Tuesday, May 8, 2018

Sve சேகரை கைது செய்ய தாமதிப்பதேன்? உயர்நீதிமன்றம் கண்டனம்!

ad300
Advertisement


மே 3

பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக கருத்து தெரிவித்த நடிகர் எஸ்.வி. சேகருக்கு எதிரான வழக்கில் பாரபட்சம் காட்டுவது ஏன்? என்று காவல்துறையினருக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ராமதிலகம் கேள்வி எழுப்பினார்.

செய்தியாளர்கள் சந்திப்பின் போது, பெண் செய்தியாளரின் கன்னத்தில் தட்டிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் செயலை நியாயப்படுத்தி, நடிகரும், பா.ஜ.க. பிரமுகருமான எஸ்.வி.சேகர், தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக ஒரு பதிவை வெளியிட்டார். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்ததால் உடனடியாக அப்பதிவை அவர் நீக்கிவிட்டார். ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் எஸ்.வி. சேகருக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

இந்நிலையில், தான் வெளியிட்ட கருத்துக்காக எஸ்.வி. சேகர் மன்னிப்பு கேட்டார். ”மன வருத்தம் ஏற்பட்டுள்ள பத்திரிக்கை சகோதரிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அப்பதிவு தன்னுடைய கருத்து அல்ல. முகநூலில் உள்ள நண்பர் ஒருவர் பதிவு செய்திருந்ததை படிக்காமல் பார்வார்டு செய்து விட்டேன். அதுதான், தான் செய்த தவறு” என்று அவர் விளக்கம் கொடுத்தார்.

இதற்கிடையில், எஸ்.வி. சேகருக்கு எதிராக பத்திரிக்கையாளர்கள் நல பாதுகாப்பு சங்கம் கொடுத்த புகாரின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவில் எஸ்.வி. சேகருக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ், இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் முன் ஜாமீன் கேட்டு நடிகர் எஸ்.வி. சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், பெண்ணினத்தையோ, குறிப்பாக பத்திரிக்கை சமூகத்தையோ அவமதிக்கும் உள்நோக்கமோ, குற்ற எண்ணமோ எள்ளளவும் தனக்கு கிடையாது. சமூக வலைத்தளங்களில் வரும் செய்தியை பொதுத்தளத்தில் பகிரும் பழக்கத்தினால், சம்பந்தப்பட்ட செய்தியையும் பார்வார்டு செய்ததை தவிர, வேறு எந்த தவறும் செய்ய வில்லை. எனவே, தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என கேட்டிருந்தார் .

இந்த வழக்கு கோடை விடுமுறைகால நீதிமன்றத்தில் நீதிபதி ராமத்திலகம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் நடைபெற்ற வாதத்தின் விவரம் வருமாறு :

எஸ்.வி.சேகர் தரப்பு : மனுதாரர் தான் போட்ட பதிவை உடனடியாக நீக்கிவிட்டார். இவ்வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடை மனுக்களுக்கு பதிலளிக்கும் வரை, மனுதாரருக்கு சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும். அவரை கைது செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும். மனுதாரரின் செயலில் எந்த குற்றமும் இல்லை.

நீதிபதி : சட்டப் பாதுகாப்பு மனுதாரருக்கா? அல்லது புகார்தாரருக்கு வேண்டுமா?

ஆட்சேபனை மனுதாரர்கள் தரப்பு : சேகர் வீட்டு முன்பு போராட்டம் நடத்திய பத்திரிகையாளர்கள் கைதாகி விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தான் தவறே செய்யவில்லை எனக்கூறும் சேகர் தலைமறைவாகியுள்ளார். பத்திரிக்கையாளர்கள் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த பெண் சமூகத்தையும் கேவலப்படுத்தும் வகையில் கருத்து பதிவிட்டிருக்கிறார். முன்ஜாமீனை நிராகரிக்க வேண்டும். இன்றே அவர் சரணடைய உத்தரவிட வேண்டும். அவர் செயலில் தவறில்லை என்றால் ஏன் நீதிமன்றத்தை நாடினார். விசாரணையை சந்திக்க வேண்டியதுதானே.

எஸ்.வி.சேகர் தரப்பு : மனுதாரருக்கு எதிரான செயல்களால் 84 வயதான அவரது தாயார் மனவேதனை அடைந்துள்ளார்.

எதிர்மனுதாரர்கள் : அவர் தாயார் மட்டும் பெண் அல்ல. பல பெண்கள் இவரது பதிவால் மன உளைச்சல் அடைந்துள்ளனர். ஊடகம், அலுவலகம் என பல இடங்களில் பெண்கள் பணிபுரிகின்றனர். ஏன் தலைமைச் செயலாளர் கூட பெண்தான். யாரோ ஒருவர் போட்ட பதிவை மறுபதிவு செய்ததற்கான ஆதாரங்கள் தெளிவாக உள்ளது. சேகருக்கு எதிராக பல புகார்கள் கொடுக்கப்பட்டாலும், தலைமைச் செயலாளர் தலையீட்டால் இன்னும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. பத்திரிக்கையாளர்களிடம் நடந்து கொண்ட ஆளுனரின் செயல்பாடே கண்டிக்கத்தக்கது. அது தொடர்பாக அவர் அளித்த விளக்கம் ஏற்கப்படாத நிலையில், அதையொட்டிய சேகரின் செயல் அநாகரீகமானது.

எஸ்.வி.சேகர் தரப்பு : அவர் மீதான வழக்குகளில், இபிகோ 504 (உள்நோக்கத்தோடு இழிவுபடுத்துதல் ) இபிகோ 509 (பெண்களை இழிவுபடுத்துதல்) பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு 8 ஆகியவை ஜாமீனில் வெளிவரக்கூடியதாகும். இபிகோ 505(1)(C)- (ஒரு பிரிவினரை வன்முறைக்கு தூண்டி விடுதல்) மட்டும் ஜாமீனில் வெளிவர முடியாத குற்றப்பிரிவாகும். அதுவும் ஒரு சமூகத்தை மற்றொரு சமூகத்திக்கு எதிராக தூண்டிவிட்டு, சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் மட்டுமே செல்லும். அதனடிப்படையில் சேகரின் செயல்பாட்டில் தவறே இல்லை. அவரது பதிவு தவறானது என சிலர் அறிவுறுத்தியதுடன் உடனடியாக நீக்கிவிட்டார். ஆகவே, இவ்வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட இடை மனுக்களை தள்ளுபடி செய்து முன்ஜாமீன் வழங்க வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுகிறோம்.

இடை மனுதாரர்கள் : மறுபதிவு செய்து பின்னர் நீக்கியதை மனுதாரர் ஒப்புக் கொண்டுள்ளார். மறுபதிவு செய்ததே குற்றம். அதனடிப்படையில்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எஸ்.வி.சேகரை தலைமை செயலாளர்தான் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். இதுபோன்ற கருத்துக்களை பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்ட மனுதாரர், பெண்களுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டிருக்கிறார். சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படவில்லை என்பதற்காக சட்டப் பிரிவை தனக்கு சாதகமாக பயன்படுத்த முடியாது. சமூகத்தில் அந்த கருத்து என்ன தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதைதான் பார்க்க வேண்டும். ஊடகத்தினர் மீது நள்ளிரவில் நடவடிக்கை எடுத்தவர்கள் சேகர் மீது இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. என்ன விசாரணை நடந்துள்ளது என்பதை போலீசார் தெரிவிக்க வேண்டும்.

காவல்துறை தரப்பு : புலன் விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது. அசல் பதிவை கேட்டு ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம்.

நீதிபதி : இதேபோன்ற குற்றச்சாட்டு மற்ற பொதுமக்களுக்கு எதிராக வரும்போது எடுக்கப்படும் நடவடிக்கைக்கும், சேகர் மீதான புகாருக்கும் பாரபட்சம் காட்டப்படுகிறது? போராட்டத்தில் ஈடுபட்ட ஊடகத்தினரை கைது செய்யும்போது, சேகர் மீது ஏன் வேறு விதமாக கையாளப்படுகிறது?

இவ்வாறு வாதம் நடைபெற்றது. அதன்பின்னர், இவ்வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி எஸ். ராமத்திலகம் தள்ளி வைத்தார்.
Share This
Previous Post
Next Post

Pellentesque vitae lectus in mauris sollicitudin ornare sit amet eget ligula. Donec pharetra, arcu eu consectetur semper, est nulla sodales risus, vel efficitur orci justo quis tellus. Phasellus sit amet est pharetra