரிகையில் பணியாற்றி வந்தவர் ராஜேஷ் மிஸ்ரா (38). அவர் குடும்பத்தினர் நடத்தும் கட்டடக் கலைப் பொருள்கள் கடையில் நேற்று காலை அவர் அமர்ந்திருந்தபோது, சுமார் 7 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் அவரை சரமாரியாகச் சுட்டுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ராஜேஷ் மிஸ்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராஜேஷ் மிஸ்ராவைக் காப்பற்ற வந்த சகோதரர் அமிதாப் மிஸ்ராவையும் மர்ம நபர்கள் சுட்டுவிட்டுத் தப்பியுள்ளனர். பலத்த காயமடைந்த அவர் உடனடியாக காசியாபூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் வாரணாசியில் உள்ள மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காகப் பரிந்துரைக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். கொலை செய்யப்பட்ட ராஜேஷ் மிஸ்ரா ஆர்.எஸ்.எஸ். இயக்க அமைப்பிலும் செயல்பட்டு வந்தார். அவர் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், கொலையாளிகள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், கொலை தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
செப்டம்பர் 5ஆம் தேதி இரவு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான கௌரி லங்கேஷ் (55), பெங்களூருவில் உள்ள அவரது வீட்டு வாசலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
செப்டம்பர் 7ஆம் தேதி, பீகார் ‘ராஷ்திரிய சஹாரா’வின் பத்திரிகையாளர் பங்கஜ் மிஸ்ரா ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்துவிட்டு வெளியே வந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அவர் வைத்திருந்த ஒரு லட்ச ரூபாயையும் பறித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதில் படுகாயமடைந்த மிஸ்ரா உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
செப்டம்பர் 21ஆம் தேதி திரிபுரா ‘தீன் ராத்’தொலைக்காட்சியின் இளம் பத்திரிகையாளர் சாந்தனு பவுனிக் திரிபுராவில் பழங்குடியினர் கலவரம் பற்றி செய்தி சேகரிக்கச் சென்றபோது மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
செப்டம்பர் 22ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் கே.ஜே.சிங் மற்றும் அவரது தாயார் மொகாலியில் உள்ள அவர்களது வீட்டில் கொலை செய்யப்பட்டிருந்தார்.

சுகாதாரத்துறை அமைச்சர் கவனத்திற்க்கு!

சுகாதாரத்துறை அமைச்சர் கவனத்திற்க்கு!
வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்க மாட்டோம்’ என காஞ்சிபுர மருத்துவமனை நிர்வாகம் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், பொன்னை கிராமத்தை சேர்ந்த சரஸ்வதி என்ற நிறைமாத கர்ப்பிணி பெண் பிரசவவலியுடன் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்றுள்ளார். அங்கிருந்த மருத்துவர்கள் சரஸ்வதிக்கு முதல் பிரசவத்தின்போது குழந்தை பிறப்பதில் சிக்கல் இருந்ததால், இரண்டாவது பிரசவத்திலும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது என கருதி அவரை மேல் சிகிச்சைக்காக அருகிலுள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் அனுப்பி வைத்தனர்.
சரஸ்வதியுடன் அவரது சகோதர் சென்றிருந்தார். அவர், காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் இல்லை என்பதால் காஞ்சி தலைமை அரசு மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை மறுக்கப்பட்டது. வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்க மாட்டோம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, 100 கி.மீ தொலைவிலுள்ள செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குச் சரஸ்வதி அனுப்பி வைக்கப்பட்டார். ‘பிரசவ வலியுடன் வந்த பெண்ணை வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனக்கூறி சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவித்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்’ என காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை துணை இயக்குநர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

Friday, October 20, 2017

மீடியாக்களில் பேச தடையா?

மீடியாக்களில் பேச தடையா?
பதிவு செய்த நாள் 12/10/17, 19:11 - Sahay Peter: நேற்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடந்தது எல்லோருக்கும் தெரியும். அதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வுக்கான முடிவு எடுக்கப்பட்டது. அத்துடன் மதுபானங்களின் விலையேற்றம் தொடர்பான முடிவுகளும் எடுக்கப்பட்டது. இப்படியான அலுவல் ரீதியான கூட்டம் முடிந்ததும், "முதல்வர்" அமைச்சர்களிடம் சில நிமிடங்கள் பேசி இருக்கிறார். ‘அம்மா இருந்தவரைக்கும் நாம யாரும் எந்த முடிவையும் தன்னிச்சையாக எடுத்தது கிடையாது. யாரும் எந்த மீடியாவுக்கும் பேசியதும் கிடையாது. ஆனால், அம்மா மறைவுக்குப் பிறகு இப்போ எல்லோருமே அவங்களுக்கு தோன்றியதை பேசுறோம். மீடியாவிடம் எல்லோருமே நீங்க நினைச்ச விஷயத்தை சொல்லிடுறீங்க. இதை நான் தப்பா சொல்லவில்லை. எல்லோருக்கும் எல்லாம் பேசுறதுக்கு சுதந்திரம் இருக்கு. ரெண்டு நாளைக்கு முன்னாடி செல்லூர் ராஜு அண்ணன் அவரோட மனசுல பட்டதை எதேச்சையாக சொல்லப்போக அது, பெரிய விஷயமாகிடுச்சு. நாம யாருமே மனசுல ஒண்ணு வெச்சு, வெளியில ஒண்ணும் பேசுவது கிடையாது. இங்கே அதுதான் பிரச்னை ஆகிடுது. கட்சியில ஸ்போக்ஸ்பர்சன் என நிறைய பேரு இருக்காங்க. அவங்க எதைச் சொன்னாலும் பிரச்னை இல்லை. ஆனால், அமைச்சர்களாக இருப்பவர்கள் எது சொன்னாலும் அது பிரச்னையில் வந்து முடியுது. நானும் ஓ.பி.எஸ். அண்ணனும் பேசி சில முடிவுகளை எடுத்து இருக்கோம். மீடியாவுக்கு உங்களை யாரும் பேச வேண்டாம் என சொல்லவில்லை. தாராளமாக பேசுங்க. ஆனால் உங்க துறை சார்ந்த விஷயங்களை மட்டும் பேசுங்க. அதைத் தவிர்த்து கட்சி தொடர்பாகவோ, பழைய விஷயங்கள் தொடர்பாகவோ பேச வேண்டாம். அதையும் தாண்டி பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், என்கிட்டையோ அல்லது ஓபிஎஸ் அண்ணன்கிட்டையோ தகவல் சொல்லுங்க. என்ன பேசலாம் என்பதை டிஸ்கஸ் பண்ணிட்டுப் பேசுங்க. நீங்க சொல்ற கருத்துக்களை உங்களோட சொந்தக் கருத்துக்களாக இங்கே பார்க்க மாட்டாங்க. நீங்க அதிமுகவின் பிரதிநிதியாகத்தான் பார்க்கப்படுவீங்க. இனி கட்சி தொடர்பாக எது பேச வேண்டும் என்றாலும் நானோ அல்லது ஓ.பி.எஸ் அண்ணனோ பேசுறோம். அதுதான் சரியாக இருக்கும் என நினைக்கிறோம்..’ எனப் பேசி இருக்கிறார். அவர் பேசி முடித்ததும் செல்லூர் ராஜு, ‘நீங்க சொல்றது சரிதாண்ணே... நான் அதைப் பேசணும்னு அங்கே போகலை. நான் டெங்கு காய்ச்சல் பத்தி பேசிட்டு இருந்தேன். மீடியாக்காரங்க திடீர்னு அந்தம்மா பத்தி கேட்டதும் நானும் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு பேசிட்டேன். எல்லோருமே அப்படித்தான் மாட்டிக்கிறோம். அப்படி மீடியாவுல இருந்து கேட்டாலும்கூட, அதற்கு பதில் சொல்லாம வந்துடணும்னு இப்போ நல்லா புரிஞ்சுகிட்டேன்’ என சொல்லி இருக்கிறார். ஆனால் முதல்வரோ, ‘இது உங்களை மட்டும் குறிப்பிட்டு சொல்லலை. எல்லோருக்குமே இந்த சங்கடம் இருக்கும். அதை தவிர்க்கத்தான் இப்படி ஒரு முடிவை எடுத்துருக்கோம். நீங்க யாரும் இதை தப்பா நினைக்க வேண்டிய அவசியம் இல்லை. பேசுறதுக்கு முன்னாடி கொஞ்சம் டிஸ்கஸ் பண்ணிட்டா எல்லாம் சரியாயிடும். அவ்வளவுதான்!’ என அமைச்சர்கள் பேசுவதற்குத் தடைவிதித்துக் கூட்டத்தை முடித்திருக்கிறார் முதல்வர்!”

Thursday, October 19, 2017

சூறையாடப்பட்ட அம்மா உணவகம்!

சூறையாடப்பட்ட அம்மா உணவகம்!
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அம்மா உணவகத்தின் பூட்டை உடைத்து, அங்கிருந்த பொருட்களை மர்ம நபர்கள் சூறையாடியுள்ளனர்.
பெரம்பலூர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் பொதுமக்களின் வசதிக்காக அம்மா உணவகம் இயங்கிவருகிறது. இதில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் இயங்கிவரும் அம்மா உணவகத்துக்குள் நேற்றிரவு (அக்டோபர் 19) பூட்டை உடைத்துப் புகுந்த மர்ம நபர்கள் அங்கு உணவு சமைக்க வைத்திருந்த மளிகைப் பொருட்களையும், அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட 1 லட்சம் மதிப்பிலான பொருட்களையும் அறை முழுவதும் வீசி சேதப்படுத்தியுள்ளனர். காலை உணவுக்கு இட்லி தயாரிக்க வைத்திருந்த மாவையும் கீழே கொட்டி வீணாக்கியுள்ளனர்.
மேலும் உணவகத்தில் வைத்திருந்த 400 ரூபாய் பணத்தைத் திருடிய அவர்கள், அங்கு வைக்கப்பட்டிருந்த பேனரில் இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தையும் கிழித்துவிட்டுச் சென்றுள்ளனர்.
இதையடுத்து அம்மா உணவகத்தை நிர்வகித்துவரும் ஜான்சிராணி மகளிர் சுய உதவிக் குழுவினர் பெரம்பலூர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் அடிப்படையில், உணவகத்தைச் சூறையாடியவர்களை பெரம்பலூர் நகர போலீசார் தேடிவருகின்றனர். தொடர்ந்து அம்மா உணவகத்தின் அருகில் உள்ள வணிக நிறுவனங்களின் சி.சி.டி.வி. கேமரா பதிவுகளைக் கொண்டும் போலீசார் விசாரித்துவருகின்றனர்.

நிலவேம்புக் கஷாயம் கேட்கும் வெளிநாடுகள்!

நிலவேம்புக் கஷாயம் கேட்கும் வெளிநாடுகள்!
சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளும் நிலவேம்புக் குடிநீரைக் கேட்டுள்ளன என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வேகமாகப் பரவிவரும் டெங்கு காய்ச்சலுக்குப் பலர் உயிரிழந்துள்ளனர். டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும், மக்களும் தகுந்த ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் ஆட்சியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டுவருகிறது. அரசின் சார்பிலும், பல்வேறு அமைப்புகள் சார்பிலும் நிலவேம்புக் குடிநீர் விநியோகிக்கப்பட்டுவருகிறது. ஆனால் டெங்கு காய்ச்சல் இல்லாதவர்கள் நிலவேம்புக் குடிநீரை குடித்தால் மலட்டுத்தன்மை ஏற்படும் என்ற தகவல், சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியது.
நேற்றைய தினம் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில், "சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை, மக்களுக்கு நிலவேம்புக் குடிநீரை விநியோகிக்க வேண்டாம்" என்று தனது நற்பணி இயக்கத்தினரை கேட்டுக்கொண்டார். ஆனால் இதற்கு சித்த மருத்துவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. நிலவேம்புக் குடிநீர் குறித்து அவதூறு பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழ்நிலையில் இன்று (அக்டோபர் 19) தஞ்சை அரசு மருத்துவமனையில் ஆய்வுசெய்த பிறகு, மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், "பல மாவட்டங்களில் டெங்குவால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பக்கவிளைவு இல்லாத நிலவேம்புக் குடிநீர் குறித்துத் தவறான தகவல் தகவல்களைச் சமூக வலைதளங்களில் கூற வேண்டாம். சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகள் நிலவேம்புக் கஷாயத்தைக் கேட்டுள்ளன. இன்னும் 10 அல்லது 15 நாட்களில் தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும். டெங்கு குறித்துப் பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தருமபுரி அரசு மருத்துவமனையில் டெங்கு குறித்து ஆய்வு மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், "பொதுமக்கள் போலி மருத்துவர்களை நம்பிச் செல்ல வேண்டாம். டெங்கு காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது. நிலவேம்பு கஷாயமும் நவீன முறையில் ஆய்வு செய்த பிறகே வழங்கப்படுகிறது. நிலவேம்பு கஷாயம் அங்கீகரிக்கப்பட்ட சித்த மருத்துவம், அதனால் பக்கவிளைவு ஏற்படாது. உலகின் பல்வேறு நாடுகளில் காய்ச்சலுக்கு நிலவேம்பு கஷாயம் கொடுக்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

கமலுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

கமலுக்கு வலுக்கும் எதிர்ப்பு!


நிலவேம்புக் குடிநீர் தொடர்பாகத் தவறான கருத்துகளைப் பரப்புவதாக நடிகர் கமல் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுவரை 100க்கும் மேற்பட்டோர் இதன் காரணமாக பலியாகியுள்ள நிலையில், டெங்குவைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் அரசு தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. நோய் தடுப்பு நடவடிக்கையாக அரசு சார்பிலும் அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் சார்பிலும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், நிலவேம்பு குடிநீர் பருகினால் மலட்டுத்தன்மை ஏற்படும் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது. நிலவேம்பு நீர் பருகுவதால் எந்த ஆபத்தும் ஏற்படாது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டாலும் மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சம் நீங்காமலேயே உள்ளது.
நடிகர் கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபட வேண்டாம் என்று தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது இந்தக் கருத்து விமர்சனத்துக்கு ஆளாகியுள்ள நிலையில், தேவராஜன் என்பவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு ஒன்றினை இன்று (அக்.19) காலை அளித்திருக்கிறார். அதில் அவர், நிலவேம்புக் குடிநீர் குறித்துத் தவறான தகவலை நடிகர் கமல் பரப்பிவருகிறார். இதன் காரணமாகப் பொதுமக்கள் மத்தியில் தேவை இல்லாத குழப்பங்கள் உண்டாகும். எனவே தவறான தகவலைப் பரப்பும் நடிகர் கமலைக் கைது செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த வழக்கு சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நிலவேம்புக் குடிநீர் தொடர்பாகக் கமலின் கருத்துக்கு தமிழ்நாடு அரசு சித்த மருத்துவர்கள் சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தெரியாத விஷயங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பதிவு செய்வதே கமலின் வாடிக்கையாக உள்ளது. நிலவேம்புக் குடிநீர் பற்றிய சந்தேகம் தீரச் சித்த மருத்துவர்களையோ, சுகாதாரத் துறை செயலாளர், அல்லது பத்திரிக்கையாளர்களையோ அவர் அணுகியிருக்கலாம். கமல் வாழும் சமூகம் வேறு, நிலவேம்புக் குடிநீர் வழங்கும் சமூகம் வேறு” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது நடிப்பு சரியில்லை எனக் கூறி நிபுணர் குழு அமைத்து அறிக்கை வந்த பின் நடிக்க அனுமதிக்கலாம் என்று சொன்னால் அனைவரும் சிரிக்க மாட்டார்களா எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விமர்சனம்: மெர்சல்!

விமர்சனம்: மெர்சல்!


விஜய் மூன்று கேரக்டரில் நடித்திருக்கும் படம் என்ற பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகியிருக்கும் ‘மெர்சல்’ திரைப்படம், அதன் பெயரால் உருவாக்கப்பட்ட எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்பதன் தீர்ப்பு தீபாவளி நாளான நேற்று ரசிகர்களால் எழுதப்பட்டது.
சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கிய அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தை அவுட்லைனாக எடுத்துக்கொண்டு, அதில் தனிப்பட்ட காரணத்துக்காகப் பழி வாங்கும் ஸ்டைலுக்கு பதில் சமூகப் பிரச்னைக்காகவும் சேர்த்து பழி வாங்குவதாக தனது கதையை மாற்றிக்கொண்டு களமிறங்கியிருக்கிறார் அட்லீ. இப்படியொரு சமூகப் பிரச்னையைத் தேர்ந்தெடுத்ததற்காக பாராட்டப்பட வேண்டியவர் விஜய். இந்திய - தமிழகப் பிரச்னைகளைப் பற்றிப் பேசியிருக்கும் மெர்சல் அதகளமாகவே இருக்கிறது.

அனைத்துப் பணப் பரிவர்த்தனைகளும் டிஜிட்டலுக்கு மாற வேண்டும் எனச் சொல்லிவிட்டு பேருந்துக் கட்டணத்துக்கும், அன்றாடச் செலவுக்கும் பணத்தைப் பயன்படுத்தச் சொல்வதையும், ஆக்ஸிஜன் இல்லாமல் குழந்தைகள் இறந்து போவதையும், ஒரு விபத்தின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவரின் சொத்துகள் அனைத்தும் பிடுங்கப்படுவதையும் செய்திகளாகப் படிக்கும்போது ஒவ்வொரு மனிதநேயமிக்க மனதும் நினைக்கும் வார்த்தைகளை மெர்சல் விவரிக்கிறது.

மருத்துவம் சார்ந்த இந்தக் கோணத்தை எடுத்துவிட்டுப் பார்த்தால், மெர்சல் ஒரு பழைய மசாலா. அதில் கவர்ச்சிக்கு விஜய்யைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். தனது மருத்துவ அறிவைக்கொண்டு ஏழைகளுக்குச் சேவை புரியும் மாறனுக்குச் சர்வதேச விருது கிடைக்கிறது. அதேசமயம், அவர் சில பல கடத்தல்களையும் கொலைகளையும் வடிவேலு துணையுடன் அரங்கேற்றுகிறார். இடையில் மேஜிக் ஷோ வேறு செய்கிறார். காவல்துறை அதிகாரி சத்யராஜின் விசாரணையில் டாக்டரின் கிரிமினல் காரியங்களுக்கான பின்னணி தெரியவருகிறது. சமூகப் போராளி டாக்டரைப் போட்டுத்தள்ள கார்ப்பரேட் டாக்டர் எஸ்.ஜே.சூர்யா துடிக்க, அப்போதுதான் டாக்டர் உருவத்தில் இருப்பது ஒருவரல்ல இருவர் என்னும் உண்மை தெரியவருகிறது. ஒரேமாதிரி இருக்கும் அந்த இருவரின் பின்னணியைச் சொல்லத் திரைக்கதை 30 ஆண்டுகளுக்குப் பின்னால் பயணிக்கிறது. சமூக நோக்கமும் தனிப்பட்ட நோக்கமும் இணைந்த பழிவாங்கும் படலத்தில் மாறனுக்கு எப்படி வெற்றி கிடைக்கிறது என்பதை சமூக விமர்சனத்தோடு ஓரளவு விறுவிறுப்பாகச் சொல்கிறார் அட்லீ.

ஒருகட்டம் வரையிலும் சஸ்பென்ஸைக் காப்பாற்றுவது படத்தின் சுவாரஸ்யத்தைத் தக்கவைக்கிறது. இரண்டாம் பாதியில் வரும் பின்னூட்டக் காட்சிகள் சுவாரஸ்யமாக இருந்தாலும் வேகத்தில் கொஞ்சம் பின்தங்கித்தான் இருக்கின்றன. மருத்துவமனைக் காட்சிகளில் செய்தி சொல்லும் வேகம் இருக்கும் அளவுக்கு யதார்த்தம் இல்லை. வில்லனின் பாத்திரப் படைப்பும் அப்படித்தான். விஜய்களின் தோற்றம், ஸ்டைல், நேரடியாகவே அரசியல் பேசும் வசனங்கள், சண்டைக் காட்சிகள், அவருடைய நடவடிக்கைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்திய அளவுக்குப் படத்தின் இதர அம்சங்களில் கவனம் செலுத்தப்படவில்லை. எனவே கதைக் கருவைத் தாங்கிப்பிடிக்க வேண்டிய துணை அம்சங்கள் தம் கடமையிலிருந்து தவறுகின்றன.

இரண்டு விஜய்களின் நடவடிக்கைகளை வைத்து லாஜிக்காகக் கேள்வி எழுப்பினால் திரைக்கதை தள்ளாட ஆரம்பித்துவிடும். உதாரணமாக பாரிஸில் நடக்கும் காட்சிகள். ஆனால், இந்த ஓட்டைகளை மீறித் திரைக்கதையின் விறுவிறுப்பு படத்தைப் பார்க்க வைக்கிறது.
வெற்றிமாறனாக வரும் ஃப்ளாஷ்பேக் விஜய் மட்டுமே வியக்க வைக்கிறார். துறுதுறுவென இருக்கும் குஷியான விஜய்யைக் காட்டியிருப்பதற்கு அட்லீக்கு விஜய் ரசிகர்கள் நன்றி தெரிவித்தே ஆக வேண்டும். நித்யா மேனன் என்ற நடிகையின் ஆளுமை மற்றவர்களை ஓரம்கட்டுவது உண்மையாகவே மெர்சல். மற்றவர்களெல்லாம் கெஸ்ட் ரோல்தான். வடிவேலு இந்தப் படத்திலும் முழுத் திறமையை வெளிப்படுத்த முடியவில்லை என்ற சோகம் நீடிக்கிறது. காஜல் அகர்வால், சமந்தா இருவரும் இந்தப் படத்தில் எதற்குத்தான் வருகிறார்கள் என்பது கடைசிவரை தெரியவே இல்லை.

ஏ.ஆர். ரஹ்மானுக்கு என்னதான் ஆச்சு? ஆளப்போறான் தமிழன், நீதானே ஆகிய இரண்டு பாடல்கள் மட்டுமே கேட்கும்படியும் முணுமுணுக்கும்படியும் இருக்கின்றன. பின்னணி இசையிலும் குறிப்பிடத்தக்க அம்சம் அதிகமில்லை. சண்டைக் காட்சிகளை அமைத்துள்ள அனல் அரசுக்கு ஒரு சபாஷ்!
மருத்துவ உலகம் எவ்வளவு வேகமாகவும் கறாராகவும் தனது வியாபாரத்தை நடத்திக்கொண்டிருக்கிறது என்பதை மெர்சல் தோலுரித்துக் காட்டியிருக்கிறது. குரோம்பேட்டையில் இருக்கும் அரசு மருத்துவமனையைக் கடந்து சுற்றியிருக்கும் தனியார் மருத்துவமனைகளை நோக்கிச் சீறிப் பாயும் சில ஆம்புலன்ஸ்களைப் பார்க்கும்போதெல்லாம் மனதில் தோன்றும் கேள்வியை மெர்சல் படம் சொன்னாலும், அதை நோக்கிக் கேள்வியெழுப்பத் தேவையான காரணங்களும் இருக்கின்றன. 

ஒரு துறையை நோக்கி கேள்வியெழுப்பும் மனநிலையை ரசிகர்களிடையே உருவாக்குவதைவிட ஒரு படம் என்ன செய்துவிட முடியும்? ஆனால், அதற்காகப் படத்தின் போதாமைகளைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது.

அட்லீ தன்னை ஒரு ‘மினி’ ஷங்கராக நிலைநிறுத்திக்கொள்ள முயல்வது சரிதான். எல்லா இயக்குநர்களுக்கும் இருக்கும் ஆசை, ஷங்கரின் ஸ்டூடண்டான அட்லீக்கு இருப்பதில் ஆச்சர்யமில்லை. ஆனால், அந்நியன் படத்தில் விக்ரமின் தங்கை இறந்துபோவது போலவே தனது படத்திலும் ஒரு காட்சி வைக்க வேண்டும் என்பது எப்படிப்பட்ட ஆசை? ஓர் இழப்பை அழுத்தத்துடன் காட்டுவதற்குத் தெறிக்கும் ரத்தத்தை ஸ்லோமோஷனில் காட்ட வேண்டும் என்று என்ன அவசியம்? அப்படிப்பட்ட காட்சிகளுக்காகவே, U சர்டிஃபிகேட் கிடைக்க வேண்டிய படத்துக்கு U/A சர்டிஃபிகேட் வாங்குவது தயாரிப்பு தரப்புக்குச் செய்யும் நியாயமா? கதைக்குத் துளியும் தொடர்பில்லாத இரு ஹீரோயின்களை ஜோடி வைத்தாக வேண்டும் என்பதற்காகப் பல கோடிகளில் கமிட் செய்திருப்பதை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பது?

ஹீரோவைப் போற்றிப் பேசுவதற்காகவும், கிளாமரான பாடல்களுக்காக மட்டும் நடிகைகளைப் பயன்படுத்தாதீர்கள் என்பதுதான் நடிகைகளின் கோரிக்கையாகவும் இருக்கிறது. வில்லன் சமந்தா, கோவை சரளா ஆகியோரின் கழுத்தில் கத்தி வைத்து விஜய்யை மிரட்டுவது போலக் காண்பித்திருக்கிறார் இயக்குநர். இன்னும் எத்தனை நாள்களுக்குத்தான் பெண்களை ஆண்களின் பலவீனமாகவே சித்திரிக்கப்போகிறது தமிழ் சினிமா? மதுரையில் ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடிய முதல் இயக்குநர் என்ற பெருமை அட்லீக்கு உண்டு என்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும்.

ஃப்ளாஷ் பேக் - டபுள் ஹீரோ - ஹீரோயின் கொலை – வித்தியாசமான வில்லன் ஆகிய மசாலாக்களை லோக்கல் வசனங்களுடன் கலந்து, மேலும் ஒரு ஹீரோயினைப் பாடலுக்கு வைத்து, காமெடி என்ற பெயரில் சத்யனையும், சிறப்பு வேடத்துக்கு சத்யராஜையும் சேர்த்தால் அட்லீ படம் ரெடி என சினிமா பாடப் புத்தகத்தில் சேர்க்கும் நிலைக்கு வந்துவிடாதீர்கள் அட்லீ. உங்களது ஒரிஜினல் சரக்கு ஒன்றை ‘ரா’வாக ஒருமுறையாவது பரிமாறுங்கள். காக்டெயில்கள் திகட்டத் தொடங்கிவிட்டன.

ஜெயலலிதா ஆளுநருக்கு அனுப்பிய கடிதம்!

ஜெயலலிதா ஆளுநருக்கு அனுப்பிய கடிதம்!


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மருத்துவமனையில் சேர்ந்த அடுத்த நாள் நன்றி தெரிவிக்கும் கடிதம் ஒன்றை தனக்கு அனுப்பியதாக ஆளுநர் வித்யாசாகர் ராவ், தான் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்த கடிதமும் அதில் வெளியாகியுள்ளது.

உடல்நலக் குறைவால் மரணமடைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி புதிய தலைமுறை தொலைக்காட்சி வெளியிட்ட ஜெயலலிதாவின் சிகிச்சை அறிக்கையில், ‘செப்டம்பர் 22ஆம் தேதி தனது போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதா மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதையடுத்து 3 பேர் கொண்ட மருத்துவக் குழு போயஸ் கார்டனின் முதல் தளத்துக்கு விரைந்துள்ளது. ஜெயலலிதாவைத் தட்டி எழுப்பியபோது அவர் எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. உடலில் அசைவுகள் மட்டுமே இருந்துள்ளன. உடனே ஆம்புலன்ஸில் அப்போலோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்’ என்று குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி சுயநினைவு இல்லாத நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் விசாரித்து அறிந்தார் என்றும், இதையடுத்து மறுநாள் 23ஆம் தேதியே ‘நலம் விசாரித்ததற்கு நன்றி தெரிவித்து தன் கைப்பட ‘பெஸ்ட் விஷஸ்’ என்று எழுதி கையெழுத்திட்டு ஆளுநருக்கு, ஜெயலலிதா கடிதம் அனுப்பினார்’ என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதை ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழகத்தில் தன்னுடைய ஓராண்டு பணிக்காலம் குறித்து எழுதியுள்ள புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது ஒருபுறமிருக்க சுயநினைவில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, மறுநாளே ஆளுநருக்கு எப்படி தன் கைப்பட ‘பெஸ்ட் விஷஸ்’ என்று எழுதி கடிதம் அனுப்பினார் என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது.