Thursday, April 26, 2018

துணை முதல்வருக்கு துரைமுருகன் பதில்! காவிரி விவகாரத்தில் நாடகமாட வேண்டாம் என எச்சரிக்கை!

ad300
Advertisement
image
உங்கள் முகத்தில் உள்ள கரியைத் துடையுங்கள். அடுத்தவர் முதுகில் மச்சம் இருக்கிறதா என எட்டிப் பார்க்காதீர்கள். இந்த நொடி வரை காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்து வருவது அதிமுகதான் என்று துணை முதல்வர் ஓபிஎஸ்ஸுக்கு திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் பதில் அளித்துள்ளார்.

சர்க்காரியா கமிஷனுக்குப் பயந்து காவிரி ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் திமுக துரோகம் செய்துவிட்டது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகும், சொந்தக் கட்சியின் தேர்தல் லாபத்திற்காகத் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசுக்கு அழுத்தம் தரவோ கண்டிக்கவோ இயலாத அதிமுக ஆட்சியாளர்கள், திமுக மீது அவதூறுச் சேற்றை வாரி இறைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். திமுகவும் அதன் தோழமைக் கட்சியினரும் இணைந்து பொதுமக்களின் பேராதரவுடன், குறிப்பாக காவிரி டெல்டா விவசாயிகள், வணிகர்கள், தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் வரவேற்புடன் வெற்றிகரமாக நடத்திய காவிரி உரிமை மீட்புப் பயணத்தின் தாக்கத்தைப் பொறுக்க முடியாமல் டெல்டா மாவட்டங்களில் முதல்வரும் துணை முதல்வரும் மற்ற அமைச்சர்களும் பொதுக்கூட்டம் போடுகிறார்கள். பேசுவதற்கு அவர்கள் வந்தாலும், கேட்பதற்கு ஆள் இல்லாத நிலையில், திமுக மீது வசை பாடிவிட்டுப் போகிறார்கள்.

அக்கம்பக்கத்து வீடுகளில் அகப்பட்டதை சுருட்டிக் கொண்டு, அகப்பட்டுவிடக்கூடாது என்று ஓடுகிற நபர், “திருடன்.. திருடன்..” எனக் கத்திக்கொண்டே ஊரார் கவனத்தை வேறு பக்கம் திசை திருப்ப நினைத்ததுபோல, நாகப்பட்டினத்தில் பேசிய, பதவி வாங்குவதற்காகவே தர்மயுத்தம் நடத்திய துணை முதல்வர் ஓபிஎஸ், “சர்க்காரியா கமிஷனுக்குப் பயந்து காவிரி ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் திமுக துரோகம் செய்துவிட்டது” என்ற அரதப் பழசான பாட்டையே பாடியிருக்கிறார். அவருடைய அவதூறு கச்சேரி களைகட்டவில்லை. எப்படி களைகட்டும்? இதே அவதூறை அவருக்கு முதன்முதல் அமைச்சர் பதவி கொடுத்த அன்றைய முதல்வர் ஜெயலலிதாவே சட்டப்பேரவையில் சொல்லிவிட்டு, அதன்பிறகு தனக்கு டங் ஸ்லிப் ஆகிவிட்டது என்றும், தானும் மனுஷிதானே என்றும் வருத்தம் தெரிவித்த வரலாறு உண்டு.

ஓபிஎஸ்ஸூக்கு வரலாறும் தெரியாது. உண்மை நிலவரமும் புரியாது. பொய்யையும் புரட்டையும் பேசி, திமுக மீது பழிபோடுவதாக நினைத்து, மல்லாந்து படுத்து எச்சில் துப்பியிருக்கிறார். காவிரி பிரச்சினை தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஒரு தலையாய பிரச்சினை. கர்நாடகம், கேரளா மாநிலங்களுக்கும் இதே நிலைதான். 1924 ஆம் ஆண்டிற்கு முன்பிருந்தே இந்த பிரச்சினை தொடங்கிவிட்டது எனலாம்!

1967 ஆம் ஆண்டுக்கு முன்னால், கர்நாடகம் காவிரியை ஏகபோக சொத்தாகக் கருதி, காவிரியிலும் - அதன் துணை நதிகளிலும், அவர்கள் நினைத்த வண்ணம் தண்ணீரை மடக்கி, அனுபவித்து வந்தார்கள். 1967-ல் அறிஞர் அண்ணா தமிழகத்தின் முதல்வராக வந்தபோது, அவரது அமைச்சரவையில் பொதுப்பணித் துறை அமைச்சராக அமர்ந்தவர்தான் தலைவர் கருணாநிதி. 1924 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை கரத்தில் ஏந்திக்கொண்டு கர்நாடகத்தை நோக்கி, காவிரிக்காக முதல் உரிமைக்குரல் எழுப்பிய ‘முதல்’அமைச்சர் தலைவர் கருணாநிதிதான்!

கர்நாடக முதல்வராக இருந்த வீரேந்திரா பாட்டீலோடு பேச்சுவார்த்தை நடத்தியதுடன், 1924ல் போடப்பட்ட ஒப்பந்தம் காலாவதியாகவில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டை எடுத்தவரும் கருணாநிதிதான். 35 முறை கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியும் பயனில்லாத நிலையில், காவிரி விவகாரத்தை தீர்த்துவைத்திட நடுவர் மன்றம் தேவை என்பதற்காக சட்டப்பேரவையில் முதன்முதலாக தீர்மானம் நிறைவேற்றியதுடன், இந்தியப் பிரதமராக சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் இருந்தபோது, நடுவர் மன்றத்தை அமைத்துக் காட்டியவரும் கருணாநிதிதான். அந்த நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு, இறுதித் தீர்ப்பு அனைத்தும் கிடைப்பதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டதும் கருணாநிதி அரசுதான். இடைப்பட்ட காலத்தில், கர்நாடக அரசுடன் பேசி, மேட்டூர் அணையை குறிப்பிட்ட நேரத்தில் திறக்கும் வகையில் தண்ணீர் கிடைக்கச் செய்து டெல்டா மாவட்டங்களை செழிக்க வைத்ததும் திமுக அரசுதான்.

இந்த மாபெரும் காரியங்களை, கருணாநிதி நடத்திக் கொண்டிருந்த போது, அரசியல் அரிச்சுவடிகூட தெரியாதவர்கள் எல்லாம், தலைவர் கருணாநிதியைப் பார்த்து ஏகடியம் பேசுகிறார்கள். தலைவர் கருணாநிதியுடன் 50 ஆண்டுகாலமாக அருகிலிருப்பதுடன், அவரது அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவன் என்பதால் காவிரி உரிமைக்காக கருணாநிதியும் திமுக அரசும் எடுத்த ஒவ்வொரு நடவடிக்கையையும் அறிந்தவன் நான்.

கருணாநிதியின் செயல்பாடுகளை பட்டியல் போட்டு சொல்ல முடியும். ஆள் இல்லாத கடைக்கு முதலாளியான ஓபிஎஸ் ஆதாரத்துடன் பேச முடியுமா?

சர்க்காரியாக கமிஷனுக்கு பயந்து 1974-ல் காவிரி ஒப்பந்தத்தை புதுப்பிக்கவில்லை என்று ஜெயலலிதா போலவே தவறாகப் பேசுகிறீர்களே? சர்க்காரியா கமிஷன் என்பது 1976-ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டபிறகு போடப்பட்ட பழிவாங்கும் கமிஷன். அதில் புகார் கொடுத்த அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரே, தன்னிடம் எந்த ஆதாரமும் இல்லை என்று கமிஷன் விசாரணையில் சாட்சியம் அளித்துவிட்டுப் போய்விட்டார். 1976-ல் போடப்பட்ட சர்க்காரியா கமிஷனுக்காக 1974-ல் ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கவில்லை என்பதிலிருந்தே வரலாற்றுப் பாடத்தில் நீங்களும் உங்கள் கட்சியைச் சார்ந்தவர்களும் எவ்வளவு வீக் என்பது தெரிகிறது.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பிலும் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பிலும் 1924-ல் போடப்பட்ட ஒப்பந்தம் செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருப்பதிலிருந்தே, 1974-ல் கருணாநிதி அரசு எடுத்த உறுதியான நிலைப்பாடு தமிழகத்தின் நலன் சார்ந்தது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதன் பிறகும் அதிமுக ஆட்சியாளர்கள் பொய் நெல் குத்தி பிழைப்பு நடத்த முடியாது. காவிரி உரிமையை காக்க கருணாநிதி எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் வெற்றி பெற்றிருக்கிறது. தற்போது செய்ய வேண்டியது, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டியதுதான். அதை மத்திய அரசு அமைப்பதற்கு, மாநில ஆட்சி அதிகாரத்தில் உள்ள நீங்கள்தான் வலியுறுத்த வேண்டும். ஆனால், அதிமுக ஆட்சி இரட்டை வேடம் போடுகிறது.

சட்டப்பேரவையில் இது பற்றி நாங்கள் பேசினால், கெடு தேதி முடியும்வரை பொறுமை காப்போம் என அறிவுரை-அருளுரை வழங்குகிறீர்கள். ஆனால், நாடாளுமன்றத்தில் உங்கள் எம்.பி.க்கள் பொறுமை காக்காமல், அமளிதுமளி செய்து, அவையை முடக்கி, அதன் மூலம் பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எடுத்துக் கொள்ளாதபடி செய்கிறீர்கள். உங்கள் முகத்தில் உள்ள கரியைத் துடையுங்கள். அடுத்தவர் முதுகில் மச்சம் இருக்கிறதா என எட்டிப் பார்க்காதீர்கள். இந்த நொடி வரை காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்து வருவது அதிமுகதான். அந்தப் பழியை மறைக்க எங்கள் மீது அவதூறுச் சேற்றை வீச நினைத்தால், வரலாற்று வரிகளால் திருப்பி அடிக்க நேரிடும்.''

இவ்வாறு துரைமுருகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Share This
Previous Post
Next Post

Pellentesque vitae lectus in mauris sollicitudin ornare sit amet eget ligula. Donec pharetra, arcu eu consectetur semper, est nulla sodales risus, vel efficitur orci justo quis tellus. Phasellus sit amet est pharetra