Tuesday, October 31, 2017

நிறம் மாறிய பாஜக?

ad300
Advertisement
மிஸ்டர் கழுகு: எடப்பாடியைக் 


கைகழுவுகிறாரா மோடி?

கழுகார்

மழையில் நனைந்து, தண்ணீர் சொட்டச் சொட்ட வந்த கழுகாரிடம்,

“பி.ஜே.பி-யின் நிறம் லேசாக மாறுவதுபோல் தெரிகிறதே?” என கேள்வியைப் போட்டோம்.

ரெயின்கோட்டைக் கழற்றியபடி பதில்சொல்ல ஆரம்பித்தார், கழுகார். “டெல்லி பி.ஜே.பி தலைமை, தமிழக அரசுக்குக் காட்டிவந்த தன் நிறத்தை இப்போது மாற்றிவிட்டது என்றும், எடப்பாடியைக் கைகழுவ மோடி தயாராகி விட்டார் என்றும் டெல்லி தகவல்கள் சொல்கின்றன. அதற்கேற்ப தமிழக பி.ஜே.பி தலைவர்களின் குரலும் மாறி ஒலிக்கத் தொடங்கியுள்ளது. அ.தி.மு.க அரசைத் தமிழக பி.ஜே.பி தலைவர்கள் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், பி.ஜே.பி-யின் தமிழகத் தலைவர் தமிழிசையும் அதில் முன்னணியில் இருக்கின்றனர்.”

“அப்படியா... பொன்.ராதாகிருஷ்ணன் என்ன விமர்சனம் செய்தார்?”

“அக்டோபர் 29-ம் தேதி, விருதுநகர் மாவட்ட பி.ஜே.பி செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பொன்னார், ‘அ.தி.மு.க என்பது முடிந்துபோன கட்சி. தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழகத்தில் தற்போது மோசமான ஆட்சி நடக்கிறது. இத்தகைய மோசமான ஆட்சி வேறெங்கும் இல்லை. பி.ஜே.பி தொண்டர்கள் திட்டமிட்டுப் பணியாற்றினால், வெற்றி நிச்சயம். தமிழகத்தில் அடுத்து அமையப்போவது பி.ஜே.பி-யின் ஆட்சிதான்’ என்றார்.”

“தமிழிசை என்ன சொன்னார்?”

“டெங்கு விவகாரத்தில், இந்த அரசாங்கம் பொறுப்புடன் செயல்படவில்லை என்ற தொனியில் தினமும் பேசிவருகிறாரே. மேலும், தமிழகத்தில் பி.ஜே.பி ஆட்சி அமைக்காமல் உயிர் போகாது என்று, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தன்னுடைய ஆதங்கத்தைக் கொட்டித்தீர்க்கிறார். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ஜனாதிபதியைச் சந்தித்த, தமிழக கவர்னர் பன்வாரி லால் புரோஹித், ‘தமிழகத்தில் நடப்பது அரசே அல்ல; ஒரு 10 பேர் ஊழல் செய்வதற்காக, இந்த அரசை நாம் காப்பற்றத் தேவையில்லை’ என்ற தொனியில் சொன்னதாக முன்பே நான் உமக்குச் சொல்லியுள்ளேன். அதை 25.10.2017 தேதியிட்ட இதழிலும் வெளியிட்டிருந்தீர். இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துப் பார்த்தால், இன்றைக்கு எடப்பாடி பழனிசாமிக்குச் சாதகமான நிலைமை டெல்லியில் இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசைக் காப்பாற்ற வேண்டிய அவசியமும் டெல்லிக்கு இல்லை. அதனால்தான், பி.ஜே.பி-யின் டெல்லி தலைமை, தனது நிறத்தை மாற்றிவிட்டதாகத் தோன்றுகிறது. ‘மிகமிக கெட்ட பெயர் வாங்கிவரும் ஒரு அரசைக் காப்பாற்றுவதன் மூலமாக அந்தக் கெட்ட பெயரை பி.ஜே.பி-யும் வாங்க வேண்டுமா?’ என நினைக்கிறார்களாம் டெல்லியில்.”

‘‘அப்படியானால், நீர் ஏற்கெனவே சொன்னதுபோல, டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி தொடக்கத்தில் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடுமோ?”

‘‘டெல்லி வட்டாரங்களும் சரி, தி.மு.க வட்டாரங்களும் சரி, அப்படித்தான் சொல்கின்றன. மேலும், அ.தி.மு.க சார்பில் நாடாளுமன்ற துணை சபாநாயகராக இருக்கும் தம்பிதுரையின் வாயிலிருந்து வரும் வார்த்தைகளும் அப்படித்தான் இருக்கின்றன!”

‘‘ தம்பிதுரை என்ன பேசினார்?”

‘‘அக்டோபர் 27-ம் தேதி திருச்சியில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய தம்பிதுரை, ‘தமிழகத்தில் தேசியக் கட்சிகள் எந்தக் காலத்திலும் காலூன்ற முடியாது. தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்காக அவர்கள் காணும் கனவு பலிக்காது. இங்கு எப்போதும் திராவிடக் கட்சிகளின் ஆட்சிதான் நடக்கும். இந்த ஆட்சியைக் கவிழ்க்க நினைப்பவர்கள்தான் கவிழ்ந்துபோவார்கள்’ என பேசினார். அவருடைய பேச்சு, பி.ஜே.பி-க்கான பதிலடிதான் என்று அப்போது பேசிக்கொண்டார்கள். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, எடப்பாடி - மோடி ஐக்கியத்துக்குக் குந்தகம் ஏற்பட்டுவிட்டது என்பது தெரியத் தொடங்கியுள்ளது. இரட்டை இலை விவகாரத்தைத் தேவையில்லாமல் டெல்லி அதிக காலம் இழுத்தடிக்கிறது என்ற கோபமும் எடப்பாடி, பன்னீர் தரப்புக்கு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது!”

‘‘அப்படியா?”

‘‘சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, இரட்டை இலை வழக்கின் முடிவைத் தேர்தல் ஆணையம் அக்டோபர் 31-ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால், தலைமைத் தேர்தல் ஆணையத்தில் நடைபெறும் வழக்கில், இன்னும் மெயின் பிரச்னையை விசாரிக்கவே ஆரம்பிக்கவில்லை. அதனால், இப்போதைக்கு அந்த வழக்கில் தீர்ப்பு வராது; இரட்டை இலை யாருக்கு என்பதில் தீர்வும் வராது என்ற வருத்தம் அ.தி.மு.க தரப்புக்கு வந்துவிட்டது.”

‘‘மெயின் பிரச்னை என்ன?”

‘‘இரட்டை இலை எந்த அணிக்கு என்பதுதான் மெயின் வழக்கு. ஆனால், இப்போது நடப்பது, இரட்டை இலைக்கு உரிமைகோரி ஓ.பி.எஸ் - எடப்பாடி அணி தாக்கல்செய்த ஆவணங்கள் முறைகேடானவை என்பதுதான். அதாவது, ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் நடத்திய பொதுக்குழுவில், அ.தி.மு.க நிர்வாகிகளிடம் வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கப்பட்டது. மேலும் சில நிர்வாகிகள் மிரட்டப்பட்டும், ஆசை வார்த்தை காண்பித்தும் கையெழுத்து

போட வைக்கப்பட்டனர். இன்னும் சிலரிடம் எந்த விவரமும் சொல்லாமல் கையெழுத்து வாங்கப்பட்டது என்பது டி.டி.வி.அணியின் குற்றச்சாட்டு. அப்படி கையெழுத்துப் போட்டவர்களின் பெயர் விவரங்களை டி.டி.வி அணி, சீலிட்ட கவரில் வைத்து தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது. அதில் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும் என்பதுதான், தற்போது டி.டி.வி-யின் கோரிக்கை. தினகரனும், எடப்பாடியும் ஒன்றாக இருந்தபோது, அதிகபட்ச நிர்வாகிகளிடம் கையெழுத்து வாங்கி, தினகரன் சமர்ப்பித்துவிட்டார். அதனால், தற்போது பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகக் கொடுப்பதற்கு எடப்பாடியிடம் எந்த ஆவணங்களும் இல்லை. அதனால், தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரையில், அங்கு தினகரனின் ஆவணங்கள்தான் அதிகம் உள்ளன.”

‘‘அப்படியானால், இப்போதைக்கு வழக்கு முடியாதா?”

‘‘நவம்பர் 1-ம் தேதிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து கிடைக்கும் தகவல்களை வைத்துப் பார்க்கும்போது, பிரச்னை அவ்வளவு சீக்கிரம் முடியாது என்றே தெரிகிறது. எல்லாவற்றையும் மீறி முடியவேண்டுமானால், டெல்லி பி.ஜே.பி தலைமை மனது வைக்க வேண்டும். அவர்களைப் பொறுத்தவரை, இப்போதைக்கு இரட்டை இலை சிக்கலிலேயே இருக்கட்டும் என்றே நினைக்கின்றனர். அதற்கு உயிர் கொடுக்க அவர்கள் விரும்பவில்லை. அதனால், இந்தப் பிரச்னை இப்போதைக்கு முடியாது. இதுவும் பி.ஜே.பி - அ.தி.மு.க மனக்கசப்புக்குக் காரணமாகி வருகிறது.” 
Share This
Previous Post
Next Post

Pellentesque vitae lectus in mauris sollicitudin ornare sit amet eget ligula. Donec pharetra, arcu eu consectetur semper, est nulla sodales risus, vel efficitur orci justo quis tellus. Phasellus sit amet est pharetra