Sunday, June 17, 2018

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தீவிரமாகும் "தமிழக அரசு!

ad300
Advertisement


புதுடெல்லி,

டெல்லியில் நேற்று நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கூட்டத்திற்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

4–வது நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பாக நிறைய கோரிக்கைகள் வைத்திருக்கின்றோம்.
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் நீர் மேலாண்மை பணிகளுக்கு முக்கியத்துவம் தருவது குறித்தும், தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்படும் குடிமராமத்து திட்டத்தைப் பற்றியும், விளக்கி மத்திய அரசிற்கு குறிப்பிட்டோம். அதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேட்டு இருக்கின்றோம்.

மக்கள் நல்வாழ்வுத் துறையில் ‘‘அனைவருக்கும் நல்வாழ்வு’’ என்ற முன்னோடி திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும், தற்போது தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் முதல்–அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசின் புதிய திட்டத்துடன் ஒருங்கிணைந்து அதிக மக்கள் பயன்பெற வழிவகை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.

ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் மத்திய அரசால் வளர்ச்சி நோக்கி செல்லும் மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்விரு மாவட்டங்களிலும், மருத்துவக் கல்லூரி துவக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. அதேபோல, விருதுநகர் மாவட்டத்திலே, பல்மருத்துவமனை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த பல்மருத்துவமனையினை அமைப்பதற்கு மத்திய அரசு விரைந்து அனுமதி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.
நோபல் பரிசிற்கு இணையாக காந்தியடிகள் பசுமை பூமி விருது உருவாக்கி ஆண்டுதோறும் வழங்க வேண்டும் என்றும், திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள காந்தி கிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகத்தை மத்திய பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தி ரூ.500 கோடி நிதி உதவி வழங்கிட வேண்டும் என்றும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருக்கின்றோம். அதேபோல், மதுரையில் அமைந்துள்ள காந்தி அருங்காட்சியகத்திற்கு ரூ.10 கோடி நிதி வழங்கி மேம்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கின்றோம்.

2011–ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை கணக்கில் கொண்டு நிதி பங்கீடு செய்வதாக உள்ளது. இது தமிழ்நாடு மக்களின் நலனிற்கு எதிராக அமையும் என்பதால், நிதி பங்கீட்டை 1971–ம் ஆண்டு மக்கள்தொகையை அடிப்படையாக கணக்கில் கொண்டு வழங்கிட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி இருக்கின்றோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி:– பிரதமரை தனியாக சந்தித்து பேச முடிந்ததா?. குறிப்பாக காவிரி விவகாரமாக இருக்கட்டும், கிடைக்க வேண்டிய நிலுவை தொகையாக இருக்கட்டும், இதுமாதிரியான வி‌ஷயங்கள் குறித்து தனியாக பேச முடிந்ததா?.
பதில்:– தனியாக பேசினோம். பிரதமர் கூட்டம் முடித்துவிட்டு வரும்போது, அவரிடத்திலே தமிழ்நாட்டினுடைய நிலைமையை எடுத்து கூறியிருக்கின்றோம். தேவையான நிதியை வழங்க வேண்டும் என்று கேட்டிருக்கின்றோம்.

கேள்வி:– பிரதமர் ஏதாவது உத்தரவாதம் கொடுத்திருக்கிறாரா?.

பதில்:– அப்படியெல்லாம் எந்த உத்தரவாதமும் கொடுக்கவில்லை.

கேள்வி:– ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து பிரதமர் உங்களிடம் ஏதேனும் கேட்டாரா?.

பதில்:– ஏற்கனவே விசாரணையில் இருக்கிறது.

கேள்வி:– காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநிலம் தற்போது வரை உறுப்பினர்கள் பெயர் ஏதுவும் கொடுக்கவில்லை. இதுதொடர்பாக மீண்டும் வலியுறுத்தினீர்களா?.

பதில்:– இது தொடர்பாக கூட்டத்திலே பேசியிருக்கின்றேன். விரைந்து குழு அமைத்து, அந்த குழு முதல் கூட்டத்தை கூட்டி, தமிழகத்திற்கு தேவையான நீர் திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கின்றோம்.

கேள்வி:– தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் நீங்கள் நேரில் போகவில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறதே?
பதில்:– அதாவது எங்களுடைய துணை முதல்–அமைச்சர் மற்ற அமைச்சர்கள் எல்லாம் நேரடியாக போய் அவர்களுக்கு என்னென்ன தேவையோ அத்தனை வசதிகளும் செய்து கொடுத்துள்ளோம். மருத்துவமனையிலே சிகிச்சை பெறுகின்ற அனைவருமே தினந்தோறும் எங்களுடைய இயக்கத்தை சேர்ந்தவர்கள் பார்த்து கொண்டு வருகிறார்கள். அந்த மாவட்ட அமைச்சர் பலமுறை நேரிலே சந்தித்து, அவர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்யப்பட்டு இருக்கிறது. ஒருவருக்கு கால் அடிபட்டு, கால் எடுக்கப்பட்டு இருக்கிறது. அவரை சென்னை மருத்துவமனையில் சேர்த்து செயற்கை கால் பொருத்தப்பட்டு அவருக்கு பணி வழங்க வேண்டும் என்று கேட்டிருந்தார், அதுவும் வழங்குவதாக அவருக்கு வாக்குறுதி கொடுத்துள்ளோம்.

கேள்வி:– எந்த ஒரு வாழ்வாதார போராட்டம் நடந்தாலும் காவல்துறையை வைத்து தமிழக அரசு அடக்குகிறது என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.
பதில்:– இது தவறான கருத்து. இது அத்தனை ஊடகங்களுக்கும் தெரியும். பத்திரிகையாளர்களுக்கும் தெரியும். அரசு வந்து ஏற்கனவே 9–4–2018 அன்றே ஸ்டெர்லைட் நிர்வாகம் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திலே மேலும் 5 ஆண்டு காலத்திற்கு எங்களுக்கு அனுமதி வேண்டுமென்று விண்ணப்பம் அளித்திருந்தார்கள். அந்த விண்ணப்பத்தை 9–4–2018 அன்று நிராகரிக்கப்பட்டுவிட்டது. அதை 13–4–2018 அன்று மாவட்ட கலெக்டர் பத்திரிகை வாயிலாக விளம்பரப்படுத்தினார். ஆகவே, இந்த ஆலை இயங்காது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலமாக அது தடை செய்யப்பட்டு இருக்கிறது. அவர்கள் கேட்ட விரிவாக்கம் கொடுக்கவில்லை. ஆகவே, இந்த ஆலையை இயக்க முடியாது என்ற அறிவிப்பும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

18–4–2018 அன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சென்று ஏதாவது இயங்குகிறதா, அல்லது என்ன நிலையில் இருக்கிறது என்று ஆய்வு செய்தார்கள். ஆய்வுக்கு பிறகு அவர்களுடைய பரிந்துரையின் அடிப்படையிலே 23–4–2018 அன்று அந்த ஆலைக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருக்கிறது. 20–4–2018 அன்று அங்கிருக்கிற போராட்டக்காரர்களை மாவட்ட சப்–கலெக்டர் அழைத்து பேசியிருக்கின்றார்.
அரசு என்ன என்ன திட்டங்களை செய்திருக்கிறது, என்ன என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது? ஆலை திறக்காது, திறக்கமுடியாத அளவிற்கு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்பது போராட்டக் குழுவினர் அனைவருக்கும் தெளிவாக சொல்லப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
Share This
Previous Post
Next Post

Pellentesque vitae lectus in mauris sollicitudin ornare sit amet eget ligula. Donec pharetra, arcu eu consectetur semper, est nulla sodales risus, vel efficitur orci justo quis tellus. Phasellus sit amet est pharetra