Saturday, June 23, 2018

அமைந்தது "காவிரி ஆணையம்" ! மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.



காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து, உறுப்பினர்களையும் நியமித்து மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவுக்கும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஜூன் 1ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. இதனால் ஆணையத்துக்கான அறிவிப்பை மத்திய அரசு கடந்த 1ஆம் தேதி அரசிதழில் வெளியிட்டது. ஆணையத்தின் தமிழக உறுப்பினருக்குப் பொதுப்பணித் துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் பெயரை தமிழக அரசு பரிந்துரை செய்தது. கேரள, புதுச்சேரி சார்பிலும் உறுப்பினர்கள் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், நினைவூட்டல் கடிதம் அனுப்பியும் கர்நாடகம் சார்பில் உறுப்பினர் பெயர் பரிந்துரைக்கப்படவில்லை.

அண்மையில் பிரதமர் மோடி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்துப் பேசிய கர்நாடக முதல்வர் குமாரசாமி, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டிருப்பதாகச் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். கடந்த 20ஆம் தேதி பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில், "காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து, அதனுடைய கூட்டத்தை உடனே கூட்ட மத்திய நீர்வளத் துறைக்கு உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.



இந்த நிலையில் ஒன்பது பேரை உறுப்பினர்களாகக் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து மத்திய அரசு நேற்று (ஜூன் 22) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் தலைவராக மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆறு பகுதி நேர உறுப்பினர்களும், இரண்டு முழு நேர உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் நவீன் குமார், மத்திய வேளாண் துறை ஆணையர் ஆகியோர் உறுப்பினர்களாகவும், பகுதி நேர உறுப்பினர்களாகத் தமிழக பொதுப்பணித் துறைச் செயலாளர் பிரபாகர், புதுச்சேரி பொதுப்பணித் துறை செயலாளர் அன்பரசு, கேரள அரசின் நீர்வளத் துறை செயலாளர் டிங்கு பிஸ்வால் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகம் உறுப்பினரைப் பரிந்துரை செய்யாத நிலையில், கர்நாடக அரசின் நீர்வளத் துறை நிர்வாகச் செயலாளரை தற்காலிக உறுப்பினராக மத்திய அரசு நியமித்துள்ளது. ஆணையம் டெல்லியைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் நவீன்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உறுப்பினர்களாகத் தமிழக நீர்வளத் துறையின் திருச்சி தலைமைப் பொறியாளர் செந்தில்குமார், கோவை தலைமைப் பொறியாளர் கிருஷ்ணன் உன்னி, புதுச்சேரி பொதுப்பணித் துறை முதன்மைப் பொறியாளர் சண்முகசுந்தரம், கேரள பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் கே.ஏ.ஜோஷி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா சார்பில் அம்மாநில நீர்வளத் துறை தலைமைப் பொறியாளர் தற்காலிக உறுப்பினராக இருப்பார் என்றும் மத்திய அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒழுங்காற்றுக் குழுவின் தலைமையிடம் பெங்களூருவில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Share:

Labels

Blog Archive

Unordered List

Definition List