Tuesday, May 8, 2018

ஜெயலலிதாவை மிஞ்சினாரா எடப்பாடியார்?“கோட்டையை முற்றுகையிடப்போவதாக அறிவித்த அரசு ஊழியர்கள் சங்கத்தினரை நேற்று இரவிலிருந்தே கைது செய்ய ஆரம்பித்துவிட்டது போலீஸ். வழக்கமாகப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்வதும், மாலையில் விடுவிப்பதும்தான் போலீஸ் ஸ்டைல். ஆனால், இன்று அரசு ஊழியர்களைப் போராட்டமே நடத்தவிடாமல் தடுத்தது எடப்பாடி ஸ்டைல் என்று சொல்கிறார்கள்.

‘அரசு ஊழியர்கள் கோட்டையை முற்றுகையிடப் போகிறார்கள் என்று அறிவிப்பு வந்ததுமே காவல் துறையில் தனக்கு நெருக்கத்தில் உள்ள சிலரை அழைத்துப் பேசினார் முதல்வர். ‘இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு எப்படி இருக்கும் என்பதை சீக்ரெட்டாக விசாரித்துச் சொல்லுங்க..’ என கேட்டாராம். உடனடியாக காவல் துறை விசாரணையில் இறங்கியபோது, ஒரு மாவட்டத்துக்கு குறைஞ்சது 15 டிராவல்ஸ் வண்டி புக் பண்ணி வெச்சிருக்காங்க. அந்தக் கணக்குப்படி பார்த்தால் போராட்டம் வலிமையாகத்தான் இருக்கும்..’ என போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டதாம்.உடனடியாக உளவுத் துறையில் உள்ள அதிகாரிகள் சிலரை அழைத்த எடப்பாடி, ‘அரசு ஊழியர்கள் கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்தை பெரிய அளவில் நடத்த திட்டமிட்டு இருக்காங்க. போராட்டத்துக்கு அவங்களை அனுமதிச்சுட்டு அதுக்குப் பிறகு கைது செய்வதை விட, அவங்களை சென்னைக்கே வர விடாமல் தடுக்கணும். அதுக்கு தமிழ்நாடு முழுக்க அரசு ஊழியர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் எங்கிருந்து கிளம்புறாங்க... எந்த ரூட்டுல வராங்கன்னு எல்லா தகவல்களும் தெரியணும். சென்னைக்கு வர்றதுக்கு முன்பே அவங்களை தடுக்கணும். இதுக்கு என்ன செய்யலாம்?’ எனக் கேட்டாராம்.

அதற்கு உளவுத் துறை அதிகாரி ஒருவர், ‘ஒவ்வொரு மாவட்டத்துலயும் ஆக்டிவா செயல்படும் நிர்வாகிகள் பட்டியலை எடுத்துடுறோம். அவங்க போன் நெம்பரை கலெக்ட் பண்ணச் சொல்லிடுறேன். அது இருந்தாலே போதும். அவங்க யாரோடு பேசுறாங்க.. என்ன ப்ளான் பண்றாங்க... எல்லாத்தையும் ட்ரேஸ் பண்ணிடலாம்..’ என்று ஐடியா கொடுத்திருகிறார். எடப்பாடியும் அதற்கு ஓகே சொல்ல.. மாவட்ட வாரியாக நிர்வாகிகள் பட்டியல் ஒரு மணி நேரத்தில் ரெடியாகியிருக்கிறது. அவர்களது செல் போன்களில் பேசப்படும் பேச்சுகளையும் கண்காணிக்க ஆரம்பித்திருக்கிறது போலீஸ்.

அதை வைத்துதான், ‘திண்டுக்கல்லில் பழனி ரோட்டுல இருந்து ஒரு வண்டி கிளம்புது. அங்கேயே பிடிங்க... மதுரை ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல ஒரு டெம்போ டிராவலர் நிற்கும் பாருங்க...’ என்றெல்லாம் சென்னையிலிருந்தே அந்தந்தப் பகுதி போலீஸுக்கு உத்தரவு போயிருக்கிறது. சேலம் புது பஸ் ஸ்டாண்ட்ல இருந்து சென்னைக்கு இப்போ கிளம்பிட்டு இருக்கும் பஸ்ல 6 பேரு இருப்பாங்க. அவங்களை இறங்கச் சொல்லிடுங்க... கோயம்பேட்டுக்குள் நுழையும் திருச்சி பஸ்ல 12 பேரு வந்திருக்காங்க. அவங்களை அங்கேயே பிடிங்க...’ என்றெல்லாம் கண்ட்ரோல் ரூமிலிருந்து போலீஸுக்கு உத்தரவு பறந்தபடியே இருந்திருகிறது. செல்போன் பேச்சுக்களை வைத்துதான் அரசு ஊழியர்களின் நகர்வுகளைக் கண்காணித்திருக்கிறது போலீஸ்.

சென்னையில் கிளம்ப ரெடியானவர்களையும் சேப்பாக்கத்தைத் தாண்டவிடவில்லை போலீஸ். சினிமா ஸ்டைலில் இந்த ஆபரேஷனை நடத்தி முடித்திருக்கிறது போலீஸ். ஜெயலலிதா அதிரடியாகப் பல செயல்களில் இறங்கி சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டார். ஆனால் இப்போதோ போராட்டக்காரர்களின் செல்போன்களை ஒட்டுக் கேட்டு, போராட்டத்தை அடக்கிவிட்டார்கள்.

‘சரியா செஞ்சுட்டீங்க... எந்த அசம்பாவிதமும் இல்லாமல் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவந்துட்டீங்க...’ என்று சொல்லி ஐடியா கொடுத்த காவல் துறை அதிகாரியை முதல்வர் கூப்பிட்டுப் பாராட்டினாராம்’’

Courtesy minnambalam.com
Share:

Labels

Blog Archive

Unordered List

Definition List