மீண்டும் "தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி? உச்சகட்ட குழப்பத்தில் திமுக!


திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி ஆகஸ்ட் 7-ஆம் தேதி காலமானார். அவர் மறைவைத் தொடர்ந்து கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க வேண்டிய நிலை திமுக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.
அன்பழகன் இல்லத்தில்…: சென்னை கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரான் தோட்டத்தில் உள்ள க.அன்பழகன் இல்லத்துக்கு மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பகல் 12 மணியளவில் வந்தார். முதன்மைச் செயலாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் ஆ.ராசா ஆகியோர் உடன் வந்தனர். க.அன்பழகனுடன் மு.க.ஸ்டாலின் சுமார் 20 நிமிஷங்களுக்கு மேல் ஆலோசனை நடத்தினார்.
அதைத் தொடர்ந்து க.அன்பழகன் வெளியிட்ட அறிக்கை: திமுக அவசர செயற்குழு கூட்டம் அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி காலை 10 மணிக்கு கூட உள்ளது. கூட்டத்துக்கு செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்க உள்ளார். செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.இரங்கல் தீர்மானம்:

செயற்குழுக் கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் கூறியது: கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காகவே செயற்குழு கூட்டம் கூட்டப்படுகிறது என்றார்.

தலைவராகிறார் மு.க.ஸ்டாலின்:

கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிப்பதற்காகவே செயற்குழு கூட்டம் கூட்டப்படுகிறது என்றாலும், சில முக்கிய முடிவுகள் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளன.

திமுக தலைவர் பதவி காலியாக உள்ள நிலையில், அந்தப் பதவிக்கு மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
பொதுக் குழு கூட்டத்தில்தான்…:ஆனால், நடைபெற உள்ள செயற்குழு கூட்டத்தில் தலைவராக மு.க.ஸ்டாலினைத் தேர்ந்தெடுக்க முடியாது. கட்சியின் பொதுக்குழு கூட்டத்திலேயே அவரைத் தேர்ந்தெடுக்க முடியும். ஏற்கெனவே, மு.க.ஸ்டாலின் தலைவருக்கான அத்தனை அதிகாரங்களுடன்தான் செயல் தலைவர் பொறுப்பில் இருந்து வருகிறார். அதனால், வரும் பொதுக்குழு வரை அவர் செயல் தலைவராகவே நீடிப்பார்.
நி

அஞ்சலி கூட்டம்: திமுகவின் செயற்குழு கூட்டத்துக்குப் பிறகு முக்கிய அறிவிப்புகள் எதுவும் அறிவிக்கப்பட வாய்ப்பு இல்லாவிட்டாலும், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. அது விரைவில் கூட்டப்பட உள்ள பொதுக்குழுக் கூட்டத்திலேயே இறுதி செய்யப்படும். கருணாநிதிக்கு நினைவஞ்சலி கூட்டம் நடத்துவது குறித்தும் முடிவு எடுக்கப்பட உள்ளன.

அதிமுக போன்று…: ஜெயலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டது போன்று திமுகவில் எந்தவித பிளவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் கருணாநிதியின் குடும்பத்தினர் மிகவும் கவனத்துடன் இருந்து வருகின்றனர். அதனால், திமுகவில் மீண்டும் அழகிரி சேர்க்கப்பட உள்ளார். அதற்கு மு.க.ஸ்டாலினும் சம்மதித்துள்ளார். அதேசமயம், மாநில அளவிலான பதவியை மு.க.அழகிரி கேட்டு வருகிறார். ஆனால், மு.க.அழகிரி ஏற்கெனவே வகித்து வந்த தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவியையே மு.க.ஸ்டாலின் தர முன்வர, அதை அழகிரி ஏற்க மறுத்து வருகிறார்.கனிமொழியின் எதிர்பார்ப்பு என்ன?:

துணைப் பொதுச்செயலாளர் பதவியில் சில மாற்றங்களுடன் ஏற்கெனவே இருப்பவர்களே நீடிக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. துணைப் பொதுச்செயலாளர் பதவியைக் கனிமொழி பெரிதாக விரும்பவில்லை. அவர் கொள்கை பரப்புச் செயலாளர் பதவியை எதிர்பார்க்கிறார்.
பொதுச்செயலாளர் நீடிப்பார்: பொதுச் செயலாளர் பதவியில் க.அன்பழகனே நீடிக்க வேண்டும் என்று திமுக தலைமை முடிவு செய்துள்ளது. அதில், தற்போதைய நிலையில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனுக்கு விருப்பம் இருக்கிறது. அதற்கேற்ப அவர் காய் நகர்த்தி வருகிறார்.

பொருளாளர் பதவிக்குப் போட்டி:

திமுகவின் பொருளாளர் பதவி மு.க.ஸ்டாலினிடமே தற்போது இருந்து வருகிறது. இந்தப் பதவியைக் கைப்பற்றுவதற்குப் பலர் போட்டியிடுகின்றனர். முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது. இது குறித்து உறுதியான முடிவு எதையும் மு.க.ஸ்டாலின் இதுவரை எடுக்கவில்லை.
புதிதாக 4 மண்டலங்கள்: திமுகவில் புதிதாக 4 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு, அதற்குப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அந்த 4 மண்டலங்களின் பொறுப்பாளர்களுக்கு மேலாக மேற்பார்வையாளராக நியமிக்குமாறு அழகிரி தரப்பில் கோரப்பட்டு வருகிறது.
இது தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நீடித்து வருகிறது. இது குறித்து செயற்குழுவில் ஆலோசிக்கப்பட்டாலும், பொதுக் குழுவிலேயே இறுதி முடிவு எடுக்க வாய்ப்பு இருக்கிறது.

Post a Comment

0 Comments