Sunday, April 22, 2018

தவித்த வாய்க்கு கிடைக்குமா தண்ணீர்? MLA நடராஜ் IPSகாவிரி மேலாண்மை அமைப்பு மற்றும் தண்ணீர் பங்கீடு பிரச்சனையால் தமிழக விவசாய பெருமக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்டது.

காவிரி தண்ணீர் பிரச்சனை ஒன்றும் புதிதல்ல. மன்னர் காலத்திலிருந்து தொடர்ந்து வரும் பங்காளி சண்டை. வருங்காலத்தில் நாடுகளிடையே தண்ணீர் பங்கீட்டை மையமாக வைத்து போர் மூளும் என்பதற்கு வெள்ளோட்டமாக இம்மாதிரி சச்சரவுகள் தலை தூக்குகிறதோ ?

மேட்டூர் அணை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. கர்நாடகா குடகு மலையிலிருந்து விரைந்தோடி வரும் காவிரி மேட்டூரில் சங்கமிக்கிறது. ஆடு தாண்டும் காவிரி என்று சிறிய அளவில் உண்டாகி மடை திறந்த வெள்ளம் போல் தமிழ்நாட்டை அரவணைக்க மேட்டூர் வந்தடையும் காட்சி கண்கொள்ளா காட்சி. மலை சூழ்ந்த மேட்டூர் பகுதியில் பொறியியல் வல்லுனர் எல்லீஸ் என்பவர் வடிவமைத்து ஒன்பது வருடங்களில் 1934ம் வருடம் அணை கட்டி முடிக்கப்பட்டது.

அப்போது மதறாஸ் ஆளுனர் ஸ்டாலின் என்பவரின் வழிகாட்டுதலில் திட்ட மிடப்பட்டதால் அணை அவரது பெயர் தாங்கியுள்ளது. முல்லை பெரியார் அணை கட்டிய பென்னி க்விக் செய்ததற்கு நிகரான பணி.

மேட்டூர் அணை முகப்பில்

" நான் இந்த இடத்தில் ஒருமுறை தான் பயணிப்பேன். இனியொறுமுறை வருவேனோ என்று தெரியாது. இருக்கும் வரை இந்த இடத்தில் நல்லது செய்வேன். ஏனெனில் இந்த நேரம் திரும்ப வராது ,நானும் திரும்பி வருவேனோ என்று தெரியாது" என்ற வாசகம் இடம்பெற்றிருப்பதை காணலாம்.

அவ்வாறு தன்னலமின்றி பலரின் உழைப்பால் உருவானது மேட்டூர் அணை. மழை நீரை பருவ காலத்தில் சேமித்து மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு திறந்து விட்டு தஞ்சாவூரை நெல் களஞ்சியமாக்கியது காவிரி.

மேட்டூர் நீர் தேக்கத்தின் நீளம் 5300 அடி, 176 அடி உயரம். அபாய உயரம் 120 அடி. கொள்ளளவு 655 சதுர கிமீட்டர் பரப்பளவில் நீர் தேக்கம். நல்ல மழை பெய்து அணை நிரம்பினால் கடல் போல் நீர் ஆர்ப்பரிக்கும்.

காவிரி நதியின் ஓட்டம் வித்தியாசமானது .

சென்னார், பாலார் தொப்பார் போன்ற

சிறு நதிகள் காவிரி நதியோடு கலக்கும் போது அதன் ஓட்டத்தோடு காவிரி கலந்துவிடும்.

காவிரி 765 கிமீ பயணித்து வழியில் பவாநியை அரவணைத்து

ஈரோடு கரூர் திருச்சி மாவட்டங்கள் கடந்து டெல்டா என்ற பரந்த வளம் நிறைந்த வண்டல் மணலோடு தஞ்சாவூரை அடைகிறது. நீண்ட ஓட்டத்தில் சேகரித்த

அத்தனை உழைப்பையும் தஞ்சை டெல்டா பகுதிக்கு அர்ப்பணிக்கிறது. தமிழ்நாட்டின் சரித்திரத்தோடும் கலாச்சாரத்தோடும் பின்னி பிணைந்தது காவிரி.

1924ல் அப்போதைய மதறாஸ் மாகாணத்திற்கும் மைசூர் சமஸ்தானத்திற்கும் காவிரி நீர் பங்கீடு ஒப்பந்தம் ஏற்பட்டது பற்றியும் ,ஐம்பது. ஆண்டுகளுக்குப் பிறகு 1974 ம் வருடம் சில மாறுதல்களோடு புதிக்கப்பட்டது என்பதும் ,காவிரி வாரிய அமைப்பு அதில் சர்ச்சைகள்,உச்ச நீதிமன்ற தீர்ப்பு அதனை அரசு கெஜட்டில் வெளியிடப்பட்டது உள்ளடிக்கிய விவரங்கள் ஊடகங்களில் வந்துள்ளன.

ஆனால் இந்த பிரச்சனை வைத்து எப்படியெல்லம் அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் குறை சொல்லிக்கொண்டு மக்கள் உணர்வுகளை தூண்டும் வகையில் அறிக்கை விடுகின்றனர்! எல்லாம் அரசியல் ஆதாயத்திற்காக! தண்ணீர் இதனால் வருமா என்றால் நிச்சயமா வராது.

முன்னாள் கர்நாடகா முதலவர் கிருஷ்ணா அவர்கள் கூறுவார்கள் "மண்டியா மாவட்டம் விவசாயிகள் அண்டை மாவட்டத்திற்கே காவிரி நீர் தரமாட்டார்கள். அவ்வாறு இருக்கையில் தமிழ்நாட்டிற்கு சட்டப்படி தண்ணீர் திறந்து விடப்படும் என்பதை எவ்வாறு எதிர்பார்க்க முடியும் " அவ்வளவு சுயநலம் கொண்டவர்கள் தமிழகத்திற்க்கு தண்ணீர் கொடுக்க உடன்படுவார்கள் என்பது கேள்விக்குறி! ஏன் வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வருவதில் எவ்வளவு பிரச்சனை இருந்தது! 2001 ல் முதலமைச்சர் அம்மா அவர்கள் முனைப்பாக பணிகளை முடிக்கி விட்டதால் சென்னை தண்ணீர் பிரச்சனை சமாளிக்க முடிந்தது.

ஒரு காலகட்டத்தில் மேட்டூர் அணையின் மதகு கதவுகள் இரு மாநில பொதுப் பணி துறை அதிகாரிகள் கூடிப்பேசி பருவ மழை அளவிற்கு ஏற்றால் போல் தண்ணீர் பகிர்ந்து கொள்வார்கள். இப்போது எல்லாம் பெரிய அளவில் முடிவு எடுக்கப்படுகிறது. அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவது பெரிய விழாவாக விளம்பரப்படுத்துகிறது. எதுவும் அரசியலாகிவிட்டால் சச்சரவு தான் மிஞ்சும். மக்கள் பயனுக்கு வராது.

காவிரிக்காக நாம் போராடுகிறோம். குறைந்த பட்சம் கர்நாடகா 205 டி எம் சி தண்ணீர் தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு இருக்கிறது. .

இன்னொரு நெருடலான கணக்கு உள்ளது. தமிழ்நாட்டில் 39 ஆயிரம் குளம் குட்டைகள் உள்ளன. அந்த குளம் குட்டைகளை சரிவர தூர் வாரி பராமரித்தால் சுமார் 350 டிம்சி தண்ணீர் மழைகாலத்தில் சேமிக்கலாம். நாம் கர்நாடகாவிடம் கேட்பது 205 டிம்சி தண்ணீர்.

விவசாய நிலங்களுக்கு அருகில் நிலத்தடி நீர் நிரம்ப மக்கள் மழை நீர் சேகரிப்பு செய்தால் மழை பொய்த்தால் கூட பாசனத்திற்கு நிலத்தடி நீர் பாய்ச்சலாம். இது ஒன்றும் நடக்கமுடியாதது அல்ல. ராஜேந்திர சிங்க் என்ற ராஜஸ்தானை சேர்ந்தவர் வறண்ட பாலைவன பூமியான ராஜஸ்தான் மாநிலத்தில் மழை நீர் சேகரிப்பு திட்டமிட்டு பல கிராமங்களில் குளங்கள் அகலப்படுத்தி ,குடி மராமத்து பணி நிறைவேற்றி நிலங்களில் மழை நீர் சேகரிப்பிற்கு குழிகள் வெட்டி மழை நீர் தேங்காமல் சுலபமாக நிலத்தடியில் சென்று நிரம்ப எடுத்த முயற்சியின் பயனால் இப்போது ராஜஸ்தான் மாநிலத்தில் ஆறுகள் மழை நீரை நன்கு வாங்கி மக்களுக்கு அளிக்கிறது. இருபது சதவிகிதம் மழை பெய்யும் வறண்ட பூமியில் இது சாத்தியம் என்றால் 80% நிலப்பரப்பில் மழை பெய்யும் தமிழ்நாட்டில் வறட்சி என்ற நிலையே இல்லாத அளவிற்கு வளம் சேர்க்கலாம்.

திரு ராஜேந்திர சிங்க் மழைநீர் சேகரிப்புக்காக நாடு முழுவதும் 850 கிராமங்களில் 4,500 தடுப்பணைகள் கட்டியுள்ளார். 1,200 கிராமங்களைத் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத பகுதிகளாக மாற்றியுள்ளார். இவரது தன்னல்லமற்ற முயற்சியால் பல மாநிலங்களில் தண்ணீர் சேகரிப்பு ஒரு புரட்சி போல் உருவானது.

ஆண்டிற்கு சராசரி 450 மி.மீ. மழை பெய்யும் ராஜஸ்தானிலுள்ள அல்வர் என்ற மாவட்டம் முழுவதிலும் 1058 கிராமங்களில் நீர் வளம் பெருக்கிச் சாதனை படைத்துள்ளார் ராஜேந்திர சிங். அவரது சேவை பாராட்டப்பட்டு மாக்சாசே விருதும் ,நோபல் பரிசும் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இங்கோ காவிரி பிரச்சனை வைத்து மேலும் மக்களுக்கு வேதனையை தான் தருகிறோம். பந்த் என்று அறிவிக்கிறார்கள். கடைகள் மூட வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். அவசர காலத்தில் தேவையான மருந்து கடைகளையும் விட்டு வைப்பதில்லை. இப்போது புது யுக்தியாக விமான நிலைய முற்றுகை. வன்முறை வெடித்தால் சேதம் மோசமாக இருக்கும் என்பதால் ரயில் தண்டவாளங்களில் போராட்டங்கள் கூடாது என்று பல எச்சரிக்கை விடுத்தாலும் இரயில் நிறுத்தினால் தான் தங்களுக்கு வெற்றி என்ற குறுகிய மனப்பான்மையோடு போராட்டம் செய்கிறார்கள். நமது மாநில பஸ்களை உடைப்பதற்கு தயங்குவதில்லை. நாளை நமது குழந்தைகளையும் தாய்மார்களையும் தாங்க வேண்டிய வாகனங்கள் என்ற நினைப்பு கொஞ்சமாவது உண்டா? மனசாட்சியே இல்லாதவர்களா நம் (அரசியவாதிகள்) தமிழினம்?

ஆனால் நமது மக்கள் பொருமைசாலிகள். எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்கள். எல்லாவற்றையும் சகித்து கொள்வார்கள்.

போராட்டம் செய்பவர்கள் தத்தம் கிராமங்களில் ராஜேந்தர் சிங்க் போல மக்களை திரட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி குடி மராமத்து பணிகள் திறமையாகவும் நேர்மையாகவும் செய்தால் எங்கும் தண்ணீர் பொங்கும்.

இப்போது நமது நாட்டில் 33% மழைநீர் தான் சேகரிக்கப்படுகிறது. மீதி கடலோடு கலக்கிறது.

மழைநீர் கடலோடு கலக்காது மக்களின் குடலோடு கலக்க வேண்டும்.

அப்போதுதான் தவிச்ச வாய்க்கு தண்ணி என்று அண்டை மாநிலத்தை அண்டி கையேந்த வேண்டியதில்லை.

நடராஜ் ஐ பி ஸ்

சட்டமன்ற உறுப்பினர்

மயிலாப்பூர்....
Share:

Labels

Blog Archive

Unordered List

Definition List