Thursday, May 3, 2018

தமிழகத்தை திட்டமிட்டே அவமதிக்கும் மத்திய அரசு! பதிலடி கொடுக்குமா தமிழக அரசு?

ad300
Advertisement


தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பிரதமர் மோடி பார்க்க மறுத்துள்ளது தமிழ்நாட்டிற்கான அவமானமாகவே பார்க்க வேண்டியுள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 16-ந்தேதி இறுதி தீர்ப்பை வழங்கியது. அதில், தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி. தண்ணீரை காவிரியில் கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்று அந்த தீர்ப்பில் நீதிபதிகள் அறிவித்தனர். அத்துடன் நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த புதிய திட்டத்தை (ஸ்கீம்) வகுக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு, அதற்காக 6 வாரம் கெடுவும் விதித்திருந்தது.

ஆனால் மத்திய அரசு உச்சநீதிமன்றம் விதித்த கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. இதனையடுத்து தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்த ஸ்கீம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கேட்டு மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. அதேநேரத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது.
இதனையடுத்து காவிரி நீர் பங்கீடு தொடர்பான வரைவுத் திட்டத்தை மே 3-ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய மேலும் 2 வார கால அவகாசம் வழங்குமாறு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சில தினங்களுக்கு முன்பு கோரிக்கை விடுத்தது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரின் ஆட்சேபனையை அடுத்து மத்திய அரசும் தனது மனுவை உடனடியாக திரும்பப் பெற்றது.
காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கில் ஸ்கீம் தொடர்பான வரைவு திட்டத்தை மத்திய அரசு நாளை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. வரைவு திட்டத்தில் மத்திய அரசு என்ன பெயரில், எப்படி ஸ்கீமை உருவாக்க திட்டமிட்டிருக்கிறது என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. வரைவுத் திட்டம் தயாராக உள்ளது என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தினத்தை நாடு முழுவதும் பிரமாண்டமாகக் கொண்டாடுவது தொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் பழனிசாமி டெல்லி சென்றுள்ளார். டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் என்று நம்புகிறேன். இன்று வாய்ப்பு கிடைத்தால் பிரதமர் மோடியைச் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து வலியுறுத்துவேன். இது தொடர்பாக வேறு யாரையும் சந்திக்கும் திட்டம் இல்லை’ என்று அவர் கூறினார்.
டெல்லியில் தமிழக அரசு தரப்பில் எடுத்துரைக்க வேண்டிய வாதங்கள் குறித்து அரசு வழக்கறிஞர்கள், சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில், நீதிமன்றம் விதித்த காலக்கெடுவை மத்திய அரசு தாண்ட‌க்கூடாது என முதலமைச்சர் எடப்பாடி‌ பழனிசாமி பேசினார். மேலும், மத்திய அரசு கூடுதல் அவகாசம் கேட்டால், நீதிமன்ற அவமதிப்பு குறித்து வாதிட தமிழக அரசு தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பை தவிர்க்க மத்திய அரசை வலியுறுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “காவிரி பிரச்னை தொடர்பான அனைத்துக்கட்சி தலைவர்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளை அழைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதன் நகல் பிரதமருக்கு அனுப்பப்பட்டது. அதில் காவிரி பிரச்னை குறித்து அனைத்துக்கட்சி தலைவர்களும் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளும் நேரில் சந்தித்து பேச நேரம் ஒதுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் பிரதமர் அலுவலகத்தில் இருந்து அவரை சந்திப்பதற்கு கடிதம் வரவில்லை. ஒரு வாரம் கழித்து கடிதம் வந்தது. அதில் முதலில் நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து பேசுங்கள் என கூறப்பட்டது. இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவரை அழைத்து கடிதம் குறித்த விவரம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் மத்திய அரசு நமது கோரிக்கையை தட்டிக் கழிக்கப் பார்க்கிறது. எனவே நாம் அமைச்சரை சந்திக்க வேண்டாம் பிரதமரை சந்திப்போம் என தெரிவித்தார். இதுதொடர்பாக பிரதமருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

தமிழக முதலமைச்சர் பழனிசாமியை சந்திக்க பிரதமர் மோடி நேரம் ஒதுக்கவில்லை. ஆனால், டெல்லி வந்துள்ள குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி பிரதமரை நேற்று சந்தித்து பேசியுள்ளார். காவிரி தொடர்பாக தமிழக விவசாயிகள் டெல்லியில் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்தனர். அப்போது அவர்களை சந்தித்து பேச மோடி நேரம் ஒதுக்கவில்லை. அதிமுகவின் உட்கட்சி விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் - ஈபிஎஸ் பிரதமர் மோடியை சந்தித்து பலகட்ட ஆலோசனைகளை பெற்றனர். இதனை அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒருமுறை கூட்டத்தில் பேசும் போது தெரிவித்து இருந்தார். பிரதமர் மோடி இருக்கும் வரை நம்மை யாரும் மிரட்ட முடியாது. நமக்கு எந்தப் பிரச்னை ஏற்பட்டாலும் அதை தீர்த்து வைக்க பிரதமர் இருக்கிறார் என இரட்டை இலை தொடர்பாக இரு அணிகளுக்கும் பிரச்னை இருக்கும் போது கூறியிருந்தார்.

பிரதமர் மோடி கூறியதால்தான், அதிமுகவின் இரு அணிகளை இணைக்க ஒப்புக்கொண்டதாகவும் அவர் அறிவுறுத்தியதாலேயே அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டேன் எனவும் கடந்த பிப்ரவரி மாதம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியிருந்தார். ஆனால், தற்போது, காவிரி விவகாரத்தில் தமிழக அரசு தரப்பில் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டும் இதுவரை ஒதுக்கப்படவில்லை. இது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த நேரத்திலும், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி வரைவு திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Share This
Previous Post
Next Post

Pellentesque vitae lectus in mauris sollicitudin ornare sit amet eget ligula. Donec pharetra, arcu eu consectetur semper, est nulla sodales risus, vel efficitur orci justo quis tellus. Phasellus sit amet est pharetra