Monday, April 30, 2018

திருப்பூரில் மோதல்! காவல்துறை தடியடி!

திருப்பூரில் இன்று நடந்த வீட்டு வசதி கூட்டுறவுச் சங்கத்தேர்தலில் அதிமுக- திமுகவினரிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் கூட்டத்தை தடியடி நடத்தி கலைத்ததால் அந்த இடமே போர்க்களம்போல் காட்சியளித்தது.

திருப்பூர் குமரன் சாலையில் உள்ள வீட்டு வசதி கூட்டுறவுச் சங்கத்தில் இன்று தேர்தல் நடைபெறவிருந்தது. பிரச்னை ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருந்ததால் காலை முதலே பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. இந்நிலையில் தேர்தல் அதிகாரிகள் அ.தி.மு.கவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும், அ.தி.மு.கவினரை மட்டுமே வேட்பு மனுத் தாக்கல் செய்ய அனுமதிப்பதாகவும் புகார் எழுந்தது. மற்ற கட்சியைச் சேர்ந்த யாரையும் உள்ளே விடாமல் வெளியே தடுத்து நிறுத்தி அனுப்புகிறார்கள் எனக் கூறப்பட்டது.
இதைக் கண்டித்து தி.மு.க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முழக்கங்கள் எழுப்பத் தொடங்கின. ஜனநாயக முறைப்படி நடைபெறும் தேர்தலைச் சீர்குலைக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுச் செயல்படுவதாக அ.தி.மு.க-வினரும் ஒருபக்கம் முழக்கங்களை எழுப்பத் தொடங்கினர். ஒருகட்டத்தில் இரு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதமாகி,  பின்னர் அது கைகலப்பு வரை சென்றது. இதனால் தேர்தல் நடைபெறும் வளாகம் முழுவதும் பதற்றம் ஏற்பட தொடங்கியது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினர் தடியடி நடத்தினர். அதனைத் தொடர்ந்து வீட்டு வசதி கூட்டுறவுச் சங்கத் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அதே குமரன் சாலையில் உள்ள திருப்பூர் கூட்டுறவு நகர வங்கி ( அர்பன் பேங்க் ) வளாகத்தின் முன் திரண்ட தி.மு.கவினர், அங்கு நடைபெறும் தேர்தலை நியாயமான முறையில் நடத்துமாறு முழக்கங்களை எழுப்பி முற்றுகைப் போராட்டம் நடத்தினர். இதனால், அங்கும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புப் போடப்பட்டிருக்கிறது.
Share:

Labels

Blog Archive

Unordered List

Definition List