Thursday, April 26, 2018

18 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை ஆனார்- வீரப்பன்.



யானை தந்தம் கடத்தியது தொடர்பாக சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் கடந்த 18 ஆண்டுகளாக நடந்த வழக்கில், குற்றம் நிரூபிக்கப்படாததால் சந்தனக் கடத்தல் வீரப்பன் உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனக்கோட்டம் கொண்டப்பநாயக்கன்பாளையம் வனப்பகுதியில் உள்ள பில்பாளி என்ற இடத்தில் நாட்டுத்துப்பாக்கியை பயன்படுத்தி யானைகளைக் கொன்று, 12 தந்தங்களைக் கடத்தியதாக புகார் எழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக புளியங்கோம்பையைச் சேர்ந்த ஆறுமுகம், பெரியகுளத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ், சண்முகம் (45), ஜவகர் (50), ராஜேந்திரன் (42) ஆகியோரை அதிரடிப்படையினர் பிடித்து சத்தியமங்கலம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இவர்கள் 5 பேருடன் சந்தன கடத்தல் வீரப்பன், வீரப்பன் கூட்டாளியான சிக்கரசம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரகவுடா ஆகிய 7 பேர் மீது கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் வனத்துறை வழக்குப் பதிவு செய்தது.
சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய வீரப்பன், சந்திரகவுடா மற்றும் பெரியகுளத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் ஆகிய 3 பேரும் ஏற்கெனவே இறந்துவிட்டனர். இந்நிலையில், நேற்று இவ்வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.
வனத்துறையினர் தகுந்த ஆதாரத்துடன் குற்றத்தை நிரூபணம் செய்யாததால், புளியங்கோம்பை ஆறுமுகத்தை தவிர மற்ற 6 பேரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்வதாக சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி குமாரசிவம் தீர்ப்பளித்தார். புளியங்கோம்பை ஆறுமுகம் வழக்கில் ஆஜராகாததால், அவர் மீது மட்டும் தொடர்ந்து வழக்கு நடைபெறும் என நீதிபதி உத்தரவிட்டார்.
Share:

Labels

Blog Archive

Unordered List

Definition List