Wednesday, July 25, 2018

18Mlaகள் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு! ஆகஸ்ட் முன்பாதியில் தீர்ப்பு!

18 எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதில் விதிமீறல் இல்லை என்றும் சபாநாயகர் தனது அதிகாரத்துக்கு உட்பட்டே தகுதிநீக்கம் செய்தார் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சபாநாயகர் தரப்பில் வாதிடப்பட்டது.



18 எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்கத்திற்கு எதிரான வழக்கு, மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் முன்பு மூன்றாவது நாளாக நேற்று விசாரணைக்கு வந்தது. தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்ஏ-க்கள் தரப்பிலான வாதம் கடந்த 2 நாட்களில் முடிவடைந்த நிலையில், நேற்று சபாநாயகர் மற்றும் சட்டப்பேரவை செயலர் சார்பில் வழக்கறிஞர் அரிமா சுந்தரம் ஆஜராகி வாதாடினார்.
புகார்களின்படி, விசாரணை நடத்தி தனது அதிகார வரம்புக்கு உட்பட்டே 18 பேரையும் சபாநாயகர் தகுதிநீக்கம் செய்ததாகவும், இதில் எந்தவித விதிமீறலும் நடைபெறவில்லை என்றும் அவர் கூறினார். அரசை கலைக்கும் அதிகாரம் மட்டுமே ஆளுநருக்கு உள்ளதாக குறிப்பிட்ட வழக்கறிஞர், இதனால் ஆளுநரிடம் 18 பேரும் மனு அளித்தது ஆட்சியைக் கலைக்க மட்டுமே என கருதப்படும் என்று தெரிவித்தார்.
ஆளுநரிடம் அளித்த புகார் தனிநபருக்கு எதிரானது இல்லை என்றும் பெரும்பான்மை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்கு எதிரானது என்றும் வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வாதாடினார். ஆளுநரிடம் மனு அளித்ததை, நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசின் மீதான ஆதரவை திரும்ப பெற்றதாகவே கருத முடியும் என்றும் அவர் வாதங்களை முன்வைத்தார். கட்சியில் வெளியில் இருந்து தாக்குதல் நடத்தும்போது கட்சியை விட்டு வெளியேறியதாகவே கருத முடியும் என சபாநாயகர் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், ஆளுநரைச் சந்தித்ததை காரணம் காட்டியே 18 பேரை தகுதிநீக்கம் செய்திருப்பது தவறானது என நீதிபதி சுந்தர் தீர்ப்பில் கூறியிருப்பதற்கும் சபாநாயகர் தரப்பில் ஆஜரான அரிமா சுந்தரம் எதிர்ப்பு தெரிவித்தார். சபாநாயகரின் நடவடிக்கைகளுக்கு சட்ட பாதுகாப்பு உள்ளது. சபாநாயகர் முடிவின் மீது எந்த நீதிமன்றமும் தலையிட முடியாது. சபாநாயகர் முடிவில் உள்நோக்கம் இருந்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும்’ என வாதிட்டார்.


மேலும், கட்சியில் இருந்து ராஜினாமா செய்தால் மட்டுமே கட்சியில் இருந்து வெளியேறியதாக கருத தேவையில்லை. மாறாக சம்பந்தப்பட்ட உறுப்பினரின் நடத்தை, செயல்பாடு, பேச்சு கூட கட்சியில் இருந்து தானாக வெளியேறியதாக கருத முடியும் எனவும் அரியமா சுந்தரம் தெளிவுபடுத்தினார்.


முதல்வர் தலைமையிலான அரசு மீது நம்பிக்கையில்லை என ஆளுனரிடம் அளித்த கடிதத்தில் இருந்தே, 18 எம்.எல் ஏ.க்களும் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டுள்ளனர் என்பது நிரூபணமாகிறது. தகுதி நீக்கம் தொடர்பான நோட்டீஸுக்கு பதிலளிக்க 7 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்க விதிகள் வகை செய்யும் போது, 21 நாட்கள் அவகாசம் வழங்கியதில் இருந்து, இயற்கை நீதி மீறப்படவில்லை என்பது தெளிவாகிறது என வழக்கறிஞர் அரியமா சுந்தரம் வாதிட்டார்.


நீதிபதி சுந்தர், தன் தீர்ப்பில் சபாநாயகரின் உத்தரவு விபரீதமானது எனக் கூறியுள்ளார். சட்டப்பேரவையின் தலைவர் சபாநாயகர். நீதிபதிகளுக்கு சமமான அதிகாரம் சபாநாயகருக்கும் உள்ளது. அந்த வகையில் சபாநாயகரின் உத்தரவை நீதிபதி சுந்தர் விமர்சித்தது ஏற்க முடியாதது என வாதிட்டார்.

மேலும் வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க தங்களுக்கு கூடுதல் அவகாசம் வேண்டுமென்று சபாநாயகர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 18எம்ஏக்கள் தரப்பில் சபாநாயகருக்கு அவகாசம் அளிப்பது குறித்து ஆட்சேபனை இருக்கிறதா என்று விசாரித்த நீதிபதி வழக்கு விசாரணையை வரும் 3ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி சத்தியநாராயணன் உத்தரவிட்டார். அன்றைய தினம் மீண்டும் கூடுதல் ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் சபாநாயகர் தரப்பு தனது வாதங்களை தொடர உள்ளது.
Share:

Labels

Blog Archive

Unordered List

Definition List