Wednesday, July 18, 2018

உறுப்பினர் சேர்க்கைக்கு உயிர் கொடுப்பார்களா? அஇஅதிமுக இளம் ஆதரவாளர்கள் வேதனை!

ad300
Advertisement

அதிமுகவின் தலைமைக் கழகத்தில் நேற்று (ஜனவரி 29) நடந்த நிகழ்ச்சியில் அதிமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, பழைய உறுப்பினர்கள் புதுப்பித்துக்கொள்வது ஆகிய நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர், இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி இருவரும் இணைந்து துவக்கி வைத்தனர்.

கட்டுக் கட்டாக புதிய உறுப்பினர் சேர்க்கைப் படிவங்களை பன்னீர், பழனிசாமியிடம் இருந்து அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் எல்லாம் போட்டோவுக்கு போஸ் கொடுத்து பெற்றுச் சென்றனர். தலைமைக் கழகத்தில் உற்சாகமாக நடந்த இந்த கூட்டத்துக்குப் பின் உடனடியாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இதுகுறித்த பதிவுகளை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றினார்,.

அப்போது பின்னூட்ட்டங்களாக வந்த கமெண்ட்டுகளில், ‘’நான் மதுரையை சேர்ந்தவன். உறுப்பினராக யாரைத் தொடர்புகொள்ள வேண்டும்?’, ‘நான் ஆர்.கே.நகரை சேர்ந்தவன்.அதிமுகவில் உறுப்பினராக வேண்டும் என்ன வழி?’ என்றெல்லாம் கேள்விகள் முளைத்தன. ஆனால் அவற்றுக்கு பதில் சொல்வார் இல்லை.

தலைமைக் கழக நிகழ்ச்சி முடித்துவிட்டு பேஸ்புக்கில் மேய்ந்துகொண்டிருந்த நம்மிடம் திரும்பினார் ஓர் இளம் அதிமுக தொண்டர்.

‘’சார்… மறுபடியும் தங்களைத் தாங்களே ஏமாத்திக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஓபிஎஸ்சும், ஈபிஎஸ்.சும் கட்டுக் கட்டா விண்ணப்ப படிவங்களை அடிச்சுக் கொடுக்கிறாங்க. அதிமுகவுல இன்னிக்கு அதிகமாக சேரக் காத்திருக்கிற இளைஞர்களுக்காக அம்மா ஆன் லைனில் அதிமுகவில் உறுப்பினராகும் திட்டத்தைக் கொண்டு வந்தாங்க. ஆனா இன்னிக்கு அதிமுகவோட வெப்சைட்டே முடஙகிக் கிடக்குது.அதை சரிபண்ணி ஆன்லைன் மூலம் எளிதாக உறுப்பினர் சேர்க்கை செய்யுறதை விட்டுட்டு பழையபடி படிவங்களைக் கொடுத்துக்கிட்டிருக்காங்க. இதைப் பத்தி மின்னம்பலத்தில் எழுதுங்களேன்’’ என்று கோரிக்கை வைத்தார் நம்மிடம்.

உடனடியாக அதிமுகவின் அதிகாரபூர்வ இணைய தளமான aiadmk.org.in என்ற முகவரியை கூகுள் செய்தோம். ‘திஸ் அக்கவுன்ட் சஸ்பெண்டட்’ என்று கொட்டை எழுத்துகளில் வந்தது.

ஆம்… கடந்த 2017 மார்ச் மாதம் வரை இயங்கி வந்தது அதிமுகவின் அதிகாரபூர்வ இணைய தளம்.

தேர்தல் ஆணையத்தால் இரட்டை இலை முடக்கப்பட்டபோது அதிமுக அதிகாரப்பூர்வ இணைய தளமும் முடக்கப்பட்டது! இதனால் அதிமுக கழகத்தின் கொள்கைகள் ,அதிமுக அரசின் சாதனைகள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள முடியாமல் கழக உறுப்பினர்களும், தொண்டர்களும் திணறி வந்தனர். கடந்த நவம்பரில் சின்னம் அதிமுக வசம் வந்த பிறகும் இன்றுவரை கட்சிக்கென்று இருந்த அதிகாப்பூர்வ இணைய தளம் மீண்டும் செயல்படவில்லை!

“இதனால் கட்சியில் இணைந்து செயல்பட விரும்பும் இளைய (இணைய) தலைமுறையினர் கழகத்தில் இணைய விரும்பினாலும் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகளைத் தேடி அலைய வேண்டியுள்ளது. இதனால் ஜெயலலிதா ஏற்படுத்திய இளைஞர்கள், இளம்பெண்கள் பாசறையெல்லாம் கூர் மழுங்கிய கருவிகள் கொண்ட பாசறையாக மாறியுள்ளது” என்று புலம்பி வருகின்றனர் கட்சியின் உண்மையான அக்கறையாளர்கள்.

கட்டுக் கட்டாய் படிவங்களும் நெட் படிவமும்!

அதிமுக உறுப்பினர் சேர்க்கையின் போது மாவட்டச் செயலாளர்களும், ஒன்றிய செயலாளர்களும் போலியாக உறுப்பினர்களை சேர்த்து விடுகிறார்கள் என்று ஜெயலலிதா இருந்தபோதே அவருக்குப் புகார்கள் சென்றன. தலைமைக் கழகம் கொடுக்கும் விண்ணப் படிவங்களை தாங்களாகவே நிரப்பிக் கொண்டு ஏற்கனவே இருந்த உறுப்பினர்களையே புதிதாக சேர்ப்பது மாதிரியும், அவர்களது வீட்டில் உள்ளவர்களை சேர்ப்பது மாதிரியும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து டார்கெட்டை எட்டிப் பிடித்துவிட்டதாக பல நிர்வாகிகள் பாவ்லா காட்டினார்கள்.

இன்னும் சில மாவட்டச் செயலாளர்களோ இன்னார் தனக்குப் போட்டியாக வருகிறார், வளர்கிறார் என்றால் அந்த நபருக்கு உறுப்பினர் கார்டே கொடுக்காமலோ அல்லது புதுப்பிக்காமலோ வேண்டுமென்றே தட்டிக் கழித்து வந்தனர். இதற்காக பண பேரம் கூட நடந்திருக்கிறது. அடிப்படை உறுப்பினர் பதவியில் சேர்ப்பதும் நீக்குவதும் பொதுச்செயலாளரின் உச்ச அதிகாரம். ஆனால் அந்த அதிகாரத்தை விண்ணப் படிவம் வழங்குவதன் மூலமாகவே அதிமுகவில் செயல்படுத்தினார்கள் பல நிர்வாகிகள்.

இந்தப் புகார்களுக்கான நடவடிக்கையாகத்தான் அதிமுகவில் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையை அறிமுகப்படுத்தினார் ஜெயலலிதா. இதன்படி aiadmk.org.in என்ற அதிமுகவின் அதிகார பூர்வ இணைய தளப் பக்கத்திலேயே, கட்சியில் உறுப்பினராக சேர என்றொரு பகுதி அறிமுகம் செய்யப்பட்டது.

அதை க்ளிக் செய்தால், பெயர், முகவரி, வாக்காளர் அடையாள அட்டை எண் கேட்கும். கட்சியின் கொள்கைகளுக்கு உடன்படுகிறீர்களா என்று ஒரு கேள்வி வரும். அதற்கு சரி என்று ஒப்புதல் கொடுக்கும் பட்சத்தில் வாக்காளர் அடையாள அட்டை எண் சரிபார்க்கப்பட்டு, உடனடியாக குறிப்பிட்ட நபரின் மின்னஞ்சல் முகவரிக்கு, ‘கன்ஃபர்மேஷன் மெயில்’ வந்துவிடும்.

அதன் பின் அந்த நபருக்கு பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் கையெழுத்திட்ட உறுப்பினர் அட்டையை டவுன் லோடு செய்வதற்கான லிங்க் அனுப்பி வைக்கப்படும்.

அந்த லிங்க் கை டவுன்லோடு செய்து அதிமுக உறுப்பினர் அட்டையை பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். 24 மணி நேரத்தில் இதற்கான செயல்முறைகள் முடிந்துவிடும். உறுப்பினர் சேர்க்கைக்கு மட்டுமல்ல, உறுப்பினர் புதுப்பித்தலும் இதன்படியே நடந்துவந்தன. இதனால் கட்சியில் யாரை சேர்க்க வேண்டும், யாரை சேர்க்கக் கூடாது என்று மாவட்டச் செயலாளர்களும், ஒன்றிய செயலாளர்களும் எதேச்சதிகாரமாக முடிவு செய்தது தடுக்கப்பட்டது. ஆனால் இப்போது விண்ணப்பப் படிவம் மூலமாக மீண்டும் பழைய முறையே இப்போது தலை தூக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

உயிர்ப்பிக்கப்படுமா இணைய தளம்?

இந்தக் குறையைப் போக்க ஒரே வழி அதிமுகவின் முடக்கப்பட்ட இணைய தளப் பக்கத்தை மீண்டும் செயல்பட செய்வது ஒன்றுதான். இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு பல்வேறு அரசியல் காய் நகர்த்தல்கள் மூலம் மீண்டும் அது கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அதிமுகவின் இணைய தளத்தை மீண்டும் உயிர்ப்பித்தால் மட்டுமே ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்க முடியும். ஜெயலலிதா இருந்த காலத்திலேயே இளைஞர்களை கட்சியில் சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்ட ஆன்லைன் உறுப்பினர் சேர்ப்பு முறையை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்பதே தொண்டர்களின் கோரிக்கை.

மேலும் கட்சியின் கொள்கைகள் குறித்த விவரங்கள் மட்டுமின்றி… அதிமுகவின் பைலாவும் அந்த இணைய தளத்தில் பொதுமக்கள் யாரும் பார்க்கும் வண்ணம் பிடிஎஃப் வடிவில் இணைக்கப்பட்டிருந்தது. இப்போது அதிமுகவின் கட்சி சட்ட விதிகள் பற்றி அந்த கட்சியில் உள்ளவர்களே முன்னுக்குப் பின் முரணாக பல்வேறு தகவல்களைச் சொல்லி வருகிறார்கள். உண்மையான கட்சியின் பைலா என்பதே பதுக்கி வைக்கப்படும் பொருளாக மாறிவிட்டது. இந்நிலையில் மீண்டும் அதிமுகவின் இணைய தளம் மீட்கப்பட்டால்தான் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை, பைலா பார்வையிடுதல் போன்றவற்றுக்குத் தடை இருக்காது.

ஆனால் இதுபற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லாமல் கட்டுக் கட்டாய் விண்ணப்ப படிவங்களை கொடுத்து விழாக் கொண்டாடி வருகிறார்கள் அதிமுக தலைமைக் கழகத்தில்.

உயிர்ப்பிக்கப்படுமா அதிமுகவின் இணைய தளப் பக்கம் என்பதுதான் அக்கட்சியில் இருக்கும் அறிவார்ந்த தொண்டர்களின் கேள்வி!

இந்த செய்தி நமக்கு நெருக்கமான நண்பர் மூலமாக நாம் மேற்கொண்ட முயற்சியின் விளைவாக கடந்த 30/1/2018 அன்று மின்னம்பலம்.காம் இணைய செய்திதளத்தில் வெளியானது. தூங்கிக் கொண்டிருக்கும் அதிமுக தொழில்நுட்ப பிரிவை தட்டியெழுப்ப நம்நாடு செய்திகளில் மறு பதிவு செய்திருக்கிறோம்.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே அஇஅதிமுக கழக உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டும் இன்றுவரை பாதிக்கு மேற்பட்ட மாவட்டங்களில் உறுப்பினர் சேர்க்கையில் கழக நிர்வாகிகள் மும்முரம் காட்டவில்லை,மாறாக தனக்கிருந்த உறுப்பினர்களில் சரி பாதி உறுப்பினர்களை அஇஅதிமுக இழந்திருப்பதாக பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் , இனியேனும் கழக வளர்ச்சிக்கு ஆவண செய்ய முயற்சிக்க வேண்டும்.

Share This
Previous Post
Next Post

Pellentesque vitae lectus in mauris sollicitudin ornare sit amet eget ligula. Donec pharetra, arcu eu consectetur semper, est nulla sodales risus, vel efficitur orci justo quis tellus. Phasellus sit amet est pharetra