Wednesday, April 11, 2018

மோடி இன்று சென்னை வருகை ! கருப்பு கொடி காட்ட அனைத்து கட்சிகள் திட்டம் ?சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் உச்சகட்டத்தை எட்டி வரும் நிலையில், பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். மாமல்லபுரத்தில் நடைபெறும் ராணுவ கண்காட்சியை பார்வையிடுகிறார். அவர் வருகையை முன்னிட்டு சென்னை முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதேநேரத்தில் அவருக்கு கருப்பு கொடி காட்ட திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தை கிழக்கு கடற்கரை சாலையில் 11ம் தேதி (நேற்று) முதல் 14ம்தேதி வரை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் சார்பில் ராணுவ கண்காட்சி நடக்கிறது. இதற்காக சுமார் 250 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.480 கோடி செலவில் பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை பார்வையிடுவதற்காக ஒரு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாமல்லபுரம் வருகிறார்.

அதன்படி, இன்று காலை 6.40 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் பிரதமர் மோடி புறப்படுகிறார். காலை 9.20 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வரும் பிரதமருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள் வரவேற்பு அளிக்கின்றனர்.
அதன்பின், 9.25 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு 9.50 மணிக்கு மாமல்லபுரம் செல்கிறார். காலை 9.55 மணியளவில் ஹெலிபேடிலிருந்து காரில் புறப்படும் அவர் காலை 10 மணிக்கு திருவிடந்தை ராணுவ கண்காட்சி திடலுக்கு வருகிறார். காலை 10 முதல் 12 மணி வரை ராணுவ கண்காட்சி தொடக்க விழாவில் பங்கேற்கிறார். பகல் 12.05 மணிக்கு கார் மூலம் ஹெலிபேடு செல்கிறார். பகல் 12.10 மணிக்கு ஹெலிபேடு வருகை தரும் அவர் பகல் 12.15 மணி ஹெலிகாப்டரில் சென்னை அடையாறில் உள்ள ஐஐடி வளாகத்திற்கு புறப்பட்டு செல்கிறார்.

பகல் 12.40 மணிக்கு சென்று அங்கிருந்து கேன்சர் இன்ஸ்டியூட் வருகிறார். பகல் 1 மணிக்கு கேன்சர் இன்ஸ்டியூட் வைர விழா கட்டிடம் திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார். அதன்பின்னர் ஐஐடி வளாகத்தில் நிருபர்களை பிரதமர் மோடி சந்திக்கிறார். பின்னர் பகல் 2.05 மணிக்கு அங்கிருந்து ஹெலிகாப்டரில் விமானநிலையம் செல்கிறார். பின்னர் தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார். பிரதமர் மோடி வருகைக்கான பாதுகாப்பு ஒத்திகை நேற்று காலை நடந்தது. தமிழகம் முழுவதும் தற்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கடந்த 10 நாட்களாக திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகள், பல்வேறு இயக்கத்தை சேர்ந்தவர்கள் வியாபாரிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு எதிராகவும் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது.இந்த நிலையில் இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்ற வேண்டும் என்றும், அன்றைய தினம் அனைவரும் கருப்பு சட்டை அல்லது கருப்பு பேட்ஜ் அணிந்து பிரதமருக்கு எதிராக தங்கள் கருத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அனைத்துக்கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் இருந்து விமான நிலையம் வரை திமுக உள்ளிட்ட கட்சிகள் கருப்பு கொடி போராட்டம் நடத்துகிறது. இதனால், சாலை பயணத்தை தவிர்த்து ஹெலிகாப்டரில் மோடி செல்வதால், வானில் அதிகளவில் கருப்பு பலூன்களையும் பறக்க விட தமிழக வாழ்வுரிமை கட்சி முடிவு செய்துள்ளது.விமான நிலையம் முதல் ராணுவ கண்காட்சி நடைபெறும் திடல் வரை சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் கமிஷனர்கள் சாரங்கன், ஜெயராம், அருண், வடக்கு மண்டல ஐஜி தர், டிஐஜி தேன்மொழி, எஸ்பிக்கள் சந்தோஷ், சிபி சக்கரவர்த்தி மற்றும் 5000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.இதுதவிர, பிரதமர் கலந்து கொள்ளும் விழா நிகழ்ச்சி நடைபெறும் இடம் மற்றும் அவர் பயணம் செய்யும் இடங்களில் போராட்டங்களை தடுக்க உளவுப்பிரிவு போலீசார் ஏராளமானோர் சாதாரண உடையில் நிறுத்தப்பட்டு கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சாலை பயணம் தவிர்த்த மோடி
பிரதமர் மோடி சென்னை விமானநிலையத்தில் இருந்து கண்காட்சி நடக்கும் திருவிடந்தைக்கு ஹெலிகாப்டரில் செல்கிறார். அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டரில் விமானநிலையம் வந்து, கார் மூலம் ஐஐடி வளாகத்திற்கு வருவதாக திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த திட்டம் கைவிடப்பட்டு, ஹெலிகாப்டரிலேயே அடையாறில் உள்ள ஐஐடி வளாகத்தில் வந்து இறங்குகிறார்.

ஐஐடிக்கும் அடையாறு கேன்சர் இன்ஸ்ட்டியூட்டுக்கும் இடையே உள்ள காம்ப்பவுண்ட் சுவர் நேற்று இடிக்கப்பட்டது. பின்னர் புதிதாக சாலை போடப்பட்டுள்ளது. ஐஐடி வளாகத்திற்குள்ளிருந்து காரில் கேன்சர் இன்ஸ்ட்டியூட் செல்கிறார். சாலைக்கு வெளியே அவர் வரவில்லை. தொண்டர்களையோ, மக்களையோ அவர் பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கருப்பு கொடி போராட்டம் காரணமாகவே சாலை பயணத்தை மோடி தவிர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
Share:

Labels

Blog Archive

Unordered List

Definition List