Saturday, May 5, 2018

#NEET_2018 ! கற்றுத்தந்ததும், கற்றுக் கொள்ள வேண்டியதும்!

ad300
Advertisement


நீட் தேர்வில் மாணவர்கள் ஏன் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டனர், மாணவர்கள் அலைக்கழிக்கப்பட்டனரா? என்ன காரணத்தால் வெளி மாநிலங்களுக்குச் சென்றார்கள், தமிழக மாணவர்களை வஞ்சிக்க நடந்ததா?

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் நீட் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியா முழுவதிலும் இருந்து 13 லட்சத்து 26 ஆயிரத்து 725 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்கள் இந்தியா முழுவதும் உள்ள 136 நகரங்களில் 2,255 மையங்களில் நீட் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வினை 5 லட்சத்து 80 ஆயிரத்து 648 மாணவர்களும், 7 லட்சத்து 46 ஆயிரத்து 76 மாணவிகளும், திருநங்கையர் ஒருவரும் விண்ணப்பித்துள்ளனர். இந்தத் தேர்வினை எழுதுபவர்களில் இந்தியர்கள் 13 லட்சத்து 23 ஆயிரத்து 672 பேரும், ஓ.சி.ஐ.பிரிவில் 530 பேரும். வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவில் 1,842 பேரும், வெளிநாட்டினர் 621 பேரும், பி.ஐ.ஓ.பிரிவில் 60 பேரும் தேர்வினை எழுதுவதற்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்தியாவிலேயே அதிகமாக மகாராஷ்டிராவில் 345 மையங்களில் 1 லட்சத்து 83 ஆயிரத்து 961 மாணவர்களும், கேரளாவில் 226 மையங்களில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 792 மாணவர்களும், கர்நாடகாவில் 187 மையங்களில் 96, 377 மாணவர்களும், உத்தரப் பிரதேசத்தில் 171 மையங்களில் 1,14,306 மாணவர்களும், தமிழகத்தில் 170 மையங்களில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 288 மாணவர்களும், ராஜஸ்தானில் 150 மையங்களில் 99,844 மாணவர்களும், குஜராத்தில் 138 மையங்களில் 75,167 மாணவர்களும் பதிவு செய்துள்ளனர். குறிப்பாக மிகவும் குறைவாக லட்சத்தீவில் 1 மையத்தில் 197 மாணவர்கள் தேர்வினை எழுத உள்ளனர் என அதில் கூறப்பட்டுள்ளது.

நீட் தேர்வை தமிழகத்தில் வலுக்கட்டாயமாக அறிமுகம் செய்ததும், மாநில வழிப்பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் அரசியல்வாதிகள் அளித்த வாக்குறுதியை நம்பி நீட் வராது என நினைத்த மாணவர்கள் உரிய பயிற்சியும் இல்லாததால் தோல்வி அடைந்தனர்.

நீட்டிலிருந்து தமிழகத்துக்கு விலக்கு என்பது எட்டாக்கனியான பிறகு தாமதமாக விழித்துக்கொண்ட பள்ளிக் கல்வித்துறை அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான பயிற்சி மையத்தை அறிவித்தது. தனியார் பள்ளியில் பயில்வோரும் வசதி படைத்தோரும் லட்சக்கணக்கில் கட்டி தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி எடுத்தனர்.

இதில் கவனிக்கவேண்டிய முக்கியமான அம்சம் தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றோரில் நூற்றுக்கணக்கானோர் வெளிமாநிலங்களில் தேர்வு எழுதுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். இப்படி அனுப்பப்பட்டவர்கள் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களோ, அல்லது சிபிஎஸ்இ தன்னிச்சையாக மையம் ஒதுக்கப்பட்டவர்களோ கிடையாது.

வேறு மாநிலங்களில் மையத்தை ஒதுக்காமல் தமிழகத்திலேயே சிபிஎஸ்இ மையங்களை ஒதுக்கி இருக்க வேண்டும். அதற்கு தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். அதே போல் மாணவர்கள் அடுத்த மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டதில் அவர்களுக்கான அலைச்சல், மன உளைச்சல், உடல் ரீதியாக பாதிக்கப்படுவதை மாநில அரசும், சிபிஎஸ்இ நிர்வாகமும் கவனித்திருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

அதே நேரம் இதில் பெரிதாக பெரிதுபடுத்திக் காட்டப்பட்டதையும் விளக்கி ஆகவேண்டும். எதனால் இந்த நிலை ஏற்பட்டது, அடுத்த ஆண்டு இதை களைய என்ன செய்ய வேண்டும் என்பதையும் கவனிக்க வேண்டும். வசதியாக அனைத்து நிலைக்கும் காரணம் சிபிஎஸ்இ தான் என்று கைகாட்டி விட்டு மாநில அரசு தப்பித்து விடக்கூடாது.

சிபிஎஸ்இ தேர்வை நடத்தும் முனைப்பில் இவ்வாறு நடந்தாலும் அது நடைமுறைக்காக கடைபிடிக்கப்படும் விஷயம், ஆனால் மாநில அரசின் பொறுப்பின்மையும், கூடுதல் மாணவர்கள் பங்கேற்பை கண்காணிகாததும் தான் காரணம் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

ஏன் இப்படி ஒரு நிலை ஏற்பட்டது என்பதை பார்ப்போம். தமிழகத்தில் இந்த ஆண்டு 1,07,480 மாணவ்ர்கள் நீட் தேர்வினை எழுதுகின்றனர். 2017 ம் ஆண்டு தமிழகத்தில் மொத்தமாக 149 நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இதில் விண்ணப்பித்திருந்த 82,272 மாணவர்கள் தேர்வெழுதினர். இந்த ஆண்டு இதை விட 10 சதவீத மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பிப்பார்கள் என தமிழக அரசு நினைத்தது.

இதனால் தமிழகத்தில் 90,000 மாணவர்கள் நீட் தேர்வெழுதலாம் என முடிவு செய்து 170 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. ஆனால் பத்து சதவீத எதிர்பார்ப்பைத்தாண்டி இந்த ஆண்டு 1 லட்சத்து 7 ஆயிரத்து 480 மாணவர்கள் விண்ணப்பித்தினர். இது கடந்த ஆண்டை விட சுமார் 25,206 மாணவர்கள் அதிகம். அதாவது கடந்த ஆண்டை விட 31 சதவீதம் மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பம் செய்தனர்.

90 ஆயிரம் மாணவர்களுக்காக 170 மையங்கள் ஒதுக்கப்பட்டதில் சென்னையில் 49 மையங்களில் 33,842 மாணவர்களும், கோயம்புத்தூரில் 32 மையங்களில் 15,960 மாணவர்களும், மதுரையில் 20 மையங்களில் 11,800 மாணவர்களும், நாமக்கல்லில் 7 மையங்களில் 5,560 மாணவர்களும்,சேலத்திலும் 26 மையங்களில் 17,461 மாணவர்களும், திருச்சிராப்பள்ளியில் 12 மையங்களில் 9,420 மாணவர்களும், திருநெல்வேலியில் 10 மையங்களில் 4,383 மாணவர்களும், வேலூரில் 14 மையங்களில் 9 ஆயிரத்து 54 மாணவர்களும் என 1 லட்சத்து 7 ஆயிரத்து 480 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இதனால் கூடுதல் மையங்களை ஒதுக்க வேண்டிய நிலைக்கு சிபிஎஸ்இ ஆளானது. முன் கூட்டியே இந்த நிலை வரும் என தெரிந்து மாநில அரசு சிபிஎஸ்இ நிர்வாகத்துடன் பேசி கூடுதல் மையங்களை ஒதுக்க கேட்டிருக்க வேண்டும். இந்த நேரத்தில் சிபிஎஸ்இ தனது சொந்த பொறுப்பில் சொந்த ஊழியர்களை வைத்து தேர்வை நடத்துவதால் கூடுதல் இடங்களை ஒதுக்க வாய்ப்பில்லை என மறுத்து விட்டது.

இதன் விளைவே கூடுதல் மாணவர்களில் குறிப்பிட்ட சதவிதத்தினர் அண்டை மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உருவானது. இதில் அரசுப் பள்ளிகளில் படித்து நீட் தேர்வு எழுத உள்ள மாணவர்களில் வெளிமாநிலங்களுக்கு 39 மாணவர்கள் மட்டுமே செல்கின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இருந்து 3 மாணவர்கள் கர்நாடகா மைசூருக்கும், 1 மாணவர் பெங்களூருக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 மாணவர்கள் திருவனந்தபுரத்திற்கும், ராமநாதபுரத்தில் இருந்து 1 மாணவர் எர்ணாகுளத்திற்கும், திருவாரூரில் இருந்து 2 மாணவர்கள் கொல்லத்திற்கும், திருநெல்வேலியில் இருந்து 5 மாணவர்கள் எர்ணாகுளம், திருவனந்தபுரத்திற்கும், திருச்சிராப்பள்ளியில் இருந்து 17 மாணவர்கள் திருவனந்தபுரத்திற்கும் என 39 மாணவர்கள் செல்கின்றனர் என பள்ளிக் கல்வித்துறையின் கணக்கெடுப்பில் தெரிவித்துள்ளது.

மொத்தம் 5800 மாணவர்கள் பிற மாநிலங்களில் தேர்வெழுதச் செல்கின்றனர். இதில் 5371 மாணவர்கள் எர்ணாகுளம் மையத்திலும், 129 மாணவர்கள் கொல்லம் மையத்திலும் தேர்வு எழுதுகின்றனர். தர்மபுரி, ஓசூர், ஈரோடு பகுதியைச் சேர்ந்த 190 மாணவர்கள் கர்நாடகாவுக்கும், சென்னை, வேலூர், கிருஷ்ணகிரி 110 மாணவர்கள் ஆந்திராவுக்கும் தேர்வெழுதச் செல்கின்றனர்.

ராஜஸ்தான் மற்றும் சிக்கிமுக்குச் செல்லும் மாணவர்கள் தனியார் பயிற்சி மையத்தில் பயின்று அவர்கள் விருப்பத்தின் பேரில் தேர்வு மையம் தேர்வு செய்யப்பட்டு அங்கு தேர்வெழுதச் செல்வதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மாணவர்கள் அலைக்கழிக்கப்பட்டது போன்று அடுத்த ஆண்டு மாணவர்கள் அலைக்கழிக்கப்படாமல் இருக்க கூடுதல் மையங்களை அமைக்கவும் மாணவர்கள் எண்ணிக்கை கூடுதலானால் அதற்கு தகுந்தாற்போல் மையங்கள் தயாராக அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே பெற்றோரின் எதிர்பார்ப்பு.
Share This
Previous Post
Next Post

Pellentesque vitae lectus in mauris sollicitudin ornare sit amet eget ligula. Donec pharetra, arcu eu consectetur semper, est nulla sodales risus, vel efficitur orci justo quis tellus. Phasellus sit amet est pharetra