Friday, June 22, 2018

"பசுமை வழிச் சாலை" வரமா? சாபமா? - ஒரு சிறு பார்வை!சாலை வசதி ஏற்படுத்துவது, ஒரு நாட்டின் அடிப்படை கட்டமைப்பு. அதன் அடிப்படை யிலேயே, தொழில்வளம், பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்ட பல அம்சங்கள் உருவாகும். இதனால், சாலை அமைப்பதை எந்த துறை வல்லுனர்களும் எதிர்ப்பதில்லை. ஆனால், தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், சேலம் -சென்னை விரைவு பசுமை சாலை, கடும் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

நித்தம் நித்தம் சமூக ஊடகங்களில் பரவும் பல்வேறு வதந்திகள், பொதுமக்களையும், சாலைக்கு நிலம் வழங்க ஒப்புக் கொண்டவர் களையும் குழப்பி வருகிறது. 'காடுகள் அழிக்கப்படும்; மலைகள் உடைக்கப்படும்; விவசாயம் அழிக்கப்படும்' உள்ளிட்ட பல்வேறு அச்சுறுத்தல்கள், விதம் விதமாக, திட்டமிட்டு கிளப்பப்படுகின்றன.

குறிப்பாக சேலம், தர்மபுரி பகுதிகளில், கடும் எதிர்ப்பு நிலவுவதை போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. 'பேஸ்புக், வாட்ஸ் ஆப்' மூலம் புது புது பீதியை கிளப்பும், 'போர்வை யாளர்'களும் அதிகரிக்க துவங்கியுள்ளனர். இத்திட்டத்தில், அதிக அளவில் நிலம் கையகப் படுத்தப்படும், திருவண்ணாமலை மாவட்டத்தில், அமைதியான சூழல் உள்ள நிலையில், விவசாயிகள், ஆலோசனை கூட்டம் மூலம் இழப்பீடு கேட்க திட்டமிட்டுள்ளனர்.

குறைந்த அளவே நிலம் கையகப்படுத்தப்படும் சேலம் மாவட்டத்திலிருந்து அதிக எதிர்ப்பு உருவாவது ஏன், சமூக ஆர்வலர் போர்வையில் பரப்பப்படும் இத்தகவல்கள் உண்மைதானா, பசுமை அழிக்கப்படுமா என்பன உள்ளிட்ட பல கேள்விகள், மக்கள் மனதில் தோன்ற துவங்கி யுள்ளன. இதன் பின்னணி குறித்து விசாரித்த போது, பல உண்மைகள் மக்களிடம் கொண்டு செல்லாமல் மறைக்கப்பட்டது தெரியவந்து உள்ளது.

சேலம் பசுமை வழிச்சாலை

சென்னை- - சேலம் இடையில், 179 ஏ, 179 பி என புதிய தேசிய நெடுஞ்சாலை, அமைப்பதற்கான பணி, கடந்த சில ஆண்டுகளாகவே நடந்து வந்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பே, சம்பந்தப்பட்ட கிராமங்களில் சர்வே எடுக்கப்பட்டு, அளவீடுகள் தயாரிக்கப்பட்டன. இது தற்போது, எட்டு வழிச்சாலை எனும், பசுமை விரைவு சாலையாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், சென்னை, மண்ணிவாக்கம் சுற்றுச்சாலையில் துவங்கி, சேலம், அரியானுார் வரை, 274 கி.மீ., தொலைவிற்கு இச்சாலை அமைக்கப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 59 கி.மீ., திருவண்ணாமலை மாவட்டத்தில், 122 கி.மீ., கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 2 கி.மீ., தர்மபுரி மாவட்டத்தில், 53 கி.மீ., சேலம் மாவட்டத்தில், 38.3 கி.மீ., உள்ளடங்கியுள்ளது. இதில், 250 கி.மீ., துாரம் புதிதாக சாலை அமைக்க, 24 கி.மீ., துாரம் ஏற்கனவே உள்ள சாலையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, 2,343 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான வரைவு திட்டத்தை, 'பீட்பேக் இன்ப்ராஸ்டெக்சர்' என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

கூடுதல் சாலை அவசியமா?

சேலத்திலிருந்து சென்னை செல்ல, உளுந்துார்பேட்டை வழியாக, 354 கி.மீ., நான்கு வழிச்சாலை, கிருஷ்ணகிரி வழியாக, 364 கி.மீ., நான்கு வழிச்சாலை ஆகியவை, பிரதான சாலைகளாக உள்ளன.

இதில், சேலம் - உளுந்துார் பேட்டை சாலை பல இடங்களில், இரு வழி சாலையாகவே தொடர்கிறது. இந்த இரு சாலைகளிலும், தினமும் ஆயிரக்கணக் கான வாகனங்கள் சென்று வருகின்றன.

அதிவேக வாகனப்பெருக்கத்துக்கு, இன்னும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு, இந்த சாலைகள் தாக்குப்பிடிக்குமா என்பதே சந்தேகம். வாகன நெரிசல், விபத்துகளை குறைக்க, புதிய சாலை அமைக்க வேண்டியது கட்டாயம்.மேலும் அனைத்து துறை மேம்பாட்டுக்கும், அடிப்படை கட்டமைப்பாக விளங்கும் சாலை வசதியை உருவாக்குவதை, எந்த துறை வல்லுனர்களும் எதிர்ப்பதில்லை.

சுற்றுப்புற சூழலுக்கு கெடுதலா?

சுற்றுப்புற சூழலை பயமுறுத்தும் முக்கிய அம்சங்களில் ஒன்றாக கருதப்படுவது, உலக வெப்பமயமாதல். இதற்கு முக்கிய காரணம், எரிபொருள் உபயோகம். நிலக்கரி, பெட்ரோலிய பொருட்கள் உள்ளிட்டவைகளால் உருவாகும் கார்பன், சுற்றுப்புறச்சூழலில் கடும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதை குறைக்கவே, உலக நாடுகள் அனைத்தும் போராடி வருகின்றன.சராசரியாக ஒரு கார் வெளியிடும் கார்பனை, காற்றிலிருந்து சுத்தம் செய்ய, ஆறு மரங்கள் தேவைப்படும்.

மிக எளிதில், கடனுக்கு காரை வாங்கி, வீதியில் நிறுத்தும் நம்மவர்கள், மரம் வளர்ப்பு குறித்து கண்டுகொள்வதில்லை. ஏனெனில், அதற்கான இட வசதியில்லை என்பதே உண்மை. ஆனால், இதை அரசு அமல்படுத்தி வருகிறது. உள்கட்ட மைப்பு வசதிகள் செய்து வரும் அதே வேளையில், கடந்த, மூன்று ஆண்டுகளில் மட்டும், நம் நாட்டில், 10 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் காடுகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.

இப்படியிருக்கும் போது, காடுகள் அழிக்கப் படுகின்றன என்ற காரணத்தை பூதாகாரமாக காட்டி, மக்களை துாண்டிவிடும், மாவோயிஸ்டுகளின் போக்கு, அதிகரித்து வருகிறது.புதிதாக, எட்டு வழிச்சாலை அமைக்கப்படும் போது, 50 கி.மீ., தொலைவு குறைவதுடன், பயணத்தில் ஒரு மணி நேரம் குறைகிறது.உதாரணமாக, ஒரு நாளைக்கு, 10 ஆயிரம் வாகனங்களுக்கு, 50 கிலோ மீட்டர் தொலைவு குறையுமானால், அதனால் உருவாகும் கார்பன், எரிபொருள் செலவு, சுற்றுச்சூழல் மாசுபாடு, நேர விரயம் ஆகியவை மிச்சமாகும். இதனால் தான், இந்த சாலை பசுமை விரைவு சாலை என அழைக்கப்படுகிறது.

இதை கருத்தில் கொண்டே, மரங்களை வெட்டவும், வனப்பகுதிகளை பயன்படுத்திக் கொள்ளவும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.மரம் வெட்டப்படுவதை விட, பல மடங்கு சுற்றுச்சூழல் கேடு, நாம் உபயோகிக்கும் வாகனங்களால் ஏற்படுகிறது. இதற்காக, வாகனங்களை கைவிட்டு, மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப யாரேனும் தயாராக இருக்கின்றனரா என, துறை வல்லுனர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள், வீட்டுமனைகளாக மாறியதை எவராலும் தடுக்க முடியவில்லை. ஆனால், மக்களுக்கான அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை குறைகூற முன்வரும், சமூக ஆர்வலர்களின் எண்ணிக்கைக்கு குறைவில்லை.

மலை வளம் அழிக்கப்படுகிறதா?

இந்த பசுமை விரைவு சாலை, சேலம், திருவண்ணாமலை, அரூர், செங்கல்பட்டு வனக்கோட்டத்துக்கு உட்பட்ட, சிறுவாஞ்சூர், நம்பேடு, அலியால்மங்களம், மூணாறுமங்களம், பிஞ்சூர், ஆனந்தவாடி, ரேவண்டவாடி, பூவம்பட்டி, நுணுங்கனுார், மஞ்சவாடி கணவாய், பள்ளிப்பட்டி விரிவாக்கம், ஜருகுமலை உள்ளிட்ட காப்புக்காடு பகுதிகளின் வழியாக, 20.220 கிலோ மீட்டர் துாரம் அமைக்கப்படுகிறது.

இதிலும், மலைகள், வன விலங்குகள் பாதிக்கப்படாத வகையில், குகை அமைத்து சாலை அமைக்கப்பட உள்ள தாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய வனத்துறை அனுமதியளிக்காத பட்சத்தில், மாற்றுப்பாதை குறித்து ஆலோசிக்கும் நிலை உருவாகும். உண்மையில், கடந்த, 50 ஆண்டுகளில், கிரானைட், கருங்கல், பாக்சைட் என, கனிமங்களை எடுக்க, தமிழகத்தில் காணாமல் போன மலைகள் ஏராளம். அதையெல்லாம் தடுக்காமல், அனுமதி கொடுத்த எதிர்க்கட்சிகளும், இத்திட்டத்தில் மலைகள் சுரண்டப்படுவதாக கூறுவது தான் வேடிக்கை.

ஏன் எதிர்ப்பு?

ஒவ்வொரு சாலை மற்றும் அடிப்படை கட்டுமான பணிகளும், பலரின் நிலங்களை கையகப்படுத்தி செயல்படுத்தப்பட்டது உண்மை தான். இதில், பாதிப்பை தவிர்க்க முடியாது. ஆனால், பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு, போதிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பதே, முக்கிய கோரிக்கை. நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில், சந்தை மதிப்பிலிருந்து, நான்கு மடங்கு அதிகமாக, இழப்பீடு வழங்கலாம். இதன் அடிப்படையில், பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடு, வாழ்வாதாரத்துக்கு வழி, மாற்று இடம் உள்ளிட்ட பல வழிகளிலும், அரசு தாராளம் காட்டியிருக்க வேண்டும்.

குறைந்த இழப்பீடு அறிவித்ததால், நிலம் வழங்குவோர் அதிருப்தியடைந்தனர். இதை சாதகமாக பயன்படுத்தி, சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில், மாவோயிஸ்ட் மற்றும் நக்சல்கள்,மக்களை போராட துாண்டுகின்றனர். இதன் விளைவாகவே, பல இடங்களில் எதிர்ப்புகள் கிளம்புகின்றன. துாண்டுபவர்களை அடக்குவது மட்டுமின்றி, விவசாயிகளுக்கு மகிழ்வை தரும் வகையில், இழப்பீடு மற்றும் மாற்று இடம் தர அரசு முன்வந்தால், எதிர்ப்புகள் குறைய வாய்ப்புள்ளது.

'கார்ப்பரேட்' சாலையா?

விவசாயிகளை துாண்டி விடுபவர்கள் வைக்கும் முதன்மை கருத்து, 'இச்சாலை முழுக்க முழுக்க, ஜின்டால் நிறுவனத்துக்காக அமைக்கப்படுகிறது' என்பதே. உண்மையில், தமிழக சூழலை சில ஆண்டுகளாக கவனித்திருந்தால், இது தேவையில்லாத வாதம் என்பது தெரியவரும்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதான எதிர்ப்பு உணர்வு, தமிழக மக்களிடையே அதிகரித்து வருகிறது. ஏற்கனவே செயல்பட்டு வந்த, ஸ்டெர்லைட் ஆலை மூடல், மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்கள் எதிர்ப்பு காரணமாக நிறுத்தப்பட்டது உள்ளிட்டவை அதன் விளைவுகளே.

மக்களின் எதிர்ப்பு குரலால், பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த, 'ஸ்டெர்லைட்' ஆலையை மூட முடியும் போது, புதிய நிறுவனங் கள், மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டால், அவற்றையும் தடுக்க முடியும். அப்படி இருக்கும் போது, எதிர்கால கணிப்புகளை காரணம் காட்டி, சாலை வசதியை தடுப்பது, முழுக்க உள்நோக்கம் கொண்டது.

அடிப்படை கட்டமைப்பை தடுக்க, நேரடியாக காரணம் கூற முடியாதவர்களின், போலி முகமூடி யாக, 'கார்ப்பரேட் எதிர்ப்பு கோஷம்' பயன்படுத்தப்படுகிறது.

தொழில் வளம் பெருகும்

இந்த சாலை பெரும்பகுதி, சிறு கிராமப்பகுதிகள் வழியே அமைக்கப்படுகிறது. இப்பகுதியில், தரமான சாலை வசதி ஏற்படுத்துவதன் காரணமாக, விவசாய விளைபொருட்கள் ஏற்றுமதி உட்பட பல புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும். கிராமப்பகுதி சலுகைகளை பெறவும், பல சிறு, குறு தொழிற்சாலைகளும் உருவாகும். இதனால், இப்பகுதி பொருளாதார ரீதியிலும் முன்னேற்றம் அடையும் என்பது, நிபுணர்களின் கருத்து. வளர்ந்த நாடுகளில் உள்ள சாலை வசதிகளை ஏக்கத்துடன் பார்க்கும் நமக்கு, அந்த சாலைகளால் தான், அவை வளர்ந்த நாடுகளாக உள்ளன என்பதை மறந்து விடுகிறோம்.இந்தக் கட்டுரையின் இரண்டாம் பகுதி

https://numnadu.wordpress.com/2018/06/24/selam-4/
Share:

Labels

Blog Archive

Unordered List

Definition List