Monday, May 7, 2018

தர்மயுத்தம் 2.0 நடத்தப் (ஜெய்க்கப்) போவது யாரு? சிறப்புத் தொடர். பகுதி 1

ad300
Advertisement


சினிமாவுல ஒரு தடவை கிளைமேக்ஸ் வந்தால்தான் சுவாரஸ்யமா இருக்கும். ஆனால் சீனுக்கு சீன் கிளைமேக்ஸ் வைத்தால் அடிக்கடி பிரஷர் எகிறி பிராணனுக்கே பிரச்னை வந்துடாது? இப்படியொரு இக்கட்டான இம்சையில்தான் சிக்கித் தவிக்கிறார்கள் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள். ‘ஓ.பி.எஸ். அணி’ என்று பெருமையுடன் சொல்லிக் கொண்டு அவரது பின்னால் நிற்பவர்கள், பன்னீரின் அரசியல் செல்வாக்கு சொந்த மாவட்டத்திலேயே ஆட்டம் காண துவங்கியிருப்பதால் மண்டை காய துவங்குகிறார்களாம்.

ஜெயலலிதாவுக்கு சிக்கல் வரும்போதெல்லாம் முதல்வராக்கப்பட்டார் பன்னீர்செல்வம்.
இதனால் ஜெ.வுக்கு அடுத்து, சசிக்கும் நடுவில் பன்னீர் மீது பெரும் அபிமானத்தை வைத்திருந்தனர் அ.தி.மு.க.வினர். அதனால்தான் அவர் தர்மயுத்தம் துவக்கியபோது அவ்வளவு பெரிய மக்கள் செல்வாக்கும் கிடைத்தது. ஆனால் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்து மக்கள் செல்வாக்கை இழந்த அவர் தொண்டர்களின் அபிமானத்தையும் பெரியளவில் இழந்துவிட்டார் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
இந்நிலையில் பன்னீர்செல்வத்தின் அரசியல் கிராப் ஆனது ஸ்டெடியாக மூவ் ஆகாததில் அவரை நம்பியிருக்கும் ஆதரவாளர்களுக்கு கடும் மன வேதனை வந்திருக்கிறது. முதல்வர் பதவி, ராஜினாமா, தர்மயுத்தம், நம்பிக்கையில்லா தீர்மானம், அணிகள் இணைவு, துணை முதல்வர் பதவி, நெருங்கிய சகாக்களை நட்டாற்றில் விட்ட நிலை, தி.மு.க. தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு, தப்பிப் பிழைத்து விடுதலை...என்று மாசத்துக்கு நான்கைந்து கிளைமேக்ஸ்களை அவரது அரசியல் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இப்படி ஏறியிறங்கி விளையாடுவதால் அவரோடு நிற்கவே மிரள்கிறார்கள் ஆதரவு நிர்வாகிகள்.
இது மட்டுமல்ல என்னதான் எடப்பாடியார் அணியோடு இணைந்து, துணை முதல்வர் பதவி வாங்கிவிட்டாலும் கூட பன்னீருக்கு கட்சியில் பழைய செல்வாக்கு இல்லை என்பது கண்கூடு. அதிலும் மைத்ரேயனே ‘அணிகள் இணைந்தன ஆனால் மனம்?’ என்று கொஸ்டீன் கொக்கி போடுமளவுக்குதான் சூழ்நிலை உள்ளது. தன்னோடு தர்மயுத்தத்தில் உடன் நின்றவர்களில் மாஃபா பாண்டியராஜனுக்கு மட்டும் தான் அமைச்சர் வாய்ப்பை பெற்று தர முடிந்தது பன்னீரால். ஆனால் சிலரோ இது பாண்டியராஜனுக்கு பி.ஜே.பி. கொடுத்த கிஃப்டே தவிர பன்னீரின் செல்வாக்கெல்லாம் இல்லவே இல்லை! என்கிறார்கள். இது போக தன்னுடனிருந்த யாருக்கும் பெரிய அளவில் மரியாதையோ, அங்கீகாரமோ, பதவியோ பெற்றுத் தர முடியவில்லை பன்னீரால்.

தர்மயுத்தத்தில் தன்னோடு தோள் கொடுத்து, பல விஷயங்களில் புள்ளிவிபர நுணுக்கத்துடன் செயல்பட்ட கே.சி.பழனிசாமி, பி.ஜே.பி.யை லேசாக உரசியபோது அவரை கட்சியை விட்டு தூக்கி எறிய சொல்லி உத்தரவு வந்தது. அதை கூட தடுத்து நிறுத்தி காப்பாற்றிட முடியவில்லை பன்னீரால்.
என்னதான் துணை முதல்வராக இருந்தாலும் கூட தென் மாவட்டங்களில் கூட முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் செல்வாக்கில் பத்து சதவீதம் கூட பன்னீருக்கு இல்லை என்பதே உண்மை. அப்படியானால் கொங்கு மண்டலத்தில் அவரது நிலையை எண்ணிப் பார்த்தால் தலை சுற்றல்தான் மிச்சம்.
ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசை எதிர்த்து வாக்களித்து, பின் அரசின் அங்கமாக பன்னீர் ஆன விவகாரத்தில் தி.மு.க. தொடர்ந்த வழக்கில் பன்னீருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால், அதன் பின் கட்சியில் அவர் நிலை பெரிய அளவில் வந்துவிடும்! என்று அவரது ஆதரவு நிர்வாகிகள் எண்ணினர். எதிரணியும் இதை நினைத்தே பயந்தது. ஆனால் அதுவும் ஈடேறாமல் போயிருப்பதுதான் சோகமே.

பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்திட கோரி தி.மு.க. தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வந்த அன்று, தன் சொந்த மாவட்டமான தேனியில் தான் இருந்தார் பன்னீர். அவரது ஆதரவு தொண்டர்கள் யாரும் அவரது வீட்டு முன் வரவில்லை. இது அவருக்கு மன வருத்தத்தை தந்தது. இருந்தாலும் கூட மெளனம் காத்தார். தீர்ப்பு அவருக்கு சாதகமாக வந்தது! புன்னகையுடன் எழுந்த பன்னீர் வாசலை பார்த்துக் கொண்டேஇருந்தார். அப்போதும் கட்சிக்காரர்கள் வரவில்லை.

இதனால் வெற்றி தீர்ப்பு மகிழ்ச்சியையும் தாண்டி பன்னீரின் முகம் வாடியது. இந்த தீர்ப்பை கொண்டாடும் முகமாக தன் வீட்டு வாசலில் பட்டாசு வெடித்திட சொல்லி பன்னீர்செல்வமே யாருக்கோ போன் போட்டு சொன்ன பிறகுதான் அது நடந்திருக்கிறது! என்கிறார்கள் தேனி அ.தி.மு.க.வினர். இந்த சூழ்நிலை பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு சொந்த மாவட்டத்திலேயே சரிந்து கிடப்பதைத்தான் காட்டுகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
இந்த மாநிலத்தின் இரண்டாவது முக்கிய பதவியான துணை முதலமைச்சராக பன்னீர் இருக்கும்போதே அவர் நிலை இப்படியிருக்கையில், நாளைக்கு ஆட்சி முடிந்தோ அல்லது கலைந்தோ அவர் வேட்பாளராக நிற்கையில் அவருக்கு என்ன செல்வாக்கு இருந்துவிட போகிறது? என்று இப்போதே தாவாங்கட்டையை தடவி யோசிக்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.
இனியும் பன்னீர்செல்வத்தின் நிழலாக தொடர்வது நல்லதா? என்று சிந்திக்க துவங்கிவிட்டனராம் அவரது ஆதரவு நிர்வாகிகள்.இந்நிலையில் இன்று நடந்த "மறைந்த முதல்வரின் நினைவு மண்டப அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோர்களின் புகைப்படங்கள் இருவரின் மனநிலையைப் பிரதிபலிப்பதாக உள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு கருத்து உலா வருகிறது! அந்த படங்களில் முதல்வர் முகம் இறுக்கமாகவும், துணை முதல்வர் முகம் புன்முறுவலுடன் இருப்பதாகவும் பார்வைக்கு தெரிவதை உற்று நோக்கும் அரசியல் நோக்கர்கள் " விரைவில் தர்மயுத்தம் 2.0 "ஆரம்பமாகுமென்றும், இதற்கான திட்டமிடலே K C பழனிசாமியை கட்சியை விட்டு நீக்கியதாகவும், நீக்கப்பட்ட K C பழனிசாமியை வைத்தே பன்னீர் தனது காய் நகர்த்தல்களை நடத்தி வருவதாகவும் கருத்து தெரிவிக்கின்றனர்.

தர்மயுத்தம்2.0 சிறப்புத் தொடரின் முந்தைய செய்தி https://wp.me/s9i5cN-coolwar
Share This
Previous Post
Next Post

Pellentesque vitae lectus in mauris sollicitudin ornare sit amet eget ligula. Donec pharetra, arcu eu consectetur semper, est nulla sodales risus, vel efficitur orci justo quis tellus. Phasellus sit amet est pharetra