Sunday, May 6, 2018

தனியார் வெடிமருந்து ஆலைக்கு ஆதரவாக செயல்படும் DSP? காவல்துறையினர் தாக்கியதில் இளைஞர் படுகாயம்!திருச்சி மாவட்டம் துறையூர் அருகே காவல்துறையினரால் விசாரணைக்கென்று அழைத்துச் செல்லப்பட்ட நபர் போலீசாரின் கடுமையான தாக்குதலின் விளைவால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த உப்பிலியபுரம் T.முருங்கபட்டி பகுதியில் இயங்கிவந்த தனியார் வெடிமருந்து தொழிற்சாலையில் கடந்த 2016 டிசம்பரில் நிகழ்ந்த வெடி விபத்தில் 19 ஊழியர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். இதையடுத்து அந்த வெடிமருந்து தொழிற்சாலையின் உரிமையாளர் உள்ளிட்ட 5 நபர்களைக் காவல்துறையினர் கைது செய்து தொழிற்சாலைக்கும் சீல் வைத்தனர்! மேலும் மத்திய அரசும் தொழிற்சாலைக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில் சமீபகாலமாக மேற்குறிப்பிட்ட தொழிற்சாலை மீண்டும் ரகசியமாக செயல்படத் துவங்கிய நிலையில் "வெடிவிபத்தில் உயிரிழந்த 19 பேரின் குடும்பத்திற்க்கும் இழப்பீடு முழுமையாக கிடைக்காததாலும், மேலும் தொழிற்சாலையின் உரிமம் ரத்து செய்யப்பட்ட நிலையில் முறைகேடாக செயல்படும் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட கோரி T. முருங்கப்பட்டி சுற்றுவட்டார பொது மக்கள் "கடந்த மே 1 ம் தேதி நடந்த கிராமசபைக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி " தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஆலையின் உரிமையாளர்கள் போராட்டக்குழுவைச் சேர்ந்த சிலர் மீது முசிறி காவல்துறை துணைக் கண்காணிப்பாளரிடம் புகாரளித்துள்ளனர். முசிறி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் நேரடி மேற்பார்வையில் துறையூர் காவல் ஆய்வாளர் தலைமையிலான குழு நேற்று 5/5/18 அதிகாலை நான்கு மணியளவில் வெடிமருந்து தொழிற்சாலை எதிர்ப்பு போராட்டக் குழுவினரை கைது செய்ய தேடிச்சென்ற போது போராட்டக்குழு தலைமறைவாகியுள்ளனர். அப்போது அந்த வழியாக சென்ற " கிருஷ்ணகுமார் வயது 38 த/பெ ராமச்சந்திரன்" என்பவரை வலுக்கட்டாயமாக போலீஸ் ஜீப்பிலேற்றி துறையூர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்ற காவல்துறையினர் அங்கு வைத்து கடுமையாக தாக்கியதாக தெரிகிறது!

இதற்கிடையில் கிருஷ்ணகுமாரை போலீஸ் அழைத்துச் சென்ற தகவல் தீயாக பரவியதையடுத்து அதிகாலை 5 மணியிலிருந்து சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபட்ட தகவலையறிந்த காவல்துறையினர் காலை 9 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். கிருஷ்ணகுமாரை காவல்துறையினர் விடுவித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று போராட்டக்குழு தீர்மானமாக கூறியதையடுத்து நேற்று மதியம் 1 மணியளவில் கிருஷ்ணகுமார் காவல்நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார்.எனினும் காவல்துறையினர் பலமாக தாக்கியதில் காயமடைந்த கிருஷ்ணகுமார் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, முதலுதவி சிகிச்சையளிக்கப்படு மேல் சிகிச்சைக்காக திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது பற்றி அந்த பகுதி மக்களிடம் பேசிய போது அரசாங்கம் வெடி மருந்து தொழிற்சாலைக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்துள்ள நிலையில், காவல்துறையினர், மற்றும் வருவாய்த்துறையினரின் பங்களிப்போடு மீண்டும் செயல்பட ஆரம்பித்ததை கண்டித்து மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் தான் நாங்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஆனால் காவல்துறை எங்களின் நியாயமான கோரிக்கையை மதித்து நடவடிக்கை எடுக்காமல் போராடும் எங்கள் மீது வழக்குப் பதிவு செய்து, மிரட்டி எங்களுடைய போராட்டத்தை நீர்த்துப் போக முயற்சிக்கின்றனர். முசிறி காவல் கண்காணிப்பாளர் இது போன்ற முறைகேடான வெடிமருந்து ஆலைகளின் உரிமையாளர்களுக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்படுவாரேயானால் எங்கள் கிராம மக்களை ஒன்று திரட்டி திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு "தீக்குளிக்கும்" போராட்டத்தில் ஈடுபடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்று கூறினார்கள்.

For more details https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/trichy-protest
Share:

Labels

Blog Archive

Unordered List

Definition List