Tuesday, May 8, 2018

கல்லாதோர் இல்லாதோர் நாடு- by ஆர். நடராஜ் Mla (ex DGP)வாழ்க்கையில் தொடர்ச்சியான வெற்றியடைய ஒரே வழி வாழ்நாள் முழுவதும் கற்றல். கற்றல் என்றென்றும் இனிமை.

கடந்த நூண்டின் முக்கியமான ஐந்து கண்டுபிடிப்புகளான டெலிவிஷன், கம்ப்யூட்டர், ஏடிஎம் என்ற 24 மணி நேர வங்கி சேவை, கைபேசி, இணையதளம் உள்ளடக்கிய டிஜிட்டல் தொழில்நுட்பம் சமுதாயத்தின் வாழ்க்கைத்தரத்தை மாற்றிவிட்டது. உலகம் கையளவில் வந்துவிட்டது. ஆனால் இவற்றுக்கெல்லாம் முன்பு வண்டிகள் மூலம் பொருட்களையும் மனிதர்களையும் சுலபமாக எடுத்துச் செல்ல உதவிய சக்கரம் கண்டுபிடிப்பு, ஜெர்மானியர் குடன்பர்கின் அச்சு இயந்திரம் மனிதனின் சிந்தனையை வளர்த்தது, அறிவுப் பரிமாற்றத்திற்கு வித்திட்டது.

செயற்கை அறிவு, தானியிங்கி (ரோபோடிக்ஸ்) சாதனங்கள், ஸ்டெம் செல் -உயிரணு வழி சிகிச்சை, சூரிய சக்தி, காற்றாலை மூலம் இயற்கையாக பெறப்படும் புதுப்பிக்கத்தக்க சக்தி போன்ற விஞ்ஞான முன்னேற்றங்கள் வருங்காலத்தில் பிரமிக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என்கிறார்கள்.
உலகிலேயே அதிகமான இளைஞர்களை கொண்ட நம் நாடு, வரவிருக்கும் மாற்றங்களில் பங்கு கொள்ள, உருவாக்க, பயனடைய, இளைய சமுதாயத்தை தயார் செய்ய வேண்டும். இவையெல்லாம் தரமான கல்வி மூலம்தான் சாத்தியமாகும். பாடத்திட்டத்தை அதற்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டும். உயர்தர புத்தகங்கள் அவசியம். புத்தகங்களே ஞானத்தின் வேர்கள். நவில்தொறும் நூல்கள் என்ற வள்ளுவர் வாக்குப்படி நூல்களின் இனிய நயனங்கள் உறுதுணையாக வேண்டும்.

சரித்திர ஏடுகளை புரட்டினால் கிரேக்க நாட்டில் சாக்ரடீஸ், ப்ளேட்டோ போன்றவர்கள் சம்பிரதாய மூட நம்பிக்கையைத் துறந்து, எந்த ஒரு கருத்தையும் சுயமாக சிந்தித்து அலசி ஆராய்ந்து உணர்ந்து ஏற்றுக்கொள்ளவோ நிராகரிக்கவோ கற்றுக் கொள்ள வேண்டும் என தர்க்கத்தின் அடிப்படையில் சமுதாயத்தில் அறிவு வளர புதிய பாதையை வகுத்தனர்.
கல்வி கற்பதின் குறிக்கோள், ஒரு மாணவனுக்கு சுதந்திரம் என்ற சிறகுகளையும் பொறுப்பு என்ற வேர்களையும் அளிக்க வேண்டும்.
உலகமயமாக்கல், தாராளமயம் என்ற கொள்கைகள் சர்வதேச பொருளாதார முறைகளை மாற்றியமைத்தது. அதற்கு ஏற்றவாறு கல்வியின் தரத்திலும் காலத்திற்கு உகந்த நவீன யுக்திகளை கையாள வேண்டிய கட்டாயம் உள்ளது.

பல நாடுகள் இதற்கான நடைமுறைகளை கண்டறிந்து தொடர் நடவடிக்கை எடுத்துள்ளார்கள். ஆனால் நமது நாட்டில் விவாதம் நடந்து கொண்டே இருக்கிறது. காலம்தான் கழிகிறது, தெளிவு இன்னும் பிறக்கவில்லை.

அவசரம் அவசரமாக சமச்சீர் கல்வி என்ற பாடத் திட்டத்தை உருவாக்கினர். நடைமுறைப்படுத்த வேண்டிய நிலையில் புதிய அரசு 2011-இல் முழுமையாக ஆராய்ந்து செயல்படுத்த ஒரு குழுவை அமைத்தது. அதில் மிகச் சிறந்த கல்வியாளர்கள், தரமான கல்வி புகட்டுவதில் வெற்றி கண்டவர்கள் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் அளித்த பரிந்துரைகள் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ போன்ற நாட்டில் நடைமுறையில் உள்ள சிறப்புகளை ஆராய்ந்து, அவற்றின் அடிப்படையில் நம் மாணவர்களுக்குப் பயனளிக்கும் என்ற நோக்கில் தயாரிக்கப்பட்டடது. மேலும் நிபுணர்களிடமும் சமூக மேம்பாட்டு நல்லெண்ணம் படைத்தவர்களிடம் கருத்தறிந்து, விவாதத்திற்குப் பிறகு நடைமுறைப்படுத்த இருந்தது.
ஆனால் அதற்குள் பல எதிர்ப்புகள். நமது மாணவர்கள் பாட நூல்கள் கடினமாக்கினால் கஷ்டப்படுவார்கள், ஏழை மாணவர்கள் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் போன்ற பல கருத்துக்கள். புதிய பாடத்திட்டம் சமூகநீதிக்கு எதிரானது என்று திரித்து, நல்லது நடப்பதை உச்சநீதிமன்றம் வரை சென்று தடுத்தார்கள். விளைவு என்னாயிற்று?

இளைய சமுதாயம்தான் பாதிக்கப்பட்டது. உயர்கல்வி போட்டித் தேர்விகளில் நமது மாணவர்கள் சோபிக்க முடியவில்லை.
'உண்மை தன்னை தயார் செய்து கொண்டு கிளம்புவதற்குள் பொய்யுரை எல்லா இடங்களிலும் பரவி உறையும்' என்ற வின்ஸ்டன் சர்ச்சில் மூதுரை ஒவ்வொரு நிலையிலும் நிரூபணமாகிறது. பொய்களை சமூக வலைதளங்களில் மேயவிடுகிறார்கள். படம் பிடித்து அதனை சிறிது மாற்றி உண்மைபோல் சித்திரிக்கிறார்கள். சென்னையில் போக்குவரத்து காவல் அதிகாரியை தள்ளுமுள்ளு செய்தவன், ஏதோ அவன் தாக்கப்பட்டதுபோல் நடித்தது வாட்ஸ்அப்பில் பரிமாறப்படுகிறது. உடனே அதை ஆராயக் கூட பொறுமையில்லாது, அரசியல்வாதிகள் போட்டி போட்டுக்கொண்டு கண்டன அறிக்கை விடுகிறார்கள். உண்மை நிலை தெரிந்தாலும் மாற்றறிக்கை மூலம் விளக்கம் அளிக்கும் பண்பு இல்லை. இவையெல்லாம் கல்வி கற்ற பயனா அல்லது அரைவேக்காடு கல்வியால் வந்த வினையா!

'ஒரு நாட்டினை அழிக்க அணு ஆயுதம் தேவையில்லை அந்த நாட்டின் கல்வியின் தரம் குறைந்தால் கல்வித் துறையில் முறைகேடுகள் நடந்தால் அந்த நாடு அழிவது நிச்சயம்' - இந்த வாசகம் தென் ஆப்பிரிக்கா பல்கலைக்கழக நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ளது.
தரம் குறைந்த கல்வியால் உருவான மருத்துவர்கள் கையில் நோயாளிகள் உயிரிழப்பார்கள், அத்தகைய பொறியாளர்கள் கட்டிய கட்டடங்கள் இடிந்து விழும், கணக்காயர்கள் பொருளாதார வல்லுநர்கள் கையில் பணம் விரயமாகும், மானுடம் அழியும் போலி சாமியார்கள் ஆதிக்கத்தில், நீதியரசர்கள் கையில் நீதி தொலைந்துவிடும், முடிவில், கல்வி அழிந்தால் நாடே அழியும். இது முற்றிலும் உண்மை.

பள்ளிப் படிப்பு ஒரு மாணவனை உலகளாவிய குடிமகனாக உருவாக்க வேண்டும் என்று ஹார்வர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் பெர்னாண்டோ ரீமர்ஸ் வலியுறுத்துகிறார். அதுதான் இன்றைய காலகட்டத்தின் கட்டாயம். அதற்கேற்றவாறு பாடத் திட்டம் தொடர்ந்து செதுக்கப்பட வேண்டும்.

ஆசிரியர்கள் எல்லை தாண்டிய சிந்தனை படைத்தவர்களாக மாணவர்களை மேல் நோக்கிப் பயணிக்க உதவ வேண்டும். மாணவர்களுக்கு இரண்டு தலைமைப் பண்புகள் அவசியம். ஒன்று, ஆழமான நல்லியல்புகள். இரண்டாவது, சமூகம் சார்ந்த பொருளாதார வகுத்துணர்வு.
சமுதாய சிந்தனை வளர, வேறு உள்நோக்கம் இன்றி, கருத்துப் பரிமாற்றம் வெளிப்படையாக அமைய வேண்டும். இன்னும் நாம் இராம ராஜ்ய சுபிக்ஷம், புஷ்பக விமானம், ஆர்யபட்டரின் விண்வெளி ஆராய்ச்சி போன்ற பண்டைக்கால சிறப்பைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். நிகழ்கால மேன்மைதான் நம்முடைய சிறப்பை பறை சாற்றும். ஐயாயிரம் ஆண்டுகள் முன் இந்திய சமுதாயத்தின் உயர்வையும், பண்டைத்தமிழரின் சாதனையையும் எவ்வளவு காலம்தான் பேசி மார் தட்டுவது! மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் விவேகமும் அடக்கமும் வேண்டும்.

இப்போதுள்ள கல்வி முறை சுயதொழில் செய்யவும் சொந்தக் காலில் நிற்கவும் வலிமை தராது. சுயமாக தொழில் துவங்குவதற்கான நம்பிக்கையை இளைஞர்களிடம் ஊட்டுவதாக இல்லை. முக்கால்வாசி இளைஞர்கள் எந்த ஒரு பணிக்கும் சரியாக பயிற்சி பெறுவதில்லை என்று வேதனைப்படுகிறார் இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி.
பாடங்களை மனப்பாடம் செய்து ஒப்பிப்பதாலும் புரியாமல் தேர்வில் அப்படியே எழுதுவதாலும் சுயசிந்தனை வளராது. சுயதொழில் செய்யவும் சொந்தக் காலில் நிற்கவும் வலிமை தராது.
எந்த ஒரு சீர்திருத்த முயற்சி எடுத்தாலும் குறுக்குசால் ஓட்ட பலர் கிளம்பிவிடுவார்கள். குறை சொல்பவர்க்கு பஞ்சமில்லை. இதையும் மீறி நல்லதோர்பள்ளிக் கல்வித் திட்டம் உருவாவது அற்புதம். வெளிப்படைத் தன்மை, விரைவான தீர்வு இவை இரண்டும் அரசுப் பணிகளில் நடை முறைக்கு வந்தால் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். பள்ளித் தேர்வு முடிவுகள் கைபேசி மூலம் தேர்வர்களுக்கு அளிக்கப்பட்டது மகிழ்ச்சிகரமான மாறுதல். தரமான கல்விக்கு அடிப்படை நல்லாசிரியர்கள். ஆசிரியர் தேர்வு துரிதப்படுத்தப்பட்டுள்ளது.பள்ளி மாணவ மாணவியருக்கு மடிகணினி வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு ரூ.30.54 கோடி செலவில் 24,630 மடிகணினிகள் வழங்கப்பட்டுள்ளன. இது தவிர பாடப் புத்தகம் , கணினி உபகரணங்கள், காலணிகள், மிதிவண்டிகள் என்று பதினான்கு வகையான உதவி பொருட்கள் வழங்குவதோடு, மேல்நிலைக் கல்வி இடைநிற்றலை தவிர்த்திட சுமார் 22,000 மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுகளில் பங்குகொள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் 412 மையங்கள் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் 25% தனியார் பள்ளிகளில் சேர்க்கை உறுதி செய்ய இணையம் வழியாக கணகாணிக்கப்பட்டு சுமார் ஒரு லட்சம் குழந்தைகள் பயனடைந்துள்ளனர் .
கல்வி செயலர் உதயசந்திரன் மேற்பார்வையில் பாடத்திட்டம் சீரமைக்கும் பணி மிக சிறப்பாக, அமைதியாக நடைபெற்று வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது நடைமுறைக்கு வருகையில் நாட்டில் உள்ள எல்லா பாடத்திட்டங்களைவிட உய்ர்ந்ததாக அமையும் என்பது உறுதி.
உயர்கல்வி சேர்க்கையில் 44% எய்தி இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்குவதில் நாம் பெருமை கொள்ளலாம். இந்தியாவில் சராசரி விகிதம் 24.5%. மாவட்டந்தோறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதன் விளைவுதான் இது என்பதில் சந்தேகமில்லை. 583 பொறியியல் மற்றும் 1464 கலை அறிவியல் கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளன.
உயர்கல்வி உலகத் தர வரிசையில் இடம் பெற இந்திய அரசு இருபது அரசு கல்விக்கூடங்களை, தெரிவுசெய்து அடுத்த பத்தாண்டுகளில் பத்தாயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யும் திட்டம் அறிவித்துள்ளது. கல்விக் கூடங்களைத் தெரிவுசெய்ய மேனாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபாலசாமி தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது. ஒவ்வொரு மாநிலமும் விண்ணப்பித்து நிதி ஆதாரம் பெற தமது தகுதியை நிரூபிக்க வேண்டும். கல்லாதார் இல்லாதார் நாடு என்ற இலக்குடன் மக்கள்தொகையில் 83% படிப்பறிவு எட்டிய தமிழகம், உயர் கல்வியில் உலகத் தர வரிசையில் இடம் பெற முயற்சிக்க வேண்டும்.

கட்டுரையாளர்: ஆர்.நடராஜ் (Ex DGP)
தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்
Share:

Labels

Blog Archive

Unordered List

Definition List