Friday, April 13, 2018

பிறந்தது "விளம்பி" ! நடக்கப் போவது என்ன?

ad300
Advertisement
மங்களகரமான விளம்பி வருடம் வசந்த ருதுவுடன், உத்தராயணப் புண்ய காலம் நிறைந்த சனிக்கிழமை காலை 06மணி 55 நிமிடத்துக்கு 14.4.2018 கிருஷ்ண பட்சத்தில் திரயோதசி திதி, உத்திரட்டாதி நட்சத்திரம் முதல் பாதம், மீனம் ராசியில், மேஷம் லக்னத்திலும், நவாம்சத்தில் சிம்மம் லக்னம், சிம்மம் ராசியிலும் மாஹேந்திரம் நாமயோகம், வணிசை நாம கரணத்திலும், சனி பகவான் ஓரையிலும், நேத்திரம் ஜீவன் மறைந்த பஞ்ச பட்சிகளில் மயில் ஊண் செய்யும் காலத்திலும், சனி மகாதசையில் சனி புத்தியிலும், கேது அந்தரத்திலும் வெற்றிகரமாகப் பிறக்கிறது.

இந்த ஆண்டில் ராஜாவாக சூரியன் வருவதால் பணத் தட்டுப்பாடு குறையும். விழுந்து கிடக்கும் ரியல் எஸ்டேட் ஓரளவு சூடுபிடிக்கும். மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு சவால்கள் அதிகரிக்கும். காவல் துறை குறைகள் களையப்படும். மந்திரியாகச் சனி பகவான் வருவதால் மலைக் காடுகள் அழியும். வன விலங்குகளின் எண்ணிக்கை குறையும். அரிய உயிரினங்கள் அழியும். புதைந்து கிடக்கும் பழைய ஐம்பொன் சிலைகள் வெளிப்படும். அர்க்காதிபதியாகவும், சேனாதிபதியாகவும், மேகாதிபதியாகவும் சுக்கிரன் வருவதால் கலையுணர்வும் குறுக்குவழியில் சம்பாதிக்கும் குணமும் சுற்றுலா, பொழுதுபோக்கில் ஆர்வமும் அதிகரிக்கும்.

மேகாதிபதியாக சுக்கிரன் வருவதால் புயல் சின்னம் அதிகம் உருவாகும். புயலுடன் அதிக மழை பொழியும். மாலை மற்றும் இரவு நேரங்களில் மழைப் பொழிவு அதிகம் இருக்கும். வருடம் பிறக்கும்போது சுக்கிரன் சூரியனுடன் சேர்ந்து காணப்படுவதால் பருவ மழை சீராக இருக்காது. பருவம் தவறி மழை பொழியும். சேனாதிபதியாக சுக்கிரன் வருவதால் ராணுவத் துறையில் இருப்பவர்களுக்குச் சம்பளம் அதிகரிக்கப்படும்.

சுனாமி, நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களைக் கண்டறிய பிரத்யேக நவீன புதிய செயற்கைக் கோள் இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் விண்ணில் ஏவப்படும். இரசாதிபதியாக குரு வருவதாலும் அந்தக் குருவைச் சுக்கிரன் சமசப்தமமாகப் பார்ப்பதாலும் சர்க்கரை, பனங்கற்கண்டு, வெல்லம், கருப்பட்டியின் விலை உயரும்.

விளம்பி வருடப் பிறப்பு ஜாதகத்தில் லக்னாதிபதி செவ்வாயுடன் பாதகாதிபதி சனி பகவான் சேர்ந்து காணப்படுவதால் மின்கசிவால் தீ விபத்துகளும் அழிவும் ஏற்படும். விளைநிலத்தின் பரப்பளவு புதிய தொழிற்சாலைகளின் வரவால் குறையும். தனசப்தமாதிபதியாக சுக்கிரன் வருவதால் மக்களிடையே சேமிக்க முடியாத நிலை ஏற்படும். விவாகரத்துகள் அதிகரிக்கும். பாக்யவிரையாதிபதியாகக் குரு வருவதாலும், குரு வக்ரம் பெற்று நிற்பதாலும் மேலும் சில வங்கி மோசடிகள் கண்டறியப்படும்.

குரு பகவானின் வீடான மீன ராசியிலும், சனி பகவானின் நட்சத்திரமான உத்திரட்டாதியிலும், செவ்வாயின் வீடான மேஷ லக்னத்திலும் இந்த ஆண்டு பிறப்பதால் மகான்கள், சித்தர்களின் ஜீவ சமாதிகளுக்குச் சென்று பிரார்த்தனை செய்வது அனைத்து விதமான யோகங்களையும் தரும்.
Share This
Previous Post
Next Post

Pellentesque vitae lectus in mauris sollicitudin ornare sit amet eget ligula. Donec pharetra, arcu eu consectetur semper, est nulla sodales risus, vel efficitur orci justo quis tellus. Phasellus sit amet est pharetra