Thursday, April 26, 2018

என்னம்மா அங்கே சத்தம்? வடிவேலுவின் நகைச்சுவையை மிஞ்சும் மோதல்! பின்னனி என்ன?

ad300
Advertisement


அம்மா மக்கள் முன்னேற்றக் கழக (அமமுக) துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும் - சசிகலாவின் இளைய சகோதரர் திவாகரனுக்கும் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது அக்கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கடந்த ஆண்டு தினகரனை துணைப் பொதுச்செயலாளராக பதவிப் பிரமாணம் செய்து வைத்த கையோடு சிறைக்கு சென்றார் சசிகலா! அப்போதிலிருந்தே திவாகரன் தனித்து செயல்பட்டுவந்த நிலையில் கடந்த ஆண்டு தினகரனின் மாமியாரின் இறுதிச்சடங்கு நிகழ்வின் போது தினகரனையும் திவாகரனையும் ஒன்று சேர்க்க தற்போதைய ஜெயா டிவி CEO வும் MD யுமான விவேக் ஜெயராமன் பெரிதும் முயன்று இருவரையும் சேர்த்துவைத்து தன் முயற்சியில் வெற்றி பெற்றார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாகியுள்ள தினகரன், அமமுக என்ற கட்சியை தொடங்கியுள்ளார். பி.வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க் கள் அக்கட்சியில் உள்ளனர்.

ஆனாலும், சசிகலா குடும்பத்தில் திவாகரன் உள்ளிட்டோருக்கும் தினகரனுக்கும் இடையே பனிப்போர் நீடித்து வந்தது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றிக்குப் பிறகு தினகரனின் கை ஓங்கியதால் திவாகரனால் கட்சியில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. தனது கணவர் ம.நடராஜன் இறந்தபோது 15 நாட்கள் பரோலில் வந்த சசிகலா, தினகரன் - திவாகரன் இடையே சமாதானம் செய்து வைத்ததாகக் கூறப்படுகிறது.

அரசியலில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் இந்த நேரத்தில் குடும்பத்துக்குள் மோதல் என்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, எதிர்காலம் கருதி அமைதியாக இருக்குமாறு சசிகலா எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. ஆனாலும் மோதல் ஓய்ந்த பாடில்லை.

திவாகரனின் மகன் ஜெயானந்த் தனது முகநூலில், ‘‘மிகப்பெரிய தவறுகளை பொறுத்துக் கொண்டிருக்கிறோம். இந்நிலை நீடித்தால் அந்த அமைப்பு விரைவில் காலாவதியாகிவிடும். இனி அரசியலில் செயல்படப் போவதில்லை'' என தனது அதிருப்தியை வெளியிட்டார்.

அவருக்கு முகநூலில் பதிலளித்த பி.வெற்றிவேல், ‘‘சசிகலா பின்னால் நான் உட்பட 21 எம்.எல்.ஏ.க்களும் அணிவகுத்து நிற்கிறோம். எங்கள் தியாகத்தை, உணர்வை காயப்படுத்தும் வகையில் திவாகரனும், ஜெயானந்தும் செயல்படுவது வேதனை அளிக்கிறது. முதல்வர் பழனிசாமிக்கு நெருக்கமான சிவகிரி, 18 எம்.எல்.ஏ.க்களும் திவாகரன் பின்னால் இருக்கிறார் என கூறி வருகிறார். இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது தெரியும். எங்கள் பயணம் தினகரனுடன்தான்'' என கூறியிருந்தார்.

தினகரன் - திவாகரன் இடையே உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்த மோதல் முகநூல் பதிவுகள் மூலம் வெளிச்சத்துக்கு வந்து மேலும் தீவிரமானது. அதனைத் தொடர்ந்து நேற்று அறிக்கை வெளியிட்ட தினகரன், ''நம் லட்சியப் பயணத்தின் பாதையை திசைதிருப்ப முயலும் கட்சி விரோதிகளின் திட்டத்துக்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது. எதிரிகளின் சூழ்ச்சிக்கு பலியாகிவிடக் கூடாது'' என உருக்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில் திவாகரன் மகன் ஜெயானந்த் தனது முகநூலில் தன்னிலை விளக்கம் என்ற பெயரில் வெற்றிவேலுக்கு அனுப்பிய கடிதத்தை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘வருமானத் துறை உள்ளிட்ட அமைப்புகளால் எங்கள் குடும்பத்தினர் பழிவாங்கப்படும் நிலையில் முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறுவது வேதனை அளிக்கிறது. தியாகம் அனைவரிடத்திலும் உள்ளது. அதனை சொல்லிக் காட்ட விரும்பவில்லை. தினகரன்தான் முதல்வர் என நானும், திவாகரனும் இன்றுவரை கூறி வருகிறோம். அதேநேரத்தில் ஒருசில விஷயங்களில் மாற்றுக் கருத்து இருப்பதையும் மறைக்க விரும்பவில்லை. அதிகபட்சமாக நாங்கள் எதிர்பார்ப்பது சக மனிதனுக்கு கொடுக்கும் மரியாதையை மட்டுமே. யாரோ எழுதிய அறிக்கை உங்கள் பெயரில் வந்துள்ளதை மட்டும் நான் அறிவேன்'' என கடுமையாகக் கூறியுள்ளார்.இதற்கு பதிலளிக்கும் விதமாக நேற்று முன்தினம் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன், ‘‘அமமுகவை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. நாங்கள் எப்போதும் அம்மா அணிதான். இனியும் தினகரனுடன் இணைந்து செயல்பட வாய்ப்பில்லை. மரியாதை இல்லாத இடத்தில் நான் இருக்க முடியாது. அமமுகவில் அதிமுகவின் சுவடே இருக்கக் கூடாது என தினகரன் நினைக்கிறார். அப்படி இருந்தால் பங்கு கேட்பார்கள் என்ற பயத்தில் தன்னிச்சையாக செயல்படுகிறார். தினகரனே அழைத்தாலும் பேச்சுவார்த்தைக்கு செல்ல மாட்டேன். வாய்ப்பு வந்தால் தேர்தலில் போட்டியிடுவோம்'' என்றார்.உறவை முறிப்பது போல திவாகரன் இப்படி பேசிய நிலையில் நேற்று முன்தினம் தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய தினகரன், ‘‘துரோகிகளும், எதிரிகளும் இணைந்து எப்படியாவது இயக்கத்தை வலுவிழக்கச் செய்ய துடிக்கிறார்கள். உறவு வேறு. கட்சி வேறு. நான் உறவுக்கு மரியாதை கொடுப்பேன். அதேநேரத்தில் கட்சிக்கு எதிராகச் செயல்பட்டால் யாராக இருந்தாலும் ஜெயலலிதா பாணியில் தூக்கி எறிய தயங்க மாட்டேன். நான் அன்பானவன். அமைதியானவன். ஆனால், யாருக்கும் அஞ்சி எடுத்த காரியத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன். தேர்தல் வெற்றிக்காக யாரிடமும் மண்டியிட மாட்டேன்'' என்றார்.

தினகரன் - திவாகரன் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது அமமுக நிர்வாகிகளையும், அவர்களை நம்பிச் சென்ற எம்.எல்.ஏ.க்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மோதலின் பின்னணி குறித்து அமமுக முக்கிய நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, “சசிகலா சிறைக்கு சென்றதால் அடுத்த இடம் தனக்கு கிடைக்கும் என திவாகரன் எதிர்பார்த்தார். ஆனால், ஏற்கனவே எம்.பி.யாக இருந்த அனுபவம் இருப்பதால் தினகரனையே துணைப் பொதுச்செயலாளராக நியமித்தார். தினகரன் வந்ததும் தனக்கும் தனது மகனுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார் என நினைத்தார். அது நடக்கவில்லை என்றதும் பல்வேறு வழிகளில் நெருக்கடி கொடுத்தார். ஆனாலும், தினகரன் அசைந்து கொடுக்கவில்லை. அமமுக கட்சியை தொடங்கியதும் தனது மகன் ஜெயானந்துக்கு மாநில இளைஞரணி தலைவர் பதவி கேட்டுள்ளார். அதுபோல தஞ்சை, நாகை, திருவாரூர் போன்ற பல மாவட்டங்களுக்கு, தான் சொல்பவர்களை மாவட்டச் செயலாளர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதையெல்லாம் ஏற்றுக் கொண்டால் கட்சி திவாகரன் கைக்கு சென்றுவிடும் என நினைத்த தினகரன், திவாகரனையும், அவரது மகனையும் முற்றிலும் ஒதுக்கினார். இதனால் ஏற்பட்ட கோபமே இப்போது மோதலாக வெடித்துள்ளது'' என்றார். மேலும் திவாகரனுக்கும் எடப்பாடிக்குமிடையே நல்ல புரிதல் ஆரம்பத்திலிருந்தே இருப்பதாகவும் அடிக்கடி திவாகரனை ரகசியமாக சந்தித்துப் பேச எடப்பாடியின் ரத்த உறவு வந்து போவதாக கூறிய அவர், அதற்கு சான்றாக மகாதேவனின் இறப்பின் போது எடப்பாடி தனது ரத்த உறவு மூலமாக கடிதத்தை திவாகரனிடம் சேர்ப்பித்ததை குறிப்பிட்டார்!
Share This
Previous Post
Next Post

Pellentesque vitae lectus in mauris sollicitudin ornare sit amet eget ligula. Donec pharetra, arcu eu consectetur semper, est nulla sodales risus, vel efficitur orci justo quis tellus. Phasellus sit amet est pharetra