![]() |
Advertisement |
பெரம்பலூர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் பொதுமக்களின் வசதிக்காக அம்மா உணவகம் இயங்கிவருகிறது. இதில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் இயங்கிவரும் அம்மா உணவகத்துக்குள் நேற்றிரவு (அக்டோபர் 19) பூட்டை உடைத்துப் புகுந்த மர்ம நபர்கள் அங்கு உணவு சமைக்க வைத்திருந்த மளிகைப் பொருட்களையும், அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட 1 லட்சம் மதிப்பிலான பொருட்களையும் அறை முழுவதும் வீசி சேதப்படுத்தியுள்ளனர். காலை உணவுக்கு இட்லி தயாரிக்க வைத்திருந்த மாவையும் கீழே கொட்டி வீணாக்கியுள்ளனர்.
மேலும் உணவகத்தில் வைத்திருந்த 400 ரூபாய் பணத்தைத் திருடிய அவர்கள், அங்கு வைக்கப்பட்டிருந்த பேனரில் இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தையும் கிழித்துவிட்டுச் சென்றுள்ளனர்.
இதையடுத்து அம்மா உணவகத்தை நிர்வகித்துவரும் ஜான்சிராணி மகளிர் சுய உதவிக் குழுவினர் பெரம்பலூர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் அடிப்படையில், உணவகத்தைச் சூறையாடியவர்களை பெரம்பலூர் நகர போலீசார் தேடிவருகின்றனர். தொடர்ந்து அம்மா உணவகத்தின் அருகில் உள்ள வணிக நிறுவனங்களின் சி.சி.டி.வி. கேமரா பதிவுகளைக் கொண்டும் போலீசார் விசாரித்துவருகின்றனர்.