Wednesday, July 4, 2018

தகுதிநீக்க வழக்கு! ஆகஸ்டில் இறுதி தீர்ப்பா?



18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று விசாரணையை ஆரம்பித்த மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் அனைத்து தரப்பினரும் வழக்கில் ஆஜராக வசதியாக ஜூலை 23 முதல் வழக்கு விசாரணை தொடங்கி தினமும் நடக்கும் என்று உத்தரவிட்டார்.

தமிழக முதல்வர் கே.பழனிசாமியை மாற்றக் கோரி, டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் தமிழக ஆளுநரிடம் கடந்த ஆண்டு மனு அளித்தனர். இதில் ஜக்கையனைத் தவிர மீதமுள்ள 18 எம்எல்ஏ-க்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு இரண்டு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், மூன்றாவது நீதிபதி விமலா விசாரிக்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கோ வேறு மாநிலத்துக்கோ மாற்றக்கோரி தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் எஸ்.கே.கவுல் முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், “சென்னை உயர் நீதிமன்றத்தில் நாங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு 6 மாதங்களுக்குப் பின்னரே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதுவும் மாறுபட்ட தீர்ப்பாக உள்ளது. மூன்றாவது நீதிபதியாக விமலா நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வர், துணை முதல்வர், சபாநாயகர் ஆகியோர் செல்வாக்கு உள்ளவர்கள் என்பதால் இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

வழக்கில் எதிர்தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம், “மூன்றாவது நீதிபதி நியமனத்தில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு எந்தத் தொடர்பும் இல்லை” என்று வாதிட்டார்.

பின்னர், ‘‘நீதிபதி விமலாவுக்கு பதில் மூன்றாவது நீதிபதியாக எம்.சத்தியநாராயணன் விசாரித்து தீர்ப்பளிப்பார்’’ என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும் என வழக்கை முடித்து வைத்தனர்.

இந்நிலையில் மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் இன்று வழக்கு விசாரணையைத் தொடங்கினார். மாலை 4 மணிக்கு விசாரணை தொடங்கியது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி வாதாடினார்.

வழக்கு விசாரணையை உடனே தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர் தங்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் வாதாட உள்ளதாகவும் அவர்கள் எந்த தேதியிலும் வழக்காடத் தயாராக உள்ளதால் வரும் ஜூலை 9-ம் தேதி முதல் விசாரணையைத் தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஆனால் இதற்கு ஆட்சேபம் தெரிவித்த எதிர்தரப்பினர் தங்கள் தரப்பிலும் மூத்த வழக்கறிஞர்கள் வாதாட உள்ளனர், ஆனால் அவர்கள் உடனடியாக வர இயலாது, ஆகவே வழக்கை மாத இறுதியில் தள்ளி வைக்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டனர்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி வழக்கை விரைந்து முடிக்கவே விரும்புகிறேன், வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் அறிவித்தே 15 நாட்கள் கடந்து விட்டது. இதற்கு பின்னரும் மாத இறுதியில் என்றால் எப்படி என்று கேட்டார். ஆனால் தங்கள் தரப்பில் உள்ள பிரச்சினைகளை கூறி அரசு தரப்பினர், எதிர்த்தரப்பினர் வழக்கை மாத இறுதிக்கு ஒத்திவைக்கும்படி கேட்டுக்கொண்டனர்.



வழக்கு விசாரணையை அனைவரும் ஆஜராக வசதியாக வரும் ஜூலை 23 அன்று முதல் தொடங்கி தினமும் விசாரணை நடத்தி விரைவாக முடிக்க உள்ளதாக தெரிவித்த நீதிபதி சத்தியநாராயணன் அனைவரும் தவறாமல் ஆஜராகும்படி கேட்டு வழக்கு விசாரணையை ஜூலை 23-க்கு ஒத்தி வைத்தார்.

5 நாட்கள் வழக்கு விசாரணைக்குப் பிறகு, ஆகஸ்ட் மாதத்தில் தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளது எனத் தெரிகிறது. 5 நாட்களுக்கு முன்பாகவே விசாரணை நிறைவடையவும் வாய்ப்புகள் உள்ளது என்கிறார்கள் சட்டத் துறை வல்லுநர்கள். அப்படி நிறைவடைந்தால் இம்மாத இறுதிக்குள்ளாகக்கூடத் தீர்ப்பு வெளியாகலாம்.
Share:

Labels

Blog Archive

Unordered List

Definition List