Monday, December 11, 2017

ஜெய்க்கப் போவது யாரு?

ஜெய்க்கப் போவது யாரு?
ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு நடைபெற போகும் முதல் தேர்தல் என்பதால் இதன் முடிவு எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள தமிழகம் முழுவதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., டி.டி.வி.தினகரன் அணி ஆகியோருக்கு இடையேதான் பலப்பரீட்சை நிகழ உள்ளது. இந்த மும்முனைப் போட்டியில் வாக்குகள் கணிசமாக சிதறும் நிலை உள்ளது. எனவே யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பது கணிக்க முடியாதபடி உள்ளது.
தற்போதைய அரசியல் சூழ்நிலையே வெற்றி-தோல்வியை நிர்ணயிப்பதாக இருக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். மேலும் வேட்பாளர், பிரசாரம், வாக்குறுதிகளும் வெற்றி-தோல்விக்கு வித்திடும். ஆர்.கே.நகரில் எடுக்கப்பட்ட சர்வேக்களும் இதையே உறுதிபடுத்தியுள்ளன.
இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள இளைஞர்களின் வாக்குகள் தான் வெற்றி-தோல்வியை முடிவு செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று சமீபத்திய ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 714 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 1,10,202 பேர். பெண்கள் 1,16,413 பேர்.
இந்த வாக்காளர்களில் 18 வயது முதல் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஒவ்வொரு பிரிவிலும் எத்தனை பேர் உள்ளனர் என்று கணக்கிடப்பட்டது. அப்போது 18 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் 2956 பேர் இருப்பது தெரிந்தது.
20 வயது முதல் 29 வயது வரை 58,530 பேரும் 30 முதல் 39 வயது வரை 63,913 பேரும் இருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது 19 வயது முதல் 39 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 1,25,399 பேர் இருக்கிறார்கள்.
இதன் மூலம் ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள் இளைய சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அதாவது மொத்த வாக்காளர்களில் 58 சதவீதம் பேர் இளைஞர்கள் தான்.
40 முதல் 49 வயது வரை 48,217 பேரும், 50 முதல் 59 வயது வரை 30,103 பேரும், 60 முதல் 69 வயது வரை 15,728 பேரும், 70 முதல் 79 வயது வரை 5,983 பேரும் உள்ளனர். 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 1,284 பேரே உள்ளனர்.
இதன் மூலம் 40 வயதுக்கு மேல் உள்ள வயதான வாக்காளர்கள் எண்ணிக்கை சுமார் 1 லட்சமாகத்தான் இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே 19 முதல் 39 வயதுக்குட்பட்ட இளைய சமுதாயத்தின் வாக்குகள்தான் வெற்றி-தோல்வியை முடிவு செய்யும்.