Monday, August 13, 2018

திக்.... திக்.... திமுக! நாளை நடக்கப் போவதென்ன? சிறு பார்வை!

ad300
Advertisement


தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பின், கட்சியின் செயற்குழு கூட்டம், சென்னை, அறிவாலயத்தில் நாளை நடக்கிறது. இதன் பின், என்ன நடக்குமோ என, முக்கிய நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

தி.மு.க., தலைவர் கருணாநிதி, வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவால், ஆக., 7ல் காலமானார். அவரது உடல், மெரினாவில் உள்ள அண்ணாதுரை நினைவிடத்தில், நல்லடக்கம் செய்யப்பட்டது. நினைவிடத்திற்கு, தினமும் ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள் வந்து, அஞ்சலி செலுத்தி செல்கின்றனர்.இந்நிலையில், தி.மு.க., செயற்குழு கூட்டம், செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில், சென்னை அறிவாலயத்தில், நாளை நடக்கிறது. இந்த கூட்டத்தில், கருணாநிதியின் மறைவிற்கு, மவுன அஞ்சலி செலுத்தப்படுகிறது. முக்கிய நிர்வாகிகள், கருணாநிதிக்கு புகழ் அஞ்சலி செலுத்த உள்ளனர். அதன்பின், இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

செயற்குழு கூட்டத்திற்கு பின், பொதுக்குழுவை கூட்டுதல், தலைவராக ஸ்டாலினை தேர்வு செய்தல் மற்றும் கட்சி நிர்வாகிகளை மாற்றி அமைத்தல் உட்பட, பல விஷயங்கள் குறித்து, அடுத்தடுத்து ஆலோசிக்கப்படலாம் என, கூறப்படுகிறது. இதனால், செயற்குழுவிற்கு பின், எந்த மாதிரியான மாற்றங்கள் வருமோ என, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர்.

இதுபற்றிய சிறு பார்வை!

2004ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்திருந்தது பாமக. பாமக 7 தொகுதிகளில் இடம் கேட்க திமுக 5 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டது. ஆனால் அந்த இரண்டு தொகுதிகளுக்குப் பதிலாக ராமதாஸின் மகன் அன்புமணிக்கு ராஜ்யசபாவில் இடம் அளிப்பதாக கூறியிருந்தார் கருணாநிதி. லோக்சபா தேர்தலில் 5 தொகுதிகளிலும் பாமக தோல்வி அடைந்தாலும், அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் தருவதாக கூறப்பட்டது. அதேபோல கருணாநிதி கொடுத்தார். கலைஞரிடம் இருந்து அவர் மகன் கற்றுக் கொள்ள வேண்டும்.
பாஜகவுடன் எப்போதும் கூட்டணி வைத்துக் கொள்ள திமுக தலைமை விரும்பியதும் கிடையாது மேலும் அது திமுக கொள்கைகளிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டது. ஆனால் லோக்சபாவில் அதிக இடங்கள் வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் பாஜக அல்லது காங்கிரஸ் என யாருடனும் கூட்டணி வைத்துக் கொள்வார் என்றும்குறிப்பிடுகிறார்கள் திமுக கட்சியினர்.


மற்ற கட்சித் தலைவர்கள் ஸ்டாலினின் தலைமைப் பற்றி என்ன சொல்கிறார்கள்.?

அதிமுக கட்சித் தலைவர்களில் ஒருவரான பொன்னையன் கூறும் போது “ஸ்டாலினின் தலைமையில் திமுக எப்படி மாறும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
ஏற்கனவே அரசியலில் இருந்து ஆற்காடு என்.வீராசாமி வெளியேறிவிட்ட நிலையில் துரைமுருகன் மட்டும் தான் ஸ்டாலினின் வட்டத்தில் இருக்கிறார்.

அவர் ஸ்டாலினை சிறப்பாக வழி நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது இருப்பது போலவே ஸ்டாலின் தொடர்ந்து செயல்படுவாரானால் அவரை கட்சியின் தலைவராக ஏற்றுக் கொள்வதில் பிரச்சனைகள் யாருக்கும் இல்லை என்றும் சொல்லும் நபர்களும் கட்சியில் இருக்கத்தான் செய்கிறார்கள்.


முரசொலி மாறன் கருணாநிதி காலத்தில் எப்படி டெல்லியில் இருந்து செயல்பட்டாரோ அப்படியே கனிமொழி, டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, ஆ. ராசா ஆகியோர் ஸ்டாலினிற்காக செயல்படுவார்கள்.
ஆ.ராசா ஸ்டாலின் நம்பத்தகுந்த வட்டாரத்தில் இடம் பெற்றிருக்கிறார். ஆனால் தயாநிதி மாறன் நிலைப்பற்றி எந்த தகவலும் இல்லை.

அழகிரி மற்றும் கனிமொழி என இருவருடனும் பயணிக்கவே விரும்புகிறார் ஸ்டாலின். அழகிரியால் புதிய தலைமைக்கு எந்த ஒரு பங்கமும் வராது.

கனிமொழி இது குறித்து பேசும் போது நான் திமுக கட்சியின் உறுப்பினராகவே நான் செயல்படுகிறேன். இங்கு ஸ்டாலினின் தங்கையாக நான் வேலை செய்யவில்லை. அதனால் இது குடும்ப அரசியலின் கீழ் ஒரு போதும் வராது என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால் கனிமொழிக்கும் ஸ்டாலினிற்கும் இடையேயான பாசப்பிணைப்பினை கட்சியினர் அறிவர். கலைஞரின் மரணத்திற்கு அழுத ஸ்டாலின் அதற்கு முன்பு வெடித்து அழுதது கனிமொழி சிறையில் அடைக்கப்பட்ட போது தான். கட்சியினர் அனைவரும் “கனிமொழிக்கு ஒன்றும் ஆகாது என்று கூறிய போதும் கூட, எனக்குத் தெரியும் சிறை வாழ்க்கை எவ்வளவு கொடியது” என்று கூறி அழுதாராம் பாசக்கார அண்ணன். எமெர்ஜென்சி நேரத்தில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டாலினிற்கு பிறகு யார் ?

இவர் இன்று கட்சியின் பொறுப்பினை ஏற்றுக் கொள்ள இருக்கும் காலத்தில் நாற்பது வயதாகிய தன்னுடைய மகன் உதயநிதி ஸ்டாலினை அரசியலில் களமிறக்க முடிவு செய்திருக்கிறார் ஸ்டாலின்.
இப்படியாக ஒரு முடிவு எடுக்கப்படும் பட்சத்தில் ஸ்டாலினிற்கும் ஸ்டாலினின் மருமகனான சபரீசன் அவர்களுக்கும் இடையில் அதிக அளவு மனக் குழப்பம் ஏற்படும் என்று திமுக வட்டாரம் குறிப்பிட்டிருக்கிறது.

ஸ்டாலினுக்கு காத்திருக்கும் தலைவலிகள்!பொருளாளர் பதவிக்கு பலத்த போட்டி
1. மு.க.ஸ்டாலினுக்கு முதல் சவால், பொருளாளர் பதவியை இட்டு நிரப்புவதுதான்! செயல் தலைவர் ஆன பிறகும், பொருளாளர் பதவியை அவரே வைத்துக் கொண்டிருக்கிறார். இனி தலைவர் ஆன பிறகும் அவரே வைத்துக் கொள்வது சாத்தியம் இல்லை! அப்படி வைத்துக்கொண்டால், அதுவும் விமர்சனத்திற்கு உள்ளாகும்!


திமுக.வில் தலைவர், பொதுச்செயலாளர் பதவிகளுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்த பதவி அது என்பதால், பொருளாளர் பதவிக்கு ஏக போட்டி ஏற்பட்டிருப்பது நிஜம்! விழுப்புரம் மாவட்டச் செயலாளர் பொன்முடி, திருவண்ணாமலை எ.வ.வேலு, திருச்சி கே.என்.நேரு ஆகியோர் இதற்கான ரேஸில் இருக்கிறார்கள்.


ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு துணைப் பொதுச்செயலாளராக புரமோஷன் பெற்றஐ.பெரியசாமியும் இப்போது அடுத்த புரமோஷனுக்கு ஆசைப்படுகிறார். இவர்களில் யாருக்கு பொருளாளர் பதவியைக் கொடுத்தாலும் மற்ற மூவரின் அதிருப்தியை சம்பாதித்தே ஆகவேண்டும்.
கருணாநிதி இறந்த தருணத்தில் கோபாலபுரம் இல்லம், சி.ஐ.டி காலனி இல்லம் ஆகிய இடங்களில் சில முன்னேற்பாடுகளை கவனிக்க ஸ்டாலினால் அனுப்பி வைக்கப்பட்டவர் எ.வ.வேலு. மெரினாவில் கருணாநிதிக்கு இடத்தை உயர் நீதிமன்றம் உறுதி செய்ததும், அங்கேயும் துரைமுருகனுடன் சென்று ஏற்பாடுகளை கவனித்தவர்! இந்த அடிப்படையில் தனக்கு பொருளாளர் பதவி கிடைக்கும் என ரொம்பவே நம்பியிருக்கிறார் எ.வ.வேலு.
கருணாநிதி மறைந்த தருணத்தில் இருந்து மு.க.ஸ்டாலினுடன் முழுமையாக ஒட்டிக்கொண்டிருக்கும்

மற்றொருவர் ஆ.ராசா! (ஆகஸ்ட் 10) செயற்குழு தேதியை அறிவிப்பதற்கு முன்பாக பேராசிரியர் அன்பழகனை சந்திக்க ஸ்டாலினுடன் சென்ற குழுவில் துரைமுருகனுடன் இவரும் இடம் பெற்றிருந்தார்.
இனி டெல்லி அரசியல் பக்கம் செல்லும் திட்டத்தில் இல்லாத ஆ.ராசா, கொள்கை பரப்புச் செயலாளர் பதவியில் இருந்து பொருளாளர் பதவி நோக்கி நகர விரும்புகிறார். ஆ.ராசாவுக்கு பொருளாளர் பதவியை தந்தால், கட்சியின் முக்கிய பதவியை தலித் ஒருவருக்கு கொடுத்ததாக ஸ்டாலினின் இமேஜ் எகிறும் என்றும் சிலர் சுட்டிக் காட்டுகிறார்களாம்!
திமுக மகளிரணி தலைவி மற்றும் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரான கனிமொழியும் புரமோஷனுக்கு காத்திருக்கிறார். அழகிரி குடைச்சல் குறையாத சூழலில் கனிமொழியை ‘கூல்’ செய்ய வேண்டிய கட்டாயம் ஸ்டாலினுக்கு உண்டு. திமுக சீனியர்கள் ஆசியும் கனிமொழிக்கு இருப்பதாக தெரிகிறது. அன்பழகன் விட்டுக் கொடுத்தால், அந்தப் பதவியைப் பிடிக்க துரைமுருகன் தயாராக இருக்கிறார்.
பொதுச்செயலாளர் வழி விடுவாரா?

2.அடுத்த சவால் பொதுச்செயலாளர் பதவி! திமுக.வில் எந்த ஒரு அறிவிப்பாக இருந்தாலும், ஒழுங்கு நடவடிக்கையாக இருந்தாலும் பொதுச்செயலாளர் பெயரில்தான் நடக்கும். கருணாநிதியைவிட ஒன்றரை வயது மூத்தவரான அன்பழகனிடம், நினைத்த நேரத்தில் கையெழுத்து பெற முடிவதில்லை. அவரது உடல்நிலை அப்படி!
அண்மையில் சென்னை விருகம்பாக்கம் பிரியாணி கடையில் தகறாறு செய்த பிரமுகரை கட்சியை விட்டு நீக்கும் நடவடிக்கை பற்றிய அறிவிப்பு அன்பழகன் பெயரில், ஆனால் அவரது கையெழுத்து இல்லாமலேயே வெளியானது.
நான்கைந்து வருடங்களுக்கு முன்பாகவே பொதுச்செயலாளர் பதவியை அன்பழகன் விட்டுக் கொடுப்பது பற்றிய பேச்சு வந்தபோது, ‘கருணாநிதி தலைவராக இருக்கிற வரை நானும் பொதுச்செயலாளராக இருந்து கொள்கிறேன்’ என அவர் சொன்னதாக தகவல்!

எனவே தற்போது அவரே விலகல் விருப்பத்தை தெரிவிப்பாரா? என்கிற எதிர்பார்ப்பு திமுக மேல்மட்டத்திலேயே இருக்கிறது. அன்பழகன் விட்டுக் கொடுத்தால், அந்தப் பதவியைப் பிடிக்க துரைமுருகன் தயாராக இருக்கிறார். ஆனால் பவர்ஃபுல்லாக இருந்த ஆற்காடு வீராசாமி பதவியை இழந்தபிறகு கண்டு கொள்ளப்படவில்லை.கடந்த சட்டமன்றத் தேர்தலில் மருத்துவரான அவரது வாரிசுக்கு ‘சீட்’ கேட்டும் கிடைக்கவில்லை. இதுதான் பேராசிரியரை உறுத்துவதாக சொல்கிறார்கள். ஒருவேளை பேராசிரியர் குடும்ப வாரிசு ஒருவருக்கு கவுரவமான கட்சிப் பதவி, நாடாளுமன்றத் தேர்தலில் சீட் என்கிற வாக்குறுதிகளுடன் அவர் விலகலாம். ஆனாலும் கருணாநிதி கல்லறை ஈரம் காயும் முன்பே அவரை துரத்திவிட்டார்கள் என்கிற அவப்பெயர் வந்துவிடக்கூடாது என்பதால், இதற்கு சில மாதங்கள் ஆகலாம்!
குடும்ப பஞ்சாயத்து


3.கருணாநிதி குடும்ப பஞ்சாயத்துகளும் ஸ்டாலினுக்கு எப்போதும் பெரிய சவால்தான்! கருணாநிதியின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மு.க.அழகிரி, தனக்கு இல்லாவிட்டாலும் தனது மகனுக்கு கட்சியிலும், கட்சி அறக்கட்டளைகளிலும் பதவி கேட்டு உறவினர்களிடம் பேசியிருப்பதாக கூறப்படுகிறது.
மு.க.தமிழரசு, மு.க.முத்து, மாறன் குடும்பங்களில் இருந்தும் கட்சியில் உரிய அங்கீகாரங்களை எதிர்பார்க்கிறார்கள். கருணாநிதி இறுதி அஞ்சலியின் போது மொத்த குடும்பமும் உடைந்து நின்ற போது அவர்களுக்கு ஆறுதலாக நின்றவர்கள் முரசொலி மாறன் மனைவி மற்றும் சகோதரரான செல்வம், அமிர்தம் உள்ளிட்டவர்கள்தான்! எனவே இவர்களை அரவணைத்து செல்ல வேண்டிய கட்டாயம் ஸ்டாலினுக்கு இருக்கிறது.உடனடித் தேவை வெற்றி!


4. திமுக.வுக்கு இப்போதைய தேவை, உடனடியாக ஒரு தேர்தல் வெற்றி! ஒருமுறை விட்டு ஒருமுறை பொதுத்தேர்தல்களில் ஜெயித்து வந்த திமுக 2011 சட்டமன்றத் தேர்தலில் தோல்வி, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் வாஷ் அவுட், 2016 சட்டமன்றத் தேர்தலில் மயிரிழையில் தோல்வி, கடைசியாக நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 3-வது இடத்திற்கு சென்று டெப்பாசிட் இழப்பு என தேர்தல் அரசியலில் பலத்த அடி வாங்கியிருக்கிறது.
எனவே அடுத்து வருகிற திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்கள் ஸ்டாலினுக்கு அக்னி பரீட்சை! அதுவும் திருப்பரங்குன்றத்தில், அழகிரி குறுக்கு சால் ஓட்டுவாரோ? என்கிற பதற்றமும் இருக்கிறது.
கூட்டணி அமைப்பதில் பலவீனம்?


5.ஸ்டாலினின் ஆகப் பெரிய பலவீனமாக அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுவது, தோழமைக் கட்சித் தலைவர்களுடன் நட்பு பேணுவதில் அதிக அக்கறை காட்டாதது! அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வலைவீசிப் பிடிக்க டிடிவி தினகரன், கமல்ஹாசன் போன்றவர்கள் இப்போதே களத்தில் சுற்றுகிறார்கள். புதிதாக ரஜினிகாந்த் கட்சியையும் எதிர்பார்க்கலாம்!


ஸ்டாலின் எப்படி கூட்டணி அமைக்கப் போகிறார்? என்பதைப் பொறுத்தே தேர்தல் முடிவுகள் இருக்கும். வருகிற நாடாளுமன்றத் தேர்தல், அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் தாக்கத்தை உருவாக்கும்!
Share This
Previous Post
Next Post

Pellentesque vitae lectus in mauris sollicitudin ornare sit amet eget ligula. Donec pharetra, arcu eu consectetur semper, est nulla sodales risus, vel efficitur orci justo quis tellus. Phasellus sit amet est pharetra