Friday, March 16, 2018

மதத்திற்க்கு அப்பாற்பட்டு செயல்பட்ட மனித நேயம்!

ad300
Advertisement


:எளிய மனிதர்களை சந்திக்க கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்குப் போங்கனு சொல்லுவாங்க…அது உண்மைதான். ஒரு உறவினரைப் பார்க்க செங்கல்பட்டில் இருக்கும் தொழுநோய் மருத்துவமனைக்கு போனேன். அங்கயே ஒரு நாள் காத்திருக்கும் போது பல கதைகள் கிடைத்தன. அதுல ஒரு செவிலியர் சொன்ன கதையைக் கேட்டு அதிர்ச்சியா இருந்ததோடு சந்தோசமாகவும் இருந்தது. கதைன்னா ஏதோ கற்பனைன்னு நினைக்காதீங்க, இது அங்க உண்மையிலேயே நடந்த சம்பவம். இனி அந்த செவிலியர் வார்த்தையிலேயே கேளுங்கள்!

தொழு நோய் மருத்துவமனை, செங்கல்பட்டு
ஐயர்வீட்டு மாமி என்றால், ஆச்சாரம் பாப்பாங்க.. கவுச்சிய கண்ணுல பாக்க மாட்டாங்க… தன் சொந்த சாமிய சுத்தி சுத்தி கும்பிடுவாங்க…மத்தவங்க சாமிய பழிப்பாங்க….சக மனிதர தொட்டு பேசமாட்டாங்க.. இப்படித்தான் நாம், பொது வெளியில காலம்காலமா பாக்குறோம்.
ஆனா, அய்யங்கார் சாதியில் பிறந்த சரஸ்வதி மாமிக்கு வந்த தொழுநோய், அவங்கள பண்படுத்தி , சக மனுஷியா மாத்துச்சி. அவருக்கு வயது, 65. தபால் துறையில் வேலை பார்த்தவங்க…. வயதான காலத்தில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வலது கால் கட்டைவிரல் புண்ணாகி, அழுகிய நிலையில,தாங்க முடியாத நாத்தத்தோட தொழுநோய் ஆஸ்பத்திரிக்கு, எங்களிடம் வந்தாங்க.. சா்க்கரை நோய்னு நினைச்சி, வருடக்கணக்கா வைத்தியம் பாத்திருக்காங்க…. கடைசியில அது தொழுநோய்னு தெரிந்ததும். சொந்தக்காரங்க, ஆஸ்பத்திரியில் விட்டுட்டு அவசரமா ஓடிட்டாங்க….
சரஸ்வதி மாமியால், இந்த, தொழுநோய் ஆஸ்பத்திரிய ஏத்துக்கவே முடியல…. வேற வழியில்ல… இங்க மட்டும்தான் அந்த புண்ண ஆத்துவாங்க என்று அவரது டாக்டரோட சொல்லையும் தட்ட முடியல… வீட்டுக்குப் போனா ,சொந்தக்காரங்க கவனிக்க தயாரில்ல…. ஏதோ அரைகுறை, மனசோட இருந்தாங்க…

எங்கிட்ட சரஸ்வதி மாமி முதல்ல பேசின பேச்சு , ”இங்க எதனாச்சும் ஸ்பெஷல் வார்டு இருந்தா கொடு… பணம் பே பண்றதா இருந்தாலும் பரவாயில்லை.. இவங்க (நோயாளிகள்) கூட இருக்க பயமா இருக்கு….” என்றார் சோகத்துடன்.
பயப்படாதீங்க… இங்க முதல்ல அப்படித்தான் இருக்கும்.. 10 வருசமா நாங்க இங்கத்தான் இருக்கோம்.. எங்களுக்கு ஒண்ணும் ஆகல, எங்க புள்ளைங்களும் இங்க வருவாங்க, அவங்களுக்கும் ஒண்ணும் ஆகல….. தைரியமா இருங்க…இங்க எல்லோரும் சொந்தக்காரங்களை விட நல்லாப் பழகுவாங்க… இங்க, பொம்பளவார்டு ஒண்ணு மட்டும்தான் இருக்கு… ஸ்பெஷல் வார்டு எல்லாம் கிடையாது…. உங்க புண் ஆற குறைஞ்சது 3, 4 மாசம் ஆகும். புண்ண ஆத்திட்டு, நல்லா போகணும்னு மட்டும் நினைங்க என்று ஆறுதல் சொன்னேன்.
எந்த சமாதானத்தையும் சரஸ்வதி மாமி ஏற்கவில்லை. வழக்கமாக கொடுக்கும் சாப்பாட்டை இரண்டு நாள் வாங்க மறுத்தார். குழந்தை போல் அடம்பிடித்தார். 2 நாள் முழு பட்டினியில் சுருண்டு கிடந்தார். அவர் வீட்டுக்கு போன் செய்தோம். வீட்டிலிருந்து யாரும் வந்தபாடில்லை.. போன் செய்தால், அவசர வேலையில் இருப்பதாக சொல்லி, ”யாரிடமாவது பணம் கொடுத்து வாங்கி சாப்பிடட்டும் விடுங்கள் ” என்றனர். வீட்டில் சொல்லியதைக் கேட்டு புலம்பினார்.
நாட்கள் கடந்தன. சரஸ்வதி மாமி, பக்கத்திலிருந்தவர்களிடம் பேசி பழகினார்.
அவரது பக்கத்து படுக்கையில் இருந்த தொழுநோயாளி ஹாஜீரா பீவி, முஸ்லீம். அவர் பாசத்துடன் ”மாமி, சாப்பாடு சூடா, சுத்தமாத்தான் போடுவாங்க.. நீ முட்டை வேணானுட்டு, பால் வாங்கிக்க… சாப்பிடு .. கால் புண் அப்பத்தான் ஆறும்… ” என்பார், அக்கரையுடன்.

மாமி கொஞ்சம் கொஞ்சமாக மாறினார். தினமும் குளித்து, முகத்தில் பவுடர் போட்டு சுத்தமாக இருந்தார். ஆனால், காலில் இருக்கும் புண்ணை சுத்தமாக வைத்துக் கொள்ள மறுத்தார். நாங்கள் அவரை தொட்டு, கட்டு கட்டியே உடனே, தீட்டாக நினைத்துக் காலை கழுவுவார். கட்டு ஈரமாகி நாற்றமடிக்கத் தொடங்கும். பக்கத்தில் இருப்பவர்கள் மாமியின் பழக்கம் அது என்று அனுசரித்தனர். ”காலை நனைச்சிகிட்டா சீக்கிரம் ஆறாதுனு நீங்க சொல்லுங்க, நாங்க சொன்னா… மாமி தப்பா நினைச்சிக்க போகுது ” என்று கரிசணையோடு கூறினார்கள், சக தொழு நோயாளிகள்.
நாளடைவில்… பீவியும் மாமியும் நெருங்கிய நண்பர்களானார்கள் …
ஹாஜீரா பீவி, சரஸ்வதி மாமிக்கு, கால் புண்ணை காக்கும் முறையை கற்றுக் கொடுத்தார். மாமியின் வேலைகளுக்கு உதவினார். மாமி குளிக்கப் போகும் போது காலில் பிளாஸ்டிக் கவர் கட்டி விடுவது, மாமி சாப்பிட்டதும் தட்டு கழுவித் தருவது, மாமி துவைத்த துணிகளை காய வைத்து தருவது என எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி செய்தார். வாரத்திற்கு ஒருமுறை வரும், தன் மருமகளிடம் ஹாஜீரா பீவி, மாமிக்கு தேவையான, எண்ணெய், பவுடர், ஊறுகாய், சிப்ஸ் என வாங்கிவர சொல்லி, ஆசையோடு கொடுப்பார். மாமியின் கால் புண் ஆறத்தொடங்கியது.
மாமி, பீவி உறவினர்களுடன் ஒன்றரக் கலந்தார். பீவியின் மருமகள் சமைத்துவரும் அசைவ உணவுடன் தனக்கு சாப்பாத்தியும் செய்து வரச் சொல்லுவார். பீவியின் பேரப் பிள்ளைகளுடன் தானும் ஆசையோடு விளையாடுவார்.
பின்னர் பீவிக்கு காலில் ஆபரேஷன். நடக்க முடியாத சூழ்நிலை. பீவிக்கான வேலைகளான சாப்பாடு வாங்குவது, சாப்பாடு ஊட்டுவது, துணி துவைப்பது, தலைவாரி விடுவது போன்ற வேலைகளை சரஸ்வதிமாமி மிகவும் கவனமாக அவருக்கு செய்தார்.
சாப்பாடு வாங்க மாமி வருவார். உடன் பீவியின் தட்டையும் எடுத்து வந்து முட்டை வாங்குவார். சில சமயங்களில், தட்டு மாறி முட்டையைப் போட்டு நாங்கள் பதறுவோம். ஆனால் மாமி பதறாமல் முட்டையை எடுத்து பீவியின் தட்டில் போடுவார். நான் பாத்துக்கிறேன் என்பார். பீவியால் சாப்பிடமுடியாத நிலையில், மாமி, சோறூட்டி, முட்டையும் ஊட்டிவிடுவார் .
நாங்கள் மாமியிடம் வேடிக்கையாக, “மாமி… பீவியும், மாமியும் ஒண்ணாயிட்டீங்க….. பாத்து … வீடு மாறி போயிடப்போறீங்க… ” என்றால், ”இதுல… என்ன இருக்கு சொல்லுங்க, மாமிக்குனு ஒரு வியாதியும், பீவிக்குன்னு ஒரு வியாதிமா …வந்திருக்கு? ரெண்டுப் பேருக்கும் ஒரே வியாதி…. அவங்களுக்காவது, கவனிக்க ஆள் இருக்கு…. எனக்கு அதுவும் இல்ல…. ” என்பார்.
பீவிக்கு கொஞ்சம் காது கேட்காது… அதனால் மாமி, தான் படிக்கும் நாவல்களின் கதைகளை அவரிடம் சத்தமாக சொல்லி சொல்லி சிரிப்பார். பீவியின் தொழுகை நேரத்தில் எதுவும் பேசாமல் சிரத்தையுடன் கவனிப்பார். பீவி கறி விரும்பி சாப்பிடும்போது அருவறுப்புப் பார்க்காமல் உடனிருந்தது பார்த்து ரசிப்பார்.

பீவி எப்போதும் சுத்தமாக இருப்பார். ஆனாலும் சரஸ்வதி மாமியுடன் இருக்கும்போது மேலும் அதிக சுத்தமாக இருப்பார். சாப்பாடு வாங்கும்போது, கைகழுவி, மாமிக்கு முதலில் வாங்கிவைத்துவிட்டு, பிறகுதான் தன் தட்டை தொடுவார். மாமிக்கு பிடித்த கலரில், ஒயர் கூடையை தன் கையால் பின்னி, மாமியின் துணிகளை அதில் வைத்து பாதுகாப்பார்.
பீவியின் பேத்தி, ‘பெரிய புள்ளையாக’ ஆனார். சடங்கு முடித்து, வீட்டில் செய்த இனிப்புகளுடன் பீவியின் மருமகள் வந்தார். சரஸ்வதி மாமி, பீவி பேத்திக்கு ஆசையுடன், தன் காசில் பூ, பொட்டு, வளையல் வாங்கிக் கொடுத்தார். அவர்கள் கொண்டுவந்த இனிப்பை ஆசையுடன் சாப்பிட்டார்.
உடல்நலம் இருவருக்கும், சரியானது. வீட்டிற்கு செல்லும் நேரம். இருவரும் அழுது கொண்டே இருந்தனர். ஊருக்குப் போகும்போது மாமி, ”என்னால, இந்த ஆஸ்பத்திரியும் மறக்க முடியாது.. பீவியையும் மறக்கமுடியாது…… எல்லாரும் ஒண்னுணு… இங்க கத்துக்கிட்டேன்.. வருசத்துக்கு ஒரு தடவை இங்க வந்து, என்னால முடிஞ்ச உதவியை நோயாளிகளுக்கு செய்வேன்.” என்று எல்லோரிடமும் பிரியாவிடை பெற்றார்.
அந்த செவிலியர் கதையை முடிச்ச போது எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. மனுசனுக்கு பாதிப்பு வரும்போது அதுவும் பெரிய நோய்னு வரும்போது அவங்கிட்ட இருக்குற மனுஷத் தன்மை எப்படி வெளியே வருது பாருங்க! பார்ப்பனருங்க எல்லாரும் அக்ரகாரம், ஐதீகம், ஆச்சாரம்னு மத்த மக்கள்கிட்ட இருந்து பிரிஞ்சுதான் இருக்காங்க, அப்புறம் பிஜேபி, ஆர்.எஸ்.எஸ்-ன்னு சாதாரண மக்களை பிரிக்கிற கட்சிங்கள்ள பதவியிலயும் இருக்காங்க. இதெல்லாம் ’இயல்பா’ இருக்குறதுக்கு என்ன காரணம்? அவங்க வாழ்க்கையில எப்பயுமே சாதாரண மக்களோட பழகுற வாய்ப்பு ரொம்பக் குறைவு. பல விசயங்கள்ள அதுக்கு தேவையே இல்லாம இருக்குங்கிறது ஓரளவுக்கு உண்மைதான். காசு இருந்துச்சுன்னா நீங்க உங்களுக்குன்னு தனியா ஒரு உலகத்தை உண்டாக்கலாம்கிறது உண்மைதான். ஆனா அது நிரந்தரமா?
அப்படித்தான் அவங்க வாழ்க்கையில ஒரு பிரச்சினைன்னு வரும் போது சாதி சனம் சொந்தபந்தத்தை விட சாதாரண மக்கள் உதவறதப் பார்க்கும் போது அவங்ககிட்ட இருக்குற அந்த ’உயர்சாதி’ மனோபாவம் மாறுது. முஸ்லீம்னா தேசத்துரோகி, பாகிஸ்தான் உளவாளி, அசைவ நாற்றம்ன்னு ஏகப்பட்ட விசமப் பிரச்சாரங்களை நம்புறாங்க. சரஸ்வதி மாமியும் அதுக்கு விதிவிலக்கு இல்லைதான். ஆனா தொழுநோய்னு ஒரு நோய் வந்த பிறகுதான் அவங்க உண்மையை கண்கூடா பாக்குறாங்க. சரியாச் சொல்லப்போனா அவங்கிட்ட இருக்குற அநாகரிகத்தை ரத்தமும் சதையுமா உணர்ராங்க!
நம்ம சமூகம் இயல்பா ஒண்ணுக்குள்ள ஒண்ணாத்தான் இருக்குங்கிறதுக்கு இந்த கதை ஒரு உதாரணம். யாரெல்லாம் தங்கிட்ட இருக்குற சாதிவெறி, மதவெறி மாறணும்னு நினைக்கிறாங்களோ அவங்க செங்கல்பட்டுக்குத்தான் வரணும்னு இல்லை, பக்கத்துல இருக்குற ஒரு அரசு மருத்துவமனைக்கு போய் வைத்தியம் பாத்தாலே அந்த வெறிங்களை உதறிட்டு மனுசனா மாறலாம். என்ன சொல்றீங்க?
நன்றி– லட்சுமி@ வினவு
Share This
Previous Post
Next Post

Pellentesque vitae lectus in mauris sollicitudin ornare sit amet eget ligula. Donec pharetra, arcu eu consectetur semper, est nulla sodales risus, vel efficitur orci justo quis tellus. Phasellus sit amet est pharetra