Thursday, May 24, 2018

தூத்துக்குடி கலவரம் - கற்பிக்கும் பாடம் என்ன?

தூத்துக்குடி கலவரம் - கற்பிக்கும் பாடம் என்ன?


நாடாளுமன்ற ஜனநாயகம் நிலவும் ஒரு நாட்டில், ஜனநாயக நெறிமுறைகள் பாதுகாக்கப்படுவதற்கு அரசின் தூண்களுக்கிடையிலான அதிகாரப் பகிர்வுகள் (separation of powers) மீறப்படாமல் இயங்குவது அடிப்படையான நிபந்தனையாகும். அதாவது, சட்டம் இயற்றும் நாடாளுமன்றம்/சட்டசபை, சட்டத்திற்கும் அதற்கு ஆதாரமான அரசியல் சட்டத்திற்கும் பொருள்கோடல் தந்து நீதியை நிலைநாட்டும் பணியை மேற்கொண்டிருக்கும் நீதிமன்றங்கள், இவற்றை சட்டத்தின் வழி நின்று செயல்படுத்தும் நிர்வாகத் துறை ஆகிய மூன்று தூண்களும் தமது அதிகார வரம்புகளை மீறாமல் ஒன்றுடன் ஒன்று இயைந்து செயல்பட வேண்டும். நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகங்கள், இம்மூன்று தூண்களின் செயல்பாடுகளைப் பற்றிய விமர்சனங்கள் வாயிலாக அவற்றைச் செழுமைப்படுத்தும் பணியை மேற்கொள்ளும்.

சட்டம் இயற்றும் மன்றங்கள், காலத்தின் தேவைக்கேற்ப சட்டங்கள் இயற்றுவது, அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளை தீர்மானிப்பது ஆகியவற்றோடு, அவற்றைச் செயல்படுத்தும் பணியையும் மேற்கொள்கின்றன. செயல்படுத்தும் நிர்வாக அலகுகளை (அதிகார வர்க்கத்தை) மேற்பார்வையும் செய்கின்றன. அரசின் கொள்கைகளை அதிகார வர்க்கம் எவ்வாறு செயல்படுத்துகிறது என்பதைக் கண்காணிக்க மதிப்பீட்டுக் குழு (Estimates Committee), பொதுக் கணக்குக் குழு (Public Accounts Committee) எனப் பல குழுக்களை, எதிர்கட்சி எம் எல் ஏக்களை உள்ளடக்கி அமைத்துச் செயல்பட நமது நாடாளுமன்றம்/சட்டசபைகளுக்கு அதிகாரம் உண்டு. நமது நாடாளுமன்றம்/சட்டசபைகளின் செயல்பாடுகள் வரைமுறைகளை மீறிச் செயல்படாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ளவே கணக்குத் தணிக்கையாளர் அமைப்பும் (Comptroller and Auditor General of India) உருவாக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம்/சட்டசபைகளில் அதிகாரத்தைக் கைப்பற்றும் ஒரு கட்சியின் கட்டுப்பாட்டிற்குள், இச்சபையால் மேற்பார்வை செய்யப்படும் அதிகார வர்க்கம் வீழ்ந்துவிடக்கூடாது என்பதை உறுதி செய்யப்படும் பொருட்டே, அதிகார வர்க்கத்தை – ஐ ஏ எஸ், ஐ பி எஸ், இன்னபிற - தேர்வு செய்வதற்கான தனித்த தேர்வு முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதிகார வர்க்கத்தின் செயல்பாடுகளுக்கான நெறிமுறைகளும் பயிற்சிகளும் தொடர்புடைய, தனித்தியங்கும் நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன.

நாடளுமன்றமும் சட்டமன்றங்களும் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை நியதிகளை மீறும் சட்டங்களை இயற்றாமல் இருப்பதைக் கண்காணித்து, கட்டுக்குள் வைக்கும் பணியை நீதிமன்றங்கள் செய்கின்றன. அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில், சட்டங்களுக்குப் பொருள் கூறுகின்றன. அதோடு, அதிகார வர்க்கத்தின் அதிகாரங்களை சட்டத்திற்கு உட்பட்டு வரையறுத்து, கட்டுப்படுத்தும் பணியையும் செய்கின்றன. தனது ஆணைகளைக்கூட செயல்படுத்தும் அதிகாரம் அற்றதாக வரையறுக்கப்பட்டிருப்பதன் மூலம் நீதிமன்றத்தின் அதிகாரமும் கட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கிறது.

நடைமுறையில் இவற்றில் ஏற்ற இறக்கங்கள் நேரும்போதெல்லாம் இந்த வரையறையுடன் உரசிப் பார்த்து விமர்சனங்கள் எழுவது வாடிக்கை. ஆனால், இத்தூண்களில் ஒன்று பிறவற்றின் அதிகார வரம்புகளை அதீதமாக மீறுவது அசாதாரண சூழல்களைத் தோற்றுவிக்கும்.

குறிப்பாக, சட்டம் இயற்றும் மன்றங்களின் அதிகாரங்களை ஒரு கட்சியோ அல்லது ஒரு தனி நபரோ படிப்படியாகத் தம்மை நோக்கிக் குவிக்கும்போது, பிற தூண்களின் அதிகார வரம்புகளுக்குள் தலையிட்டு, மட்டுப்படுத்தி செயலற்றதாக்கிவிடுவது நிகழ்கிறது. ஒரு கட்சி அதைச் செய்யும்போது, அதை ஒரு கட்சி ஆட்சிமுறையாக – மொத்தத்துவ ஆட்சிமுறை (Totalitarianism) – ஹிட்லரின் நாசிசம், முசோலினியின் பாசிசம், ஸ்டாலினின் கம்யூனிசம் – உருவெடுக்கிறது. ஒரு தனி நபர் அதைச் செய்யும்போது, எதேச்சதிகாரம் எழுகிறது.

இந்திய ஜனநாயகமும் தமிழகமும் இவ்விரு பேராபத்துகளின் விளிம்பில் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன என்பதைக் காட்டும் நிகழ்வுகள் அண்மைக்காலமாக தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.மோடி அரசு பதவிப் பொறுப்பு ஏற்றவுடன் கொண்டுவர முயற்சி செய்த தேசிய நீதிமன்ற நியமன ஆணையச் சட்டம் (2014), இந்திய அளவில் இதற்கான முதல் அறிகுறியாக அமைந்தது. இச்சட்டத்தின் மூலம், உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் அதிகார வரம்புகளை நாடாளுமன்றத்தின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு முயற்சி செய்தது. நல்ல காலமாக, உச்சநீதிமன்றம் அதை அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று கூறி நிராகரித்தது (தற்போதைய கொலீஜிய முறையின் குறைகள் தனித்துப் பேசவேண்டியவை).

தற்போது, ஆட்சிக்காலம் நிறைவுற இன்னும் ஓராண்டே இருக்கும் நிலையில், மீண்டும் மோடி அரசு, அதிகார வர்க்கம் தேர்வு செய்யப்படும் முறையில் மாற்றம் செய்ய முனைந்திருக்கிறது. இப்புதிய விதிகள் ஒப்புக்கொள்ளப்பட்டால், அதிகாரத்தில் உள்ள கட்சியின் கருத்தியல், அல்லது செல்வாக்கிற்கு உட்பட்டவர்களேஅதிகார வர்க்கத்தினராக தேர்வு செய்யப்படும் ஆபத்து இருப்பதைப் பலரும் சுட்டிக் காட்டியுள்ளனர். இது, தற்போது அதிகார வர்க்கத்தினரின் தேர்வில் நிலவி வரும் அரசியல் சார்பற்ற தன்மைக்கு முடிவு கட்டி, ஒரு கட்சியின் மொத்தத்துவ ஆட்சிமுறைக்கு வழிவகுக்கும்.

இந்திய அளவிலான நகர்வுகள் இவ்வாறு மொத்தத்துவ ஆட்சியை நோக்கிய ஆபத்துகளாக இருக்கையில், தமிழகம் வேறுவகையான சரிவில் ஏற்கனவே வீழ்ந்துவிட்டிருக்கிறது எனலாம்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் முதல் குற்றவாளி என்று குறிப்பிடப்பட்டவரான மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் இது சத்தமில்லாமல் நடந்தேறியது. சரியாகச் சொல்வதென்றால் இரண்டு விஷயங்கள் நடந்தேறின.

முதலாவது, சட்டமன்றத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட மந்திரிசபை செயலற்றதாக ஆக்கப்பட்டு, அனைத்து அதிகாரங்களையும் ஜெயலலிதா நேரடியாகத், தன்னிடமே குவித்துக்கொண்டார். அரசு நிர்வாகத்தின் அனைத்து துறைகளும் ஜெயலலிதாவின் ஆணைக்கு உட்பட்டு மட்டுமே இயங்குவதாக திருகப்பட்டன. மந்திரிசபை பெயரளவிற்கு மட்டுமே இருந்தது.

இதன் விளைவாக, அரசின் பல துறைகளின் கொள்கை முடிவுகளும், செயல் நடவடிக்கைகளும் பெருத்த தேக்கத்திற்கு உள்ளாயின. தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் கடந்த மூன்று அறிக்கைகளை மேலோட்டமாக நோட்டம் விட்டாலே, அவ்வறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள ஏராளமான முறைகேடுகளுக்கும் கேள்விகளுக்கும் ஜெயலலிதா அரசால் முறையான பதில்கள் அளிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதைக் காணமுடியும்.

மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, அரசின் நிர்வாகச் செயல்பாடுகளை மதிப்பீடு செய்யும் பொதுக் கணக்குக் குழு கூட்டப்படவும் இல்லை, அக்குழுவின் அறிக்கைகள் சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவும் இல்லை.

எவருக்கும் பதில் சொல்லும் கடமையோ பொறுப்போ அற்ற, சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட வினோதமானதொரு தனி நபர் எதேச்சதிகார ஆட்சியாகவே ஜெயலலிதாவின் ஆட்சி இருந்தது.

அதாவது, சட்டம் இயற்றும் பொறுப்புடைய சட்டசபையும், அதிகார வர்க்கத்தை மேற்பார்வை செய்யும் பொறுப்புடைய மந்திரிசபையும் ஒரு தனி நபரின் வரம்பற்ற அதிகாரத்தால் செயலற்றவையாக மாற்றப்பட்டிருந்தன.

இரண்டாவதாக, 2010 – 16 காலகட்டத்தில், தமிழகத்தின் 32 மாவட்டங்களில் 25 மாவட்டங்களுக்கு ஜெயலலிதாவால் நியமன ஐ ஏ எஸ் ஆக பதவி உயர்வு அளிக்கப்பட்டவர்கள் ஆட்சியர்களாக பொறுப்பளிக்கப்பட்டனர். இவர்களில் சிலர் ஜெயலலிதாவிற்கு முளைப்பாரி எடுக்காத குறையாக புகழ்ந்து பாராட்டியது சிலருக்காவது நினைவில் இருக்கக்கூடும்.

அதாவது, ஜெயலலிதாவிற்கு விசுவாசமாக இருப்பவர்கள் ஆட்சியர்களாக்கப்பட்டது அதிகார வர்க்கத்தின் தேர்வில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது என்ற ஜனநாயக ஆட்சிமுறைக்கான அடிப்படை நிபந்தனையையும் அழித்தது. அதிகார வர்க்கத்தையும் ஒரு தனிநபரின் விசுவாசத்திற்குரிய குழுவாக மாற்றியது.

ஜெயலலிதாவின் தலையீட்டில் இருந்து தப்பியவை, நீதிமன்றத்தின் அதிகார வரம்பும் தேர்தல் நடைமுறையும் வாக்களிக்கும் உரிமையும் மட்டுமே.

ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, ரோமப் பேரரசின் அரியாசணத்தை அரசனின் பிரத்யேக மெய்பாதுகாப்பாளர்களிடமிருந்து (Praetorian Guards) ஏலத்தில் எடுத்து டிடியஸ் ஜூலியானஸ் (Didius Julianus) முடிசூட்டிக்கொண்டதைப் போன்றதொரு சூழல் தற்போது நிலவுகிறது.

சட்டசபை/மந்திரிசபையின் மேற்பார்வையின் கீழ் கட்டுப்பட்டு நிர்வாகம் செய்யவேண்டிய அதிகார வர்க்கம், கேட்பாரின்றி அதிகாரத் துஷ்பிரயோகத்தில் திளைத்திருக்கிறது. ஜூலை 2017 இல் வெளியிடப்பட்டுள்ள தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் (அறிக்கை 3, பொது மற்றும் சமூக நலத்துறை) இதுவரை நடைபெற்றிராத முறைகேடுகள் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன.

மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை வழங்கலில் ஒரே மாணவரின் வங்கிக் கணக்கில் பல மாணவர்களுக்கான உதவித் தொகைகள் வைப்பீடு செய்யப்பட்டிருக்கின்றன. ஒரே மாணவருக்கு பலமுறை உதவித் தொகை வழங்கப்பட்டிருக்கிறது. ஒரே நபருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சாதிச் சான்றுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இம்முறைகேடுகள் ஆயிரக்கணக்கில் நடைபெற்றுள்ளதாக கணக்குத் தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. ஜெயலலிதா ஆட்சியில்கூட இத்தகைய முறைகேடுகள் நடைபெறவில்லை என்பது குறித்துக்கொள்ள வேண்டியது.ஜெயலலிதா ஆட்சியில் அவருக்கு விசுவாசமானவர்களாகக் கருதப்பட்ட, நியமன ஐ ஏ எஸ் அதிகாரிகளாகப் பதவி உயர்வு பெற்றவர்களில் எவரெவர் இப்போது எவருக்கு விசுவாசமாக இருக்கிறார்கள் என்பது எவருக்கும் புரியாத புதிர். எது எப்படியாக இருந்தாலும், அதிகார வர்க்கத்தின் வரம்புகளும் சட்டமன்ற/மந்திரிசபை வரம்புகளும் மீறப்பட்ட சூழல் தொடரும் நிலையில், மந்திரிசபையின் மேற்பார்வைக்குக் கட்டுப்படாமல் ஒரு அதிகார வர்க்கம் தன்னிச்சையாக செயல்படுவது மிகுந்த ஆபத்தானது.

அத்தகையதொரு பேராபத்தைத்தான் தூத்துக்குடியில் நடந்தேறியுள்ள துப்பாக்கிச் சூடு நமக்கு சுட்டிக் காட்டுகிறது.

99 நாட்கள் அமைதியான முறையில் போராடிய பல்லாயிரக்கணக்கான மக்களைச் சந்தித்து அவர்களுடைய கோரிக்கைகளை அறிந்துகொள்ள, பேச்சுவார்த்தை நடத்த, அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் மந்திரிசபையுமே முன்வராத நிலையில், அதிகார வர்க்கம் தன்னிச்சையாக முடிவெடுத்து தனது அதிகார வரம்பெல்லையை மீறி கொடூரமாக நடந்துகொண்டிருக்கிறது.

இக்கொடூரம் அரங்கேறிய பின்னரும், சாதாரண மக்களின் மீது துப்பாக்கி சூடு நடத்த யார் உத்தரவிட்டது என்ற அடிப்படை உண்மைகூட எவருக்கும் தெரியவில்லை என்ற சூழலே நிலவுகிறது. ஒரு ஜனநாயக ஆட்சிமுறையில் சட்டசபைக்கும் மந்திரிசபைக்கும் பொறுப்புகூறும் கடமை (accountability) அதிகார வர்க்கத்திற்கு இருக்கிறது. அத்தகைய பொறுப்புகூறும் பொறுப்பற்ற ஒரு அதிகாரவர்க்கம் ஜனநாயகத்திற்கு மட்டுமல்ல, எந்தவொரு ஆட்சிமுறைக்குமே பெருங்கேடு விளைவிக்கும் ஒரு அங்கமாக உருவெடுத்துவிடும் பேரபாயமே தற்சமயம் நம் முன் நிற்கும் பெரும் சவால்.

தூத்துக்குடி கலவரம்! யாருடைய திட்டம்? உண்மை என்ன?

தூத்துக்குடி கலவரம்! யாருடைய திட்டம்? உண்மை என்ன?


தூத்துக்குடியில் வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் குறைந்தது 11 பேர் மாநில போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு பிறகு, அந்த ஆலையின் தினமும் 1,200 டன் உற்பத்திக்கான சர்ச்சைக்குரிய விரிவாக்கத்திற்கு உயர் நீதிமன்றம் மே 23 தடை விதித்துள்ளது. ஆலை கட்டுவதற்கு முன்னர் அப்பகுதி மக்களை கலந்தாலோசிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அவ்வாறு சட்டப்பூர்வமாக செய்ய வேண்டியதில்லை என அந்த நிறுவனம் கூறியது.

பொதுமக்களை ஆலோசிக்காமல் ஸ்மெல்டரை விரிவாக்கம் செய்து உற்பத்தி திறனை இரட்டிப்பாக்க மத்திய அரசிடமிருந்து ஒரு சட்டப்பூர்வமான சுற்றுச் சூழல் அனுமதியைப் பெற்றுள்ளதாக வேதாந்தா நிறுவனம் கூறுகிறது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஆவணங்களின்படி பிஜேபி அரசாங்கம் 2014 டிசம்பரில் பசுமை விதிமுறைகளுக்கு புதிய விளக்கமளித்தது. இது தூத்துக்குடியில் வேதாந்தாவின் ஆலை போன்ற ஆலைகளை அத்திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களை கலந்தாலோசிக்காமல் கட்டி உற்பத்தியை தொடங்க வழிவகுத்தது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகளில் இந்த விதிவிலக்கு பல்வேறு தொழில்சாலைகளின் வேண்டுகோளின்படி செய்யப்பட்டது என்பதை “பிஸினஸ் ஸ்டாண்டர்டு“ பத்திரிகையால் ஆய்வு செய்யப்பட்ட பல்வேறு அரசு மற்றும் நீதிமன்ற ஆவணவங்கள் காட்டுகின்றன. இந்த விதிகளுக்கு விதிவிலக்கு அப்போதைய சுற்றுச்சூழல் அமைச்சரின் உத்தரவின்பேரில் உருவாக்கப்பட்டது என ஒரு ‘விளக்கம்’ கூறப்பட்டது. வேதாந்தா மற்றும் பலரையும், தூத்துக்குடியில் உள்ளதுபோல, அப்பகுதி மக்களை கலந்தாலோசிக்காமல் தங்களது ஆலைகளை கட்டியெழுப்ப இந்த விளக்கம் இனிவரும் மாதங்களில் உதவும். பிஜேபி அரசாங்கத்தின் இந்த விளக்கம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது. ஏனெனில், தூத்துக்குடியில் உள்ள வேதாந்தாவினுடையது போன்ற திட்டங்களுக்கு முதலில் பொதுமக்களின் ஆலோசனைகளை பெறவேண்டும் என காங்கிரஸ் அரசாங்கத்தின் கீழ் இருந்த சுற்றுச்சூழல் அமைச்சகம் 2014ம் ஆண்டு வலியுறுத்தியிருந்தது.

வேதாந்தாவுக்கு ஆதரவான பிஜேபி அரசாங்கத்தின் டிசம்பர் மாத உத்தரவு சட்டத்திற்குப் புறம்பானது என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 2016ம் ஆண்டில் கண்டறிந்தது. இந்த விஷயத்தில் தகவல்களை வெளியிட மறுத்த சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகளுக்கு எதிராக ஜாமீனில் வரக்கூடிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டிவரும் என மிரட்டும் அளவுக்கு தேசிய பசுமைத் தீரப்பாயம் போக வேண்டியிருந்தது. அந்த அளவுக்கு பிஜேபி அரசாங்கம், பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக எடுத்த முடிவுகளின் விபரங்களை வெளியிட மறுத்தது. அரசாங்கத்தின் டிசம்பர் 2014 ஆணைகளை திரும்பப் பெறுவது பல தொழில் திட்டங்களை கடுமையாக பாதிக்கும் என அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இறுதியில், அரசாங்கத்தின் டிசம்பர் 2014 உத்தரவுகளை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ரத்து செய்தது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் அறிவுறுத்தல்களின் பேரில், சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒரு புதிய உத்தரவை பிறப்பித்தது. அந்த உத்தரவில், தொழிற் பூங்காக்களில் உள்ள திட்டங்களுக்கு பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிய வேண்டும். அதற்கு பிறகே சுற்றுச்சூழல் அனுமதி என சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்தது.

ஆனால், அப்போதே, பொதுமக்களின் கருத்துகேட்கும் கூட்டம் நடத்த தேவையின்றி, தூத்துக்குடியில் தனது விரிவாக்க திட்டத்திற்கான பசுமை அனுமதியின் நீட்டிப்பை வேதாந்தா பெற்றிருந்தது.தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் 2016ம் ஆண்டின் உத்தரவு மற்றும் இந்த வழக்கின்போது வெளிச்சத்துக்கு வந்த உண்மைகளை மேற்கோள்காட்டி, விரிவாக்கத்தை நிறுத்துங்கள் என்றும், முதலில் மக்களை கலந்தாலோசியுங்கள் என்றும் வேதாந்தாவுக்கு உயர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

பசுமை அனுமதிக்கான வழக்கமான கட்டுப்பாடுகள்

கிட்டத்தட்ட பெரிய அளவிலான அனைத்து தொழிற்துறை திட்டங்களுக்கும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திலிருந்து ஒரு கட்டாயமான சுற்றுச்சூழல் அனுமதி (தடையில்லாச் சான்று) தேவை. திட்ட இடத்தின் அருகே வசிக்கும் மக்களையும், சுற்றுப்புற சூழலையும் இத் தொழிற்சாலை எவ்வாறு பாதிக்கும் என திட்ட மேம்பாட்டாளர் முதலில் ஒரு அறிக்கை தயார் செய்ய வேண்டும். பின்னர், மாநில அரசின் மேற்பார்வையில் அந்த அறிக்கையை பொதுமக்களுக்கு கலந்தாலோசிக்க தர வேண்டும். இத்திட்டத்திற்கு அனுமதி தரலாமா அல்லது வேண்டாமா என முடிவு செய்ய, இந்த ஆலோசனைகளின் முடிவுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு ஆகியவற்றை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர்கள் ஆய்வு செய்ய வேண்டும். கலந்துரையாடலின்போது இந்த திட்டத்தை மக்கள் தடுக்க முடியாது. ஆனால், இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன் அம் மக்களின் கவலைகளை அந்த நிறுவனமும், மத்திய அரசும் தீர்க்க வேண்டும்.

2006ம் ஆண்டுக்கு முந்தைய சுற்றுச்சூழல் அனுமதி விதிமுறைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட சில தொழில்களுக்கு விதிவிலக்கு அளித்தது. அது என்னவென்றால், தேர்ந்தெடுக்கப்பட்ட சிறிய தொழில்கள் சில, ஏற்கனவே சுற்றுச் சூழல் அனுமதி பெற்ற தொழிற் பூங்காக்களில் தொடங்கப்பட்டால், தனியாக அனுமதி தர வேண்டியதில்லை என்று அந்த விதி இருந்தது.

2014 ஆம் ஆண்டு மே மாதம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் பதவி காலத்தில் இந்த விதிவிலக்கு பற்றி அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது, 2006-ம் ஆண்டு சுற்றுச்சூழல் விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதற்கு ரொம்ப காலத்திற்கு முன்னர் அந்த தொழிற் பூங்கா நிறுவப்பட்டிருந்தால் அந்த தொழிற் பூங்கா சுற்றுச்சூழல் அனுமதி பெறாமலிருந்தால் என்ன செய்வது ? அத்தகைய சந்தர்ப்பங்களில், அந்நிறுவனங்கள் இத்திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களை கலந்தாலோசிக்க வேண்டியதில்லையா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

மே 16, 2014 அன்று UPA அரசாங்கத்தின்கீழ் சுற்றுச்சூழல் அமைச்சகம் தெளிவுபடுத்தியது. தொழிற் பூங்காக்களுக்கு உள்ளே கட்டப்பட்டு வரும் தொழிற்சாலைகள், ஒரு சுற்றுச்சூழல் தடையில்லாச் சான்று பெற்றிருந்தால் மட்டுமே, பொது ஆலோசனைகளை கடந்து செல்ல முடியும். தொழில்துறை பூங்கா சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் 2006 விதிமுறைகளின் கீழ் மதிப்பீடு செய்யப்படவில்லையெனில், அதன் உள்ளே வரும் தொழில்கள் அவசியமாக மக்களை கலந்தாலோசிக்க வேண்டும் என்று தெளிவுபடுத்தப்பட்டது.

இதில் அளிக்கப்படும் லாஜிக் என்னவெனில், ஒட்டுமொத்த தொழில் வளாகம் மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் மீதான தாக்கத்தை மதிப்பீடு செய்திருந்தால், அப்போது அந்த தொழில் வளாகத்தில் அமைந்துள்ள தனித் தனி அலகுகள் பொது ஆலோசனைகளை உள்ளடக்கிய விரிவான அனுமதி வழக்கமான நடைமுறைகளை கையாள வேண்டியதில்லை.

ஆனால் மே 26-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் “எளிமையாக தொழில் தொடங்குதல்“ (Ease of Doing Business) என்ற வாக்குறுதியை அளித்து பதவியேற்றது.

இந்த பிரச்சினையில் பல தொழில் நிறுவனங்களிடமிருந்து அது கோரிக்கைகளை பெற்றது என ஆவணங்கள் காட்டுகின்றன. டிசம்பர் 10, 2014 அன்று, தொழில் நிறுவனங்களின் வேண்டுகோளுக்கு பதிலளித்து, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அப்போதைய சுற்றுச் சூழல் அமைச்சர் ஒப்புதல் அளித்த அலுவலக குறிப்பாணை (மெமோராண்டம்) வடிவத்தில் ஒரு விளக்கத்தை வெளியிட்டது. குறிப்பிடப்பட்ட தொழில்துறை மண்டலங்களில் உள்ள தொழிற்சாலைகள், சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை என்றாலும், மக்களை ஆலோசனை செய்ய வேண்டிய அவசியமில்லை என அந்த விளக்கம் தெரிவித்தது.

நடைமுறையில், சட்டபூர்வமாக கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை, ஒரு சாதாரண விதியாக தளர்த்தி, அச்சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும்படி, “விளக்கம்” என்று சட்டத்தையே மாற்றியது பிஜேபி அரசு.

இது வேதாந்தா உட்பட நாடெங்கிலும் உள்ள பல தொழில்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. பின்னர், இந்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இந்த மாற்றப்பட்ட கொள்கையை பிஜேபி அரசாங்கம் பதவிக்கு வந்த ஓர் ஆண்டுக்குள் செய்த முக்கிய சீர்திருத்தங்களில் ஒன்றாக முன்னிலைப் படுத்தியது.

வேதாந்தா எப்படி பயனடைந்தது?

ஒரிஜினலாக, வேதாந்தாவின் காப்பர் மெல்டர் எனப்படும் செப்பு உருக்காலை தூத்துக்குடியில் “சிப்காட்“ எனப்படும் தொழிற் பேட்டையின் உள்ளே கட்டப்பட்டது, 2006-ம் ஆண்டின் சுற்றுச்சூழல் அனுமதி விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்னரே இந்த தொழில் வளாகம் வந்தது. அதன் காப்பர் ஸ்மெல்டர் ஆலையை விரிவுபடுத்த வேதாந்தா முதலில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை 2099ம் ஆண்டு பெற்றது. அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கீழான சுற்றுச்சூழல் அமைச்சகம், பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்த தேவையின்றி, அனுமதி வழங்கியது.

இந்த அனுமதி ஐந்து ஆண்டுகள் செல்லத்தக்கதாக இருந்தது. அந்த அனுமதி காலாவதியானவுடன், ஒரு நீட்டிப்பை பெற வேதாந்தா 2013ம் ஆண்டு மீண்டும் சுற்றுச்சூழல் அமைச்சகம் சென்றது. 2014 ஆம் ஆண்டு மே மாதத்தில் (இன்னும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி) சுற்றுச்சூழல் அமைச்சகம், வேதாந்தாவின் விரிவாக்கத் திட்டங்கள் போன்றவை மக்கள் ஆலோசனை பெற வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால் 2014 டிசம்பரில், பிஜேபி அரசாங்கம் இந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது, மார்ச் 2015 இல் சுற்றுச்சூழல் அமைச்சகம் டிசம்பர் 2018 வரை வேதாந்தா நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது. பல்வேறு வகையான தொழிற் பூங்காங்களின் திட்டங்களுக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்பதன் அவசியம் குறித்து நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது வேதாந்தாவுக்கு சுற்றுச்சூழல் அனுமதியை அந்த அமைச்சகம் வழங்கியது. இது கட்டுமானத்தை தொடங்க அந்த நிறுவனத்தை அனுமதித்தது.

விரிவாக்கத்திற்கான கட்டுமானப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கையில், தூத்துக்குடியில் நூற்றுக்கணக்கான மக்கள் எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர் என செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த எதிர்ப்பு போராட்டங்கள் 100 நாட்களுக்கு சென்றன. பின்னர் மே 25-ம் தேதி, மாவட்ட நிர்வாகம் குற்றவிசாரணை முறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடையுத்தரவு பிறப்பித்தது. ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆயிரக்கணக்கில் கூடினர் என்றும், இது வன்முறைச் சம்பவங்களுக்கும், அதைத் தொடர்ந்து மாநில போலீஸாரால் 11 பேர் சுட்டுக்கொல்லப்படுவதற்கும் வழிவகுத்தது என செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடரும்...

– நிதின் சேத்தி

மொழிபெயர்ப்பு - சவுக்கு சங்கர்

நன்றி தி பிசினெஸ் ஸ்டான்டர்ட்

Wednesday, May 23, 2018

ஸ்டெர்லைட் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற தூத்துக்குடி செல்வாரா முதல்வர் ?

ஸ்டெர்லைட் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற தூத்துக்குடி செல்வாரா
முதல்வர் ?


தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு தொடர்பாக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்தை இரவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து விளக்கம் அளித்தார்.


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. போராட்டத்தின் 100-வது நாளான நேற்றுமுன்தினம் (மே 22) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர். இதில் போலீஸ் துப்பாக்கி சூடு நடந்தது. நேற்று 2-வது நாளாகவும் வன்முறை, துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்தன.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தில் இதுவரை 12 பேர் பலியானார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்திருக்கின்றன. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், எஸ்.பி. மகேந்திரன் ஆகியோரை நேற்று மாலையில் அங்கிருந்து பணி மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு நிலவரம் தொடர்பாக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் ஏற்கனவே இரங்கல் அறிக்கை விட்டிருந்தார். அவர் தனது உதகை சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று (மே 23) இரவில் சென்னை திரும்பினார். இரவு 9.30 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயகுமார், போலீஸ் டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் சென்னை கிண்டியில் உள்ள ஆளுனர் மாளிகைக்கு சென்று பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தனர்.
தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்த நேர்ந்த சூழல் குறித்து ஆளுனரிடம் அவர்கள் விளக்கியதாக தெரிகிறது.

ஏற்கனவே இது தொடர்பாக அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை குறித்த விவரங்களையும் தெரிவித்தனர்.
தூத்துக்குடி கலவரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதேபோல ஆளுனரிடம் மத்திய அரசு தகவல் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்தப் பின்னணியில்தான் முதல்வர், துணை முதல்வர், டிஜிபி ஆகியோர் ஆளுனரை சந்தித்து நிலவரத்தை தெளிவு படுத்தியிருக்கிறார்கள்.
ஆளுனரே தூத்துக்குடி செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சுமார் தூத்துக்குடி மாவட்ட மக்கள் 20 ஆயிரத்துக்கு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி செய்தனர். அவர்களைத் தடுக்க காவல்துறையினர் தடியடி நடத்தினார். அதனால், அந்தப் பகுதியில் கலவரம் வெடித்தது. மேலும், ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. அதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழக அரசின் இந்தச் செயலுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். தூத்துக்குடியில் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டிருந்தது. மேலும், 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையமும் விளக்கம் கேட்டிருந்தது. இந்தநிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், காவல்துறைத் தலைவர் டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்து தூத்துக்குடி நிலவரம் குறித்து விளக்கம் அளித்தனர்.

Thursday, May 17, 2018

கநாடக ஆட்சி பொறுப்பை ஏற்கப் போவது யார்? உச்சநீதிமன்றத்தில் நள்ளிரவில் பரபரப்பு!

கநாடக ஆட்சி பொறுப்பை ஏற்கப் போவது யார்? உச்சநீதிமன்றத்தில் நள்ளிரவில் பரபரப்பு!


கர்நாடக அரசியலில் அதிரடியாக நடைபெற்று வரும் திருப்பங்கள் நேற்று (மே 16) இரவு முதல் விடிய விடிய பல்வேறு பரபரப்புக் காட்சிகளை பெங்களூருவிலும் டெல்லியிலும் அரங்கேற்றியுள்ளன. கர்நாடகா முதல்வராக எடியூரப்பா பதவியேற்பதை தடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று அதிகாலை கூறிவிட்டது. ஆனபோதும் காங்கிரஸ் மஜதவினரின் மனுவை தள்ளுபடி செய்ய வில்லை என்றும் இதை பின் விசாரிப்பதாகவும் கூறியுள்ளது உச்ச நீதிமன்றம்.

நேற்று இரவு பெங்களூருவில் தொடங்கி அதிகாலை உச்ச நீதிமன்றம் வரை சென்ற இந்த பரபரப்புக் காட்சிகளை டைம் டு டைம் ஆக மின்னம்பலம் வாசகர்களுக்குத் தருகிறோம்.

நேற்று இரவு 9.30 மணிக்கு கர்நாடக ஆளுநர் ஆட்சி அமைக்க வருமாறு தனிப்பெரும் கட்சியான பாஜகவின் சட்டமன்றக் கட்சித் தலைவர் எடியூரப்பாவுக்கு அழைப்பு விடுத்தார். ஏற்கனவே நேற்று பகலில், ‘ஆளுநர் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தால் நாங்கள் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்’ என்று மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி தெரிவித்திருந்தார்.இரவு 11.30

சொன்னாற்போல நேற்று இரவு 11.30 க்கு உச்ச நீதிமன்றப் பதிவாளரை நாடிய காங்கிரஸ் -மஜத தலைவர்கள், ‘நாளை காலை 9 மணிக்கு எடியூரப்பாவை பதவியேற்க அழைத்திருக்கிறார் கர்நாடக ஆளுநர். இது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. உடனடியாக தடை விதிக்க வேண்டும். நாங்கள் மெஜாரிட்டியோடு ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், தனிப்பெரும் கட்சியான பாஜகவை மெஜாரிட்டி இல்லாத நிலையில் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தது சட்ட விரோதம்’’என்று காங்கிரஸ் -மஜக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இரவு 12.00

இரவு 12 மணிக்கு தலைமை நீதிபதி தீபம் மிஸ்ராவின் வீட்டு வாசலில் போலீஸார் குவிக்கப்பட்டனர். பேரி கார்டுகளால் அவர் வீட்டைச் சுற்றித் தடுப்புகள் அமைக்கப்பட்டன. எனவே இரவே இந்த வழக்கை விசாரிக்க இருக்கிறார் என்பது உறுதியாகி அனைத்து முக்கிய ஊடகங்களும் தீபம் மிஸ்ராவின் வீட்டு வாசலில் குவிந்தன.

இரவு 12.30

உச்ச நீதிமன்றப் பதிவாளர் காங்கிரஸ்- மஜத தலைவர்களின் அவசர மனுவை கையோடு எடுத்துக் கொண்டு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் வீட்டுக்கு விரைந்தார். 12.30 மணியளவில் அவர் தலைமை நீதிபதியின் வீட்டை அடைந்தார். கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரன், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி ஆகியோர் தாக்கல் செய்த மனுவைதான் அவர் தீபக் மிஸ்ரா வீட்டுக்கு எடுத்து வந்திருந்தார். அரசியல் அமைப்புச் சட்டம் 14-ன்படி ஆளுநர் எடியூரப்பாவை முதல்வர் பதவி ஏற்க அழைத்தது சட்டத்துக்கு முரணான செயல் என்பது உள்ளிட்ட விரிவான மனுவாக அது இருந்தது.

இரவு 1.45- உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் வீட்டில் சுமார் அரைமணி நேரம் நடந்த ஆலோசனைக்குப் பின் இரவு 1.15 மணி வாக்கில் இம்மனுவை ஏற்றதாக அறிவித்தது உச்ச நீதிமன்றம். அதன்படி உச்ச நீதிமன்றத்தில் இரவு 1.45 மணிக்கு இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்றும் நீதிபதி ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷன், காப்டே ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் குவிந்த வழக்கறிஞர்கள்!

இந்த அறிவிப்பை எடுத்து உச்ச நீதிமன்றத்தில் ஊடகத்தினரும் வழக்கறிஞர்களும் குவிந்தனர். காங்கிரஸ், மஜத சார்பில் மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி இரவு ஒன்றரை மணிக்கு உச்ச நீதிமன்றத்துக்கு வந்தார். அரசு சார்பாக முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆகியோர் நீதிமன்றத்துக்கு வந்தனர்.

இரவு 2 மணி: விசாரணை தொடங்கியது

இரவு 2 மணி வாக்கில் இந்த மனுவின் மீதான விசாரணை தொடங்கியது. “தேர்தலுக்குப் பின் அமைக்கப்பட்ட கூட்டணியான காங்கிரஸ் - மஜத கட்சிகளின் கூட்டணிக்கு பெரும்பான்மை இருக்கும் நிலையில், பெரும்பான்மை இல்லாத தனிப்பெரும் கட்சியான பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தது தவறு. ஆளுநரின் அழைப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும். தேர்தலுக்குப் பிறகான கூட்டணிகள் ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டது என்பது கோவா, மணிப்பூர், உபி, ஜார்க்கண்ட், டெல்லி என்று பல மாநிலங்களில் இதற்கு முன் நடந்துள்ளது. மேலும் மெஜாரிட்டியே இல்லாத பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்து 15 நாட்கள் அவகாசமும் கொடுத்துள்ளதன் மூலம் ஆளுநர் பெரிய தவறு செய்திருக்கிறார்.

சர்க்காரியா கமிஷனின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஆளுநர் செயல்படவில்லை.எனவே ஆளுநர் எடியூரப்பாவுக்கு விடுத்த அழைப்பை ரத்து செய்ய வேண்டும். மேலும் காங்கிரஸ் - மஜத கூட்டணியை ஆட்சி அமைக்க அழைக்குமாறு அவருக்கு அறிவுறுத்த வேண்டும்’’ என்று வாதிட்டார்.

மேலும், ‘’ஆளுநரின் இந்த அழைப்பு மற்றும்15 நாள் அவகாசம் மூலம் குதிரை பேரத்துக்கு வழி தொடங்கிவிட்டது. அது குதிரை வியாபாரம் அல்ல. குதிரை வியாபாரம் என்று சொல்லி குதிரைகளை அவமதிக்க விரும்பவில்லை. இது மனித வியாபாரம். கர்நாடகாவில் ஆளுநரின் உத்தரவால் மனித வியாபாரம் நடக்கிறது. இதைத் தடுக்க வேண்டும்’’ என்றார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி இதற்கு பதில் அளித்து வாதாடுகையில், “ஆளுநரின் உத்தரவை மாற்றி அமைக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை’’ என்றார்.

ஆனால் குறுக்கிட்ட அபிஷேக் சிங்வி, ‘’எத்தனையோ வழக்குகளில் ஆளுநர்கள் விதித்த 356 உத்தரவுகளே திருத்தப்பட்டுள்ளன’’ என்று பதில் அளித்தார்.

மேலும், “இரவு 2 மணிக்கு உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்ந்து இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்தே இந்த விஷயத்தின் தீவிரத் தன்மை புரிகிறது. இந்த விசாரணை என்பது ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி.

இந்த விசாரணை முடியும் வரை பதவியேற்பை தள்ளி வைக்க வேண்டும். பதவியேற்பு நிகழ்வை நாளைக்கு (மே 18)க்கு தள்ளி வைக்க வேண்டும்’’ என்று வாதங்களை வைத்தார்.

நீதிபதிகள் கேள்வி!

மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி, கே.கே.வேணுகோபால் ஆகியோரைப் பார்த்து நீதிபதி ஏகே சிக்ரி ‘’குமாரசாமி தனக்கான 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுப் பட்டியலை ஆளுநரிடம் கொடுத்திருக்கும்போது, எடியூரப்பா பின் எவ்வாறு மெஜாரிட்டியான 112 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக சொல்ல முடியும்?’’என்று கேட்க, ‘அதை சட்டமன்றத்தில்தான் சொல்ல முடியும்’’ என்று பதிலளித்தது மத்திய அரசுத் தரப்பு.

முகுல் ரோத்தகி வாதங்கள்:

இந்த வழக்கு நள்ளிரவில் விசாரிக்க்கப்பட வேண்டிய வழக்கே அல்ல. உறங்கிக் கொண்டிருந்த என்னை நள்ளிரவில் எழுப்பிக் கொண்டு வந்துவிட்டார்கள். குடியரசுத் தலைவர், ஆளுநர்களின் ஆணைகளை உச்ச நீதிமன்றம் உடனடியாக திருத்தவோ ரத்து செய்யவோ முடியாது. எனவே இந்த வழக்கை இப்போது விசாரணைக்கு எடுத்துக் கொண்டதே தவறு. அரசியல் அமைப்புச் சட்டம் 164-ன்படி ஆளுநர் அதன் அரசியல் சாசன கடமையை செய்வதை யாரும் தடுக்க முடியாது என்றார் ரோத்தகி.அதிகாலை 4.25 தீர்ப்பு

இரு தரப்பின் வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ‘’கர்நாடக ஆளுநர் முதல்வராக பதவியேற்குமாறு எடியூர்ப்பாவுக்கு விடுத்த அழைப்பை ரத்த் செய்ய முடியாது. ஆனாலும் இந்த மனுவை நாங்கள் தள்ளுபடி செய்யவில்லை. பிறகு விசாரிப்போம்’’என்று கூறி வழக்கு விசாரணையை முடித்தனர்.

அதனால் இன்று காலை எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவி ஏற்பது உறுதியாகிவிட்டது. இதையடுத்து பெங்களூருவில் பதற்றம் பரவி வருகிறது.

தகவல்கள்- மின்னம்பலம்.காம்

Saturday, May 12, 2018

கர்நாடக பொதுத் தேர்தலில் 67.2% வாக்குகள் பதிவு! அமையுமா தொங்கு சட்டசபை?

கர்நாடக பொதுத் தேர்தலில் 67.2% வாக்குகள் பதிவு! அமையுமா தொங்கு சட்டசபை?


கர்நாடக மாநிலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் 67 சதவீத வாக்குகள் பதிவாகின.

அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளுக்கு இந்த தேர்தல் வெற்றி முக்கியமாகக் கருதப்படுகிறது.

கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பறிகொடுத்து வருகிறது. இந்நிலையில், கர்நாடக பேரவைத் தேர்தலும், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநில பேரவைத் தேர்தல்களும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாகக் கருதப்படுகிறது.

இதற்காக, பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்களும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர். கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து விலகிய பிறகு தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த சோனியா காந்தி, கர்நாடக பேரவைத் தேர்தலுக்காக பிரசாரம் மேற்கொண்டார்.
மொத்தமுள்ள 224 பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. ஜெய்நகர் தொகுதி பாஜக வேட்பாளர் விஜயகுமார் மரணமடைந்ததால், அந்தத் தொகுதியில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.

ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் சுமார் 10,000 வாக்காளர் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதால், அந்த தொகுதியில், தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. எனவே, மொத்தமுள்ள 224 தொகுதிகளில், 222 தொகுதிகளில் மட்டும் சனிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில், 200 பெண் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 2,600 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

4 முதல்வர்கள் போட்டி: இந்தத் தேர்தலில் முதல்வர் சித்தராமையா (சாமுண்டீஸ்வரி, பதாமி தொகுதி), முன்னாள் முதல்வர்கள் பி.எஸ்.எடியூரப்பா (சிகாரிபுரா), ஹெச்.டி.குமாரசாமி(சென்னபட்டணா, ராமநகரம்), ஜகதீஷ் ஷெட்டர்(ஹுப்பள்ளி-தார்வார்ட்) என முதல்வர் பதவி வகித்த 4 பேரும்
போட்டியிட்டுள்ளனர்.

தேர்தலையொட்டி, கர்நாடக மாநிலம் முழுவதும் 58,008 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் 12,002 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. தேர்தல் பணிகளில் 3,50,000 அரசு ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கு காவல் துறை, ராணுவம், ஊர்க்காவல் படை ஆகியவற்றைச் சேர்ந்த 82,157 பேர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

முக்கியத் தலைவர்கள் வாக்களிப்பு : இந்த தேர்தலில் முக்கியத் தலைவர்கள் பலர் ஆர்வமுடன் வாக்களித்தனர். முதல்வர் சித்தராமையா, எதிர்க்கட்சித் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா, மஜத மாநிலத் தலைவர் குமாரசாமி உள்ளிட்டோர் வாக்களித்து, ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

மத்திய அமைச்சர்கள் அனந்த்குமார், சதானந்த கெüடா, முன்னாள் மத்திய அமைச்சர்கள் வீரப்ப மொய்லி, ரகுமான்கான், கே.எச்.முனியப்பா, மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மஜத தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவெ கெüடா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் வாக்குச்சாவடிகளில் குடும்பத்துடன் வாக்களித்தனர்.

வாக்குப்பதிவு: மாலை 6 மணியுடன் நிறைவடைந்த தேர்தலில் 67 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 71.45 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகத்தில் இன்று பலபரீட்சை- யாருக்கு கிடைக்கும் வெற்றி?

கர்நாடகத்தில் இன்று பலபரீட்சை- யாருக்கு கிடைக்கும் வெற்றி?


கர்நாடகத்தில், முதல்–மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

காங்கிரஸ் அரசின் பதவி காலம் முடிவடைய இருப்பதை யொட்டி, 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்ட சபைக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.

பெங்களூரு ஜெயநகர் தொகுதி பாரதீய ஜனதா வேட்பாளர் மரணம் அடைந்ததால் அந்த தொகுதியின் தேர்தல் ரத்து செய்யப்பட்டு உள்ளது. 10 ஆயிரம் போலி வாக்காளர் அடையாள அட்டைகள் சிக்கியதால் ராஜராஜேஸ்வரி தொகுதியின் தேர்தல் வருகிற 28–ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. இதனால் மீதம் உள்ள 222 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா, தேவேகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய 3 முக்கிய கட்சிகள் போட்டியிடுவதால் மும்முனைப்போட்டி ஏற்பட்டு உள்ளது. 3 முக்கிய கட்சிகள் களத்தில் இருந்தாலும் காங்கிரசுக்கும், பாரதீய ஜனதாவுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

தென் மாநிலங்களில் முதன்முதலாக கர்நாடகத்தில்தான் பாரதீய ஜனதா காலூன்றியது. கடந்த 2008–ம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று முதன்முதலாக ஆட்சியை பிடித்தது. அதன்பிறகு 5 ஆண்டுகள் கழித்து 2013–ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்து, காங்கிரசிடம் ஆட்சியை இழந்தது. பின்னர் 2014–ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 17 தொகுதிகளை கைப்பற்றி பாரதீய ஜனதா மீண்டும் தனது பலத்தை உறுதி செய்தது.

இந்தியாவில் தற்போது கர்நாடகம், பஞ்சாப், மிசோரம், புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களில்தான் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. இதில் கர்நாடகம் மட்டுமே பெரிய மாநிலம். அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு கர்நாடக சட்டசபை தேர்தல் ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இதனால் கர்நாடகத்தில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் இருக்கிறது. அதேசமயம், காங்கிரசிடம் இருந்து ஆட்சியை பறித்து தனது செல்வாக்கை மீண்டும் நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்தில் பாரதீய ஜனதா உள்ளது. இதனால் இரு கட்சிகளுமே மிகுந்த பதற்றத்தில் உள்ளன.

காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி பலமுறை சூறாவளி பிரசாரம் செய்தார். முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முதல்–மந்திரி சித்தராமையா ஆகியோரும் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.

பாரதீய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, அக்கட்சியின் தலைவர் அமித்ஷா, உத்தரபிரதேச முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய மந்திரிகள் பிரசாரம் செய்தனர்.

கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த அனல் பறக்கும் பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் ஓய்ந்தது.

222 தொகுதிகளிலும் சுமார் 2600 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 5 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் ஓட்டுப்போடுவதற்காக 56 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது.

வாக்குப்பதிவை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்தி முடிப்பதற்காக மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 1½ லட்சம் மாநில போலீசாருடன் 50 ஆயிரம் மத்திய படை போலீஸ் படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இதுதவிர துணை ராணுவப்படையினரும் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

தேர்தல் முறைகேடுகளை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. முறைகேடுகளை தடுக்கும் வகையில் ஓட்டுப்பதிவை ‘வெப் கேமரா’ மூலம் படம் பிடிக்கவும், அதை ஒரே இடத்தில் இருந்து கண்காணிக்கவும் தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்து உள்ளது.

இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 15–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) எண்ணப்படுகின்றன.

கர்நாடகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது அன்று தெரிந்துவிடும்.

இதுவரை நடைபெற்ற கருத்து கணிப்புகளில் கர்நாடகத்தில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்றும், தொங்கு சட்டசபை தான் அமையும் என்றும் தெரியவந்து உள்ளது. என்றாலும் 15–ந் தேதி தெளிவான முடிவு தெரிந்துவிடும்.

Friday, May 11, 2018

கார்த்தி ப.சிதம்பரம் மீது வருமானவரித் துறை வழக்கு ப் பதிவு!

கார்த்தி ப.சிதம்பரம் மீது வருமானவரித் துறை வழக்கு ப் பதிவு!
சென்னை : இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளில் சொத்து வாங்கியதை மறைத்ததாக கருப்பு பண சட்டத்தின்கீழ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் மீது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வருமான வரித்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோரது பெயரில் இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் நகரில் ஹோல்பன் குளோஸ் பார்டன் பகுதியில் ரூ.5.37 கோடிக்கு சொத்து வாங்கப்பட்டது. அதே பகுதியில் ரூ. 80 லட்சம் மதிப்பில் வேறு ஒரு சொத்தும் வாங்கப்பட்டது. மேலும், இவர்கள் பெயரில் அமெரிக்காவில் உள்ள நானோ ஹோல்டிங் நிறுவனத்தில் ரூ.3.28 கோடி முதலீடு செய்யப்பட்டது. இந்த கணக்கை வருமானவரிக் கணக்கு தாக்கலின்போது அவர்கள் காட்டவில்லை. இது குறித்து வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, வருமானவரித்துறை இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இந்த நிலையில், வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வரும் விதமாக, பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2015-ம் ஆண்டு கருப்பு பணம் தடுப்புச் சட்டத்தை கொண்டு வந்தார். இதையடுத்து, கருப்பு பண மோசடி சட்டப் பிரிவு 50ன் கீழ் நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி நிதி ஆகியோர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு வருமான வரித்துறை 3 பேருக்கும் 2017 ஆகஸ்ட் 4ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை எதிர்த்து நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம், வழக்கை தள்ளுபடி செய்து கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டார். இதை எதிர்த்து 3 பேரும் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் வி.பாரதிதாசன், என்.சேஷசாயி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘‘நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக வருமான வரித்தறை விசாரணை நடத்தலாம்.

அதேநேரம், கருப்பு பண தடை சட்டத்தின் கீழோ அல்லது வருமானவரிச் சட்டத்தின் கீழோ நடவடிக்கை எடுப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கும்போது, இந்த வழக்கு நிலுவையில் உள்ளதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த வழக்கில் வருமான வரித்துறை முதன்மை இயக்குனர் ஜூன் 5ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்’’ என்று உத்தரவிட்டனர். இந்நிலையில், கருப்பு பணம் தடுப்புச் சட்டம் பிரிவு 50ன் கீழ் நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், நிதி ஆகியோர் மீது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வருமான வரித்துறை நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. கருப்பு பணம் தடுப்பு சட்டத்தின்கீழ் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களின் விபரங்களை மறைத்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 120 மடங்கு வரி அபராதம் விதிக்கப்படும். மேலும், 10 ஆண்டு வரை சிறை தண்டனையும் விதிக்கவும் இந்த சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், சிதம்பரத்தின் குடும்பத்தினர் மீதான வழக்கில் வருமான வரித்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

எனது பெயரைப் பயன்படுத்தக் கூடாது- சசிகலா அதிரடி! அதிர்ச்சியில் திவாகரன்

எனது பெயரைப் பயன்படுத்தக் கூடாது- சசிகலா அதிரடி! அதிர்ச்சியில் திவாகரன்


எனது பெயரையோ, புகைப்படத்தையோ திவகாரன் பயன்படுத்தக்கூடாது என்று சசிகலா தரப்பிடமிருந்து திவாகரனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நேற்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் திவாகரனுக்கு அனுப்பிய நோட்டீஸில் தெரிவித்துள்ளதாவது:

''தாங்கள் சசிகலாவின் உடன் பிறந்த சகோதரர். உங்கள் மீது சசிகலா அதிக பாசம் கொண்டவர் என்பது தாங்கள் அறிந்ததே. ஆனாலும், தங்களின் முரண்பட்ட செயல்பாடுகளும் வெளிப்பாடுகளும் சசிகலாவை கனத்த மனதுடன் இந்த அறிவிப்பை தங்களுக்கு அனுப்பும் சூழலுக்கு தள்ளியுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோரைப் புகழ்ந்தும் அவர்களது துரோகச் செயல்களை மறைக்கும் வண்ணமாக தாங்கள் கடந்த ஏப்ரல் 24-ம் தேதி முதலாக தொடர்ந்து பத்திரிகைகள், காணொளிகள், சமூக வலைதளங்களில் தவறான விஷயங்களை பேட்டிகள் கொடுத்து வருகிறீர்கள்.

அதிமுகவில் உள்ள தற்போதைய பிரச்சினைகள் தொடர்பாக சசிகலா பல வழக்குகளை சென்னை மற்றும் டெல்லி உயர் நீதிமன்றங்களில் வழக்குகளாக தொடுத்துள்ளார். மேலும், அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளையும் மேற்படி நீதிமன்றங்களில் எதிர்கொண்டு வருகிறார். அவை அனைத்தும் தற்போதும் நிலுவையில் இருந்து வருகிறது. வழக்குகளின் அனைத்து விவரங்களும் வழக்காடும் தன்மையும் சசிகலாவின் ஆலோசனையின்படியே நடந்து வருகின்றன. அதே போல சசிகலாவால் அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராய் நியமிக்கப்பட்ட டிடிவி தினகரனும் என் கட்சிக்காரரிடம் அவ்வப்போது உரிய ஆலோசனைகளைப் பெற்று கட்சிப் பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

தினகரன் கடும் இன்னல்களுக்கிடையே அதிமுகவின் பெருவாரியான உண்மைத் தொண்டர்களை ராணுவம் போன்று கட்டுக்கோப்புடன், கட்சியை அனுதினமும் பலப்படுத்தி வருகிறார். நிலவரங்கள் இவ்வாறு இருக்க, உண்மைக்கு மாறாக காழ்ப்புணர்வுடனும், இல்லாததையும் பொல்லாததையும் தாங்கள் பொதுவெளியில் பேசி வருவது சசிகலாவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது. அதிமுகவின் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லாத தாங்கள், அதிமுகவின் பொதுச் செயலாளராகிய சசிகலா பற்றி அவதூறாகப் பேசி வருவது சட்டத்தின் பார்வையில் சரியானதல்ல. எனது கட்சிக்காரர் சசிகலாவின் நிர்வாகத் திறமை, தலைமை சார்ந்த பண்பு, கட்சிப் பணி மற்றும் அவருக்கும் அதிமுகவின் தொண்டர்களுக்கும் இடையே இருக்கும் பாசப் பிணைப்புக்கு எதிராக தாங்கள் உள்நோக்கத்துடன் பேட்டிகள் கொடுத்து வருவதை சசிகலா இந்த சட்ட அறிவிப்பின் வாயிலாக கண்டிக்கிறார்.

தினகரன் குறித்து தாங்கள் பொதுவெளியில் உண்மைக்கு மாறாகப் பேசி வரும் விஷயங்கள் தங்கள் காழ்ப்புணர்ச்சி, பழிவாங்குதல் உணர்வை வெளிப்படுத்துகின்றன. தங்களின் பேட்டிகள் சசிகலாவின் தலைமை மாண்புக்கும் ஆளுமைக்கும் குற்றம் கற்பிக்க, யாரையோ திருப்திப்படுத்த முயன்று வருகிறீர்கள் என்பதையும் வெளிப்படுத்துவதாக அவரே தெரிவிக்கிறார்.

என் கட்சிக்காரர் சசிகலா அதிமுகவும் அதன் ஒன்றரை கோடி தொண்டர்களுமே பிரதானம் என்றும் அவரது குடும்பம் அவருக்கு இரண்டாவது பட்சம் என்பதையும் தெரிவிக்கிறார்.

தாங்கள் எந்த ஒரு பெயரிலும் அரசியல் ரீதியாக செயல்படுவது தங்களின் சொந்த விருப்பம் என்றும், ஆனால் என் கட்சிக்காரர் சசிகலாவின் பெயரையோ, புகைப்படத்தையோ எந்த வகையிலும் தாங்கள் பயன்படுத்தக் கூடாது என்பதனை இந்த சட்ட அறிவிப்பின் மூலமாக தெரிவிக்கிறார்.

அதேபோல் என் கட்சிக்காரர் உயிருக்கும் மேலாக நினைத்து வணங்கும் ஜெ.ஜெயலலிதாவை ஒருமையிலும், தரக்குறைவாகவும், அவரது நற்புகழை களங்கப்படுத்தும் வகையில் தொடர்ந்து பேசி வருவதை எள்ளளவும் என் கட்சிக்காரரும், கட்சித் தொண்டர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆகவே, அதை மனதில் கொண்டு அதுபோன்ற சட்டத்துக்கு புறம்பான செயல்களில் தாங்கள் இனிமேல் எவ்வகையிலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்யக்கூடாது, பேசக்கூடாது.

எனது அக்கா, என் உடன் பிறந்த சகோதரி எனும் உரிமையைக் கோரி தாங்கள் எனது கட்சிக்காரரைப் பற்றி ஊடங்களில் பேசி வருவதை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்த சட்ட அறிவிப்பினை அனுப்புவதன் நோக்கமே, உண்மைக்கு மாறாக தவறாக தொடர்ந்து ஊடகங்களில் பேசி வருவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதற்காகத்தான்.

இந்த சட்ட அறிவிப்பைனைப் பெற்ற பிறகும் தாங்கள் தொடர்ந்து பொய்யான விஷயங்களைப் பேசும் சூழலில் ரத்த சம்பந்த உறவு என்பதை ஒதுக்கிவைத்துவிட்டு தங்கள் மீது உரிய சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவீர்கள்.''

இவ்வாறு ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சசிகலா சிறைக்குச் செல்லும்போது தனக்கு அடுத்த நிலையில் தினகரனை நியமித்தார். அதற்கேற்ப ஆர்.கே.நகரில் சுயேச்சையாகப் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தினகரன் தனது அரசியல் திறமையை நிரூபித்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வான தினகரன், அமமுக என்ற கட்சியைத் தொடங்கினார். பி.வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் அக்கட்சியில் உள்ளனர்.

ஆனாலும், சசிகலா குடும்பத்தில் திவாகரன் உள்ளிட்டோருக்கும் தினகரனுக்கும் இடையே பனிப்போர் நீடித்து வந்தது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றிக்குப் பிறகு தினகரனின் கை ஓங்கியதால் திவாகரனால் கட்சியில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. தனது கணவர் ம.நடராஜன் இறந்தபோது 15 நாட்கள் பரோலில் வந்த சசிகலா, தினகரன் - திவாகரன் இடையே சமாதானம் செய்து வைத்ததாகக் கூறப்படுகிறது.

அரசியலில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் இந்த நேரத்தில் குடும்பத்துக்குள் மோதல் என்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, எதிர்காலம் கருதி அமைதியாக இருக்குமாறு சசிகலா எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. ஆனாலும் மோதல் ஓய்ந்த பாடில்லை.

இந்நிலையில் எனது பெயரையோ, புகைப்படத்தையோ திவகாரன் பயன்படுத்தக்கூடாது என்று சசிகலா தரப்பிடமிருந்து திவாகரனுக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனிதம் தொலைத்த மனிதர்கள்? இன்றைய யுகத்தின் சாபக்கேடு!

மனிதம் தொலைத்த மனிதர்கள்? இன்றைய யுகத்தின் சாபக்கேடு!
சிவப்பு நிற டாட்டா இண்டிகா கார் கரப்பான் பூச்சியை கவிழ்த்து போட்டது போல் கவிழ்ந்து கிடக்கிறது. கவிழ்ப்பதற்கு முன்னர், ஆக்ரோஷமாக அடித்து நொறுக்கப்பட்டிருப்பது அந்த வீடியோவைப் பார்த்தாலே தெரிகிறது. அதன்பின்தான் காரை கவிழ்த்திருக்க வேண்டும். காருக்கு அருகிலேயே ஐந்து பேரின் ஆடைகள் கிழிக்கப்பட்டு, உதிரம் வலிய அமர்ந்திருக்க அவர்களை மனிதர்கள் கூட்டமாக காலால், கையால் புரட்டி அடித்தனர். அவர்களோ வலியில் துடிதுடித்தனர். கும்பலாக ஒரு சிலர் காரில் வந்தவர்களை அடித்துக்கொண்டிருக்க, அதை ஊர் திருவிழா போன்று வீட்டு சுவற்றிலும், வீட்டு மாடியிலும் நின்று வேடிக்கை பார்த்து வந்தனர். பின்னர், போலீஸ் வந்து, தாக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனைக்கு சென்றவுடன் தாக்கப்பட்டதில் ஒருவரான 65 வயது மூதாட்டி இறந்துவிட்டார். மேலும் இரண்டு பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் இரண்டு பேருக்கு முதல் உதவி செய்திருக்கின்றனர்.பல்லாவரத்தைச் சேர்ந்த ருக்குமணி, பல்லாவரத்தைச் சேர்ந்த வெங்கடேசன், மலேசியாவைச் சேர்ந்த சந்திரசேகரன், மலேசியாவைச் சேர்ந்த மோகன்குமார் (இருவரும் திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள்), மயிலாப்பூரைச் சேர்ந்த கார் ஓட்டுநர் கஜேந்திரன் ஆகியோர்தான் காருக்குள் இருந்தவர்கள். அந்த ஊர் மக்களால் தாக்கப்பட்டவர்கள். அவர்கள் அப்படி என்னதான் செய்தார்கள் என்று இப்படி மிருகத்தை போன்று மாறி காரில் வந்தவர்களை தாக்கியிருக்கிறார்கள், தெரியுமா? காரில் வந்தவர்கள் அந்த ஊரில் இருக்கும் ஒரு கோவிலுக்குச் செல்ல சென்னையில் இருந்து வந்துள்ளனர். வழி மாறிச் சென்றதால், கோவிலுக்கு வழியை விசாரித்துவிட்டுத் திரும்பியிருக்கின்றனர். அப்போது அங்கே இருந்த குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்திருக்கிறார் அந்த மூதாட்டி. இதனைத்தொடர்ந்து அவர்களை பின்தொடர்ந்து நீங்கள் குழந்தைகளை கடத்த வந்தவர்கள் தானே என்று தாக்கியுள்ளனர்.இந்த சம்பவம் நடந்து ஓய்வதற்கு முன்பே திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் முப்பது வயதிற்கும் உட்பட்டவர் ஒருவர் பார்க்க குழந்தை பிடிப்பவர் போன்று இருந்தாராம். உடனே கூட்டமாக சூழ்ந்துகொண்ட பொதுமக்கள் அவர் யார், என்ன என்று கூட துளியும் விசாரிக்காமல் அடித்து துவம்சம் செய்துள்ளனர். அடித்த அடியில் அவரது மூக்கு உடைக்கப்பட்டுள்ளது. இன்னும் மிருகத்தனமாக அவரது கண்ணையையும் தோண்டி இருக்கின்றனர். அவரது உயிர் பிரிந்தவுடன். கொஞ்சம் கூட தயக்கமின்றி, 'எல்லோருக்கும் பாடம் கற்பிக்கிறேன்' என்று அங்கே உள்ள உப்புநீரி ஏரியின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்திலிருந்து இறந்தவரின் கால்களைக் கட்டி தொங்கவிட்டுள்ளனர். காவலர்கள் வந்து விசாரித்தபின்புதான் தெரிகிறது, அவர் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று. இந்த இரண்டு ஊர்களிலும் சிறிது காலங்களாக குழந்தைகள் கடத்தல் நிகழ்ந்திருக்கிறது. அதனால், விழிப்பாக இருக்க முயன்று, இதுபோன்ற சம்பவங்கள் நடந்தேறி உள்ளன என்கின்றனர்.இச்சம்பவங்களை போன்றே கேரளாவில் கடந்த பிப்ரவரி மாதம், பார்க்க நோஞ்சானாக இருக்கும் 27 வயது வாலிபன், அந்த வீடியோவில் அவர் முகத்தில் அப்பிராணியான ஒரு சிரிப்பு இருந்துகொண்டே இருந்தது. ஒரு மூட்டை அரிசி, அதில் ஒரு சார்ஜர் வயர் போன்ற பொருட்களை எல்லாம் வீடியோவில் தூக்கி தூக்கி காட்டுகின்றனர், அப்போதும் அவன் முகத்தில் அதே சிரிப்பு தான். அங்கே அவரை சூழ்ந்த கூட்டமெல்லாம் கோபமாக அவனைக் கடிந்து தாக்க ஆரம்பித்தனர். பிறகு, அவரை பக்கத்தில் இருக்கும் காட்டுப் பகுதிக்கு அழைத்துக்கொண்டு சென்று அடி அடி என்று அவரை அடித்துள்ளனர். அப்படி அடிக்கும் பொழுது அதை ஒருவர் போட்டோ, வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார் என்றால் பாருங்கள், அவருக்கு எத்தனை இலகுவான மனது. சமூக வலைத்தளத்தில் அந்த வீடியோவை போட்டு லைக்ஸ்களும் ஷேர்களும் வாங்க அவர் காட்டிய மும்முரம், தாக்கப்பட்ட மதுவைக் காப்பாற்ற காட்டியிருக்கலாம். ஆனால், மது கொடூரமாக கொல்லப்பட்டார்.

மனிதனின் சந்தேக குணம், அது கோபம் என்ற எல்லையை மீறி மிருகமாக அவனை மாற்றுகிறது. காரில் வந்தவர்கள் குழந்தையை கடத்த வந்தவர்களாகவே இருந்தாலும் கூட, அவர்களை காவல்துறையிடம் பிடித்துக் கொடுத்திருந்திருக்கலாம். ஆனால், அவர்கள் உண்மையில் குழந்தை கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் அல்ல, அவர்களிடம் பேசியிருந்தாலே பிரச்சனை முடிந்திருக்கும். அதேபோல மதுவின் சம்பவத்தில் அவர் திருடிவிட்டார் திருடிவிட்டார் என்று, கொல்லும் அளவுக்கு அடித்துள்ளனர். அவர் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர். எதையும் திருடவில்லை, அவரின் தோற்றம் பார்க்க அழுக்காக இருப்பதால் மக்களே அவ்வாறு முடிவு செய்து இருக்கின்றனர்.

திருடனாக இருந்தாலும், தவறு செய்தவர்கள் யாராக தண்டிக்க நீதிமன்றம் இருக்கிறது. சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு, மனிதனாக இல்லாமல் மிருகமாக மாறி, தவறு செய்தவர்கள் என்ற சந்தேகத்தை மட்டும் வைத்துக்கொண்டு தண்டனை கொடுத்திருப்பது தற்போதிருக்கும் மனிதர்களுக்கு மனிதாபிமானம் இருக்கிறதா என்று யோசிக்க வைக்கிறது. நாளுக்கு நாள் மக்களுக்கு அரசியல், சூழலியல் விழிப்புணர்வு, போராட்ட உணர்வு அதிகரிப்பது ஒரு மகிழ்ச்சியென்றால், அதன் பெயரில் தேவையில்லாத எதிர்மறை எண்ணங்களும் வன்முறையும் பெருகியிருப்பது போனஸ். இவர்கள் யாரும் தங்களின் கோபத்தை அரசியல்வாதிகளிடமும் தேர்தலில் வாக்கு செலுத்துவதில் மட்டும் காட்டுவதாய் தெரியவில்லை. அங்கே அவர்கள் செய்த தவறுகளை எல்லாம் மறந்து மனிதாபிமானத்தை நூறு சதவீதம் காட்டுகிறார்கள்.

நன்றி-https://nakkheeran.in/special-articles/special-article/human-going-be-wild

சேலம் மாவட்டத்தில் தொடரும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ! நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்?

சேலம் மாவட்டத்தில் தொடரும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ! நடவடிக்கை எடுப்பாரா
மாவட்ட ஆட்சியர்?

சேலத்தில் விவாகரத்தான பெண் மருத்துவரை தாக்கிவரும் கனவரிடம் இருந்து பாதுகாப்பு கோரி காவல் ஆணையரிடம் மாதர் சங்கம் மனு.

சேலத்தில் விவாகரத்தான பெண் மருத்துவரை தாக்கி வரும் தனது கனவரிடம் இருந்து பாதுகாப்பு கேட்டு சேலம் மாநகர காவல் ஆணையரிடம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் புதன் கிழமை மனு அளிக்கப்பட்டது.

சேலம் மாநகரம் 24வது டிவிசன் கந்தம்பட்டி மேம்பாளம் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஹிலா பேகம், மருத்துவரான இவர் இதே பகுதியில் மருத்துவமனை, வீடு மற்றும் சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் சொத்துக்கள் வைத்துள்ளார். இவரின் கனவர் முகமது இஸ்மாயில் என்பவரை திருமணம் செய்து இருபது ஆண்டுகள் ஆன நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர். இவ,களுக்கு ஒரு மகள் திருமணமாகி உள்ளார். மருத்துவர் ராஹிலா பேகத்திற்கும் முகமது இஸ்மாயிலுக்கும் முறைபடி இரண்டு ஆண்டுகளுக்கு விவாகரத்து பெற்றுள்ளனர். இருப்பினும் அவரது கணவர் மருத்தவரை தொடர்ச்சியாக தாக்கியும் மருத்துவமனையில் நோயாளிகள் முன் அவமானப்படுத்தி கொலை செய்துவிடுவதாக கூறியும் மருத்துவரின் பெயரில் உள்ள சொத்துக்களை பூட்டிவைத்து ரவுடிகளை கொண்டு தாக்கிவருகிறார். இதனால் அச்சமடைந்த மருத்துவர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்திடம் புகார் தெரிவித்துள்ளார். இதனிடையே மாதர் சங்க மாநில தலைவர் எஸ்.வாலண்டீனா அவர்கள் தலைமையில் மாநர் சங்க நிர்வாகிகள் சேலம் மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் மனுவை அளித்துள்ளனர். இந்த மனுவில் மருத்தவர் ரஹிலா பேகம் அவர்களைலதொடர்ச்சியாக தாக்கிவரும் அவரது விவாகராத்தான கணவர் முகமது இஸ்மாயிலிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும். அவர் முதல் முதலாக புகார் தெரிவித்து பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து இதுவரை நடவடிக்கை எடுக்காமல், புகார் மனுவை முகமது இஸ்மாயிலுக்கு ஆதரவாக மாற்றி எழுதி வாங்கிய சூரமங்கலம் அனைத்து மகளிர் காவர் நிலைய ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மனு அளிக்கப்பட்டது. இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த மாதர் சங்க மாநில தலைவர்,

பெண்களுக்குகான இயக்கங்கள்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தமிழகம் முழுவதிலும் பெண்கள் மீதான பிரச்சனைகளுக்கு தொடர்ச்சியாக குரல் கொடுத்துவருகிறது. குறிப்பாக சேலம் மாவட்டத்தில் சிறுமி தர்ஷினி, வினுப்பிரியா பிரச்சனைகள் உள்ளிட்டு பலதரப்பட்ட பிரச்சனைகளை கையில் எடுத்து வழக்குகளை நடத்திவருகிறது. தற்போது சாமானிய பெண்களுக்கும் இங்கு பாதிப்பு கேள்வி குறியாகியுள்ளது.

பெண்கள் பாதுகாப்பு இல்லாமல் வாழும் மாவட்டம் தமிழக முதல்வர் மாவட்டம்.

சேலம் மாவட்டம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் சொந்த மாவட்டம். தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் தான் பெண்களுக்கு அதிக அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பாலியல் பலாத்காரங்கள், பாலியல் சீண்டல்கள் என பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் நடந்துள்ளது. குறிப்பாக எடப்பாடி தொகுதிக்குட்பட்ட ஜலகண்டாபுரம் தாரமங்கலம் உள்ளிட்ட இடங்களில் நான்கு வயது சிறுமி முதல் பதினாறு வயது பெண் குழந்தைகளுக்கு பாலியல் குற்றங்கள் அதிக அளவில் நடைபெற்றுள்ளது. மேலும், வாழப்பாடி, செந்தாரப்பட்டி, உள்ளிட்ட இடங்களிலும், சின்னேரிவயல் பகுதியில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் பெண்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். பெண்கள் பாதுகாப்பு இல்லாமல் வாழும் மாவட்டம் சேலம் மாவட்டமாக உள்ளது.

பெயரளவில் உள்ள பாக்சோ சட்ட்ம்.

பெண்குழந்தைகளை பாலியல் பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட பாக்சோ சட்டம் இன்று பெயரளவில் மட்டுமே உள்ளது. குறிப்பாக 14 வயதிற்கு உட்பட்ட பெண்குழந்தைகளை பாலியல் வண்புணர்ச்சி செய்தால், குற்றம் புரிந்தவர் சாகும் வரை சிறை கைதியாக இருக்க வேண்டும் என சட்டம் சொல்கிறது. ஆனால் இந்த சட்டம் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களிடம் இல்லை. இதனை தெரிவிக்க வேண்டிய அரசு வேடிக்கை பார்த்துவருகிறது. சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவல் துறை இன்று கட்ட பஞ்சாயத்துகளை செய்து குற்றவாளிகளை தப்பிக்கசெய்கின்றனர். பாக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பது மாதர் சங்கத்தின் கோரிக்கை என தெரிவித்தார்.

ஆளுனர் முதல் அமைச்சர் வரை பெண்களை இழிவுபடுத்தும் அவலம்.

பெண்களை விளம்பர பொருளாக பார்க்கும் அவலம் இன்று அனைத்து இடங்களிலும் உள்ளது. நாட்டை ஆளும் ஆளுனர் பன்சாரிவார் புரோகித் விழா ஒன்றில் அதிகமாக கேள்விகள் கேட்ட பெண் செய்தியாளர் லட்சுமி சுப்பிரமணியம் அவர்களை கன்னத்தை தட்டி சீண்டுவுதும், சுகாதார அமைச்சர் பெண் நிருபரை அழகாக உள்ளீர்கள் என வசை பாடும் நிலையும் தமிழகத்தில் உள்ளது. இதை கண்டிக்க வேண்டிய தமிழக முதல்வர் இன்றுவரை மௌனம் சாதித்துவருகிறார்.

பேராசிரியர் நிர்மலா தேவி பிரச்சனை.

மாணவிகளுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்க வேண்டிய பேராசிரியர் நிர்மலா தேவி அந்த மாணவிகளை தவறான வழிக்கு கொண்டு சென்ற செயல் மிகவும கண்டனத்திற்கு உரியது. இப்பிரச்சனையில் ஆளுனர் தனி நபர் குழுவை அமைத்த்து அவருக்கு அதிகாரம் இல்லாத செயல். இப்பிரச்சனையில் மாதர் சங்கம் ஜனதிபதிக்கு கடிதம் அனுப்ப்படும். ஆளுனருக்கு இப்பிரச்சனையில் தொடர்பு உள்ளதாக மாதர் சங்கம் கருதுகிறது. இந்த வழக்கை மாநில சிபிசிஐடி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். ஆனால், வழக்கில் தொடர்புடையை ஆளுசரை விசாரிக்க சிபிசிஐடி காவல் துறையினருக்கு அதிகாரம் இல்லை. தமிழக ஆளுனர் பிஜேபியின் குரலை அமல்படுத்திவரும் செயலை செய்துவருகிறார். பிஜேபி தலைவர்கள் பலர் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டுவருகின்னர். சேலம் உயர் காவல் அதிகாரி விஷ்ணு பிரியா வழக்கை சிபிஐ விசாரித்துவந்த நிலையில் தற்போது வழக்கை முடித்து கொள்ளலாம் என தெரிவித்து இருபது வேதனைக்கு உரியது. வழக்கில் உள்ள குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்காமல் வழக்கை முடித்துகொள்ளலாம் என தெரிவிக்கும் சிபிஐயின் செயல் வேடிக்கையாக உள்ளது. மேலும் இனி சிபிஐ அமைப்பை விட உயர்ந்த அமைப்பு ஏற்படுத்த வேண்டிய நிலை இந்தியாவில் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுத்திட அரசு நடவடிக்கை தேவை

.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுத்திட அரசு புதிய ச்ட்டங்களை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அந்த சட்டங்களை முதலில் சட்டத்தை அமல்படுத்த வேண்டிய காவல் துறையினருக்கு பயிற்சி அளிக்க வேண்டும். தொடர்ச்சியாக பாலியல் குற்றங்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்து பொதுமக்கள் அறியும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என தெரிவித்தார்.

மாதர் சங்க போராட்டம்.

தொடர்ச்சியாக தமிழகத்தில் நடைபெறும் பாலியல் குற்றங்கள் குறித்து முதல்கட்டமாக பதினைந்து மாவட்டங்களை தேர்வு செய்து பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சிறப்பு மாநாடுகள் நடத்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலகுழு முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்து சமீபத்தில் வெளியான தமிழ் திரைப்படத்தில் பெண்களை இழிவுப்படுத்தும் வசனங்கள் இருப்ப்த்தை கண்டித்தும், அதனை இயக்கிய தயாரிப்பாளர் மற்றும் தனிக்கை செய்த தனிக்கை குழுவினரை மாதர் சங்கம் கண்டிப்பதாகவும செய்தியாளர் சந்திப்பில் சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.வாலன்டீனா தெரிவித்தார். உடன் மாவட்ட செயலாளர் ஐ.ஞானசௌந்தரி, மாவட்ட தலைவர் டி.பரமேஷ்வரி, பொருளாளர் என்.ஜெயலட்சுமி, துணை தலைவர் கே.ராஜாத்தி உள்ளிட்டு மாதர் சங்க நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்

. செய்தியாளர் Pop sankar- சேலம்.

மும்முனைப் போட்டியில் கர்நாடக தேர்தல் களம்! யாருக்கு சாதகம்?

மும்முனைப் போட்டியில் கர்நாடக தேர்தல் களம்! யாருக்கு சாதகம்?


தொங்குச் சட்டமன்றம் அமையும் என்று முக்கால் சொச்சம் கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், பிரச்சார மழை நேற்று (மே 10) முதல் கர்நாடகாவில் ஓய்ந்துள்ளது. பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் என்ற மூன்று பெரிய கட்சிகளின் மும்முனைப் போட்டியில் வெற்றி பெறப்போவது யார் என்பதை நாளைய தேர்தல்களம் தீர்மானிக்கப் போகிறது.

வரும் மே மாதத்தோடு கர்நாடகத்தில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையின் பதவிக்காலம் முடிவடைகிறது என்றபோதும், மார்ச் மாதம் வரை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. அதைப் பற்றி கவலைகொள்ளாமல் பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை ஜனவரி மாதமே தொடங்கிவிட்டன. சித்தராமையாவும் எடியூரப்பாவும் ஒருவரை எதிர்த்து ஒருவர் பேச ஆரம்பித்தபோதே, விரைவில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று மக்களுக்குத் தெரிந்துவிட்டது. வெகு தாமதமாக, மார்ச் 27ஆம் தேதியன்று வெளியானது தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு.

கிட்டத்தட்ட 45 நாள்களில் தேர்தல் என்ற சூழலில் சூடுபிடித்தது பிரச்சாரக்களம். தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும், கர்நாடகாவில் தொங்குச் சட்டமன்றம் அமையுமென்றே முடிவுகளை வெளியிட்டன. பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் கட்சியே அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று தெரிவித்தன.

மும்முனைப்போட்டி:

தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய நாள் முதல், கர்நாடகாவில் பெறும் வெற்றியே தேசிய அளவில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யுமென்று இரு தரப்பிலும் அழுத்திச் சொல்லப்பட்டது. தேர்தல் முடிவுகள் வெளியானபிறகு, இருவரில் ஒருவர் இதை மறுக்கக்கூடும். ஆனாலும், இதை உற்றுநோக்காமல் இருக்க முடியாது. தென்னிந்திய மாநிலங்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்ட கலாசாரங்களை உடையது என்றாலும், வளர்ச்சியின் அடிப்படையில் வடமாநிலங்களைக் காட்டிலும் முன்னேற்றம் கண்டவை. பண மதிப்பழிப்பு, ஜிஎஸ்டி மற்றும் 15ஆவது நிதி கமிஷனின் பரிந்துரை போன்றவற்றுக்குப் பின்னான தேர்தல் என்பதால், கர்நாடக மக்களின் மனநிலை மற்ற மாநிலங்களிலும் எதிரொலிக்கும் வாய்ப்புள்ளது.

அது மட்டுமல்லாமல், 2019 நாடாளுமன்றத் தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. இந்த வெற்றியை முன்வைத்து, நாடு முழுவதும் மக்களின் கவனத்தை ஈர்க்க இரு தேசியக் கட்சிகளும் கண்டிப்பாக முயற்சிக்கும். இந்த இடைவெளியில்தான், தனக்கான முக்கியத்துவத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது ஹெச்.டி.தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி. ஒருவேளை இரண்டாவது இடம் நோக்கி இக்கட்சி முன்னேறினால், அது பாஜக, காங்கிரஸ் இரண்டுக்குமே தலைவலியாக அமையும்.

அந்தக் கட்சிக்கு பாஜகவோடு மறைமுக உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது என்று ஆரம்பத்திலேயே தெரிவித்தது காங்கிரஸ் கட்சி. ‘பாஜகவின் பி டீம் மஜக’ என்று விமர்சித்தார் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி. இது தனது வாக்கு வங்கியைப் பாதிக்கும் என்று கண்டனம் தெரிவித்தார் தேவகவுடா. பெரியளவில் மஜகவை விமர்சிக்காத பாஜகவும், தங்களது தொகுதிகள் பறிபோவதை பிற்பாடு விரும்பவில்லை. இதனாலேயே, கடைசி இரண்டு வார காலத்தில் மஜகவுக்கு வாக்குகளை வீணாக்காதீர்கள் என்று கூறிவந்தார் பிரதமர் மோடி. மும்முனைப் போட்டியினால் ஏதோ ஒரு கட்சிக்கு பங்கம் வருமென்பது ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள நிலைமை. ஒட்டுமொத்த முடிவுகள் வெளியாகும்போது, யாருக்கு இதனால் பலன் கிடைக்கும் என்பது தெரியவரும். ஆனால், ஒவ்வொரு தொகுதிகளிலும் வெற்றியைச் சுவைக்க சில காரணிகள் தூண்டுதலாக உள்ளன.

சாதியும் வாக்கும்:

கர்நாடகாவில் வொக்கலிகா, லிங்காயத், குரும்பர், தலித், வணிகர், பிராமணர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் உள்ளனர். கர்நாடகாவின் தென்பகுதிகளில் அதிகளவில் உள்ள வொக்கலிகா சமூகத்தினரின் வாக்குகள் மதச்சார்பற்ற ஜனதாதளத்தைச் சார்ந்து அமையும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, மைசூர் வட்டாரத்தில் இக்கட்சியின் செல்வாக்கு மிக அதிகம். அதனாலேயே, சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையாவின் வெற்றி கேள்விக்குறியாக உள்ளது.

கடந்த மார்ச் மாதம் லிங்காயத் சமூகத்தினரைச் சிறுபான்மையினமாக அறிவித்தது சித்தராமையாவின் அமைச்சரவை. இந்த முடிவு காங்கிரஸ் கட்சிக்குப் பலன் தருமா என்பதைத் தேர்தல் முடிவுகளே நிர்ணயிக்கும். வடக்கு மற்றும் மத்திய கர்நாடகாவில் அதிகளவில் லிங்காயத்துகள் உள்ளதே இதற்குக் காரணம். இந்துத்துவத்தை வலியுறுத்தும் குறிப்பிட்ட சமூக மக்கள், இந்த முடிவுக்கு எதிராக உள்ளனர். இதனாலேயே, லிங்காயத் மடங்களைக் குறிவைத்து இந்த முறை பிரச்சாரத்தில் ஈடுபட்டது பாஜக. அதன் வாக்கு வங்கியைத் தக்கவைக்கும் முயற்சிகளைச் செய்து வந்தது. இதன் பலன் என்னவென்பதும், இந்தத் தேர்தல் முடிவுகளில் தெரியவரும்.

சித்தராமையா சார்ந்துள்ள குரும்பர் சமூகம் மற்றும் தலித் சமூகத்தினரின் வாக்குகளைத் தன் கையில் வைத்துள்ளது காங்கிரஸ் கட்சி. அதே நேரத்தில் வணிகர், பிராமணர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் வாக்குகளை தன்வசம் வைத்துள்ளது பாஜக. இந்தச் சாதி வாரி ஆதரவை மனதில்வைத்தே, மூன்று பெரிய கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளன. மதச்சார்பற்ற ஜனதாதளம் மற்றும் பகுஜன் சமாஜ் கூட்டணியானது பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் வாக்குகளைப் பெருமளவில் சிதறடிக்கும் என்று கருதப்படுகிறது. ஆனாலும், ஒட்டுமொத்தமாக வகைப்படுத்துவதன் மூலமாகத் தனிநபர்களின் வாக்குகள் எந்தப் பக்கம் விழுமென்பதை முடிவு செய்ய இயலாது என்பதையும் கவனித்தாக வேண்டும்.

மதம் சார்ந்த பாகுபாடு:

ஆர்எஸ்எஸ் இயக்கமானது பாஜகவுக்கு ஆதரவாகப் பலத்த பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடலோர கர்நாடக தொகுதிகளில் இந்து – முஸ்லிம் இடையிலான முரண்பாட்டை முன்வைத்தே காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் பிரச்சாரம் செய்தன. முஸ்லிம்களைக் காக்க காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று கூறியதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் குலாம் நபி ஆசாத் மீது பாஜகவினர் புகார் கூறினர். இந்துக்களுக்கு எதிராக காங்கிரஸ் செயல்படுவதாகக் குற்றம்சாட்டினர்.

இதனாலேயே, பல இடங்களில் அமித் ஷா இந்துவல்ல என்று கூறினார் சித்தராமையா. தானும் தனது கட்சியினரும் மதச்சார்பற்ற இந்துக்கள் என்று தெரிவித்தார். இதற்குத் தகுந்தாற்போலவே, சிருங்கேரி மடம் மற்றும் பல்வேறு கோயில்களுக்குச் சென்றுவந்தார் ராகுல். கடைசி கட்ட பிரச்சாரத்தில் மட்டுமே, காங்கிரஸ் கட்சியினர் இந்தச் செயல்பாடுகளைக் கணிசமான அளவில் தவிர்த்தனர். ஆனால், அமித் ஷாவும் அவரது கட்சியினரும் கடைசி கட்ட பிரச்சாரத்தில் கோயில்களுக்குச் செல்வதை அதிகப்படுத்தினர்.

பணம் படுத்தும் பாடு:

கர்நாடகச் சட்டமன்றத் தேர்தலில் மக்களுக்குப் பணம் விநியோகம் செய்வதற்காக, இதர மாநிலங்களிலுள்ள ஏடிஎம்களில் குறைந்த அளவுக்குப் பணம் இருப்பில் வைக்கப்பட்டதாகக் கடந்த மாதம் புகார் எழுந்தது. மே 5ஆம் தேதிவரை, சுமார் 120 கோடி ரூபாய் கைப்பற்றியுள்ளது அம்மாநில தேர்தல் ஆணையம். அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் இந்தத் தொகையின் அளவு அதிகரிப்பது, வாக்குக்குப் பணம் என்ற கலாசாரம் தேசம் முழுவதும் தேர்தல் நடைமுறை சீரழிந்துவருவதை வெளிக்காட்டுகிறது. கடந்த வாரம் முதலமைச்சர் சித்தராமையா தங்கியிருந்த விடுதி அறையில் பணம் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியானது. இது பரபரப்பை ஏற்படுத்தியதே ஒழிய, இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. அதேபோல, ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் சுமார் 10 ஆயிரம் வாக்காளர் அட்டைகள் கைப்பற்றப்பட்டன. இந்த விவகாரத்திலும் எந்தக் கட்சிக்குத் தொடர்பு என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.வட்டாரப் பிரச்சினை:

ஒவ்வொரு பகுதியிலும் உள்ள பிரச்சினைகளைக் குறிவைத்து, அதற்கான தீர்வை முன்வைத்து பிரச்சாரம் செய்தது காங்கிரஸ் கட்சி. குறிப்பாக, முதலமைச்சர் சித்தராமையாவை மட்டுமே முன்னிலைப்படுத்தியது. காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் பிரச்சாரம் செய்தாலும், செய்திகளில் சித்தராமையாவுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மாறாக, அமித் ஷா மற்றும் மோடியைச் சார்ந்து இயங்கியது பாஜக.

எடியூரப்பாவுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படாதது, அவரது மகன் விஜயேந்திரா வருணா தொகுதியில் போட்டியிட அனுமதி மறுக்கப்பட்டது, ரெட்டி சகோதரர்களின் செல்வாக்கு மீண்டும் கட்சியில் அதிகமானது போன்றவை பாஜக தொண்டர்களிடையே என்ன தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதும் இந்தத் தேர்தல் முடிவுகளில் தெரியவரும். வேட்பாளர் தேர்வின்போது, சம்பந்தப்பட்டவரின் வட்டாரச் செல்வாக்கை எந்தக் கட்சி கணக்கில் கொண்டது என்பதும் இதில் அடங்கும்.

சமூக ஊடகங்களின் தாக்கம்:

வேகமாகப் பரவும் வைரஸைப் போல, சமீபத்திய தேர்தல்களில் சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, போலியான செய்திகள் அதிவேகமாகப் பரவின. சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட வேண்டாம் எனக் கர்நாடக உளவுத் துறை சித்தராமையாவுக்குக் கடிதம் எழுதியதாகத் தகவல் வெளியானது. அதன்பின், அது போலியானது என்று தெரியவந்தது. ஒவ்வொரு நாளும் காலை முதல் மாலை வரை பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் சார்பில் தகவல்கள் தொடர்ச்சியாகப் பதிவிடப்பட்டன. சித்தராமையா, நரேந்திர மோடி, ராகுல் காந்தி போன்றோர் எதிர்தரப்பின் மேடைக் கேள்விகளுக்குத் தங்களது ட்விட்டரிலேயே அதிகளவில் பதிலளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. வாக்களிக்கும் நாளன்று கட்சியினர் மற்றும் மக்களிடையே சமூக வலைதளத் தகவல்கள் மூலமாகத் தகவல்கள் பரப்பப்படுவதை, தேர்தல் ஆணையம் எந்த வகையில் கண்காணிக்கப் போகிறது என்பதும் கேள்விக்குறியே!

குற்றப் பின்னணி:

இதுவரை இல்லாத அளவுக்கு, கர்நாடகச் சட்டமன்றத் தேர்தலில் குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மே 5ஆம் தேதியன்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில், முதல் மூன்று இடங்களை முறையே பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் பெற்றுள்ளன.

பாஜக வேட்பாளர்களில் 26 சதவிகிதம் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களில் 15 சதவிகிதம் பேர் கடுமையான குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்று இதில் தெரியவந்துள்ளது. குற்றப் பின்னணி கொண்டவர்கள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவது குறித்த சர்ச்சைக்கு முடிவு எட்டாத நிலையில், இந்த முடிவு அதிர்ச்சியைத் தருவதாக உள்ளது. வேட்பாளர் தேர்வின்போது குற்றப் பின்னணியைக் கணக்கில்கொள்ளாமல் விட்டதன் மூலமாக, சம்பந்தப்பட்ட கட்சிகளின் அரசியல் நேர்மை மழுங்கடிக்கப்பட்டுள்ளது. இது, எதிர்காலத்தில் மேலும் பல பிரச்சினைகளுக்கு விதை போடலாம்.முடிவும் ஆரம்பமும்:

கடந்த 2013ஆம் ஆண்டு சித்தராமையா கர்நாடகாவின் முதலமைச்சர் ஆன பின்பு, 2014ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்திய அரசைத் தன் வசமாக்கியது. கர்நாடகாவில் வெற்றி பெறும் கட்சி, மத்திய அரசில் பங்கு வகிக்காது என்ற சென்டிமெண்ட் நீண்டகாலமாகச் சொல்லப்பட்டு வருகிறது. இதைப் பொய்யாக்குவோம் என்று கூறியுள்ளார் பாஜக தலைவர் அமித் ஷா. கர்நாடகாவில் ஆட்சியைக் கைப்பற்றுவது முதல் முயற்சி என்றும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராவேன் என்றும் தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி.

தேர்தல் அறிக்கைகள், பிரச்சார வாக்குறுதிகள், வாக்குச்சாவடியை நோக்கி வாக்காளர்களை ஈர்க்கும் தந்திரங்கள் என்று பல்வேறு அம்சங்கள் இந்தத் தேர்தலில் பயன்படுத்தப்படலாம். இதன் முடிவில், ஏதோ ஒரு கட்சி பெறும் வெற்றியானது, அனைத்துக் கட்சிகளின் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலை நோக்கிய பயணத்தின் ஆரம்பமாக அமையும் என்பது உறுதி.

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் அடிநாதமாக மின்னணு வாக்கு எந்திரங்கள் சர்ச்சை அமையுமா என்பதற்கு, இப்போது வரை யாரிடமும் எந்தப் பதிலும் இல்லை. பிரதமர் மோடி கூறியது போல, பாஜக வெற்றி பெற்றால் அந்தச் சர்ச்சை உயிர் பெறலாம். இல்லாவிட்டால், அந்தச் சர்ச்சை பத்தோடு பதினொன்றாகவே இருக்கும்!http://minnambalam.com/k/2018/05/11/43

Thursday, May 10, 2018

இன்றைய ராசி பலன்கள்- சோனகிரிநாதர்

இன்றைய ராசி பலன்கள்- சோனகிரிநாதர்
அஷ்டமா சித்திகளை அடக்கியாளும் அய்யனாரடிமை சோனகிரிநாதர் கணித்த இன்றைய ராசி பலன்கள் மற்றும் இன்றைய பஞ்சாங்கம்…
விளம்பி வருஷம் I உத்தராயணம் I வஸந்தருது

சித்திரை 28 I இங்கிலீஷ்: 11 May 2018 I வெள்ளிக்கிழமை


ஏகாதசி இரவு 9.24 மணி வரை. பின் துவாதசி

பூரட்டாதி பகல் 11.12 மணி வரை. பின் உத்திரட்டாதி

வைத்ருதி நாமயோகம் I பவ கரணம் I சித்த யோகம்

ராகு காலம்: காலை 10.30 - 12.00 I எமகண்டம்: மதியம் 3.00 - 4.30

குளிகை: காலை 7.30 - 9.00 I சூலம்: மேற்கு I பரிகாரம்: வெல்லம்

இன்று கீழ்நோக்கு நாள் I திதி: ஏகாதசி I சந்திராஷ்டமம்: மகம், பூரம் (சிம்ம ராசி)
1


/ 12மேஷம்


சாமர்த்தியமாக செயலாற்ற தெரிந்த மேஷ ராசியினரே, இன்று சந்தோஷமான நாள். சொந்த பிரச்னையை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். தொழிலில் நிதி நிறுவனங்களிடமிருந்து எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கும். வெளிநாடுகளிலிருந்து நல்ல செய்தி வரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
2


/ 12ரிஷபம்


முயற்சி உடையார் இகழ்ச்சியடையார் என்பதற்கேற்ப விடாமுயற்சியுடன் செயல்படும் ரிஷப ராசியினரே, இன்று மாணவர்களுக்கு ஞாபக சக்தியும், கிரகிக்கும் ஆற்றலும் அதிகரிக்கும். பெண்கள் விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வேலை செய்பவர்கள் சில சலுகைகளை எதிர்பார்க்கலாம். தொழிலில் நிதானம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
3


/ 12மிதுனம்


சமயத்திற்கேற்ப கருத்துக்களை மாற்றிக் கொண்டு செயல்பட்டு வெற்றி பெறும் மிதுன ராசியினரே, இன்று பொறுமையாக இருக்க வேண்டிய நாள். மற்றவர்களிடம் பேசும் போது கவனமாக இருக்கவும். ஞாபக மறதியால் தொல்லைகள் ஏற்படலாம். விருந்து கேளிக்கைகளில் மனம் லயிக்கும். பெண்கள் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1, 6
4


/ 12கடகம்


எவ்வளவு சோதனைகள், வேதனைகள் வந்தாலும் அதை வெளிக்காட்டாமல் தைரியமாக இருக்கும் எதையும் தாங்கும் இதயம் கொண்ட கடக ராசியினரே, இன்று அலுவலகத்தில் நண்பர்கள் கிடைப்பார்கள். மாணவர்களுக்கு மேல் படிப்பிற்கான உதவிகள் கிடைக்கும். வேலை காரணமாக வெளியூர் செல்ல வேண்டி வரும். கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்பு தேடி வரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5, 6
5


/ 12சிம்மம்


எந்த சூழ்நிலையிலும் சுயகவுரவத்தை விட்டுக் கொடுக்காமல் செயல்படும் சிம்மராசியினரே, இன்று தொழிலில் திருப்திகரமான பணவரவு இருக்கும். வியாபாரிகள் கடன் வாங்க வேண்டாம். வெளியில் கொடுத்த கடன் கிடைக்கும். திருமண முயற்சிகள் கை கொடுக்கும். கணவன் - மனைவி உறவு வலுப்பெறும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4, 6
6


/ 12கன்னி


அனுபவ அறிவைக் கொண்டு காரியங்களை திறம்பட செய்யும் திறமை பெற்ற கன்னி ராசியினரே, இன்று மனநிம்மதி கிடைக்கும். சகோதரர்களின் ஆலோசனை படி கேட்டு நடந்தால் நன்மைகள் அதிக அளவில் கிடைக்கும். சிறு வியாபாரிகள் வருமானம் அதிகமாக எதிர்பார்க்கலாம். சுற்றுலா சென்று வருவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 9
7


/ 12துலாம்


அடுத்தவர் திருப்திபடும் வகையில் திறமையாக பேசி சமாளிக்கும் ஆற்றல் பெற்ற துலாராசியினரே, இன்று தொழிலில் உற்பத்தியும், வருமானமும் அதிகரிக்கும். வெளிநாடு செல்ல வேண்டி வரலாம். வேலை செய்பவர்கள் ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம். வழக்கு, விவகாரங்களில் முன்னேற்றம் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1, 5
8


/ 12விருச்சிகம்


கட்டுபாடு இல்லாமல் சுதந்திரமாக செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட விருச்சிகராசியினரே, இன்று வியாபாரிகளுக்கு விற்பனை அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் பிரச்சினை இருந்தால் கவலை வேண்டாம். சரியாகி விடும். தாய்வழி உறவினர்கள் உற்ற துணையாக இருப்பார்கள். மாணவர்கள் நற்பெயர் எடுப்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5, 6
9


/ 12தனுசு


அனைவரிடமும் இன்முகத்துடன் பழகும் குணம் கொண்ட தனுசு ராசியினரே, இன்று மாணவர்கள் உடல் நலத்தில் கவனத்தை செலுத்துவது நல்லது. அரசியல் வாதிகளுக்கு கட்சியில் ஏற்பட்ட பிரச்சினைகள் குறையும். எதிர்பார்த்த பணம் கைக்கு கிடைப்பது மன நிறைவைத் தரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4, 6


10 / 12மகரம்


கடமை உணர்வுடன் திட்டமிட்டு செயலாற்றுவதில் வல்லவரான மகர ராசியினரே, இன்று உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கப் பெறும். சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பாராத வகையில் பணவரவு உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 9


11 / 12கும்பம்


அடுத்தவர் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் கருத்துக்களை எடுத்து கூறும் திறமை பெற்ற கும்பராசியினரே, இன்று முக்கிய முடிவு ஒன்றை எடுப்பீர்கள். வேலை பார்ப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் அதை செய்து முடிப்பீர்கள் . உங்கள் கடின உழைப்பிற்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9, 3


12 / 12மீனம்


போராட்டத்தைக் கண்டு அஞ்சாமல் எதிர்த்து நின்று வெற்றி பெறும் மீன ராசியினரே, இன்று உற்சாகமான நாள். சிக்கலான குடும்ப பிரச்சினைகளை தீர்த்து வைப்பீர்கள். வியாபாரிகளுக்கு புதிய முயற்சிகலளில் தடைகள் ஏற்பட்டாலும் அது சரியாகி விடும். அரசியல் வாதிகளுக்கு தொண்டர்களிடையே மதிப்பும், மரியாதையும் உயரும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 4, 6