Friday, May 11, 2018

மும்முனைப் போட்டியில் கர்நாடக தேர்தல் களம்! யாருக்கு சாதகம்?தொங்குச் சட்டமன்றம் அமையும் என்று முக்கால் சொச்சம் கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், பிரச்சார மழை நேற்று (மே 10) முதல் கர்நாடகாவில் ஓய்ந்துள்ளது. பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் என்ற மூன்று பெரிய கட்சிகளின் மும்முனைப் போட்டியில் வெற்றி பெறப்போவது யார் என்பதை நாளைய தேர்தல்களம் தீர்மானிக்கப் போகிறது.

வரும் மே மாதத்தோடு கர்நாடகத்தில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையின் பதவிக்காலம் முடிவடைகிறது என்றபோதும், மார்ச் மாதம் வரை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. அதைப் பற்றி கவலைகொள்ளாமல் பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை ஜனவரி மாதமே தொடங்கிவிட்டன. சித்தராமையாவும் எடியூரப்பாவும் ஒருவரை எதிர்த்து ஒருவர் பேச ஆரம்பித்தபோதே, விரைவில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று மக்களுக்குத் தெரிந்துவிட்டது. வெகு தாமதமாக, மார்ச் 27ஆம் தேதியன்று வெளியானது தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு.

கிட்டத்தட்ட 45 நாள்களில் தேர்தல் என்ற சூழலில் சூடுபிடித்தது பிரச்சாரக்களம். தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும், கர்நாடகாவில் தொங்குச் சட்டமன்றம் அமையுமென்றே முடிவுகளை வெளியிட்டன. பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் கட்சியே அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று தெரிவித்தன.

மும்முனைப்போட்டி:

தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய நாள் முதல், கர்நாடகாவில் பெறும் வெற்றியே தேசிய அளவில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யுமென்று இரு தரப்பிலும் அழுத்திச் சொல்லப்பட்டது. தேர்தல் முடிவுகள் வெளியானபிறகு, இருவரில் ஒருவர் இதை மறுக்கக்கூடும். ஆனாலும், இதை உற்றுநோக்காமல் இருக்க முடியாது. தென்னிந்திய மாநிலங்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்ட கலாசாரங்களை உடையது என்றாலும், வளர்ச்சியின் அடிப்படையில் வடமாநிலங்களைக் காட்டிலும் முன்னேற்றம் கண்டவை. பண மதிப்பழிப்பு, ஜிஎஸ்டி மற்றும் 15ஆவது நிதி கமிஷனின் பரிந்துரை போன்றவற்றுக்குப் பின்னான தேர்தல் என்பதால், கர்நாடக மக்களின் மனநிலை மற்ற மாநிலங்களிலும் எதிரொலிக்கும் வாய்ப்புள்ளது.

அது மட்டுமல்லாமல், 2019 நாடாளுமன்றத் தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. இந்த வெற்றியை முன்வைத்து, நாடு முழுவதும் மக்களின் கவனத்தை ஈர்க்க இரு தேசியக் கட்சிகளும் கண்டிப்பாக முயற்சிக்கும். இந்த இடைவெளியில்தான், தனக்கான முக்கியத்துவத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது ஹெச்.டி.தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி. ஒருவேளை இரண்டாவது இடம் நோக்கி இக்கட்சி முன்னேறினால், அது பாஜக, காங்கிரஸ் இரண்டுக்குமே தலைவலியாக அமையும்.

அந்தக் கட்சிக்கு பாஜகவோடு மறைமுக உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது என்று ஆரம்பத்திலேயே தெரிவித்தது காங்கிரஸ் கட்சி. ‘பாஜகவின் பி டீம் மஜக’ என்று விமர்சித்தார் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி. இது தனது வாக்கு வங்கியைப் பாதிக்கும் என்று கண்டனம் தெரிவித்தார் தேவகவுடா. பெரியளவில் மஜகவை விமர்சிக்காத பாஜகவும், தங்களது தொகுதிகள் பறிபோவதை பிற்பாடு விரும்பவில்லை. இதனாலேயே, கடைசி இரண்டு வார காலத்தில் மஜகவுக்கு வாக்குகளை வீணாக்காதீர்கள் என்று கூறிவந்தார் பிரதமர் மோடி. மும்முனைப் போட்டியினால் ஏதோ ஒரு கட்சிக்கு பங்கம் வருமென்பது ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள நிலைமை. ஒட்டுமொத்த முடிவுகள் வெளியாகும்போது, யாருக்கு இதனால் பலன் கிடைக்கும் என்பது தெரியவரும். ஆனால், ஒவ்வொரு தொகுதிகளிலும் வெற்றியைச் சுவைக்க சில காரணிகள் தூண்டுதலாக உள்ளன.

சாதியும் வாக்கும்:

கர்நாடகாவில் வொக்கலிகா, லிங்காயத், குரும்பர், தலித், வணிகர், பிராமணர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் உள்ளனர். கர்நாடகாவின் தென்பகுதிகளில் அதிகளவில் உள்ள வொக்கலிகா சமூகத்தினரின் வாக்குகள் மதச்சார்பற்ற ஜனதாதளத்தைச் சார்ந்து அமையும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, மைசூர் வட்டாரத்தில் இக்கட்சியின் செல்வாக்கு மிக அதிகம். அதனாலேயே, சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையாவின் வெற்றி கேள்விக்குறியாக உள்ளது.

கடந்த மார்ச் மாதம் லிங்காயத் சமூகத்தினரைச் சிறுபான்மையினமாக அறிவித்தது சித்தராமையாவின் அமைச்சரவை. இந்த முடிவு காங்கிரஸ் கட்சிக்குப் பலன் தருமா என்பதைத் தேர்தல் முடிவுகளே நிர்ணயிக்கும். வடக்கு மற்றும் மத்திய கர்நாடகாவில் அதிகளவில் லிங்காயத்துகள் உள்ளதே இதற்குக் காரணம். இந்துத்துவத்தை வலியுறுத்தும் குறிப்பிட்ட சமூக மக்கள், இந்த முடிவுக்கு எதிராக உள்ளனர். இதனாலேயே, லிங்காயத் மடங்களைக் குறிவைத்து இந்த முறை பிரச்சாரத்தில் ஈடுபட்டது பாஜக. அதன் வாக்கு வங்கியைத் தக்கவைக்கும் முயற்சிகளைச் செய்து வந்தது. இதன் பலன் என்னவென்பதும், இந்தத் தேர்தல் முடிவுகளில் தெரியவரும்.

சித்தராமையா சார்ந்துள்ள குரும்பர் சமூகம் மற்றும் தலித் சமூகத்தினரின் வாக்குகளைத் தன் கையில் வைத்துள்ளது காங்கிரஸ் கட்சி. அதே நேரத்தில் வணிகர், பிராமணர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் வாக்குகளை தன்வசம் வைத்துள்ளது பாஜக. இந்தச் சாதி வாரி ஆதரவை மனதில்வைத்தே, மூன்று பெரிய கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளன. மதச்சார்பற்ற ஜனதாதளம் மற்றும் பகுஜன் சமாஜ் கூட்டணியானது பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் வாக்குகளைப் பெருமளவில் சிதறடிக்கும் என்று கருதப்படுகிறது. ஆனாலும், ஒட்டுமொத்தமாக வகைப்படுத்துவதன் மூலமாகத் தனிநபர்களின் வாக்குகள் எந்தப் பக்கம் விழுமென்பதை முடிவு செய்ய இயலாது என்பதையும் கவனித்தாக வேண்டும்.

மதம் சார்ந்த பாகுபாடு:

ஆர்எஸ்எஸ் இயக்கமானது பாஜகவுக்கு ஆதரவாகப் பலத்த பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடலோர கர்நாடக தொகுதிகளில் இந்து – முஸ்லிம் இடையிலான முரண்பாட்டை முன்வைத்தே காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் பிரச்சாரம் செய்தன. முஸ்லிம்களைக் காக்க காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று கூறியதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் குலாம் நபி ஆசாத் மீது பாஜகவினர் புகார் கூறினர். இந்துக்களுக்கு எதிராக காங்கிரஸ் செயல்படுவதாகக் குற்றம்சாட்டினர்.

இதனாலேயே, பல இடங்களில் அமித் ஷா இந்துவல்ல என்று கூறினார் சித்தராமையா. தானும் தனது கட்சியினரும் மதச்சார்பற்ற இந்துக்கள் என்று தெரிவித்தார். இதற்குத் தகுந்தாற்போலவே, சிருங்கேரி மடம் மற்றும் பல்வேறு கோயில்களுக்குச் சென்றுவந்தார் ராகுல். கடைசி கட்ட பிரச்சாரத்தில் மட்டுமே, காங்கிரஸ் கட்சியினர் இந்தச் செயல்பாடுகளைக் கணிசமான அளவில் தவிர்த்தனர். ஆனால், அமித் ஷாவும் அவரது கட்சியினரும் கடைசி கட்ட பிரச்சாரத்தில் கோயில்களுக்குச் செல்வதை அதிகப்படுத்தினர்.

பணம் படுத்தும் பாடு:

கர்நாடகச் சட்டமன்றத் தேர்தலில் மக்களுக்குப் பணம் விநியோகம் செய்வதற்காக, இதர மாநிலங்களிலுள்ள ஏடிஎம்களில் குறைந்த அளவுக்குப் பணம் இருப்பில் வைக்கப்பட்டதாகக் கடந்த மாதம் புகார் எழுந்தது. மே 5ஆம் தேதிவரை, சுமார் 120 கோடி ரூபாய் கைப்பற்றியுள்ளது அம்மாநில தேர்தல் ஆணையம். அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் இந்தத் தொகையின் அளவு அதிகரிப்பது, வாக்குக்குப் பணம் என்ற கலாசாரம் தேசம் முழுவதும் தேர்தல் நடைமுறை சீரழிந்துவருவதை வெளிக்காட்டுகிறது. கடந்த வாரம் முதலமைச்சர் சித்தராமையா தங்கியிருந்த விடுதி அறையில் பணம் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியானது. இது பரபரப்பை ஏற்படுத்தியதே ஒழிய, இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. அதேபோல, ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் சுமார் 10 ஆயிரம் வாக்காளர் அட்டைகள் கைப்பற்றப்பட்டன. இந்த விவகாரத்திலும் எந்தக் கட்சிக்குத் தொடர்பு என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.வட்டாரப் பிரச்சினை:

ஒவ்வொரு பகுதியிலும் உள்ள பிரச்சினைகளைக் குறிவைத்து, அதற்கான தீர்வை முன்வைத்து பிரச்சாரம் செய்தது காங்கிரஸ் கட்சி. குறிப்பாக, முதலமைச்சர் சித்தராமையாவை மட்டுமே முன்னிலைப்படுத்தியது. காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் பிரச்சாரம் செய்தாலும், செய்திகளில் சித்தராமையாவுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மாறாக, அமித் ஷா மற்றும் மோடியைச் சார்ந்து இயங்கியது பாஜக.

எடியூரப்பாவுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படாதது, அவரது மகன் விஜயேந்திரா வருணா தொகுதியில் போட்டியிட அனுமதி மறுக்கப்பட்டது, ரெட்டி சகோதரர்களின் செல்வாக்கு மீண்டும் கட்சியில் அதிகமானது போன்றவை பாஜக தொண்டர்களிடையே என்ன தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதும் இந்தத் தேர்தல் முடிவுகளில் தெரியவரும். வேட்பாளர் தேர்வின்போது, சம்பந்தப்பட்டவரின் வட்டாரச் செல்வாக்கை எந்தக் கட்சி கணக்கில் கொண்டது என்பதும் இதில் அடங்கும்.

சமூக ஊடகங்களின் தாக்கம்:

வேகமாகப் பரவும் வைரஸைப் போல, சமீபத்திய தேர்தல்களில் சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, போலியான செய்திகள் அதிவேகமாகப் பரவின. சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட வேண்டாம் எனக் கர்நாடக உளவுத் துறை சித்தராமையாவுக்குக் கடிதம் எழுதியதாகத் தகவல் வெளியானது. அதன்பின், அது போலியானது என்று தெரியவந்தது. ஒவ்வொரு நாளும் காலை முதல் மாலை வரை பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் சார்பில் தகவல்கள் தொடர்ச்சியாகப் பதிவிடப்பட்டன. சித்தராமையா, நரேந்திர மோடி, ராகுல் காந்தி போன்றோர் எதிர்தரப்பின் மேடைக் கேள்விகளுக்குத் தங்களது ட்விட்டரிலேயே அதிகளவில் பதிலளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. வாக்களிக்கும் நாளன்று கட்சியினர் மற்றும் மக்களிடையே சமூக வலைதளத் தகவல்கள் மூலமாகத் தகவல்கள் பரப்பப்படுவதை, தேர்தல் ஆணையம் எந்த வகையில் கண்காணிக்கப் போகிறது என்பதும் கேள்விக்குறியே!

குற்றப் பின்னணி:

இதுவரை இல்லாத அளவுக்கு, கர்நாடகச் சட்டமன்றத் தேர்தலில் குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மே 5ஆம் தேதியன்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில், முதல் மூன்று இடங்களை முறையே பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் பெற்றுள்ளன.

பாஜக வேட்பாளர்களில் 26 சதவிகிதம் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களில் 15 சதவிகிதம் பேர் கடுமையான குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்று இதில் தெரியவந்துள்ளது. குற்றப் பின்னணி கொண்டவர்கள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவது குறித்த சர்ச்சைக்கு முடிவு எட்டாத நிலையில், இந்த முடிவு அதிர்ச்சியைத் தருவதாக உள்ளது. வேட்பாளர் தேர்வின்போது குற்றப் பின்னணியைக் கணக்கில்கொள்ளாமல் விட்டதன் மூலமாக, சம்பந்தப்பட்ட கட்சிகளின் அரசியல் நேர்மை மழுங்கடிக்கப்பட்டுள்ளது. இது, எதிர்காலத்தில் மேலும் பல பிரச்சினைகளுக்கு விதை போடலாம்.முடிவும் ஆரம்பமும்:

கடந்த 2013ஆம் ஆண்டு சித்தராமையா கர்நாடகாவின் முதலமைச்சர் ஆன பின்பு, 2014ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்திய அரசைத் தன் வசமாக்கியது. கர்நாடகாவில் வெற்றி பெறும் கட்சி, மத்திய அரசில் பங்கு வகிக்காது என்ற சென்டிமெண்ட் நீண்டகாலமாகச் சொல்லப்பட்டு வருகிறது. இதைப் பொய்யாக்குவோம் என்று கூறியுள்ளார் பாஜக தலைவர் அமித் ஷா. கர்நாடகாவில் ஆட்சியைக் கைப்பற்றுவது முதல் முயற்சி என்றும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராவேன் என்றும் தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி.

தேர்தல் அறிக்கைகள், பிரச்சார வாக்குறுதிகள், வாக்குச்சாவடியை நோக்கி வாக்காளர்களை ஈர்க்கும் தந்திரங்கள் என்று பல்வேறு அம்சங்கள் இந்தத் தேர்தலில் பயன்படுத்தப்படலாம். இதன் முடிவில், ஏதோ ஒரு கட்சி பெறும் வெற்றியானது, அனைத்துக் கட்சிகளின் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலை நோக்கிய பயணத்தின் ஆரம்பமாக அமையும் என்பது உறுதி.

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் அடிநாதமாக மின்னணு வாக்கு எந்திரங்கள் சர்ச்சை அமையுமா என்பதற்கு, இப்போது வரை யாரிடமும் எந்தப் பதிலும் இல்லை. பிரதமர் மோடி கூறியது போல, பாஜக வெற்றி பெற்றால் அந்தச் சர்ச்சை உயிர் பெறலாம். இல்லாவிட்டால், அந்தச் சர்ச்சை பத்தோடு பதினொன்றாகவே இருக்கும்!http://minnambalam.com/k/2018/05/11/43
Share:

Labels

Blog Archive

Unordered List

Definition List