Sunday, June 24, 2018

"பசுமை வழிச்சாலை " வரமா? சாபமா? ஒரு சிறு பார்வை -பகுதி 2



இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் வெளிநாடு மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் சில ஆண்டுகளுக்கு முன் வரை, தமிழகத்தின் மீது மிகுந்த ஆர்வம் காட்டி வந்தன. ஆனால், இங்கு ஏற்பட்ட அரசியல் மாற்றம் ஏகப்பட்ட, 'குட்டி' தலைவர்களை உருவாக்கிவருகிறது.

இவர்கள் எதற்கு எடுத்தாலும் போராட்டம் என்ற பெயரில் மக்களுக்கு அழைப்பு விடுத்து, வன்முறைக்கு வித்திடுகின்றனர்.எட்டு வழிச்சாலை தொடர்பாக, அவர்கள் சொல்லும் கட்டுக்கதைகளும், அவற்றின் உண்மை நிலவரமும் வருமாறு:

6வது கட்டுக்கதை:

* சேலத்தில் இருந்து சென்னை செல்லும் வழியில் உள்ள மலைகள், புதிய சாலைதிட்டத்திற்காக அழிக்கப்படும். இது சுற்றுச்சூழலை கடுமையாக பாதிக்கும்.

உண்மை நிலவரம்:

புதிய சாலை திட்டத்தின் வழியில் உள்ள எந்த மலையும் பாதிப்புக்கு உள்ளாகாது. சேலம் அருகே உள்ள ஒரு மலை அருகே, 3 கி.மீ., துாரத்திற்கு சுரங்க பாதை மட்டும் அமைக்கப்பட உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும், உலகின் பிற பகுதிகளிலும் நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட போது, இதுபோல் சுரங்க பாதைகள் உருவாக்கப்பட்டன.

7 வது கட்டுக்கதை:

* செங்கல்பட்டில் இருந்து சேலத்திற்கு தற்போது இரண்டரை மணி நேரத்தில் சென்று விட முடியும். ஆனால், செங்கல்பட்டில் இருந்து சென்னைக்கு செல்ல அதே அளவு நேரம் பிடிக்கும்.சென்னையின்
தேவைகளை பூர்த்தி செய்ய மட்டும் இந்த சாலை திட்டம் அமைக்கப்படவில்லை. பிற பகுதிகளை சேர்ந்த மக்களும் குறைந்த நேரத்தில் தாங்கள் விரும்பும் ஊர்களுக்கு செல்லவும் இந்த சாலை உதவும்.

சென்னை -- பெங்களுரு, சென்னை -- மதுரை தேசிய நெடுஞ்சாலைகளின் ஊடே ஏராளமான குறுக்கு சாலைகள் உள்ளன. இவற்றின் வழியாக தேசிய நெடுஞ்சாலைகளில் நுழையும் வாகனங்கள் தான் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகின்றன.

இந்த குறுக்கு சாலைகளை கண்காணிக்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட துறைகளிடம் இல்லை. ஆனால், புதிய சாலை திட்டத்தில், ஒன்பது இடங்களில் தான் குறுக்கு சாலைகள் இடம் பெறும். அந்த இடங்களில் தான் புதிய சாலையில் இருந்து வெளியேறவோ, உள்நுழையவோ முடியும். இதன் காரணமாக, புதிய சாலையில் செல்லும் வாகனங்களின் வேகம் அதிகரிக்கும்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் தி.மலை போன்ற நகரங்களுக்கு குறைந்த நேரத்தில் சென்றடைய முடியும். அதுபோல், தொழிற்பூங்கா மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகளுக்கு தேவையான பொருட்களை, குறைந்த நேரத்தில் கொண்டு செல்ல முடியும்.



8 வது கட்டுக்கதை:

* சேலத்தில் துவங்கும் இந்த புதிய சாலை திட்டம், செங்கல்பட்டு நகரத்துடன் முடிவுக்கு வந்து விடும். இதற்கும் சென்னைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே, துறைமுகம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு செல்ல இந்த சாலை உதவி செய்யாது.

உண்மை நிலவரம்:

சென்னை அருகே உள்ள வண்டலுாரில், சென்னை யின் வெளிவட்ட சாலை துவங்குகிறது. புதிய,8 வழிச் சாலை திட்டம், சென்னை வெளிவட்ட சாலையுடன் இணைக்கும் வகையில் அமைக்கப் படும். எனவே, வெளிவட்ட சாலை மூலமாக, சென்னை, எண்ணுார் மற்றும் காட்டுப்பாக்கம் துறைமுகங்களுக்கு வாகனங்கள் எளிதில் செல்ல
முடியும். இதுதவிர சென்னை புறவழிச்சாலை, மதுரவாயல் - துறைமுகம் சாலைதிட்டம் போன்றவையும் உள்ளன. வெளிவட்ட சாலை மூலமாக, வட சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளுக்கு எளிதில் செல்ல முடியும். தென் சென்னைக்குள் நுழைய, வண்டலுார் - கேளம்பாக்கம் நான்கு வழி சாலை உதவியாக இருக்கும். இதுதவிர கிழக்கு கடற்கரை சாலையும் உள்ளது.

சென்னை -- - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை போக்க, சென்னையை அடுத்த பெருங்களத்துாரில் ஒரு மேம்பாலம் வர உள்ளது. சென்னைக்குள் நுழையும் வாகனங்களுக்கு இந்த மேம்பாலம் உதவியாக இருக்கும்.

9வது கட்டுக்கதை:

* புதிய 8 வழிச் சாலையில் ஏற்படுத்தப்படும் சுங்கச்சாவடிகளின் கட்டணத்தினால், பயண செலவு அதிகரிக்கும்.

உண்மை நிலவரம்:

சென்னையில் இருந்து சேலம் செல்ல, புதிய சாலை மட்டும் இருக்கப்போவது இல்லை. பயண செலவு அதிகரிக்கும் என கருதும் மக்கள், மற்ற சாலைகளை பயன்படுத்தலாம். சென்னை - கிருஷ்ணகிரி - சேலம் வழி சாலை யில் செல்லும் ஒரு காரின் பயண செலவு, 2,900 ரூபாய்; சென்னை - உளுந்துார்பேட்டை - சேலம் வழி சாலையில் செல்லும் ஒரு காரின் பயண செலவு, 2,625 ரூபாய் என விரிவான திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காரின் எரிபொருள் செலவு, பயண நேரம், சுங்கசாவடி கட்டணம் உள்ளிட்ட பல அம்சங்களை கணக்கில் கொண்டு தான் இந்த பயண செலவு கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் புதிய 8 வழி சாலையில் செல்லும் ஒரு காரின் பயண செலவு வெறும், 2,240 ரூபாய் மட்டுமே.

தமிழகத்தில் சென்னை, திருச்சி, சேலம், கோவை மற்றும் பெங்களூரு நகரங்களின் வழியாக பாதுகாப்பு தொழில் வழி தடம் அமைய உள்ளது. இந்த வழி தடத்தில் ராணுவ தளவாட தொழிற்சாலைகள் வர உள்ளன.. இந்த தொழிற்சாலைகளுக்கு புதிய 8 வழிச் சாலை உதவியாக இருக்கும்.புதிய சாலை அமைந்தால் தங்களுக்கு வசதியாக இருக்கும் என சேலம் மற்றும் கோவையில் தற்போது உள்ள தொழிற்துறையினர் கருதுகின்றன.

இந்த கட்டுரையின் முதல் பகுதி https://numnadu.wordpress.com/2018/06/22/selam-3/
Share:

Labels

Blog Archive

Unordered List

Definition List