Tuesday, July 17, 2018

மலைபோல பணக்குவியல்? மலைத்துப்போன அதிகாரிகள்!

ad300
Advertisementவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியை சேர்ந்தவர் செய்யாத்துரை (வயது 60). இவர் அரசு முதல் நிலை காண்டிராக்டர். இவருக்கு கருப்பசாமி, ஈஸ்வரன், நாகராஜ், பாலசுப்பிரமணியன் ஆகிய 4 மகன்கள் உள்ளனர்.

செய்யாத்துரை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறைகளில் நடைபெறும் பல்வேறு சாலைப்பணிகள், கட்டிட கட்டுமான பணிகள் போன்றவற்றை தமிழகம் முழுவதும் செய்து வருகிறார்.

தற்போது மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து கப்பலூர் வரையிலான சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் பணிக்கான ஒப்பந்தத்தை சேகர்ரெட்டி என்பவர் எடுத்து இருந்தாலும் அந்தவேலையை செய்யாத்துரையே செய்து வருகிறார். இதே போல் விருதுநகர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளை 5 ஆண்டுகளுக்கு பராமரிக்க சுமார் ரூ.600 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிகிறது.

அருப்புக்கோட்டை, மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் முக்கிய சாலை அமைக்கும் பணிகளும், கட்டுமான பணிகளும் நடப்பதால் அங்கு அலுவலகங்களும் உள்ளன. இவருக்கு கல்குறிச்சியில் நூற்பாலையும், கல்லூரணி பகுதியில் ஒரு கல்குவாரியும் உள்ளன. மேலும் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் எஸ்.பி.கே. என்ற 5 நட்சத்திர ஓட்டலும் உள்ளது.

இந்த நிலையில் பாலையம்பட்டியில் உள்ள அவரது வீடுகளுக்கு நேற்று காலை 6 மணி அளவில் வருமான வரித்துறையினர் 5 கார்களில் வந்து அதிரடியாக நுழைந்தனர். வீட்டிற்குள் இருந்த யாரையும் வெளியே செல்லவும், யாரும் உள்ளே வரவும் அனுமதி மறுக்கப்பட்டது. 16-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

செய்யாத்துரைக்கு சொந்தமான 3 வீடுகள் மற்றும் நிறுவனங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடைபெற்றது. செய்யாத்துரையின் மகன்கள் கருப்பசாமி, பாலசுப்பிரமணியன் ஆகியோரை அழைத்து விசாரணை செய்து பின்னர் கருப்பசாமியை விருதுநகர் ரோட்டில் உள்ள வங்கிக்கு காரில் அழைத்துச் சென்றனர். அங்கும் விசாரணை மேற்கொண்டனர்.

தமிழகம் முழுவதும் 50 இடங்களில் 200 வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து, நேற்று காலை 6 மணி முதல் சோதனையை மேற்கொண்டு உள்ளனர்.

சென்னையில் எஸ்.பி.கே. நிறுவனத்துடன் தொடர்புடைய, பெசன்ட் நகரில் உள்ள டி.வி.எச் என்ற நிறுவனத்திலும் சோதனை நடந்தது. இதன் உரிமையாளர் கே.என். ரவிச்சந்திரன், திருச்சியை சேர்ந்த தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் உடன் பிறந்த சகோதரர் ஆவார். இவருடைய வீட்டிலும் சோதனை நடந்தது. ரவிச்சந்திரன் வீட்டில் நிறுத்தப்பட்டு இருந்த விலை உயர்ந்த கார் எஸ்.பி.கே. நிறுவனத்துக்கு சொந்தமானது என்றும் கூறப்படுகிறது.

இதே போன்று, சென்னை, ஆழ்வார்பேட்டை, கஸ்தூரிரெங்கன் சாலை, பார்த்த சாரதி கார்டன் தெருவில் உள்ள செய்யாத்துறையின் உறவினர் தீபக் என்பவருடைய வீடு மற்றும் கோவிலம்பாக்கத்தில் உள்ள அவருக்கு சொந்தமான ‘எவால்வு குளோத்திங் கம்பெனி’யிலும் சோதனை நடந்தது. தீபக் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை அதிகாரிகள் மூட்டையாக கட்டி வருமான வரித்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.

சேத்துப்பட்டில் உள்ள ஜோன்ஸ் என்பவருடைய வீடு மற்றும் மேத்தா நகரில் உள்ள கூட்டு நிறுவனத்தின் நிர்வாகி வீடு மற்றும் செய்யாத்துரையின் மகன் நாகராஜின் வீடு உள்பட எஸ்.பி.கே. நிறுவனத்தின் தொடர்புடைய நிறுவன அலுவலகங்கள் மற்றும் அதனுடைய நிர்வாகிகளின் வீடுகள் உள்ள அண்ணாநகர், அபிராமபுரம், பெசன்ட் நகர், திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனை நடந்தபோது அலுவலகங்கள் முற்றிலும் இழுத்து மூடப்பட்டு உள்ளே இருந்து வெளியேயும், வெளியில் இருந்து உள்ளேயும் எவரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இந்த சோதனையின் போது வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள், கட்டுமானம் நடந்து வரும் பணிகளுக்கான ஒப்பந்த கோப்புகள், வங்கி ஆவணங்கள் உள்பட பல்வேறு ஆவணங்களை விசாரணைக்காக வருமான வரித்துறையினர் கைப்பற்றி உள்ளனர்.

இந்த சோதனையில் கணக் கில் வராத ரூ.120 கோடி ரொக்கம் மற்றும் 100 கிலோ தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

வீடுகளில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போது அங்கு நிறுத்திவைக்கப்பட்டு இருந்த கார்களை சோதனை செய்தனர். அந்த கார்களில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கிவைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிகாரிகள் திகைப்படைந்தனர். பின்னர் அந்த பணத்தை கைப்பற்றி அவற்றை எண்ணினார்கள்.
திருவள்ளூர், நாமக்கல், பொள்ளாச்சி, ராமநாதபுரம் கோட்ட நெடுஞ்சாலைத்துறையினர் இந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதால், இப்பகுதியில் 5 ஆண்டுகளுக்கு நடக்கும் பராமரிப்பு, புதிய சாலைகள் அமைக்கும் பணிகளை இந்த நிறுவனம் கவனித்து வருவதாக கூறப் படுகிறது.

புதிதாக விருதுநகர் கோட்டத்தையும் இந்த நிறுவனத்துடன் ஒப்படைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டதால், இந்த விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

எஸ்.பி.கே. கட்டுமான நிறுவனம் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய நிறுவனங்களின் அலுவலகங்கள் மற்றும் அந்த நிறுவனங்களின் நிர்வாகிகளின் வீடுகளில் இருந்து மூட்டை, மூட்டையாக பறி முதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மதிப்பிடப்பட்டு வருகிறது. சேத்துப்பட்டைச் சேர்ந்த ஜோன்ஸ் என்பவருடைய காரில் இருந்து ரூ.25 கோடி, தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் காரில் இருந்து ரூ.24 கோடி மற்றும் தீபக் வீட்டில் இருந்து ரூ.28 கோடியும் பறி முதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் எந்திரங்கள் மூலம் எண்ணப்பட்டு வருகிறது. அதே போன்று பறிமுதல் செய்யப்பட்ட 100 கிலோ தங்கம் மதிப்பீடு செய்யும் பணியும் நடந்து வருகிறது. எஸ்.பி.கே. நிறுவனம் மற்றும் அந்த நிறுவனங்களுடன் தொடர்புடைய கூட்டு நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் தொழில் தொடர்பான முக்கிய ஆவணங்கள் மற்றும் வங்கி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. மேலும் பல முக்கிய ஆவணங்கள் கிடைக்க வேண்டியிருப்பதால் தொடர்ந்து வருமான வரி சோதனையை தீவிரப்படுத்தவும் திட்டமிட்டு உள்ளோம்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

ரெய்டின் துவக்கப்புள்ளி!இந்த மெகா ரெய்டுக்குப் பின்னால் இன்னொரு காரணமும் இருக்கிறது. அண்மையில் இந்த எஸ்.பி.கே. நிறுவனத்தின் சார்பில் மும்பையில் ஒரு வங்கியில் 250 கோடி ரூபாய் கடன் கேட்டிருக்கிறார்கள். அதே வங்கியில் கோவையைச் சேர்ந்த கான்ட்ராக்டர் ஒருவரும் கடன் கேட்டிருக்கிறார். அவருக்கு பேப்பர்கள் சரியாக இருந்ததால் உடனடியாக கடன் கொடுத்துவிட்டார்கள். ஆனால் எஸ்.பி.கே. நிறுவனத்தின் சார்பில் கொடுக்கப்பட்டிருந்த பேப்பர்களில் ஏகப்பட்ட முரண்பாடுகள் இருந்ததால் கடன் வழங்க மறுத்துவிட்டனர். அந்நிறுவனத்தின் கணக்கு வழக்குகளில் இருக்கும் முரண்பாடுகளைக் கண்டறிய அந்த வங்கிக் கடன் விவகாரமும் ஒருவகையில் உதவியிருக்கிறதாம். அதனால் ரெய்டுக்கு இதுவும் காரணமாக இருந்திருக்கலாம் என்கிறார்கள்.
Share This
Previous Post
First

Pellentesque vitae lectus in mauris sollicitudin ornare sit amet eget ligula. Donec pharetra, arcu eu consectetur semper, est nulla sodales risus, vel efficitur orci justo quis tellus. Phasellus sit amet est pharetra