![]() |
Advertisement |

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மருத்துவமனையில் சேர்ந்த அடுத்த நாள் நன்றி தெரிவிக்கும் கடிதம் ஒன்றை தனக்கு அனுப்பியதாக ஆளுநர் வித்யாசாகர் ராவ், தான் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்த கடிதமும் அதில் வெளியாகியுள்ளது.
உடல்நலக் குறைவால் மரணமடைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி புதிய தலைமுறை தொலைக்காட்சி வெளியிட்ட ஜெயலலிதாவின் சிகிச்சை அறிக்கையில், ‘செப்டம்பர் 22ஆம் தேதி தனது போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதா மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதையடுத்து 3 பேர் கொண்ட மருத்துவக் குழு போயஸ் கார்டனின் முதல் தளத்துக்கு விரைந்துள்ளது. ஜெயலலிதாவைத் தட்டி எழுப்பியபோது அவர் எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. உடலில் அசைவுகள் மட்டுமே இருந்துள்ளன. உடனே ஆம்புலன்ஸில் அப்போலோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்’ என்று குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி சுயநினைவு இல்லாத நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் விசாரித்து அறிந்தார் என்றும், இதையடுத்து மறுநாள் 23ஆம் தேதியே ‘நலம் விசாரித்ததற்கு நன்றி தெரிவித்து தன் கைப்பட ‘பெஸ்ட் விஷஸ்’ என்று எழுதி கையெழுத்திட்டு ஆளுநருக்கு, ஜெயலலிதா கடிதம் அனுப்பினார்’ என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதை ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழகத்தில் தன்னுடைய ஓராண்டு பணிக்காலம் குறித்து எழுதியுள்ள புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இது ஒருபுறமிருக்க சுயநினைவில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, மறுநாளே ஆளுநருக்கு எப்படி தன் கைப்பட ‘பெஸ்ட் விஷஸ்’ என்று எழுதி கடிதம் அனுப்பினார் என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது.