Friday, April 13, 2018

ஜனநாயகப் படுகொலை தொடர்வதைத் தடுக்க தேர்தல் ஆணையத்திற்கு தன்னாட்சி வழங்கு!

மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் முறைகேடுகளைத் தடுக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்றும், விதிகளை வகுக்கும் அதிகாரம் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களை தங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக பாமக தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, " கடந்த காலங்களில் நடத்தப்பட்ட தேர்தல்கள் நேர்மையாக நடத்தப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க ஆணையிட வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கில் தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தங்களுக்கு போதிய அதிகாரம் இல்லை என்று கூறப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்கவும், ஓட்டுக்களை பணம் கொடுத்து வாங்குபவர்கள் நடவடிக்கை எடுக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரமில்லை; தேர்தல் ஆணையத்தில் அரசியல் தலையீடு அதிகமாக உள்ளது; பல்வேறு தரப்பிலிருந்தும் தேர்தல் ஆணையத்திற்கு அழுத்தம் தரப்படுகிறது; இதனால் தேர்தல் ஆணையத்தால் சுதந்திரமாகவும் செயல்பட முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, கடந்த காலங்களில் நடைப்பெற்ற தேர்தல்களில் ஆட்சியாளர்களுக்கு சாதகமாகவோ பணம் வைத்திருப்பவர்களுக்கு ஆதரவாகவோ முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்பது தான் தேர்தல் ஆணையம் மறைமுகமாக கூறியிருக்கும் செய்தி ஆகும். கள்ள ஓட்டுப் போடுவது தான் தேர்தல் முறைகேடு என்று கருதக்கூடாது. நேர்மையான, சுதந்திரமான தேர்தல் என்ற தத்துவத்தை சிதைக்கும் சிறு அசைவு கூட பெரும் முறைகேடு தான். தேர்தல் ஆணைய செயல்பாடுகள் குறித்து நன்கு அறிந்தவர்களுக்கு இது எந்த வகையிலும் அதிர்ச்சியையோ, வியப்பையோ அளிக்காது. ஆனால், தேர்தல் ஆணையம் மிகவும் கண்டிப்பான அமைப்பு; சிறு பிழை கூட இல்லாமல் தேர்தலை நடத்தும் என நம்பியவர்களுக்கு இது பேரிடியாக இருக்கும்.
தேர்தலில் நடக்கும் மிகப்பெரிய ஊழலும், முறைகேடும் ஓட்டுக்குப் பணம் கொடுப்பது தான். இத்தகைய முறைகேடுகளின் முன்னோடி தமிழகம் தான். காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தல்கள் தொடங்கி இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தல் வரை ஓட்டுக்கு பணம் வாரி இறைக்கப்பட்ட வரலாறு அனைவரும் அறிந்தது தான். 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ரூ.10,000 கோடி அளவுக்கும், திமுக ரூ.6000 கோடி அளவுக்கும் பணத்தை வாரி இறைத்து தான் இந்த அளவுக்கு வெற்றி பெற்றன. தஞ்சாவூரிலும், அரவக்குறிச்சியிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது அனைத்து வகையான வரையறைகளையும் கடந்ததால் தான், இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஒத்திவைக்கப்பட்டது. விதிப்படிப் பார்த்தால் சட்டப்பேரவைத் தேர்தலையே செல்லாது என ஆணையம் அறிவித்திருக்க வேண்டும்.
அதேநேரத்தில் ஓட்டுக்கு பணம் தருவதை தடுக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரமே இல்லை என்று கூறப்படுவதை ஏற்க முடியாது. சென்னை இராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி நடைபெறவிருந்த இடைத்தேர்தலில் ஓட்டுக்கு ரூ.4000 பணம் கொடுத்தது அம்பலமானதைத் தொடர்ந்து தேர்தலை ஆணையம் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், அதன்பிறகு கடந்த திசம்பர் மாதம் நடந்த இடைத்தேர்தலில் அதைவிட அதிகமாக ரூ.20,000 வரை பணம் இறைக்கப்பட்டது. அப்போதும் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட பல அமைப்புகள் வலியுறுத்தின. ஆனால், இரண்டாவது முறையாக ஒரு தேர்தலை ஒத்திவைத்தால், தங்களை கையாலாகாத அமைப்பாக மக்கள் நினைத்து விடுவர் என்ற அச்சத்தில் தேர்தலை ஒத்திவைக்க ஆணையம் மறுத்துவிட்டது. இப்போது ஓட்டுக்கு பணம் தரப்படுவதை தடுக்க முடியவில்லை என உச்சநீதிமன்றத்தில், கூறியதன் மூலம் கையாலாகாதத் தன்மையை தேர்தல் ஆணையம் அப்பட்டமாக ஒப்புக்கொண்டிருக்கிறது.
ஊழல்களில் மிகவும் ஆபத்தானது ஓட்டுக்கு பணம் தருவது தான். தேர்தலில் ரூ.10,000 கோடி செலவழித்து ஆட்சியைப் பிடிக்கும் கட்சிகள், அடுத்த ஐந்தாண்டுகளில் ஊழல் மூலம் ரூ.10 லட்சம் கோடியை குவிக்கும் போது தான் தமிழகம் சீரழிகிறது. ஓட்டுக்கு பணம் கொடுப்பது தடுக்கப்பட வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு ஆகும். ஒரு தொகுதியில் ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டால் அத்தொகுதியின் தேர்தல் ஒத்திவைக்கப்பட வேண்டும்; பணம் கொடுத்த வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும். குறிப்பிட்ட எண்ணிக்கைக்கும் கூடுதலான தொகுதிகளில் ஒரு கட்சியின் வேட்பாளர்கள் ஓட்டுக்கு பணம் கொடுத்திருந்தால் அந்தக் கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பான பரிந்துரைகளை முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையம் நசீம் ஜைதியிடம் பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வழங்கியுள்ளார்.. இதுதவிர மேலும் பல்வேறு தேர்தல் சீர்திருத்தங்களையும் ஆணையத்திடம் பாட்டாளி மக்கள் கட்சி முன்மொழிந்திருக்கிறது.
ஜனநாயகம் என்பது மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் ஆட்சி ஆகும். ஆனால், ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுப்பதற்கு மாற்றாக பணம் தேர்ந்தெடுக்குமானால் அது ஜனநாயகம் அல்ல... பணநாயகம் ஆகும். தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக 1998-ஆம் ஆண்டு தேர்தல் ஆணையம் அனுப்பிய பரிந்துரைகளை மத்திய அரசு இன்று வரை கிடப்பில் போட்டு வைத்திருப்பதும், அதன்பின் நசீம்ஜைதி காலத்தில் அனுப்பப்பட்ட 47 தேர்தல் சீர்திருத்தங்களை மத்திய அரசு இன்னும் பரிசீலிக்காததும் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் செயல் அல்ல. ஓட்டுக்குப் பணம் கொடுக்கப்படுவதன் மூலம் ஜனநாயகம் படுகொலை செய்யப்படுவதை தடுக்க வேண்டியது மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தின் கடமையாகும். இதை உணர்ந்து தேவையான தேர்தல் சீர்திருத்தங்களை உடனடியாக மேற்கொள்வதுடன், தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கு ஏற்ற தன்னாட்சி அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டும்.
Share:

Labels

Blog Archive

Unordered List

Definition List