Sunday, July 1, 2018

பரப்பன அக்ரகாரா மாறியது "குடும்ப ஆலோசனை மையமாக" !பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள அமமுக பொதுச் செயலாளர் சசிகலா, சிறையைக் குடும்ப சமரச மையமாக மாற்றிவருவதாகச் சொல்கிறார்கள் சிறை வட்டாரத்தினர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டு சசிகலா, இளவரசி, சுதாகர் மூவரும் கடந்த 14 மாதங்களாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளனர்.

சசிகலா சிறையிலிருந்தாலும் நாள்தோறும் குடும்பப் பஞ்சாயத்தில் சிக்கித் தவித்துவருகிறார் . ஆனால், வெளியில் உள்ள சசிகலா குடும்பத்தார் அரசியல் அதிகாரப் பதவியை கைப்பற்றவும் அளவில்லாத சொத்துகளைப் பங்குபோட்டுக்கொள்ளவும் மறைமுகமாகவும் நேரடியாகவும் ஒருவருக்கு ஒருவர் முட்டி மோதிக்கொண்டு வருகிறார்கள்.

தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வான தங்க. தமிழ்ச்செல்வன், விவேக் ஆலோசனைப்படி சமீபத்தில் சசிகலாவை சந்திக்க பரப்பன அக்ரஹார சிறைக்குச் சென்றார். ஆனால், சசிகலா சந்திக்க விரும்பாமல் தவிர்த்தார் என்ற செய்தியை நமது மின்னம்பலத்தில் பதிவு செய்திருந்தோம்.

அதைத் தொடர்ந்து விவேக்குக்கும் தினகரனுக்கும் மறைமுகமான மோதல்கள் இருந்துவந்த நிலையில் சிறையிலிருந்து விவேக் குடும்பத்துக்கும் தினகரனுக்கும் அழைப்பு வந்தது.

அதன்படி கடந்த ஜூன் 29ஆம் தேதி காலை 11.55 மணிக்கு டி.டி.வி.தினகரன், வழக்கறிஞர் அசோகன், சசிகலா உதவியாளர் கார்த்திக் மூவரும் சிறைக்குள் சென்ற அரை மணி நேரத்துக்குப் பிறகு விவேக், கீர்த்தனா, ராஜராஜன், ஷகிலா ஆகிய நான்கு பேரும் உள்ளே சென்றுள்ளார்கள்.

தினகரன், சசிகலாவிடம் பேசிக்கொண்டிருந்தபோது, விவேக் குடும்பத்தினர் இளவரசியிடம் தினகரன் கொடுக்கும் நெருக்கடிகளைப் பற்றி சொல்லியுள்ளார்கள். அதன் பிறகு சசிகலாவைச் சந்தித்த விவேக், கீர்த்தனாவிடம், "உங்களை ஜெயா டிவியைதான் பார்க்கச் சொன்னேன். அதைவிட்டுவிட்டு அரசியலில் நுழைந்து சங்கடத்தை ஏற்படுத்தறீங்க. நீங்கள் வெளியில் சந்தோஷமாக இருந்துகொண்டு பதவிக்கு மோதிக்கொண்டிருக்கீங்க. உங்களால் நானும் இளவரசியும் சிறையில் மனக்கஷ்டத்தோடு சில நேரங்களில் பேசிக்க முடியாமலும் இருந்து வருகிறோம்" என்று வருத்தமாகப் பேசிய சசிகலா விவேக், தினகரன் இருவரையும் சமரசம் செய்து அனுப்பியுள்ளார்.

சிறைக்குள் போனதுபோலவே தினகரன், கார்த்திக், அசோகன் மூவரும் முதலில் வெளியில் வந்தார்கள். அரை மணிநேரம் பிறகு மதியம் 1.20 மணிக்கு விவேக், கீர்த்தனா, ஷகிலா, ராஜராஜன் வெளியில் வந்துள்ளார்கள். சிறைக்குள் நடந்த குடும்பச் சமரசத்தைப் பற்றிக் கேட்டோம்,

விவேக், திவாகரன், இருவரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் மறைமுகமான கூட்டணி வைத்திருப்பதாகத் தினகரன் தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். அதேவேளையில், தினகரன் முன்பு போல் இல்லை என்று ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பலரும் விரக்தியில் முதல்வர் பக்கம் சாய்வதாக இருந்தார்கள். அவர்களை நான்தான் தடுத்து நிறுத்தினேன். கட்சியை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்று நினைக்கும் தினகரன் ஜெயா டிவியையும் பிடுங்க முயற்சிக்கிறார். என் மீது தேவையில்லாமல் குற்றச்சாட்டுகளைச் சொல்லிவருகிறார் என்று தினகரன் பற்றி தனக்கு நெருங்கியவர்களிடம் விவேக் புலம்பியுள்ளார்.

கடந்த 14 மாதங்களாக அக்ரஹார சிறை என்பது சசிகலா குடும்ப பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் சமரச மையமாக மாறியுள்ளதாகச் சொல்கிறார்கள் சிறை ஊழியர்கள்.

இதற்கிடையே”தினகரனுக்கு எதிரான யுத்தத்தைத் தொடங்கிவிட்டார் திவாகரன். ஜூலை 4ஆம் தேதி திவாகரனின் அண்ணா திராவிடர் கழகம் கட்சி சார்பாக மனிதச் சங்கிலிப் போரட்டம் நடத்தத் திட்டமிட்டு நாள் குறிக்கப்பட்டுள்ளது. இந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்துக்கு திவாகரன் தேர்வு செய்திருக்கும் இடம் ஆர்.கே.நகர். அதற்குக் காரணம், ஆர்.கே.நகரில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும் அதைச் சரி செய்யத் தொகுதி எம்.எல்.ஏ. டிடிவி தினகரன் தவறிவிட்டார் என்றும், உடனடியாக மக்கள் தேவைகளை நிறைவேற்றிட வேண்டும் என்றும் கோரி மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தப்படுகிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பாக திவாகரன் வீட்டில் ஆலோசனைக் கூட்டம் நடந்திருக்கிறது. திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் மற்றும் சில நிர்வாகிகள் என மொத்தமே 7 பேர் மட்டுமே அந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் பேசிய திவாகரன், ‘கட்சி ஆரம்பிக்கிறது என்பது நம்ம தனிப்பட்ட உரிமை. நமக்கான அங்கீகாரம் கிடைக்காத போதுதான் நாம் புதிய கட்சியைத் தொடங்கினோம். திமுகவில் அங்கீகாரம் இல்லை என்றுதான் எம்.ஜி.ஆர். அதிமுகவைத் தொடங்கினார். அதிமுகவில் அங்கீகாரம் இல்லை என்றுதானே தினகரன் அமமுகவைத் தொடங்கினார். அவர் நம்மை மதிக்கவில்லை. நமக்கான முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றுதான் நாம் அண்ணா திராவிடர் கழகத்தை தொடங்கி இருக்கோம். இந்தக் கட்சியை அழிக்கணும் என்றுதான் தினகரன் கங்கணம் கட்டிக்கிட்டு வேலை பார்க்கிறாரு. அவரு பின்னாடி இருக்கும் எம்.எல்.ஏ.க்களில் இப்போ தங்க தமிழ்ச்செல்வன் எப்படி எதிர்த்து குரல் கொடுத்தாரோ அதே போல மிச்சம் இருக்கும் 17 பேரும் ஒவ்வொருத்தரா வருவாங்க. அந்த வெற்றிவேல் மட்டும் வேணும்னா வராமல் இருக்கலாம். மத்த எல்லோரும் வந்துடுவாங்க. என்கிட்டயே சிலர் பேசிட்டு இருக்காங்க. இது தெரிஞ்சு அந்த எம்.எல்.ஏ.க்களைக் கூப்பிட்டு தினகரன் சத்தம் போட்டிருக்காரு.

திருத்துறைப்பூண்டியில் இருக்கும் நம்ம நிர்வாகி ஒருவரை ராத்திரியோட ராத்திரியாக தஞ்சாவூருக்கு கூட்டிட்டுப் போய் மிரட்டியிருக்காங்க. எனக்கு எதிராக பேச சொல்லியிருக்காங்க. இப்படித்தான் நம்ம பக்கம் வர நினைக்கும் ஆட்களை தினகரனும் அவரோட ஆட்களும் மிரட்டிட்டு இருக்காங்க. நம்ம கட்சியை இருக்கிற இடம் தெரியாம இந்த வருஷத்துக்குள்ள அழிச்சு காட்டுறேன்னு தினகரன் சவால் விட்டிருக்காரு. அதெல்லாம் என் காதுக்கு வந்துடுச்சு. யாரு யாரை அழிக்கிறாங்கன்னு பார்த்துடலாம். இந்தக் கட்சியை பெருசா நடத்தணும் என்ற திட்டத்தோடு ஆரம்பிக்கலை. ஆனால், இப்போ நான் முடிவு பண்ணிட்டேன். இனி தினகரனை எதிர்க்கிறதுக்காவது இந்தக் கட்சியை சிறப்பாக நடத்தணும். அதுக்கு முதல் வேலையாக நான் கையில் எடுத்திருப்பது ஆர்.கே.நகர். அம்மா எம்.எல்.ஏ.வாக இருந்த தொகுதி அது. இப்போ எந்த லட்சணத்துல இருக்கு என்பது எனக்குத் தெரியும்’ என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் குறுக்கிட்டுப் பேசியிருக்கிறார்.

‘நம்ம போஸ் மக்கள் மன்றத்தின் பசங்க எல்லோரும் ஆர்.கே.நகரில் தான் இருக்காங்க. இப்போ சொன்னால் போதும் அடுத்த ஒரு மணி நேரத்துல ஆர்.கே.நகர் எவ்வளவு கேவலமா இருக்குன்னு வீடியோ எடுத்து அனுப்பிடுவாங்க...’ என்று சொன்னாராம். தொடர்ந்து பேசிய திவாகரன், ‘ஆமாப்பா...அதை உடனே செய். ஆர்.கே.நகர் எவ்வளவு மோசமா இருக்குன்னு வீடியோ எடுக்கச் சொல்லு. தண்ணீர் பிரச்சினை, சாக்கடை பிரச்சினை என எதையும் விட்டு வைக்க வேண்டாம். எல்லாத்தையும் வீடியோ எடுக்கச் சொல்லு. அதை தொகுத்து ஒரு வீடியோவாக ரெடி பண்ணுவோம். அதை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கணும். எதை எப்படி பண்ணினாலும் நம்ம டார்கெட் தினகரன்தான். மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்.கே.நகரிலேயே நாம மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்துவோம். அந்தப் போராட்டத்திலும் தொகுதி எம்.எல்.ஏ.வான தினகரனை பிரிச்சி மேய்ஞ்சிடணும்’ என்று சொல்லியிருக்கிறார்.அதன்படிதான் ஆர்.கே.நகரில் போராட்டத்துக்கு நாள் குறிக்கப்பட்டிருக்கிறது. போராட்டம் குறித்த தகவலை ஆளுங்கட்சித் தரப்புக்கும் சொல்லி அனுமதியும் வாங்கியிருக்கிறார் திவாகரன். அங்கிருந்தும் கிரீன் சிக்னல் கிடைத்துவிட்டதாம்”

“திவாகரன் இப்படியான குடைச்சலைக் கொடுப்பார் என்பது அவருக்கும் தெரியும். மனைவி அனுராதா மூலமாகக் குடும்பத்தில் உள்ள சிலருடன் சமாதானம் பேசியிருக்கிறார்கள். கடைசியில் திவாகரனிடம் பேசியிருக்கிறார்கள். ‘குடும்பப் பிரச்சினைன்னா பேசுங்க; பேசலாம். இது அரசியல். இதுல யாரும் தலையிட வேண்டாம்’ என அவர் சொல்லிவிட்டாராம். ஆர்.கே.நகரில் தன்னை அசிங்கப்படுத்த திவாகரன் கோஷ்டி நினைத்தால், அதற்கு பகிரங்கமாகவே பதிலடி கொடுக்கும் முடிவுக்கும் வந்துவிட்டாராம் தினகரன்”

நன்றி Minnambalam.com
Share:

Labels

Blog Archive

Unordered List

Definition List