Monday, July 2, 2018

கூடுகிறது காவிரி ஆணையம்! கிடைக்குமா காவிரி?



சென்னை; காவிரி விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கில் காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து இரண்டு அமைப்புகளையும் மத்திய அரசு ஏற்படுத்தியது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் இடைக்கால தலைவராக மசூத் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் சார்பில் காவிரி உறுப்பினராக பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர், திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் செந்தில்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். கேரளா, புதுச்சேரி, கர்நாடகா மாநில அரசுகளும் தங்களது மாநில பிரதிநிதிகளை நியமித்துள்ளனர். இந்நிலையில் காவிரி ஆணையத்தின் முதல் கூட்டம் ஜூலை 2ம்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த 29ம் தேதி, தமிழகம் சார்பில் எடுத்து வைக்க வேண்டிய அம்சங்கள் குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் கர்நாடகா முதல்வர் குமராசாமி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இருப்பினும் இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் கர்நாடகா பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சக அலுவலகத்தில் காவிரி மேலாண்மை ஆணைய முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இடைக்கால தலைவர் மசூத் உசேன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். இக்கூட்டத்தில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக அனைத்து விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

குறிப்பாக, காவிரி நீரை அளவிடுதல், அணைகள் பராமரிப்பு, காவிரியில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடும் தண்ணீர் அளவு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து இடைக்கால தலைவர் ஆலோசனை நடத்துகிறார். தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தண்ணீர் தர வேண்டும் என்றும், கடந்த ஆண்டில் பாக்கி வைத்துள்ள டிஎம்சி நீரையும் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு தான் இறுதியானது என்பதால் கர்நாடகா இதை ஏற்குமா என்ற சந்தேகம் உள்ளது. இருப்பினும் கர்நாடகா சார்பில் கலந்து கொள்கிற உறுப்பினர்கள் தங்கள் மாநில பிரச்சனைகள் குறித்து கூட்டத்தில் பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுச்சேரி, அரசு தங்களுக்கு தர வேண்டிய 7 டிஎம்சியை தர வேண்டும் என்று வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இன்று நடைபெறவுள்ள கூட்டங்களில் காரசார விவாதங்கள் நடக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் இக்கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் தனது முடிவை தெரிவிக்கும். முன்னதாக, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பொதுப்பணித்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் செந்தில்குமார் ஆகியோர் நேற்று மாலை டெல்லி புறப்பட்டு சென்றனர்.

இதுகுறித்து, பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி, காவிரி மேலாண்மை ஆணையத்தில், தமிழகம் சார்பில், கோரிக்கைகள் முன் வைக்கப்படும். காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி, கர்நாடக அரசு முறையாக தண்ணீரை வழங்கவில்லை. ஆண்டுதோறும் கர்நாடகா வழங்கிய, தண்ணீரின் அளவு எவ்வளவு குறைவாக இருந்தது. இதனால், ஏழு ஆண்டுகளாக குறுவை சாகுபடி எவ்வளவு பாதிக்கப்பட்டது என்பது போன்ற விபரங்களையும், பொதுப்பணித்துறையினர் சேகரித்துள்ளனர். இது தொடர்பான அறிக்கையும், காவிரி மேலாண்மை ஆணைய தலைவரிடம், இன்று வழங்கப்பட உள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பில், தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், ஒவ்வொரு மாதமும், எவ்வளவு நீர் வழங்க வேண்டும் என்பது நிர்ணயிக்கப்படவில்லை. அதை நிர்ணயம் செய்து, உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும், தமிழகம் தரப்பில் வலியுறுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Share:

Labels

Blog Archive

Unordered List

Definition List