Thursday, July 5, 2018

வருமா? #லோக்_அயுக்தா? சட்டசபையில் அறிவிப்பு!



லோக் ஆயுக்த சட்டமசோதா நடப்புக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மீன்வளம் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆகியோர் சட்டப்பேரவையில் உறுதி அளித்தனர். தமிழக சட்டப்பேரவையில் வரும் 9-ஆம் தேதி இந்த மசோதா நிறைவேற்றப்பட உள்ளது.
சட்டப்பேரவையில் பொதுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் பி.கே.சேகர்பாபு பேசியது: நாட்டில் உள்ள மாநிலங்களின் அரசுத் துறைகளில் நடக்கும் ஊழல்களை விசாரிக்க 2013-இல் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்த சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், இதுபோன்ற அமைப்புகள் உருவாக்கப்படுவதற்கு முன்பே அரசு ஊழியர்களின் ஊழல்களை விசாரிப்பதற்காக 1973-இலேயே கருணாநிதி ஓர் அமைப்பை ஏற்படுத்தினார்.
தற்போது 19-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் லோக் ஆயுக்த அமைப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், தமிழகத்தில் மட்டும் இன்னும் லோக் ஆயுக்த அமைப்பு உருவாக்கப்படவில்லை. இந்த நிலையில், தமிழகத்தில் லோக் ஆயுக்த அமைப்பு ஏற்படுத்தாதது குறித்து ஜூலை 10-ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது என்றார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: லோக் ஆயுக்த சட்ட மசோதா விரைவில் கொண்டு வந்து நிறைவேற்றப்படும்.
அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியது: லோக் ஆயுக்த அமைப்பை ஏற்படுத்துவதற்கான சட்டமசோதா நடப்புக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றப்படும்.
ஜூலை 9-இல் நிறைவேற்றம்: லோக் ஆயுக்த அமைப்பை ஏற்படுத்தாத தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அந்த அமைப்பை உடனடியாக ஏற்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த விவகாரம் குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு மாநிலங்களின் தலைமைச் செயலர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கு, லோக்பால், லோக் ஆயுக்த குறித்து மத்திய அரசு சில சட்டத்திருத்தங்கள் கொண்டு வர உள்ளதால், அதை முழுமையாக ஆராய்ந்து லோக் ஆயுக்த அமைப்பு ஏற்படுத்தப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.
இதை ஏற்காத உச்சநீதிமன்றம், லோக் ஆயுக்த அமைப்பை ஏற்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து , ஜூலை 10-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து தமிழக அரசு லோக் ஆயுக்த அமைப்பை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது நடைபெற்று வரும் மானியக் கோரிக்கைகள் மீதான கூட்டத்தொடர் ஜூலை 9-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.
சட்டப்பேரவை வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து 3 நாள்களுக்கு விடுமுறை என்பதால் ஜூலை 9-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் லோக் ஆயுக்த அமைப்பை ஏற்படுத்துவதற்கான சட்ட மசோதாவைக் கொண்டு வந்து நிறைவேற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
Share:

Labels

Blog Archive

Unordered List

Definition List