Thursday, April 12, 2018

2019 ல் தமிழகத்தில் பொதுத்தேர்தல்? மத்திய சட்ட ஆணையம் திட்டம்!



புதுடெல்லி: அடுத்தாண்டு நடைபெறும் மக்களவை தேர்தலுடன் தமிழகம் உட்பட 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடத்தலாம் என மத்திய சட்ட ஆணையம் வரைவு திட்டம் தயாரித்துள்ளது. மீதமுள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு 2024ல் தேர்தல் நடத்தவும் பரிந்துரை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இது தவிர, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களவை தேர்தலும் நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டால், அந்த மாநிலங்களில் அரசின் நலத்திட்டங்கள் எதையும் செயல்படுத்த முடியாமல் போகிறது. மேலும், நிதி விரையமும் அதிகளவில் நடக்கிறது.எனவே, நாடாளுமன்றத்துக்கும், சட்டப்பேரவைக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்துவதை விட நாடு முழுவதும் ஒரே நேரத்தில் இரு தேர்தல்களையும் நடத்தினால், அரசுக்கு செலவு குறையும் என பிரதமர் மோடி பல ஆண்டுகளாக கூறி வருகிறார். இந்த தேர்தல் சீர்திருத்தத்தை பற்றி ஆலோசிக்க அரசியல் கட்சிகள் முன்வர வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், இந்த விஷயத்தில் அரசியல் கட்சிகள் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. மாறுபட்ட கருத்துகளை தெரிவிக்கின்றன.

இதுபோல், ஒரே நேரத்தில் இரு தேர்தல்களையும் நடத்துவது சாத்தியம்தான். ஆனால் இதற்காக அரசியல் சாசனத்தில் 5 மாற்றங்களை செய்ய வேண்டும் என மத்திய சட்ட அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் கடந்த பிப்ரவரியில் கூறியது. ஒரே நேரத்தில் இரு தேர்தல்களையும் நடத்தும் முறையை இந்தாண்டு செப்டம்பர் முதல் அமல்படுத்த சாத்தியம் இருக்கிறது என தேர்தல் ஆணையம் கடந்தாண்டு கூறியபோது, அதை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நிராகரித்து விட்டார்.இந்நிலையில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற மத்திய அரசின் கருத்துக்கு உருவம் கொடுக்கும் வகையிலான, ‘வரைவு திட்டம்’ ஒன்றை மத்திய சட்ட ஆணையம் தயாரித்துள்ளது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
˜ தமிழகம், கேரளா, ஆந்திரா, அசாம், பீகார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலங்களுக்கு 2021ம் ஆண்டில்தான் அடுத்த சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்கள் உட்பட 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை முதல் தொகுப்பாக பிரித்து, அவற்றுக்கான சட்டப்பேரவை தேர்தல்களை அடுத்தாண்டு நடைபெறும் மக்களவை தேர்தலுடன், அதாவது இரண்டு ஆண்டுகள் முன்கூட்டியே நடத்தலாம்.˜ இரண்டாவது தொகுப்பில் உத்தரப் பிரதேசம், குஜராத், கர்நாடகா, டெல்லி, பஞ்சாப், மிசோரம் உள்ளிட்ட இதர மாநிலங்களுக்கு 2024ம் ஆண்டு நடக்கும் மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலைநடத்தலாம்.

˜ அதாவது, முதல் தொகுப்பில் உள்ள மாநிலங்களுக்கு பதவிக் காலம் முடிவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவும், 2வது தொகுப்பில் உள்ள மாநிலங்களுக்கு பதவிக் காலம் முடிந்தும் 2 ஆண்டுகள் கழித்தும் மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தல் நடத்தலாம். இப்படி செய்தால், 2024ல் இருந்து நாடு முழுவதும் ஒரே நேரத்தில் இரு தேர்தல்களையும் நடத்தும் நடைமுறை எளிதாக அமலாகிவிடும். ˜ இரண்டாவது தொகுப்பில் உள்ள மாநிலங்களுக்கு பதவிக் காலத்துக்குப் பிறகு 2 ஆண்டுகள் கழித்து தேர்தல் நடத்த வேண்டும் என்றால், அரசியல் சாசனம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் (1951) திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். இது சாத்தியம் இல்லை என்றால், அடுத்தாண்டு நடைபெறும் முதல் தொகுப்பு மாநிலங்களுக்கான தேர்தல் முடிந்து 30 மாதங்கள் கழித்து, இரண்டாவது தொகுப்பில் உள்ள மாநிலங்களுக்கு தேர்தல் நடத்தலாம்.

˜ மேலும், எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து நேரத்தை வீணடிப்பதை தவிர்க்க, நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு பதில், ‘ஆக்கப்பூர்வமான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு’ நடைமுறையை கொண்டு வரவேண்டும். இதில், நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கு பதிலாக, ஆட்சி அமைப்பதற்கான பலத்தை எதிர்க்கட்சிகள் நிரூபிக்க வேண்டும். அப்படி செய்தால்தான், தற்போதுள்ள ஆட்சியை வெளியேற்ற முடியும்.˜ வரைவு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள இந்த பரிந்துரைகள் பற்றி, வரும் 17ம் தேதி நடைபெறும் சட்ட ஆணையத்தின் முழு உறுப்பினர்கள் குழுவில் விவாதிக்கப்பட உள்ளது. அதில் கூறப்படும் ஆலோசனைகள் அடிப்படையில், வரைவு திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படும். பின்னர், முழு அளவிலான இறுதி பரிந்துரை அறிக்கை, மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் 2019 ல் பொதுத் தேர்தல் சாத்தியமாகுமா? விரைவில்.
Share:

Labels

Blog Archive

Unordered List

Definition List