Friday, May 11, 2018

மனிதம் தொலைத்த மனிதர்கள்? இன்றைய யுகத்தின் சாபக்கேடு!

சிவப்பு நிற டாட்டா இண்டிகா கார் கரப்பான் பூச்சியை கவிழ்த்து போட்டது போல் கவிழ்ந்து கிடக்கிறது. கவிழ்ப்பதற்கு முன்னர், ஆக்ரோஷமாக அடித்து நொறுக்கப்பட்டிருப்பது அந்த வீடியோவைப் பார்த்தாலே தெரிகிறது. அதன்பின்தான் காரை கவிழ்த்திருக்க வேண்டும். காருக்கு அருகிலேயே ஐந்து பேரின் ஆடைகள் கிழிக்கப்பட்டு, உதிரம் வலிய அமர்ந்திருக்க அவர்களை மனிதர்கள் கூட்டமாக காலால், கையால் புரட்டி அடித்தனர். அவர்களோ வலியில் துடிதுடித்தனர். கும்பலாக ஒரு சிலர் காரில் வந்தவர்களை அடித்துக்கொண்டிருக்க, அதை ஊர் திருவிழா போன்று வீட்டு சுவற்றிலும், வீட்டு மாடியிலும் நின்று வேடிக்கை பார்த்து வந்தனர். பின்னர், போலீஸ் வந்து, தாக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனைக்கு சென்றவுடன் தாக்கப்பட்டதில் ஒருவரான 65 வயது மூதாட்டி இறந்துவிட்டார். மேலும் இரண்டு பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் இரண்டு பேருக்கு முதல் உதவி செய்திருக்கின்றனர்.பல்லாவரத்தைச் சேர்ந்த ருக்குமணி, பல்லாவரத்தைச் சேர்ந்த வெங்கடேசன், மலேசியாவைச் சேர்ந்த சந்திரசேகரன், மலேசியாவைச் சேர்ந்த மோகன்குமார் (இருவரும் திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள்), மயிலாப்பூரைச் சேர்ந்த கார் ஓட்டுநர் கஜேந்திரன் ஆகியோர்தான் காருக்குள் இருந்தவர்கள். அந்த ஊர் மக்களால் தாக்கப்பட்டவர்கள். அவர்கள் அப்படி என்னதான் செய்தார்கள் என்று இப்படி மிருகத்தை போன்று மாறி காரில் வந்தவர்களை தாக்கியிருக்கிறார்கள், தெரியுமா? காரில் வந்தவர்கள் அந்த ஊரில் இருக்கும் ஒரு கோவிலுக்குச் செல்ல சென்னையில் இருந்து வந்துள்ளனர். வழி மாறிச் சென்றதால், கோவிலுக்கு வழியை விசாரித்துவிட்டுத் திரும்பியிருக்கின்றனர். அப்போது அங்கே இருந்த குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்திருக்கிறார் அந்த மூதாட்டி. இதனைத்தொடர்ந்து அவர்களை பின்தொடர்ந்து நீங்கள் குழந்தைகளை கடத்த வந்தவர்கள் தானே என்று தாக்கியுள்ளனர்.இந்த சம்பவம் நடந்து ஓய்வதற்கு முன்பே திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் முப்பது வயதிற்கும் உட்பட்டவர் ஒருவர் பார்க்க குழந்தை பிடிப்பவர் போன்று இருந்தாராம். உடனே கூட்டமாக சூழ்ந்துகொண்ட பொதுமக்கள் அவர் யார், என்ன என்று கூட துளியும் விசாரிக்காமல் அடித்து துவம்சம் செய்துள்ளனர். அடித்த அடியில் அவரது மூக்கு உடைக்கப்பட்டுள்ளது. இன்னும் மிருகத்தனமாக அவரது கண்ணையையும் தோண்டி இருக்கின்றனர். அவரது உயிர் பிரிந்தவுடன். கொஞ்சம் கூட தயக்கமின்றி, 'எல்லோருக்கும் பாடம் கற்பிக்கிறேன்' என்று அங்கே உள்ள உப்புநீரி ஏரியின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்திலிருந்து இறந்தவரின் கால்களைக் கட்டி தொங்கவிட்டுள்ளனர். காவலர்கள் வந்து விசாரித்தபின்புதான் தெரிகிறது, அவர் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று. இந்த இரண்டு ஊர்களிலும் சிறிது காலங்களாக குழந்தைகள் கடத்தல் நிகழ்ந்திருக்கிறது. அதனால், விழிப்பாக இருக்க முயன்று, இதுபோன்ற சம்பவங்கள் நடந்தேறி உள்ளன என்கின்றனர்.இச்சம்பவங்களை போன்றே கேரளாவில் கடந்த பிப்ரவரி மாதம், பார்க்க நோஞ்சானாக இருக்கும் 27 வயது வாலிபன், அந்த வீடியோவில் அவர் முகத்தில் அப்பிராணியான ஒரு சிரிப்பு இருந்துகொண்டே இருந்தது. ஒரு மூட்டை அரிசி, அதில் ஒரு சார்ஜர் வயர் போன்ற பொருட்களை எல்லாம் வீடியோவில் தூக்கி தூக்கி காட்டுகின்றனர், அப்போதும் அவன் முகத்தில் அதே சிரிப்பு தான். அங்கே அவரை சூழ்ந்த கூட்டமெல்லாம் கோபமாக அவனைக் கடிந்து தாக்க ஆரம்பித்தனர். பிறகு, அவரை பக்கத்தில் இருக்கும் காட்டுப் பகுதிக்கு அழைத்துக்கொண்டு சென்று அடி அடி என்று அவரை அடித்துள்ளனர். அப்படி அடிக்கும் பொழுது அதை ஒருவர் போட்டோ, வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார் என்றால் பாருங்கள், அவருக்கு எத்தனை இலகுவான மனது. சமூக வலைத்தளத்தில் அந்த வீடியோவை போட்டு லைக்ஸ்களும் ஷேர்களும் வாங்க அவர் காட்டிய மும்முரம், தாக்கப்பட்ட மதுவைக் காப்பாற்ற காட்டியிருக்கலாம். ஆனால், மது கொடூரமாக கொல்லப்பட்டார்.

மனிதனின் சந்தேக குணம், அது கோபம் என்ற எல்லையை மீறி மிருகமாக அவனை மாற்றுகிறது. காரில் வந்தவர்கள் குழந்தையை கடத்த வந்தவர்களாகவே இருந்தாலும் கூட, அவர்களை காவல்துறையிடம் பிடித்துக் கொடுத்திருந்திருக்கலாம். ஆனால், அவர்கள் உண்மையில் குழந்தை கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் அல்ல, அவர்களிடம் பேசியிருந்தாலே பிரச்சனை முடிந்திருக்கும். அதேபோல மதுவின் சம்பவத்தில் அவர் திருடிவிட்டார் திருடிவிட்டார் என்று, கொல்லும் அளவுக்கு அடித்துள்ளனர். அவர் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர். எதையும் திருடவில்லை, அவரின் தோற்றம் பார்க்க அழுக்காக இருப்பதால் மக்களே அவ்வாறு முடிவு செய்து இருக்கின்றனர்.

திருடனாக இருந்தாலும், தவறு செய்தவர்கள் யாராக தண்டிக்க நீதிமன்றம் இருக்கிறது. சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு, மனிதனாக இல்லாமல் மிருகமாக மாறி, தவறு செய்தவர்கள் என்ற சந்தேகத்தை மட்டும் வைத்துக்கொண்டு தண்டனை கொடுத்திருப்பது தற்போதிருக்கும் மனிதர்களுக்கு மனிதாபிமானம் இருக்கிறதா என்று யோசிக்க வைக்கிறது. நாளுக்கு நாள் மக்களுக்கு அரசியல், சூழலியல் விழிப்புணர்வு, போராட்ட உணர்வு அதிகரிப்பது ஒரு மகிழ்ச்சியென்றால், அதன் பெயரில் தேவையில்லாத எதிர்மறை எண்ணங்களும் வன்முறையும் பெருகியிருப்பது போனஸ். இவர்கள் யாரும் தங்களின் கோபத்தை அரசியல்வாதிகளிடமும் தேர்தலில் வாக்கு செலுத்துவதில் மட்டும் காட்டுவதாய் தெரியவில்லை. அங்கே அவர்கள் செய்த தவறுகளை எல்லாம் மறந்து மனிதாபிமானத்தை நூறு சதவீதம் காட்டுகிறார்கள்.

நன்றி-https://nakkheeran.in/special-articles/special-article/human-going-be-wild
Share:

Labels

Blog Archive

Unordered List

Definition List