Saturday, June 30, 2018

கேரளா மாணவி கற்பழிப்பு😓! ஐஏஎஸ் அதிகாரி உடந்தையா 😨?

கேரளா மாணவி கற்பழிப்பு😓! ஐஏஎஸ் அதிகாரி உடந்தையா 😨?


பெங்களூருவில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரியின் வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த ஒரு தம்பதியின் மகள் பெங்களூருவில் உள்ள கல்லூரியில் படித்தார். அப்போது அந்த மாணவிக்கும், பெங்களூருவை சேர்ந்த தொழில் அதிபரின் மகனுமான நஜீர்கான் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களது காதலுக்கு இருவரது பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பின்னர் அந்த மாணவியை கடந்த ஜனவரி மாதம் நஜீர்கான் மதம் மாற்றியதாகவும், மாணவியை அவர் கற்பழித்ததாகவும் கூறப்படுகிறது. அதன்பிறகு அவர்கள் 2 பேரும் சவுதி அரேபியாவுக்கு சென்றார்கள். சவுதி அரேபியாவில் அந்த இளம்பெண்ணை சில வசதிபடைத்தவர்கள் கற்பழித்ததாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக இளம்பெண் கொச்சியில் வசிக்கும் பெற்றோரிடம் கூறினார். அவர்கள் தேசிய புலனாய்வு அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார்கள். அதன்பேரில், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். சவுதி அரேபியாவில் இருந்து இந்தியாவுக்கு திரும்பிய நஜீர்கானையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இளம்பெண் நஜீர்கானுடன் பெங்களூருவுக்கு வந்தபோது கர்நாடகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி இர்ஷாத் கானின் மனைவி பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் 15 நாட்கள் இளம்பெண்ணை தங்க வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் இளம்பெண்ணை நஜீர்கான் காதலித்து கற்பழித்தது, மதம் மாற்றியது, சவுதி அரேபியாவுக்கு அழைத்து சென்றது ஆகியவற்றுக்கும் இர்ஷாத் கானின் மனைவி உதவியதாகவும் தெரிகிறது.

எனவே அவருக்கு இச்சம்பவத்தில் தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இளம்பெண்ணின் பெயரில் இர்ஷாத் கானின் மனைவி முகநூலில் (பேஸ்புக்) புதிய கணக்கு தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, பெங்களூருவில் உள்ள இர்ஷாத் கானின் வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தியதுடன், அவரது மனைவியிடமும் விசாரணை மேற்கொண்டு தகவல்களை பெற்றனர். ஐ.ஏ.எஸ். அதிகாரி மனைவியின் செல்போன்கள், மடிக்கணினிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கர்நாடக ஐ.ஏ.எஸ். அதிகாரியான இர்ஷாத் கான், கலபுரகியில் வணிக வரித்துறை கமிஷனராக இருந்து வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து நேற்று இர்ஷாத் கான் நிருபர்களிடம் கூறுகையில், “கேரள இளம்பெண்ணை பெங்களூரு தொழில் அதிபரின் மகன் காதலித்து திருமணம் செய்ததற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனது மனைவி சமூகசேவையில் ஈடுபட்டு வருகிறார். அதனால் இளம்பெண் மற்றும் நஜீர்கானின் காதலுக்கு உதவி செய்திருக்கலாம். இதுதொடர்பாக எனது வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தியது உண்மை தான். எனது மனைவியிடம் விசாரித்து சில தகவல்களை அதிகாரிகள் பெற்றுச் சென்றுள்ளனர்” என்றார்.

கர்நாடக ஐ.ஏ.எஸ். அதிகாரி வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்திய சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

"காவிரி விவகாரம்" கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு!

"காவிரி விவகாரம்" கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு!


நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது தவறு என்று கர்நாடக நீா்வளத் துறை அமைச்சா் டி.கே.சிவக்குமார், சனிக்கிழமை தெரிவித்தார்.

பெங்களூரு, விதான சௌதாவில் காவிரி தொடா்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

காவிரி தொடா்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விரிவான விவாதம் நடத்தப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதால் கா்நாடகத்துக்கு ஏற்படும் சாதக, பாதகங்கள் ஆராயப்பட்டன.

உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பால் சிலவற்றில் கா்நாடகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. மேலாண்மை ஆணையம் அமைப்பதற்கு முன் கா்நாடகத்தின் நிலைப்பாட்டை தெரிவிக்க இதுவரை வாய்ப்புத் தரப்படவில்லை. ஆனால், காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அவசர கதியில் அமைத்து விட்டது. இது ஒருதலைப்பட்சமான முடிவென்பதை அப்போதே தெரிவித்திருந்தோம்.

ஜூலை 2-ஆம் தேதி நடைபெறும் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கா்நாடக பிரதிநிதி கலந்துகொள்ளும் வகையில் நீா்வளத்துறைற முதன்மைச் செயலாளா் ராகேஷ்சிங்கை நியமித்துள்ளோம். அதேபோல, காவிரி ஒழுங்காற்றுக் குழுவுக்கு கா்நாடக அரசின் பிரதிநிதியாக காவிரி நீா்ப்பாசன நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் பிரசன்னகுமாரை நியமித்துள்ளோம்.

சட்ட வல்லுநா்களின் ஆலோசனையின் பேரில் உச்ச நீதிமன்றறத்தில் தொடரப்பட்ட மூல வழக்கை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடிவெடுக்கப்பட்டது. இந்த வழக்கு எத்தகையது என்பதை சட்ட வல்லுநா்கள் முடிவு செய்வார்கள்.

கா்நாடகத்தை சோ்ந்த 40 மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள் அனைவரும் நாடாளுமன்றறத்தில் காவிரி மேலாண்மை ஆணைய பிரச்னையை கிளப்ப முடிவு செய்யப்பட்டது. இதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் போராட தீா்மானித்துள்ளன என்றார்.

மீண்டும் வில்லங்கமான "காவிரி விவகாரம்" ? விடுதலையாவாளா "காவிரித்தாய்?

மீண்டும் வில்லங்கமான "காவிரி விவகாரம்" ? விடுதலையாவாளா "காவிரித்தாய்?


காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர்ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர கர்நாடக அரச சார்பில் இன்று நடத்தப்பட்ட அனைத்துக்கட்சிக் கூட்சத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்றுக்குழுவில் தங்களிடம் ஆலோசிக்காமல் உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்ததை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட உள்ளது.

தவறவிடாதீர்

சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.2.71 காசு உயர்வு: நள்ளிரவு முதல் அமல்

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் இறுதித்தீர்ப்பு வழங்கியது. அதில் கர்நாடகத்துக்கு ஏற்கனவே இருந்த அளவில் 14 டிஎம்சி உயர்த்தி 284.75 டிஎம்சி நீரும், தமிழகத்துக்கு 419 டிஎம்சி என்ற அளவில் இருந்து 404.2 டிஎம்சியாகவும் குறைக்கப்பட்டது. கேரளாவுக்கு 30 டிஎம்சி, புதுச்சேரிக்கு 7 டிஎம்சி நீரில் மாற்றம் செய்யவில்லை.

அதன்படி பல்வேறு தாமதங்களுக்குப் பின், மத்திய அரசு இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு, காவிரி மேம்பாட்டு ஆணையம், காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக்குழுவை அமைத்து.

இதில் காவிரி மேலாண்மை ஆணையத்துக்குத் தலைவராக மசூத் ஹூசைன் நியமிக்கப்பட்டுள்ளார். காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழுவுக்கு தலைவராக நீர்மேலாண்மைஅமைப்பின் தலைமை பொறியாளர் நவின் குமார் நியமிக்கப்பட்டார்.

தமிழகம்,கேரளம்,புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் தங்களின் உறுப்பினர்களை அறிவித்த நிலையில், கர்நாடகம் மட்டும் அறிவிக்கவில்லை. இருப்பினும், மத்திய அரசு தாமாகவே கர்நாடக மாநிலத்துக்கு உறுப்பினர்களை நியமித்தது.

காவிரி மேலாண்மை ஆணையத்துக்குத் தலைவர், உறுப்பினர்கள், பகுதி நேர உறுப்பினர்கள் 9 பேர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஆணையத்தின் முதல் கூட்டம் வரும் ஜூலை 2-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதா அல்லதுபுறக்கணிப்பதா, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதா என்பது குறித்து ஆலோசிக்கக் கர்நாடக அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

இந்தக் கூட்டத்துக்கு முதல்வர் எச்.டி. குமாரசாமி தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஜி.பரமேஸ்வரா, எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா, மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், எம்.பி. வீரப்பமொய்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டம் 2 மணிநேரம் நடந்தது.

இந்தக் கூட்டத்துக்கு பின், மாநில நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக சார்பில் எங்கள் அதிகாரிகள் வரும் ஜூலை 2-ம் தேதி நடக்கும் கூட்டத்தில் பங்கேற்பார்கள். அங்கு எங்களின் கருத்துக்களையும், எண்ணங்களையும், மாநிலத்தில் விவசாயிகளையும் பாதுகாக்கும் விஷயத்தையும் அவர்கள் எடுத்துரைப்பார்கள்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் இந்த விவகாரத்தை ஒருமனதாக எழுப்ப அனைத்து எம்பிக்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

மேலும், எங்களைக் கலந்து ஆலோசிக்காமல் காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்றுக்குழுவுக்கு உறுப்பினர்களை மத்தியஅரசு நியமித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு சார்பில் வழக்கு தொடரப்படும்.

இதில் கர்நாடக சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் பாலி எஸ் நாரிமன், மோகன் கதார்கி வாதிடுவார்கள். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் எப்படி அணுகுவது, எந்த அடிப்படையில் அணுகுவது குறித்து அவர்கள் முடிவு செய்வார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

75000 கோடியில் பல்வேறு சாலைகள் விரிவாக்கம்? தமிழக முதல்வர்!

75000 கோடியில் பல்வேறு சாலைகள் விரிவாக்கம்? தமிழக முதல்வர்!


தமிழகத்தில் ரூ.75 ஆயிரம் கோடி மதிப்பில் 19 சாலைகளை விரிவுபடுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்து இருக்கிறார்.

சேலம் விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி,


இந்தியாவில் 2-வது பசுமைவழிச்சாலை திட்டம் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.இதில் அரசுக்கு நல்லபெயர் கிடைத்தும் விடும் என்கிற அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே, மக்களிடம் வெறுப்புணர்வை தூண்டி, எதிர்க்கட்சிகள் பசுமை வழிச்சாலை திட்டத்தினை பூதாகரமாக்குகின்றன.எந்த ஒரு தனி நபருக்காகவும் இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை. ஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் பசுமை வழிச்சாலைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.சென்னையில் இருந்து சேலத்திற்கு அமைக்கப்படும் இந்த பசுமை வழிச்சாலையின் மூலம், சேலம் மட்டுமன்றி, ஈரோடு,கரூர்,கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தொழில் வளம் பெருகும். கேரளாவிற்கு இணைப்பு சாலையாக இந்த சாலை அமையும்.


சென்னையில் இருந்து சேலம் செல்லும் வழித்தடத்தில் தற்போது, 2.57 கோடி வாகனங்கள் சென்று வருகின்றன.பசுமைவழிச்சாலை திட்டம் நிறைவடைய 4 ஆண்டுகள் வரை ஆகும்.அதற்குள்ளாக, இந்த வாகனங்களின் எண்ணிக்கை, மேலும் 70 லட்சம் அதிகரித்து, 3.27 கோடி வாகனங்களாக போக்குவரத்து உயரும் என்பதால், இந்த சாலை அவசியமான ஒன்றாகும். இந்த வழித்தடத்தில் சாலை விபத்தில் 16,224 பேர் உயிரிழந்துள்ளனர். விலை மதிக்க முடியாத உயிரை காக்கும் வகையில், சாலை விபத்துகளை முற்றிலும் தடுக்கும் விதமாக சாலை அமைப்பது அரசின் கடமையாகும். நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சாலை அமைக்கப்படுவதால், வளர்ச்சிக்கேற்ற வகையில், அவற்றை விரிவாக்கம் செய்ய முடியும்.


பசுமை வழிச்சாலையை பொருத்தவரை, இது முழுக்க முழுக்க மத்திய அரசின் திட்டமாகும்.அதற்குத் தேவையான நிலத்தை கையகப்படுத்தி தருவது மட்டுமே மாநில அரசின் பங்களிப்பாகும்.மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம்தான் இந்த திட்டத்தினை செயல்படுத்த உள்ளது. இந்த திட்டம் பயன்பாட்டுக்கு வரும்போது, பெரிய அளவில் லாரி போன்ற கனரக வாகனங்களுக்கு எரிபொருள் மிச்சப்படுத்தப்படும்.


பசுமைவழிச்சாலைக்காக எடுக்கப்படும் நிலங்களின் உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத் தரப்படும்.திமுக ஆட்சியில் சாலை அமைக்கும் பணிக்காக 3,023 கிலோமீட்டர் தூரம் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது வழங்கப்பட்டதை விட தற்போது, நிலங்களின் வழிகாட்டி மதிப்பீடு உயர்த்தப்பட்டு வழங்கப்படுகிறது.தென்னை மரத்திற்கு உரிய இழப்பீடு கிடைக்கும்.


தமிழகத்தில் ஏராளமான வளர்ச்சிப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கைகளை இழந்த ஒருவருக்கு, உயிரிழந்தவரின் கைகளை எடுத்துப் பொருத்தி, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் பெரிய அளவிலான சாதனை செய்யப்பட்டுள்ளது.அந்த மருத்துவர்களை பாராட்டி எந்த சமூக ஆர்வலரும் கருத்து தெரிவிப்பதில்லை.


தமிழகத்தில் 19 சாலைகளை விரிவுபடுத்தி, சாலைகள் அமைத்திட மத்திய அரசு ரூ.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.மேலும், 21 சாலைகளை விரிவாக்கம் செய்திட மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஒட்டுமொத்தமாக, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் பயனடையும் வகையில், 40 சாலைகளை விரிவாக்கம் செய்ய உள்ளோம்.


இந்திய அளவில், தமிழகத்தில் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 46.94 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் உயர்கல்வி பயிலும் நிலையில், அவர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவது அரசின் கடமையாகும். வேலைவாய்பை உருவாக்குவதற்காகவே, சாலை கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுகின்றன என்றார் அவர்.


பேட்டியின் போது, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆகியோர் உடன் இருந்தனர்.

Friday, June 29, 2018

5" பாதிரியார்கள் இடைநீக்கம்?

5" பாதிரியார்கள் இடைநீக்கம்?


கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லாவை சேர்ந்த ஒரு பெண், மலங்கரை ஆர்த்தோடக்ஸ் சிரியன் சபையை சேர்ந்த ஒரு தேவாலயத்தில் பாவ மன்னிப்பு கேட்கச்சென்று, 8 பாதிரியார்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தாய் ஆவார்.
அவர், தனது திருமணத்துக்கு முன்பே, தனது திருச்சபையை சேர்ந்த ஒரு பாதிரியாருடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறி பாவ மன்னிப்பு கேட்டார். அவருக்கு பாவ மன்னிப்பு வழங்கிய பாதிரியார், அப்பெண் கூறியதை அவருடைய கணவரிடம் கூறி விடுவதாக மிரட்டி, அவரை பாலியல் பலாத்காரம் செய்தார்.

அந்த காட்சியை வீடியோ படமாக எடுத்து, மற்றொரு பாதிரியாருக்கு அனுப்பி வைத்தார். அதை வைத்து அந்த பாதிரியாரும் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார். இதுபோன்று மொத்தம் 8 பாதிரியார்கள் அப்பெண்ணை சீரழித்ததாக தெரிகிறது.

இதுதொடர்பாக, அவருடைய கணவர், மலங்கரை ஆர்த்தோடக்ஸ் சிரியன் சபை நிர்வாகத்திடம் புகார் செய்தார். அப்போது, அவருக்கும், நிர்வாகிக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல் அடங்கிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, இந்த சர்ச்சை வெடித்தது.
இதுதொடர்பாக, பெண்ணின் கணவர் கூறியதாவது:–

என் மனைவியை ஒரு பாதிரியார் ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்துச் சென்று சீரழித்துள்ளார். அந்த ஓட்டல் அறை, என் மனைவி பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த ரசீது என் கண்ணில் பட்டதால், அதை வைத்து என் மனைவியிடம் கேட்டபோது, அவர் எல்லாவற்றையும் சொல்லி விட்டார்.

மொத்தம் 8 பாதிரியார்கள் என் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ஆனால், 5 பாதிரியார்கள் பற்றிய ஆதாரம் மட்டுமே என்னிடம் உள்ளது.

இந்த விவகாரத்தை போலீசுக்கு கொண்டு சென்று, திருச்சபையின் புகழை கெடுக்க நான் விரும்பவில்லை. சம்பந்தப்பட்ட அனைத்து பாதிரியார்களும் சபையில் இருந்து நீக்கப்படும்வரை நான் ஓயப்போவதில்லை.
புகாரை வாபஸ் பெறுமாறு சபை நிர்வாகிகளும், செல்வாக்கு படைத்த சிலரும் என்னை வற்புறுத்தி வருகிறார்கள். ஆனால், நான் பணிய மாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கிறிஸ்தவ சபையின் 2 ஆயிரம் ஆண்டு கால வரலாற்றில், பாவ மன்னிப்பு கேட்பதற்காக கூறிய தகவலை பாதிரியார்களே தவறாக பயன்படுத்தியதாக புகார் வந்திருப்பது, இதுவே முதல்முறை என்று கிறிஸ்தவ சபை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, பாலியல் பலாத்கார புகாரில் சிக்கிய 5 பாதிரியார்களும் மலங்கரை ஆர்த்தோடக்ஸ் சிரியன் சபையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் டெல்லி மறைமாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். இதற்கான அறிவிப்பை சபையின் தலைவர் மார்த்தோமா பவுலோஸ் வெளியிட்டுள்ளார்.
பாதிரியார்கள் மீதான புகாரை விசாரித்து, அதில் உண்மை இருந்தால், மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபையின் செய்தித்தொடர்பாளர் பி.சி.இலியாஸ் கூறினார்.

இந்த சபையில் 30 மறைமாவட்டங்கள் உள்ளன. இவற்றில் 7 மாவட்டங்கள், வெளிமாநிலங்களிலும், 3 மாவட்டங்கள் வெளிநாடுகளிலும் உள்ளன. இந்த சபையின் பாதிரியார்கள், திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட அனுமதி உண்டு. நீக்கப்பட்ட பாதிரியார்கள், திருமணம் ஆனவர்களா? இல்லையா? என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

"தமிழக அரசுக்கு விருது" மத்திய அரசு!

"தமிழக அரசுக்கு விருது" மத்திய அரசு!


தாய்மார்கள் இறப்பு விகிதத்தை வெகுவாக குறைத்ததற்காக தமிழகத்துக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருதை டெல்லியில் நடந்த விழாவில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டாவிடம், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று பெற்றுக் கொண்டார்.
விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:–

மக்களுக்கு தரமான மருத்துவ சேவைகளை வழங்குவதில் நாட்டிலேயே தமிழகம் ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. சாதனை சிகரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் தமிழக சுகாதாரத்துறையின் மணிமகுடத்தில் தாய்மார்கள் இறப்பு விகிதத்தை குறைத்ததற்காக வழங்கப்படும் இவ்விருது ஒரு மைல்கல் ஆகும்.
2030–ம் ஆண்டுக்குள் தாய்மார்கள் இறப்பு விகிதத்தை 130 ஆக குறைக்க வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்கை, 2016–17–ம் ஆண்டின் விவரப்படி 62 ஆக குறைத்து இமாலய சாதனையை தமிழகம் புரிந்துள்ளது.

இந்த சாதனைக்கு தமிழகம் விருது பெற்றிருக்கிறது. இதுவரை அடைந்த சாதனைகளை எண்ணி நிறைவடையாமல், இன்னும் எட்ட வேண்டிய சாதனை சிகரத்தை நோக்கி தமிழக சுகாதாரத்துறை தொடர்ந்து பயணிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் பிரீத்தி சுடான், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Thursday, June 28, 2018

2016-2017 ல் அதிகளவில் பணம் பதுக்கிய இந்தியர்கள்? அதிர்ச்சி தகவல்

2016-2017 ல் அதிகளவில் பணம் பதுக்கிய இந்தியர்கள்? அதிர்ச்சி தகவல்


சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் டெபாசிட் செய்த பணத்தின் அளவு 2016ஆம் ஆண்டை விட 2017ஆம் ஆண்டில் 50% அதிகரித்து உள்ளதாக சுவிஸ் வங்கி தெரிவித்துள்ளது.

ஆண்டு வாரியான தரவுகளின் படி 2017-ல் மொத்தமாக வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் பணம் 3 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதாவது 2017-ம் ஆண்டில் மட்டும் 1.46 ட்ரில்லியன் இந்திய மதிப்பில் சுமார் 100 லட்சம் கோடி டெபாசிட் ஆகியுள்ளது. கடந்த 2016-ல் அதற்கு முந்தைய ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியர்களின் டெபாசிட் 45 சதவிகிதம் சரிவு கண்டது. ஆனால், இந்த ஆண்டு நேர்மாறாக டெபாசிட் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டின் தரவுகளின் படி நேரடியாக இந்தியர்கள் சுவிஸ் வங்கியில் வைத்திருக்கும் தொகை சுமார் ரூ.6,891 கோடியாகும். 2006-ம் ஆண்டு இறுதியில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருந்த தொகை மட்டும் ரூ.23 ஆயிரம் கோடியாக இருந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் இது 10-ல் ஒரு பங்கு குறைந்தது.

இந்தச் சாதனை அளவுக்குப் பிறகு சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் அதிகரித்திருப்பது இது மூன்றாவது முறையாகும். 2011-ல் 12 சதவிகிதம், 2013-ல் 43 சதவிகிதம் தற்போது 2017-ல் 50.2 சதவிகிதம் அதிகரித்தது. அதாவது, 2004-ல் 56 சதவிகித அதிகரிப்புக்குப் பிறகு தற்போது 2017-ல் 50 சதவிகிதத்துக்கும் சற்று கூடுதலாக இந்தியர்களின் பணம் சுவிஸ் வங்கி இருப்பில் அதிகரித்துள்ளது.

கருப்புப்பணத்திற்கு எதிராக பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசு கூறி வரும் நிலையில், சுவிஸ் வங்கியின் இந்த தரவுகள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு 2014–ம் ஆண்டு பதவி ஏற்றது முதல் கருப்பு பண பதுக்கலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது.
இது தொடர்பாக சட்டம் கூட கொண்டு வந்தது.

இந்தியர்கள் பெரும்பாலும் சுவிஸ் வங்கிகள் என்று அழைக்கப்படுகிற சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில்தான் கருப்பு பணத்தை பதுக்குகின்றனர். இதுபற்றிய தகவல்களை அறிய முடியாத நிலை இருந்து வந்தது.

இதுதொடர்பாக சுவிட்சர்லாந்து அரசுடன் மத்திய அரசு பேசி ஒப்பந்தம் போட்டது. அதன்படி சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கருப்பு பண பதுக்கல் தொடர்பாக அந்த நாட்டின் மத்திய வங்கியான சுவிஸ் தேசிய வங்கி தாமாக தகவல்களை பரிமாறிக்கொள்கிற நிலை இப்போது வந்து உள்ளது.

இந்த நிலையில் மத்தியில் பாரதீய ஜனதா கூட்டணி அரசு பதவிக்கு வந்த முதல் 3 ஆண்டுகளில் சுவிஸ் வங்கிகளில் கருப்பு பண பதுக்கல் குறைந்தது.
ஆனால் கடந்த ஆண்டு, கருப்பு பணத்துக்கு எதிரான மத்திய அரசின் கடும் நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கருப்பு பண பதுக்கல் 50 சதவீதம் உயர்ந்து 1.01 பில்லியன் சுவிஸ் பிராங்க் (சுமார் ரூ.7 ஆயிரம் கோடி) ஆகி உள்ளது.

சுவிஸ் தேசிய வங்கியின் புள்ளி விவரம் மூலம் அம்பலத்துக்கு வந்து உள்ள தகவல்கள் வருமாறு:–
* சுவிஸ் வங்கிகளில் 2017–ம் ஆண்டில் உலகளவில் குவிக்கப்பட்ட கருப்பு பணத்தின் மதிப்பு 1.46 டிரில்லியன் சுவிஸ் பிராங்க் (சுமார் ரூ.100 லட்சம் கோடி).

* இந்தியர்கள் 2017–ம் ஆண்டில் சுவிஸ் வங்கிகளில் நேரடியாக குவித்த கருப்பு பணம் 999 மில்லியன் சுவிஸ் பிராங்க் (சுமார் ரூ.6 ஆயிரத்து 891 கோடி). நம்பிக்கைக்கு பாத்திரமான நபர்கள் மூலம் குவிக்கப்பட்ட பணம் 16.2 மில்லியன் சுவிஸ் பிராங்க் (சுமார் ரூ.112 கோடி).

* 2016–ம் ஆண்டில் இந்தியர்கள் நேரடியாகவும், நம்பிக்கைக்கு பாத்திரமான நபர்கள் மூலமாகவும் சுவிஸ் வங்கிகளில் குவித்த கருப்பு பணம் 675.8 மில்லியன் சுவிஸ் பிராங்க். இதனுடன் ஒப்பிடுகையில் 2017–ம் ஆண்டு கருப்பு பண பதுக்கல் சுமார் 50 சதவீதம் உயர்வு ஆகும்.

சுவிஸ் வங்கிகளில் 2017–ம் ஆண்டு இந்தியர்கள் குவித்து உள்ள சுமார் ரூ.7 ஆயிரம் கோடிக்கான விவரம்:–

* இந்திய ரூபாயாக சுவிஸ் வங்கிகளில் வாடிக்கையாளர்களின் டெபாசிட்டுகளாக செலுத்தப்பட்டது 464 மில்லியன் சுவிஸ் பிராங்க். (சுமார் ரூ.3,200 கோடி)

* பிற வங்கிகள் மூலமாக சுவிஸ் வங்கிகளில் போடப்பட்ட தொகை 152 மில்லியன் சுவிஸ் பிராங்க் (சுமார் ரூ.1,050 கோடி)

* பங்குகள் உள்ளிட்ட பிற வகைகளில் செலுத்தப்பட்ட தொகை 383 மில்லியன் சுவிஸ் பிராங்க் (சுமார் ரூ.2,640 கோடி)

இவ்வாறு சுவிஸ் தேசிய வங்கி தகவல்கள் கூறுகின்றன.

கருப்பு பணத்துக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் கடந்த ஆண்டில் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கருப்பு பண பதுக்கல் 50 சதவீத அளவுக்கு உயர்ந்து இருக்கிறது.
இந்த புள்ளி விவரங்கள் மத்திய அரசுக்கு அதிர்ச்சியை அளித்து உள்ளது.

இந்தியாவுடன் ஒப்பிடுகையில் பாகிஸ்தானியர்கள் 2017–ம் ஆண்டு சுவிஸ் வங்கிகளில் குவித்து உள்ள கருப்பு பண பதுக்கல் 21 சதவீதம் சரிவு அடைந்து உள்ளது. ஆனால் பண மதிப்பில் பார்த்தால் இந்தியர்கள் பதுக்கியது ரூ.7 ஆயிரம் கோடி என்றால், பாகிஸ்தானியர்கள் அதை பின்னுக்குத்தள்ளி ரூ.7 ஆயிரத்து 700 கோடி குவித்து உள்ளனர்.
இது கவனத்தை ஈர்ப்பதாக அமைந்து உள்ளது.

அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் இடமாறுதலா? ரத்து செய்த உயர்நீதிமன்றம்!

அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் இடமாறுதலா? ரத்து செய்த உயர்நீதிமன்றம்!


அமைச்சா் பரிந்துரையின் பேரில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனை மருத்துவா் மதிவாணனை திருவாடானைக்கு இடமாற்றம் செய்து பிறப்பித்த உத்தரவை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் மணக்குடியைச் சோ்ந்தவா் வ.து.நடராஜன். முன்னாள் அமைச்சரும் அம்மா மக்கள் முன்னேற்றறக் கழகத்தின் மாநில நிா்வாகியுமான இவரது மகன் மதிவாணன். இவா் ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் எலும்பு சிகிச்சைப் பிரிவு மருத்துவராக உள்ளாா். இந்த நிலையில், இவா் திருவாடாணை தாலுகா மருத்துவமனைக்கு இடமாறுதல் செய்யப்பட்டாா். இந்த உத்தரவை ரத்துசெய்யக் கோரி மருத்துவா் மதிவாணன் உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தாா்.

அவரது மனுவில், தனக்கான இடமாறுதல் உத்தரவில், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் மணிகண்டன் அறிவுறுத்தலின் பேரில் இடமாறுதல் வழங்கப்படுவதாகவும், மறு உத்தரவு வரும் வரை திருவாடானையில் பணியாற்றுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது. என்மீது எந்தவிதப் புகாரும் இல்லாத நிலையில், இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. ஆகவே அதை ரத்து செய்யவேண்டும் எனக்குறிப்பிடப்பட்டிருந்தது.

மனுவானது நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ராமநாதபுரத்திலிருந்து திருவாடானைக்கு மதிவாணனுக்கு வழங்கப்பட்ட இடமாறுதல் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

"பசுமை வழிச் சாலை" திட்டத்துக்கு எதிராக உயநீதிமன்றம் திடீர் உத்தரவு

"பசுமை வழிச் சாலை" திட்டத்துக்கு எதிராக உயநீதிமன்றம் திடீர் உத்தரவு


மக்களிடம் கருத்து கேட்காமல் பசுமை வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்துவதை எதிர்த்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையிலிருந்து சேலத்திற்கு செல்லும் நேரத்தை குறைப்பதற்காக பசுமை வழிச்சாலையை அமைக்க மத்திய அரசு பரத்மாலா பரியோஜனா திட்டத்தின்கீழ் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தில் சென்னையிலிருந்து சேலம்வரை 277 கிலோ மீட்டர் தூரம் பசுமை வழிச்சாலை அமைக்கப்படவுள்ளது. இந்த திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செயல்படுத்தவுள்ளது. இந்த பசுமை வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்யக்கோரி பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் நிர்வாகிகளில் ஒருவரான ஜி.சுந்தரராஜன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சாலைகளுக்கு நிலம் கையகப்படுத்தும்போது சம்மந்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த மக்களிடம் கருத்து கேட்கப்பட வேண்டும். திட்டத்திற்கான அறிவிப்பை வெளியிட்டதிலிருந்து 21 நாட்களுக்குள் நடத்த வேண்டும். ஆனால், பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு நிலத்தை கையகப்படுத்தும் பணியை அவசர அவசரமாக நடத்தி வரும் தேசிய நெடுஞ்சாலைத் துறையும், தமிழக அரசும் பாதிக்கப்படும் கிராமங்களில் உள்ள பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்கவில்லை. விதிமுறைகளுக்கு முரணாக பசுமை வழிச்சாலை திட்டத்தை கொண்டுவந்திருப்பது சட்ட விரோதம். எனவே, இந்த திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஷேஷசாய் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் ராதாகிருஷ்ணன் ஆஜராகி, கடந்த 2013ல் கொண்டு வரப்பட்ட நெடுஞ்சாலை சட்டம் 105 பிரிவை ரத்து செய்ய வேண்டும். ஏனென்றால் இந்த சட்ட பிரிவின்படி நெடுஞ்சாலைக்காக நிலங்களை கையகப்படுத்தும் போது 105 பிரிவின் படி எந்த கருத்தையும் மக்களிடம் கேட்க தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது
சமூக பாதிப்பு ஆய்வு அறிக்கை இல்லாமல் மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. எனவே, இந்த பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார். மத்திய அரசு சார்பாக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபாலன் ஆஜராகி வாதிடும்போது, கடந்த 2015ல் மத்திய அரசு ஒரு அறிவிப்பாணை வெளியிட்டது. அதில் நெடுஞ்சாலைக்காக நிலத்தை கையகப்படுத்தும் போது மக்களுக்கு உரிய இழப்பீடு, மாற்று ஏற்பாடு, மறுவாழ்வு ஆகியவை குறித்து தெளிவாக கூறப்பட்டுள்ளது.

நில உரிமையாளர்கள் மட்டுமே இதுபோன்ற வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், பொதுநல வழக்காக மனுதாரர் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள முடியாது என்று வாதிட்டார். இதையடுத்து, தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு சந்தை மதிப்பைவிட 3 மடங்கு கூடுதலாக இழப்பீடு வழங்கப்படவுள்ளது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் தமிழக அரசு மற்றும் மத்திய அரசு ஜூலை 12ம் தேதி பதில் மனு தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

* சென்னையிலிருந்து சேலம் வரை 277 கிமீ தூரம் பசுமை வழிச்சாலை அமைக்கப்படவுள்ளது.
* விவசாய நிலங்கள் வழியாக இந்த திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செயல்படுத்துகிறது.
* அறிவிப்பை வெளியிட்டதிலிருந்து 21 நாளுக்குள் பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும்.
* ஆனால், நிலத்தை கையகப்படுத்தும் பணியை அவசர அவசரமாக நடத்துகிறது அரசு,
* பாதிக்கப்படும் கிராமங்களில் உள்ள பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்கவில்லை.

Wednesday, June 27, 2018

சபாநாயகருடன் கடும் வாக்குவாதம்? துணை முதல்வர் செய்து வைத்த சமரசம்!

சபாநாயகருடன் கடும் வாக்குவாதம்? துணை முதல்வர் செய்து வைத்த சமரசம்!


சட்டப் பேரவைத் தலைவா் தனபாலுடன், அமைச்சா் ஓ.எஸ்.மணியன் புதன்கிழமை கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இதைத் தொடா்ந்து, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தலையீட்டால் சமாதானம் ஏற்பட்டது.

சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் எதிா்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின், ஆளுநா் சுற்றுப்பயணம் குறித்து பேசுகையில், மாநில சுயாட்சி குறித்து பேசினாா். பின்னா் அது தொடா்பாக கைத்தறித்துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் பேசுகையில், ‘எதிா்கட்சித் தலைவா் மாநில சுயாட்சி குறித்து பேசினாா். அதுகுறித்து விளக்கம் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்’ என்றாா். அப்போது குறிக்கிட்ட பேரவைத் தலைவா், அமைச்சருக்கு என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது. எனவே, அதுபற்றி பேச வேண்டாம்’ என்றாா்.

உடனே மீண்டும் பேசிய அமைச்சா் ஓ.எஸ்.மணியன், ‘ நான் சொல்ல வருவது என்ன என்பது உங்களுக்கு எப்படிப் புரியும். நான் சொன்னால்தானே புரியும்’ என்றாா். இதற்கு பதிலளித்த பேரவைத் தலைவா், ‘ நீங்கள் புது பிரச்னையை எழுப்புகிறீா்கள். இப்போது எனக்கு நேரமில்லை’ என்றாா். அப்போது பேசிய அமைச்சா் ஓ.எஸ்.மணியன், ‘ நான் புதிய பிரச்னைக்கு போகவில்லை. நான் எதிா்கட்சித் தலைவா் சொன்ன கருத்துக்கு பதில் சொல்கிறேன். புது விஷயம் ஒன்றும் நான் சொல்லவில்லை’ என்றாா்.

இதற்கு பதிலளித்த பேரவைத் தலைவா், ‘ நீங்கள் எதாவது ஒன்று சொன்னால் அது அவையில் பதிவு செய்ய வேண்டி வரும்’ என்றாா். ஆனால் பேரவைத் தலைவரின் அறிவுரையை ஏற்காமல் அமைச்சா் ஓ.எஸ்.மணியன் மீண்டும் பேசுகையில், ‘ தமிழக அரசியல் வரலாற்றில், தமிழக ஆளுநரின் நடவடிக்கைகளில், ஒரே ஒரு செய்தியை மட்டும் சொல்லப் போறேன். அது ஏன் வேண்டாம் என்கிறீா்கள்?’ என்றாா். அமைச்சரின் கருத்துக்கு பதிலளித்த பேரவைத் தலைவா், ‘ ஆளுநரைப் பற்றி பேச வேண்டாம் என்று நான் அவா்களுக்கு உத்தரவு போட்டுள்ளேன். ஆகையால் அவா்கள் வெளியேறிவிட்டாா்கள். அதோடு அதை விட்டுவிடுங்கள்’ என்றாா்.

மீண்டும் பேசிய அமைச்சா் ஓ.எஸ்.மணியன், ‘ நான் பேசுவதில் தவறு இருந்தால் நீக்கி விட்டுப் போங்கள்’ என்றாா். அப்போது பேசிய பேரவைத் தலைவா், ‘ அமைச்சா் பேசிய பிறகு அதை நீக்கினால், அது சரியாக இருக்குமா? பேரவைத் தலைவரின் கருத்துக்கு பதிலளித்த அமைச்சா் ஓ.எஸ். மணியன், ‘ பேச வருதற்கு முன்பாகவே மறுப்பு தெரிவிக்கிறீா்கள். நான் முக்கியமான விஷயத்தை சொல்ல வருகிறேன் ஒரு நிமிடம் அனுமதி தாருங்கள் ’என்று தொடா்ந்து நின்றபடி வலியுறுத்தினாா். அப்போது பேசிய பேரவைத் தலைவா், ‘ எனக்கு சரியாகத் தெரியவில்லை எனறால், நான் அதை நீக்க வேண்டி வரும். ஆகையால் அது வேண்டாம்’ என்றாா். பின்னா் அமைச்சா் ஓ.எஸ். மணியனுக்கு, பேரவைத் தலைவா் தனபால் பேசுவதற்கு அனுமதி அளித்தாா்.

அப்போது அமைச்சா் ஓ.எஸ்.மணியன் பேச முற்பட்டாா். அந்த நேரத்தில் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் எழுந்து பேசுகையில், ‘ எதிா்கட்சித் தலைவா் திரும்ப, திரும்ப பேசும் போது, நீங்கள் ஒரு விதியை அவருக்கு கொடுத்தீா்கள். இனிமேல் ஆளுநரைப் பற்றி விவாதம் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று சொன்னீா்கள். பேரவை விதியை சுட்டிக் காட்டினீா்கள். ஆகவே அதற்கு மரியாதை தரவேண்டும் என்று உறுப்பினா்கள் மற்றும் அமைச்சா்களைக் கேட்டுக் கொள்கிறேன்’ என்றாா். இதனை ஏற்றுக் கொண்டு அமைச்சா் ஓ.எஸ். மணியன் அமைதி காத்தாா்.

பெண்களுக்கு எதிரான வன்முறையில் தமிழகத்தின் நிலை? முதல்வர் விளக்கம்!

பெண்களுக்கு எதிரான வன்முறையில் தமிழகத்தின் நிலை? முதல்வர் விளக்கம்!


இந்தியாவிலேயே வன் குற்றங்களின் அடிப்படையில் தமிழகத்தின் நிலை என்ன என்பது குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி இன்று தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று 2018 - 19ம் ஆண்டுக்கான காவல் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்குப் பின் தமிழக முதல்வர் பழனிசாமி உரையாற்றினார்.

அதில், 2016ஆம் ஆண்டைய தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்களின்படி, சொத்து சம்பந்தமான குற்றங்களில் நமது மாநிலத்தின் நிலை என்ன என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

இவ்வறிக்கையின்படி, நமது மாநிலத்தில் 2016-ஆம் ஆண்டு தாக்கலான வன்குற்றங்களான, கொலை, வரதட்சணைக் கொலை, கொலை முயற்சி, கூட்டுக் கொள்ளை, கொள்ளை, காயம் விளைவித்தல், கடத்தல், தீ வைப்பு போன்ற குற்றங்களை, மற்ற மாநிலங்களில் தாக்கலான வன்குற்றங்களோடு ஒப்பிடுகையில், நமது மாநிலத்தில் தாக்கலான குற்றங்கள் குறைந்தே உள்ளன.

உதாரணமாக, 2016 ஆம் ஆண்டு வன்குற்றங்கள்,
உத்தர பிரதேசத்தில் 65 ஆயிரத்து 90ம்,
மேற்கு வங்கத்தில் 46 ஆயிரத்து 723ம்,
பீகாரில் 46 ஆயிரத்து 621ம்,
மகாராஷ்டிராவில் 42 ஆயிரத்து 468ம்,
மத்திய பிரதேசத்தில் 26 ஆயிரத்து 719ம்,
அசாமில் 24 ஆயிரத்து 165ம்,
கர்நாடகாவில் 19 ஆயிரத்து 648ம்,
ஒடிசாவில் 19 ஆயிரத்து 92ம்,
ராஜஸ்தானில் 16 ஆயிரத்து 223ம்,
அரியானாவில் 14 ஆயிரத்து 392ம்,
கேரளாவில் 13 ஆயிரத்து 548ம்,
குஜராத்தில் 11 ஆயிரத்து 829ம் தாக்கலாகியுள்ளன.
ஆனால் நமது மாநிலத்தில் இக்குற்றங்கள் கடந்த 2016ஆம் ஆண்டு, 10 ஆயிரத்து 844 மட்டுமே தாக்கலாகியுள்ளன.

பொதுவாக, குற்ற நிகழ்வுகளை ஒப்பிடும்போது, குற்ற விகிதம் என்ற எண்ணிக்கை பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு எத்தனை குற்றங்கள் நடந்துள்ளன என்பதன் குறியீடு ஆகும்.

கடந்த 2016ம் ஆண்டு, தமிழ்நாட்டில் நடந்த வன்குற்றங்களின் குற்ற விகிதம் 15.6 ஆகும். இது தேசிய சராசரி ஆன 33 சதவீதத்துடன் ஒப்பிடும் போது, 17.4 புள்ளிகள் குறைவாகவே உள்ளது.

2016-ஆம் ஆண்டின், தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி, மாநிலத்தில் குற்றங்கள் தாக்கலாவதும், குற்ற விகிதமும், மற்ற மாநிலங்களை விட மிகவும் குறைவாகவும், தேசிய குற்ற விகிதத்தைவிட, நமது மாநில குற்ற விகிதம் தொடர்ந்து குறைவாக இருந்து வருவதும், தெளிவாக தெரிய வருகிறது.

காவல் துறையினர் குற்றங்களை கண்டுபிடிப்பதிலும், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதிலும் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த ஏழு ஆண்டுகளாக, கொலை உள்ளிட்ட சொத்து சம்பந்தமாக தாக்கலான, ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 247 வழக்குகளில், ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 184 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதாவது 72 சதவீத வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இவ்வழக்குகளில் களவு போன சொத்துக்களில் 67 சதவீத சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

Tuesday, June 26, 2018

மத்திய அரசை எதிர்க்கும் தமிழக அரசு! முக்கிய மசோதாவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியது!

மத்திய அரசை எதிர்க்கும் தமிழக அரசு! முக்கிய மசோதாவை எதிர்த்து தீர்மானம்
நிறைவேற்றியது!


மத்திய அரசு அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்திவைக்க வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த தீர்மானம் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேறியது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்திவைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேறியது. முன்னதாக இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்து முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

மத்திய அரசு, 2010 ஆம் ஆண்டு வரைவு அணை பாதுகாப்பு மசோதாவை தயாரித்து மாநில அரசுகளின் கருத்துகளை கேட்டது. இந்த வரைவு மசோதாவில், தமிழ்நாடு அரசால் கட்டப்பட்டுள்ள அணைகள் அண்டை மாநிலத்தில் இருக்கும் போது அதனை இயக்குதல் மற்றும் பராமரித்தல் சம்பந்தமாக பிரச்சனைகள் ஏற்படும் என்ற காரணத்தால், அந்த வரைவு மசோதாவில் இடம்பெற்ற தமிழ்நாட்டிற்கு பாதகமான அம்சங்கள் குறித்து மறுப்பு தெரிவிக்கப்பட்டு, அவை மாற்றி அமைக்கப்பட வேண்டும் என அப்போடைய முதல்வர் ஜெயலலிதா, 29.7.2011 மற்றும் 17.3.2012 நாளிட்ட கடிதங்களின் வாயிலாக அப்போதைய பிரதமரை கேட்டுக் கொண்டார்கள்.

எனினும், இந்த வரைவு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, நாடாளுமன்றத்தின் நிலைக்குழுவின் கருத்து வேண்டி அனுப்பி வைக்கப்பட்டது. அத்தருணத்தில், 3.8.2011 அன்று டெல்லியில் அஇஅதிமுக நாடாளுமன்ற உறுப்பினரான வேணுகோபாலும், பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகளும் நீர்வள ஆதாரத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவரான கோகாய்-ஐ நேரில் சந்தித்து ஜெயலலிதா குறிப்பிட்ட மறுப்புக்களை விரிவாக எடுத்துரைத்தனர்.

ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு, 2010 ஆம் ஆண்டின் வரைவு அணை பாதுகாப்பு மசோதாவை கைவிட்டது.

இருப்பினும், அணை பாதுகாப்பு குறித்து, நாடு முழுவதும் பின்பற்றக் கூடிய ஒரு சட்டத்தை இயற்ற, மத்திய அரசு 2016 ஆம் ஆண்டு ஒரு வரைவு அணை பாதுகாப்பு மசோதாவை தமிழ்நாட்டின் கருத்து கோரி அனுப்பி வைத்தது. இந்த வரைவு மசோதாவை தமிழ்நாடு அரசு விரிவாக ஆய்வு செய்ததில், தமிழ்நாட்டிற்கு பாதகமான அம்சங்கள் கண்டறியப்பட்டன.

அதில் குறிப்பாக, ஒரு மாநிலத்திற்குள் ஓடுகின்ற நதியின் குறுக்கே அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களை அந்தந்த மாநிலமே கட்டிக்கொள்வது குறித்து அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு கட்டப்படும் அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் அந்த மாநிலத்திற்கே சொந்தமானது என்றும், அவை அம்மாநிலங்களாலேயே இயக்கப்பட்டும், பராமரிக்கப்பட்டும் வரும் என்றும், இந்த வரைவு மசோதாவில் தேசிய அணை பாதுகாப்பு நிறுவனத்திற்கு மாநிலங்களிலுள்ள அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களை ஆய்வு செய்யும் அதிகாரங்களை அளிக்க உத்தேசித்திருப்பது, நடைமுறைக்கு உகந்ததாக இருக்குமா என தெரியவில்லை.

மாநிலங்களுக்கு இடையேயான ஒப்பந்தங்கள் மூலம் ஒரு மாநிலம் வேறொரு மாநிலத்தில் கட்டிய அணைகள், அந்த அணையை கட்டிய மாநிலத்திற்கு சொந்தமானதாகும் மற்றும் அதனை இயக்குகின்ற மற்றும் பராமரிக்கக் கூடிய பொறுப்புகள் அம்மாநிலத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டதாகும் என்பது உச்ச நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு மற்றும் பெருவாரிப்பள்ளம் அணைகள், அண்டை மாநிலமான கேரளாவுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களினால் தமிழ்நாடு அரசால் கட்டப்பட்டும், இயக்கப்பட்டும் மற்றும் பராமரிக்கப்பட்டும் வருகின்றன. இத்தகைய அணைகள் பற்றிய விவரம் குறித்து இந்த வரைவு மசோதாவில் இடம் பெறவில்லை. மத்திய அரசின் அமைச்சரவையினால் ஒப்புதல் வழங்கப்பட்ட வரைவு மசோதாவினால், இந்த 4 அணைகளை பராமரிப்பதில் இடையூறுகள் ஏற்படும்.

உத்தேசிக்கப்பட்டுள்ள தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் மற்றும் அணை பாதுகாப்புக் குழு ஆகிய அமைப்புகளினால் அணைகளை பராமரிப்பதில் ஏற்படும் இடையூறுகளில் தீர்வு காண இயலாது.

ஒவ்வொரு மாநிலத்திலும் அணை பாதுகாப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இவை, மத்திய நீர்வளக் குழுமம் அவ்வப்போது அளித்துவரும் வழிகாட்டி நெறிமுறைகளின்படி செயல்பட்டு வருகின்றன. மேலும், அந்தந்த மாநிலத்தைச் சார்ந்த அனுபவம் மற்றும் திறமை வாய்ந்த பொறியாளர்கள், அணை பாதுகாப்பு குறித்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவைகளை எல்லாம் சுட்டிக்காட்டி, ஜெயலலிதா 11.9.2016 அன்று பிரதமருக்கு கடிதம் அனுப்பினார். இக்கடிதத்தில், இவ்வரைவு மசோதா மாநிலங்களின் அதிகாரங்களில் குறுக்கீடு செய்கிறது என்றும், மாநிலங்களுக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தங்களின்படி, அண்டை மாநிலத்தில் இருக்கும் தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான அணைகளை இயக்குதல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றில் பல்வேறு பிரச்சனைகள் எழக்கூடும் என்றும், எனவே, இந்த மசோதா அவசர கதியில் பரிசீலிக்கப்பட கூடாது எனவும், அனைத்து அம்சங்களும் விரிவாக பரிசீலிக்கப்பட்ட பின்னரே சட்டம் இயற்றுவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, 2016 ஆம் ஆண்டைய வரைவு அணை பாதுகாப்பு மசோதாவிற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார். தமிழ்நாடு அரசு இம்மசோதாவிற்கு தன்னுடைய எதிர்ப்பினை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

2018 ஆம் ஆண்டைய அணை பாதுகாப்பு மசோதாவிற்கு, மத்திய அமைச்சரவை 13.6.2018 அன்று ஒப்புதல் அளித்துள்ளது என பத்திரிகை மற்றும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன.

இந்த வரைவு மசோதாவின் மீது மத்திய அரசு தமிழ்நாட்டின் கருத்தை கோரவில்லை. இந்த வரைவு மசோதாவில், தமிழ்நாட்டின் உரிமைகளை பாதிக்கும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாலும், குறிப்பாக, அண்டை மாநிலத்தில், தமிழ்நாடு அரசால் கட்டப்பட்டுள்ள அணைகளான முல்லைப்பெரியாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு மற்றும் பெருவாரிப்பள்ளம் ஆகிய அணைகளை இயக்குதல் மற்றும் பராமரித்தல் போன்றவற்றிற்கு பல்வேறு பிரச்சனைகள் இவ்வரைவு மசோதாவால் எழக்கூடும் என்பதாலும், மாநிலங்களை கலந்தாலோசித்து, மாநிலங்களின் ஒருமித்த கருத்து ஏற்படும் வரையில், மத்திய அரசு, அணை பாதுகாப்பு சட்டத்தை இயற்றக்கூடாது எனவும், அது வரையில் மத்திய அமைச்சரவை தற்பொழுது எடுத்துள்ள முடிவை நிறுத்திவைக்க வேண்டும் எனவும், நான் 15.6.2018 அன்று பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் கேட்டுக் கொண்டேன்.

27.2.2006 மற்றும் 7.5.2014 ஆகிய நாளிட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்புகளில், முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில், தமிழ்நாட்டின் உரிமைகள் நிலைநாட்டப்பட்டு, அத்தீர்ப்புகளின்படி 21.11.2014 மற்றும் 7.12.2015 ஆகிய நாட்களில் முதற்கட்டமாக 142 அடி வரையில் அணையில் நீர் தேக்கி வைக்கப்பட்டது.

மேலும், மத்திய நீர் வளக் குழுமம் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வல்லுநர் குழுவின் பரிந்துரைகள் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின்படி, தமிழ்நாடு அரசு, முல்லைப்பெரியாறு அணையின் முழு நீர்மட்ட அளவான 152 அடி வரையில் உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இதன்பொருட்டு, தமிழ்நாடு அரசு செய்து முடிக்க வேண்டிய மீதமுள்ள பலப்படுத்தும் பணிகளைச் செய்வதற்கு கேரள அரசு ஒத்துழைப்பு அளிக்காமல், தொடர்ந்து இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது. எனினும், தமிழ்நாடு அரசு இவ்விடையூறுகளை நீக்கி, பணிகளை விரைந்து செய்து முடிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், அணை பாதுகாப்பு குறித்து மத்திய அரசு உத்தேசித்துள்ள சட்டத்தை நிறைவேற்றுமானால், அணை பாதுகாப்பு என்ற போர்வையில், முல்லைப்பெரியாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு மற்றும் பெருவாரிப்பள்ளம் ஆகிய நான்கு அணைகளைப் பராமரிப்பதில் தமிழ்நாட்டிற்கு இடையூறுகள் ஏற்படும்.

மத்திய அமைச்சரவை 13.6.2018 அன்று இசைவு அளித்துள்ள, 2018 ஆம் ஆண்டைய வரைவு அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைக்கவும், மாநிலங்களை கலந்தாலோசித்து, மாநிலங்களின் ஒருமித்த கருத்து ஏற்பட்ட பின்னரே, மத்திய அரசு அணை பாதுகாப்பு சட்டத்தை இயற்றலாம் எனவும், அது வரையில் மத்திய அரசு, அணை பாதுகாப்பு சட்டத்தை இயற்ற உத்தேசித்துள்ள நடவடிக்கைகளை நிறுத்திவைக்க வேண்டும் என்ற கீழ்க்கண்ட தீர்மானத்தை முன்மொழிகிறேன்.

மத்திய அரசு இயற்ற உத்தேசித்துள்ள 2018 ஆம் ஆண்டைய வரைவு அணை பாதுகாப்பு மசோதாவில், தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிக்கப்படக்கூடிய அம்சங்கள் உள்ளதாலும், குறிப்பாக, தமிழ்நாடு அரசால் அண்டை மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள அணைகளை இயக்குதல் மற்றும் பராமரித்தல் பணிகளில் பல்வேறு பிரச்சனைகள் எழக்கூடும் என்பதாலும், மாநிலங்களை கலந்தாலோசித்து ஒருமித்த கருத்து ஏற்பட்ட பின்னரே, மத்திய அரசு அணை பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் எனவும், அது வரையில், மத்திய அரசு அணை பாதுகாப்பு சட்டத்தை இயற்ற எடுத்துள்ள நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், தமிழக சட்டப்பேரவை மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது” இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

Sunday, June 24, 2018

"பசுமை வழிச்சாலை " வரமா? சாபமா? ஒரு சிறு பார்வை -பகுதி 2

"பசுமை வழிச்சாலை " வரமா? சாபமா? ஒரு சிறு பார்வை -பகுதி 2


இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் வெளிநாடு மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் சில ஆண்டுகளுக்கு முன் வரை, தமிழகத்தின் மீது மிகுந்த ஆர்வம் காட்டி வந்தன. ஆனால், இங்கு ஏற்பட்ட அரசியல் மாற்றம் ஏகப்பட்ட, 'குட்டி' தலைவர்களை உருவாக்கிவருகிறது.

இவர்கள் எதற்கு எடுத்தாலும் போராட்டம் என்ற பெயரில் மக்களுக்கு அழைப்பு விடுத்து, வன்முறைக்கு வித்திடுகின்றனர்.எட்டு வழிச்சாலை தொடர்பாக, அவர்கள் சொல்லும் கட்டுக்கதைகளும், அவற்றின் உண்மை நிலவரமும் வருமாறு:

6வது கட்டுக்கதை:

* சேலத்தில் இருந்து சென்னை செல்லும் வழியில் உள்ள மலைகள், புதிய சாலைதிட்டத்திற்காக அழிக்கப்படும். இது சுற்றுச்சூழலை கடுமையாக பாதிக்கும்.

உண்மை நிலவரம்:

புதிய சாலை திட்டத்தின் வழியில் உள்ள எந்த மலையும் பாதிப்புக்கு உள்ளாகாது. சேலம் அருகே உள்ள ஒரு மலை அருகே, 3 கி.மீ., துாரத்திற்கு சுரங்க பாதை மட்டும் அமைக்கப்பட உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும், உலகின் பிற பகுதிகளிலும் நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட போது, இதுபோல் சுரங்க பாதைகள் உருவாக்கப்பட்டன.

7 வது கட்டுக்கதை:

* செங்கல்பட்டில் இருந்து சேலத்திற்கு தற்போது இரண்டரை மணி நேரத்தில் சென்று விட முடியும். ஆனால், செங்கல்பட்டில் இருந்து சென்னைக்கு செல்ல அதே அளவு நேரம் பிடிக்கும்.சென்னையின்
தேவைகளை பூர்த்தி செய்ய மட்டும் இந்த சாலை திட்டம் அமைக்கப்படவில்லை. பிற பகுதிகளை சேர்ந்த மக்களும் குறைந்த நேரத்தில் தாங்கள் விரும்பும் ஊர்களுக்கு செல்லவும் இந்த சாலை உதவும்.

சென்னை -- பெங்களுரு, சென்னை -- மதுரை தேசிய நெடுஞ்சாலைகளின் ஊடே ஏராளமான குறுக்கு சாலைகள் உள்ளன. இவற்றின் வழியாக தேசிய நெடுஞ்சாலைகளில் நுழையும் வாகனங்கள் தான் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகின்றன.

இந்த குறுக்கு சாலைகளை கண்காணிக்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட துறைகளிடம் இல்லை. ஆனால், புதிய சாலை திட்டத்தில், ஒன்பது இடங்களில் தான் குறுக்கு சாலைகள் இடம் பெறும். அந்த இடங்களில் தான் புதிய சாலையில் இருந்து வெளியேறவோ, உள்நுழையவோ முடியும். இதன் காரணமாக, புதிய சாலையில் செல்லும் வாகனங்களின் வேகம் அதிகரிக்கும்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் தி.மலை போன்ற நகரங்களுக்கு குறைந்த நேரத்தில் சென்றடைய முடியும். அதுபோல், தொழிற்பூங்கா மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகளுக்கு தேவையான பொருட்களை, குறைந்த நேரத்தில் கொண்டு செல்ல முடியும்.



8 வது கட்டுக்கதை:

* சேலத்தில் துவங்கும் இந்த புதிய சாலை திட்டம், செங்கல்பட்டு நகரத்துடன் முடிவுக்கு வந்து விடும். இதற்கும் சென்னைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே, துறைமுகம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு செல்ல இந்த சாலை உதவி செய்யாது.

உண்மை நிலவரம்:

சென்னை அருகே உள்ள வண்டலுாரில், சென்னை யின் வெளிவட்ட சாலை துவங்குகிறது. புதிய,8 வழிச் சாலை திட்டம், சென்னை வெளிவட்ட சாலையுடன் இணைக்கும் வகையில் அமைக்கப் படும். எனவே, வெளிவட்ட சாலை மூலமாக, சென்னை, எண்ணுார் மற்றும் காட்டுப்பாக்கம் துறைமுகங்களுக்கு வாகனங்கள் எளிதில் செல்ல
முடியும். இதுதவிர சென்னை புறவழிச்சாலை, மதுரவாயல் - துறைமுகம் சாலைதிட்டம் போன்றவையும் உள்ளன. வெளிவட்ட சாலை மூலமாக, வட சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளுக்கு எளிதில் செல்ல முடியும். தென் சென்னைக்குள் நுழைய, வண்டலுார் - கேளம்பாக்கம் நான்கு வழி சாலை உதவியாக இருக்கும். இதுதவிர கிழக்கு கடற்கரை சாலையும் உள்ளது.

சென்னை -- - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை போக்க, சென்னையை அடுத்த பெருங்களத்துாரில் ஒரு மேம்பாலம் வர உள்ளது. சென்னைக்குள் நுழையும் வாகனங்களுக்கு இந்த மேம்பாலம் உதவியாக இருக்கும்.

9வது கட்டுக்கதை:

* புதிய 8 வழிச் சாலையில் ஏற்படுத்தப்படும் சுங்கச்சாவடிகளின் கட்டணத்தினால், பயண செலவு அதிகரிக்கும்.

உண்மை நிலவரம்:

சென்னையில் இருந்து சேலம் செல்ல, புதிய சாலை மட்டும் இருக்கப்போவது இல்லை. பயண செலவு அதிகரிக்கும் என கருதும் மக்கள், மற்ற சாலைகளை பயன்படுத்தலாம். சென்னை - கிருஷ்ணகிரி - சேலம் வழி சாலை யில் செல்லும் ஒரு காரின் பயண செலவு, 2,900 ரூபாய்; சென்னை - உளுந்துார்பேட்டை - சேலம் வழி சாலையில் செல்லும் ஒரு காரின் பயண செலவு, 2,625 ரூபாய் என விரிவான திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காரின் எரிபொருள் செலவு, பயண நேரம், சுங்கசாவடி கட்டணம் உள்ளிட்ட பல அம்சங்களை கணக்கில் கொண்டு தான் இந்த பயண செலவு கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் புதிய 8 வழி சாலையில் செல்லும் ஒரு காரின் பயண செலவு வெறும், 2,240 ரூபாய் மட்டுமே.

தமிழகத்தில் சென்னை, திருச்சி, சேலம், கோவை மற்றும் பெங்களூரு நகரங்களின் வழியாக பாதுகாப்பு தொழில் வழி தடம் அமைய உள்ளது. இந்த வழி தடத்தில் ராணுவ தளவாட தொழிற்சாலைகள் வர உள்ளன.. இந்த தொழிற்சாலைகளுக்கு புதிய 8 வழிச் சாலை உதவியாக இருக்கும்.புதிய சாலை அமைந்தால் தங்களுக்கு வசதியாக இருக்கும் என சேலம் மற்றும் கோவையில் தற்போது உள்ள தொழிற்துறையினர் கருதுகின்றன.

இந்த கட்டுரையின் முதல் பகுதி https://numnadu.wordpress.com/2018/06/22/selam-3/

Saturday, June 23, 2018

அமைந்தது "காவிரி ஆணையம்" ! மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

அமைந்தது "காவிரி ஆணையம்" ! மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.


காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து, உறுப்பினர்களையும் நியமித்து மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவுக்கும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஜூன் 1ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. இதனால் ஆணையத்துக்கான அறிவிப்பை மத்திய அரசு கடந்த 1ஆம் தேதி அரசிதழில் வெளியிட்டது. ஆணையத்தின் தமிழக உறுப்பினருக்குப் பொதுப்பணித் துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் பெயரை தமிழக அரசு பரிந்துரை செய்தது. கேரள, புதுச்சேரி சார்பிலும் உறுப்பினர்கள் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், நினைவூட்டல் கடிதம் அனுப்பியும் கர்நாடகம் சார்பில் உறுப்பினர் பெயர் பரிந்துரைக்கப்படவில்லை.

அண்மையில் பிரதமர் மோடி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்துப் பேசிய கர்நாடக முதல்வர் குமாரசாமி, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டிருப்பதாகச் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். கடந்த 20ஆம் தேதி பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில், "காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து, அதனுடைய கூட்டத்தை உடனே கூட்ட மத்திய நீர்வளத் துறைக்கு உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.



இந்த நிலையில் ஒன்பது பேரை உறுப்பினர்களாகக் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து மத்திய அரசு நேற்று (ஜூன் 22) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் தலைவராக மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆறு பகுதி நேர உறுப்பினர்களும், இரண்டு முழு நேர உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் நவீன் குமார், மத்திய வேளாண் துறை ஆணையர் ஆகியோர் உறுப்பினர்களாகவும், பகுதி நேர உறுப்பினர்களாகத் தமிழக பொதுப்பணித் துறைச் செயலாளர் பிரபாகர், புதுச்சேரி பொதுப்பணித் துறை செயலாளர் அன்பரசு, கேரள அரசின் நீர்வளத் துறை செயலாளர் டிங்கு பிஸ்வால் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகம் உறுப்பினரைப் பரிந்துரை செய்யாத நிலையில், கர்நாடக அரசின் நீர்வளத் துறை நிர்வாகச் செயலாளரை தற்காலிக உறுப்பினராக மத்திய அரசு நியமித்துள்ளது. ஆணையம் டெல்லியைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் நவீன்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உறுப்பினர்களாகத் தமிழக நீர்வளத் துறையின் திருச்சி தலைமைப் பொறியாளர் செந்தில்குமார், கோவை தலைமைப் பொறியாளர் கிருஷ்ணன் உன்னி, புதுச்சேரி பொதுப்பணித் துறை முதன்மைப் பொறியாளர் சண்முகசுந்தரம், கேரள பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் கே.ஏ.ஜோஷி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா சார்பில் அம்மாநில நீர்வளத் துறை தலைமைப் பொறியாளர் தற்காலிக உறுப்பினராக இருப்பார் என்றும் மத்திய அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒழுங்காற்றுக் குழுவின் தலைமையிடம் பெங்களூருவில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Friday, June 22, 2018

"பசுமை வழிச் சாலை" வரமா? சாபமா? - ஒரு சிறு பார்வை!

"பசுமை வழிச் சாலை" வரமா? சாபமா? - ஒரு சிறு பார்வை!


சாலை வசதி ஏற்படுத்துவது, ஒரு நாட்டின் அடிப்படை கட்டமைப்பு. அதன் அடிப்படை யிலேயே, தொழில்வளம், பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்ட பல அம்சங்கள் உருவாகும். இதனால், சாலை அமைப்பதை எந்த துறை வல்லுனர்களும் எதிர்ப்பதில்லை. ஆனால், தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், சேலம் -சென்னை விரைவு பசுமை சாலை, கடும் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

நித்தம் நித்தம் சமூக ஊடகங்களில் பரவும் பல்வேறு வதந்திகள், பொதுமக்களையும், சாலைக்கு நிலம் வழங்க ஒப்புக் கொண்டவர் களையும் குழப்பி வருகிறது. 'காடுகள் அழிக்கப்படும்; மலைகள் உடைக்கப்படும்; விவசாயம் அழிக்கப்படும்' உள்ளிட்ட பல்வேறு அச்சுறுத்தல்கள், விதம் விதமாக, திட்டமிட்டு கிளப்பப்படுகின்றன.

குறிப்பாக சேலம், தர்மபுரி பகுதிகளில், கடும் எதிர்ப்பு நிலவுவதை போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. 'பேஸ்புக், வாட்ஸ் ஆப்' மூலம் புது புது பீதியை கிளப்பும், 'போர்வை யாளர்'களும் அதிகரிக்க துவங்கியுள்ளனர். இத்திட்டத்தில், அதிக அளவில் நிலம் கையகப் படுத்தப்படும், திருவண்ணாமலை மாவட்டத்தில், அமைதியான சூழல் உள்ள நிலையில், விவசாயிகள், ஆலோசனை கூட்டம் மூலம் இழப்பீடு கேட்க திட்டமிட்டுள்ளனர்.

குறைந்த அளவே நிலம் கையகப்படுத்தப்படும் சேலம் மாவட்டத்திலிருந்து அதிக எதிர்ப்பு உருவாவது ஏன், சமூக ஆர்வலர் போர்வையில் பரப்பப்படும் இத்தகவல்கள் உண்மைதானா, பசுமை அழிக்கப்படுமா என்பன உள்ளிட்ட பல கேள்விகள், மக்கள் மனதில் தோன்ற துவங்கி யுள்ளன. இதன் பின்னணி குறித்து விசாரித்த போது, பல உண்மைகள் மக்களிடம் கொண்டு செல்லாமல் மறைக்கப்பட்டது தெரியவந்து உள்ளது.

சேலம் பசுமை வழிச்சாலை

சென்னை- - சேலம் இடையில், 179 ஏ, 179 பி என புதிய தேசிய நெடுஞ்சாலை, அமைப்பதற்கான பணி, கடந்த சில ஆண்டுகளாகவே நடந்து வந்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பே, சம்பந்தப்பட்ட கிராமங்களில் சர்வே எடுக்கப்பட்டு, அளவீடுகள் தயாரிக்கப்பட்டன. இது தற்போது, எட்டு வழிச்சாலை எனும், பசுமை விரைவு சாலையாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், சென்னை, மண்ணிவாக்கம் சுற்றுச்சாலையில் துவங்கி, சேலம், அரியானுார் வரை, 274 கி.மீ., தொலைவிற்கு இச்சாலை அமைக்கப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 59 கி.மீ., திருவண்ணாமலை மாவட்டத்தில், 122 கி.மீ., கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 2 கி.மீ., தர்மபுரி மாவட்டத்தில், 53 கி.மீ., சேலம் மாவட்டத்தில், 38.3 கி.மீ., உள்ளடங்கியுள்ளது. இதில், 250 கி.மீ., துாரம் புதிதாக சாலை அமைக்க, 24 கி.மீ., துாரம் ஏற்கனவே உள்ள சாலையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, 2,343 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான வரைவு திட்டத்தை, 'பீட்பேக் இன்ப்ராஸ்டெக்சர்' என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

கூடுதல் சாலை அவசியமா?

சேலத்திலிருந்து சென்னை செல்ல, உளுந்துார்பேட்டை வழியாக, 354 கி.மீ., நான்கு வழிச்சாலை, கிருஷ்ணகிரி வழியாக, 364 கி.மீ., நான்கு வழிச்சாலை ஆகியவை, பிரதான சாலைகளாக உள்ளன.

இதில், சேலம் - உளுந்துார் பேட்டை சாலை பல இடங்களில், இரு வழி சாலையாகவே தொடர்கிறது. இந்த இரு சாலைகளிலும், தினமும் ஆயிரக்கணக் கான வாகனங்கள் சென்று வருகின்றன.

அதிவேக வாகனப்பெருக்கத்துக்கு, இன்னும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு, இந்த சாலைகள் தாக்குப்பிடிக்குமா என்பதே சந்தேகம். வாகன நெரிசல், விபத்துகளை குறைக்க, புதிய சாலை அமைக்க வேண்டியது கட்டாயம்.மேலும் அனைத்து துறை மேம்பாட்டுக்கும், அடிப்படை கட்டமைப்பாக விளங்கும் சாலை வசதியை உருவாக்குவதை, எந்த துறை வல்லுனர்களும் எதிர்ப்பதில்லை.

சுற்றுப்புற சூழலுக்கு கெடுதலா?

சுற்றுப்புற சூழலை பயமுறுத்தும் முக்கிய அம்சங்களில் ஒன்றாக கருதப்படுவது, உலக வெப்பமயமாதல். இதற்கு முக்கிய காரணம், எரிபொருள் உபயோகம். நிலக்கரி, பெட்ரோலிய பொருட்கள் உள்ளிட்டவைகளால் உருவாகும் கார்பன், சுற்றுப்புறச்சூழலில் கடும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதை குறைக்கவே, உலக நாடுகள் அனைத்தும் போராடி வருகின்றன.சராசரியாக ஒரு கார் வெளியிடும் கார்பனை, காற்றிலிருந்து சுத்தம் செய்ய, ஆறு மரங்கள் தேவைப்படும்.

மிக எளிதில், கடனுக்கு காரை வாங்கி, வீதியில் நிறுத்தும் நம்மவர்கள், மரம் வளர்ப்பு குறித்து கண்டுகொள்வதில்லை. ஏனெனில், அதற்கான இட வசதியில்லை என்பதே உண்மை. ஆனால், இதை அரசு அமல்படுத்தி வருகிறது. உள்கட்ட மைப்பு வசதிகள் செய்து வரும் அதே வேளையில், கடந்த, மூன்று ஆண்டுகளில் மட்டும், நம் நாட்டில், 10 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் காடுகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.

இப்படியிருக்கும் போது, காடுகள் அழிக்கப் படுகின்றன என்ற காரணத்தை பூதாகாரமாக காட்டி, மக்களை துாண்டிவிடும், மாவோயிஸ்டுகளின் போக்கு, அதிகரித்து வருகிறது.புதிதாக, எட்டு வழிச்சாலை அமைக்கப்படும் போது, 50 கி.மீ., தொலைவு குறைவதுடன், பயணத்தில் ஒரு மணி நேரம் குறைகிறது.உதாரணமாக, ஒரு நாளைக்கு, 10 ஆயிரம் வாகனங்களுக்கு, 50 கிலோ மீட்டர் தொலைவு குறையுமானால், அதனால் உருவாகும் கார்பன், எரிபொருள் செலவு, சுற்றுச்சூழல் மாசுபாடு, நேர விரயம் ஆகியவை மிச்சமாகும். இதனால் தான், இந்த சாலை பசுமை விரைவு சாலை என அழைக்கப்படுகிறது.

இதை கருத்தில் கொண்டே, மரங்களை வெட்டவும், வனப்பகுதிகளை பயன்படுத்திக் கொள்ளவும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.மரம் வெட்டப்படுவதை விட, பல மடங்கு சுற்றுச்சூழல் கேடு, நாம் உபயோகிக்கும் வாகனங்களால் ஏற்படுகிறது. இதற்காக, வாகனங்களை கைவிட்டு, மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப யாரேனும் தயாராக இருக்கின்றனரா என, துறை வல்லுனர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள், வீட்டுமனைகளாக மாறியதை எவராலும் தடுக்க முடியவில்லை. ஆனால், மக்களுக்கான அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை குறைகூற முன்வரும், சமூக ஆர்வலர்களின் எண்ணிக்கைக்கு குறைவில்லை.

மலை வளம் அழிக்கப்படுகிறதா?

இந்த பசுமை விரைவு சாலை, சேலம், திருவண்ணாமலை, அரூர், செங்கல்பட்டு வனக்கோட்டத்துக்கு உட்பட்ட, சிறுவாஞ்சூர், நம்பேடு, அலியால்மங்களம், மூணாறுமங்களம், பிஞ்சூர், ஆனந்தவாடி, ரேவண்டவாடி, பூவம்பட்டி, நுணுங்கனுார், மஞ்சவாடி கணவாய், பள்ளிப்பட்டி விரிவாக்கம், ஜருகுமலை உள்ளிட்ட காப்புக்காடு பகுதிகளின் வழியாக, 20.220 கிலோ மீட்டர் துாரம் அமைக்கப்படுகிறது.

இதிலும், மலைகள், வன விலங்குகள் பாதிக்கப்படாத வகையில், குகை அமைத்து சாலை அமைக்கப்பட உள்ள தாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய வனத்துறை அனுமதியளிக்காத பட்சத்தில், மாற்றுப்பாதை குறித்து ஆலோசிக்கும் நிலை உருவாகும். உண்மையில், கடந்த, 50 ஆண்டுகளில், கிரானைட், கருங்கல், பாக்சைட் என, கனிமங்களை எடுக்க, தமிழகத்தில் காணாமல் போன மலைகள் ஏராளம். அதையெல்லாம் தடுக்காமல், அனுமதி கொடுத்த எதிர்க்கட்சிகளும், இத்திட்டத்தில் மலைகள் சுரண்டப்படுவதாக கூறுவது தான் வேடிக்கை.

ஏன் எதிர்ப்பு?

ஒவ்வொரு சாலை மற்றும் அடிப்படை கட்டுமான பணிகளும், பலரின் நிலங்களை கையகப்படுத்தி செயல்படுத்தப்பட்டது உண்மை தான். இதில், பாதிப்பை தவிர்க்க முடியாது. ஆனால், பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு, போதிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பதே, முக்கிய கோரிக்கை. நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில், சந்தை மதிப்பிலிருந்து, நான்கு மடங்கு அதிகமாக, இழப்பீடு வழங்கலாம். இதன் அடிப்படையில், பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடு, வாழ்வாதாரத்துக்கு வழி, மாற்று இடம் உள்ளிட்ட பல வழிகளிலும், அரசு தாராளம் காட்டியிருக்க வேண்டும்.

குறைந்த இழப்பீடு அறிவித்ததால், நிலம் வழங்குவோர் அதிருப்தியடைந்தனர். இதை சாதகமாக பயன்படுத்தி, சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில், மாவோயிஸ்ட் மற்றும் நக்சல்கள்,மக்களை போராட துாண்டுகின்றனர். இதன் விளைவாகவே, பல இடங்களில் எதிர்ப்புகள் கிளம்புகின்றன. துாண்டுபவர்களை அடக்குவது மட்டுமின்றி, விவசாயிகளுக்கு மகிழ்வை தரும் வகையில், இழப்பீடு மற்றும் மாற்று இடம் தர அரசு முன்வந்தால், எதிர்ப்புகள் குறைய வாய்ப்புள்ளது.

'கார்ப்பரேட்' சாலையா?

விவசாயிகளை துாண்டி விடுபவர்கள் வைக்கும் முதன்மை கருத்து, 'இச்சாலை முழுக்க முழுக்க, ஜின்டால் நிறுவனத்துக்காக அமைக்கப்படுகிறது' என்பதே. உண்மையில், தமிழக சூழலை சில ஆண்டுகளாக கவனித்திருந்தால், இது தேவையில்லாத வாதம் என்பது தெரியவரும்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதான எதிர்ப்பு உணர்வு, தமிழக மக்களிடையே அதிகரித்து வருகிறது. ஏற்கனவே செயல்பட்டு வந்த, ஸ்டெர்லைட் ஆலை மூடல், மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்கள் எதிர்ப்பு காரணமாக நிறுத்தப்பட்டது உள்ளிட்டவை அதன் விளைவுகளே.

மக்களின் எதிர்ப்பு குரலால், பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த, 'ஸ்டெர்லைட்' ஆலையை மூட முடியும் போது, புதிய நிறுவனங் கள், மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டால், அவற்றையும் தடுக்க முடியும். அப்படி இருக்கும் போது, எதிர்கால கணிப்புகளை காரணம் காட்டி, சாலை வசதியை தடுப்பது, முழுக்க உள்நோக்கம் கொண்டது.

அடிப்படை கட்டமைப்பை தடுக்க, நேரடியாக காரணம் கூற முடியாதவர்களின், போலி முகமூடி யாக, 'கார்ப்பரேட் எதிர்ப்பு கோஷம்' பயன்படுத்தப்படுகிறது.

தொழில் வளம் பெருகும்

இந்த சாலை பெரும்பகுதி, சிறு கிராமப்பகுதிகள் வழியே அமைக்கப்படுகிறது. இப்பகுதியில், தரமான சாலை வசதி ஏற்படுத்துவதன் காரணமாக, விவசாய விளைபொருட்கள் ஏற்றுமதி உட்பட பல புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும். கிராமப்பகுதி சலுகைகளை பெறவும், பல சிறு, குறு தொழிற்சாலைகளும் உருவாகும். இதனால், இப்பகுதி பொருளாதார ரீதியிலும் முன்னேற்றம் அடையும் என்பது, நிபுணர்களின் கருத்து. வளர்ந்த நாடுகளில் உள்ள சாலை வசதிகளை ஏக்கத்துடன் பார்க்கும் நமக்கு, அந்த சாலைகளால் தான், அவை வளர்ந்த நாடுகளாக உள்ளன என்பதை மறந்து விடுகிறோம்.



இந்தக் கட்டுரையின் இரண்டாம் பகுதி

https://numnadu.wordpress.com/2018/06/24/selam-4/

Thursday, June 21, 2018

அசிங்கப்பட்டாரா ஆளவந்தான்? அதிர்ச்சியில் மக்கள் நீதி மய்யம்!

அசிங்கப்பட்டாரா ஆளவந்தான்? அதிர்ச்சியில் மக்கள் நீதி மய்யம்!


டெல்லியில் முகாமிட்டுள்ள நடிகர் கமல்ஹாசன் நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசியிருந்தார். இதனை தொடர்ந்து மரியாதை நிமித்தமாக சோனியா காந்தியையும் சந்திக்க கமல்ஹாசன் அனுமதி கோரியிருந்தார். இதனை ஏற்று கமலை இன்று காலை பத்து மணிக்கு சந்திக்க சோனியா நேரம் ஒதுக்கியிருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை பத்து மணிக்கு தனது நண்பரும் மக்கள் நீதிமய்யம் கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினருமான ஞானசம்பந்தம், பி.ஆர்.பி மாந்வி சர்மா உள்ளிட்டோருடன் கமல் டெல்லியில் உள்ள சோனியா காந்தி வீட்டிற்கு சென்றார். கமலை கை கூப்பி வணக்கம் தெரிவித்து சோனியா காந்தி வரவேற்றார். கமல் பூங்கொத்து கொடுத்து சோனியாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது கமலுடன் சென்றவர்கள் புகைப்படம் எடுக்க முயன்றுள்ளனர். உடனடியாக சோனியாவின் தனிச் செயலாளர் ஒருவர் புகைப்படம் எடுக்க கூடாது என்று தடை போட்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கமலின் பி.ஆர்.ஓ மாந்வி தங்களுக்கு சோனியா – கமல் சந்திப்பு தொடர்பான புகைப்படம் தேவை என்று கூறியுள்ளார். ஆனால் சோனியாவின் செயலாளர் நிச்சயமாக புகைப்படத்திற்கு அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளார்.

உடனடியாக கமலிடம் சென்று புகைப்படத்திற்கு அனுமதி மறுக்கப்படுவதாக மாந்வி புகார் கூறியுள்ளார். கமல் உடனடியாக சோனியாவிடம் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். அதற்கு சோனியா காந்தி மரியாதை நிமித்தமான சந்திப்பு தானே புகைப்படம் எதற்கு என்று கமலை பார்த்து பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனால் கமலும் செய்வதறியாது திகைத்து நின்றுள்ளார். உடனடியாக சோனியாவின் செயலாளர், யாரும் புகைப்படம் எடுக்க கூடாது என்று கூறியதுடன் யாரும் புகைப்படம் எடுக்கவில்லை என்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டார்.

சோனியாவை கமல் சந்திக்க சென்றதே உடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு அதனை ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்த தான், ஆனால் புகைப்படத்திற்கு கமல் கேட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது சோனியா வீட்டில் அவருக்கு நேர்ந்த அவமானம் என்றே அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

பசுமைவழி சாலைக்கு எதிர்ப்பு? தீக்குளிக்க முயற்சித்த விவசாயிகள்!

பசுமைவழி சாலைக்கு எதிர்ப்பு? தீக்குளிக்க முயற்சித்த விவசாயிகள்!


சேலம்-சென்னைக்கு 10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி விரைவு சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாலை, காஞ்சீபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. மேலும் 40 ஆயிரம் வீடுகள், 8 மலைகளும் உடைக்கப்பட உள்ளது.
சாலை அமைப்பதற்கான நில அளவீடு பணிகள் கடந்த 18-ந்தேதி தொடங்கின. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், பொதுமக்கள் திரண்டு வந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதுடன் கண்ணீர் விட்டு கதறி வருகிறார்கள்.
சேலம்-சென்னை 8 வழி சாலை திட்டம் சேலம் மாவட்டத்தில் 29 கிராமங்களில் 36 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கப்படுகிறது. இதற்கு நிலம் கையகப்படுத்தும் பணியை வருவாய் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
இன்று சேலத்தை அடுத்த காரிப்பட்டி, மாசிநாயக்கன்பட்டி, உடையாப்பட்டி பகுதிகளில் நில அளவீடு பணி நடக்கிறது. இதையொட்டி அந்த பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டத்திற்கு தூண்டியவர்கள் கைது செய்யப்பட்டதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மட்டும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அதனை அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் தொடர்ந்து நில அளவீடு பணிகள் துரிதமாக நடக்கிறது.
தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா பகுதியில் 8 வழிச்சாலைக்காக கடந்த ஒரு வாரமாக நில அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா கொக்கராப்பட்டியில் இருந்து நிலம் அளவீடு செய்யும் பணி நடந்தது.
எருமியாம்பட்டியைச் சேர்ந்த காந்தி மனைவி கனிமொழிக்கு சொந்தமான பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வீடு, ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான 11.4 ஏக்கர் மாந்தோப்பு, தென்னந்தோப்பு, பாசன கிணறு ஆகியவையும் கையகப்படுத்த உள்ளது.
இதனை அறிந்த கனிமொழி, ஜெகதீஸ்வரி ஆகியோர் நிலம் அளவீடு செய்தவர்களிடம் வந்து நிலத்தை கையகப்படுத்த வேண்டாம், என கண்ணீர் மல்க கூறினார்கள்.
பாப்பம்பாடி பகுதியில் நிலத்தை அளவீடு செய்தபோது அதே பகுதியைச் சேர்ந்த குமரேசன் (வயது 42) என்பவரின் வீட்டின் நடுவே சாலை அமைய இருப்பதை அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தார்.
புதிதாக கட்டிய வீடும் பாதிக்கப்பட இருப்பதால் அவர் வேதனை அடைந்தார். நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து குமரேசன், அவருடைய மனைவி வேடியம்மாள் (34), மகன் சுஜித் (20) ஆகிய 3 பேரும் தலையில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
இதைப்பார்த்ததும் அருகில் நின்ற ஏட்டு சிவகுமார் மற்றும் பலர் விரைந்து சென்று மண்எண்ணெய் கேனை பறித்தனர். அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனாலும் நிலம் அளவீடு செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்றது.
தருமபுரி மாவட்டத்தில் 56 கிலோ மீட்டர் தூரத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக 1846 விவசாயிகளிடம் 439 ஹெக்டேர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது.
இதற்கான நிலங்களை அளவீடு செய்து, முட்டுக்கல் நடும் பணிகள் கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. எருமியாம்பட்டி பகுதியில் இருந்து தருமபுரி-சேலம் எல்லையான மஞ்சவாடி கணவாய் வரை நிலங்களை அளவிடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
இன்று 9-வது நாளாக பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த இருளப்பட்டி கிராமத்தில் அதிகாரிகள் நில அளவீடு செய்ய வந்தனர். அப்போது அதே கிராமத்தில் உள்ள 3 குடும்பத்தை சேர்ந்த 9 பேர் தங்களது உடலில் மண்எண்ணெய் மற்றும் பெட்ரோலை கலந்து ஊற்றிக்கொண்டு தீக்குளிப்பதாக மிரட்டினார்கள்.
அவர்கள் கையில் உள்ள தண்ணீர் கேனில் பெட்ரோல் மற்றும் மண்எண்ணெய்யும் இருந்தது. எங்கள் நிலங்களை அளவீடு செய்தால் தீக்குளிப்போம் என்று அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷம் எழுப்பினர்.
அதிகாரிகள் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் அவர்கள் சமாதானம் அடையவில்லை. இதனால் அந்த கிராமத்தில் நில அளவிடும் பணியை கைவிட்டுவிட்டு ஏ.பள்ளிப்பட்டி கிராமத்துக்கு சென்று நில அளவிடும் பணியை தொடர்ந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம், கலசபாக்கம், சேத்துப்பட்டு, போளூர், செய்யாறு, வந்தவாசி ஆகிய தாலுகாவில், 122 கிமீ தூரத்துக்கு சாலை அமைகிறது. இதற்காக 74 கிராமங்களில் 7237 குடும்பத்தினரின் நிலம் கையகப்படுத்தப்படுகிறது.
இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பசுமை வழிச்சாலை திட்டம் குறித்த கலந்துரையாடல் கூட்டம் திருவண்ணாமலை புதிய பைபாஸ் சாலையில் வட ஆண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள ஒரு தனியார் மணிலா ஆலையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
அங்கு வந்த விவசாயிகள் சங்க நிர்வாகிகள் உள்பட 21 பேரை போலீசார் கூட்டம் நடத்த அனுமதி கிடையாது என்று கூறி கைது செய்தனர்.
இதனால் கூட்டம் நடந்த இடத்தை மாற்றி வேங்கிக்காலில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், அகில இந்திய விவசாயிகள் சங்க துணைச் செயலாளர் விஜூகிருஷ்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் தலைமையில் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் பசுமை வழிச்சாலை திட்டத்தால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் நிலங்களையும், வீடுகளையும் இழந்து, வீதிக்கு தள்ளப்படும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. எனவே, தங்களுடைய எதிர்ப்பை மத்திய-மாநில அரசுகளுக்கு தெரிவிக்கும் வகையில், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் வீடுகள், நிலங்களில் வரும் 26-ந் தேதி கருப்பு கொடியேற்றப்படும்.
ஜூலை 6-ந் தேதி 5 மாவட்ட தலைநகரங்களிலும் பசுமை வழிச்சாலை அமைக்கும் அரசாணையை எரிக்கும் போராட்டம் நடத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கைதான 21 விவசாயிகளை விடுவிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக சென்றனர். அவர்களிடம் எஸ்.பி. பொன்னி பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து 21 பேரும் விடுவிக்கப்பட்டனர்.
இதுவரை சேலம், தர்மபுரியில் மட்டுமே போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், தற்போது திருவண்ணாமலை மாவட்டத்திலும் போராட்டம் பரவியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலும், விவசாயிகள் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. அதை முன் கூட்டியே தடுத்து நிறுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அதற்காக, முன்னெச்சரிக்கையாக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
திருவண்ணாமலையில் நடந்த விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டத்தில், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகி விஜூ கிருஷ்ணன் கலந்து கொண்டார். இவர் கடந்த மார்ச் மாதம் மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாய கடனை தள்ளுபடி செய்யக்கோரி லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்ற பேரணியை ஒருங்கிணைத்ததில் முக்கிய பங்காற்றியவர்.
எனவே, இவரது நடவடிக்கைகளை கண்காணிக்கும் பணியில் உளவுத்துறை போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

உயருகிறதா மின் கட்டணம்? தமிழக மக்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

உயருகிறதா மின் கட்டணம்? தமிழக மக்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!


தமிழ்நாட்டில் சுமார் 3 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இதில் 2.2 கோடி வீட்டு மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகள், தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு 33 லட்சம் மின் இணைப்புகளும் உள்ளது.

மின் இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு சில வருடங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. ஆனால் புதிதாக மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணம் உயர்த்தப்படுவதில்லை.

கடைசியாக கடந்த 1999-ம் ஆண்டு மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டது. தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் பெறுவதற்கான கட்டணத்தை உயர்த்த மின் வாரியம் திட்டமிட்டுள்ளது.

சென்னையில் உள்ள வீடுகளுக்கு ஒருமுனை மின்சார இணைப்பு பெற தற்போது ரூ.1,600 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை ரூ.9,800 ஆக உயர்த்த உள்ளனர்.

மும்முனை மின்சார இணைப்பு கட்டணத்தை ரூ.7,475-ல் இருந்து ரூ.35 ஆயிரம் ஆக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் ரூ.18 ஆயிரமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் தொழிற்சாலைகள், வர்த்தக மின் இணைப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்தவும், முடிவு செய்துள்ளனர்.

துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை மீண்டும் பெறுவதற்கும், மின் கட்டணத்துக்கு கொடுக்கும் காசோலைகள் பணம் இல்லாமல் திரும்பினால் அதற்காக வசூலிக்கப்படும் அபராத தொகையை உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளன.

புதிய கட்டண உயர்வை அமல்படுத்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

மின்வாரியத்தின் பரிந்துரையை ஒழுங்கு முறை ஆணையம் அப்படியே ஏற்றுக் கொள்ளுமா? அல்லது மறுபரிசீலனை செய்ய சொல்லுமா? என்பது இனிமேல்தான் தெரியவரும்.

ஆணையம் ஒப்புதல் வழங்கியதும் புதிய கட்டண உயர்வு எவ்வளவு என்பது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

Wednesday, June 20, 2018

கூட்டணி முறிந்தது ஏன்? அமித்ஷா விளக்கம்

கூட்டணி முறிந்தது ஏன்? அமித்ஷா விளக்கம்


ஜம்மு - காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியுடனான (பிடிபி) கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை, 2019 மக்களவைத் தேர்தலை மனதில்கொண்டு எடுக்கவில்லை' என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரில் பிடிபி அரசுக்கு அளித்த வந்த ஆதரவை, பாஜக செவ்வாய்க்கிழமை திரும்பப் பெற்றது.
இதையடுத்து, அந்த மாநிலத்தில் ஆட்சி கவிழ்ந்தது. தற்போது அங்கு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
தேச நலன்களை கருத்தில் கொண்டே பிடிபி கூட்டணியில் இருந்து வெளியேறியதாக பாஜக தெரிவித்தாலும், 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டே பாஜக இந்த முடிவை எடுத்ததாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா முதல் முறையாக புதன்கிழமை கருத்து தெரிவித்தார். தில்லியில் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், இதுகுறித்து கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறும் முடிவை, 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு எடுக்கவில்லை. அப்படி நினைத்திருந்தால், இன்னும் 6 மாதங்கள் கழித்து அந்த முடிவை எடுத்திருப்போம்.
ஜம்மு, காஷ்மீர், லடாக் என 3 பிராந்தியங்களிலும் சமமான வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்று பாஜக முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், மாநில அரசுக்கு நெருக்கடி அளித்து வந்த சில குழுக்கள், அந்த முயற்சிகளை தடுத்துவிட்டன. காஷ்மீர் பண்டிட்டுகளை மறு குடியமர்த்தும் பணிகளில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. பல்வேறு விவகாரங்களிலும் இதே நிலை நிலவியது. அத்துடன், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலையும் சீர்குலைந்துவிட்டது. எனவே, எத்தனை காலத்துக்குதான் அமைதியாக காத்திருக்க முடியும்?
கடந்த 2015-ஆம் ஆண்டில் மாநிலத்தில் ஆட்சியமைப்பதற்காக பிடிபியுடன் பாஜக கைகோத்தபோது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இப்போது பிடிபி அரசுக்கு அளித்த வந்த ஆதரவை விலக்கும் முடிவை பாஜக எடுத்திருப்பதாலும் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வளர்ச்சி அரசியலை முன்வைத்தே பிடிபி கட்சியுடன் நாங்கள் கூட்டணி அமைத்தோம். எனினும், காஷ்மீர் தொடர்பான கொள்கையை, பாஜக எப்போதுமே மாற்றிக் கொண்டதில்லை என்றார் அவர்.
இந்த விவகாரம் தொடர்பாக பாஜக பொதுச் செயலர் ராம் மாதவ் கூறியதாவது:
தேச நலன்களைவிட உள்ளூர் அரசியல் ஆதாயங்களே அவர்களுக்கு (மக்கள் ஜனநாயக கட்சி) முக்கியமாக தெரிந்தது. அவர்களுடன் இணைந்து, மாநில நலனுக்காக பல்வேறு விஷயங்களை மேற்கொள்ள முயன்றோம்.
பிடிபி தலைவர் மெஹபூபா முஃப்தியின் கோரிக்கையை ஏற்று, காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்தும் முடிவை பிரதமரும் உள்துறை அமைச்சரும் மேற்கொண்டனர்.
ஆனால், காவல்துறையினரும் அப்பாவி பொது மக்களும் பயங்கரவாதிகளால் கொல்லப்படுவதை சகித்துக் கொள்ள முடியாது என்றார் அவர்.

அதிகளவில் "உயிர்பலி" கேட்கும் மெரினா கடற்கறை?

அதிகளவில் "உயிர்பலி" கேட்கும் மெரினா கடற்கறை?


தமிழகக் கடற்கரைகளிலேயே அதிகமான மனித உயிர்களைப் பலிவாங்கும் இடமாகச் சென்னை மெரினா கடற்கரை மாறியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 64 பேர் பலியாகியுள்ளனர்.

ஆசியாவிலேயே அழகிய கடற்கரையை சென்னை மெரினா கடற்கரையாகும். சென்னையில் வசிக்கும் மக்களுக்கு வார விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் பொழுதுபோக்கும் முக்கிய இடமாக மெரினா கடற்கரை இருக்கிறது. விடுமுறை நாட்களில் இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் குளித்து, விளையாடி மகிழ்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

ஆனால், அவ்வாறு கடலில் விளையாடுபவர்கள் அதிகமான ஆழத்தில் செல்லும்போது மிகப்பெரிய அலைகளில் சிக்கி தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். இதைத் தடுக்கும் வகையில், கடந்த சில ஆண்டுகளாக கடலோரப் பாதுகாப்புப் படையினர் தீவிரப் பாதுகாப்பில் ஈடுபட்டு, கடலில் குளிப்பவர்களை ஒழுங்குபடுத்துகின்றனர். ஆனால், அதையும் மீறி அதிதீவிர உற்சாகத்தில் குளிக்கும் இளைஞர்கள் சிலர் தங்கள் உயிரை மாய்க்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.

இதைத் தடுக்கும் வகையில் சமீப காலமாகக் கடலோர பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பு கோபுரம் அமைத்து கடலில் குளிப்பவர்களைக் கண்காணித்து வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் கடலில் குளிக்கச் சென்று பலியான சம்பவம் சென்னை மெரினாவில் அதிகமாக நடந்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டில் 40 பேரும், 2017-ம் ஆண்டில் 19 பேரும், 2018-ம் ஆண்டில் இதுவரை 5 பேரும் மெரினாவில் குளிக்கச் சென்று பலியாகி இருக்கிறார்கள்.

அதற்கு அடுத்த இடத்தில் சென்னைக்கு அருகே இருக்கும் மாமல்லபுரம் கடலில் குளிக்கச் சென்று அதிகமானோர் பலியாகி இருக்கிறார்கள். கடந்த 2016-ம் ஆண்டு 14 பேரும், 2017-ம் ஆண்டு 16 பேரும், இந்த ஆண்டில் ஒருவரும் பலியாகியுள்ளனர்.

விழுப்புரம் கடலில் கடந்த 2016-ம் ஆண்டு 9 பேரும், கடந்த 2017-ம் ஆண்டில் 9 பேரும் பலியாகி இருக்கிறார்கள். கடலூர் கடலில் கடந்த 2016-ல் 5 பேரும், 2017-ம் ஆண்டில் 3 பேரும், 2018-ம் ஆண்டில் இதுவரை ஒருவரும் பலியாகி இருக்கிறார்கள்.

நாகப்பட்டினம் கடலில் கடந்த 2016-ல் 16 பேரும், கடந்த ஆண்டில் 12 பேரும் இறந்துள்ளனர். வேதாரண்யத்தில் கடந்த இரு ஆண்டுகளில் கடலில் குளித்து 11 பேரும், முத்துப்பேட்டையில் கடந்த ஆண்டு 2 பேரும் இறந்துள்ளனர்.

ராமேஸ்வரம் கடலில் கடந்த 2016-ல் 19 பேரும், கடந்த ஆண்டு 20 பேரும் கடலில் குளிக்கச் சென்று உயிரிழந்துள்ளனர். கன்னியாகுமரி கடலில் கடந்த 2016-ம் ஆண்டு ஒருவரும், கடந்த ஆண்டு15 பேரும், இந்த ஆண்டு இருவரும் இறந்துள்ளனர் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து கடலோரப் பாதுகாப்புப் படையினர் கூறுகையில், ''எங்களின் எச்சரிக்கையையும் மீறி கடலில் குளிக்கச் சென்று மூழ்குபவர்கள்தான் மிகப்பெரிய கவலையாக இருக்கிறார்கள். பெரும்பாலும் வெளியூரில் இருந்து சுற்றுலா வரும் பயணிகள் ஆர்வ மிகுதியில் கடலில் இறங்கி சிக்கிக் கொள்கின்றனர். இங்குள்ள மீனவர்கள், போலீஸார் முடிந்தவரை கடலில் சிக்கியவர்களை மீட்கிறார்கள். அதிலும் மெரினா கடற்கரை என்பது, நதிகளின் முகத்துவாரத்தில் இருப்பதால், அங்கு அலைகளின் வேகம் அதிகமாகவும், ஆழமாகவும், நீச்சல் அடிப்பதும் கடினமாக இருக்கும். சென்னை கடற்கரையைத் தவிர்த்து கடலூர், வேதாரண்யம், கன்னியாகுமரி, ராமநாதபுரம் கடற்கரையும் மிகவும் ஆபத்தானவை.

சுற்றுலாத்துறையுடன் இணைந்து கடலோர பாதுகாப்பு படையினர் தீவிரமாக ரோந்துப் பணியிலும், உயர்கோபுரம் அமைத்தும் பயணிகளைக் கண்காணிக்கிறோம். அதிகமான படகுகள், உயிர்களைப் பாதுகாக்கும் நீச்சல் தெரிந்தவர்கள் ஆகியோர் அதிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலம் முழுவதும் 21 படகுகள் இதற்காகவே உள்ளன. சென்னையில் இரு படகுகள் இருக்கின்றன. அடுத்து வரும் மாதங்களில் 19 படகுகள் வரவுள்ளன. மெரினா கடற்கரையில் மட்டும் 7 கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்துக் கண்காணிக்க இருக்கிறோம், உயிர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் நபர்களையும் நியமிக்க இருக்கிறோம்.

கடலில் சிக்கிக் கொண்டிருப்பவர்களை மீட்க உடனடியாக கடற்கரை பாதுகாப்பு எண் 1093க்கு அழைக்கலாம். உடனுக்குடன் உதவிக்கு வருவார்கள். கடந்த ஆண்டு கடலில் சிக்கித் தவித்த 261 பேர் மீட்கப்பட்டுள்ளனர்'' என்று அவர் தெரிவித்தார்.

முன்னாள் முதல்வரின் மரண மர்மம்! சிக்குகிறாரா சசிகலா?

முன்னாள் முதல்வரின் மரண மர்மம்! சிக்குகிறாரா சசிகலா?


மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கடந்த 9 மாதங்களாக விசாரித்து வருகிறது. ஆணையத்தில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். ஜெயலலிதாவின் குடும்ப மருத்துவர் சிவக்குமார் நேரடியாக வாக்குமூலமும் அளித்து உள்ளார். இதில் , 2016 செப்டம்பர் 22ம் தேதி அன்று போயஸ்கார்டனில் நடந்த சம்பவங்கள் குறித்து இருவரும் அளித்த தகவலில் பல முரண்பாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது.

செப்டம்பர் 22ம் தேதியன்று இரவு 7 மணியளவில் தன்னை சசிகலா தொலைபேசியில் தொடர்பு கொண்டு கார்டன் வருமாறு அழைத்ததாகவும், அப்போது ஜெயலலிதாவுக்கு இருமல், காய்ச்சல் இருப்பதாகவும் சசிகலா கூறினார் என சிவக்குமார் தெரிவித்துள்ளார். ஆனால் சசிகலா அளித்த பிரமாணபத்திரத்தில் மருத்துவர் சிவக்குமாரை தொலைபேசியில் அழைத்தது தொடர்பான தகவல் இல்லை.

செப் 22ம் தேதி மூன்றாவது முறையாக ஜெயலலிதாவை இரண்டாம் தளத்தில் உள்ள அவருடைய அறையில் பார்த்த போது, சசிகலா மட்டுமின்றி இரண்டு பணிப்பெண்கள் இருந்ததாக சிவக்குமார் வாக்குமூலத்தில் கூறியுள்ளார். ஆனால் சசிகலா அளித்த பிரமாணபத்திரத்தில் இரண்டு பணிப்பெண்கள் குறித்த தகவல் இல்லை.

அதேநாள் இரவு ஜெயலலிதா கழிவறை செல்வதாக சொல்லிவிட்டு சென்றதாகவும் அப்போது சசிகலாவை உடன் அழைத்துச்செல்ல நான் அறிவுறுத்தினேன் என்றும், சசிகலா கழிவறையின் வெளி பகுதியில் நிற்க ஜெயலலிதா வெளியே வந்து அவரே படுக்கையில் அமர்ந்து கொண்டதாக கூறியுள்ளார் சிவக்குமார். ஆனால் சசிகலா பிரமாணப் பத்திரத்தில் இரவு 9:30 மணியளவில் உறங்குவதற்கு முன்பாக எப்போதும் போல பல் துலக்க குளியலறைக்கு சென்ற ஜெயலலிதா, ' சசி மயக்கமாக இருக்கிறது இங்கே வா' என்று அழைத்ததாகவும் சசிகலா அவரை உள்ளே சென்று அழைத்து வந்து படுக்கையில் உட்கார வைத்ததாகவும் கூறியுள்ளார்.

பின்னர் கடுமையான இருமல் வந்து அப்படியே தன்மீதும் சசிகலா மீதும் ஜெயலலிதா சாய்ந்துக்கொண்டார் என்பதும் சிவக்குமாரின் வாக்குமூலம். ஆனால் மயங்கிய நிலையில் ஜெயலலிதா தன் தோளில் சாய்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார். குறிப்பாக அப்போது தான் அறைக்குள் டாக்டர் சிவக்குமார் வந்ததாகவும் கூறுகிறார் சசிகலா.

ஜெயலலிதா மயங்கியவுடன் ட்ராலியில் இருந்த அழைப்பு மணியை அழுத்தி, அழைத்ததின் அடிப்படையில் தனிப்பாதுகாவலர்கள் அறைக்குள் வந்ததாக சசிகலா தெரிவித்துள்ள நிலையில், தான் சத்தம் போட்டு அழைத்ததாலேயே தனிப்பாதுகாவலர்கள் அறைக்குள் வந்ததாக சிவக்குமார் முரண்படுகிறார்.

மயங்கியவுடன் ஜெயலலிதா அறைக்கு தனிப்பாதுகாவலர்கள் வீரப்பெருமாள் ,கந்தசாமி , மற்றும் ஓட்டுநர் கண்ணன் மற்றும் பணியில் இருந்த வீட்டு பணியாளர்கள் வந்ததாக சசிகலா கூறியுள்ளார். ஆனால் சிவக்குமாரின் வாக்குமூலத்தில் ஓட்டுநர் கண்ணனும், வீட்டில் பணிபுரிபவர்களும் அறைக்கு வந்ததாக தகவல் இல்லை.

அப்பலோ மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும் போதே கிரீம்ஸ் ரோடு அருகே ஜெயலலிதாவிற்கு நினைவு திரும்பி கண் விழித்து என்னிடம் 'எங்கிருக்கிறேன்' என கேட்க அப்பலோ மருத்துவமனைக்கு செல்கிறோம் கவலைபடாதீங்க என பதிலளித்ததாக சசிகலா பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளார்.

ஆனால் ஆம்புலன்சில் செல்லும் போது சசிகலாவிடம் 'எங்கிருக்கிறேன்' என ஜெயலலிதா கேட்டதாக சிவக்குமார் கூறவில்லை. மாறாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று பதினைந்து நிமிடம் கழித்து சில சோதனைகள் முடிந்த பின்னரே தன் பெயரை குறிப்பிட்டு 'எங்கே இருக்கிறோம்' என ஜெயலலிதா கேட்டதாக சிவக்குமார் வாக்குமூலத்தில் கூறியுள்ளார் .

இவ்வாறு இருவரும் அளித்த தகவல்கள் முரண்படும் நிலையில், ஆணையம் விசாரணையை தீவிரப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இரண்டு முறை மருத்துவர் சிவக்குமாரிடம் விசாரணை நடத்தியுள்ள நிலையில் அடுத்தகட்டமாக சசிகலாவை நேரடியாக விசாரிக்க ஆணையம் தரப்பில் திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

காஷ்மீரில் உடனடியாக தேர்தல் நடத்த வலியுறுத்தல்! நீண்ட கால கவர்னர் ஆட்சிக்கு எதிர்ப்பு?

காஷ்மீரில் உடனடியாக தேர்தல் நடத்த வலியுறுத்தல்! நீண்ட கால கவர்னர் ஆட்சிக்கு எதிர்ப்பு?


காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ‘சில வேலைகள் செய்து கொண்டிருக்கிறோம், உடனடியாக புதிய அரசு அமைய வாய்ப்பில்லை’ என பாஜகவைச் சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் தலைவர் கவிந்தர் குப்தா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சட்டசபையை கலைத்து விட்டு உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சியும், பாஜகவும் கூட்டணி அமைத்துக் கடந்த 3 ஆண்டுகளாக ஆட்சி நடத்தின. கூட்டணிக்குள் ஏற்பட்ட சலசலப்பால் அரசுக்கு அளித்த ஆதரவை பாஜக கட்சி வாபஸ் பெற்றது.

இதைத் தொடர்ந்து பெரும்பான்மை இல்லாத காரணத்தால், முதல்வர் பதவியை மெகபூபா முப்தி ராஜினாமா செய்து, கடிதத்தை ஆளுநர் என்.வோராவிடம் அளித்தார்.

மேலும் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சியும், தேசிய மாநாட்டுக்கட்சியும் முன்வரவில்லை இதனால், மாநிலத்தில் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்காத சூழலில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

2019-ம் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த பாஜக தலைமை விரும்புவதாகவும், அதற்கு ஏற்ப தற்போது ஆளும் கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறி ஆளுநர் ஆட்சியை அமல்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் காஷ்மீர் முன்னாள் துணை முதல்வர் கவிந்தர் குப்தா சில தகவல்களை கூறியுள்ளார். அவர் கூறுகையில் ‘‘காஷ்மீரில் உடனடியாக வேறு ஒரு அரசு அமைய வாய்ப்பில்லை. ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது குழப்பமான சூழல் உள்ளது. சில வேலைகளை செய்து வருகிறோம். அதை மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.

இதுகுறித்து தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘காஷ்மீர் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை மத்திய அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் தற்போது ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதை காரணமாக வைத்துக் கொண்டு கொல்லைபுறமாக இங்கு ஆட்சி நடத்த முயலுகிறது. இதை ஏற்க முடியாது. சட்டப்பேரவையை கலைத்துவிட்டு உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும். மக்கள் விரும்பும் அரசு காஷ்மீரில் பதவியேற்க வேண்டும்’’ எனக் கூறினார்.

காஷ்மீரில் ஆறு மாதத்திற்கு பின் ஆளுநர் ஆட்சியை நீட்டிக்க வேண்டும் என்றால் நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற வேண்டும். தற்போதைய ஆளுநர் ஆட்சி அதிகபட்சமாக டிசம்பர் வரை நீட்டிக்க முடியும். அதன் பிறகு நீட்டிக்க நாடாளுமன்ற ஒப்புதல் தேவை. டிசம்பருக்கு பிறகு நாடளுமன்ற இடைக்கால ஒப்புதல் பெற்று சில காலம் ஆளுநர் ஆட்சியை நீட்டிக்கவும், பின்னர் நாடாளுமன்ற பொதுத் தேர்தலுடன் சேர்ந்து காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு? விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு!

ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு? விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு!


ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு வழங்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து வரும் 25-ம் தேதி தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் அரசாணையின்படி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. மேலும், ஆலைக்கான மின்இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், இரு நாட்களுக்கு முன்னர் ஸ்டெர்லைட் ஆலையின் தாமிர உருக்குப் பிரிவு அருகேயுள்ள கந்தக அமிலம் சேமிப்பு டேங்கில் கசிவு இருப்பது போலீஸ் ரோந்துப் பணியின்போது கண்டறியப்பட்டது. கந்தக அமிலம் முழுவதையும் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இதுதொடர்பாக ஸ்டெர்லைட் நிர்வாகம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “ஏதேனும் விபத்து ஏற்படாமல் தடுக்க, கந்தக அமிலம் கசிவைச் சரிசெய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்க எங்களை அனுமதிக்குமாறு மாவட்ட நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

வழக்கமான பராமரிப்புப் பணிகள் நடைபெறாததால் இதுபோன்ற விபத்துகள் நிகழ வாய்ப்புள்ளதை அறிந்து, ஆலையில் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள குறைந்த மனித சக்தி மற்றும் மின்சக்தியை வழங்குமாறு தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்திருந்தோம். ஆனால், இந்த கோரிக்கை இப்போது வரை நிலுவையில் உள்ளது. விபத்துகளைத் தவிர்க்க ஆலையைக் குறைந்த அளவு பராமரிக்க எங்களை அனுமதிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று (புதன்கிழமை) நீதிபதிகள் சி.டி.செல்வம், பஷீர் அகமது முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கந்தக அமிலத்தை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது என தமிழக அரசு வாதத்தை முன்வைத்தது. அப்போது, ஆலைக்குள் கச்சா பொருட்கள், ரசாயனங்கள் இருப்பதாகவும், அதனால், ஏற்படும் பேரிழப்பைத் தடுக்க மின் இணைப்பு வழங்க வேண்டும் எனவும் ஸ்டெர்லைட் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு வழங்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து வரும் 25-ம் தேதி தமிழக அரசு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சேலத்தில் தீவிரமாகும் போராட்டங்கள்! அரசிடம் மக்கள் எதிர்பார்க்கும் முடிவு என்ன?

சேலத்தில் தீவிரமாகும் போராட்டங்கள்! அரசிடம் மக்கள் எதிர்பார்க்கும் முடிவு என்ன?


நெடுவாசல் மீத்தேன் எதிர்ப்பு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு, சேலம் விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு எதிர்ப்பு என தொடர்ந்து மக்கள் போராட்டங்களால் தமிழக அரசை கவிழ்க்க எதிர்க்கட்சிகளும்,உதிரிக்கட்சிகளும் தங்களது திட்டத்தை செயல்படுத்த அப்பாவி பாமர மக்களை பயன்படுத்தி வருகிறார்கள் என்பதே உண்மை....

ஆனால்

போராட்டங்களை முன்னெடுத்துப் போராடும் மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்த முயற்சிக்காமல், போராட்டங்களை பின்னிருந்து இயக்கும் சில அமைப்புகள்,மற்றும் கட்சிகளின் நிர்வாகிகளை அழைத்து சமாதானம் பேசிவரும் அரசு அதிகாரிகளின் வீண் முயற்சிகளால் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர முடியாமல் மேற்கண்ட போராட்டங்கள் தொடர்புடைய பேச்சு வார்த்தைகள் அரசுக்கு தோல்வியையே தந்துள்ளது என்பதே நிதர்சனமான உண்மை!!!

  • இந்நிலையில் என்நாடு செய்திகள் குழு மூலமாக சேலம் மாவட்டத்தில் தற்போது தீவிரமாகிக் கொண்டிருக்கும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர எந்த மாதிரியான அறிவிப்புகளை மக்கள் அரசிடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள் என்று கள ஆய்வு செய்து கண்டறிந்த தகவல்களை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் நேரடிப் பார்வைக்கு கொண்டு செல்ல கீழ்க்கண்ட தகவல்கள் பணிந்தனுப்படுகிறது.


1) அரசு தரும் இழப்பீட்டுத் தொகை போதுமானதாக இல்லை.

சேலம் மாவட்டத்தில் விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கும், பசுமை வழிச்சாலை பணிகளுக்கும் தமிழக அரசால் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு அரசாங்க நில மதிப்பீட்டின் படி வழங்கப்படும் தொகையானது தற்போதைய வெளிமார்க்கெட் விலையை விட மிகவும் குறைவாக இருப்பதாக மக்கள் கருதுகிறார்கள்.

மேலும் போராடும் மக்களில் 20% பேர்கள் பல ஆண்டுகளாக விசைத்தறி மற்றும் பட்டு கைத்தறியை தொழிலாக கொண்ட மக்களாவர். இவர்களின் நிலங்களை அரசாங்கத்திற்கு வழங்க தயாராக இருந்தாலும், அரசால் அரசின் நில மதிப்பீட்டின்படி வழங்கப்படும் சொற்ப தொகையை வைத்து தனியார் நில மதிப்பீட்டின் படி வேறு இடம் வாங்கி தொழில் செய்வதென்பது மிகவும் கடினமான காரியம் என கருதுகிறார்கள்....

மேலும் புதிதாக ஒதுக்கட்டுள்ள நிலங்களில் வீடுகட்டி குடியேறுவதற்க்கும், தறிகளை நிர்மானித்து இயக்கவும் தேவையான நிதி உதவிகளையும் அரசு தரப்பில் செய்து தருவதாக உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்...

2) வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்பதை விட குடும்பத்தில் ஒருவருக்கு உறுதியான அரசாங்க வேலை என்ற உத்தரவாதம்!

நிலம் வழங்கத் தயாராக உள்ள மக்கள் எதிர்பார்க்கும் மற்றொரு விஷயம், நிலம் வழங்கும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசாங்க வேலைகளில் சேர்வதற்க்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்ற அரசின் உத்தரவாதத்தை ஏற்க மக்கள் மறுக்கிறார்கள்.

காரணமாக அவர்கள் கூறுவது என்னவெனில் எங்கள் குடும்பங்களில் பெரும்பாலானோர் முப்பது வயதிற்க்கு மேற்பட்டவர்கள், அப்படியிருக்கும் போது அரசாங்க வேலைகளில் சேர்வதற்கு எதேனும் அரசின் அறிவிப்புகள் வெளியாகும் வரை காத்திருந்து, தேர்வெழுதி வேலையில் சேர்வதற்குள் அரசாங்க வேலையில் சேர அரசு நிர்ணயித்துள்ள வயதை கடந்து விடும் நிலையே அதிகம். எனவே நிலம் வழங்கும் விவசாயிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு நிச்சயமாக அரசுப் பணி வழங்கப்படும் என்ற உறுதியான உத்தரவாதத்தை எதிர்பார்க்கும் மக்களும் பெரும்பகுதியாக உள்ளனர்....

3) பல ஆண்டுகளாக அரசாங்க நிலங்களில் வீடுகட்டி வசித்து வரும் படிப்பறிவில்லாத மக்களுக்கும் அரசின் இழப்பீட்டுத் தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்!

நிலமற்ற பாமர மக்களில் ஒரு பகுதி மக்கள் பல ஆண்டுகளால அரசின் நிலங்களில் (புறம்போக்கு) வீடுகள் கட்டி அனுபோகம் செய்து வருகிறார்கள். அப்படி குடியிருக்கும் மக்களில் பெரும்பாலானோர் அரசின் இலவச மனைப்பட்டா வாங்க முயற்சிக்காமலும், இலவச மனைப்பட்டாவிற்க்கு விண்ணப்பித்தும் மனைப்பட்டா வழங்கப்படாத நிலையிலும் வசித்து வருகிறார்கள். அப்படிப்பட்ட மக்களுக்கு அரசின் இழப்பீட்டுத் தொகை கிடைக்காது என்பதால் தற்போது போராட்டங்களை தீவிரப்படுத்திவரும் பல்வேறு எதிர்க்கட்சிகளும், அமைப்புகளும் இந்த மூன்றாவது வகை மக்களிடம் பேசி போராட்டங்களைத் தீவிரப்படுத்தி வருகிறார்கள்!

4) நிலம் வழங்கும் மக்கள் வைக்கும் பிரதான கோரிக்கை!

அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு மாற்றாக அரசால் வழங்கப்படும் 3 சென்ட் நிலம் போதுமானதாக இருக்காதெனவும், தறி வைத்து பிழைப்பு நடத்தும் குடும்பங்களுக்கு கூடுதல் அளவீட்டில் நிலங்கள் கிடைத்தால் மட்டுமே தங்களால் தறி வைத்து பிழைப்பு நடத்த முடியும், மேலும் தங்களுக்கு ஒதுக்கப்படும் நிலமானது தாங்கள் வசித்துவரும் பகுதிகளையொட்டிய பகுதிகளிலேயே இருந்தால் மட்டுமே தங்களால் நிம்மதியாக வாழ முடியும், வேறு பிரிவு( சாதி) மக்கள் வசிக்கும் பகுதிகளில் தங்களுக்கு ஒதுக்கப்படும் நிலங்களில் வசிக்க நேர்ந்தால் பிற்காலத்தில் சாதீய துவேஷங்களாலும் தங்களுடைய வாழ்க்கை பாதிக்கப்படுமென்றும் தெரிவித்துள்ளனர் போராட்டங்களை முன்னெடுத்து வரும் மக்கள் .

மக்களுடைய போராட்டங்களை தடுக்க முயல்வது மேலும் போராட்டங்களின் தன்மையை மேலும் தீவிரப்படுத்தவே செய்யும்!அதனால் தமிழக அரசு தேவையற்ற சர்ச்சைகளில் சிக்க நேரிடும் என்பதற்க்கு தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சினை நமக்கு படிப்பினை கொடுத்துள்ளது.

எனவே மீண்டும் தூத்துக்குடி சம்பவம் போன்று வேறு எங்கும் நடைபெறாதவாறு மக்கள் போராட்டங்களின் ஆணிவேர் எதுவென கண்டறிந்து செயல்படுவதன் மூலம் புரட்சித்தலைவி அம்மாவின் மக்களால் நாம் மக்களுக்காக நாம் என்ற உயரிய வழியில் மக்கள் விரும்பும் அரசாக தொடர்ந்து தமிழகத்தை ஆட்சி செய்ய முடியும்.

Ennadu news க்காக ஆ.சகாயராஜா பரமக்குடி.

ஜம்மு-காஷ்மீர் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த "ஆளுநரின் தொலைபேசி அழைப்பு!

ஜம்மு-காஷ்மீர் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த "ஆளுநரின் தொலைபேசி அழைப்பு!


மெஹபூபா முஃப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி-பாஜக கூட்டணி அரசின் ஆட்சியானது, ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநர் என்.என். வோராவின் தொலைபேசி அழைப்பு மூலம் முடிவுக்கு வந்திருக்கும் தகவல் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு அதிகாரிகள் கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீர் தலைமை செயலகத்தில் மெஹபூபா முஃப்தி தனது வழக்கமான பணிகளில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தார். அப்போது தலைமை செயலர் பி.பி. வியாசுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய ஆளுநர் வோரா, முதல்வர் மெஹபூபா முஃப்தி எங்குள்ளார்? அவருடன் உடனடியாக தொலைபேசியில் பேச ஏற்பாடு செய்யுங்கள் எனக் கேட்டார்.
தில்லியில் பாஜக பொது செயலாளர் ராம் மாதவ், மெஹபூபா அரசுக்கு அளித்த ஆதரவை பாஜக வாபஸ் பெறுவது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இந்த தொலைபேசி அழைப்பு வந்தது.
இதைத் தொடர்ந்து, மெஹபூபாவுடன் வோரா தொலைபேசியில் பேசுவதற்கு வியாஸ் ஏற்பாடு செய்தார். அப்போது மெஹபூபா முஃப்தியிடம், பாஜக மாநில தலைவர் ரவீந்தர் ரெய்னாவிடம் இருந்து தனக்கு கடிதம் வந்திருப்பதாகவும், அந்த கடிதத்துடன் பாஜக அமைச்சர்கள் ராஜிநாமா கடிதங்களும் வந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
மெஹபூபா அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக திரும்பப் பெற்றுக் கொள்வதென்று முடிவு செய்திருப்பதையும் வோரா தெரியப்படுத்தினார்.
ஆளுநர் தொலைபேசியில் தெரிவித்த இந்தத் தகவலை மெஹபூபா முஃப்தி பொறுமையாகவும், அமைதியாகவும் கேட்டார். அதன்பின்னர் இந்த விவகாரம் குறித்து பாஜகவுடன் இனி பேச்சுவார்த்தை நடத்துவதில்லை என்று அவர் முடிவெடுத்தார். ஆளுநரை சந்தித்து முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வது தொடர்பான கடிதத்தை அளிக்கும் முடிவையும் அவர் எடுத்தார்.
இந்த நிகழ்வுகளுக்கு பின்னரே, தில்லியில் பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ், மெஹபூபா முஃப்தி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக திரும்பப் பெறுவது தொடர்பான தகவலை செய்தியாளர்களிடம் வெளியிட்டார் என்று ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

Tuesday, June 19, 2018

லாரி ஸ்ட்ரைக் வாபஸ்?

லாரி ஸ்ட்ரைக் வாபஸ்?


தமிழகம் உள்பட நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை 2-ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம் தொடர்ந்தது. இந்நிலையில், டீசலுக்கு மாநில அரசுகள் விதித்து வரும் வரியை குறைத்தால் போராட்டத்தை வாபஸ் பெற வாய்ப்பு உள்ளது என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்தது.
நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினர். டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், சுங்கச் சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்தும் ஏற்கெனவே லாரி உரிமையாளர்கள் பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். தற்போது டீசல் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் லாரி தொழில் நலிவடைந்து வருவதாக லாரி உரிமையாளர்கள் குறை கூறுகின்றனர்.
இதைத் தொடர்ந்து நாடு தழுவிய அளவில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர்களும் பங்கேற்றுள்ளனர். நாடு முழுவதும் 75 லட்சம் லாரிகள் ஓடும் நிலையில், திங்கள்கிழமை சுமார் 30 சதவீத லாரிகள் இயக்கப்படவில்லை. அதேபோல் தமிழகத்தில் உள்ள சுமார் 5 லட்சம் லாரிகளில் 2 லட்சம் லாரிகள் இயங்கவில்லை.
சரக்கு போக்குவரத்து பாதிப்பு: லாரி உரிமையாளர்களில் ஒரு பிரிவினர் மேற்கொண்டுள்ள இந்த வேலை நிறுத்தம் காரணமாக சரக்கு லாரிகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் சரக்கு போக்குவரத்தில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, காய்கறி, அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருள்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்வதில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது.
ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக நாள்தோறும் 600 லாரிகள் வருவதுண்டு. ஆனால் திங்கள்கிழமை 400 லாரிகளும், செவ்வாய்க்கிழமை 200 லாரிகளும் மட்டுமே வந்தன. இதனால் காய்கறி வரத்து பெரிதும் குறைந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். அதேபோல் தமிழகத்தில் பிற மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் மளிகை பொருள்கள், மஞ்சள், ஜவுளி உள்ளிட்டவையும் தேக்கமடைய தொடங்கியுள்ளன.
ஒரு பிரிவு பங்கேற்கவில்லை: லாரி உரிமையாளர்கள் சங்கங்களிடையே ஒற்றுமை இல்லாத சூழல் நிலவுகிறது. தற்போது வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்காத சங்கங்களைச் சேர்ந்த லாரி உரிமையாளர்கள் ஜூலை 20-ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இருப்பினும் தற்போது நடைபெறும் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு மத்திய அரசு செவிசாய்க்காமல் போனால், ஓரிரு நாள்களில் பிற சங்க நிர்வாகிகளையும் ஒருங்கிணைத்து போராட்டத்தை தீவிரப்படுத்தவும் லாரி உரிமையாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.சுகுமார் கூறியது: எங்கள் போராட்டங்களையும், எங்களின் உணர்வுகளையும் மத்திய அரசு ஒவ்வொரு முறையும் மதிப்பதில்லை. திங்கள்கிழமை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக தெரிவித்தார்கள். ஆனால் இரவு வரை அழைப்பு விடுக்கவில்லை. செவ்வாய்க்கிழமையும் எவ்வித அழைப்பும் அரசிடமிருந்து வரவில்லை. எங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, டீசலுக்கு மாநில அரசுகள் விதிக்கும் வரியை 2 அல்லது 3 சதவீதம் குறைத்தால் கூட வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற வாய்ப்பு உள்ளது. மத்திய அரசு எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தும் வரை திட்டமிட்டப்படி போராட்டத்தை நடத்திச் செல்வோம் என்றார் சுகுமார்.

Monday, June 18, 2018

"தமிழக போலீசார்" தேடிவரும் குற்றவாளி, "தமிழக அமைச்சர் இல்ல விழாவில் பங்கேற்பு?

"தமிழக போலீசார்" தேடிவரும் குற்றவாளி, "தமிழக அமைச்சர் இல்ல விழாவில் பங்கேற்பு?


பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறு வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றம் எஸ்.வி.சேகரை கைது செய்ய தடை விதிக்க மறுத்துவிட்ட நிலையில், தமிழக காவல்துறை, எஸ்.வி.சேகர் தலைமறைவாக இருப்பதாகவும், அவரை தேடி வருவதாகவும் கூறியது.

ஆனால், போலீசாரால் தேடப்பட்டு வரும் எஸ்.வி.சேகரோ, மத்திய மாநில அமைச்சர்களுடனும், கோவில் குளங்களுக்கும் போலீசார் துணையுடன் சென்று வருகிறார். இது பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி பொது மக்களிடத்திலும் தமிழக காவல்துறைமீது கடுமையான அதிருப்தியை உருவாக்கி உள்ளது.


இந்த நிலையில், பல மாவட்டங்களில் எஸ்.வி.சேகர் மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டிய தமிழக காவல் துறையோ, அவரை கண்டும் காணாமல் போகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில், சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூவிடமும் எஸ்.வி.சேகரை இதுவரை கைது செய்யாதது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர்.

ஆனால், சென்னையில் நடைபெற்ற அமைச்சர் கடம்பூர் ராஜூவின் மகன் அருண்குமார்-திவ்யா ஆகியோரின் திருமண நிச்சயதார்த்த விழாவில், போலீசாரால் தேடப்பட்டு வரும் எஸ்.வி.சேகரும் பங்கேற்றார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த புகைப்படத்தை எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்திலும் பதிவிட்டு தான் யார் என்பதை மீண்டும் நிரூபித்து உள்ளார்.

சமீபத்தில், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுடன் பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில், தேடப்பட்டு வரும் குற்றவாளியான எஸ்.வி.சேகர் தமிழக அமைச்சர் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

முகநூல் பக்கத்தில் சாதாரணமாக முதல்வர் குறித்தோ, அமைச்சர்கள் குறித்தோ பதிவிட்டால் ஓடோடி சென்று கைது செய்யும் காவல்துறை, எஸ்.வி.சேகரை கைது செய்ய உச்சநீதி மன்றமே தடை விதிக்க மறுத்து விட்ட நிலையில், தமிழக மக்களையும், தமிழக காவல்துறையையும் பார்த்து எகத்தாளமாக போஸ் கொடுக்கும் எஸ்.வி.சேகரை கைது செய்ய மறுத்து வரும் தமிழக அரசையும், காவல்துறையையின் நடவடிக்கையை கண்டு மக்கள் வெகுண்டு போய் உள்ளனர்.

சமூக வலைதளங்களிலும் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் கடந்த விசாரணையின்போது, எஸ்.வி. சேகரை கைது செய்யாமலேயே, போலீசார் அவர் மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இதனையடுத்து வருகிற 20-ந்தேதி ஆஜராக வேண்டும் எஸ்.வி. சேகருக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Sunday, June 17, 2018

நதிகள் இணைப்பை துரிதகதியில் செயல் படுத்த மத்திய அரசுக்கு கோரிக்கை!!!

நதிகள் இணைப்பை துரிதகதியில் செயல் படுத்த மத்திய அரசுக்கு கோரிக்கை!!!


நிதி ஆயோக் அமைப்பின் 4-வது கூட்டம் டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திரமோடி தலைமை தாங்கினார். இதில் மாநில முதல்-மந்திரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 24-ந்தேதி அன்று ‘தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023’ யை பிரகடனம் செய்தார். தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை மென்மேலும் பன்மடங்கு உயர்த்திக் காட்டும் விதத்தில் பல்வேறு நடவடிக்கைகள், இலக்குகளை உள்ளடக்கி, தொலைநோக்கு திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் வாழ்க்கையில் வளர்ச்சியை எட்டும் விதத்தில், சிறந்த நிர்வாகத்தை உள்ளடக்கி அறிவிக்கப்பட்ட திட்டமாகும்.

நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் கலாசார ரீதியிலும், சமூக ரீதியிலும் மாறுபட்டது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் வளர்ச்சிக்கு வெவ்வேறு விதமான தேவைகள் உள்ளன. ஆகவே பல்வேறு மாநிலங்களின் வளர்ச்சித் தேவைகளை கருத்தில் கொண்டு ஒட்டுமொத்தமாக ‘இந்தியாவின் வளர்ச்சி நிகழ்ச்சி நிரல் 2022’ என்னும் பெயரில் ஒரு திட்டத்தை அறிவித்து அதனை வெற்றிகரமாக அமல்படுத்த வேண்டும். இது இன்றைய ஆற்றல்மிகு பிரதமரான உங்களால் (மோடி) நிச்சயம் முடியும்.

முதலில் விவசாய உற்பத்தியும், உற்பத்தித் திறனும் மேம்படுத்தப்பட வேண்டும். சிறந்த நீர்பாசன நிர்வாக நடைமுறை அமல்படுத்தப்பட வேண்டும். தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு, பால் பண்ணை மற்றும் மீன்வளம் ஆகியவற்றை உள்ளடக்கிய விவசாயத்தில் திடீர் பொருளாதார தடைகள் மற்றும் இயற்கை பேரிடர் அதிர்ச்சிகள், விவசாயிகளை பாதிக்காமல் இருக்க செயல்படுத்தக்கூடிய விரிவான சமூக பாதுகாப்பு திட்டத்துக்கு வழி காணப்பட வேண்டும்.

விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக்குவது எப்படி என்பதற்கான வழி வகைகளை கண்டறியும் விதத்தில் இன்றைய கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. மின்னணு நிர்வாக தேசிய விவசாய சந்தை உருவாக்கப்பட வேண்டும். அதேபோன்று மண் வளம், ஆரோக்கிய அட்டைகள் வழங்கப்பட வேண்டும். பின்தங்கிய, முற்பட்ட விற்பனைச் சந்தை இணைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். பாசனத்துக்கு தண்ணீர் பராமரிப்பு, பயன்பாட்டில் சிறந்த நிர்வாகம் நடத்தப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் இருக்கும் 30 ஒழுங்குபடுத்தப்பட்ட விற்பனை சந்தைகளை மேலும் வலிமைப்படுத்த உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்துதர இந்த திட்டத்தில் நிலுவையில் இருக்கும் ரூ.13 கோடியே 50 லட்சத்தை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சிந்தனையில் உதித்த ‘மண்வள ஆரோக்கியம் அட்டை’ திட்டம், 2011-2012-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை தமிழகத்தில் 100 கிராமங்களில் முன்னோடி திட்டமாக செயல்படுத்த திட்டமிட்டு இருக்கிறோம். நடப்பு ஆண்டில் மண்வள அட்டை அடிப்படையிலான சிபாரிசுகளின் பலன்களை விவசாயிகளுக்கு எடுத்துக்காட்ட 4 ஆயிரத்து 270 செயல்முறை விளக்க கூட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளோம். விவசாயிகள் மத்தியில் இந்த மண் சோதனை வசதிகளை கொண்டு சேர்த்தால் மட்டுமே இந்த திட்டத்தை வெற்றி பெறச் செய்ய முடியும். இந்த மண்சோதனை வசதிகளை அவர்கள் முறைப்படி பயன்படுத்தவும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

பெரிய நகர்ப்புற பகுதிகளில் பழங்கள் மற்றும் காய்கறிகளை கொள்முதல் செய்து தேவைப்படும் இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து வசதியை செய்து தர வேண்டும். விவசாயிகளுக்கான கூட்டுறவு விற்பனை சந்தையை மாநில அரசுகள் உருவாக்கிட அவற்றுக்கு மத்திய அரசு உரிய ஆதரவு அளிக்க வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் இடைத்தரகர்களை ஒழிக்க முடியும். சிறிய விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை நேரடியாக விற்று, நகர்ப்பகுதிகளில் அவற்றுக்கு சிறந்த விலை கிடைக்க இதன் மூலம் வழி காணப்படும்.

2016-2017-ம் ஆண்டுக்கு அரசு ரூ.100 கோடியை குடிமராமத்து பணிகளுக்காக ஒதுக்கீடு செய்தது. 30 மாவட்டங்களில் 1,519 பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆண்டில் சீரமைப்புக்கு ரூ.329 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும். நடப்பு நிதியாண்டில் மாநிலத்தின் 985 சுகாதார மையங்களை சுகாதார மற்றும் நலம் காண மையங்களாக ரூ.82 கோடி செலவில் மத்திய அரசின் உதவியுடன் மாற்றி அமைக்க திட்டமிட்டிருக்கிறோம்.

2018-2019-ம் ஆண்டில் விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மருத்துவ கல்லூரியை மத்திய பிரிவின் திட்டத்தின் கீழ் தொடங்க அனுமதி அளிக்க வேண்டும். இவ்விரு மாவட்டங்களும் சமூக ரீதியில், பொருளாதார ரீதியில் பின்தங்கியவையாகும்.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை தமிழக விவசாயிகள் நலன் கருதி முழுமையாக செயல்படுத்த வேண்டும். காவிரி ஆணையம் தனது பணிகளை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் பின்பற்றப்பட வேண்டும். மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, பாலாறு, காவிரி, வைகை, குண்டாறு நதிகளை மத்திய அரசு இணைக்கவேண்டும். நதிகள் இணைப்பு திட்டத்தின் மூலம் உபரி நீர் வீணாவதை தடுக்க முடியும்.

மேற்கு நோக்கி பாயும் பம்பா, அச்சன்கோவில் நதிகளின் உபரி நீரை தமிழ்நாட்டில் உள்ள வைப்பாறுக்கு திருப்பி விட வேண்டும்.

மத்திய அரசின் வரிக் கொள்கையை மாற்றம் செய்யப்பட வேண்டும். தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு தேவையான நிதியை பங்கிடுவதில் மத்திய அரசு போதுமான அளவு தமிழகத்துக்கு உதவ வேண்டும்.

மாநிலங்கள் பாதிக்காத வகையில் 15-வது நிதிக் குழுவில் உள்ள விதிகளில் திருத்தமும் தேவைப்படுகிறது. நிதி இழப்பை தவிர்க்க 2011-ம் ஆண்டு மக்கள் தொகையை அடிப்படையாக கொள்ள கூடாது. 14-வது நிதி கமிஷன் பரிந்துரையால் தமிழகத்துக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகைக்கான நிலுவை தொகை ரூ.1,804 கோடியையும் மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

இவ்வாறு தமிழகத்துக்கான எதிர்பார்ப்புகள் மற்றும் தேவைகளை வலியுறுத்தி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.