Friday, April 27, 2018

மருத்துவமனைக்குச் செல்லும் மகளிருக்கு எச்சரிக்கை!



சென்னை மயிலாப்பூரில் சிகிச்சைக்கு வந்த பெண்களைத் தவறான எண்ணத்தில் செல்லிடப்பேசியில் விடியோ எடுத்த மருத்துவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம், உளுந்தை பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், மயிலாப்பூர் ரூதர்புரத்தில் வசிக்கும் தனது தாயார் வீட்டுக்கு வியாழக்கிழமை வந்துள்ளார். மார்பு வலி தொடர்பாக அவர் சிகிச்சை பெற மயிலாப்பூர் நாட்டுசுப்பராயன் தெருவில் உள்ள கிளினிக்குக்கு சென்றுள்ளார். அவருடன் அந்த பெண்ணின் தாயாரும் குழந்தைகளும் சென்றனர். அங்கு மருத்துவர் சிவகுருநாதன் (64) பரிசோதித்துள்ளார்.
மார்பு பகுதிக்கு சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளதாகக் கூறி, தனித்து அப்பெண்ணை ஓர் அறைக்கு அழைத்துச் சென்று, சிகிச்சைக்காக மேலாடையை அகற்றச் சொன்னாராம். அப்பெண்ணுக்குத் தெரியாமல் அந்த அறையின் ஜன்னலில் செல்லிடப்பேசியை வைத்து விடியோ பதிவு செய்தாராம்.
அச்சத்தில் வெளியேறிய பெண்: தனி அறையில் மருத்துவரின் செய்கைகள் அப்பெண்ணுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. செல்லிடப்பேசியில் விடியோ பதிவு செய்வதைக் கண்டு அறையை விட்டு வெளியேறிய அப்பெண், மருத்துவரிடம் சிகிச்சை பெற காத்திருந்த தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 2-ஆவது தெருவைச் சேர்ந்த உ. உமாபதி (39) என்பவரிடம் மருத்துவரின் நடவடிக்கை குறித்துத் தெரிவித்துள்ளார்.
மருத்துவரிடம் இருந்து செல்லிடப்பேசியை உமாபதி பறிக்க முயன்றாராம். செல்லிடப்பேசியில் பதிவான காட்சியை அவசரமாக மருத்துவர் நீக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் மருத்துவர்களுக்கும் சிகிச்சைக்கு வந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
போலீஸார் விசாரணையில் சிவகுருநாதன் வைத்திருந்த மற்றொரு செல்லிடப்பேசியில் சிகிச்சைக்காக வந்த வேறு இரு பெண்களை ஆடைகளை அகற்றச் சொல்லி விடியோ பதிவு செய்திருப்பது தெரியவந்தது.
மருத்துவர் கைது: அதையடுத்து, போலீஸார் சிவகுருநாதனைக் கைது செய்து, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
கைது செய்யப்பட்ட சிவகுருநாதன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறைக்கு வெள்ளிக்கிழமை காவலுக்கு அனுப்பப்பட்டார்.
Share:

Labels

Blog Archive

Unordered List

Definition List