Monday, April 30, 2018

கனவாகும் காவிரி வாரியம்?

கனவாகும் காவிரி வாரியம்?


அண்மையில் காவிரி உரிமை போராட்டங்களில் “ஸ்கீம்“ என்ற ஒரு வார்த்தை ஒட்டுமொத்த தமிழகத்தின் ஆவேசத்தையும் மத்திய அரசுக்கு எதிராகக் கிளறிவிட்டது. உச்சநீதிமன்றம் விதித்திருந்த காலக்கெடுவின் இறுதியில் “ஸ்கீம்“ என்பதை விளக்குமாறு மத்திய அரசு மனு அளித்ததாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து தமிழகம் கொதிநிலையை அடைந்தது.
கர்நாடக மாநில தேர்தல்களை மனதில் வைத்து மத்திய அரசு செய்யும் காலம் தாழ்த்தும் நாடகம் என்று இது சரியாகவே புரிந்துகொள்ளப்பட்டது என்றாலும், உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவின் உள்ளடக்கம் முழுமையாக கவனத்தில் கொள்ளப்படவில்லை. “ஸ்கீம்“ என்ற கருத்தாக்கத்தின் பின்னணியும் உரிய கவனத்தைப் பெறவில்லை. இவற்றின்பால் கவனத்தைக் குவிப்பது காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான முன்னெடுப்புகளுக்கு உதவக்கூடும்.
மத்திய அரசு 1956 ஆம் ஆண்டு இயற்றிய மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் பிரச்சினைகள் சட்டம் (Inter-State Water Disputes Act)
மட்டுமே நதிநீர் பங்கீட்டு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான சட்ட வழியாக உள்ளது. இச்சட்டம் இயற்றப்பட்டபோது, அதில் “ஸ்கீம்“ என்ற கருத்தாக்கம் இடம்பெற்றிருக்கவில்லை.
1979 ஆம் ஆண்டு நர்மதா நதிநீர் ஆணையத்தின் இறுதித் தீர்ப்பையொட்டி, 1980 ஆம் ஆண்டு இச்சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு,புதிதாக பிரிவு 6 (A) சேர்க்கப்பட் ட து. 2007 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட காவிரி நதிநீர் ஆணையத் தீர்ப்பு இப்பிரிவின் பின்னணியைதெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது:
“நர்மதா நதிநீர் ஆணையம் 1979 இல் வழங்கிய தீர்ப்பிற்குப் பிறகு, நாடாளுமன்றம் மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் பிரச்சினைகள் சட்டத்தில் 1980 ஆம் ஆண்டு சட்டத் திருத்தம் 45 மூலம் பிரிவு 6 - A ஐ புகுத்தியது. இச்சட்டத் திருத்தத்தின் நோக்கங்கள் மற்றும் காரணங்கள் குறித்த கூற்று அறிக்கை, நர்மதா நதிநீர் ஆணையத்தின் தீர்ப்பே இச்சட்டத்தில் பிரிவு 6 – A ஐ அறிமுகப்படுத்துவதற்கான காரணமாக அமைந்தது என்று குறிப்பிடுகிறது.“ (காவிரி ஆணையத் தீர்ப்பு, தொகுதி V பக்கம் 222).
முரண்பட்ட நலன்களுடைய மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைகளில் ஆணையத்தின் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னரும், அத்தீர்ப்பைச் செயல்படுத்துவதில் மாநிலங்கள் மீண்டும் முரண்டு பிடிக்கலாம் என்பதைக் கருத்தில் கொண்டே இச்சட்டப் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டது.
இச்சட்டப் பிரிவின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
“பிரிவு 6. மத்திய அரசாங்கம் ஆணையத்தின் தீர்ப்பை அரசிதழில் அலுவல்பூர்வமாக வெளியிடவேண்டும். ஆணையத்தின் தீர்ப்பு இறுதியானது என்பதோடு, பிரச்சினையில் தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் கட்டுப்படுத்துவதும், அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதும் ஆகும்.

6 A . (1) பிரிவு 6 இல் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு குந்தகம் விளைவிக்காத வகையில், ஆணையத்தின் தீர்ப்பை நடைமுறைக்கு கொண்டுவர அவசியமான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு திட்டம் (ஸ்கீம்) அல்லது திட்டங்களை வடிவமைத்து, மத்திய அரசாங்கம், அரசிதழில் வெளியிடலாம்.
(2) உட்பிரிவு (1) இன் கீழ் வடிவமைக்கப்பட்ட திட்டத்தின் கீழ் (அ) ஆணையத்தின் தீர்ப்பு அல்லது வழிகாட்டல்களை செயலுக்கு கொண்டுவரக்கூடிய அதிகார அமைப்பு எதுவொன்றும் (கமிட்டி அல்லது வேறு வகையான அமைப்பாக வரையறுக்கப்பட்ட ஒன்று) நிறுவ வழிவகுக்கப்படலாம்.”
மேலும், உட்பிரிவு (7) இத்திட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், இரு அவைகளிலும் வைத்து, அவசியமான திருத்தங்களைச் செய்துகொள்ளலாம் என்கிறது.
இவையல்லாது, 2002 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தம் 14 இன்படி, மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் பிரச்சினை சட்டத்தில் மேலும் ஒரு திருத்தம் செய்யப்பட்டது.



இதன்படி உட்பிரிவு 6(2) பின்வருமாறு திருத்தப்பட்டது:
“உட்பிரிவு (1) இன் கீழ் ஆணையத்தின் தீர்ப்பை மத்திய அரசாங்கம் அரசிதழில் வெளியிட்ட பிறகு, அது உச்சநீதிமன்றத்தின் உத்தரவு
அல்லது தீர்ப்பாணைக்கு நிகரான அதிகார வலிமையுடையதாக கொள்ளப்படவேண்டும்”
இவற்றின் சாராம்சம்:
1) ஆணையத்தின் தீர்ப்பிற்குப் பின்னரும், அதை நடைமுறைப்படுத்துவதில் முரண்பட்ட நலன்களைக் கொண்ட மாநிலங்கள்
முரண்டு பிடிக்கலாம் என்பதால், அத்தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
2) மத்திய அரசாங்கம், ஆணையத்தின் தீர்ப்பை செயலுக்கு கொண்டுவர, ஒரு திட்டத்தை (ஸ்கீம்) வடிவமைத்து, அரசிதழில் வெளியிடவேண்டும்.
3) அத்திட்டமானது ஆணையத்தின் தீர்ப்பை செயலுக்கு கொண்டுவரக்கூடிய அமைப்பு, அதன் அதிகார எல்லைகள், நிர்வாகம்,
பரிசீலனைக் கமிட்டி இன்னபிறவற்றை வகுக்கவேண்டும்.
4) அவ்வாறு வடிவமைக்கப்பட்ட திட்டம் அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகு, மத்திய அரசாங்கம் அதை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வைத்து, அவசியமான திருத்தங்களை செய்யலாம்.
5) ஆணையத்தின் தீர்ப்பு உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு நிகரான அதிகார வலிமையுடையது.
இத்தகைய அதிகார வலிமையுள்ள ஆணையத்தின் தீர்ப்பில் சில மாற்றங்களை செய்து உச்சநீதிமன்றம் தனது “இறுதியிலும் இறுதியான” தீர்ப்பை வழங்கியது.
ஆறு வாரங்களுக்குள் ஸ்கீமை வடிவமைக்கும்படி உத்தரவிட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பிப்ரவரி 12 அன்று வழங்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு திட்டத்தை (ஸ்கீம்) வடிவமைக்கவோ அல்லது குறைந்தபட்சம் அதற்கான வரைவறிக்கையைத் தயாரிக்கும் முயற்சியோ செய்யவில்லை. அமைச்சரவை அளவில் ஆலோசனை எதுவும் நடைபெற்றதாகவும் தெரியவில்லை.

மாறாக, மார்ச் 9 அன்று – ஏறத்தாழ 3 வாரங்கள் கழிந்த நிலையில், மத்திய அரசின் நீர்வளத் துறை அமைச்சகத்தின் செயலர் திரு. யு. பி. சிங் அவர்களின் தலைமையில், தமிழகம், கர்னாடகம், கேரளம், புதுவை ஆகிய நான்கு மாநில தலைமை மற்றும் முதன்மை செயலர்களின் கலந்தாலோசனைக் கூட்டம் புதுதில்லியில் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் நான்கு மாநிலப் பிரதிநிதிகளும் ஸ்கீம் அமைக்க ஒப்புக்கொண்ட போதிலும் அது குறித்து மாறுபட்ட கருத்துக்களைத்தெரிவித்துள்ளனர். மார்ச் 19 அன்று எழுத்து வடிவிலும் சமர்ப்பித்துள்ளனர்.
இவ்வாறு ஸ்கீம் அமைப்பதில் மாநிலங்களுக்கிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுவதையும், மத்திய அரசு தானே ஸ்கீமை வடிவமைத்தால், மாநில அரசுகள் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வாய்ப்பு உள்ளது என்ற காரணத்தைக் காட்டியும், காவிரி ஆணையத்தின் தீர்ப்பில் சில மாறுதல்களை செய்துகொள்ளலாமா என்று கேட்டும் மார்ச் 31 அன்று மத்திய அரசு மனுவை சமர்ப்பித்தது.
இவ்விடத்தில் 2002 ஆம் ஆண்டு பிரிவு 6(2) இல் செய்யப்பட்ட மற்றொரு திருத்தம் குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு வலியுறுத்திக் குறிப்பிட்டுள்ள புள்ளி மிகுந்த கவனத்திற்குரியது.
மத்திய அரசின் தரப்பை முன்வைத்த சொலிசிடர் ஜெனரல் திரு. ரஞ்சித் குமாரின் வாதத்தை மறுத்து, மத்திய மாநில உறவுகள் குறித்த சர்காரியா கமிஷன் அறிக்கையின் (1980) பரிந்துரையை சுட்டிக் காட்டி, “ஆணையத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு எந்தவொரு மாநிலமும் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கவும், அதன் வழிகாட்டுதல்களின் படி நடக்கச் செய்யவும் உரிய வலிமையைத் தரும் பொருட்டே பிரிவு 6(2) இல் அவ்வாறு கூறப்பட்டுள்ளது. திட்டத்தை (ஸ்கீம்) வடிவமைப்பதன் நோக்கமே தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதுதான்,“ (பக்கம்: 456 - 7), என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளது.
இந்த விளக்கத்தையும் மீறி முரண்பட்ட நலன்களையுடைய மாநிலங்களின் பிரதிநிதிகளைக் கூட்டி, மீண்டும் கலந்தாலோசிப்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கேலிக்குரியதாக்குவது என்பதல்லாமல் வேறு என்ன?
இதைக் காட்சிலும் வேடிக்கையான மற்றொரு விஷயத்தையும் மத்திய அரசு சத்தமில்லாமல் செய்திருக்கிறது.
2017 மார்ச் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதி 1956 மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் பிரச்சினைகள் சட்டத்தை மீண்டும் திருத்தம் செய்யும் மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அத்திருத்த மசோதாவை ஆய்வு செய்ய நாடாளுமன்ற நிலைக்குழு அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகள் ஆகஸ்டு 2017 இல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
நீண்ட காலமாக தீர்க்கப்படாதிருக்கும் நதிநீர் பிரச்சினைகளை விரைவில் தீர்க்கும் பொருட்டு, இச்சட்டத் திருத்தம் முன்மொழியப்படுவதாக கூறப்பட்டது. இதன்படி, ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நதிநீர் ஆணையங்களின் தீர்ப்புகளில் எவ்வித மாற்றமும் செய்ய இயலாது. தற்போது நடப்பில் உள்ள நதிநீர் ஆணையங்கள் கலைக்கப்பட்டு, ஒரு மத்திய ஆணையத்தின் கீழ் கொண்டுவரப்படும். அந்த ஆணையத்தின் தீர்ப்பே இறுதியானது. அதன் தீர்ப்பை அரசிதழில் வெளியிடவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஸ்கீம் என்ற வார்த்தைக்கே அதில் இடமும் இல்லை.
நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இச்சட்டத் திருத்தத்தின் மீது நாடாளுமன்ற நிலைக்குழு அளித்துள்ள பரிந்துரைகள் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டிருந்தால், காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினை ஒரு தீர்க்கமான முடிவிற்கு வந்திருக்கும்.
அல்லது, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஸ்கீமை வகுத்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருந்தாலும் பிரச்சினை தீர்ந்திருக்கும்.

இரண்டில் ஒன்றையும் செய்யாமல், தமிழக ஆளும் கட்சியின் மூலம் நாடாளுமன்றத்தை முடக்கி, தனது அரசின் மீது கொண்டுவரப்பட இருந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை வரவொடாமல் செய்ததோடு, கர்னாடக தேர்தலுக்கு அவகாசமும் எடுத்துக்கொண்டதுதான் மோடியின் தந்திர அரசியல் நகர்வு.
குடிமக்களின் தலைபோகும் பிரச்சினைகளைக் காட்டிலும், அரசியல் லாப – நஷ்டக் கணக்குகளே முக்கியம் என்ற அணுகுமுறையில் காங்கிரசிற்கும் பாஜகவிற்கும் வித்தியாசம் இல்லை என்பதையே இது மக்களுக்கு உணர்த்தியிருக்கிறது.
நன்றி தி இந்து தமிழ்.

தொடர்புக்கு: mathi2006@gmail.com

துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினாலும் மே 10 ல் போராடுவோம்!

துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினாலும் மே 10 ல் போராடுவோம்!


சென்னை: தமிழகத்தை பாலைவனமாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது என விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு குற்றம்சாட்டியுள்ளார். மே 10-ம் தேதி முதல் மெரினாவில் உண்ணாவிரத போராட்டம் நடந்தே தீரும் என்றும் அய்யாக்கண்ணு திட்டவட்டமாக அறிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, சென்னை மெரினாவில் அய்யாக்கண்ணுவுக்கு ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்க தனி நீதிபதி அளித்த அனுமதிக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இந்நிலையில் இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு தமிழகத்தை பாலைவனமாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மெரினாவில் மே 10-ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தார். தங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினாலும் சரி, ராணுவமே வந்தாலும் சரி, செத்தாலும் சாவோமே தவிர யாருக்கும் பயப்பட மாட்டோம் என்றார். மெரினாவில் போராட்டம் நடத்த அனைத்து தரப்பினரும் ஆதரவு தர தயாராக உள்ளதாகவும் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். காவல்துறை அனுமதி அளிக்காவிட்டாலும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அய்யாக்கண்ணு உறுதிபட தெரிவித்தார். 
மேலும் தமிழக முதல்வரை பிரதமர் மதிப்பதில்லை என்று அய்யாக்கண்ணு கூறியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உச்சநீதிமன்றம் தீர்ப்பு. ஆனால் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுத்து வருகிறது என  அய்யாக்கண்ணு பேட்டியளித்துள்ளார். 

திருப்பூரில் மோதல்! காவல்துறை தடியடி!

திருப்பூரில் மோதல்! காவல்துறை தடியடி!
திருப்பூரில் இன்று நடந்த வீட்டு வசதி கூட்டுறவுச் சங்கத்தேர்தலில் அதிமுக- திமுகவினரிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் கூட்டத்தை தடியடி நடத்தி கலைத்ததால் அந்த இடமே போர்க்களம்போல் காட்சியளித்தது.

திருப்பூர் குமரன் சாலையில் உள்ள வீட்டு வசதி கூட்டுறவுச் சங்கத்தில் இன்று தேர்தல் நடைபெறவிருந்தது. பிரச்னை ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருந்ததால் காலை முதலே பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. இந்நிலையில் தேர்தல் அதிகாரிகள் அ.தி.மு.கவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும், அ.தி.மு.கவினரை மட்டுமே வேட்பு மனுத் தாக்கல் செய்ய அனுமதிப்பதாகவும் புகார் எழுந்தது. மற்ற கட்சியைச் சேர்ந்த யாரையும் உள்ளே விடாமல் வெளியே தடுத்து நிறுத்தி அனுப்புகிறார்கள் எனக் கூறப்பட்டது.
இதைக் கண்டித்து தி.மு.க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முழக்கங்கள் எழுப்பத் தொடங்கின. ஜனநாயக முறைப்படி நடைபெறும் தேர்தலைச் சீர்குலைக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுச் செயல்படுவதாக அ.தி.மு.க-வினரும் ஒருபக்கம் முழக்கங்களை எழுப்பத் தொடங்கினர். ஒருகட்டத்தில் இரு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதமாகி,  பின்னர் அது கைகலப்பு வரை சென்றது. இதனால் தேர்தல் நடைபெறும் வளாகம் முழுவதும் பதற்றம் ஏற்பட தொடங்கியது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினர் தடியடி நடத்தினர். அதனைத் தொடர்ந்து வீட்டு வசதி கூட்டுறவுச் சங்கத் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அதே குமரன் சாலையில் உள்ள திருப்பூர் கூட்டுறவு நகர வங்கி ( அர்பன் பேங்க் ) வளாகத்தின் முன் திரண்ட தி.மு.கவினர், அங்கு நடைபெறும் தேர்தலை நியாயமான முறையில் நடத்துமாறு முழக்கங்களை எழுப்பி முற்றுகைப் போராட்டம் நடத்தினர். இதனால், அங்கும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புப் போடப்பட்டிருக்கிறது.

தர்மயுத்தம் 2.0 நடத்தப் (ஜெய்க்கப்) போவது யாரு? சிறப்புத் தொடர்.

தர்மயுத்தம் 2.0 நடத்தப் (ஜெய்க்கப்) போவது யாரு? சிறப்புத் தொடர்.


விரைவில் அரங்கேற்றமாக இருக்கும் "தர்மயுத்தம் 2.0" 

நடக்கப் போவதை அறிந்து கொள்ளும் முன்பு!

நடந்தவைகளை ஒரு பார்வை பார்த்துவிடுவோமா?

தமிழக அரசியலில் தற்போது நிகழும் பல்வேறு அரசியல் நகர்வுகள் ஆச்சரியப்படத்தக்கதாக உள்ளது. குறிப்பாக தமிழக மக்களே எதிர்பார்க்காத வகையில் "எடப்பாடி கே பழனிச்சாமி" அவர்கள் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு குழப்பங்கள் தமிழக மக்களையும் அதிமுக தொண்டர்களையும் சூழ்ந்துள்ளது. 
தனது பதவி பறி போன Ops அவர்கள் "தர்மயுத்தம்" என்ற பெயரில் போராடி "மறைந்த முதல்வர் ஜெயலலிதா" அவர்களின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி பெரும்பாலான அதிமுக பாமர தொண்டர்களைத் தன்வசப்படுத்திக் கொண்டதோடு, 20 க்கும் அதிகமான ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களையும் தனக்கு ஆதரவாக சேர்த்துக் கொண்டு "தர்மயுத்தம்" போராட்டத்தைத் துவங்கினார். அவர் துவக்கிய போராட்டத்தின் மூலம் மீண்டும் தான் முதல்வராகி விடலாம் என்று கனவு கண்ட தர்மயுத்த நாயகனின் எண்ணத்தில் மண் விழுந்தாற் போல "எடப்பாடி" முதல்வர் பதவியில் அமர்த்தப்பட்டார். ஆனால் எடப்பாடிக்கு ஆதரவளித்த ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மிரட்டப்பட்டு எடப்பாடியை முதல்வராக்க சம்மதிக்க வைக்கப்பட்டதாகவும்,  சட்டசபையைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கோரிக்கை வைத்தார் Ops . ஒத்து ஊதுவதற்க்கு புகழ்பெற்ற திமுக ஆதரவோடு Ops வைத்த நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார். 

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நாளில் முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தமுடியாதபடி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் அமளியில் (சபாநாயகர் தனபாலை கீழே தள்ளிவிட்டு,  சபாநாயகரின் இருக்கையில் அமர்ந்து குக செல்வம் அடாவடியில் ) ஈடுபட்டதன் விளைவாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை சட்டசபையை விட்டு வெளியேற்றிவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்திக் காட்டினார் சபாநாயகர் தனபால்! இப்படி கடும் மோதலில் எடுக்கப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் "எடப்பாடி கே பழனிசாமி வெற்றி பெற்று தனது முதல்வர் இருக்கையைத் தக்க வைத்துக் கொண்டார்.



தொடரும்............

பாஜக மீது சரமாரி புகார் வாசித்த கர்நாடக முதல்வர் வேட்பாளர்!

பாஜக மீது சரமாரி புகார் வாசித்த கர்நாடக முதல்வர் வேட்பாளர்!
கர்நாடக சட்டசபைக்கு வருகிற 12-ந் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தல் நெருங்குவதால் கர்நாடகத்தில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து உள்ளது. தேசிய கட்சிகளின் தலைவர்கள் கர்நாடகத்தில் முற்றுகையிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசியல் கட்சி தலைவர்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் முதல்- மந்திரி சித்தராமையா பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மீது அடுக்கடுக் கான குற்றச்சாட்டுகளை நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் பட்டியலிட்டு உள்ளார்.
இந்த தேர்தலிலும் நரேந்திர மோடி அரசின் பொய்யான வாக்குறுதிகள் என்ற தலைப்பில் அவர் குற்றச்சாட்டுகளை பதிவிட்டு உள்ளார். வரிசை எண் குறிப்பிட்டு அவர் வெளியிட்டு உள்ள குற்றச்சாட்டுகள் விவரம் வருமாறு:-
1. கருப்பு பணம் வெள்ளையாக மாறவில்லை.
2. மக்கள் தங்கள் வங்கி கணக்கில் ரூ.15 லட்சத்தை பெறவில்லை.
3. உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் மக்கள் வைத்திருந்த ரூபாய்க்கு மதிப்பில்லாமல் போய்விட்டது. மக்கள் ஏ.டி.எம். மையங்களிலும், வங்கிகளிலும் வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர்.

4. வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. வேலையில்லா பட்டதாரிகள் ‘பக்கோடா’ விற்கும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

5. சர்வதேச அளவில் கச்சா எண்ணையின் விலை குறைந்து வரும் நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது.
6. ஊழலற்ற அரசு அமைப்போம் என்று உத்தரவாதம் அளித்தார்கள். ஆனால் வங்கிகள் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு முதல்-மந்திரி சித்தராமையா குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டார். மேலும் மோடி அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்றும், மதநல்லிணக்கத்துக்கு எதிரான பா.ஜனதா, சந்தர்ப்பவாத ஜனதா தளம்(எஸ்) கட்சிகளை தோற்கடிப்பதற்காகவே இந்த தேர்தலில் காங்கிரஸ் போராடுகிறது என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் சித்தராமையா தெரிவித்து உள்ளார்.

ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்! திருநாவுக்கரசர் ஆரூடம்.

ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்! திருநாவுக்கரசர் ஆரூடம்.
நடப்பாண்டில் கர்நாடகம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிதான் வெற்றி பெறும் என அக்கட்சியின் தமிழகத் தலைவர் சு.திருநாவுக்கரசர் நம்பிக்கை தெரிவித்தார்.மத்திய பாஜக ஆட்சியின் செயல்பாடுகளைக் கண்டித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் "ஜன் ஆக்ரோஷ்' என்ற பெயரில் தில்லி ராம்லீலா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, தங்கபாலு குளச்சல் தொகுதி எம்எல்ஏ பிரின்ஸ், நாங்குனேரி தொகுதி எம்எல்ஏ வசந்தகுமார், தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி.,எஸ்.டி, பிரிவு தலைவர் செல்வப் பெருந்தகை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து சு.திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீது மக்கள் மத்தியில் உள்ள ஏமாற்றத்தையும், கோபத்தையும் பிரதிபலிக்கும் வகையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நாடு முழுவதும் இருந்து ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். தமிழக காங்கிரஸ் சார்பில் 2000 தொண்டர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் ராகுல் காந்தியின் உரை மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. அவர் தெரிவித்ததைப் போல பாஜகவின் வீழ்ச்சி ஆரம்பமாகிவிட்டது.  கர்நாடகம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சிதான் வெற்றி பெறும். நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் மகத்தான வெற்றி பெறும். ராகுல் காந்தி நிச்சயம் பிரதமராவார் என்றார் அவர். நாங்குனேரித் தொகுதி எம்எல்ஏ எச்.வசந்தகுமார் கூறுகையில், "மோடி தலைமையிலான பாஜகவின் ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏராளமானோர் உணர்வு பூர்வமாக இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ராகுல் காந்திதான் அடுத்த பிரதமர்' என்றார். 

குளச்சல் தொகுதி எம்எல்ஏ பிரின்ஸ் கூறுகையில், "ஜாதி, மத, இன உணர்வுகளைத் தூண்டி மிக மோசமான முறையில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. பாஜக ஆட்சியால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாஜக மீது மக்களுக்குள்ள வெறுப்பையே இந்தக் கூட்டம் பிரதிபலிக்கிறது' என்றார்.

 

Sunday, April 29, 2018

பாஜக காங்கிரஸ் கூட்டாட்சி?

பாஜக காங்கிரஸ் கூட்டாட்சி?
மிசோரம் மாநிலத்தின் தென்மேற்கு பகுதியில் சக்மா பூர்வகுடிகள் அதிகமாக வாழும் பகுதி சக்மா மாவட்ட தன்னாட்சி கவுன்சிலாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. சக்மா மாவட்ட தன்னாட்சி கவுன்சிலில் மொத்தம் உள்ள 20 இடங்களில் 19 இடங்களுக்கு நடந்த தேர்தலில் மிசோ தேசிய முன்னணிக்கு 8 இடங்களும், காங்கிரசுக்கு 6 இடங்களும், பாரதீய ஜனதாவுக்கு 5 இடங்களும் கிடைத்தன.எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காததால், மாவட்ட கவுன்சில் நிர்வாகத்தை மேற்கொள்ள பாரதீய ஜனதாவும், காங்கிரசும் சேர்ந்து ஐக்கிய சட்டசபை கட்சி (யு.எல்.பி.) என்ற பெயரில் கூட்டணி அமைத்து உள்ளன. அதன்படி, இந்த கூட்டணியின் தலைவராக பாரதீய ஜனதாவைச் சேர்ந்த சாந்தி ஜிபான் சக்மாவும், துணைத் தலைவராக புத்த லீலா சக்மாவும் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர். சாந்தி ஜிபான் சக்மா, மாவட்ட கவுன்சிலின் தலைவர் ஆகிறார்.தேசிய அளவிலும், பல்வேறு மாநிலங்களிலும் பாரதீய ஜனதாவும், காங்கிரசும் எதிர் எதிர் அணியில் இருந்தாலும், சக்மா மாவட்ட கவுன்சில் நிர்வாகத்தை கைப்பற்றுவதற்காக கைகோர்த்து உள்ளன.

இதுபற்றி மிசோரம் மாநில விளையாட்டு துறை மந்திரியும், காங்கிரஸ் தலைவருமான ஜோடின்ட்லங்கா கூறுகையில், இந்த கூட்டணியால் டெல்லி அரசியலிலோ அல்லது வருகிற மிசோரம் சட்டசபை தேர்தலிலோ எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்தார்.

இந்தியா பாகிஸ்தான் இராணுவங்களின் கூட்டுப் பயிற்சி!

இந்தியா பாகிஸ்தான் இராணுவங்களின் கூட்டுப் பயிற்சி!
எஸ்.சி.ஓ. என்னும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு 2001-ம் ஆண்டு ரஷியா, சீனா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் அதிபர்களால் உருவாக்கப்பட்டது.இந்த அமைப்பில் 2005-ம் ஆண்டு, இந்தியாவும், பாகிஸ்தானும் பார்வையாளர்களாக சேர்த்துக்கொள்ளப்பட்டன.இவ்விரு நாடுகளும் கடந்த ஆண்டு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பினர்களாக சேர்த்துக்கொள்ளப்பட்டன.நேட்டோ அமைப்புக்கு சமமாக இந்த அமைப்பு கருதப்படுகிறது. இந்த அமைப்பின் உறுப்பு நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையாக கூட்டாக ராணுவ பயிற்சியில் ஈடுபட முடிவு செய்யப்பட்டு உள்ளது.இந்த பயிற்சியின் முக்கிய நோக்கம், ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் இடையே பயங்கரவாத தடுப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதாகும்.இந்த ராணுவ பயிற்சியில் இந்தியாவும், பாகிஸ்தானும் இடம் பெறுகின்றன. இந்தியா இடம் பெறுவதை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் கடந்த வாரம் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ராணுவ மந்திரிகள் கூட்டத்தில் பங்கேற்க பீஜிங் சென்றிருந்தபோது, உறுதி செய்து விட்டார். இந்த கூட்டு ராணுவ பயிற்சி, ரஷியாவில் உள்ள உரல் மலைப்பகுதியில் செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது.ஐ.நா. அமைதிப்படையில் இந்தியாவும், சீனாவும் ஒன்றாக பல முறை இடம் பெற்று இருந்தபோதும், கூட்டு ராணுவ பயிற்சியில் இதுவரை ஈடுபட்டது இல்லை.சுதந்திரத்துக்கு பின்னர் இப்போதுதான் எதிர் எதிர் துருவங்களில் உள்ள இந்தியாவும், பாகிஸ்தானும் கூட்டு ராணுவ பயிற்சியில் பன்னாட்டுகளுடன் பங்கேற்க போவது குறிப்பிடத்தக்கது.

அமைச்சரவை மாற்றம்! புதியவர்களுக்கு வாய்ப்பு!

அமைச்சரவை மாற்றம்! புதியவர்களுக்கு வாய்ப்பு!

ஜம்மு-காஷ்மீர் மாநில அமைச்சரவை திங்கள்கிழமை (ஏப்.30) மாற்றியமைக்கப்பட உள்ளது. இதில், பாஜக சார்பில் புதிய அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 ஜம்மு-காஷ்மீரில் முதல்வர் மெஹபூபா முஃப்தி தலைமையில் மக்கள் ஜனநாயக கட்சி - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில அமைச்சரவையில் பாஜக சார்பில் இடம்பெற்றிருந்த லால் சிங், சந்தர் பிரகாஷ் கங்கா ஆகியோர், கதுவா சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு ஆதரவாக அண்மையில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்றதற்கு எதிர்ப்பு எழுந்ததால் பதவி விலகினர்.

 இதைத் தொடர்ந்து, மாநில அமைச்சரவை திங்கள்கிழமை மாற்றியமைக்கப்படவுள்ளது. அதில், பாஜக சார்பில் புது முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்றும், ஏற்கெனவே இணையமைச்சர்களாக உள்ளவர்களுக்கு கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

 கோடை காலத்தையொட்டி, மாநில தலைமைச் செயலகம் ஸ்ரீநகரில் இருந்து செயல்படவிருக்கிறது. இதன் காரணமாக, ஜம்முவில் உள்ள தலைமைச் செயலகமும், ஆளுநர் இல்லமும் கடந்த வெள்ளிக்கிழமை மூடப்பட்டன. எனவே, ஆளுநர் மாளிகைக்கு பதிலாக ஜம்முவில் உள்ள கூட்ட அரங்கில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை, தலைமைச் செயலர் பி.பி.வியாஸ் மேற்கொண்டு வருகிறார்.

"பெளத்த" மதத்தைத் தழுவிய குஜராத் மக்கள்!

"பெளத்த" மதத்தைத் தழுவிய குஜராத் மக்கள்!
குஜராத் மாநிலம், உனா பகுதியில் பசு பாதுகாவலர்களால் கடுமையாகத் தாக்குதலுக்குள்ளான தலித் குடும்பத்தினர் உள்பட 450 பேர் புத்த மதத்தை ஞாயிற்றுக்கிழமை தழுவினர். மதரீதியாகவும், ஜாதிரீதியாகவும் தாங்கள் பாகுபடுத்தப்படுவதால் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

குஜராத்தின் உனா பகுதியில் உள்ள கிராமத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூலை மாதம் இறந்த பசுவின் தோலை உரித்ததாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை பசு பாதுகாவலர்கள் எனக் கூறிக்கொள்ளும் சிலர் கட்டி வைத்து கடுமையாக அடித்தனர். மேலும், இந்த கொடூரத் தாக்குதலை விடியோவில் பதிவு செய்தும் வெளியிட்டனர். இந்த விவகாரம் அப்போது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அவர்கள் நால்வரும் தங்கள் சுற்றத்துடன் புத்த மதத்தை தழுவ முடிவு செய்தனர். இதற்காக குஜராத்தின் மோட்டா சமதியாலா கிராமத்தில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் அவர்கள் உள்பட மொத்தம் 450 தலித்துகள் மதம் மாறினர். இது தொடர்பாக தாக்குதலுக்குள்ளான இளைஞர்களில் ஒருவர் கூறியதாவது:

எங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு, உரிய வேலை தருவதாகவும், விவசாயம் செய்வதற்கு சிறிதளவு நிலம் தருவதாகவும் குஜராத் மாநில அரசு சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இப்போது வரை எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.

மேலும், எங்களை முஸ்லிம் என்று சமூகத்தில் சிலர் சித்திரிக்கின்றனர். அதைத் தாண்டி ஜாதி ரீதியாகவும் பாகுபாடு காட்டுகின்றனர். இதன் காரணமாகவே, புத்த மதத்தைத் தழுவ முடிவு செய்தோம் என்றார் அவர்.

சிறப்புக் கட்டுரை: பதற்றமடைந்திருக்கும் தமிழகக் கல்விச் சூழல்?

சிறப்புக் கட்டுரை: பதற்றமடைந்திருக்கும் தமிழகக் கல்விச் சூழல்?


தேவிபாரதி

அவரது பதினாறு வயது மகன் இந்த ஆண்டு நடந்த பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதி முடித்திருக்கிறான். அரசுப் பள்ளி மாணவன். இப்போது கோடை விடுமுறை தொடங்கியிருக்கிறது, கடந்த மூன்று நான்கு வாரங்களாக இரண்டு வாரங்களாக நீடித்துவந்த பதற்றத்திலிருந்து விடுபட்டிருக்கும் அந்த மாணவனுக்கு இப்போது கிரிக்கெட் விளையாட நேரம் கிடைத்திருக்கிறது, நண்பர்களைச் சந்திப்பதற்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கும் நீடித்துவந்த தடை நீங்கியிருக்கிறது, தேநீர்க் கடை வைத்திருப்பவர்களான அவனது பெற்றோர் கடந்த இரண்டு மூன்று மாதங்களாக அவற்றுக்கெல்லாம் தடைவிதித்திருந்தார்கள். கேபிள் இணைப்பைத் துண்டித்திருந்தார்கள், தாயோ, தந்தையோ யாராவது ஒருவர் பிழைப்பைக் கெடுத்துக்கொண்டு அவனைத் தம் கண்காணிப்பில் வைத்திருந்தார்கள். வரவிருக்கும் தேர்வு முடிவுதான் அந்தக் குடும்பத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். அவன் தங்களைப் போல் டீக்கடை வைத்துப் பிழைக்காமல் நல்ல விதமாக வாழ வேண்டும், அவனை மருத்துவராகவோ பொறியாளராகவோ ஆக்கிப் பார்க்க வேண்டும் என்பது அவர்களது கனவு. இரண்டாண்டுகளுக்கு முன்பு அவர்களது மகன் எட்டாம் வகுப்பைக் கடந்தபோது தோன்றிய கனவு அது. அப்போதுதான் அவர்கள் தங்கள் மகனின் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கத் தொடங்கியிருந்தார்கள்.

யோசிப்பதற்கு அவர்களிடம் அதிகம் ஒன்றுமில்லை. ஏறத்தாழப் பதினெட்டு வருடங்களுக்கு முன் பத்தாம் வகுப்புத் தேர்வில் தோல்வியடைந்திருந்த அந்தத் தந்தை வாழ்வாதாரத்திற்காகத் தான் வசித்துவரும் அந்தச் சிறிய நகரத்தில் டீக்கடை ஒன்றைத் தொடங்கியபோது வாழ்க்கை அவ்வளவு சவாலானதாகத் தென்படவில்லை. எட்டாம் வகுப்புப் படித்த தன் உறவுக்காரப் பெண் ஒருத்தியை எளிய முறையில் கல்யாணம் செய்துகொள்ளவும் ஒரு படுக்கையறையும் சமையல்கட்டும் சிறு ஆசாரமும் கொண்ட ஓட்டு வீடு ஒன்றை வாடகைக்குப் பிடித்து அதில் குடியேறவும் இரண்டு குழந்தைகளைப் பெற்று வளர்க்கவும் அந்த தேநீர்க் கடை வருவாய் போதுமானதாக இருந்தது. குழந்தைகளின் எதிர்காலம் குறித்த பெரிய கவலைகள் எதுவும் அப்போது அவருக்கு உருவாகியிருக்கவில்லை. ஆனால் கடந்த பதினாந்தாண்டுகளில் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் உருவான தனியார் பள்ளிகள் கல்வி குறித்து ஏற்படுத்திய கற்பனைகளும் கனவுகளும் பேராசைகளும் பதற்றங்களும் அவரைப் பீடிக்கத் தொடங்கின.

தன் குழந்தைகளை ஒரு மருத்துவராகவோ பொறியாளராகவோ ஆக்கிப் பார்க்க வேண்டுமென்ற கனவு அவரைப் பீடிக்கத் தொடங்கியதும் அவர் கவலைகளில் மூழ்கத் தொடங்கினார். அரசுப் பள்ளிகள் பற்றிய எதிர்மறையான கருத்துக்கள் அவரைப் பதற்றமடையச் செய்தன. கூடவே நீட் தேர்வு பற்றிய அச்சங்கள்.

இப்போது அவர் வேறுவிதமாக யோசிக்கத் தொடங்கியிருக்கிறார். தனது மகனைத் தனியார் பள்ளியொன்றில் சேர்ப்பதற்கான முயற்சிகளைப் பற்றி யோசிக்கிறார். பத்தாம் வகுப்புத் தேர்வில் 500க்கு 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுவிட்டால் தனியார் பள்ளிகளில் இடம் கிடைக்கும். கட்டணத்தைக் குறைத்துக்கொண்டுவிடுவார்கள். விடுதிக் கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும். விடுதிக் கட்டணம் ஐம்பதாயிரத்திலிருந்து எழுபத்தைந்தாயிரம் வரை, மற்ற செலவுகளைக் கணக்கிட்டால் ஏறத்தாழ ஒரு லட்சம். பனிரெண்டாம் வகுப்பு முடிப்பதற்கு இரண்டு லட்சம் வரை தேவைப்படும். வீட்டிலிருந்து பள்ளிக்கு வருவதாக இருந்தால் வேன், பஸ் கட்டணம் செலுத்த வேண்டும். கணக்குப் போட்டுப் பார்த்தால் எல்லாம் சரியாகவே இருக்கும். தேநீர்க் கடை நடத்தும் அவருக்கு அது பெரிய தொகை. அவர்கள் தங்கள் அன்றாட வாழ்வின் தேவைகளைக் குறைத்துக்கொள்ள நேரிடும்.

அதனால் என்ன, மகன் தரமான கல்வியைப் பெறுவதற்கு அந்தச் சுமையை ஏற்கத்தான் வேண்டும். இல்லாவிட்டால் இரண்டாண்டுகளுக்குப் பிறகு அவனால் நீட் தேர்வில் பங்கேற்று மருத்துவப்படிப்புக்குப் போக முடியாது. மருத்துவம், பொறியியல், மென்பொருள் சார்ந்த துறைகளில் வேலைக்குச் சேர வேண்டுமானால் பிள்ளைகளுக்கு ஆங்கில அறிவு அவசியம். தனியார் பள்ளிகள் வழியாகவே ஆங்கில அறிவைப் பெற முடியும். ஆங்கிலத்தில் படிக்க, பேச, எழுதத் தெரியாவிட்டால் வாழ்க்கை அவ்வளவுதான். சிபிஎஸ்சி பள்ளி என்றால் தரமான கல்விக்கு நூறு சதவீத உத்தரவாதமுண்டு.



கற்பிதங்களும் கனவுகளும்

இதுபோன்ற கற்பனைகள் கீழ் மத்திய தர வர்க்கக் குடும்பங்களில் அவற்றின் உயிராகக் குடியேறியிருக்கின்றன. எந்த ஆதாரமுமில்லாமல் பரப்பப்பட்டிருக்கும் இந்தக் கற்பனைகளுக்குத் தமிழகத்தின் கீழ் மத்தியத்தர வர்க்கக் குடும்பங்களில் பல தங்கள் வாழ்வை ஒப்புக்கொடுத்திருக்கின்றன. எல்கேஜி படிக்கத் தொடங்கும்போதே குழந்தைகளின் மீது இந்தக் கனவு திணிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட சிறைக்கூடங்களாகிவிட்ட பள்ளிகளிலிருந்து வீடு திரும்பும்போது பெற்றோர்கள் பிரம்புகளுடன் காத்திருக்கிறார்கள். கொஞ்சம் காபி, ஹார்லிக்ஸ், அல்லது ஜுஸ், பிஸ்கட் அல்லது ஏதாவதொரு கேக் சாப்பிட்டுவிட்டு அவர்கள் ஹோம் வொர்க்கைப் பார்க்க வேண்டும். தாய் அல்லது தந்தையின் மேற்பார்வையில் கண்கள் செருகும்வரை புத்தகத்தை விரித்து வைத்துக்கொண்டிருக்க வேண்டும். விளையாடுவதற்கோ தாத்தா பாட்டிகளின் மடியில் உட்கார்ந்து கதை கேட்டுக்கொண்டு கிடக்கவோ இப்போது அனுமதியில்லை. பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு நீட் முதலான தகுதித் தேர்வுகளை எதிர்கொள்வதற்காக அவர்கள் தங்கள் விளையாட்டுக்களையும் பொழுதுபோக்குகளையும் குழந்தைமையையும் இழக்க வேண்டும்.

கல்வியில் கடந்த கால் நூற்றாண்டுகளுக்கும் மேல் நிலவிவரும் ஏற்றத்தாழ்வைக் கற்பனையான முறையில் கடந்து செல்வதற்கு முற்பட்டிருக்கும் மத்திய தர வர்க்க, கீழ் மத்திய தர வர்க்கக் குடும்பங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் மன அழுத்தம் குடும்ப அமைப்பையே சீர்குலைக்கும் அளவுக்குப் போய்க்கொண்டிருக்கிறது. குடும்பம் இப்போது பேராசைகளால் சூழப்பட்ட ஒன்றாக, சுயநலத்தால் பீடிக்கப்பட்ட அமைப்பாக மாறிக்கொண்டிருக்கிறது.

இந்தியக் குழந்தைகளைப் போல பதற்றத்திற்கான குழந்தைகள் உலகில் வேறு எங்குமே இல்லை என இதுபற்றி கல்வியாளர் வசந்திதேவி சொன்னது நினைவுக்கு வருகிறது. கல்வியில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் முற்றாக அகற்றப்பட வேண்டும் என்னும் கல்வியாளர்களின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்கவில்லை. கல்வியாளர்களின் வற்புறுத்தலை ஏற்று சமச்சீர் கல்வி முறை நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும்போதிலும் தனியார் ஆங்கிலப் பள்ளிகள் தந்திரமான முறையில் ஏற்றத்தாழ்வைத் திணித்துக்கொண்டிருக்கிறன. பல தனியார் பள்ளிகள் தமக்கான நிழல் பாடத்திட்டங்களை உருவாக்கிக்கொண்டுள்ளன. கல்வி உரிமைச் சட்டம் பெயரளவுக்குக்கூட நடைமுறைப்படுத்தப்படுவதாகத் தெரியவில்லை. இருபதாண்டுகளுக்கு முன் நடைமுறைப்படுத்தப்பட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் தன் நோக்கங்களை நிறைவேற்ற முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறது.

அரசு, மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் இயங்கும் தொடக்கக் கல்வி முறையில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் மாற்றங்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை. அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் கல்வித்தரம் குறிப்பிட்டுச் சொல்லும்படி மேம்படவில்லை. இதன் காரணமாக அரசு, தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் மீதான மக்களின் நம்பிக்கை வேகமாகச் சரிந்துகொண்டிருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் மாணவர் பற்றாக்குறையால் மூடப்படும் தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. இது விரைவிலேயே உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் இருப்புக்குச் சவாலாக உருவாகும்.

நீட் தந்த நிர்ப்பந்தம்

நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு அரசு அவசரஅவசரமாக விழித்துக்கொண்டிருக்கிறது. பாடத்திட்டத்தை மாற்றுவதற்கும் கற்றல், கற்பித்தல் முறைகளை மேம்படுத்துவதற்கும் தமிழகக் கல்வித்துறை பல அதிரடி முடிவுகளை எடுத்து நடைமுறைப்படுத்தத் தொடங்கியிருக்கிறது. நீட் முதலான எல்லாவிதமான போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்வதற்கு மாணவர்களைத் தயார்படுத்துவதாகச் சொல்லிக்கொண்டு கல்வித்துறை எடுத்திருக்கும் சில முடிவுகள் மாணவர்களின் பதற்றத்தை அதிகரிக்கும் நடைமுறைகளாகவே மாறிக்கொண்டிருக்கின்றன.

பத்து, பன்னிரெண்ணடாம் வகுப்புத் தேர்வுகளைப் போலவே பதினொன்றாம் வகுப்புக்கான தேர்வுகளும் பொதுத்தேர்வுகளாக மாற்றப்பட்டிருப்பது ஒரு உதாரணம். இது உண்மையில் தனியார் பள்ளிகளின் தந்திரங்களுக்கு எதிரான நடவடிக்கை என்பதில் சந்தேகமில்லை. பல தனியார் பள்ளிகள் பதினொன்றாம் வகுப்புப் பாடங்களின் மீது தேவையான அக்கறை செலுத்தாமல் நேரடியாகப் பன்னிரெண்டாம் வகுப்புக்கான பாடங்களில் கவனத்தைக் குவித்துத் தேர்ச்சி விழுக்காட்டை உயர்த்திக்காட்டுவததில் வெற்றி பெற்றுவந்தன. கல்வித் துறையின் தற்போதைய நடவடிக்கை அதற்குத் தடையாக இருக்கும். அதைவிட முக்கியமானது தேர்வு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம்.



இந்த ஆண்டு நடைபெற்ற 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வில் பல பாடங்களின் கேள்வித்தாள்கள் கடினமானவையாக இருந்ததாகத் தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். பாடப் புத்தகத்தில் இடம்பெற்றிருந்த கேள்விகளைத் தவிர அவற்றில் இடம்பெற்றிராத கேள்விகள் பலவும் இடம் பெற்றிருந்தன. மாணவர்களின் பொது அறிவைச் சோதிக்கும் கேள்விகள் அதிகமாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. பெரும்பாலான கேள்விகள் பாடப்புத்தகங்களின் உள் பகுதிகளிலிருந்து கேட்கப்பட்டிருந்ததாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

உண்மையில் இந்தக் குற்றச்சாட்டு மனப்பாடக் கல்வியின் மீதான குற்றச்சாட்டு. அது மாற்றப்பட வேண்டியது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பதற்றமடைந்திருக்கும் கல்வித் துறை ஒரே நாளில் மாற்றத்தை ஏற்படுத்த முயன்றிருக்கிறது. ஒன்பதாண்டுகளாக ஒரே விதமான மனப்பாடக் கல்விக்குப் பழக்கப்படுத்தப்பட்டு வந்த மாணவர்களை சிபிஎஸ்சிக்கு நிகரான கல்விமுறைக்கு மாற்ற முனைந்திருக்கும் கல்வித் துறையின் பேராசையின் விளைவே இது.

கல்வியாளர்கள் வலியுறுத்திவரும் பொதுப்பள்ளி முறை போன்ற கல்வியில் சமத்துவத்துவத்தை உருவாக்கும் முயற்சியைக் கைவிட்டுவிட்டுச் சில பத்தாண்டுகளாகவே கல்விக் கொள்ளையில் மூழ்கித் திளைத்திருக்கும் தனியார் பள்ளிகளுடன், அடைப்படையான கட்டமைப்பு வசதிகள்கூடப் பூர்த்திசெய்யப்படாத அரசுப் பள்ளி மாணவர்களை சமமற்ற போட்டி ஒன்றுக்குள் திணிக்கும் முயற்சியாகவே இதைக் கருத வேண்டியிருக்கிறது. உண்மையைச் சொல்லப் போனால் தமிழகக் கல்வித் துறை தனியார் கல்வி நிறுவனங்களின் அடையாளங்களை அரசுப் பள்ளி மாணவர்களின் மீது திணிக்க முயன்றுவருகிறது.

இந்த முயற்சி மாணவர்களின் மன அழுத்தத்தை அதிகரிப்பதோடு தனியார் பள்ளிகளின் பெருக்கத்திற்கே வழி வகுக்கும்.

கல்வியாளர்களும் சமூக ஆர்வலர்களும் இதுபற்றிய விவாதங்களை முன்னெடுப்பதும் அரசின் கல்விக் கொள்கையைக் கேள்விக்குள்ளாக்குவதும் தனியார் பள்ளிகளின் கல்விச் சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான வழிமுறைகளைப் பற்றி யோசிப்பதும் உடனடித் தேவையாகியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். கட்டுரை வெளியீடு Minnambalam.com

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள் எழுதிவரும் தேவிபாரதி, மார்க்சிய, மார்க்சிய லெனினிய இயக்கங்களில் சிறிது காலம் செயல்பட்டவர். 1994இல் இளம் நாடகஆசிரியருக்கான மத்திய சங்கீத நாடக அகாடமியின் பரிசு பெற்றார். இவரது சிறுகதைகளில் சில ஆங்கிலத்திலும் இந்தி, மலையாளம் உள்ளிட்ட சில இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘வீடென்ப’ என்னும் தலைப்பிலான இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட பத்துச் சிறுகதைகள் என். கல்யாணராமன் மொழிபெயர்ப்பில் Horper Perinial வெளியீடாக Farewell Mahatma என்னும் தலைப்பில் வெளிவந்தது. காலச்சுவடின் பொறுப்பாசிரியராக ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். மின்னஞ்சல் முகவரி: devibharathi@gmail.com

டெல்டா பகுதிகளில் CRPF படை குவிப்பு? பின்னனி?

டெல்டா பகுதிகளில் CRPF படை குவிப்பு? பின்னனி?


தமிழக அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் டெல்டா மாவட்டங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் போலீஸ் படையினர் திடீரென குவிக்கப்பட்டுள்ளனர். ஹைட்ரோ கார்பன் பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், நாகப்பட்டிணம்,புதுக்கோட்டை ஆகிய இடங்களில் மீத்தேன், கெயில் எரிவாயு குழாய் பதிப்பு போன்ற மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த திட்டங்களுக்கு அங்குள்ள விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், துணை ராணுவம் என்று அழைக்கப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சுமார் 2 ஆயிரம் பேர் டெல்டா மாவட்டங்களுக்கு திடீரென வரவழைக்கப்பட்டு, ஆங்காங்கே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான மத்திய போலீஸ் படையினர் தங்கியுள்ளனர்.
இதுகுறித்து தமிழக காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘மத்திய போலீஸ் படை எதற்காக வந்திருக்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியாது. நாங்கள் அவர்களை அழைக்கவில்லை. அவர்கள் எங்களிடம் எந்த உதவியும் இதுவரை கேட்கவில்லை’ என்றனர்.
இதுகுறித்து மத்திய உளவுத்துறையை சேர்ந்த ஒருவர் கூறுகையில், ‘டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரொ கார்பன் எடுக்க புதிய எண்ணெய் கிணறுகள் தோண்டுவதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்து விட்டது. அந்த பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இதற்காக வடமாநிலங்களில் இருந்து அதிகாரிகளும், பெரிய அளவிளான இயந்திரங்களும் வரவழைக்கப்பட உள்ளன.
இந்த நேரத்தில் கட்டாயம் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெறும். இதற்காக கூடுதல் பாதுகாப்பு தேவைப்படுகிறது. எனவே, தமிழக போலீஸாரின் பாதுகாப்பை மட்டும் நம்பியிருக்காமல் மத்திய போலீஸ் படை பாதுகாப்பும் இருந்தால் கூடுதல் பலமாக இருக்கும் என்பதால்தான் மத்திய போலீஸ் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் ஓஎன்ஜிசிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தியபோது, திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி மற்றும் கூத்தாநல்லூர் லெட்சுமாங்குடியில் தமிழக போலீஸாருடன் இணைந்து மத்திய போலீஸ் படையினர் கொடி அணிவகுப்பை நடத்தியுள்ளனர்.
மத்திய போலீஸ் படையின் டிஎஸ்பி இளம்பரிதி தலைமையில், ஆய்வாளர் சுபாஷ் முன்னிலையில் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. ஆனால் தற்போது கூடுதலாக மத்திய போலீஸார் குவிக்கப்பட்டிருப்பது தமிழக போலீஸாருக்கு தெரிந்திருக்குமா என்பது எனக்கு தெரியவில்லை” என்றார்.

காவிரி மட்டுமல்ல! பலவற்றிலும் தமிழகத்திற்கு "திமுக" துரோகம் இழைத்தே வந்துள்ளது.

காவிரி மட்டுமல்ல! பலவற்றிலும் தமிழகத்திற்கு "திமுக" துரோகம் இழைத்தே வந்துள்ளது.


காவிரியில் தமிழக உரிமையை தாரை வார்த்து கொடுத்தவர் திமுக தலைவர் கருணாநிதி என்று முதல்வர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி அதிமுக சார்பில் திருவாரூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி பேசினார். 
அப்போது, காவிரி ஆற்றில் கர்நாடகா பல்வேறு அணைகளை கட்டியபோது கருணாநிதி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. காவிரி உரிமையை தாரை வார்த்து கொடுத்தவர் கருணாநிதி என்று குற்றம்சாட்டினார். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த திமுக காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்த மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் அப்போது அழுத்தம் கொடுத்து இருந்தால் காவிரி பிரச்னை தீர்க்கப்பட்டு இருக்கும். காவிரி இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடவும் திமுக நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினார்.  
நேரத்துக்கு தகுந்தற்போல் நிறத்தை மாற்றிக்கொள்ளும் கட்சி அதிமுக இல்லை. விவசாயிகள் நலனுக்காக துரும்பைக் கூட திமுக கிள்ளிப் போடவில்லை என்றும் இந்த ஆண்டு பயிர்க்கடனாக 8 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காவிரி பிரச்னையில் செய்த தவறுகளை மறைக்கவே ஸ்டாலின் நடைபயணம் மேற்கொள்கிறார். தமது அரசை தரக்குறைவாக விமர்சிக்கும் ஸ்டாலினுக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது என்று விமர்சித்தார். ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற ஸ்டாலின் கனவு ஒரு போதும் பலிக்காது என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
மேலும் நீர் வீணாகாமல் தடுப்பதற்காக தடுப்பணை கட்டுவதற்காக ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் எழுப்பப்பட்டு உள்ளது. காவிரிக்காக 80 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தவர் ஜெயலலிதா. ஜெயலலிதா பதவியேற்ற போதெல்லாம் காவிரிக்காக போராடினார் என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.  

கோடை விடுமுறை! அவசர வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் பட்டியல்!

கோடை விடுமுறை! அவசர வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் பட்டியல்!


சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நாளை முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், அவசர வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளின் பெயர் பட்டியலை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் வெளியிட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் ஆர்.சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கைகையில், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு நாளை ஞாயிற்றுக்கிழமை (ஏப் 30) முதல் ஜூன் 3-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் அவசர வழக்குகளை விசாரணை நடத்த நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் 29 முதல் மே 6-ஆம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்படும் அவசர வழக்குகளை நீதிபதிகள் வி.பாரதிதாசன், என்.சேஷசாயி, ஜி.ஜெயச்சந்திரன், எஸ்.ராமதிலகம், ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் விசாரணை நடத்துவார்கள். 
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்படும் அவசர வழக்குகளை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஏ.எம்.பஷீர் அகமது, ஆர்.தாரணி ஆகியோர் விசாரணை நடத்துவார்கள். 
மே 7 முதல் 13-ஆம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்படும் அவசர வழக்குகளை நீதிபதிகள் வி.பார்த்திபன், பி.டி.ஆதி கேசவலு, எஸ்.எம்.சுப்பிரமணியம், எஸ்.ராமதிலகம், ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் விசாரணை நடத்துவார்கள். 
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்படும் அவசர வழக்குகளை நீதிபதிகள் எம்.கோவிந்தராஜ், ஜி.ஆர்.சுவாமிநாதன், ஆர்.தாரணி, ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் விசாரணை நடத்துவார்கள். 

 

மே 14 முதல் 20-ஆம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்படும் அவசர வழக்குகளை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எம்.தண்டபாணி, சி.வி. கார்த்திகேயன், பி.ராஜமாணிக்கம், ஆர்.ஹேமலதா ஆகியோர் விசாரணை நடத்துவார்கள். 
மதுரை கிளையில் தொடரப்படும் அவசர வழக்குகளை நீதிபதிகள் எம்.சுந்தர், அனிதா சுமந்த், எம்.எஸ்.ரமேஷ் ஆகியோர் விசாரணை நடத்துவார்கள். 
மே 21 முதல் 27-ஆம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்படும் அவசர வழக்குகளை நீதிபதிகள் டி.ரவீந்திரன், பி.வேல்முருகன், வி.பவானி சுப்பராயன், பி.ராஜமாணிக்கம், ஆர்.ஹேமலதா ஆகியோர் விசாரணை நடத்துவார்கள். 
மதுரை கிளையில் தொடரப்படும் அவசர வழக்குகளை நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.சுரேஷ்குமார், டி.கிருஷ்ணவள்ளி ஆகியோர் விசாரணை நடத்துவார்கள். 
மே 28 முதல் ஜூன் 3-ஆம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்படும் அவசர வழக்குகளை நீதிபதிகள் எஸ்.பாஸ்கரன், அப்துல் குத்தூஸ், ஆர்.எம்.டி. டீக்காராமன், என்.சதீஷ்குமார், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் விசாரணை நடத்துவார்கள். 
மதுரை கிளையில் தொடரப்படும் அவசர வழக்குகளை நீதிபதிகள் எம்.வி.முரளிதரன், ஜெ.நிஷாபானு, வி.கிருஷ்ணவள்ளி ஆகியோர் விசாரணை நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Saturday, April 28, 2018

சிக்குவார்களா அதிகாரிகள்? 30 முக்கிய அதிகாரிகளிடம் சிபிஐ விசாரிக்க திட்டம்!

சிக்குவார்களா அதிகாரிகள்? 30 முக்கிய அதிகாரிகளிடம் சிபிஐ விசாரிக்க திட்டம்!


சென்னை: குட்கா ஊழல் வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டதால், வழக்கில் தொடர்புடைய 22 அதிகாரிகளுக்கு சிக்கல் எழுந்துள்ளது. நீதிமன்ற உத்தரவு அடுத்த வாரம் சிபிஐக்கு கிடைக்கும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். உத்தரவு வந்தவுடன் விசாரணை நடத்துவது குறித்து சிபிஐ தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.

சென்னை அடுத்த ரெட்ஹில்ஸ் பகுதியில் குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஆண்டுக்கு ₹300 கோடிக்கு தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்தது.மேலும் கம்ப்யூட்டரில் யாருக்கெல்லாம், எந்த தேதியில் லஞ்சம் கொடுக்கப்பட்டது என்ற பட்டியலும், அதில் விலாவாரியாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து அந்த கம்பெனியின் உரிமையாளர் மாதவராவ் மற்றும் நிர்வாகப் பிரிவு பெண் ஊழியர் ஒருவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.
குட்கா, பான்மசாலா விற்பனை செய்ய அமைச்சர், அப்போதைய சென்னை நகர போலீஸ் கமிஷனர்கள் 2 பேர், 2 இணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், உளவுத்துறை, சுகாதாரத்துறை, சுங்கத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 22 அதிகாரிகளுக்கு ஒவ்வொரு மாதமும் மாமூல் கொடுக்கப்பட்டு வந்தது. அதோடு, தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை நாட்களிலும் அதிகாரிகள் சிறப்பு மாமூல் வாங்கியுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதுமே தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்பட்டு வந்தது.இப்படி மாமூல் மட்டும் ₹44 கோடிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு அப்போதைய டிஜிபி அசோக்குமார் கடிதம் எழுதினார். ஆனால் ஜெயலலிதாவின் கவனத்துக்கே இந்த கடிதம் கொண்டு செல்லப்படவில்லை. அதற்கு மாறாக அசோக்குமாரை கட்டாயமாக ஓய்வு பெறும்படி உத்தரவிடப்பட்டது. அவரும் கட்டாய ஓய்வு பெற்றார்.
அதைத் தொடர்ந்து குட்கா விசாரணை குற்றச்சாட்டுக்கு உள்ளான டிஜிபி டி.கே.ராஜேந்திரனையே டிஜிபியாக ஜெயலலிதா நியமித்தார். குட்கா விவகாரம் பெரிதானதைத் தொடர்ந்து, இது குறித்து ராஜேந்திரனின் கட்டுப்பாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. இதனால், குட்கா முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்தச் சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து சிபிஐ அதிகாரிகள் கூறும்போது, ‘‘குட்கா ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பத்திரிகையில்தான் நாங்கள் பார்த்தோம். திங்கட்கிழமை அல்லது அடுத்த வாரத்துக்குள் நீதிமன்றத்தின் உத்தரவு சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு கிடைத்து விடும். அதன்பின், அந்த உத்தரவு டெல்லியில் உள்ள சிபிஐ இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த வழக்கில் டிஜிபி மீதே குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் விசாரிப்பார்களா? அல்லது வெளிமாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகள் விசாரிப்பார்களா? என்பது இப்போது உடனடியாக தெரியாது. இயக்குநர்தான் முடிவு எடுப்பார். அதன்பின்னர், லஞ்ச ஒழிப்புத்துறையில் குட்கா முறைகேடு குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கிற்கான முதல் தகவல் அறிக்கையை நாங்கள் பெற்று, தேவைப்பட்டால் வழக்கை மாற்றி அமைத்து விசாரணை நடத்துவோம். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் விசாரணை நடத்த முழு அளவில் தயாராக உள்ளோம். யார் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் விசாரிப்போம்’’ என்றார்.

கூடுதல் எஸ்.பி இலாகா மாற்றம்
லஞ்ச ஒழிப்புத்துறையில் குட்கா முறைகேடு குறித்து கூடுதல் எஸ்பி ராமசுப்பிரமணியம் விசாரணை நடத்தி வந்தார். ஆனால் திடீரென்று கடந்த வாரம் அவர் அதிரடியாக மாற்றப்பட்டு,

டம்மியான துறைக்கு தூக்கியடிக்கப்பட்டார். சென்னையில் டி.கே.ராஜேந்திரன் கமிஷனராக இருந்தபோது, மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனராக இருந்த வெங்கடாச்சலபதி, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றப்பட்டு, குட்கா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்




கோவை அருகே கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த குட்கா ஆலை கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ஒரு அமைச்சருக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தமிழகத்தில் போதை பாக்கு மற்றும் புகையிலை பொருட்களை விற்க சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டு தடை விதித்தது. ஆனாலும், தடையை மீறி வடமாநிலங்களில் இருந்து போதை பாக்கு, புகையிலை பொருட்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டுவரப்பட்டு, கள்ளச்சந்தையில் இரட்டிப்பு விலைக்கு விற்கப்பட்டன. சென்னை அருகே இயங்கி வந்த குட்கா ஆலை விவகாரத்தில் அமைச்சர், 2 டிஜிபிக்கள் உள்பட 22 அதிகாரிகளுக்கு மாமூல் கொடுக்கப்பட்டு, இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஊழல் விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே ஐந்தரை ஏக்கர் பரப்பளவில் 20 ஆயிரம் சதுரஅடியில் குட்கா மற்றும் ‘பான் மசாலா’ தயாரிக்கும் தொழிற்சாலை இயங்குவது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

இந்த ஆலைக்குள் நேற்று முன்தினம் இரவு கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி தலைமையில் போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்த முயன்றனர். ஆனால், இந்த ஆலையில் இருந்த இரு பிரதான கேட்கள் பூட்டப்பட்டிருந்தது. போலீசார், 15 அடி உயர மதில் சுவரில் ஏறி குதித்து அதிரடியாக உள்ளே நுழைந்தனர். அவர்கள் பிரதான வாயிலை திறந்துவிட்டனர். இதன்பிறகு, எஸ்.பி தலைமையில் போலீஸ் அதிகாரிகளின் ஜீப் உள்ளே சென்றது. அங்கு, குட்கா மற்றும் பான்மசாலா ெபாருட்கள் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சுமார் 15 டன்னுக்கும் மேல் போதைப் பாக்குகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், அந்தப் பகுதியில் போதைப் பொருட்களைப் பதுக்கி வைத்திருக்கலாம் என்றும் சந்தே கம் எழுந்ததால், சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. சுமார் 20 மணி நேரத்துக்கும் மேல் சோதனை நடைபெற்ற நிலையில், அப்பகுதிக்குள் நுழைய செய்தியாளர் கள் மற்றும் பொது மக்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கும், போலீஸார் எவ்வித தகவலையும் கூறவில்லை.

இங்கு தயாரிக்கப்படும் போதைப் பொருட்களை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்வதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுதொடர்பாகவும் போலீ ஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சோதனைக்குப் பின்னர் இந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை மற்றும் தடவியல் துறையினர் மூலம், அங்குள்ள பொருட்களை மதிப்பீடு செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து தனிப்படை போலீ ஸார் கூறியதாவது: டெல்லியைச் சேர்ந்த ஜெயின் என்பவருக்குச் சொந்தமான இந்த தோட்டம் சுமார் 5.50 ஏக்கர் பரப்பு கொண்டது. ஏறத்தாழ 40 ஆயிரம் சதுர அடி பரப்பில் கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டிடங்களைச் சுற்றிலும் 15 அடி உயரத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட் டுள்ளது.

குட்கா தயாரிக்கும் பணியில் உள்ளூர் ஆட்களை ஈடுபடுத்தாமல் ஒடிசா, பிஹார், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த பணியாளர்களைப் பயன்படுத்தியுள்ளனர். இந்த வடமாநிலத் தொழிலாளர்களுக்கு உணவு, தங்கும் வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

மேலும், அவர்களை வெளியில் விடாமலும், அக்கம்பக்கத்தினரு டன் பழக விடாமலும் தடுத்துள்ளனர். போதைப் பொருட்களைத் தயாரிப்பதற்குத் தேவையான மூலப் பொருட்களை இரவு நேரங்களில் ரகசியமாக லாரிகளில் கொண்டு வந்துள்ளனர். மேலும், தயாரிக்கப்பட்ட போதைப் பொருட்களை ரகசியமாக இரவு நேரத்தில் வெளியில் கொண்டுசென்றுள்ளனர். இங்கு போதைப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்குவதே அக்கம்பக்கத்தினருக்குத் தெரியவில்லை.

போதைப் பொருட்கள் தயாரிக்கும்போது துர்நாற்றம் வீசாமல் இருப்பதற்காக, வாசனைத் திரவியங்களையும் பயன்படுத்தியுள்ளனர். அங்கிருந்த 4 பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். பல ஆண்டுகளாக இந்த ஆலை செயல்பட்டு வருவதாகத் தெரிகிறது. எனினும், முழுமை யான விசாரணைக்குப் பின்னரே இந்த ஆலை எத்தனை ஆண்டு கள் செயல்படுகிறது, போதைப் பொருட்களைத் தயாரிப்பது யார், பயன்படுத்தும் இயந்திரங்கள் என்ன, இதன் பின்னணியில் யார் யார் உள்ளனர் என்பது போன்ற விவரங்கள் தெரியவரும். அதற்கு பிறகு மேல் நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு தனிப்படை போலீஸார் தெரிவித்தனர்.

காவிரி! அறிக்கை தாக்கல் செய்கிறது மத்திய அரசு?

காவிரி! அறிக்கை தாக்கல் செய்கிறது மத்திய அரசு?
புதுடெல்லி : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் வரைவு செயல் திட்டத்துக்கு பதிலாக, அதற்காக இதுவரை எடுக்கப்பட்ட  நடவடிக்கைகளின் விவரங்களை உச்ச நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில்,  மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மே 3ம் தேதிக்குள் வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. 

மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 6 வாரங்கள் அவகாசம் வழங்கியும் அதை செயல்படுத்தாமல், கடைசி நேரத்தில் ‘ஸ்கீம்’ என்ற  வார்த்தைக்கான விளக்கத்தை கேட்பது ஏன்? என மத்திய அரசுக்கு கண்டனமும் தெரிவித்தது. ஆனால், வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய கூடுதலாக 2  வாரங்கள் அவகாசம் அளிக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் நேற்்று முன்தினம் மத்திய அரசு திடீரென புதிய மனுவை தாக்கல் செய்தது. இதனால், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் அதிர்ச்சி அடைந்தன. 

பின்னர், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலின் அறிவுரைப்படி இந்த புதிய மனுவை அடுத்த சில மணி நேரங்களில் மத்திய அரசு  திரும்பப் பெற்றது. இந்நிலையில், வரைவு செயல் திட்டத்துக்கு பதிலாக மத்திய அரசு புதிய திட்டத்தை வகுத்துள்ளது. அதில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி  வரைவு செயல் திட்டத்தை தயாரிப்பதற்காக இதுவரை எடுத்துள்ள நடவடிகைகளின் விவரங்களை தொகுத்து, அதை மே 3ம் தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய  மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 
அப்போது, வரைவு செயல் திட்டத்தை தயாரிக்க உச்ச நீதிமன்றம் அளித்துள்ள காலக்கெடு போதாது என்றும், கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என்றும்  அன்றைய தினம் புதிய மனுவை தாக்கல் செய்யவும் திட்டமிட்டுள்ளது. இதனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்னையில் மத்திய அரசு மீண்டும்  அவகாசம் கேட்கப் போவது உறுதியாகியுள்ளது.

கர்நாடகாவில் தோற்றால் அடுத்த இலக்கு தமிழகம்?
கர்நாடக தேர்தலில் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜ இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு கட்சிகளையும் சேர்ந்த தலைவர்கள் மாநிலம் முழுவதும்  தீவிர பிரசாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் பாஜ தோற்கும் நிலை ஏற்பட்டால், அதன் அடுத்த இலக்கு தமிழகமாக தான் இருக்கும். தமிழகத்தின்  மிகப்பெரிய பிரச்னையாக இருப்பது காவிரி நீர் பங்கீடு விவகாரம்தான். அதனால், வலுவான காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதின் மூலம் தமிழக  மக்களின் மனதில் இடம் பிடித்து  காலூன்ற பாஜ முயற்சிக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். 
கர்நாடக தேர்தலை காரணமாக காட்டும்


வரைவு செயல் திட்டத்தை உருவாக்க இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய உள்ள மத்திய அரசு, மீண்டும்  கூடுதல் அவகாசம் கேட்பதற்கு கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை காரணமாக காட்டும் என கருதப்படுகிறது. கர்நாடகாவில் மே 12ம் தேதி ஒரே கட்டமாக  சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. பதிவான வாக்குகள் மே 15ம் தேதி எண்ணப்படுகின்றன. தமிழகம், கர்நாடகாவை பொருத்தவரையில் காவிரி பிரச்னை மிகவும்   உணர்ச்சிகரமானது. எனவே, தேர்தல் நேரத்தில் வரைவு செயல் திட்ட அறிக்கை தாக்கல் செய்வது குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால், திட்டத்தை தாக்கல் செய்ய  கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என மத்திய அரசு கேட்கும் என்று தெரிகிறது. 

தியா விமர்சனம்! கருவில் சிதைந்த சிசுவின் பழிவாங்கும் படலம்!

தியா விமர்சனம்! கருவில் சிதைந்த சிசுவின் பழிவாங்கும் படலம்!


பேய் கதைனா என்ன ?? பூமியில் பிறந்து ஆசைகள் நிறைவேறாமல் அகால மரணமடைந்தவர் பழி வாங்குவது , சொத்துக்காக கொலை செய்யப்பட்டவர் பழி வாங்குவது , காதல் தோல்வியில் மரணித்து பழி வாங்குவது , ஒரு பெண்ணை கற்பழித்து கொலை செய்து அந்த ஆவி பழி வாங்குவது …. இதெல்லாம் தானே நமக்கு தெரியும் ???

ஆனால் இயக்குனர் விஜய் வித்தியாசமா யோசிச்சிருக்கார்… அறியாத வயதில் ஒரு ஆணும் பெண்ணும் தவறு செய்ததில் அந்த கருவை வளர்க்கும் சூழ்நிலை இல்லாமல் அதை சிதைத்து, அந்த சிசு பழி வாங்கும் கதை தான் தியா …..

கருகலைத்து 5 வருடங்கள் கழித்து நாயகி சாய் பல்லவியும், நாயகன் நாக சவுரியாவும் திருமணம் செய்து கொள்கிறார்கள் . ஆனால் சாய் பல்லவி சிதைந்த அந்த கருவை அவள் கைவண்ணத்தில் ஓவியமாக்கி அதற்கு தியா என பெயர் சூட்டி அதனுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

சாய் பல்லவியின் நினைவில் தியாவாக வாழும் அந்தக் கரு தன் உயிரிழப்புக்கு காரணமான ஒவ்வொருவராகப் பழி வாங்குகிறது.

அடுத்தடுத்த கொலை, குடும்பத்தினரை அதிர்ச்சியாக்குகிறது. பிறகு, குடும்ப டாக்டரும் பலியாக, அதில் இருக்கும் சில ஒற்றுமைகளால் இதில் ஏதோ சிக்கல் இருப்பதை உணர்கிறார் சாய் பல்லவி. பிறகுதான் அந்த அமானுஷ்யத்தை தெரிந்துகொள்கிறார்

இப்படி இருக்க அடுத்தது நாக சவுரியா கொல்லப்படுவாரோ என்று பயப்படும் சாய் பல்லவி அவரை காப்பாற்ற முயற்சி செய்கிறார். ஆனால் இவரின் வித்தியாசமான நடவடிக்கையை நாக சவுரியா சைக்கியாரிஸ்ட்டிடம் அழைத்து செல்ல வைக்கிறது.அமானுஷ்யம் இருக்கிறது என்பதை மறுத்தாலும் கடைசி கட்டத்தில் தியா இருக்கிறாள் என நம்புகிறார் நாக சவுரியா.

தன் வயிற்றில் வளரும் கருவைக் கலைக்க குடும்பத்தினர் திட்டமிடும்போது பதைபதைப்பது, தன் கணவன் உயிரைக் காப்பாற்றத் துடிப்பது, முதல்முறை தனது மகள் இருப்பது தெரிந்து இனம்புரியாத உணர்வில் அழுவது, தியா தியா என்று அழைத்து குழந்தை இருப்பதை உணர்ந்து புன்னகைப்பது என சாய் பல்லவி நம்மில் ஒரு அதிர்வை உருவாக்கி தான் உள்ளார்.

க்ளைமேக்சில் விபத்தில் சாய் பல்லவி சிக்கி கொள்ள , அவர் ஆன்மா தன் கணவரை தியாவிடம் இருந்து காப்பாற்ற முன் வர , அந்த தாய் அந்த சிசுவின் முகத்தை முதல் முறையாக பார்க்க … அப்பப்பா மெய் சிலிர்க்கிறது …… இதில் ஒரு படி மேல் சென்று பேபி வெரோனிகாவின் சலனமில்லாத பார்வையால் நம்மை கட்டி போட்டு விடுகிறாள்…

கதையோ கற்பனையோ … ஒரு தாயின் உணர்வுகளை சரிவர கொண்டு வந்துள்ள இயக்குனருக்கு முதல் பாராட்டு. கருக்கலைப்பு செய்வது குற்றம் என்று தெரிந்தும் இன்றும் அது நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த நேரத்தில் இப்படி ஒரு அழுத்தமான படம் தேவை தான்.

கடைசியாக ஒன்று , பெண்ணுரிமை பெண்ணுரிமை என தலைவிரி கோலமாக உலகையே இம்சித்து வரும் இத்தருணத்தில் எதற்கு பெண்ணுரிமை தேவை என திசை தெரியாமல் கால் போன போக்கில் போகும் பெண்களின் மத்தியில் நான் ஒரு பெண்ணின் உரிமையை மையப்படுத்தி கேட்டுக்கொள்கிறேன்

கருக்கலைப்பிற்கு அந்த அக்கருவை சுமக்கும் பெண்ணின் ஒப்புதலோடு சிதையுங்கள் .. இதற்கு தான் பெண்ணுரிமை முக்கியமாக தேவை .

“தியா” ஒவ்வொரு கருசிதைவிற்கும் உயிர் கொடுப்பவள்.

– பிரியா குருநாதன்

18 Mla வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கும்? ராஜா செந்தூர்பாண்டியன் சிறப்பு பேட்டி!

18 Mla வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கும்? ராஜா செந்தூர்பாண்டியன் சிறப்பு பேட்டி!


18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு மக்களுக்கு பெரிய அளவில் நம்பிக்கையை ஏற்படுத்தும் விஷயமாக இருக்கும் என டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் ந.ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்தார்.

இது குறித்து டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் ந.ராஜா செந்தூர் பாண்டியனிடம் 'தி இந்து' தமிழ் இணையதளம் சார்பில் கேட்டபோது அவர் கூறியதாவது:
நேற்று 11 எம்எல்ஏக்கள் தீர்ப்பு வந்துள்ளது அதை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

தீர்ப்பைப் பொறுத்தவரையில் அனைத்து தரப்பு வாதங்களும் முழுமையாக தீர்ப்பில் பிரதிபலிக்கப்படவில்லை. சட்டரீதியாக என்னவெல்லாம் எங்களுக்கு சாதகமாக உள்ள் விஷயங்களை மேற்கோள் காட்டி வாதமிட்டோமோ அது இந்த வழக்கில் முழுமையாக எடுத்தாளப்படவில்லை.

தீர்ப்பில் பல விஷயங்கள் குறிப்பிட்டு சொல்லி இருந்தாலும், மிக முக்கியமான விஷயங்களாக சொல்லியிருந்தோமோ அது தீர்ப்பில் விவாதிக்கவில்லை. ஒரு வேலை அது தேவை இல்லை என்று நீதிபதிகள் கருதியிருக்கலாம்.
ஆனால் நாங்கள் இது போன்ற விஷயங்கள் விடுபட்டு போய்விடக்கூடாது என்பதற்காகத்தான் எழுத்துப்பூர்வமாக வாதத்தை தாக்கல் செய்தோம். அதில் என்னென்ன விஷயங்கள் கூறியிருக்கிறோமோ அது தீர்ப்பில் விவாதிக்கப்படவில்லை.
முக்கியமான ஒரு விஷயம் எம்எல்ஏ ஆர்.நட்ராஜின் வழக்கறிஞர் அவர் தரப்பு வாதமாக நீங்கள் நீதிமன்றம் எங்களுக்கு ஏன் நீங்கள் எதிர்த்து வாக்களித்தீர்கள் என்று கேள்வியை கேட்டு அதற்கு பதிலளிக்கும் உரிமையைக் கொடுக்க வேண்டும், அதற்கு சரியான பதிலளிக்க எங்களுக்கு வாய்ப்பு தரவேண்டும். அந்த உரிமையை நீதிமன்றம் எடுத்துக்கொள்ள கூடாது என்று வாதம் வைத்தார்.
அப்போது தலைமை நீதிபதி அந்த வழக்கறிஞரிடம் என்ன கேட்டார் என்றால், 2017 பிப்ரவரி மாதம் நடந்ததற்கு இந்த பிப்ரவரி வரையிலும் சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கவில்லையே? நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியும் அவர் நீதிமன்றத்திற்கு வர மறுக்கிறாரே? அப்போதும் கூட நீதிமன்றம் தலையிடக்கூடாதா? என்று கேள்வி எழுப்பினார். மேலும் இது போன்ற ஒரு தருவாயில் எப்படி நாங்கள் ஒரு முடிவுக்கு வருவது? என்று கேட்டார்.
ஆனால், அதைப்பற்றிய விபரங்கள் முழுமையாக தீர்ப்பில் குறிப்பிடாதது சட்டத்தை நம்பக்கூடிய, சட்டபூர்வமான விஷயங்கள் வெல்லும் என்று நம்பக்கூடிய என்னைப்போன்ற வழக்கறிஞர்களுக்கு ஏமாற்றமாக உள்ளது.
11 எம்எல்ஏக்கள் தீர்ப்பை ஒட்டி, 18 எம்எல்ஏக்கள் வழக்கில் தீர்ப்பு எப்படி வரும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
11 எம்எல்ஏக்கள் தீர்ப்பில் சபாநாயகர் எந்தவித உத்தரவும் பிறப்பிக்காததால் நாங்கள் உத்தரவிட முடியாது என்கிறார்கள். ஆகவே, 18 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் சபாநாயகர் உத்தரவிட்டதால் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
எங்களைப் பொறுத்தவரை 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் சபாநாயகர் உத்தரவு போட்டுள்ளதால் அதை தவறு என்றுதான் நாங்கள் வாதம் செய்துள்ளோம். எல்லாவற்றிற்கும் மேல் ஒரு சில வழக்குகளில் இங்கே நீதி கிடைக்கிறது. சில வழக்குகளில் மேல் முறையீட்டின் மூலம் உச்ச நீதிமன்றத்தில் நீதி கிடைக்கிறது.
எங்களைப் பொறுத்தவரை 11 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் உறுதியாக நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த வழக்கில் எந்த அம்சங்கள் எல்லாம் குறையாக இருக்கிறதோ அதை எல்லாம் நாங்கள் அதையே அடிப்படையாகக் கொண்டு மேல் முறையீடு செய்வோம்.
இன்னொரு முக்கியமான விஷயம் இந்த வழக்கு உச்சநீதிமன்றம் சென்று விட்டு வந்த வழக்கு. ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திருப்பி அனுப்பியதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
உச்ச நீதிமன்றத்தில் சபாநாயகரின் அதிகாரம் குறித்த வழக்கு நிலுவையில் உள்ளதால் இதில் முடிவெடுக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்களே?
அதே கருத்தைத்தான் செம்மலை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதமாக வைக்கப்பட்டது. ஆனாலும் எங்களுடைய வாதத்தையும் கேட்ட பிறகு இது வேறு வகையான வழக்கு ஆகவே சென்னை உயர் நீதிமன்றம் தான் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும், என்று உச்ச நீதிமன்றம் வழக்கை திருப்பி அனுப்பி வைத்தார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.
18 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் தீர்ப்பு எப்படி வரும்?
ஒரு நியாயமான தீர்ப்பு உறுதியாக வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
சபாநாயகர் முடிவுக்கு எதிராக தடை வரும் என்று எதிர்பார்க்கிறீர்களா?
நிச்சயம் வரும் என்று உறுதியாக எதிர்பார்க்கிறோம்.
அப்படி 18 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் தீர்ப்பு வந்தால் அது அரசியல் மாற்றத்தை உருவாக்குமா?
அரசியல் மாற்றம் என்பதைத் தாண்டி, உண்மையிலேயே நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் வண்ணமாக அந்த தீர்ப்பு இருக்கும்.ஆறு மாத காலத்துக்கு மேல் எந்த ஒரு சட்டப்பேரவை தொகுதியும் காலியாக இருக்கக்கூடாது என்று சட்டம் சொல்கிறது. ஆனால் ஆறு மாத காலத்துக்கு மேலாக செப்டம்பர் 2017-லிருந்து 18 எம்எல்ஏக்களின் தொகுதிகள் காலியாகவே உள்ளன.
மக்களுடைய எதிர்பார்ப்பாக இந்தத் தீர்ப்பு இருந்து வருகிறது. ஆகவே அரசியல் மாற்றத்தைத் தாண்டி நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை உணர்த்தும் விஷயமாக இந்தத் தீர்ப்பு அமையும் என்று நம்புகிறேன். ஆகவே நீதிமன்றத்தின் தீர்ப்பு மக்களுக்கு பெரிய அளவில் நம்பிக்கையை ஏற்படுத்தும் விஷயமாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம்.
இவ்வாறு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் " தி இந்து தமிழ்" க்கு அளித்த பிரத்யோக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

S ve sekar க்கு முன் ஜாமீன் வழங்க மறுப்பு! H ராஜாவைப் பேட்டியெடுக்க பத்திரிகையாளர்கள் மறுப்பு!

S ve sekar க்கு முன் ஜாமீன் வழங்க மறுப்பு! H ராஜாவைப் பேட்டியெடுக்க
பத்திரிகையாளர்கள் மறுப்பு!
சென்னை: எஸ்.வி.சேகரை கைது செய்ய தடைவிதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. முன்ஜாமின் கோரி எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எஸ்.வி.சேகர் முன்ஜாமின் மனு மீது எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்துள்ளது. கோடைக்கால நீதிமன்றத்தை நாடுமாறு எஸ்.வி.சேகருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

முன்னதாக நடிகர் எஸ்.வி. சேகர் கடந்த 19-ம் தேதி பத்திரிகை மற்றும் ஊடகங்கள் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் முகநூலில் பதிவிட்டுள்ளார். இதற்கு கடும் கண்டனம் எழுந்த உடன் அதனை நீக்கிவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு நலச்சங்கத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
புகார் மத்திய குற்றப்பிரிவு சைபர் பிரிவுக்கு மாற்றப்பட்டு அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தாம் கைதாகாமல் இருக்க எஸ்.வி.சேகர் தலைமறைவாக இருந்து வந்தார். இந்த வழக்கில் தாம் கைது செய்யப்படாமல் இருக்க முன்ஜாமின் வழங்கக் கோரி எஸ்.வி.சேகர் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்க விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் எஸ்.வி சேகரை காவல்துறை கைது செய்ய தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது. இதனையடுத்து கோடைக்கால நீதிமன்றத்தை நாடுமாறு எஸ்.வி.சேகருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையே இன்று (ஏப்ரல் 28) காலை 11.30-க்கு குமரி மாவட்ட தலைநகரான நாகர்கோவில் பாஜகவின் நகரத் தலைவர் முத்துராமன் அனைத்துப் பத்திரிகையாளர்களுக்கும் போன் செய்திருக்கிறார்.
“சார்... ஹெச். ராஜா நாகர்கோவில் வந்திருக்கிறார். கட்சி ஆபீஸ்ல 12 மணிக்கு பிரஸ்ஸை மீட் பண்றாரு. வந்துடுங்க” என்று அழைத்திருக்கிறார். சொல்லி வைத்தாற்போல அனைத்து நிருபர்களும், “சார் அவரை ட்விட்டர்லயே பிரஸ்மீட் பண்ணச் சொல்லுங்க. அவரோட பிரஸ்மீட்டை புறக்கணிப்பதாக பிரஸ் கிளப்லயே தீர்மானம் போட்டாச்சு. சாரி நாங்க வர முடியாது” என்று சொல்லிவிட்டனர்.
ராஜாவுக்குத் தெரிந்தால் கோபமாகிவிடுவாரே என்று சிறு சிறு பத்திரிகையாளர்களையாவது அழைத்து பிரஸ் மீட் நடத்தலாம் என்று சில முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார் நகரத் தலைவர் முத்துராமன். ஆனால் ஒரு நிருபர்கூட பாஜக அலுவலகம் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. இந்தத் தகவலை நகர தலைவர் முத்துராமன் தயங்கியபடியே ஹெச்.ராஜாவிடம் சொல்லியிருக்கிறார். அதையடுத்து ஹெச்.ராஜாவின் பிரஸ்மீட் ரத்து செய்யப்பட்டது.
நாம் குமரி மாவட்ட பிரஸ் கிளப் வட்டாரத்தில் பேசியபோது, “ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் ஆகிய இருவரையும் புறக்கணிப்பது என்று பிரஸ் கிளப்பில் தீர்மானம் போட்டிருக்கிறோம். எனவே யாரும் அங்கே போகவில்லை. இனியும் போகப் போவதில்லை’’ என்றனர். (Minnambalam)

18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் மே 7 ல் தீர்ப்பு?

18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் மே 7 ல் தீர்ப்பு?








டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கில், மே மாதம் 7ந்தேதி தீர்ப்பு வெளியாகும் என உயர்நீதிமன்ற வட்டார தகவல்கள் கூறுகின்றன.


அதே வேளையில் மே 1ந்தேதி முதல் ஜூன் 3ந்தேதி வரை 34 நாட்கள் கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், தீர்ப்பு வெளியாகுமா என்ற கேள்விக்குறியும் எழுந்துள்ளது.


ஜெ.மறைவை தொடர்ந்து இரண்டாக பிரிந்த அதிமுக, பின்னர் ஓபிஎஸ்-ன் நிபந்தனைகளை ஏற்று ஒன்றானது. அதையடுத்து, சசிகலா தரப்பினர் கட்சி நடவடிக்கைகளில் இருந்து விலக்கி வைக்கப்பட்டனர். இந்நிலையில், டிடிவி தினகரனுக்கு ஆதரவாக  அதிமுகவை சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் கட்சி விதியை மீறி  கவர்னரிடம் கடிதம் கொடுத்தனர். இதையடுத்து, அவர்களை கட்சி கொறடா உத்தரவின்பேரில் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் அதிரடி உத்தரவு வழங்கினார்.


இதனை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கடந்த செப்டம்பர் மாதம் முதல்  விசாரணை நடந்து வருகிறது. இறுதி விசாரணை கடந்த ஜனவரி மாதம் 24-ந்தேதி நடைபெற்றது. அப்போது அனைத்து தரப்பினரும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்தனர். அதைத்தொடர்ந்து  வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து  உத்தரவிட்டனர்.


இந்நிலையில் நேற்று ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம், மற்றும் சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் தொடர்பான வழக்கில், சட்டமன்ற சபாநாயகர் உத்தரவில் நீதிமன்றம் தலையிடாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.


இந்நிலையில், 18 எம்எல்ஏக்கள் மீதான வழக்கிலும் விரைவில் தீர்ப்பு கூறப்படும் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. வரும் மே 7ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட இருப்பதாக உயர்நீதி மன்ற வட்டார உறுதிப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஆனால் வரும் 1ந்தேதி முதல் உயர்நீதி மன்றத்திற்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், தீர்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


இதற்கிடையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள 18 எம்எல்ஏக்களின் சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று விசாரணைக்கு வருகிறது.


18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது. நன்றி பத்ரிக்கை.காம்.


Friday, April 27, 2018

கர்நாடக தேர்தலுக்காக தயாராகிறது காங்கிரஸின் தேர்தல் அறிக்கை.

கர்நாடக தேர்தலுக்காக தயாராகிறது காங்கிரஸின் தேர்தல் அறிக்கை.


கர்நாடகத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் புதிதாக ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி ‌தனது தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்துள்ளது.

கர்நாடக சட்டப்பேரவையின் 225 உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் வரும் மே 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி இன்று வெளியிட்டார். கர்நாடக மக்களின் குரலாக இந்தத் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறிய ராகுல்காந்தி, அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றார். பிரதமர் நரேந்திர மோடி, தனது மனதில் உள்ளவற்றை மன் கி பாத் மூலம் சொல்கிறார் என்றால், இந்தத் தேர்தல் அறிக்கை கர்நாடக மக்களின் மனதின் குரலாக ஒலிக்கிறது என்று அவர் கூறினார். மேலும், தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்றார்.

தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:-

கல்லூரி மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் வழங்கப்படும்
ஒவ்வொரு ஆண்டும் 15-20 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்
1 முதல் 12ம் வகுப்பு வரை இலவசக் கல்வி(தற்போது 1-8 வரை இலவச கல்வி வழங்கப்படுகிறது)
கர்நாடக பொருளாதாரத்தில் ஐ.டி துறையின் பங்களிப்பு 60 பில்லியன் டாலரில் இருந்து 300 பில்லியன் டாலராக உயர்த்தப்படும்
காவல்துறையில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு, அதில் திருநங்கைகளுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு
ஆகிய முக்கிய அம்சங்கள் இடம்பிடித்துள்ளது.

வழக்குகளில் திமுகவுக்கு பின்னடைவு! உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்!

வழக்குகளில் திமுகவுக்கு பின்னடைவு! உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்!


சென்னை: தி.மு.க.,வுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், சபாநாயகர் முடிவுக்கு எதிராக அந்த கட்சி தொடர்ந்த இரண்டு வழக்குகளையும், உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சட்ட சபையில் நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக ஓட்டளித்த, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும், 10 எம்.எல்.ஏ.,க்களை, தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு, நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. அதுபோல, ஜெயலலிதா படத்தை அகற்ற கோரிய வழக்கையும், தள்ளுபடி செய்த நீதிபதிகள், 'நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்த கூடாது' என, தி.மு.க.,வுக்கு கண்டனமும் தெரிவித்தனர்.
முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், அ.தி.மு.க., அமைச்சரவை யில் மூத்த அமைச்சராக இருந்த பன்னீர் செல்வம், முதல்வர் ஆனார். சசிகலாவின் நிர்ப்பந்தத்தால், பதவியை ராஜினாமா செய்தார். சசிகலா ஆதரவாளராக இருந்த பழனிசாமி, முதல்வராக பதவியேற்றார். பன்னீர்செல்வம் தலைமையில், தனி அணி இயங்கியது.

சட்டசபையில், பெரும்பான்மையை நிரூபிக்கும் படி, பழனிசாமிக்கு, கவர்னர் உத்தரவிட்டார். ௨௦௧௭ பிப்ரவரியில், நம்பிக்கை தீர்மானம், சட்டசபையில் கொண்டு வரப்பட்டது. முதல்வர் பழனிசாமி அரசுக்கு எதிராக, பன்னீர்செல்வம் உள்ளிட்ட, அவரின் ஆதரவு, 11 எம்.எல்.ஏ.,க்கள், ஓட்டு அளித்தனர். எனினும், பெரும்பான்மை இருந்ததால், பழனிசாமி அரசு வெற்றி பெற்றது.

பின், பழனிசாமி அணியும், பன்னீர்செல்வம் அணியும் இணைந்தன. துணை முதல்வராக பன்னீர்செல்வம், அமைச்சராக பாண்டியராஜன் நியமிக்கப்பட்டனர். இவர்கள், சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி துாக்கினர். இதனால், 18 எம்.எல்.ஏ.,க்கள், சசிகலாவுக்கு ஆதரவாக இறங்கினர். சசி ஆதரவு, ௧௮ எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் பழனிசாமிக்கு எதிராக, கவர்னரிடம் கடிதம் கொடுத்தனர். இதையடுத்து, அரசுக்குஎதிராக செயல்படுவ தாக கூறி, 18 பேரையும், தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக ஓட்டு போட்ட, பன்னீர் செல்வம் உள்ளிட்ட, 11 பேரை யும், தகுதி நீக்கம் செய்யக் கோரி, சட்டசபை, தி.மு.க., கொறடா சக்கரபாணி, உயர் நீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்தார்.

சசி ஆதரவு, எம்.எல்.ஏ.,வாக இருந்த வெற்றி வேலும், 11 பேரை தகுதி நீக்கம் செய்யக் கோரி, தனியாக மனு தாக்கல் செய்தார். மனுக்களை, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்துாஸ் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' விசாரித்தது.

பன்னீர்செல்வம் தரப்பில், மூத்த வழக்கறிஞர், சி.எஸ்.வைத்தியநாதன், வழக்கறிஞர் திருமாறன் உள்ளிட்டோர் ஆஜராகினர். இவ்வழக்கில், நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சக்கரபாணி மற்றும் வெற்றிவேல் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. 'சபாநாயகருக்கு, நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியுமா என்ற பிரச்னை, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், இந்த விஷயத்தில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது' என, முதல் பெஞ்ச் கூறியுள்ளது.

அதுபோல், சட்டசபையில் திறக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்தை அகற்றக் கோரி, தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன் தாக்கல் செய்த மனுவையும், 'முதல் பெஞ்ச்' நேற்று தள்ளுபடி செய்தது. 'சட்டசபையில், யார் படத்தை வைக்கலாம் என்ற, நிர்வாக ரீதியான சபாநாயகர் முடிவில், நீதிமன்றம் தலையிட முடியாது' என, முதல் பெஞ்ச் உத்தரவிட்டு உள்ளது. மேலும், நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்த கூடாது எனவும், கண்டித்தது.

'குட்கா' விற்பனை தொடர்பான வழக்கில், நேற்று முன்தினம், சி.பி.ஐ., விசாரணைக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதால், தி.மு.க., வினர் குஷியாக இருந்தனர். அதே நேரம், நேற்றைய இரு வழக்குகளிலும், உயர்நீதிமன்ற உத்தரவுகள் எதிராக அமைந்ததால், தி.மு.க., வினர், உற்சாகம் இழந்தனர். தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து, சசி ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களாக இருந்த, 18பேர் தாக்கல் செய்த மனுக்களை, தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி, எம்.சுந்தர் அடங்கிய, பெஞ்ச்' விசாரித்தது. இவ்வழக்கில், ஜனவரியில் விசாரணை முடிந்து, தீர்ப்பை, முதல் பெஞ்ச் தள்ளி வைத்துள்ளது.

சட்ட போராட்டம் தொடரும்

தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் அறிக்கை:பன்னீர்செல்வம் அணியின்11 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 'எம்.எல்.ஏ.,க்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என சபாநாயகருக்கு நீதிமன்றம் அறிவுறுத்த முடியாது' என கூறியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில், உச்ச நீதிமன்றத் தால் குற்றம் நிரூபிக்கப்பட்ட முதல் குற்றவாளியான, ஜெயலலிதா படம் சட்டசபையில், திறந்து வைக்கப்பட்டதை எதிர்த்து தி.மு.க., தொடரப்பட்ட வழக்கிலும் தலையிட முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலையிட முடியாத நிலையில், எதற்காக மனுக்களை விசாரணைக்கு எடுத்து, இவ்வளவு காலம், தீர்ப்பை தள்ளி வைத்திருக்க வேண்டும் என்பது, சாதாரண மக்களின் கேள்வி.

அந்தக் கேள்வியை பிரதிபலிக்கும் பொருட்டு, நீதித் துறை மீதுள்ள நம்பிக்கையின் அடிப் படையில், உச்ச நீதிமன்றத்தில் சட்ட போராட்டம் தொடரும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சட்டத்தில் தடையில்லை!

'ஊழல் வழக்கில் குற்றவாளி என, தீர்ப்பு அளிக்கப்பட்டவரின் உருவப்படத்தை வைப்பதற்கு, சட்டத்தில் தடை இல்லாத போது, அந்த விஷயத்தில், நீதிமன்றம் தலையிட முடியாது' என, நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி, அப்துல் குத்துாஸ் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:ஊழல்வாதி ஒருவரை பெருமைப்படுத்துவது, தார்மிக ரீதியில் தவறாக இருக்கலாம். ஆனால், ஊழல் வழக்கில் குற்றவாளி என, தீர்ப்பு அளிக்கப்பட்ட வரின் உருவப்படத்தை வைப்பதற்கு, சட்டத் தில் தடை இல்லாத போது, அந்த விஷயத்தில், நீதிமன்றம் தலையிட முடியாது.அவ்வாறு செய்தால், அது, சட்டம் அனுமதிக்காத நிலையில், தண்டனை விதிப்பது போலாகும்.

சட்டசபையில் ஒருவரது உருவப்படத்தை வைக்கலாமா... யார் புகைப்படத்தை வைக்க லாம் என்பதெல்லாம், சபாநாயகர் முடிவெடுக்க வேண்டிய விஷயம். சபாநாயகர் எடுத்த நிர் வாக ரீதியான முடிவில், நீதிமன்றத் துக்குரிய அதிகார வரம்பை செயல்படுத்த முடியாது. எனவே, மனு தள்ளுபடி செய்யப் படுகிறது. இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

"சிப்பாய் கலகம்" நிகழ்ந்த மண்ணில் தற்போது "சீப்பான கலகம்" நடக்கிறது- ராமதாஸ்

"சிப்பாய் கலகம்" நிகழ்ந்த மண்ணில் தற்போது "சீப்பான கலகம்" நடக்கிறது- ராமதாஸ்


தமிழகத்தில் புரட்சி என்ற வார்த்தை படும் பாட்டைப் பார்த்தால் மன அழுத்தம் வெடித்துவிடும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

நல்லவேளை.... சேகுவேரா, ஃபிடல் காஸ்ட்ரோ, வேலுப்பிள்ளை பிரபாகரன், ஸ்டாலின் ( இவர் ஜோசப் ஸ்டாலின்), ஜார்ஜ் வாஷிங்டன், மார்ட்டின் லூதர்கிங், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், நெல்சன் மண்டேலா, யாசர் அராஃபத் போன்ற தலைவர்கள் இப்போது உயிருடன் இல்லை.

அவர்கள் உயிருடன் இருந்திருந்தால் தமிழகத்தில் புரட்சி என்ற வார்த்தை படும் பாட்டைப் பார்த்து மன அழுத்தம் தாங்க முடியாமல் வெடித்திருப்பார்கள். அந்த அளவுக்கு தமிழகத்தில் புரட்சி என்பது தகுதி குறைந்த, கேவலமான, யார் வேண்டுமானாலும் சூட்டிக் கொள்ளக்கூடிய பட்டமாக மாறி விட்டது.

கியூபாவில் பாடிஸ்டா என்ற கொடுங்கோலனின் ஆட்சியை அகற்றுவதற்காக ஃபிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து விரல் விட்டு எண்ணக்கூடிய போராளிகளுடன் போராடி வென்று, நாட்டை காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்து விட்டு, அடுத்து புரட்சி செய்வதற்காக அர்ஜென்டினாவுக்கு சென்ற சேகுவேரா போராளி அல்லது புரட்சியாளன் என்று தான் அழைக்கப்படுகிறார்.

நான்கு நண்பர்களுடன் இணைந்து விடுதலைப்புலிகள் அமைப்பை உருவாக்கி உலகமே வியக்கும் வண்ணம் தரைப்படை, கடற்படை, விமானப்படை என முப்படைகளை உருவாக்கி, இலங்கைக்குள் தனி ஈழத்தை உருவாக்கி நிர்வகித்த பிரபாகரனை இந்த உலகம் போராளி என்று தான் அழைக்கிறது.

ஆனால், இத்தகைய போராட்டங்கள் எதையும் செய்யாமல் திரைப்படங்களில் பாட்டிகளை கட்டிப்பிடித்து கருணையின் சின்னமாக காட்டிக் கொண்டு ஆட்சியைப் பிடித்த எம்.ஜி.ஆருக்கு போராளி பட்டம் போதுமானதில்லையாம். அதையும் தாண்டி அவர் புரட்சித் தலைவராம்.

சரி... அது போகட்டும் என்றால் எம்.ஜி.ஆருடன் சில படங்களில் இணைந்து நடித்த ஒரே காரணத்திற்காக ஜெயலலிதாவுக்கும் அதே பதவி, புரட்சித் தலைவி பட்டம்.

கொஞ்சம் அசந்திருந்தால் ஜெயலலிதாவுக்கு உடன்பிறவா சகோதரியாக இருந்ததற்காக சசிகலாவுக்கும் அதே பதவியும், புரட்சிப் பெருந்தலைவி பட்டமும் வழங்கப்பட்டிருந்திருக்கும். ஆனால், தூங்கிக் கொண்டிருந்த உச்சநீதிமன்றம் திடீரென விழித்துக் கொண்டதால் தமிழ்நாடு தப்பியது.

அதுமட்டுமின்றி, புரட்சிக் கலைஞர், புரட்சித் தமிழன், புரட்சித் தளபதி என தமிழகத்தில் புரட்சிகளுக்கு குறைவே இல்லை. இதுதான் இப்படி என்றால், புரட்சிகரமான செயல்களுக்கும் குறைவில்லை.

புரட்சித் தலைவராலும், புரட்சித் தலைவியாலும் வளர்க்கப்பட்ட கட்சி மூன்றாக உடைந்து சிதறுகிறது. பணம் உள்ளவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குகின்றனர். கூவத்தூர், புதுச்சேரி, குடகு என சொகுசு மாளிகைகள் உள்ள இடங்களுக்கெல்லாம் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அவர்களுக்கு கோடிகளில் பண அபிஷேகம் நடத்தப்படுகிறது. குதிரைபேரத்தின் உதவியுடன் மைனாரிட்டி அரசு நடத்தப்படுகிறது. இது ஒரு மெகா புரட்சி.

தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுக்கும் புரட்சியைக் கேள்விப்பட்டிருப்போம். இரட்டை இலை சின்னத்தை வாங்குவதற்காக தேர்தல் ஆணையத்திற்கே லஞ்சம் கொடுக்க முயன்ற புரட்சியும் தமிழகத்தில் தான் நடந்திருக்கிறது.

அதுமட்டுமின்றி, ஓட்டுக்கு ரூ.10,000 விலைபேசி அதற்கான அடையாளமாக 20 ரூபாய் நோட்டை கொடுத்த புரட்சியும் இந்தியாவின் 29 மாநிலங்களில் வேறு எங்கும் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும் தான் நடந்திருக்கிறது. இதேபோல் ஏராளமான புரட்சிகள் தமிழகத்தில் நடந்துள்ளன. அவற்றை பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது.

இதுபோன்ற புரட்சிகளால் தமிழ்நாடு உலக அரங்கில் பங்கப்பட்டு, அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு நிற்கிறது. தமிழ்நாடு மட்டுமல்ல... புரட்சி என்ற வார்த்தையும் கூட அதே அளவு அவலத்தை சந்தித்துள்ளது.

இத்தகைய புரட்சிகள் தான் நடைபெறுகின்றனவே தவிர தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு தேவையான பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, பாசனப்புரட்சி போன்றவை மட்டும் தமிழகத்தில் நடைபெறுவதில்லை.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க இன்னொரு பெரும் புரட்சியும் தமிழகத்தில் நடைபெற்றிருக்கிறது. அதுவும் வேலூர் கோட்டையில்...

‘‘அது தான் எங்களுக்குத் தெரியுமே.... 1806-ஆம் ஆண்டு ஜூலை 10-ஆம் தேதி வேலூர் கோட்டையில் சிப்பாய் கலகம் நடந்தது. இது தெரியாதா?’’ என்று சிலர் துடிப்பது தெரிகிறது. ஆனால், இது அதுவல்ல...

கடந்த சில நாட்களுக்கு முன் வேலூர் கோட்டையில் மூன்று மாணவிகள் மது அருந்தி, அதுவும் பீர் பாட்டிலை வாயால் கடித்து திறந்து, நடனமாடி, அதை அவர்களில் ஒருவரே வீடியோ எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள். சிப்பாய் கலகம் நடந்த இடத்தில் ஒரு சீப்பான கலாச்சாரம். இதுவல்லவோ புரட்சி. கேவலமான புரட்சிகள் ஆளும் மாநிலத்தில் இத்தகைய கேவலமான புரட்சிகள் தான் நடக்கும். இன்னும் என்னென்ன புரட்சிகள் நடக்குமோ?

வாழ்க புரட்சியின் தாயகம் தமிழ்நாடு! வளர்க டாஸ்மாக் புகழ்!

இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முக ஸ்டாலினை சந்திக்கும் சந்திரசேகர ராவ்! காவிரி விவகாரத்தில் பாஜக, காங் நாடகம்?

முக ஸ்டாலினை சந்திக்கும் சந்திரசேகர ராவ்! காவிரி விவகாரத்தில் பாஜக, காங் நாடகம்?


காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரின் அளவை குறைத்து கடந்த பிப்ரவரி மாதம் 16–ந் தேதி தீர்ப்பு வழங்கியது.

அத்துடன், நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை செயல்படுத்த ‘ஸ்கீம்‘ (செயல்திட்டம்) ஒன்றை 6 வாரங்களுக்குள் ஏற்படுத்துமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. 6 வார காலக்கெடு முடிவடைந்த நிலையில், ‘ஸ்கீம்‘ என்பதற்கு விளக்கம் கோரியும், செயல் திட்டத்தை அமல்படுத்த 3 மாத காலஅவகாசமும் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு மனு செய்தது. இந்த மனு மீது விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்துவதற்கான வரைவு திட்டத்தை மே மாதம் 3–ந் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு கடந்த 9–ந் தேதி உத்தரவிட்டது.

இப்போது காவிரி விவகாரத்தில் கால அவகாசம் போதவில்லை மேலும் 2 வாரம் கால அவகாசம் கோரி மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளது.

காங்கிரஸ், பாரதீய ஜனதா நாடகம்

இந்நிலையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், காங்கிரஸ், பா.ஜனதா காவிரி நாடகத்தை நடத்துவது ஏன்? என கேள்வியை எழுப்பி உள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா நாடகம் நடத்துகிறது. இப்போது காவிரி நாடகத்தை நடத்துவது ஏன்? மத்திய அரசுகளின் திறமையற்ற செயல்பாடு காரணமாகவே தண்ணீருக்கான போர் நேரிட்டு உள்ளது. அனைத்து விவசாயிகள் மற்றும் ஏக்கருக்கும் தண்ணீர் என்பதே புதிய அணியின் கொள்கை முழக்கமாகும் என கே.சி. சந்திரசேகர ராவ் பேசிஉள்ளார் என ஏஎன்ஐ செய்தி வெளியிட்டு உள்ளது.

புதியதாக கூட்டணி அணி அமைக்கப்படும் என காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதாவிற்கு எச்சரிக்கையை விடுக்கிறேன். இதற்கான பணியை தொடங்கிவிட்டேன். 29-ம் தேதி திமுக மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசுகிறேன். வரும் காலங்களில் இத்தேசம் புதிய ஆட்சியை பார்க்கும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

கற்பழிப்பு வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை!

கற்பழிப்பு வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை!


காஷ்மீரின் கதுவா மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி, கடந்த ஜனவரி 10-ந்தேதி கடத்தி செல்லப்பட்டு கற்பழித்து கொலை செய்யப்பட்டார். அவரது உடல் ஒரு வாரத்துக்குப்பின் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கதுவா மாவட்ட கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. இதில் ஒரு இளம் குற்றவாளி உள்பட 8 பேர் மீது கடந்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையை சண்டிகருக்கு மாற்ற வேண்டும் என சிறுமியின் தந்தை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதைப்போல இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என குற்றவாளிகள் இருவர் தரப்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்கோத்ரா ஆகியோரை கொண்ட அமர்வு விசாரணைக்கு எடுத்துக்கொண்டு உள்ளது. இதில் அடுத்தகட்ட விசாரணை அடுத்த மாதம் (மே) 7-ந்தேதி நடக்கிறது. எனவே அதுவரை சிறுமி கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கை விசாரிக்க தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

I A S தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த கீர்த்திவாசன்

I A S தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த கீர்த்திவாசன்


டெல்லி: சிவில் சர்வீஸ் தேர்வில் கீர்த்தி வாசன் தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அகில இந்திய அளவில் 27 வது இடத்தை கீர்த்திவாசன் பிடித்துள்ளார். திருச்சியில் படித்த கீர்த்திவசான் தமிழக அளவில் முதலிடத்தை பிடித்து சாதனை படைந்துள்ளார். ஐஏஎஸ் தேர்வு இறுதி முடிவை மத்திய தேர்வு ஆணையம் வெளியிட்டது. ஐஏஎஸ் பிரதான தேர்வு எழுதிய 13000 பேரில் 2567 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நேர்முகத் தேர்வில் பங்கேற்ற 2567 பேரில் 990 பேர் ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிக்கு தேர்வு செய்துள்ளனர். அகில இந்திய அளவில் ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கு 990 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்னையை சேர்ந்த மதுபாலன், இந்திய அளவில் 71-வது இடமும், தமிழக அளவில் 2-ம் இடமும் பெற்றார்.

தேர்வானவர்களின் பட்டியல் http://www.upsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சிவில் சர்வீஸ் தேர்வில், தமிழகத்தில் இருந்து, 60-க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த கீர்த்திவாசன், இந்திய அளவில் 27-வது இடமும், தமிழக அளவில் முதலிடமும் பெற்று சாதனை படைத்து உள்ளார்.

சென்னையை சேர்ந்த மதுபாலன், இந்திய அளவில் 71-வது இடமும், தமிழக அளவில் 2-ம் இடமும் பெற்று உள்ளார். ஐதராபாத்தை சேர்ந்த அனுதிப் துரிசெட்டி அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து அசத்தி உள்ளார்.

மருத்துவமனைக்குச் செல்லும் மகளிருக்கு எச்சரிக்கை!

மருத்துவமனைக்குச் செல்லும் மகளிருக்கு எச்சரிக்கை!


சென்னை மயிலாப்பூரில் சிகிச்சைக்கு வந்த பெண்களைத் தவறான எண்ணத்தில் செல்லிடப்பேசியில் விடியோ எடுத்த மருத்துவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம், உளுந்தை பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், மயிலாப்பூர் ரூதர்புரத்தில் வசிக்கும் தனது தாயார் வீட்டுக்கு வியாழக்கிழமை வந்துள்ளார். மார்பு வலி தொடர்பாக அவர் சிகிச்சை பெற மயிலாப்பூர் நாட்டுசுப்பராயன் தெருவில் உள்ள கிளினிக்குக்கு சென்றுள்ளார். அவருடன் அந்த பெண்ணின் தாயாரும் குழந்தைகளும் சென்றனர். அங்கு மருத்துவர் சிவகுருநாதன் (64) பரிசோதித்துள்ளார்.
மார்பு பகுதிக்கு சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளதாகக் கூறி, தனித்து அப்பெண்ணை ஓர் அறைக்கு அழைத்துச் சென்று, சிகிச்சைக்காக மேலாடையை அகற்றச் சொன்னாராம். அப்பெண்ணுக்குத் தெரியாமல் அந்த அறையின் ஜன்னலில் செல்லிடப்பேசியை வைத்து விடியோ பதிவு செய்தாராம்.
அச்சத்தில் வெளியேறிய பெண்: தனி அறையில் மருத்துவரின் செய்கைகள் அப்பெண்ணுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. செல்லிடப்பேசியில் விடியோ பதிவு செய்வதைக் கண்டு அறையை விட்டு வெளியேறிய அப்பெண், மருத்துவரிடம் சிகிச்சை பெற காத்திருந்த தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 2-ஆவது தெருவைச் சேர்ந்த உ. உமாபதி (39) என்பவரிடம் மருத்துவரின் நடவடிக்கை குறித்துத் தெரிவித்துள்ளார்.
மருத்துவரிடம் இருந்து செல்லிடப்பேசியை உமாபதி பறிக்க முயன்றாராம். செல்லிடப்பேசியில் பதிவான காட்சியை அவசரமாக மருத்துவர் நீக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் மருத்துவர்களுக்கும் சிகிச்சைக்கு வந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
போலீஸார் விசாரணையில் சிவகுருநாதன் வைத்திருந்த மற்றொரு செல்லிடப்பேசியில் சிகிச்சைக்காக வந்த வேறு இரு பெண்களை ஆடைகளை அகற்றச் சொல்லி விடியோ பதிவு செய்திருப்பது தெரியவந்தது.
மருத்துவர் கைது: அதையடுத்து, போலீஸார் சிவகுருநாதனைக் கைது செய்து, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
கைது செய்யப்பட்ட சிவகுருநாதன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறைக்கு வெள்ளிக்கிழமை காவலுக்கு அனுப்பப்பட்டார்.

தொடர் தொல்விகளுக்கு முற்றுப்புள்ளி! புதிய தலைமையுடன் களமிறங்கிய முதல் போட்டியில் அபார வெற்றி!

தொடர் தொல்விகளுக்கு முற்றுப்புள்ளி! புதிய தலைமையுடன் களமிறங்கிய முதல் போட்டியில்
அபார வெற்றி!


தில்லி டேர் டேவில்ஸ்-கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் இடையிலான ஐபிஎல் 26-வது ஆட்டம் தில்லியில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
முன்னதாக டாஸ் வென்ற கொல்கத்தா பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து தில்லி அணியின் பிரித்வி ஷா, காலின் மன்றோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் துவக்கம் முதலே அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர். 4-வது ஓவர் முடிவில் தில்லி அணி 40 ரன்களை எடுத்திருந்தது.
2 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 33 ரன்களைக் குவித்த காலின் மன்றோ, சிவம் மவி பந்து வீச்சில் போல்டானார். பிரித்வி ஷா 62 ரன்களை எடுத்திருந்தபோது சாவ்லா பந்தில் போல்டானார். ரிஷப் பந்த் ரன் ஏதும் எடுக்காமலும், மேக்ஸ்வெல் 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தில்லி அணியின புதிய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 10 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 40 பந்துகளில் 93 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தில்லி அணி 219 ரன்களை குவித்திருந்தது.
கொல்கத்தா தரப்பில் சாவ்லா, சிவம் மவி, ரஸ்ஸல் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
வெற்றி இலக்காக 220 ரன்களை எதிர்கொண்ட கொல்கத்தா அணி தரப்பில் கிறிஸ் லீன், சுனில் நரேன் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். எனினும் கொல்கத்தாவுக்கு தொடக்கமே சரிவாக அமைந்தது. லீன் 5 ரன்களிலும், நரேன் 26 ரன்களிலும், அதிரடி வீரர் உத்தப்பா 1 ரன்னிலும், நிதிஷ் ராணா 8 ரன்களிலும், கேப்டன் தினேஷ் கார்த்திக் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
9.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்களை மட்டுமே கொல்கத்தா பெற்றிருந்தது.
பின்னர் களமிறங்கிய ஷுப்மன்கில்-ரஸ்ஸல் ஆகியோர் இணைந்து ஆடி ரன்களை குவித்தனர். ஷுப்மன் கில் 37 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட் முறையிலும், சிவம் மவி ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர். 17-வது ஓவர் முடிவில் கொல்கத்தா 7 விக்கெட் இழப்புக்கு 143 ரன்களை எடுத்திருந்தது. 4 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 44 ரன்களைக் குவித்த ரஸ்ஸல், அவேஷ்கான் பந்தில் போல்டானார். பியுஷ் சாவ்லா 2 ரன்களில் வீழ்ந்தார்.
மிச்செல் ஜான்சன் 8, குல்தீப் யாதவ் 7 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. தில்லி தரப்பில் பெளல்ட், மேக்ஸ்வெல், அவேஷ் கான், அமித் மிஸ்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இறுதியில் 55 ரன்கள் வித்தியாசத்தில் தில்லி அணி வென்றது.
புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த தில்லி இந்த வெற்றி மூலம் 7-வது இடத்துக்கு முன்னேறியது. கொல்கத்தா 4-வது இடத்திலேயே நீடித்து வருகிறது.
ஷ்ரேயஸ் ஐயர் அதிரடி
தொடர் தோல்விகளால் கம்பீர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய நிலையில் புதிய கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர் நியமிக்கப்பட்டு முதல் ஆட்டத்தில் தில்லி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியது. அவர் 93 ரன்களுடன் அதிரடியாக ஆடி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
அதிக ரன்கள்
சென்னை சிஎஸ்கே அணியின் அம்பதி ராயுடு இதுவரை 6 ஆட்டங்களில் 2 அரை சதங்கள் உள்பட 283 ரன்களை குவித்துள்ளார்.
ஆரஞ்சு கேப் அம்பதி ராயுடுவிடம் வந்துள்ளது.
அதிக விக்கெட்
தில்லி அணியின் டிரென்ட் பெளல்ட் 7 ஆட்டங்களில் 24.5 ஓவர்கள் வீசி, 215 ரன்களை விட்டுக்கொடுத்து 11 விக்கெட்டுகளை
வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் மயங்க் மார்க்கண்டே வசம் இருந்த பர்ப்பிள் கேப் பெளல்ட் வசம் வந்துள்ளது.

பவானி சட்டமன்றத் தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார் தமிழக முதல்வர்!

பவானி சட்டமன்றத் தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார்
தமிழக முதல்வர்!


பவானி சட்டப் பேரவைத் தொகுதியில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா மே மாதம் 13-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று புதிய திட்டங்களைத் தொடக்கிவைத்தும், நலத் திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு மேடை அமைக்கும் பணிகள் கால்கோல் விழாவுடன் வெள்ளிக்கிழமை தொடங்கின.

இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், சிறப்பு பூஜைக்குப் பின்னர் பந்தல்கால் நட்டு, மேடை அமைக்கும் பணியைத் தொடக்கிவைத்தார்.

தொடர்ந்து, அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறியதாவது:
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, பவானி சட்டப் பேரவைத் தொகுதியைச் சேர்ந்த 5 ஆயிரம் பயனாளிகளுக்கு மே 13-ஆம் தேதி நடைபெறும் விழாவில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், குடும்ப அட்டைகள், அரசின் நலத் திட்டங்களை வழங்குவதுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவேற்றப்பட்ட திட்டங்களைத் தொடக்கியும் வைக்கிறார்.

பவானி, காலிங்கராயன் அணைக்கட்டில் கட்டப்பட்டுள்ள மணி மண்டபம், காலிங்கராயனின் முழு உருவ வெங்கலச் சிலையையும் திறந்துவைக்கிறார்.

இவ்விழாவில், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், வெ.சரோஜா, உடுமலை கே.ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் மக்களவை, மாநிலங்களவை, சட்டப் பேரவை உறுப்பிர்கள் பங்கேற்கின்றனர் என்றார்.

கால்கோல் விழாவில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் என்.கிருஷ்ணராஜ், கோபி கோட்டாட்சியர் எஸ்.கோவிந்தராஜ், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் என்.ஆர்.கோவிந்தராஜர், பவானி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் எஸ்.எம்.தங்கவேலு, துணைத் தலைவர் ஏ.ரவி, ஈகோ பிரஸ் முன்னாள் தலைவர் எஸ்.எஸ்.சித்தையன், பவானி நகராட்சி முன்னாள் தலைவர் என்.ராஜேந்திரன், மாவட்டக் குழு முன்னாள் உறுப்பினர் ஏ.வரதராஜன், நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் ஏ.சி.முத்துசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முதல்வருக்கு கொலை மிரட்டல்? மிரட்டல் டுத்தவரை தேடும் போலீஸ்!

முதல்வருக்கு கொலை மிரட்டல்? மிரட்டல் டுத்தவரை தேடும் போலீஸ்!
கேரள முதல்வர் பினராயி விஜயன் தலை வெட்டப்படும் என்று நக்சலைட்டுகள் கொலை மிரட்டல் விடுத்து போஸ்டர்கள் அடித்து ஒட்டியுள்ளனர்.

பாலக்காடு மாவட்டம், பழையனூர் பகுதியில் உள்ள போலீஸ் நிலையம் அருகே இந்த பதாகைகள் ஒட்டப்பட்டுள்ளனர். அந்தப் பதாகைகளில் கேரள ஆதிவாசிகளின் கவனிக்காத விஜயனின் தலை வெட்டப்படும் என்று எழுதப்பட்டுள்ளது.

இந்த போஸ்டர் குறித்தும் யாரும் புகார் செய்ததால் இதுவரை போலீஸார் எந்தவிதமான வழக்குப் பதிவும் செய்யவில்லை. இது குறித்து வடக்கன்சேரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலத்தில் உள்ள நக்சல்பாரி இயக்கத்தினர் இந்த போஸ்டரை ஒட்டி இருக்கலாம் என்று போலீஸார் தெரிவிக்கின்றனர்.

சமீபத்தில் ஆதிவாசி இளைஞர் ஒருவரை போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்று, அவரை அடித்துக் கொன்று, காட்டுப்பகுதியில் வீசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், சமீபத்தில் சிறீஜித் (வயது26) என்ற ஆதிவாசி இளைஞரும் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்டார், அதேபோல பாலக்காடு மாவட்டத்தில் மது என்ற ஆதிவாசி இளைஞரும் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவங்களால் நக்சல்பாரி இயக்கத்தினர் இந்தப் போஸ்டரை ஒட்டி இருக்கலாம் என்று போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.

ராட்சத அலைகள் தாக்கியது ஏன்? இந்திய கடல்சார் தகவல் மையம் விளக்கம்.

ராட்சத அலைகள் தாக்கியது ஏன்? இந்திய கடல்சார் தகவல் மையம் விளக்கம்.


இந்தியக் கடற்கரைப்பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன் 12 மீட்டர் உயரம் வரை அபாயகரமான, மிகப்பெரிய அலைகள் எழுந்து அச்சுறுத்தின. அரேபியக் கடல், வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல் பகுதியில் எழுந்த அந்த அலைகள் ஆக்ரோஷமாக எழுந்தது குறித்து இந்திய தேசிய கடல்சார் தகவல்சேவை மையம் வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் நில அறவியில் துறையின் கீழ் இயங்கும் இந்திய தேசிய கடல்சார் சேவை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
இந்திய கடற்பகுதியில் இருந்து 10 ஆயிரம் கி.மீ தொலைவில் உள்ள அட்லாண்டிக் பெருங்கடலில் மிக பலம்வாய்ந்த அலைகள் கடந்த 18-ம் தேதி உருவானது, இந்த அலைகள் இந்திய கடற்பகுதியை கடக்கும் போது  அரேபியக் கடல், வங்காளவிரிகுடா கடல் ஆகியவற்றில் கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக 12 மீட்டர் உயர்த்துக்கும் அதிகமான அலைகள் உருவாகின.
நாட்டின் பல மாநிலங்களில் கடற்கரைப் பகுதிகளில் ஒருவாரமாக கடல் கொந்தளிப்புடன், ஆக்ரோஷமான அலைகள் எழுந்தன. இந்த அலைகளால் எந்தவிதமான உயிர்சேதங்களும் எழவில்லை என்றபோதிலும், பல மாநிலங்களில் உள்ள கடற்கரைப்பகுதிகளில்வீடுகள், படகுகள் மோதி சேதமடைந்மடைந்தன.
ஆந்திரப்பிரதேசம், மேற்குவங்கம், ஒடிசா, அந்தமான் நிகோபர் தீவுகள், லட்சத்தீவுகள், கோவா, மஹாராஷ்டிரா, குஜராத், தமிழகம் ஆகிய கடற்கரைப்பகுதிகளில் இந்த அலை குறித்து கடந்த வாரம் தீவிரமான எச்சரிக்கை வழங்கப்பட்டு இருந்தது. மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
இந்திய தேசிய கடல்சார் சேவை மையத்தின் இயக்குநர் ஷெனோய் இது குறித்து கூறியதாவது:
தெற்கு அட்லாண்டிக் கடல்பகுதியில் கடந்த 18-ம் தேதி  உருவான மிகச்சக்தி வாய்ந்த அலைகள் அங்கிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் கடந்து வந்து இந்திய கடற்பகுதிக்குள் நுழைந்தன. இந்திய பெருங்கடல், அரேபியக்கடல், வங்காள விரிகுடா கடலை கடக்கும் போது நமக்கு மிகச்சக்திவாய்ந்த அலைகளை உருவாக்கிவிட்டுச் சென்றன.
நீண்ட தொலைவில் இருந்து வரும் இந்த அலைகள் பயணம் நீளும்போது அதிகமான வலுப்பெற்று கடற்கரைப்பகுதியை கடக்கும். இதனால், கடல் வழக்கத்துக்கும் மாறாக மிகுந்த கொந்தளிப்பாக காணப்பட்டது. அலைகள் சராசரியாக 4 மீட்டர் உயரம்வரை எழுந்தது, அதிகபட்சமாக 12 மீட்டர் உயரம் வரை சில நகர கடற்கரைகளில் எழுந்தது.
இதன் காரணமாக கேரள கடற்கரைக்கு சிவப்புநிற எச்சரிக்கையும், அந்தமான், உள்ளிட்ட மற்ற மாநில கடற்கரைப்பகுதிகளுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு இருந்தது.
இதில் சிவப்பு நிற எச்சரிக்கை என்பது மிகத்தீவிரமான சேதத்தை எந்நேரமும் உருவாக்கலாம் என்பதாகும், ஆரஞ்சு நிற எச்சரிக்கை என்பது, எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதையும் குறிக்கும்.
இதன் காரணமாக கேரள கடற்கரைப்பகுதியில் கடந்த ஒருவாரமாக சுற்றுலாப்பயணிகள் ஆகியோர் கடலில் குளிக்கவும், கடலில் பயணிக்கவும் அனுமதிக்கப்படவில்லை. இதற்காக தமிழகம், கேரள அரசுகள் கடற்கரை ஓரங்களில் குடியிருக்கும் மக்களுக்காக முகாம்களை அமைத்திருந்தனர். இந்த பலமான அலையால், கேரள கடற்கரைப்பகுதிகளில் ஏறக்குறைய 400 வீடுகள் சேதமடைந்தன .
இவ்வாறு ஷெனோய் தெரிவித்தார்.

பன்னீர் உள்ளிட்ட 11 Mla களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது! உயர்நீதிமன்றம் தடாலடி!

பன்னீர் உள்ளிட்ட 11 Mla களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது!
உயர்நீதிமன்றம் தடாலடி!


'ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது’ என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், சசிகலா தரப்புக்கு எதிராக பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கினார். அப்போதைய ஓ.பி.எஸ் அணியில் 11 எம்.எல்.ஏ-க்கள் இருந்தனர். சசிகலா ஆதரவாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வர் ஆனார். ஆனால், அவரின் பக்கம் பெரும்பான்மையான எம்.எல்.ஏ-க்கள் இல்லை என்றும், அதனால் ஆட்சி அமைக்க முடியாதென்றும் எதிர்க்கட்சிகள் பிரச்னை எழுப்பின. இதையடுத்து, சட்டமன்றத்தில் பழனிசாமி அரசு கொண்டுவந்த நம்பிக்கைத் தீர்மானத்துக்கு எதிராக பன்னீர்செல்வம் அணி வாக்களித்தது. அ.தி.மு.க-வில் இருந்துகொண்டு முதல்வருக்கு எதிராகச் செயல்பட்ட பன்னீர்செல்வம் அணியின் 11 எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகர் தனபாலிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதையடுத்து, பன்னீர்செல்வம் - பழனிசாமி அணிகள் இணைந்தன. அதன்பின் தினகரன் அணி உருவானது. தினகரனுக்கு 19 எம்.எல்.ஏ-க்கள் இருந்தனர். 19 எம்.எல்.ஏ-க்களும் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லை என்று அப்போதைய பொறுப்பு ஆளுநரிடம் புகார் தெரிவித்தனர். அ.தி.மு.க. எம்.எல்.ஏவாகப் பதவி வகித்துக் கொண்டு இப்படிச் செய்வது சட்டவிரோதம் என்று அ.தி.மு.க கொறடா, சபாநாயகரிடம் தெரிவித்தார். இதையடுத்து, தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்ட 18 எம்.எல்.ஏ-க்களையும் தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்களும், எதிர்க்கட்சியினரும் நீதிமன்றத்தை நாடினர். மேலும், 'ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ-க்கள் சட்டமன்றத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக ஓட்டுப் போட்டதால், அவர்களையும் தகுதிநீக்கம் செய்ய வேண்டும்’ என்று வழக்கு தொடரப்பட்டது. தினகரன் தரப்பு மற்றும் தி.மு.க தரப்பு வழக்குகளைத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான பெஞ்ச் விசாரித்து முடித்து, 27-04-2018 (இன்று) பிற்பகல் 2.15 மணிக்குத் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தது.
இந்நிலையில் ஓ.பி.எஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கக் கோரி திமுக கொறடா சக்கரபாணி தொடர்ந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு 'ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது. சபாநாயகர் அதிகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தகுதிநீக்க உத்தரவிட முடியாது. சபாநாயகரின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது’ என்று கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். சபாநாயகர் பாரபட்சமாக நடந்துகொள்ளும் போது, உயர் நீதிமன்றம் தலையிடலாம் என்ற தி.மு.க. தரப்பு வாதத்தை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

முன்னதாக இன்று காலை "தீர்ப்பின் முன்னோட்டம் " என்ற தலைப்பில் 11 Mla க்கள் தகுதி நீக்கம் தொடர்பாக "அரசுக்கு சாதகமான தீர்ப்பே வரும்" என்று பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த தீர்ப்பு குறித்த தனது கருத்தை பதிவு செய்துள்ள முன்னாள் பத்திரிக்கையாளர் சுவாமிநாதன் கோபாலகிருஷ்ணன் அவர்களின் கருத்து இதோ உங்களுக்காக



ஓபி எஸ் அணியின் தகுதி நீக்க வழக்கு தள்ளுபடியாம் . சபாழ் .

இதில் தீமுகவின் அரைவேக்காட்டுத்தனம் தான் தெரிகிறது 18 ஆண்டுகள் ஒரு குற்ற வழக்கை நடத்தத் தெரிந்த தீமுகவிற்கு சட்ட சபையின் சட்டம் தெரியவில்லையா ? ஐம்பதாண்டு காலம் சபை நடத்தியவர்களுக்கு சபையின் விதிமுறைகள் தெரியவில்லையா ? சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரமுண்டு என்ற ஒரு சபாநாயகரை அரசியலமைப்பிற்கு எதிராக செயல்பட்டால் நாங்கள் தலையில் குட்டுவோமென்று உயர்நீதிமன்றம் சொன்னதே அப்போது சபை நிர்வாகத்தில் நீதிமன்றம் தலையிடவில்லையா ? ஆளும் கட்சி அமைச்சரவை தன்சின்னத்தில் , தன் கட்சியில் நின்று வெற்றிபெற்ற வேட்பாளர்களிடம் நம்பிக்கை வாக்கு கோரும் போது பேசாமல் அமைதியாக இருந்தால் , வாக்கு எண்ணிக்கையில் அவர்களின் வாக்கு இல்லையானால் அதை அதிமுக அரசு எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் ? தன் மீது நம்பிக்கை இல்லையென்று தன் கட்சியிலேயே ஒரு சாரார் சொல்வதாகத்தானே எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் கட்சி கொறடாவின் உத்தரவை மீறியதாகத் தானே பொருள் கொள்ள வேண்டும் .தினகரன் அணிக்கு ஒரு மாதிரியாகவும் பன்னீர் அணிக்கு ஒரு மாதிரியாகவும் சபாநாயகர் உத்தரவிட முடியுமா ? இது அரசியலமைப்பு சட்டத்திற்கெதிரானது இல்லையா ? இதில் நீதிமன்றம் தலையிட்டு ஒரு தீர்வு சொல்லாமல் இதில் நீதிமன்றம் தலையிட முடியாது , சபாநாயகரின் தீர்ப்பே இறுதி ஆனது என்றால் ஏதோ உள் குத்து வேலை நடந்திருப்பதாகத் தானே அர்த்தம் . சபாழ் .... நீதிக்குத் தலைவணங்கு .

காவிரியில் காலம் கடத்த முயலும் மத்திய அரசு! புதிய மனு தாக்கல்

காவிரியில் காலம் கடத்த முயலும் மத்திய அரசு! புதிய மனு தாக்கல்
காவிரி நீர் பங்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், “காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித்தீர்ப்பை செயல்படுத்த ‘ஸ்கீம்’ (செயல் திட்டம்) ஒன்றை 6 வாரங்களுக்குள் மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளது.
இதற்கு தமிழக அரசு, காவிரி நடுவர் மன்றம் தனது தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகிய இரு அமைப்புகளையும் ‘ஸ்கீம்’ என குறிப்பிட்டுள்ளது. எனவே மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றம் குறிப்பிடும் ‘ஸ்கீம்’ காவிரி மேலாண்மை வாரியத்தை குறிக்கவில்லை. இது தீர்ப்பை செயல்படுத்த காவிரி மேற்பார்வை ஆணையத்தையே குறிக்கிறது என தெரிவித்தது.
இதுதொடர்பாக மவுனம் காத்த மத்திய அரசு, உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடு மார்ச் 29-ம் தேதியுடன் நிறைவடைந்த நிலை யில் புதிய மனுவை தாக்கல் செய்தது. அதில், “உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள ‘ஸ்கீம்’ என்பதன் பொருள் என்ன? அது காவிரி மேலாண்மை வாரியமாக இருந்தால், அதனை உருவாக்க கூடுதலாக‌ 3 மாதங்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் . கர்நாடகாவில் தேர்தல் நடைபெறுவதால் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும்” என குறிப்பிட்டு இருந்தது.
தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், “உச்ச நீதிமன்ற உத்தரவை அவமதித்த மத்திய அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் தமிழக விவசாயிகளுக்கு காவிரி நீர் கிடைப்பது சிக்கலாக மாறியுள்ளது” என தெரிவித்துள்ளது. 
இதனை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, “உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ‘ஸ்கீம்’ என்கிற வார்த்தைக்கு காவிரி மேலாண்மை வாரியம் என்பது பொருள் அல்ல. அது காவிரி நதிநீர் பிரச்சினைக்கு தீர்வு தரக்கூடிய மற்ற அம்சங்களையும் உள்ளடக்கியது. எனவே காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் முழுவதும் கிடைக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும்” என வாய்மொழியாக தெரிவித்தார்.
பின்னர் இந்த வழக்கு ஏப்ரல் 9ம் தேதி விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. தாங்கள் அளித்த தீர்ப்பை ஏன் செயல்படுத்தவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான மேலாண்மை திட்டத்தை தயாரித்து, வரைவு திட்டத்தை மே 3-ம் தேதிக்குள் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். உச்சநீதிமன்றத்தின் கெடு இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வரவுள்ள நிலையில் இன்று மத்திய அரசு "காவிரி மேலாண்மை தொடர்பான வரைவு" திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க மே 3 ந்தேதியிலிருந்து இரண்டு வார கால அவகாசம் கோரி புதிதாக மனுத் தாக்கல் செய்துள்ளது.

இந்த மனுவின் மீதான விசாரணை வருகின்ற மே 3 ந்தேதி நடைபெறுமென உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது!