Wednesday, July 4, 2018

மூன்றாண்டு தொடர்ந்த அதிகார மோதல்? தீர்த்து வைத்த உச்சநீதிமன்றம்!



தில்லி தலைநகர் பிராந்தியத்தைப் பொருத்தமட்டில் துணைநிலை ஆளுநருக்கு என தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரங்கள் இல்லை என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு அளித்துள்ளது.

இந்நிலையில், கடந்த மூன்றரை ஆண்டுகளாக தில்லியில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கும், துணைநிலை ஆளுநர் அலுவலகத்திற்கும் இடையே பல்வேறு விஷயங்களில் அதிகார மோதல் போக்கு நிலவி வந்தது. இதில், உயர் அதிகாரிகள் பணி இடமாற்றம், லஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவை நிர்வகிக்கும் விவகாரம், சிஎன்ஜி வாகனங்களின் தரத்தை நிர்ணயிப்பதில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் விவகாரம், சிசிடிவிக்கள் பொருத்தும் விவகாரம், ரேஷன் பொருள்களை நேரடியாக வீடுகளுக்கே சென்று விநியோகிக்கும் விவகாரம், தலைமைச் செயலர் அன்ஷு பிரகாஷ் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து நிர்வாகம் ஸ்தம்பித்துப் போனது ஆகியவை குறிப்பிடத்தக்க விவகாரங்களாகும்.

அது தொடர்புடைய சம்பவங்கள் விவரம் வருமாறு: லஞ்ச ஒழிப்புத் துறை: தில்லியில் ஆம் ஆத்மி அரசு 2015-இல் ஆட்சிக்கு வந்தது. ஆட்சி அமைந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு, மே மாதத்தில் ஆம் ஆத்மி அரசு, தில்லி லஞ்ச ஒழிப்புப் பிரிவை கட்டுப்படுத்தும் அதிகாரம் துணை ஆளுநர் நஜீப் சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக ஊழல் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை அரசால் எடுக்க முடியவில்லை. இதுபோன்ற நிலைமை தில்லியில் ஷீலா தீட்சித் ஆட்சியில் இருந்த போது இல்லை' என்று குற்றம்சாட்டியது.

அதற்கு மத்திய அரசு தரப்பில், தில்லியில் 2014-இல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்தது. அப்போது, துணைநிலை ஆளுநரிடம் லஞ்ச ஒழிப்புப் பிரிவைக் கட்டுப்படுத்தும் வகையிலான அதிகாரம் அரசால் அறிவிக்கை செய்யப்பட்டிருந்தது' என்று தெரிவித்தது. உயர் அதிகாரிகள் இடமாற்றம்: 2015, மே மாதத்தில், முதல்வர் கேஜரிவாலின் எதிர்ப்பையும் மீறி தில்லியின் தலைமைச் செயலராக (பொறுப்பு) மூத்த ஐஏஎஸ் அதிகாரியான சகுந்தலா கேம்லினை அப்போதைய துணைநிலை ஆளுநர் நியமித்தார்.

இந்த நடவடிக்கையால் அதிருப்தியுற்ற தில்லி அரசு, துணைநிலை ஆளுநரின்உத்தரவின் பேரில் கேம்லினுக்கு நியமன உத்தரவை வழங்கிய அப்போதைய பணிகள் செயலர் அனிந்தோ மஜூம்தரின் அலுவலகத்தை பூட்டியது. இந்த விவகாரத்தில்தான் முதல் முறையாக தில்லி அரசுக்கும், துணைநிலை ஆளுநர் அலுவலகத்திற்கும் இடையே அதிகார மோதல் போக்கு தொடங்கியது. அப்போதிலிருந்தே , மத்திய அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முதல்வர் கேஜரிவால் முன்வைக்கத் தொடங்கினார். தன்னால் ஓர் அலுவலக உதவியாளரைக்கூட நியமிக்க முடியவில்லை என்றும், தில்லி அரசின் அதிகாரத்தை மத்திய அரசு பறித்து துணைநிலை ஆளுநரிடம் வழங்கிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், உயர் அதிகாரிகளின் பதவி அந்தஸ்தை கட்டுப்படுத்தும் அதிகாரம் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருப்பதால், தில்லி அரசின் உத்தரவுகளுக்கு உயர் அதிகாரிகள் மதிப்பளிப்பதில்லை என்று முதல்வர் கேஜரிவால் குற்றம்சாட்டினார். உள்துறை செயலர்கள் இருவரை பணியிடை நீக்கம் செய்யும் தில்லி அரசின் முடிவை எதிர்த்து தில்லி அரசில் பணியாற்றும் உயர்அதிகாரிகள் 2015, டிசம்பரில் ஒரு நாள் விடுப்பில் சென்றது குறிப்பிடத்தக்கது.

சிசிடிவி கேமராக்கள் விவகாரம்: நிகழாண்டு மே மாதத்தில், கேஜரிவால், அவரது அமைச்சரவை சகாக்கள், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் அலுவலகம் அருகே தர்னாவில் ஈடுபட்டனர். தில்லி முழுவதும் 1.40 லட்சம் சிசிடிவி கேமராக்களை நிறுவும் தில்லி அரசின் முயற்சிக்கு மத்திய அரசின் தூண்டுதலின்பேரில் துணைநிலை ஆளுநர் அலுவலகம் ஒப்புதல் அளிக்காமல் முடக்குவதாக குற்றம்சாட்டி சுமார் 3 மணி நேரம் தர்னாவில் ஈடுபட்டனர்.

அதேசமயத்தில், உரிய விதிகளின்கீழ் சிசிடிவி கேமரா தொடர்புடைய தில்லி கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக துணைநிலை ஆளுநர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தலைமைச் செயலர் தாக்கப்பட்ட விவகாரம்: நிகழாண்டு பிப்ரவரியில் முதல்வர் கேஜரிவால் வீட்டில் இரவில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தில்லியின் தலைமைச் செயலர் அன்ஷு பிரகாஷ், ஆம் ஆத்மி எம்எல்ஏக்களால் தாக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, ஆம்ஆத்மி அமைச்சர்கள் நடத்திய கூட்டங்களை அரசின் உயர் அதிகாரிகள் புறக்கணிப்பது என முடிவு செய்தனர். ஜூன் கடைசி வாரம் வரை நிர்வாகம் ஸ்தம்பிக்கும் நிலை தொடர்ந்தது. கேஜரிவால் 9 நாள் மேற்கொண்ட தர்னா போராட்டத்திற்கு பிறகு இந்நிலை முடிவுக்கு வந்தது.

மோதல் போக்கு கடந்து வந்த பாதை...

கூட்டணியின் அமைச்சர்கள் வீரப்ப மொய்லி, முரளி தேவ்ரா ஆகியோர் உள்பட சிலர் மீது எரிவாயு விலையை நிர்ணயிக்கும் விவகாரத்தில் புகார் தெரிவித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டதிலிருந்து இந்த மோதல் போக்கு தொடங்கியது. இந்த விவகாரம் கடந்து வந்த பாதை:
2014, மே 2: எரிவாயு விலை நிர்ணயம் தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கோரி ஆர்ஐஎல் நிறுவனம் உயர் நீதிமன்றத்தை நாடியது. மேலும், மத்திய அரசு ஊழியர்களை விசாரிக்க தில்லி லஞ்ச ஒழிப்புப் பிரிவுக்கு (ஏசிபி) அதிகாரம் அளித்து மத்திய அரசு வெளியிட்ட 1993-ஆம் ஆண்டு அறிவிக்கையை எதிர்த்தும் முறையீடு செய்தது.
மே 8: அமைச்சர்களுக்கு எதிரான வழக்கை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு முறையீடு செய்தது.
மே 20: லஞ்ச ஒழிப்புப் பிரிவு விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு மத்திய அரசு, ஆர்ஐஎல் நிறுவனம் ஆகியவற்றுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.
அக்டோபர் 28: லஞ்ச ஒழிப்புப் பிரிவின் அதிகாரம் குறித்து தெளிவுபடுத்த மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.
டிசம்பர் 4: எரிவாயு விலை நிர்ணயம் தொடர்பான மத்திய அரசின் முடிவு மீது தில்லி அரசு விசாரணை நடத்துவது பொருத்தமற்றது என உயர் நீதிமன்றத்தில் ஆர்ஐஎல் தரப்பில் வாதம்.
2015, மே 25: மத்திய அரசின் கீழ் பணியாற்றும் போலீஸாரை கைது செய்யும் அதிகார வரம்பு லஞ்ச ஒழிப்புப் பிரிவிடம் (ஏசிபி) உள்ளதாக உயர் நீதிமன்றம் கருத்து. ஏசிபியின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் மத்திய அரசின் மே 21-ஆம் தேதியிட்ட அறிவிக்கை சந்தேகத்திற்குரியது என நீதிமன்றம் கூறியது.
மே 28: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு முறையீட்டு மனு தாக்கல்.
ஜூன் 10: ஏசிபி அதிகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சகம் பிறப்பித்த அறிவிக்கைக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு.
ஜூன் 27: துணைநிலை ஆளுநரால் நியமிக்கப்பட்ட ஏசிபி தலைவர் எம்.கே. மீனாவை லஞ்ச ஒழிப்புப் பிரிவு அலுவலகத்தில் நுழைவதற்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தில்லி அரசு மனு.
ஏப்ரல் 6: சிஎன்ஜி வாகன தகுதி சோதனை நடத்துவதற்கு உரிமம் வழங்குவதில் நிகழ்ந்த ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க கமிஷனை அமைக்க வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றத்தில் தில்லி அரசு வாதம்.
ஏப்ரல் 19: உயர் நீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வு விசாரணையை அமைக்கக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றத்திடமிருந்து ஆம் ஆத்மி அரசு திரும்பப் பெற்றது.
ஜூலை 1: தில்லி அரசின் அதிகாரம் தொடர்புடைய விவகாரங்களில் தில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பை வெளியிடுவதற்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி அரசு தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் சம்மதம்.
ஜூலை 4: மாநிலத்தின் அதிகாரம் பெற்றதாக தில்லியை அறிவிக்கக் கோரும் ஆம் ஆத்மி அரசின் மனுவை விசாரிப்பதில் இருந்து நீதிபதி ஜே.எஸ். கேஹர் விலகல்.
ஜூலை 5: தில்லி அரசின் மனுவை விசாரிப்பதில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி எல். நாகேஸ்வர ராவும் விலகல்.
ஆகஸ்ட் 4: தேசியத் தலைநகர் பிராந்தியத்தின் நிர்வாகத்தின் தலைவர் துணைநிலை ஆளுநர்தான் என தில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு.
2017, பிப்ரவரி 15: தில்லி- மத்திய அரசு இடையிலான ஆளுகை விவகாரம் தொடர்பான மனுக்களை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசனஅமர்வு விசாரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் பரிந்துரை.
நவம்பர் 2: அந்த மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தொடங்கியது.
நவம்பர் 8: துணைநிலை ஆளுநருக்கு அளிக்கப்பட்ட பொறுப்புகள் முழுமையானதாக இல்லை என உச்சநீதிமன்றம் கருத்து.
நவம்பர் 21: யூனியன் பிரதேசங்களில் தில்லிக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், முழு மாநிலமாக அந்தஸ்து பெறவில்லை என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்.
டிசம்பர் 6: தில்லி - மத்திய அரசுகள் இடையேயான அதிகார மோதல் தொடர்புடைய மனுக்கள் விசாரணைக்கு பிறகு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.
2018, ஜூலை 4 : தில்லி அரசைப் பொருத்தமட்டில் துணைநிலை ஆளுநருக்கு என தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை. தில்லி அமைச்சரவையின் ஆலோசனைக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
Share:

Labels

Blog Archive

Unordered List

Definition List