Tuesday, May 1, 2018

"மே" தினத்தின் பின்னனி​8 மணிநேர உழைப்பு, 8 மணிநேர ஓய்வு 8 மணிநேர உறக்கம் என்பது இன்று உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்கள் அனுபவித்துக்கொண்டிருக்கும் உரிமை. இந்த உரிமை சாதாரணமாகப் பெறப்படவில்லை. எண்ணற்ற தொழிலாளர்கள் ரத்தம் சிந்தி உயிர் தியாகம் செய்து பெற்ற உரிமை இது.
1880இல் தொழிலாளர்களின் பணிநேரம் என்பது அதிகாலை முதல் அந்தி சாயும்வரை. மிகக் குறைவான கூலி, 16 மணிநேரம் 18 மணிநேரம் பணி என்பதே அன்றைய நடைமுறை. தொழிற்புரட்சி தொடங்கியதைத் தொடர்ந்து தொழிலாளர்கள் பல மணிநேரம் வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டனர். அவர்களது உழைப்பு கொடூரமான முறையில் சுரண்டப்பட்டது. மூலதனக் குவிப்பும் லாபமும் எல்லையில்லாத மடங்குகளில் பெருகின.
வேலை நேரம் என்பது 10 மணி நேரமாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடங்கிய தொழிலாளர்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் தொழிற்சங்கங்களின் வழிகாட்டுதலினால் 8 மணி நேரமாக மாற்றப்பட்டது.
1884இல் அமெரிக்காவில் 8 மணி நேர இயக்கத்தின்போது வெடித்த போராட்டங்கள்தான் மே தினம் உருவாவதற்கு நேரடியான காரணமாய் அமைந்தன. ஆனாலும் இதற்கு ஒரு தலைமுறை முன்பே ‘தேசியத் தொழிற்சங்கம்’ குறைந்த வேலை நேரத்துக்கான கோரிக்கையை முன்வைத்துப் பரந்த அளவில் இயக்கத்தை நடத்தியது. தேசியத் தொழிற்சங்கம் அமெரிக்கத் தொழிலாளி வர்க்கத்தின் போர்க்குணமிக்க அமைப்பாக விளங்கியது. பின்னர் அமெரிக்காவில் பல லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்ற வேலைநிறுத்தங்கள் நடைபெற்றன.

ஹே மார்க்கெட் படுகொலைஇந்த வேலைநிறுத்தத்தின் மையமாக விளங்கியது சிக்காகோ நகரம். மே 3, 1886 அன்று மெக்கார்மிக் ஹார்வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின் வாயிலில் 3000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு கண்டனக் கூட்டத்தை நடத்தினர்.
இங்கு நடைபெற்ற கலவரத்தில் 4 தொழிலாளர்கள் காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியாயினர். இச்சம்பவத்தைக் கண்டிக்கும் வகையில் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டனக் கூட்டம் ஒன்றை தொழிலாளர்கள் நடத்தினர்
2500 தொழிலாளர்கள் கலந்துகொண்ட கண்டனக் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. இந்நேரத்தில் காவல் துறையினர் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். அப்போது கூட்டத்தில் திடீரென்று வெடிகுண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு காவலர் பலியானார். பின்னர் போலீசார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளரைத் தாக்கினர். தொழிலாளர் தலைவர்களைக் கைதுசெய்து வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு ஜூன் 21, 1886 அன்று துவங்கியது. 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. இந்நிகழ்வு ஹே மார்க்கெட் படுகொலை என அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வினை ஒட்டி‍ அந்த ஹே மார்க்கெட் சதுக்கத்தில் நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது.

1887ஆம் ஆண்டு நவம்பர் 11 அன்று தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். நவம்பர் 13, 1887 அன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது என்று சொல்ல வேண்டும். நாடு முழுவதும் 5 லட்சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டதோடு, அமெரிக்கா முழுவதும் அன்று கறுப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டது.

அமெரிக்கத் தொழிலாளர்களின் 8 மணிநேர வேலைக்கான போராட்டமும் சிக்காகோ போராட்டக்காரர்களின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக, உழைப்பவர் தினமாக நம் முன் நிற்கிறது.அனைத்து நாடுகளிலும் மே தினம்1889, ஜூலை 14 அன்று பாரீசில் சோஷலிசத் தொழிலாளர்களின் ‘சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’ கூடியது. 18 நாடுகளிலிருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெடரிக் ஏங்கெல்ஸ் உட்பட பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணிநேரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்று முடிவெடுக்கப்பட்டது. சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாகக் கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தது.
இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேசத் தொழிலாளர் தினமாக, மே தினமாகக் கடைப்பிடிப்பதற்கு வழிவகுத்தது.
இதற்குப் பின்னர் ரஷ்யப் புரட்சி அளித்த உத்வேகத்தில் ஆசிய நாடுகளில் நடைபெற்ற காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டங்களினால் இந்தியா உள்ளிட்ட நாடுகள் சுதந்திரமடைந்தன. அப்போதிருந்த இந்தியத் தொழிலாளர்கள் தங்களுக்கான உரிமைகளைச் சட்டங்களாகப் பெற்றிருந்தனா்.இந்தியாவில் தொழிலாளர் பாதுகாப்பு1947க்குப் பின்னர், இந்தியாவில் தொழிலாளர்களைப் பாதுகாக்கச் சட்டப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு, குடியுரிமை, பணிப் பாதுகாப்பு, ஈஎஸ்ஐ, பிஎஃப், தொழில் தகராறுச் சட்டம், தொழிலாளர் நல அமைச்சகம் போன்ற அமைப்புகளும் தனித் துறைகளும் இவற்றை உள்ளடக்கிய 44 சட்டங்களும் உருவாக்கப்பட்டன.
1971இல் ஒப்பந்தத் தொழிலாளர் ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டு ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரத் தொழிலாளராக ஆக்கக்கூடிய சட்டமாக அது அமல்படுத்தப்பட்டது. பின்னர் 2002இல் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக்கத் தேவையில்லை என்று அது மாற்றப்பட்டது.

இன்றைய சவால்கள்உலகமயமாக்கல் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பின்னர் நாடுகளின் அரசுகள் கார்ப்பரேட்டுகளின் விருப்பங்களையும் கட்டளைகளையும் பணிந்து நிறைவேற்றுபவையாக மாறிவிட்டன. அனைத்துத் துறைகளிலும் ஒப்பந்த முறை வந்துவிட்டது. வேண்டுமானால் நியமித்துக்கொள்வது, வேண்டாதபோது அனுப்பிவிடுவது என்ற போக்கு (Hire and fire) தொடங்கிவிட்டது.
இன்று நாடு முழுவதும் பெரும்பாலான துறைகளில் பணி நிரந்தரம் என்பதே கிடையாது. இதற்கேற்றவாறே மோடி அரசு 44 சட்டங்களை நீக்கிவிட்டு வெறும் 4 சட்டங்களாக வெட்டிச் சுருக்கிவிட்டது. அதிலும் அதிர்ச்சிகரமான விஷயமாக, தொழிலாளர்களின் உரிமைகள் என்பது பயன்கள் என்ற சொல்லாக மாற்றப்பட்டுவிட்டது. முத்தரப்புப் பேச்சுவார்த்தை அல்லது நிர்வாகத்துடன் கூட்டுப் பேச்சுவார்த்தை என்பது நீக்கப்பட்டுவிட்டதால் தொழிற்சங்கங்கள் என்ற அமைப்பும் தேவையற்றதாக மாறிவிட்டது.
இதற்குச் சான்றாக, பெரிய நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்களின் நிலைமையைப் பார்க்கலாம். மாருதியில் 15 விழுக்காடு நிரந்தரத் தொழிலாளர்கள், 80 விழுக்காடு ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளனா். நிரந்தரத் தொழிலாளருக்கு 30,000 ரூபாய் சம்பளம். ஒப்பந்தத் தொழிலாளருக்கோ 7000 அல்லது 8000 ரூபாய்தான்.
ஹுண்டாய் தொழிற்சாலையில் 18 விழுக்காடு நிரந்தரத் தொழிலாளர்கள். 82 விழுக்காடு ஒப்பந்தத் தொழிலாளர்கள். அங்கு மட்டுமின்றி ஹெச்ஏஎல், பெல், இன்போசிஸ், விப்ரோ உள்ளிட்ட பெரும்பாலான ஐடி நிறுவனங்களிலும் அனைத்து ஊடகங்களிலும் ஒப்பந்தத் தொழிலாளர்களும் நிரந்தரத் தொழிலாளர்களும் உள்ளனர். மாநில அரசின் ஆம்புலன்ஸ், செவிலியர், மின் துறை, கணினி ஆப்பரேட்டர்கள் உள்ளிட்ட பல துறைகளிலும் இதுதான் நிலைமை.
உத்தரவாதமில்லாத பணி என்பது மேல் மட்டத்தில் மட்டுமல்ல, துப்புரவுத் தொழிலாளர்கள் வரை நீள்கிறது. பணிகளிலுள்ள நிரந்தரமின்மை உத்தரவாதமின்மை போன்றவற்றை எதிர்த்து மிகப் பெரிய பேராட்டங்கள் நடத்த வேணடிய நிலை ஏற்பட்டுள்ளது.
உலகமயமாக்கல் பொருளாதாரக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பின்னர், தொழிலாளர் மத்தியில் மட்டுமின்றி சமூகம் முழுமையும் அரசியலில் ஈடுபடுவது, பொது லட்சியங்களைக் கொண்டிருப்பது ஆகியவை நாகரிகமற்றது என்ற கருத்தியல் பரப்பப்பட்டு முதலி்ல் வர்க்க அரசியல் நீக்கப்பட்டது. பின்னர் அரசியலே நீக்கப்பட்டுவிட்டது. தொழிலாளர்கள் நசுக்கப்படுவதற்கும் மேலும் சுரண்டப்படுவதற்கும் ஏதுவான சூழலை இது உருவாக்கியுள்ளது. இன்னொரு பக்கம், தொழிலாளர்களை அலட்சியமாகப் பார்க்கும் நடுத்தர வா்க்கத்தின் மனப்பாங்கு வளர்க்கப்பட்டுவிட்டது.
காலனிய காலத்திற்கு முந்தைய தொழிலாளர் நிலைமையே இன்று திரும்பியுள்ளது. ஆனால் முந்தைய காலங்களைப் போன்று தொழிலாளர்கள் இன்று தனித்து இல்லை. மீனவர்கள், ஒடுக்கப்பட்ட வா்க்கத்தினர், அமைப்பு சாராத தொழிலாளர்கள் எனப் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பரஸ்பரம் ஆதரவாகத் திரண்டுள்ளனா்.
உலகமயமாக்கலை ஒட்டி மேலெழுந்த போக்குகள் மக்களின் அரசியல் உனர்வுகளை மழுங்கடித்திருந்தாலும், தகவல் தொழில்நுட்ப சாதனங்களும் சமூக வலைதளங்களும் மக்களை மீண்டும் அரசியல்படுத்தும் பணியைச் செய்துவருகின்றன.
தொழிலாளர்களின் அரசியல் உணர்வை வளா்ப்பது, சாதிய உணர்வுகளை ஒழித்து தொழிலாளர்களிடையே ஒற்றுமையை வளர்ப்பது, சுரண்டல் பல்வேறு வடிவங்களில் வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகியவை இன்றைய அவசரத் தேவைகள். தொழிலாளர்களின் அறிவை ஆழப்படுத்தி, விழிப்புணர்வைக் கூர்மையாக்கினால்தான் அவர்களுடைய உரிமைகளைப் பாதுகாக்க முடியும். அநீதியான அமைப்புக்கு முடிவுகட்ட முடியும்.
பல துன்பங்களுக்கும் தியாகங்களுக்கும் பிறகு உழைப்பைக் கொண்டாடுவதற்காகக் கிடைத்த இந்த மே தினத்தன்று தொழிலாளர்களுக்கு எதிரான சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றலை வளர்த்துக்கொள்ளச் சூளுரைப்போம். 

சேது ராமலிங்கம் @Minnambala.com
Share:

Labels

Blog Archive

Unordered List

Definition List