Saturday, April 14, 2018

போற்றுதலுக்கும் தூற்றுதலுக்கும் அஞ்சாத சிம்ம ராசி அன்பர்களே!இந்த ஆண்டு பிறக்கும்போது புதன் சாதகமாக இருப்பதால் உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும்.சுக்கிரன் 9-ம் வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி, வாஷிங் மெஷின் புதிதாக வாங்குவீர்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப நல்ல காற்றோட்டம், குடிநீர் வசதி உள்ள வீட்டுக்குக் குடிபுகுவீர்கள். இந்த ஆண்டு ஆரம்பம் முதல் 03.10.2018 வரை குரு பகவான் 3-ம் வீட்டில் மறைந்திருப்பதால் சில காரியங்களை இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும்.

சில நேரத்தில் உணர்ச்சிவசப்பட்டு சிலரைக் கடிந்து கொள்வீர்கள். 04.10.2018 முதல் 12.03.2019 வரை குரு உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்வதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். தாய்வழிச் சொத்தைப் போராடிப் பெற வேண்டி வரும். ஆனால், 13.03.2019 முதல் வருடம் முடியும்வரை குரு பகவான் அதிசார வக்கிரமாகி 5-ல் அமர்வதால் பணப்பற்றாக்குறை தீரும். வாடகை வீட்டில் உள்ள சிலர் சொந்த வீடு கட்டுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு.

இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் 5-ல் நீடிப்பதால் குடும்பச் சூழ்நிலையை அவர்களிடம் அன்பாக எடுத்துச் சொல்லிப் புரியவையுங்கள். மகனின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாக முடியும். பூர்வீகச் சொத்துக்கான வரியைச் செலுத்தி சரியாகப் பராமரியுங்கள். 14.04.2018 முதல் 12.02.2019 வரை உங்கள் ராசிக்கு 12-ல் ராகு தொடர்வதால் நீண்ட நாட்களாகப் போக நினைத்த குலதெய்வக் கோயிலுக்குக் குடும்பத்தினருடன் சென்று நேர்த்திக் கடனைச் செலுத்துவீர்கள்.

கேதுவும் 6-ம் வீட்டில் நிற்பதால் மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். சொந்தபந்தங்கள் மதிக்கும்படி நடந்துகொள்வீர்கள். 13.02.2019 முதல் வருடம் முடியும்வரை ராகு, லாப வீட்டில் அமர்வதால் செல்வாக்கு கூடும். ஆனால், கேது 5-ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். மகனின் நட்பு வட்டத்தைக் கண்காணிப்பது நல்லது.

30.04.2018 முதல் 27.10.2018 வரை செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து 6-ல் நிற்பதால் வீடு, மனை வாங்குவீர்கள். தாய்வழியில் மதிப்பு, மரியாதை கூடும். நாடாளுபவர்கள், அரசு அதிகாரிகளால் ஆதாயமடைவீர்கள். கடனாகவும், கைமாற்றாகவும் காசு புரட்டி புது வீடு கட்டிக் குடிபுகுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும்.

25.02.2019 முதல் 21.03.2019 வரை உள்ள காலகட்டங்களில் சுக்கிரன் 6-ல் மறைவதால் குடும்ப விஷயங்களை வெளியாட்களிடம் சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம். உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள்.

வியாபாரத்தில் போட்டிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் சில உத்திகளைக் கையாளுவீர்கள். சந்தை நிலவரமறிந்து லாபத்தைப் பெருக்குவீர்கள். சித்திரை, ஆனி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். விளம்பர உத்திகளைக் கையாண்டு லாபத்தை இரட்டிப்பாக்குவீர்கள். ஆவணி, கார்த்திகை மாதங்களில் பங்குதாரர்களுடன் பிரச்சினை நீங்கும்.

உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் சித்திரை, ஆனி மாதங்களில் உண்டு. அவ்வப்போது வேலைச்சுமை, டென்ஷன் என வந்தாலும் கலகலப்பான சம்பவங்களும் உண்டு. உயரதிகாரியுடன் நெருக்கமாக இருந்தாலும் சக ஊழியர்களால் தொந்தரவு உண்டு.

இந்த விளம்பி ஆண்டு அடுத்தடுத்து வேலைச்சுமையால் ஆரோக்கியத்தைக் குறைத்தாலும், அவ்வப்போது வெற்றியையும் வளர்ச்சியையும் தரும்.

பரிகாரம்: காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டிலிருந்து சென்னை செல்லும் வழியில் சிங்கபெருமாள் கோயிலில் வீற்றிருக்கும் ஸ்ரீநரசிம்மரை ஏகாதசி திதி நாளில் தீபமேற்றி வணங்குங்கள்.
Share:

Labels

Blog Archive

Unordered List

Definition List