Wednesday, May 9, 2018

இளையராஜா மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க ஆட்சியர் பரிந்துரை! இயேசுநாதர் பற்றிய விமர்சனம் காரணமா?



இசையமைப்பாளர் இளையராஜா திடீரென இயேசு உயிர்த்தெழுதல் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது குறித்து, வழக்கறிஞர் ஆட்சியரிடம் அளித்த புகாரின் பேரில் இளையராஜா மீது நடவடிக்கை எடுக்க காவல் ஆணையருக்கு ஆட்சியர் பரிந்துரைத்துள்ளார்.

இசை சம்பந்தமான தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இசையமைப்பாளர் இளையராஜா திடீரென இயேசு உயிர்த்தெழுதல் குறித்துப் பேசினார். இயேசு மறைந்தார், உயிர்த்தெழுந்தார் என்ற நம்பிக்கையில் கிறிஸ்தவ மதம் உள்ளது. ஆனால் உயிர்த்தெழுந்தார் என்பது உண்மையில்லை என்பதை ஆராய்ச்சி செய்து யூடியூபில் போடுகிறார்கள் என்று ஆவணப்படத்தை மேற்கொள் காட்டினார். மேலும், உண்மையான உயிர்த்தெழுதல் ரமண மகரிஷிக்கு நிகழ்ந்தது என்று அவர் பேசினார்.

கிறிஸ்தவர்களின் அடிப்படை நம்பிக்கையை தகர்க்கும் விதத்தில் விமர்சித்துப் பேசிய இளையராஜாவுக்கு எதிராக கிறிஸ்தவ அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் சென்னை காவல் ஆணையரிடம் கிறிஸ்தவ அமைப்பினர் இளையராஜா குறித்து புகார் அளித்தனர்.

உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்களின் மத நம்பிக்கையானது, இயேசு கிறிஸ்து மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பதே கிறிஸ்தவர்களாகிய நாங்கள் கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த தினத்தை உலகெங்கும் இருக்கின்ற திருச்சபைகளில் எழுச்சியாகக் கொண்டாடி வருகிறோம்.

இசையமைப்பாளர் இளையராஜா சமூக வலைதளத்தில் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை கொச்சைப்படுத்தி கருத்து தெரிவித்துள்ளார்.இதனால் கிறிஸ்துவர்களாகிய எங்கள் மனது பெரிதளவில் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் பெரும் கொந்தளிப்பும் கிறிஸ்தவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது என்று அப்போது தெரிவித்திருந்தனர்.

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி மத உணர்வை புண்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். எனவே கிறிஸ்தவர்களின் மனதைப் பெரிதும் வேதனைப்படுத்திய இளையராஜா மீது சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தினேஷ் என்பவர் சென்னை காவல் ஆணையர், சென்னை மாவட்ட ஆட்சியர், தலைமைச் செயலளார், இளையராஜா உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பினார். அவரது நோட்டீஸ் அடிப்படையில் சென்னை மாவட்ட ஆட்சியர் காவல் ஆணையருக்கு பரிந்துரை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் தினேஷ் புகார் மீது மேல் நடவடிக்கை எடுக்குமாறும், என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை புகார்தாரர் தினேஷுக்கு தெரிவிக்கும்படி பரிந்துரை கடிதத்தில் கூறியுள்ளார். அதை ஏற்ற காவல் ஆணையர் சம்பந்தப்பட்ட துணை ஆணையருக்கு இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

ஏசு கிருஸ்து குறித்த சர்ச்சை கருத்தை இளையராஜா மார்ச் மாதம் பேசியிருந்தார். அதன் பின்னர் இந்த பிரச்சினை சற்றே ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் வழக்கறிஞரின் புகார் காரணமாக உயிர்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Share:

Labels

Blog Archive

Unordered List

Definition List