Wednesday, May 9, 2018

கூட்டுறவு சங்க தேர்தல் - தற்போதைய நிலையே நீடிக்கும்! உயர்நீதிமன்றம்!



சென்னை : கூட்டுறவு சங்க தேர்தலில் அரசியல்வாதிகளின் சொல்படி ஆடிய அதிகாரிகள் சிக்குகின்றனர். இத்தேர்தலில் முறைகேடு செய்தோருக்கு 'ஆப்பு' வைக்கும் விதத்தில் கடும் நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தேர்தல் நடத்துவதில் ஒருதலைபட்சமாக செயல்பட்டோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு நான்கு கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் முறைகேடுகள் நடப்பதாக போட்டியிட்டவர்கள் குற்றம் சாட்டினர். 'வேட்புமனுக்கள் நிராகரிப்பு; வேட்புமனுக்களை ஏற்க மறுப்பு; முறையில்லாமல் தேர்தல் நடப்பது; தேர்தல் அதிகாரிகளின் துணையுடன் ஆளும் கட்சியினர் முறைகேடு' என குற்றச்சாட்டுக்கள் அடுக்கப்பட்டன.

இதையடுத்து சில கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தேர்தல் முறைகேடு குறித்து சென்னை உயர் நீதிமன்றத்திலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம் புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி, கூட்டுறவு தேர்தல் ஆணையத்துக்கு, உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் 60க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்கள் நீதிபதி, எஸ்.எம்.சுப்ரமணியம் முன் நேற்று விசாரணைக்கு வந்தன. எத்தனை புகார்கள் வந்துள்ளன என்பது குறித்து விளக்கம் அளிக்க, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அல்லது உயர் அதிகாரி ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து பிற்பகலில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது கூடுதல் பதிவாளரும் தேர்தல் ஆணைய செயலருமான, தேவகி ஆஜரானார். தேர்தல் ஆணையம் சார்பில், சிறப்பு வழக்கறிஞர் எம்.எஸ்.பழனிசாமி, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், சிறப்பு பிளீடர் எல்.பி.சண்முகசுந்தரம் ஆஜராகினர். மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் அஜய்கோஷ், நீலகண்டன், பிரகாசம் உள்ளிட்டோர் ஆஜராகினர்.

கூட்டுறவு தேர்தல் ஆணையம் சார்பில், சிறப்பு வழக்கறிஞர் எம்.எஸ்.பழனிசாமி ''புகார்கள், ஆட்சேபனைகள் என 860 சங்கங்கள் தொடர்பாக 1,525 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை பரிசீலித்து, 412 சங்கங்களுக்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டு விட்டன; 410 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன; 38 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன,'' என்றார்.

கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன் ''புகார்கள் பெறப்பட்ட உடன், துரிதமாக அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர். உரிய நடைமுறைப்படி தான் தேர்தல் நடந்துள்ளது. 410 மனுக்கள் நிலுவையில் உள்ளன,'' என்றார்.

வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு: தேர்தல் தொடர்பான புகார்களை, தங்கள் வசம் உள்ள ஆவணங்களுடன் பாதிக்கப்பட்டவர்கள் சமர்ப்பிக்கலாம்; இந்த புகார்களை, மனுக்களை, கூட்டுறவு தேர்தல் ஆணையம், சுதந்திரமான வெளிப்படையான முறையில் பரிசீலிக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் விசாரிக்க கோரினால், அதையும் பரிசீலிக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளை எல்லாம் எட்டு வாரங்களுக்குள் பூர்த்தி செய்து முடிவு எடுக்க வேண்டும்.

எந்த கூட்டுறவு சங்கம் தொடர்பாகவும் முடிவு எடுக்கப்பட்டால் அதை ஆணையம் வெளியிடலாம். புகார் மனுக்களை பைசல் செய்து தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின்னும் பாதிக்கப்பட்டதாக கருதினால் கூட்டுறவு சங்கங்கள் சட்டப்படி, உரிய அதிகாரிகளை அணுகலாம். அந்த மனுக்கள் ஆறு மாதங்களுக்குள் பைசல் செய்யப்பட வேண்டும்.

தேர்தல் அதிகாரிகளுக்கு எதிரான புகார்களையும் ஆணையம் கருத்தில் கொள்ள வேண்டும். விதிமீறல்கள் இருப்பது தெரிய வந்தால் அந்த அதிகாரிகளுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி, எஸ்.எம்.சுப்ரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

தற்போதைய நிலை தொடர உத்தரவு:



தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தலுக்கு எதிரான வழக்கில் தற்போதைய நிலையை நீட்டித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. ஒட்டன்சத்திரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., சக்கரபாணி, 'கூட்டுறவு சங்கங்களுக்கு மார்ச் 5ல் தேர்தல் அறிவிப்பு வெளியானது. தேர்தல் முறையாக நடக்கவில்லை. பல சங்கங்களில் ஆளுங்கட்சியினரே நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். தேர்தல் அறிவிப்பு மற்றும் அதன்படி நடந்த தேர்தல் செல்லாது என, அறிவிக்க வேண்டும்' என மனு செய்தார். நீதிபதிகள் 'தேர்தல் நடவடிக்கைகள், தற்போது, எந்த நிலையில் உள்ளனவோ, அந்நிலை நீடிக்க வேண்டும்' என உத்தரவிட்டனர். இதை எதிர்த்து, தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தேர்தல் நடத்த அனுமதித்தும் அது தொடர்பான முடிவுகளை வெளியிட தடை விதித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மே, 7ல், உச்ச நீதிமன்றம் 'கூட்டுறவு தேர்தல் வழக்கை உயர் நீதிமன்றம் விசாரித்து ஜூன் 8க்குள் தீர்ப்பளிக்க வேண்டும்' என உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.கோவிந்தராஜ், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு முன் இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 'விசாரணை ஜூன் 4க்கு ஒத்திவைக்கப்படுகிறது. அதுவரை தற்போதைய நிலை தொடரும்' என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Share:

Labels

Blog Archive

Unordered List

Definition List