Saturday, April 7, 2018

எடப்பாடியின் அரசியல் நகர்வுகள்! பகுதி 1

ad300
Advertisement

💚💚நன்றி ஆரா @Minnambalam.com

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைவிட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மூன்று வயது மூத்தவர். கிட்டத்தட்ட ஒரே செட்தான் இருவரும். ஆனாலும் எங்கு பார்த்தாலும் பன்னீரை, நேற்று (ஏப்ரல் 3ஆம் தேதி) நடந்த உண்ணாவிரதப் பந்தலில்கூட ‘அண்ணே அண்ணே’ என்றுதான் பாசம் ஒழுக அழைக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

அதேநேரம் எடப்பாடி தன்னை விட மூன்று வயது இளையவர் என்றாலும் எடப்பாடியைப் பதிலுக்கு ’அண்ணே’ என்றே அழைக்கிறார் பன்னீரும். இது யதார்த்தமான உரையாடலாக இருந்தாலும் இதன் பின்னே ஓர் ஆழ்ந்த அர்த்தம் இருக்கிறது.

இருவரும் அண்ணன்களாக இருக்கவே ஆசைப்படுகிறார்கள். அரசியலிலும் ஒருவருக்கொருவர் அண்ணன்களாக இருக்கவே ஆசைப்படுகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி தமிழக முதலமைச்சரானதும் அவரது நடவடிக்கைகள், அணுகுமுறைகள், செயல்பாடுகள் எல்லாமே மாறத் தொடங்கிவிட்டன. தனது தலைமையிலான இந்த ஆட்சியை முழு பதவிக் காலத்துக்கும் நிலை நிறுத்துவது மட்டுமல்ல; அடுத்த தேர்தலில் தன் நிலைப்பாடு என்ன என்பது பற்றிகூட எடப்பாடி இப்போது சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்.

சொந்தக் கட்சிக்குள் பன்னீரோடு நடத்தும் அரசியல் மட்டுமல்ல; கட்சியைக் கைப்பற்றத் துடிக்கும் டிடிவி தினகரன், ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கும் ஸ்டாலின், டெல்லியில் இருந்து முடிச்சுகளை இறுக்கிக்கொண்டே இருக்கும் மோடி என்று தன் மேல் எய்யப்படும் அனைத்து ஆயுதங்களில் இருந்தும் நழுவிக்கொண்டே இருக்கிறார் எடப்பாடி.

திராவிடக் கட்சி முதல்வர்கள் எதிர்கொள்ளாத புதுவித நெருக்கடியையும், எவரும் எதிர்கொள்ளாத விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறார் எடப்பாடி.

இன்றும் வெள்ளிக்கிழமையானால் விமானம் பிடித்து சேலம் சென்றுவிடும் எடப்பாடி திங்கட்கிழமைதான் சென்னை வருகிறார். ஓர் அமைச்சர் எப்படி விடுமுறையைச் சொந்த ஊர் சென்று அனுபவிக்கிறாரோ, அதேபோல் இவரும் சொந்த ஊருக்குச் சென்றுவிடுகிறார். ஆனபோதும் டெல்லி முதல், சசிகலா பரோலில் வந்து தங்கிய தஞ்சை வரை தனக்கு எதிராக ஏவப்படும் அனைத்துப் பந்துகளிலும் சிக்சர் அடிக்கிறாரோ இல்லையோ, அவுட் ஆகாமல் இருக்கிறார்.

இது எப்படி? எடப்பாடி தன்னைத் தக்கவைத்துக் கொள்வது எப்படி? இந்த ஆட்சியை மட்டுமல்ல, அடுத்த ஆட்சியையும் நாமே அமைக்கலாம் என்று இப்போதும் நம்பிக்கையோடு இருக்கும் எடப்பாடியின் ஆட்ட வியூகம் என்ன? தன்னை மையமாக வைத்து அவர் பின்னுகிற அரசியல் வலைகள் என்ன?

இதுதான் இந்த மினி தொடரின் முன் குறிப்பு!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீரையும் குடும்ப ஆதிக்கத்தை மீட்ட நாயகர்களாக ஒரு குழு சித்திரிக்கிறது. நயவஞ்சக துரோகிகளாக இன்னொரு பக்கம் தினகரன் அணியினரால் இவர்கள் சித்திரிக்கப்படுகிறார்கள்.

2017ஆம் ஆண்டின் பிப்ரவரி 7ஆம் தேதியும், ஆகஸ்ட் 21ஆம் தேதியும் தமிழ்நாட்டு அரசியலில் மிக முக்கியமான தினங்கள். பிப்ரவரி 7ஆம் தேதி தர்ம யுத்தம் தொடங்கிய நாள். சசிகலா குடும்பத்தின் கட்டுப்பட்டி பிள்ளையாகவே இருந்த ஓ.பன்னீர், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுமாறு கோரப்பட்டார். அந்த இடத்துக்கு சசிகலா வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்தன.

போயஸ் கார்டனுக்குச் சென்று பின் தன் வீட்டுக்குத் திரும்பிய ஓ.பன்னீர் செல்வம், 2017 பிப்ரவரி 7ஆம் தேதி மெரினாவில் இருக்கும் ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்றார். கடந்த ஒன்றரை வருடங்களாக அதிமுகவினர் அனைத்து நாடகங்களுக்கும் மேடை இந்த மெரினா நினைவிடம்தான். அன்று இரவு ஒன்பது மணிக்குத் தனது தியானத்தைத் தொடங்கிய ஓ.பன்னீர் செல்வம் பின் செய்தியாளர்களிடம் சில விஷயங்களை உடைத்தார். அவர் உடைத்தவற்றில் அதிமுக என்ற கட்சியும் ஒன்று.

அந்தத் தர்ம யுத்தத்தின் முடிவுதான் ஆகஸ்ட் 21 ஆம் தேதி மீண்டும் மெரினாவில் எழுதப்பட்டது. ஆம்... பன்னீரும் அவரோடு இருக்கும் 11 எம்.எல்.ஏக்களும் ஆறு மாத காலத்துக்கும் மேலாக அரசாங்கத் தொடர்பு இல்லாமல் அவஸ்தைப்பட்டதால் ஆகஸ்ட் 21ஆம் தேதி காலை பன்னீரும், எடப்பாடியும் அதிமுக தலைமைக் கழகத்தில் இணைந்தனர். அதன்பின் ஜெயலலிதாவின் சமாதிக்கு ஆறு மலர் வளையங்கள் கொண்டுவரப்பட்டன.

பன்னீர் அணி சார்பில் மூன்று மலர் வளையங்கள். எடப்பாடி அணி சார்பில் மூன்று மலர் வளையங்கள்!

‘என்னை எத்தனை முறைதான் சாகடிப்பீர்கள்..?’ என்று சமாதிக்குள் இருந்து ஜெயலலிதா எழுப்பிய கேள்வி, ‘அண்ணன் எடப்பாடி வாழ்க, அண்ணன் ஓபிஎஸ் வாழ்க, இரட்டைக் குழல் துப்பாக்கிகள் வாழ்க’ என்ற கோஷங்களுக்கு இடையே சில்லு சில்லாக உடைந்து போனது.

2017 பிப்ரவரி 7ஆம் நாள் தர்ம யுத்தம் தொடங்கிய நாள். ஆனால், ஆகஸ்ட் 21ஆம் தேதி தர்ம யுத்தம் முடிந்த நாள் என்று பொதுவாகச் சொன்னாலும், எடப்பாடிக்கும் பன்னீருக்கும் மர்ம யுத்தம் தொடங்கிய நாளே ஆகஸ்ட் 21.

ஆம்... இன்றுவரை எடப்பாடியும் பன்னீரும் ‘தண்ணீருக்கும் மண்ணெண்ணெய்க்கும் கல்யாணமாம் சாமீ’ என்ற பாடல் வரிகளைப் போலத்தான் பட்டும்படாமல் இருக்கிறார்கள்.

எடப்பாடியும் பன்னீரும் வெளியே இணைந்துவிட்டார்கள். கட்சி ரீதியாக, அரசு நிர்வாக ரீதியாக இந்த இணைப்பு சாத்தியமாகியிருக்கிறதா? இருவருக்குள்ளும் இப்போது என்ன நடக்கிறது? பன்னீரைத் தாண்டி மற்ற கட்சிகளுடனான எடப்பாடியின் அரசியல் விளையாட்டுகள் என்ன? அதனால் அதிமுகவுக்கு உள்ளும் புறமும் நடக்கும் அதிர்வுகள் என்ன?

பார்க்கத்தான் போகிறோம்...

😃😃😃தொடரும்..........

https://minnambalam.com/k/2018/04/04/35
Share This
Previous Post
Next Post

Pellentesque vitae lectus in mauris sollicitudin ornare sit amet eget ligula. Donec pharetra, arcu eu consectetur semper, est nulla sodales risus, vel efficitur orci justo quis tellus. Phasellus sit amet est pharetra