Friday, April 27, 2018

காவிரியில் காலம் கடத்த முயலும் மத்திய அரசு! புதிய மனு தாக்கல்

காவிரி நீர் பங்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், “காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித்தீர்ப்பை செயல்படுத்த ‘ஸ்கீம்’ (செயல் திட்டம்) ஒன்றை 6 வாரங்களுக்குள் மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளது.
இதற்கு தமிழக அரசு, காவிரி நடுவர் மன்றம் தனது தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகிய இரு அமைப்புகளையும் ‘ஸ்கீம்’ என குறிப்பிட்டுள்ளது. எனவே மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றம் குறிப்பிடும் ‘ஸ்கீம்’ காவிரி மேலாண்மை வாரியத்தை குறிக்கவில்லை. இது தீர்ப்பை செயல்படுத்த காவிரி மேற்பார்வை ஆணையத்தையே குறிக்கிறது என தெரிவித்தது.
இதுதொடர்பாக மவுனம் காத்த மத்திய அரசு, உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடு மார்ச் 29-ம் தேதியுடன் நிறைவடைந்த நிலை யில் புதிய மனுவை தாக்கல் செய்தது. அதில், “உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள ‘ஸ்கீம்’ என்பதன் பொருள் என்ன? அது காவிரி மேலாண்மை வாரியமாக இருந்தால், அதனை உருவாக்க கூடுதலாக‌ 3 மாதங்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் . கர்நாடகாவில் தேர்தல் நடைபெறுவதால் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும்” என குறிப்பிட்டு இருந்தது.
தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், “உச்ச நீதிமன்ற உத்தரவை அவமதித்த மத்திய அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் தமிழக விவசாயிகளுக்கு காவிரி நீர் கிடைப்பது சிக்கலாக மாறியுள்ளது” என தெரிவித்துள்ளது. 
இதனை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, “உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ‘ஸ்கீம்’ என்கிற வார்த்தைக்கு காவிரி மேலாண்மை வாரியம் என்பது பொருள் அல்ல. அது காவிரி நதிநீர் பிரச்சினைக்கு தீர்வு தரக்கூடிய மற்ற அம்சங்களையும் உள்ளடக்கியது. எனவே காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் முழுவதும் கிடைக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும்” என வாய்மொழியாக தெரிவித்தார்.
பின்னர் இந்த வழக்கு ஏப்ரல் 9ம் தேதி விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. தாங்கள் அளித்த தீர்ப்பை ஏன் செயல்படுத்தவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான மேலாண்மை திட்டத்தை தயாரித்து, வரைவு திட்டத்தை மே 3-ம் தேதிக்குள் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். உச்சநீதிமன்றத்தின் கெடு இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வரவுள்ள நிலையில் இன்று மத்திய அரசு "காவிரி மேலாண்மை தொடர்பான வரைவு" திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க மே 3 ந்தேதியிலிருந்து இரண்டு வார கால அவகாசம் கோரி புதிதாக மனுத் தாக்கல் செய்துள்ளது.

இந்த மனுவின் மீதான விசாரணை வருகின்ற மே 3 ந்தேதி நடைபெறுமென உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது!
Share:

Labels

Blog Archive

Unordered List

Definition List