Wednesday, June 27, 2018

பெண்களுக்கு எதிரான வன்முறையில் தமிழகத்தின் நிலை? முதல்வர் விளக்கம்!



இந்தியாவிலேயே வன் குற்றங்களின் அடிப்படையில் தமிழகத்தின் நிலை என்ன என்பது குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி இன்று தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று 2018 - 19ம் ஆண்டுக்கான காவல் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்குப் பின் தமிழக முதல்வர் பழனிசாமி உரையாற்றினார்.

அதில், 2016ஆம் ஆண்டைய தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்களின்படி, சொத்து சம்பந்தமான குற்றங்களில் நமது மாநிலத்தின் நிலை என்ன என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

இவ்வறிக்கையின்படி, நமது மாநிலத்தில் 2016-ஆம் ஆண்டு தாக்கலான வன்குற்றங்களான, கொலை, வரதட்சணைக் கொலை, கொலை முயற்சி, கூட்டுக் கொள்ளை, கொள்ளை, காயம் விளைவித்தல், கடத்தல், தீ வைப்பு போன்ற குற்றங்களை, மற்ற மாநிலங்களில் தாக்கலான வன்குற்றங்களோடு ஒப்பிடுகையில், நமது மாநிலத்தில் தாக்கலான குற்றங்கள் குறைந்தே உள்ளன.

உதாரணமாக, 2016 ஆம் ஆண்டு வன்குற்றங்கள்,
உத்தர பிரதேசத்தில் 65 ஆயிரத்து 90ம்,
மேற்கு வங்கத்தில் 46 ஆயிரத்து 723ம்,
பீகாரில் 46 ஆயிரத்து 621ம்,
மகாராஷ்டிராவில் 42 ஆயிரத்து 468ம்,
மத்திய பிரதேசத்தில் 26 ஆயிரத்து 719ம்,
அசாமில் 24 ஆயிரத்து 165ம்,
கர்நாடகாவில் 19 ஆயிரத்து 648ம்,
ஒடிசாவில் 19 ஆயிரத்து 92ம்,
ராஜஸ்தானில் 16 ஆயிரத்து 223ம்,
அரியானாவில் 14 ஆயிரத்து 392ம்,
கேரளாவில் 13 ஆயிரத்து 548ம்,
குஜராத்தில் 11 ஆயிரத்து 829ம் தாக்கலாகியுள்ளன.
ஆனால் நமது மாநிலத்தில் இக்குற்றங்கள் கடந்த 2016ஆம் ஆண்டு, 10 ஆயிரத்து 844 மட்டுமே தாக்கலாகியுள்ளன.

பொதுவாக, குற்ற நிகழ்வுகளை ஒப்பிடும்போது, குற்ற விகிதம் என்ற எண்ணிக்கை பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு எத்தனை குற்றங்கள் நடந்துள்ளன என்பதன் குறியீடு ஆகும்.

கடந்த 2016ம் ஆண்டு, தமிழ்நாட்டில் நடந்த வன்குற்றங்களின் குற்ற விகிதம் 15.6 ஆகும். இது தேசிய சராசரி ஆன 33 சதவீதத்துடன் ஒப்பிடும் போது, 17.4 புள்ளிகள் குறைவாகவே உள்ளது.

2016-ஆம் ஆண்டின், தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி, மாநிலத்தில் குற்றங்கள் தாக்கலாவதும், குற்ற விகிதமும், மற்ற மாநிலங்களை விட மிகவும் குறைவாகவும், தேசிய குற்ற விகிதத்தைவிட, நமது மாநில குற்ற விகிதம் தொடர்ந்து குறைவாக இருந்து வருவதும், தெளிவாக தெரிய வருகிறது.

காவல் துறையினர் குற்றங்களை கண்டுபிடிப்பதிலும், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதிலும் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த ஏழு ஆண்டுகளாக, கொலை உள்ளிட்ட சொத்து சம்பந்தமாக தாக்கலான, ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 247 வழக்குகளில், ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 184 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதாவது 72 சதவீத வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இவ்வழக்குகளில் களவு போன சொத்துக்களில் 67 சதவீத சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
Share:

Labels

Blog Archive

Unordered List

Definition List